தன் திறமைகளை உச்சபட்ச மேன்மைக்கு உயர்த்திக் கொள்ளுவது எப்படி?
இப்போதைய பொருளாதார அமைப்பில் உங்களுடைய வருமானம் 3 காரணிகளில் தீர்மானிக்கப்படுகிறது.
1) என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
2) எவ்வளவு திறமையாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
3) உங்களுக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளீர்களா? இந்த மூன்றும் தான் உங்கள் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன.
வாழ்வின் உச்சத்தை தொட்டவர்கள் எல்லாரும் தங்களது திறமைகளை மேம்படுத்தி, மேம்படுத்தி தன்னை உச்சபட்ச நிலைக்கு உயர்த்திக் கொண்டதால் தான் அவர்கள் எதிர்பார்த்த வளர்ச்சி அடைய முடிந்தது, அதை அடைய அவர்கள் எந்த விலையைக் கொடுக்கவும் தயங்கவில்லை,எந்த தியாகத்தைச் செய்வதற்கும் அவர்கள் தயங்கவில்லை, நேரம் முழுவதையும் முதலீடு செய்யவும் தயங்கவில்லை.
நம்மை விட யாரும் சிறந்தவர்கள் இல்லை, நம்மை விட யாரும் சுறுசுறுப்பானவர்கள் இல்லை. நமக்கு மாற்று யாரும் இல்லை என்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.எல்லா திறமைகளும், வியாபார நுணுக்கங்களும் கற்றுக் கொள்ளக் கூடியவை ஒரு திறமையோடு இன்னொரு திறமையை இணைத்துக் கொண்டு அதனையும் அது சேர்த்து வளர்க்கும்.
உங்களது துறையில் முதல் 10 இடத்தில் உள்ள சிறப்பானவர்கள் பட்டியலில் உங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று கடுமையாக உழைத்தால் அது நடந்தே தீரும், அதைத் தடுக்க யாராலும் முடியாது. இது உடனடியாக நடந்துவிடக்கூடிய காரியம் அல்ல. இதற்கு சில ஆண்டுகள் கூட ஆகலாம். இது வரை சாதிக்காததை நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால், இதுவரை இல்லாத அளவு உங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடும், உங்கள் திறமைகளை மெருகூட்டும்.
தங்களிடம் மறைந்துள்ள எந்தத் திறமையை இன்னும் மேம்படுத்தக் கொள்ள வேண்டும்? எந்த தொழில் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்? தொழில் பற்றிய எந்த ஆழமான செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்? என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டும்.
இதன் காரணமாக உங்களது திறமைகள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சியைப் பெற்று இருக்குமேயானால் நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் மேன்மைப்படுத்திக் கொண்ட திறமைகளில் எந்தத் திறமை நமக்கு இந்த அளவுள்ள நல்ல பலனைத் தந்தது? என்று கேளுங்கள், இதற்கான பதிலை நீங்கள் கண்டு பிடிக்க முடியாவிட்டால், “என்னிடமுள்ள எந்த திறமை என்னை இந்த அளவு உயர்த்தியது? என்று, உங்கள் மேலாளரைக் கேளுங்கள். அல்லது உங்களுடன் பணிபுரிபவர்களை அல்லது உங்களுக்கு கீழ் பணியில் இருப்பவர்களை கேளுங்கள், நண்பர்களிடமும் அல்லது உங்களது மனைவியிடமும் கேளுங்கள் அவர்கள் இதற்கான சரியான பதிலைத் தருவார்கள்.
கேள்விக்கு விடை கிடைத்து விட்டால் உங்களது முழு சக்தியையும் அந்தப் புள்ளியில் குவித்து அதை மேலும் வளர்த்துக் கொள்ளமுயற்சி செய்யுங்கள். உங்களுடைய ஒரு பலவீனமான பகுதிகளை பலப்படுத்திக் கொண்டால் மற்ற பலவீனங்களை எளிதாக பலமாக்கிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சிலர் பிறக்கும் போதே திறமையுடன் பிறக்கிறார்கள். சிலர் முயற்சியின் மூலம் திறமை அடைகிறார்கள். ஒரு ஆங்கில பழமொழி ஒன்று “எந்த திசையில் குதிரை ஓடுகிறதோ, அந்த திசையில், அதன் போக்கில் பயணித்து, குதிரை ஓட்டம் பழகுவது தான் சிறந்த வழி” என்று சொல்வார்கள்,அதைப் போல உங்களிடம் புதைந்துள்ள இயற்கைத் திறமை எதுவோ, அதை வைத்துக் கொண்டு அதன் வழியிலேயே பயணித்துப் பழகுங்கள், வெற்றிகள் தானாக வந்து சேரும்.
இயற்கையாக அமைந்துள்ள திறமையை வளப்படுத்துங்கள். அதில் நுணுக்கங்களை மேன்மைப் படுத்த கடின உழைப்பு தேவைப்படுகிறது. சில திறமைகளும், நுணுக்கங்களும் உங்களது உழைப்பாலும், நீங்கள் கற்றுத் தெளிந்த வழிமுறைகளினாலும் உங்களை வந்தடைகிறது.
உங்களுடைய வெற்றியை இரட்டிப்பாக்க அதற்குரிய நுணுக்கத்தைப் பெற முயற்சிசெய்யுங்கள். ஒவ்வொரு தொழில் நுணுக்கமும் கற்றுக் கொள்ளக் கூடியவை தெரிந்து கொள்ளக் கூடியவை, அறிந்து கொள்வதன் மூலமும், அனுபவத்தின் மூலமும் அதை மெருகேற்ற முடியும்.[hide]
உங்கள் துறையில் நீங்கள் நிபுணராக கீழ்காணும் 12 வழிமுறைகளை நீங்கள் பின்பற்றியாக வேண்டும்.
1) எந்தத் துறையில் நீங்கள் மின்ன வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்தத் துறையில், ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2) உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு இன்றிலிருந்து என்னென்ன பயிற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்கிறீர்களோ அந்தப் பயிற்சிகள் நம்மை ஜெயிக்க வைக்கும் என்று முழுமையாக நம்ப வேண்டும், தளராத தன்னம்பிக்கையும் வேண்டும்.
3) இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? எந்த அளவு உயர விரும்புகிறீர்கள்,எந்த வழியில் உயரப் போகிறீர்கள் என்று நினைப்பதையெல்லாம் வரிசைப்படுத்தி ஆவணப்படுத்துங்கள்.
4) எதில் பலமாக உள்ளீர்கள்? எதில் பலவீனமாக உள்ளீர்கள் என்பதையும் ஆராயுங்கள்.
5) எந்தத் துறையில் உச்சத்தைத் தொட வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதில் எந்தப் பகுதியை எந்த வழியில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
6)உச்சத்தைத் தொட காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
7) இதை அடைவதற்கு தடையாக இருப்பது எது என்பதையும் அடையாளம் காணுங்கள், தடைகளை உடைத்தெறிய வழி காணுங்கள்.
8) வெற்றியைத் தொட இன்னும் என்னென்ன திறமைகளை, என்னென்ன நுணுக்கங்களை,எந்தெந்த புத்தகங்களில், எந்த ஆடியோ புரோகிராமில்,எந்த கருத்தரங்கில், எந்த விவாதங்களில் தெரிந்து கொள்ள முடியும் என்று கண்டு அதன்படி தெளிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
9) இதற்காக யாரிடமிருந்து உதவி பெற வேண்டும்? யாரிடம் ஒத்துழைப்பு பெற வேண்டும், யார் மூலம் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
10) முறையான காலக் கெடுவுடன் கூடியபயிற்சிகள் எங்கு, எப்படி,எத்தனை மணிநேரம் அல்லது எவ்வளவு நாள் பெற வேண்டும் என்ற திட்டத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
11) உங்கள் எதிர்காலத்தை, அந்தத் துறையில் உன்னதம் பெறுவதை, மேன்மையில் உயர்ந்து நிற்பதை திரைப்படம் போல மனக்கண் முன்னால் படமாகப் பாருங்கள்.
12) எந்த முயற்சியும் எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடாதீர்கள், நீங்கள் வெற்றிக் கோட்டைத் தாண்டும் வரை தளராத மனமும், இடைவிடாத முயற்சியும், இடையில் கைவிடாத குணத்தையும், வெற்றிக் கோட்டைத் தாண்டுவேன் என்ற வைராக்கியத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த முயற்சிக்கு உதாரணமாக, எனது நண்பர் உடுமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் திரு. அரிமா அ. நீலகண்டன் அவர்களை எடுத்துக் கொள்ளலாம், வாழ்க்கை என்பது ஐஸ்கீரிம் மாதிரி, அதை உருகுவதற்கு முன் சுவைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு வகை. வாழ்க்கை என்பது மெழுகுவர்த்தி போல, உருகும் முன்பு பிறருக்கு ஓளி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாம் வகை. இந்த இரண்டாம் ரகம் தான் எனது நண்பர் நீலகண்டன்.
அளந்து வைத்த சிரிப்பு, அழகான கண்கள், ஆரோக்கியமான உடல் வாகு ,ஆனந்தமான நெஞ்சம், அளவு சற்று குறைவான உயரம் என்றாலும் நிறைவான எண்ணம் இவருக்கு அழகு சேர்க்கிறது, அன்பு எனும் தென்றல் காற்று நுழைந்து, உறவாட எப்பொழுதும் இதயக் கதவை திறந்து வைத்திருக்கிற நல்ல பண்பாளர். துயரத்தில் வாழும் மனிதர்களுக்கு அன்பையும், ஆறுதலையும் அளிப்பதுதான் நற்குணம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த நற்குணம் இவரிடம் அபரிதமாக இருக்கிறது.
உணர்ச்சி வசப்படுவதால் வலி ஏற்படுவது சகஜம், அதைக் தாங்கும் வலிமையும், அதைத் தாண்டி செயல்படும் திறமையும் வளர்த்துக் கொள்வது பொறுமையின் அடையாளம் என்று சொல்வார்கள். அந்தப் பொறுமை இவரிடம் நிறைந்து பொங்கி வழிகிறது.
கடுஞ்சொல் ஒன்று கூட இவரிடம் காண முடியாது. பல மடங்கு தன் குடும்பத்தை நேசிப்பவர். இவர் தன் மனைவிக்குத் தருகிற மரியாதையும், அன்பும், தான் பெற்ற மகள்களுக்குக் காட்டும் பாசமும், நண்பர்களிடம் காட்டும் நன்றியும், ஈடு இணையில்லாதது, மனைவியின் மந்திரச் சொல்லுக்கு இவரிடம் மிகுந்த மரியாதை உண்டு. மற்றவர்களின் தந்திரச்சொற்களுக்கு இவர் மயங்குவது இல்லை.
அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின்பு. அரிமா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு. அரும் பெறும் அறச் செயல்களை மனம் கோணாமல் செய்து வருபவர்,
தன் திறமையை மேம்படுத்திக் கொள்ள யாரிடமிருந்து அந்த நுணுக்கங்களைப் பெற வேண்டும்என்பதும், அவரிடம் நட்புணர்வை எப்படி வளர்த்துக் கொள்வது என்றும் கண்டறிந்து, தன்னை வைரம் போல செதுக்கிக் கொள்ளும் சிறந்த குணமும் இவரை உயர்த்தியுள்ளது.
இவரின் அன்பான பேச்சும், ஆதரவான மொழிகளும் உன்னதமான நட்புணர்வும், உயர்ந்த பழக்கங்களும், உன்னதத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சியும் இவரின் தனித்துவத்தைக் காட்டுகிறது.
ஆயிரக்கணக்கான மைல்கள் கொண்ட பயணம் கூட
ஒரு சின்ன அடியில்தான் தொடங்குகிறது
ஒரு நீளமான காவியம் கூட
ஒரு முதல் எழுத்தில்தான் ஆரம்பமாகிறது
ஒரு அழகிய சிற்பம் கூட
ஒரு உளியின் முதல் ஓசையில் தான் தொடங்குகிறது
பெரு வெள்ளம் கூட
ஒரு சிறு துளியில் தான் ஆரம்பமாகிறது
உரு ஒன்று கூட
சிறு கரு ஒன்றில் தான் தொடங்குகிறது,
திறமையின் உன்னதங்கள் கூட அதைப் பெற வேண்டும்
என்ற சிறு ஆர்வத்தினால் தான் ஆரம்பமாகிறது.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles