Home » Editorial

உள்ளத்தோடு உள்ளம்

2020 ஆம் ஆண்டை மகிழ்வோடு வரவேற்க காத்திருக்கும் அன்பிற்குரிய தன்னம்பிக்கை வாசகர்களே.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கேற்ப 2019 ஆம் ஆண்டை நிறைவு செய்து 2020 ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறோம்.
இந்தாண்டிற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. பாரத்ததின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் இந்த ஆண்டில் நாடு வல்லரசு ஆகும் என்று தன்னுடன் கனவையும் எதிர்பார்ப்பையும் கூறியிருந்தார்.
இது அவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் அது தான். இதற்கு நாம் ஒற்றுமையாகவும் சகோதரத்துவமாகும் ஓங்கி இருத்தல் வேண்டும்.
சாதிகளால், மதங்களால், இனங்களால் பிளவுப்பட்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரம் கோர்த்தல் வேண்டும்.
நாட்டின் தூய்மையை வீட்டின் தூய்மையாக நினைத்து போற்றுதல் வேண்டும். நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட நடத்தல் வேண்டும். இலஞ்சம் இல்லா நாடு, போரில்லா நாடு, பெண்ணைப் போற்றும் நாடு, வேலைவாய்ப்புள்ள நாடு, விவசாயத்தைப் போற்றும் நாடே வளர்ந்த நாடு. இதை அடைய ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம். நம் தேசத்தை வல்லரசு ஆக்குவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உள்ளத்தோடு உள்ளம்

அது ஒரு வகுப்பறை…

ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ரொட்டியைப் பற்றி பாடம் நடத்திய போது ஒரு கேள்வியை மாணவர்களிடம் கேட்டார்.

ரொட்டியை எவ்வாறு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்? என்பது ஆசிரியர் கேட்ட கேள்வி.

ஒரு மாணவன் எழுந்தான். ரொட்டியின் மீது வெண்ணையைத் தடவி சாப்பிட்டால் அது நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் என்றான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு மாணவன் எழுந்து, வெண்ணெய் தடவி சாப்பிடுவதைவிட, ஜாம் தடவி சாப்பிட்டால் ரொட்டி ரொம்ப நன்றாக இருக்கும் என்றான்.

உடனே அடுத்த மாணவன் எழுந்து, இவைகளை விட ரொட்டியை பாலோடு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்றான்

ரொட்டியை பஞ்சாமிர்தத்தோடு சேர்ந்து சாப்பிட்டால் நல்ல சுவையோடு இருக்கும் என்றான் இன்னொரு மாணவன்.

ஆசிரியர் தனது பதிலை சொல்வதற்குள் இன்னொரு மாணவன் எழுந்து. சார் ரொட்டியை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து சாப்பிட்டால் தான் மிகவும் சுவையாக இருக்கும் என்று சொன்னான். ஆசிரியர் மனமகிழ்ந்து பாராட்டினார்.

ரொட்டியை மட்டுமல்ல வெற்றியையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது தான் தனிமனித வெற்றி. நாட்டின் வெற்றியாக மாறுகிறது. ஒரு நாட்டின் வெற்றி உலகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது.

உள்ளத்தோடு உள்ளம்…

ஒரு விசித்திரமான சிந்தனையுள்ள அரசர் ஒருவர் இருந்தார். அவர் தினசரி காலையில் எழுந்ததும், அரண்மனையில் உள்ளவர்கள் யாருடைய முகத்திலும் விழிக்கமாட்டார். மாறாக அவர் தூங்கி எழுந்ததும் அவருடைய கண்ணை ஒரு துணியால் கட்டி, மதிற்சுவரின் மீதுள்ள மண்டபத்தில் அவரை நிற்க வைப்பார்கள். அந்த வழியாக வழிப்போக்கர் யாராவது வரும்போது மன்னரின் கண் கட்டை அவிழ்த்து விடுவார்கள். அந்த வழிப்போக்கரின் முகத்தில் அரசர் விழிப்பார். இதுதான் அன்றாட வழக்கம்.

ஒருநாள் காலையில், அரசர் மண்டபத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார். அப்பொழுது அந்த வழியாக ஒரு விவசாயி தனது தலையில் ஒரு கூடையை கவிழ்த்துக் கொண்டு வருகின்றார். அரண்மனை அருகில் வந்ததும், அவர் தனது தலையில் இருந்த கூடையை விலக்குவதற்கும், அரசரின் கண்கட்டை அவிழ்ப்பதற்கும் சரியாக இருந்தது.

அரசர் விவசாயியின் முகத்திலும், விவசாயி எதேச்சையாக அரசரின் முகத்திலும் விழித்துக் கொண்டனர். போயும் போயும் இந்த ஏழை விவசாயியின் முகத்திலா விழித்தோம் என்ற வெறுப்போடு அரசர் திரும்புகிற போது அவர் தலை அருகில் இருந்த தூணில் பட்டு, சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. உடனே அரசருக்கு கோபம் தலைக்கு மேல் ஏற, இவன் முகத்தில் விழித்ததும் இவ்வாறு நடந்து விட்டதே. இவன் ராசியில்லாதவன். இவன் உயிருடன் இருக்கக்கூடாது என்று தீர்மானித்து அரசர் அவ்விவசாயியை தூக்கிலிட ஏற்பாடு செய்யும் படி உத்தரவிட்டார்.

அதன்படி, தூக்குக் கயிற்றின் முன்னர் நின்ற விவசாயியிடம், உனது முகத்தில் விழித்தவுடன் எனது தலையில் அடிப்பட்டுவிட்டது. நீ ராசியில்லாதவன், உன்னைத் தூக்கிலிட்டுப் போகிறேன். இறுதியாக உனக்கு சொல்ல ஏதாவது இருந்தால் சொல், அதற்கு ஒரு அவகாசம் கொடுக்கிறேன்… என்றார் அரசர்.

அதற்கு அந்த விவசாயி பலமாகச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்று அரசர் கத்தினார்.

அதற்கு அவ்விவசாயி, அரசே! மன்னிக்க வேண்டும், என் முகத்தில் விழித்ததால் உங்களுடைய தலையில் தான் அடிப்பட்டது. உங்களுடைய முகத்தில் விழித்த எனக்குத் தலையே போகப் போகிறது. ஆகவே நம்மில் யார் ராசியில்லாதவர் என்று நினைத்துச் சிரிக்கின்றேன் என்றார்.

உள்ளத்தோடு உள்ளம்…

மனிதன் எப்படி வாழ வேண்டு? மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒருவன் ஞானியிடம் கேட்டான். அதற்கு ஞானி.

களிமண்ணால் செய்த பொம்மை, பஞ்சால் செய்யப்பட்ட பொம்மை, சர்க்கரையால் செய்யப்பட்ட பொம்மை என இந்த மூன்று பொம்மைகளையும் கொண்டு வந்து, மூன்று பெரிய கண்ணாடிப் பாத்திரங்களையும் கொண்டு வந்து தனித்தினியாக ஒவ்வொரு பொம்மையை தண்ணீர் உள்ள ஒவ்வொரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊறவைத்தார்.

களிமண்ணால் செய்த பொம்மை தண்ணீரில் கரைந்து சுத்தமான தண்ணீரை அசுத்தமாக்கியது. இதைப் போல சமுதாயத்தில் தீங்கு செய்பவன் கலங்கிய தண்ணீரைப் போலத் தன் கெட்ட செயல்களால் வன்முறையால் சமுதாயத்தை மாசுபடுத்தி விடுகிறான்.

பஞ்சால் செய்த பொம்மை தண்ணீரில் ஊறி உருபெருத்திருந்தது. இதைப் போல சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு, பல கெட்ட வழிகளில்  பொருளைச் சேர்த்த யாருக்கும் பயன் இல்லாமல் கொழுத்துப் போய் தனக்காக மட்டுமே வாழ்வான்.

சர்க்கரை பொம்மை தண்ணீரில் உருதெரியாமல் தன்னை கரைத்துக் கொண்டு தண்ணீரை இனிப்பான சுவை கொண்டதாகச் செய்யும். அதைப் போல சமுதாயத்திற்காக  தன்னை அர்ப்பணித்து, தன் செய்கின்ற நல்ல சேவைகளின் வாயிலாக சமுதாயத்தை இனிக்கச் செய்வான். எனவே சர்க்கரை பொம்மை போலத்தான் மனிதன் வாழ வேண்டும் என்று ஞானி செய்து காட்டினார்.

தனக்காக மட்டும் வாழாமல் சமுதாயத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து நேர்மையோடு சமுதாயக் கடமையை விரும்பிச் செய்கின்ற சமூக நல ஊழியனின் பண்பை எல்லோரும் பாராட்டுவர்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…

உள்ளத்தோடு உள்ளம்

சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சாக்ரடீஸ். மறு நாள் காலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அப்போது பக்கத்து அறையில் இருந்த கைதி ஒருவன் இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தான். இதைக் கேட்ட சாக்ரடீஸ் அந்த நபரிடம் எனக்குப் பாட்டுப்பாட கற்றுக்கொடுப்பாயா? என்று கேட்டார்.

இதைக் கேட்ட அந்தக் கைதி, ஐயா, நாளை காலை உங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போகிறார்கள். இந்த நிலையில் பாட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களே என்றார். இதற்கு அவர்.

சாகும் முன்பு எனது வாழ்க்கையில் மேலும் ஒரு கலையை கற்றுக்கொண்டேன் என்ற நிம்மதியில் நான் மரணத்தை ஏற்பேன் என்று கூறினார்.

அழகான இந்த பூமியில் ஒவ்வொரு வினாடிக்கும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். தான் வாழந்த ஒவ்வொரு கணமும் விழிப்புடனும், புதியவற்றை அறிந்து கொள்ளும் தேடலுடனும் சாக்ரடீஸ் இருந்தார். அதனால் தான் அவர் சிறந்த அறிஞராகப் புகழப்பட்டார். வாழ்நாளில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும், புதியவற்றை கற்றுக் கொண்டு நம்மை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும்.

உள்ளத்தோடு உள்ளம்

அண்ணல் காந்தியடிகளை ஆப்ரிக்காவில் சுமஸ்ட் என்பவன் அடித்து உதைத்து சித்திரவதை செய்து சிறைக்குள் தள்ளினான். சில மாதங்களில் சிறையில் பூட்ஸ் தைக்கும் தொழிலை காந்தியடிகள் கற்றார். அவர் விடுதலை ஆகும் போது சுமஸ்டிடம் உங்களுக்கு ஒரு பரிசு தரப் போகிறேன் என்றார் காந்தியடிகள்.

என்ன பரிசு? என்று கேட்டார் சுமஸ்ட். உங்கள் காலுக்காக பூட்ஸ் தைத்திருக்கிறேன், போட்டுப் பாருங்கள் என்றார் காந்தி. சுமஸ்ட் பூட்ஸைப் போட்டுப் பார்த்துவிட்டு சைஸ் ரொம்ப கரெக்டாக இருக்கிறதே, எப்படி இவ்வளவு துல்லியமாக அளவு எடுத்தீர்கள்? என்றார்.

நீங்கள் என்னை சிறைக்குள் தள்ளும் போது பூட்ஸ் காலால் என் முதுகில் மிதித்துத் தள்ளினீர்கள். என் சட்டையில் உங்கள் பூட்ஸ் கால் பதிந்திருந்தது. அதை அளவாக வைத்துத்தான் உங்கள் பூட்ஸை தைத்தேன் என்றார் காந்தியடிகள்.

இதைக் கேட்டவுடன் சுமஸ்ட் தேம்பித் தேம்பி அழுதான். தன்னுடைய இராணுவ உடைகளைக் களைந்து விட்டு காந்திய இயக்கத்தில் சேர்ந்து பிற்காலத்தில் கதராடை அணிந்து சர்வோதயத் தொண்டராய் செயல்பட்டார்.

தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டிப்பது என்பது அவர் வெட்கப்படும் படி அவருக்கு நல்லது செய்து விடுவது தான் உயரிய பண்பாகும். இப்படிப்பட்ட நற்குணம் கொண்ட மகாத்மா காந்தியடிகளை இந்நாளில் போற்றுவதில் பெருமைப்படுகிறோம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…!

உள்ளத்தோடு உள்ளம்

இருபதாண்டுகளாகச் சிறையில் இருந்து விடுதலை அடைந்த குற்றவாளி ஒருவனிடம் யாரும் அன்பு காட்டவில்லை. யாரும் அவனுக்கு வேலையும் கொடுக்கவில்லை. பசிதாங்க முடியாமல் அவன் ஒரு வீட்டின் வெளியில் நின்று பிச்சை கேட்டான். அந்த வீட்டில் வசிக்கும் பாதிரியார் அவனிடம் அன்பாகப் பேசி, அவன் பசியை உணர்ந்து உட்கார வைத்து வெள்ளித்தட்டில் அறுசுவை உணவை அவனுக்களித்து, நல்ல உபதேசம் செய்து படுக்கை அறையில் மெத்தையில் படுக்க வைத்தார்.

அந்தக் குற்றவாளி விடியற்காலையில் எழுந்து வெள்ளித் தட்டுகள் கரண்டிகள் இன்னும் பல பொருள்கள்  எடுத்துக் கொண்டு பின்பக்க சுவரைத் தாண்டிக் குதித்து ஓடினான். பாதுகாப்புக்காக சுற்றிக் கொண்டிருந்த காவல்காரர்கள் அவனைப் பிடித்து பாதிரியாரிடம் கொண்டு வந்தனர். அவனிடம் இருந்த பொருள்களையெல்லாம் காட்டி உங்களுடையதுதானா? என்று கேட்டார்கள்.

ஆம். எல்லாப் பொருள்களும் என்னுடையது தான், நான் தான் இவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவனுக்கு இன்னும் எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் இங்கிருந்து எடுத்துச் செல்லட்டும் என்று பாதிரியார்   கூறினார். காவல்காரர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். குற்றவாளி பாதிரியாரின் காலில் விழுந்து மன்னிக்கும்படி அழுதான். பாதிரியார் தட்டிக் கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து இதை வைத்து தொழில் தொடங்கிப் பிழைத்துக் கொள் என்றார். அதன் பின்னர் அவன் நல்வழியில் வாழத் தொடங்கிவிட்டான்.

உள்ளத்தோடு உள்ளம்

கிரேக்க மன்னர் பிலிப் மாசிடோனியாவிலிருந்து அரிஸ்டாட்டிலுக்கு எழுதிய கடிதத்தில் குருவே திருமணம் ஆகி பதினொரு ஆண்டுகளுக்குப்பிறகு எனக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. அந்தக்குழந்தை மகாமேதையான உங்களிடம் தான் கல்வி கற்கும் என்கின்ற நம்பிக்கையில் நான் ரொம்பும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார் மன்னர்.

கடிதத்தில் குறிப்பிட்டபடி தன் மகன் அலெக்ஸாண்டரை பத்து வருடம் கழித்து அரிஸ்டாட்டிலிடம் ஒப்படைத்தான் மன்னன். அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரைத் தன்னுடன் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தார். ஒரு முறை மலையடிவாரத்திற்கு கீழே வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அரிஸ்டாட்டிலுக்குப் பின்னால் அலெக்ஸாண்டர் வந்து கொண்டிருந்தார்.

அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலைப் பார்த்து குருவே வெள்ளம் அதிகமாக வருகிறது. நான் முன்னே செல்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்றான். எங்கே மேடு பள்ளம் என்பது தெரியாத அளவிற்கு வெள்ளம் வருவது அதிமாகிவிட்டது. வெள்ளம் உன்னை இழுத்துக் கொண்டு போய்விடும். நீ முன்னால் போக வேண்டாம் என்றார் அரிஸ்டாட்டில்.

இதற்கு ஐயா நீங்கள் நினைத்தால் ஆயிரம் அலெக்ஸாண்டர்களை உருவாக்க முடியும். ஆனால் ஆயிரம் ஆயிரம் அலெக்ஸாண்டர்கள் சேர்ந்தாலும் ஒரே அரிஸ்டாட்டில் மாமேதையை உருவாக்க முடியாது. எனவே நான் முதலில் செல்கிறேன் என்றார் அலெக்ஸாண்டர்.

தம்மை விடவும் அறிவு முதலியவற்றில் பெரியவர்களைத் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் வல்லாமை எல்லாவற்றிலும் சிறந்த வல்லமையாகும்.

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு பெண், தத்துவ மேதையான அரிஸ்டாட்டிலை சந்தித்தாள். அப்போது அவரிடம் அப்பெண், ஐயா என் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதை  எப்போது தொடங்க வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு அவர் அம்மா உன் மகனின் வயது என்ன என்று கேட்டார்.

என் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது என்று பதில் அளித்தாள் அப்பெண்.

இதைக் கேட்ட உடனே அரிஸ்டாட்டில் கோவமாக கத்தத் தொடங்கினார்.

உடனே நீங்கள் வேகமாக வீட்டிற்குச் சென்று உன் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் போங்கள், ஏற்கனவே அவனுக்கு ஐந்து வருடங்கள் வீணாக்கிவிட்டாய்.

ஒரு குழந்தைக்கு கல்வி கற்றுக்கொடுப்பது என்பது அந்தக்குழந்தை பிறந்த உடனேயே தொடங்கி விடுகிறது. குழந்தைகளின் முதல் ஆசிரியர் அவர்களின் பெற்றோர்கள் தான். ஏன் என்றால் அவர்கள் தான் வீடு என்ற பள்ளியில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை முதலிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள் என்று கூறினார்.

உள்ளதோடு உள்ளம்

புகழ் பெற்ற வயன் இசைக் கலைஞர் படேர்வஸ்கி. அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயன் இசைத்து பயிற்சி செய்வார். ஒரு முறை அவரது ஈசல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் ரசிக்கும் வயன் கலைஞருமான ஒருவர் உங்கள் வெற்றியின் ரகசியம் என்று கேட்டார்.

அதற்கு படேர்வஸ்கி எனது வெற்றியின் ரகசியம் தினந்தோறும் பயிற்சி செய்வது தான். நான் ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும். நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதை எனது விமர்சகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்யவில்லை என்றல் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.

ஒரு கலைஞர் தொடர்ந்து வெற்றியாளராக திகழ வேண்டுமானால், அவர் தனது கலையில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் அவரால் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும். உழவுக்கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் இது துருப்பிடித்து விடும். அது போலத்தான் கலைஞர்களும் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் திறமை மங்கிவிடும்.