தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
இந்த உடல் வரம். இந்த உயிர் வரம். இந்த வாழ்க்கை இனிது. நம்மிடமிருக்கும் இந்த ஆற்றல் வலிது. உலகை மடித்து உள்ளங்கைக்குள் மூளையால் அடக்கிக் கொண்டது அறிவியல் எனில் ஒரு விரலால் தாங்கிநிற்கும் பலத்தை மனதால் உடலால் பெறமுடியும். அதெப்படி என்று சந்தேகிப்பீரெனில் ஒரு தீக்குச்சியை எடுத்து வெய்யிலில் போடுங்கள், அது உடனே எரியுமா? எரியாதுதானே? அதே ஒரு லென்ஸ் எடுத்து சூரிய ஒளியை அந்த தீக்குச்சியினுடைய மருந்தின்மீது குவியுமாறு காட்டிப்பாருங்கள், அந்த தீக்குச்சி உடனே தீப்பற்றி எரியும், காரணம், “எங்கு சக்தியானது ஒருமித்துக் குவிக்கப்படுகிறதோ அங்கிருந்து வேறொரு அதீத சக்தி விரைவாக வெளிப்படுகிறது”.
ஆக, அப்படி, எண்ணத்தை குவித்து திறமையை வெளிக்கொண்டுவரல் என்பதொரு கலை. அந்தக் கலையைத்தான் தியானம் வழியே நிகழ்த்தி உடலைத் தனியாகப் பார்க்கவும், மனதை தனியாக அசைக்கவும் நம் பெரியோர் கற்றுத் தந்துள்ளனர்.
தியானம் என்பதில் பலர் பலவாறு சொன்னதும், அங்ஙனம் அவரவர் வென்றதுமாய் நி றையப் புத்தகங்களும் செவிவழி பாடமும் பயிற்சியும், உண்மையின் குறிப்புகளுமென ஏராளமுண்டு. அவைகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே நமக்கு மனதின் எண்ணத்தைக் குவித்து செயலை வெற்றியாக வெளிக்கொண்டுவர ஒரு இலகுவான பயிற்சி தேவைப்படுகிறது. ஆடும் மனதை அடக்கி அலைபாயும் எண்ணத்தை சீராக்கி ஒரே இடத்தில் நிறுத்தி, வேண்டுவதையெல்லாம் பெறும் சக்தி மனிதனிடம் உண்டென்பதை அறிய இத்தகையப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.
தன்னை தானறியும் மனிதன், செருக்கோடு அலைந்தால் பூமி தாங்காதென்று எண்ணிய முன்னோர், உனக்கும் மேல் ஒருவன் உள்ளான் அவனை நம்பு எல்லாம் நடக்குமென்று இயற்கையின் சக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாக கடவுள் நம்பிக்கையை முன்வைத்து, எல்லாம் அவன் செயலென்று கற்பித்ததன்பேரில்; நம்பிக்கையின் முதன்மை தன்மையென்பது இறையினிடத்து ஒன்றே என்றாகி, அது பின்னர் பலவாக மாறி, இன்று தனையே மறக்கும் நிலைக்கு நாம் வரப்பட்டுள்ளதையும் நாம் அறியவேண்டும்.
ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பி வருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.
பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.[hide]
காரணம், அதைப் பொறுத்தவரை, அந்தக் கயிறு ஒரு அறுக்கமுடியாத கயிறு. சிறு வயதிலிருந்து இழுத்து இழுத்துப் பார்த்துஅறுக்கமுடியாமல் போகவே ஒரு கட்டத்தில் இனி அதை அறுக்கவே முடியாதென்று எண்ணிக்கொண்டே அந்த யானை வளர்ந்துவந்ததால், அந்த யானைக்கு தான் வளர்ந்து காட்டையழிக்கும் சக்தியை பெற்றபோதுகூட அந்த சிறிய கொம்பை பிடுங்கிக்கொண்டு ஓடமுடியாது என்ற எண்ணம் இருந்துள்ளது.
நாமும் இப்படித்தான், இந்த மரத்தில் கட்டிவைத்த யானையைப் போலவே சிறுவயது எண்ணங்களையே மனதில் சுமந்து வாழ்ந்துகொண்டுள்ளோம். வளர வளர அறுபடவேண்டிய பல நம்பிக்கைக்குரிய கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பயணிக்காமல், காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்துவருகிறேôம்.
சாமி.. வழிபாடு.. பண்டிகை.. கலாச்சாராமெல்லாம் மனிதரின் நன்மைக்கானதும், மேன்மையை எதிர்நோக்கி நாம் கட்டமைத்ததும் மட்டுமே. பிறகு அந்தந்த வேளை வருகையில் அததற்கான விளக்கங்களை எடுத்துச் சொல்லி வளரும் குழந்தைகளை விடுதலை உணர்வோடும்’ போதுமான பண்போடும்’ பகுத்தறியக் கூடியத் தெளிவோடும்’ மனித மற்றும் உயிர்களின் மீதான மதிப்பும் மரியாதையோடுமாய் வளர்க்கவேண்டியது நமது கட்டாயமாகிறது.
அங்ஙனம் அவிழ்க்கவேண்டிய கட்டில் ஒன்றும், புரியவேண்டிய உண்மையில் ஒன்றுமானதுதான் அந்த “நம் ஆத்தா கண்ணை குத்தும்” என்று சொன்னப் பொய்யும். எல்லாம் அவன் செய்வான் என்று நம்பவைத்த நம்பிக்கையுமாகும்.ஏனெனில் இன்று அத்தகையப் பொய்யில் வளர்ந்த மூடப்பழக்க வழக்கங்களும், அவசியமற்ற நம்பிக்கைகளும் பயமும் மாறவேண்டுமெனில் குறைந்தது ஆயிரமிரண்டாயிரம் வருடங்களாவது இனியும் நமக்குத் தேவைப்படும்போல்.
கோவில்.. சாமி.. என்று காட்டும் அக்கறையை இன்று நாம் நம் மனிதரிடத்தே காட்ட மறுக்கிறேôம். சாகும் மனிதனைவிட சாகாதக் கல்லிற்கு ஊற்றும் பாலும் பூஜையும் மட்டுமே பெரிதென்று நம்பிக்கொண்டது நம் பெருத்த மூடத்தனம்தான். வெறும் ஒரு கல்லில் ஒரு கோவிலில் மட்டுமல்ல சாமி. இந்த அண்டசராச்சரமும் இயற்கைசக்தியால் நிறைந்தது. எதெல்லாம் இயற்கையிலிருந்து வந்ததோ அதெல்லாம் தெய்வீகமானதுதான். கல்லை நம்பி கையெடுத்து வணங்கினாலும் கல் நம்மைக் காப்பாற்றும். மரத்தை நம்பினாலும் மரம் நமைக் காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கைக்குரிய வகையில்தான் இயற்கையெனும் இயற்கைசக்தி நம்முள் எங்கும் பரவியுள்ளது’ என்றுச் சொன்னதை நாம் வெறும் ஒரு கல்லிலும் மரத்திலும் மட்டுமே உண்டென்று நம்பிக்கொண்டது பிழை.
கையெடுத்து வணங்கி உள்ளே பேசும் சொற்கள் ஆழ்மனதுள் பதியுமெனில் அதற்கு செயல்வடிவம் ஏற்பட்டு நம்பியது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அமைவதென்பது இயற்கைச் சக்தியின் இயல்பிற்கு உட்பட்டதே. இதைத்தான் எண்ணங்களே செயலாகும் என்றார் விவேகானந்தர்.
தனை தானுணர்ந்து, தனக்குள் பேசி, தான் வளர வளர பூரண அன்புகொண்டு பிறருக்காய் வாழ்வதையே ஆன்மிகம் போதிக்கிறது. உள்ளே கடைந்து வெளியே தெரியும் காட்சியின் சூழ்சுமத்தை அறியவே “நானே கடவுள்” என்றது மதம். அனால் நாமென்ன செய்தோம்? நானே கடவுள் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னைத்தான் முழுதாக நம்பாமல், எங்கும் நிறைந்த இறைத்தன்மையை சுயநலமறுத்துக் காணாமல், வெறுமனே கடவுள் எங்கென்று தேடித் தேடியே காலத்தை கழித்துவிடுகிறேôம். எது உண்மை என்றுப் புரிவதற்குள் மரணம் நெருங்கி வாழ்நாள் முடிந்து மீண்டும் மறுபிறப்பெடுத்தும் உண்மையறியாமலே மரணிக்கவும் தயாராகிவிடுகிறேôம்.
ஆக பிறருக்காக, பிறரின் அனுபவத்தின் பாடத்திற்காகக் காத்திருந்ததையெல்லாம் விட்டுவிட்டு விழிப்பென்னும் வெளிச்சத்திற்கு நாமெல்லோரும் வரவேண்டும். எதைக் குறித்தும் சுதந்திரமாய் தனது அறிவிற்கு புரியும் வகையில் சிந்திக்கவேண்டும். பிறருக்கும், மொத்த உலகிற்கும் நல்லதை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கயை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். எங்கு நமது அசைவால் ஒரு நன்மை நடக்குமோ’ அங்கு அந்த இயற்கைசக்தி நிறைந்திருக்கும் என்பதை அனுபவத்தால் புரிந்துணர வேண்டும்.
நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள். இயற்கை ஈன்றெடுத்தக் குழந்தைகள். நமக்கு வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அந்த தாயுமான சுவாமி துணை இருந்தேத் தீரும். பிறகெதற்கு கடவுள் கோவில் மதம் எனும் பல கட்டுக்குள் அவிழ்க்கவே முடியாத அளவிற்கு போய் ஆழ்ந்து விடுவானேன்? நம்பிக்கை ஏற்கும் மறுக்கும் மாற்றிக் கொள்ளும் அளவில் இருக்கையில் கூட அது கேடில்லை.
மாறவே முடியாது, திருந்தவே ஒன்றுமில்லை, இதுதான் சரி என்று ஒன்றிற்குள் மட்டுமே சென்று அடங்கிக் கொண்டால் உண்மையை அதுவாக உணர்ந்தறிவதெப்போது?
மாற்றம் என்பது இருந்துக் கொண்டேயுள்ளது. இந்த ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டேயுள்ளது. நாமும் மாறிக் கொண்டேயுள்ளோம். பிறகு நமது நம்பிக்கையை மட்டும் ஆராயாமல் இதுதான் சரி என்று அழுத்திக் கொள்வதைப பற்றி நாம் உணர்வுரீதியாகச் சிந்திக்கவேண்டாமா?
சிந்திப்போம். எல்லாவற்றையும் சிந்திக்கும் சமயத்தில் நமைப் பற்றியும் நாமறிந்துகொள்ள முயற்சிப்போம். நமையறிந்துக்கொள்ளல், நம் பலத்தை, நமக்குரிய பண்பை, இயல்பான நற்குணங்களை அறிந்துக்கொள்ளல் நமது கடன். பிறகு, தனை தானறிந்துக்கொள்வதெனில் வேறென்ன செய்வது?
தனைப் பார்க்கவேண்டும். எந்த மதமும் போதனையும் அறிவில் முடிவாகச் சென்று ஏறிக்கொள்ளாதவில் அமைதியாக அமர்ந்து., தனக்குள்ளே முழுவதுமாய்ச் சென்று, தனை முற்றிலுமாக நான் யார் என்று அறியுமாறு பார்க்கவேண்டும். தான் மாறிக்கொண்டே இருப்பதையும், இந்த உலகம் மாறிக்கொண்டே இருப்பதையும் பார்த்துணர வேண்டும். அது முயன்றால் அறிவுள்ள ஒவ்வொரு உயிர்க்கும் முடியும். நமக்குள் ஏற்படும் மாற்றத்தையும் நாம் பார்க்கமுடியும். உள்ளே சென்றுப் பார்த்தால் உள்ளிருக்கும் சாமி மட்டுமல்ல வெளியிருக்கும் உலகத்தின் மொத்தத் தோற்றமும்கூட நிதர்சனமாய் தெரியும்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles