Home » Cover Story

நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!

பேராசிரியர். முனைவர். சி.சுப்பிரமணியம்

முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர்

தலைவர், மேலாண்மை அறங்காவலர்,

புரபசனல் கல்வி நிறுவனங்களின் குழுமம், பல்லடம்

தலைவர், மேலாண்மை அறங்காவலர்,

ஏ.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெக்குப்பாளையம், கோவை.

தலைவர் மேலாண்மை அறங்காவலர், ஆறுமுகம் அகாடமி,அரவக்குறிச்சி

தலைவர் மேலாண்மை அறங்காவலர்,ஆசான் கலை அறிவியல் கல்லூரி,கரூர்

                  “அறிவாற்றல் அன்புமனம் ஈகைப் பண்பு

                  அளப்பரிய தன்மானம் நேர்மை நெஞ்சம்

                  நெறியோடு வாழுகின்ற வாழ்க்கை யார்க்கும்

                  நெஞ்சத்தால் தீங்கு நினையாத பண்பு

                  வெறியோடு செயல் செய்யும் வேகம் என்றும்

                  வெற்றியையே அணிகின்ற வீரம் அன்பே

                  குறியாக நடைபோடும் வாழ்வு மாறா

                  கொள்கை மனம் குணக்குன்று இவரே சி.எஸ்”

                  – தேசிய நல்லாசிரியர் புலவர். நாகு. ஆறுமுகம்

கே.  தாங்கள் பிறந்து வளர்ந்தது பற்றி?

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் தென்கிழக்கு மூலையில் கடைக்கோடி கிராமமாக இருந்து, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது ஈரோடு மாவட்டத்துக்குள்ளும், தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குள்ளும் இயங்கி வரும் மாமரத்துப்பட்டி என்னும் சிற்றூர் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடி மக்கள் பெரும்பாலும் வாழும் கிராமம் மாமரத்துப்பட்டி. அங்கு பாரம்பரியமாக, தீவினை அகற்றி, தானம் விரும்பி, செய்வன திருந்தச் செய்து வேளாண்மை செய்து ,வாழ்ந்து வந்த குடும்பத்தில் திரு. செ. சின்னச்சாமி -திருமதி. செல்லாத்தாள் ஆகியோரின் இளைய மகனாக 4. 5. 1951 ஆம் நாள் பிறந்தேன். தொடக்கக் கல்வியை மாமரத்துப்பட்டி ஓராசிரியர் பள்ளியிலும், நடுநிலைக் கல்வியை அரிக்காரன்வலசு நடுநிலைப்பள்ளியிலும், உயர்நிலை  – மேல்நிலைக்கல்வியை அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன்.

புகுமுகவகுப்பும், இளம் அறிவியல் (வேதியியல்) பட்ட வகுப்பும் பொள்ளாச்சி ந.க.ம. கல்லூரியில்  முடிந்தேன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ (தமிழ் இலக்கியம்) பயின்றேன். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்று எம்.ஃபில் பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பயின்று பி.எச்.டி., பட்டமும் பெற்றேன்.

கே. ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என்ன?

நான் ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான முழுமுதற்காரணம் எனக்கு வாய்த்த ஆசிரியப் பெருமக்கள்தான். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எனக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் தலைசிறந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுடன்  இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன். எனினும், என்னுடைய நெஞ்சில் தமிழ் உணர்வையும், சமுதாய உணர்வையும் ஊட்டியவர்கள் இருவர். .அவர்கள் யாரெனில் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இருந்து, இன்றுவரை எனக்கு உந்து சக்தியாக இருக்கின்ற, இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற, என் ஆய்வு நெறியாளர் கவிஞர். சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவரும், தொடக்கப்பள்ளியிலும்,  நடுநிலைப்பள்ளியிலும் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவருமான ஆசிரியர் புலவர். நாகு. ஆறுமுகம் ஆகிய இருவரும் ஆவார்கள்.

நானும் எங்கள் குடும்பத்தினரும், உறவினர் குடும்பத்தினரும் தொடங்கி 20 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற ஆறுமுகம் கல்வியகம், நுழைவுரிமை மேல்நிலைப்பள்ளி என்கின்ற அரவக்குறிச்சியிலுள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு என் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெயரும், அங்குள்ள நூலகத்திற்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பெயரும் சூட்டுமளவுக்கு அவர்கள் என்னை ஈர்த்தவர்கள். அவர்களின் காலடித்தடத்தைப் பின்பற்றியே ஆசிரியப்பணியை நான் தேர்வு செய்தேன்.

கே. கிராமப்புறத்தில் பிறந்து ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி உயர்வு அடைந்திருக்கிறீர்கள். அதுபற்றி…

வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு, நாம் கிராமத்தில் பிறந்தோமா அல்லது நகரத்தில் பிறந்தோமா என்பது முக்கியமல்ல. அமெரிக்கக் குடியரசுத்தலைவராக இருந்த திரு. ஆபிரகாம் லிங்கன் அவர்கள் மிகச் சாதாரணமான செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்தான். எளிய படகோட்டியின் மகனாகப்பிறந்து, தமிழ்வழியில் கல்வி கற்று, பாரதத்திருநாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் தான் நம் நேசத்துக்குரிய திரு. அப்துல்கலாம் அவர்கள். இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேர்மையும், இடைவிடாத முயற்சியும், நல்லொழுக்கமும், உச்சந்தொட வேண்டுமென்ற உந்துதலும் இருந்தால், வாழ்வில் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம். மேற்காணும் தலைமைப்பண்புகளோடு , இறையருளும், தந்தை- தாய் ஆசிகளும், குருவருளும், ஆட்சிப்பொறுப்பிலிருந்த அம்மா அவர்களின் பேராதரவும் எனக்கு கிட்டியமையால் நான் துணைவேந்தராக முடிந்தது.

கே. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உங்கள் பணிக்காலத்தில் செய்த சாதனைகள் என்னென்ன?

 • தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், பொய்யான குற்றச்சாட்டின் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு கல்விநிலைப் பணியாளர்கள், மூன்று அலுவல் நிலைப்பணியாளர்களை, மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் பணிக்காலத்தை ஒழுங்குப்படுத்தி, இழந்த ஊதியத்தை மீண்டும் பெற்றுத்தந்து ஐந்து குடும்பங்களை வாழ வைத்தது.
 • மேற்காணும் ஐவரையும் பணியமர்த்தக்கோரி, ஆதரவுப் போராட்டம் நடத்தி, 89 நாட்கள் வரை ஊதியம் இழந்த அனைத்துப் பணியாளர்களையும் சனிக்கிழமைகளில் கூடுதல் பணியாற்றச் சொல்லி, இழந்த நாட்களை ஈடுகட்ட வைத்து, இழந்த நாட்களுக்கான ஊதியம் அனைத்தையும் வழங்கியது.
 • நான் பணியாற்றியபோது பல்கலைக்கழகத்தில் நிலுவையிலிருந்த 1200 தணிக்கைத் தடைகளை, உள் கணக்குத் தணிக்கைத்துறை மூலம் ஓராண்டில் நீக்கி, 180 தணிக்கைத்தடைகள் மட்டுமே உள்ளதாக மாற்றி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த தணிக்கைத்தடை உள்ள பல்கலைக்கழகமாக மாற்றியது.
 • பத்தாண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு பெறாமல் இருந்த 37 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியது.
 • 15 ஆண்டுகளாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 24 பணியாளர்களை நிரந்தரமாக்கி வாழ்வளித்தது.
 • பத்தாண்டுகளுக்கு மேல், பணிமுன்னடைவு பெறாமல் இருந்த 24 இணைப்பேராசியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கியது.
 • ஆய்வு உதவியாளர்கள், செல்லடைவுப் பணியாளர்கள், இளநிலை ஆய்வாளர் போன்ற பணிகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஒப்பளிக்கப்படாத பணியிடங்களில் இருந்து வாழ்வில் ஒளியிழந்து நொந்து போயிருந்த 29 பேரின் பணியிடங்களுக்கு அரசின் ஒப்புதல் பெற்று, அவர்களை விரிவுரையாளர்களாகப் பணிமேம்படுத்த அரசு ஆணை பெற்று, அவர்களுக்கு விரிவுரையாளர் பணி வழங்கியது.
 • எஸ்.சி எஸ்.டி பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பியது.
 • பாராளுமன்ற வடிவில் கட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒன்றரை லட்சம் நூல்களைக் கொண்ட தஞ்சைப்பல்கலைக்கழக நூலகத்தை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறந்துவிட்டு, யார் வேண்டுமானாலும் உறுப்பினராக, புரவலராக ஆகலாம் என ஆக்கி மக்கள் பல்கலைக்கழகமாக மாற்றியது.
 • சுற்றுவட்டாரத்து மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள, பல்கலைக்கழகத்தைத் திறந்துவிட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதுடன் ஒரு ரூபாய்க்கு மூலிகைத் தேநீர் வழங்கி, தமிழிசையை ஒலிபரப்பி ‘மக்கள் துணைவேந்தர்’ என்ற பெயரைப் பெற்றது.

இந்த இதழை மேலும்

திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!

திரு. K. பாபு,

ECO GREEN UNIT, கோயமுத்தூர்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…?

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில், பாரம்பரியமான விவசாயக்குடும்பத்தில் பிறந்தேன். எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் மட்டும் செய்து இருக்கிறேன்.

பத்தாம் வகுப்பை முடிக்காததுதான் என்னுடைய கல்வித் தகுதி. சின்ன வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் விவசாயத்தையே தொழிலாக அமைத்துக் கொண்டேன்.

கே: பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பின்னர், உங்களின் எண்ணம் வேறு என்னவாக இருந்தது? 

நான் படிப்பை நிறுத்தியது பெற்றோருக்கு மனவருத்தத்தை தந்தது. என் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவார்கள் என்பதை என்னால் அந்த வயதிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது என்னுள் சில செயல்பாடுகள் உதயமாகியது.

எதாவது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. தெரியாத பணியைத் தொடங்கி தோல்வியைப் பெறுவதை விட தெரிந்ததைச் செய்து தவறுகள் ஏற்பட்டாலும் அது ஒரு அனுபவமாக தான் அமையும் என்பதைப் புரிந்து இயற்கை விவசாயம் செய்யலாம் என்றமுடிவுக்கு வந்தேன். அதன் பிறகு வேலையும் விவசாயமும் என்று என்னை வடிவமைத்துக்கொண்டேன்.

கே: விவசாயத் தொழிலில் உங்களின் முதல் அடி என்ன?

விவசாயத் தொழில் மிகவும் மகத்தானது. மரியாதைக்குரியது. அந்தத் தொழிலை செய்கிறேன் என்று நான் எப்பொழுதும் கர்வமாகத் தான் இருப்பேன். அந்த அளவிற்கு விவசாயம் என்னுள் நகமும், சதையுமாகி விட்டது.

மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அடிக்கடி அய்யா அவர்கள் எங்கள் தோட்டத்திற்கு வருகைத் தருவார்.

ஒருமுறைபாண்டிச்சேரியில் சுற்றுப்புறசூழல் என்றபயிற்சிப் பட்டறைஒன்று நடைபெற்றது. அந்தத் திட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். அங்கு அவரின் பேச்சு என்னைப் பெரிதும் கவர்ந்தது.

எங்களுக்குச் சொந்தமாக 8 ஏக்கர் பரப்பளவில் பாக்குத் தோட்டம் இருந்தது. வெறும் விவசாயம் அவற்றால் வரும் விளைச்சல் என்று இல்லாமல் என்னுடைய யோசனை முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றியது. அவ்வாறு தோன்றிய எண்ணம்தான் பாக்கு மட்டையால் செய்யப்படும் தட்டுத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாடு என்பது கொஞ்ச நாட்களில் இந்தத்தட்டு தயாரிப்பதற்கான கருவியை நானே சொந்தமாகத் தயாரித்தேன். இதுதான் நான் விவசாயத்துறையில் செய்த முதல் தொழில்.

கே: அந்த இயந்திரம் நன்றாக வேலை செய்ததா? நிறைய உற்பத்தி செய்யமுடிந்ததா?

சொந்த நிலத்தில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட இயந்திரம் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்குகிறேன் என்பது மனதிற்கு சற்று மனநிறைவாக இருந்தது.

அப்போது பாக்கு மட்டை தயாரித்த பின்னதர்தான் மக்களின் தேவையை என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தது. தொடக்கத்தில் ஒரு சின்ன இயந்திரம் கொண்டு அதிக தயாரிப்பைக் கொடுக்க முடியவில்லை. பின்னர் அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஹெயிட்ராலிக் இயந்திரத்தைத் தயாரித்தேன்.

கே. முதன் முதலில் பாக்கு மட்டைத் தட்டுவிற்ற அனுபவத்தைச் சொல்லுங்கள்?

ஒரு பொருளைத் தயாரிப்பது மிகவும் சுலபம். அதை சந்தைப்படுத்துவதில்தான்  மிகப்பெரிய சவாலே அடங்கி இருக்கிறது.

ஒருமுறை நானும் என் நண்பரும் பாக்கு மட்டைத் தட்டை விற்பனை செய்வதற்காக டெல்லி சென்றிருந்தோம். எங்களுக்கு இடம் புதிது. ஆட்கள் புதியவர்கள். மொழி புதிது இப்படியான நிலை இருந்தது. எனினும்  கொண்டு வந்த பொருட்களைத் திரும்பவும் கொண்டு செல்லக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தோம். இதனால், சாலையோரத்தில் ஒரு கடையை நிறுவி கூவிக்கூவி விற்பனை செய்தோம். இதன் நன்மையை அறிந்து அனைவருமே வாங்கிச் சென்றார்கள். அப்போதுதான் நாங்கள் வெற்றி பெற்றவர்களாக உணர்ந்தோம்.

கே: கூட்டு முயற்சியின் சாதிப்பில் இன்று உங்கள் தொழில் நிறுவனம் குறித்து?

எங்களின் நிறுவனம் இந்தியளவில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெங்களூர், ஹைதராபாத் போன்றஇடங்களிலும் இத்தொழிலை செய்து வருகிறார்கள். மேலும், இந்தியாவில் பல இடங்களில் எங்களின் பொருளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றால் அதுதான் எங்கள் நிறுவனத்தின் தரம்.

கே: வேறு ஏதாவது உற்பத்தி செய்கிறீர்களா?

பாக்குத் தட்டுக்களைப் போலவே வாழைநார் தொழிலுக்கும் எங்களிடம் இயந்திரம் இருக்கிறது. அறுவடைக்குப் பின் வீணாக இருக்கும் வாழை மரத்தின் நாரைக் கொண்டு பல தயாரிப்புகள் செய்யப்படுகிறது.

வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் நிறைய செய்யப்படுகிறது. இந்தத் தொழிலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் செய்து வருகிறார்கள்.

இந்த இதழை மேலும்

புதியதை உருவாக்கு! புகழை  உனதாக்கு!!

 

எலக்ட்ரிக் ரேஸ் கார் சாதிப்பாளார்கள் “TEAM OJAS”

வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்கள், வேலூர்.

விஐடி பல்கலைக்கழகம் 1984 ஆம் ஆண்டு திரு. ஜி. விசுவநாதன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் வேலூர் இன்ஜீனியரிங் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பெற்றோர்களின் நன்மதிப்பையும், மாணவர்களின் எதிர்பார்ப்பையும் இக்கல்லூரி பூர்த்தி செய்தது. நல்ல திறமை வாய்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இக்கல்லூரியில் பணியாற்றுவது மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆரம்பத்தில் கல்லூரியகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் பல்கலைக் கழகமாக 2006- ஆம் ஆண்டு வளர்ச்சி பெற்று பெரிதும் மதிப்பு பெற்றது. ஆண்டுக்காண்டு இதன் வளர்ச்சியால் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் 10 -ஆவது இடத்தையும், தனியார் பொறியியல் கல்லூரியின் வரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் இருக்கிறது. அதில் 18 இளங்கலைப்பிரிவுகளும், 32 முதுகலைப்பிரிவுகளும் 18,000 த்திற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படிக்கிறார்கள். சிறந்த முறையில் விடுதி வசதி இருபாலருக்கும் உண்டு.

படிப்புடன் விளையாட்டு, விஞ்ஞானம், கலை, கண்டுபிடிப்புகள் போன்றவற்றிக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மாணவர்களின் தனித்திறமை என்னவோ அதற்கு மதிப்பளித்து அவர்களின் சாதனையை  நாடறிய செய்திருக்கிறார்கள். எத்தனையோ கண்டுபிடிப்புகள், எத்தனையோ சாதனைகள் இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுகாண்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மேலும் ஒரு சாதனையாக முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு எவ்வித காற்றுமாசுபாடுயின்றி  ரேஸ் கார் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார்கள். அவர்களின் சாதனையை அறிந்து அந்த குழுவில் ஒருவரான திரு. வருண் செந்தில் அவர்களை நேர்முகம் கண்டோம், வெற்றி களிப்போடு தன்னம்பிக்கை மாத இதழக்கு அவரின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்…அவரின் சாதனை அனுபவங்களோடு இனி நாம்..

உங்கள் குழுவிற்கு ojas என பெயர் சூட்டக் காரணம் ?

ojas என்ற சொல்லுக்கு சக்தி என்று பொருள். எங்கள் விஐடி பல்கலைக்கழகத்தில் பலதுறைகள் பல பிரிவுகள் உண்டு. அதில் எல்லாத் துறையிலும் ojas குழு உண்டு  அதில் எலக்ட்ரிக் துறை என்றால் அது எங்கள் துறை தான். குழு என்பது அனைவரும் ஒன்று சேர்தல் என்று பொருள்படும். அவ்வாறு ஒன்று சேர்வதால் பலருக்கு பலவாறாக எண்ணங்கள் தோன்றும், அந்த எண்ணங்கள் தான் எதிர்கால வாழ்விற்கு வண்ணங்களாக அமையும். எங்கள் வகுப்பில் ஆசிரியர்கள் அடிக்கடி உச்சரித்துக்கொண்டே இருக்கும் வார்த்தைகள் என்னவென்றால் ஒவ்வொவரும் மண்ணில் பிறந்துவிட்டால் அவர்களுக்கு என்று ஒரு சாதிப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.

இந்த வார்த்தை தான் எங்களின் சாதிப்பின் மூலதனம். இதனால் ojas என்ற குழுவை 2012 ஆம் ஆண்டு தொடங்கினோம். தொடங்கிய சில நாட்களிலேயே எங்களின் கண்டுபிடிப்பை பரவலாக்க நினைத்தோம். அனைவரிடத்திலும் புதிய புதிய யோசனைகள், ஆலோசனைகள் வந்தது, அனைவரும் ஒன்று கூடி பரிசீலிலித்து ரேஸ் கார் தயாரிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம். ஆனால் எவ்வித சுற்றுப்புற மாசுபாடுகளும் இதனால் ஏற்படக்கூடாது என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருந்தோம். அதன் பயன் எங்களின் திறனுக்கும் வளர்ச்சிக்கும் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தது. இப்பொழுது ஆண்டுக்கு ஒரு பார்முலா காரை தயாரித்து வருகிறோம்.

இந்த கண்டுபிடிப்பின் நோக்கம் என்பது?

இதன் முதன்மையான நோக்கம் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பது மட்டும் தான்.

ரேசிங் என்பது அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு பொதுவான விளையாட்டு. சாதரணமாக F1 ரேசிங் கார் 100 கிலோ மீட்டர் செல்ல வேண்டுமென்றால் 75 லிலிட்டர் எரிபொருள் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் 24 கார்கள் பந்தயத்தில் பங்கேற்கும் ஒருமுறை பந்தய எல்லைக்கோட்டை அடைய ஒரு காருக்கு 225 லிலிட்டர் தேவைப்படுகிறது. அவ்வாறு பார்க்கும் பொழுது 24 காருக்கு 5400 லிலிட்டர் தேவைப்படுகிறது.

இதனால் பெருமளவு பொருட்செலவும், காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. மேலும் வெளியேறும் காற்றால் மாரடைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டு உயிர்போகும் அளவுக்கு ஆகிவிடுகிறார்கள்.

இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும் என்பதால் தான் மின்சாரத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வகையான ரேஸ் கார் தயாரித்தோம். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கவும் சுற்றுச்சுழல் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் முடியும்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் உங்களின் தனித்திறமைகள் எவ்வாறு வெளிப்படுகிறது?

கல்லூரிக்கு என்று மாணவர்கள் வந்தாலே படிப்பும் தேர்வும் மட்டுமே மாணவர்களின் தலையாய கடமையாகிவிடுகிறது. இதுவும் எதிர்காலத்திற்கும் தேவைதான். ஆனால் நமக்குள் இருக்கும் தனித்திறமையை உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

புத்தகம் தாண்டி இவ்வுலகில் நிறைய புதையல்கள் இருக்கிறது, அதை தேடுவதில் தான் முழுமையான வெற்றி அடங்கியுள்ளது.

இந்த இதழை மேலும்

மனதின் உயர்வே! மனிதனின் உயர்வு!

M.K. பழனிசாமி, தாளாளர்

கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி,

முத்தூர் ரோடு, செட்டியார்பாளையம், காங்கயம்.

திறமையான செயல்கள் மூலம் வெற்றியை தன் வசப்படுத்தியிருப்பவர்.

 • மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்றவற்றைஒதுக்கி, மனிதாபிமானத்துடன் செயல்பட்டு எல்லோரின் ஒத்துழைப்பையையும் பெற்று சமூக நலப்பணிகளை திறம்பட செய்து வருபவர்.
 • உயர்தன்மைக்கு முதல் அறிகுறியே எளிய தன்மை என எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருபவர்.
 • கல்வியை பணமாக்காமல் பலருக்கும் பயன்படும் பாலமாக்கியிருப்பவர்.
 • கடமையை எப்போதும் துணிந்து செயல்படுத்துங்கள் பெருமை நிச்சயம் வந்தே தீரும் என நம்பிக்கை தந்து வருபவர்.
 • முயன்றால் வெற்றி இல்லையேல் அனுபவம், அனுபவம் தான் ஒருவரை சாதனையாளராக்கிறது என அனுபவ மொழி அதிகம் தரக்கூடியவர்.
 • கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு தான் பெற்றஎதனையும் பிறர் கஷ்டப்படாமல் பெறவேண்டும் என சதாகாலம் உழைத்து கல்வி வழிகாட்டியாக திகழ்ந்து வருபவர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திரு M.K. பழனிசாமி அவர்களை நாம் சந்தித்த போது.

நம்பிக்கை குறையும் போது மனம் மட்டுமல்ல, உடலும் சோர்ந்து போகும் என்னுடைய வாழ்க்கையில் மனதையும் உடலையும் நான் எப்பொழுதும் சோர்வாக வைத்ததே இல்லை என்றார். இனி அவரோடு நாம்…

கே: தங்களைப்பற்றி…?

வேளாண்மைத் தொழிலும், கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழும் கொடுமுடி என்றஊருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் முருகம்பாளையம். அங்குதான் 1954ம் ஆண்டு பிறந்தேன்.. மிகவும் ஏழ்மையான குடும்பம், வறுமையின் காரணமாக கொடுமுடிக்கு அருகில் உள்ள அஞ்சூர் என்றபகுதிக்கு குடிப்பெயர்ந்தோம்.

அங்கு எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. என் பெற்றோர் விவசாயத்தையும் பார்த்துக்கொண்டு தேங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். மிகவும் கடுமையாக உழைக்கும் என் பெற்றோர்கள் என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அப்பொழுது எங்கள் ஊரில் பள்ளிகள் எதுவுமில்லை. 6 கி.மீ.,க்கு அப்பால் உள்ள SSV மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.

அதே பள்ளியில் 11ம் வகுப்புவரை படித்தேன். என் பெற்றோர் என்னை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதே அவர்களின் முதல் விருப்பமாக இருந்தது. நானும் நன்றாகப்படித்து தேர்வானேன்.

கே: அரசாங்கப் பணிக்குள் எப்படி நுழைந்தீர்கள்…?

நாங்கள் படிக்கின்றகாலத்தில் கல்விமுறைமுற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அக்காலத்தில் 11ம் வகுப்பு முடித்திருக்கிறார்கள் என்றால் மிகவும் பெரிதாக கருதுவார்கள். அந்தப்படிப்பை தான் நானும் முடித்தேன்.  எனக்கு சின்ன வயதிலிருந்தே மின்சாரம் பற்றிய சில நுணுக்கமான வேலைகள் எல்லாம் செய்வேன். என்னுடைய மின்சார கண்டுபிடிப்புகளைப் பார்த்து பலர் வியந்து பாராட்டுவார்கள். இந்தப் பாராட்டு என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

இந்தத்துறைதான் எனக்கு ஏற்றது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் படித்து முடித்த கையோடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலையில் சேர்ந்தேன். ஆறு ஆண்டுகள் 2. 50 தினக்கூலியாக வேலை செய்து கொண்டிருந்தேன். இந்த  6 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அளப்பறியது. எந்த வேலை செய்தாலும் நம்முடைய உழைப்பை முழுவதுமாக கொடுத்திட வேண்டும் என்றஎன் தந்தையின்  வாக்கை முழுமையாய் பின்பற்றியதால் என்னால் எதையும் சாதிக்க முடிந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் எனது பணி நியமனம் மின்சாரத்துறையிலிருந்து கிடைத்தது. என் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக அனைவரும் என்னைப் போற்றினார்கள். காலம் கடல் வெள்ளம் போல் கடந்து சென்றது. 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2012ம் ஆண்டு பணி ஓய்வும் பெற்றுவிட்டேன்.

கே: மின்சார வாரியத்துறையில் பணியாற்றிய நீங்கள் ஒரு கல்லூரி தாளாளராக உயர்ந்தது குறித்து…?

இந்தக் கல்லூரி 1997ம் ஆண்டு நாடார் கல்வி அறக்கட்டளை ஈரோடு மூலம் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கப்பட்ட அன்று உறுப்பினராக இருந்தேன். பல கல்வி நிலையத்தில் இன்றும் உறுப்பினராக  பதவி வகித்து வருகிறேன். என்னுடைய இலட்சியமே என்னைப் போல கல்விக்காக யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதுதான். இதனால், கல்விக்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.

சமுதாயம் மேன்மை பெற வேண்டுமென்றால் இது கல்வியால் மட்டுமே முடியும் என்பதை என் அனுபவரீதியாக நான் கற்றுக்கொண்டது உண்மை.

இந்த சபையில் நிறைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் என்னை இக்கல்லூரியின் தாளாளராக உயர்த்திருக்கிறார்கள் என்மேல் நம்பிக்கை வைத்துக் கொடுத்த இந்தப் பொறுப்பை என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்து வருகிறேன்.

கே: இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து…?

கல்வியின் மகத்துவத்தைப் பற்றி கல்விக்கண் திறந்த காமராஜர் பல கல்வி நெறிமுறைகளை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் கொள்கையைப் பின்பற்றும் நாங்களும் கல்வியின் அவசியத்தைப் போதிக்க வேண்டும் என்றநோக்கம்தான் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் முதன்மையான நோக்கம்.

கிராமப்புறத்தில் படிக்கின்றமாணவர்களுக்கு உயர்கல்வி கொடுக்க வேண்டும்.

கல்வி வசதியில்லை என்று யாருமே சொல்லக்கூடாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். எவ்வித இலாப நோக்கமுமின்றி முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையோடு தான் இந்தக் கல்லூரியை நடத்தி வருகிறோம்.

இந்த இதழை மேலும்

துணிந்து முடிவு எடு! தொடர்ந்து சிகரம் தொடு!!

திரு. ஜெயசந்திரன்

மேலாண்மை இயக்குநர்

ஓம் இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்

இந்த உலகம் ஒரு பந்தையக் களம். இதில் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். சிலர் தன்னுடைய இலக்கான வெற்றியை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எதுக்காக ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலரோ நம்மால் முடியாது என்று பாதி வழியிலேயே நின்றுவிடுகிறார்கள். இத்தகைய இலக்கு நோக்கிய பயணத்தில், செல்லும் பாதையை சரியாகக் கணித்து தன்னால் சாதிக்க முடியும் என்று ஓடி சாதித்திருப்பவர்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்றவெற்றி விதியை தன் உள்ளத்தில் நிறுத்தியும், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவும், இலக்கை எட்டுவோம் என்பதில் நம்பிக்கையும் கொண்டு செயல்படும் தன்னம்பிக்கையாளர்.

இனி எழவே முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் எழுந்து நிற்பவனே சாதனையாளன் என்பதற்கு ஏற்ப தனக்கு ஏற்பட்ட கடினமான காலத்தை தன்னுடைய விடாமுயற்சியால் வென்று சாதித்துக்கொண்டிருப்பவர்.

அடுத்தவருக்கு உதவி தேவை என்றால் ஓடோடி செய்வது இவரது இயற்கையான குணம். என் உலகம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கக் காரணம் எதையும் சாதிக்க முடியும் என்ற என் நம்பிக்கைதான் என்று கூறும் ஓம் இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வி.ஏ.ஜெயசந்திரன் அவர்களை சரவணம்பட்டியில் உள்ள அவரது நிறுவனத்தில் வெயில் மெல்ல தனிந்து ஒளி மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் சந்தித்த போது தன்னுடைய இலக்கு, கனவு, அதைச் சாதிக்கத் தான் சந்தித்த சவால்கள் என்று ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொண்டார்.

பணி அனுபவத்தில் இருந்து மாறி தொழில் தொடங்கியது முதல் அதில் தான் பெற்றவெற்றிகளையும், உண்மையும், நேர்மையும், உயர்பண்புகளும் அந்த வெற்றிக்கு அடித்தளம் இட்டதையும், தான் சந்தித்த கடினமான காலங்களையும், அதில் இருந்து மீள உதவியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டதையும் அவர் மொழியிலேயே படிப்போம்……

உங்களைப் பற்றி?

அன்னூருக்கு அருகில் உள்ள அல்லிகுளத்தில் திரு. அங்கப்பன் திருமதி சுந்தரம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன். வீட்டில் நான் உட்பட நான்கு பிள்ளைகள். நான் முதல் பிள்ளை.
அன்னூருக்கு அருகில் உள்ள அன்னூர் மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தேன். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிய அன்னூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்.

எனது தந்தை ஒரு தலைசிறந்த மோட்டார் மெக்கானிக். அவரின் நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு என்னுடைய ரத்தத்தில் கலந்திருந்தது. சிறு வயதிலேயே எனக்கு தொழில்நுட்பம் தொடர்பாக புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இயற்கையாக இருந்ததால் நான் தொழில் நுட்பக் கல்வியை கோவை அரசு பாலிடெக்னிக்கில் படித்தேன்.
தொழில் நுட்பக் கல்வியை முடித்தவுடன் சற்றும் தாமதிக்காமல் இடிகரைக்கு அருகில் உள்ள செங்காளிபாளையத்தில் இயங்கிக் கொண்டிருந்த வி.ஜே.லக்ஷ்மி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

வி.ஜே.லக்ஷ்மி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் உங்களுக்கான அங்கீகாரம் குறித்து…

நான் வி.ஜே.லக்ஷ்மி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் பல்வேறு கனவுகளையும், இலக்குகளையும் சுமந்து கொண்டு நியாயமாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பணியில் சேர்ந்து ஆறு மாதம் முடிந்திருந்தது. அப்போது ஒரு நாள் என் நண்பரின் திருமணத்திற்காக சென்னை சென்றிருந்தேன்.
அச்சமயத்தில் எங்கள் நிறுவனம் டெக்ஸ்டைல் இயந்திரங்களை செய்து கொடுக்கும் ஆர்டர்களை அதிக அளவில் பெற்றிருந்தது.

டெக்ஸ்டைல் இயந்திரங்களுக்குத் தேவையான ஸ்பின்டல்களை அதிக தரத்துடன் செய்து கொண்டிருந்த நிறுவனம் குணால் இன்ஜினியரிங் கம்பெனி. சென்னையில் உள்ளது.

நான் சென்னையில் இருப்பதை அறிந்த எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் திரு. வி.ஜெ.விஜயகுமார் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு நமக்குத் தேவையான ஸ்பின்டல்களை குணால் நிறுவனத்தில் இருந்து விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சரி என்று கூறிவிட்டேன். கையில் சுத்தமாக பணம் இல்லை. பணிமுடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியவில்லை . பணம் இல்லை என்று சொல்ல சங்கடம். என்ன செய்யலாம் என்று யோசித்த எனக்கு நினைவுக்கு வந்தார் திரு.அன்பரசு அப்போது.

அவர் சென்னை ஐஐடி யில் படித்துக் கொண்டிருந்தார். பின்னாளில் அமெரிக்கா மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பிறகு பல முன்னனி நிறுவனங்களில் சிறப்பான பதவிகளை வகித்தார். அந்த கேம்பஸ்லேயே தங்கிக்கொண்டு தினமும் அம்பத்தூரில் இருந்த குணால் இன்ஜினியரிங் கம்பெனிக்கு சென்று வேலையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்த இதழை மேலும்

உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு

டாக்டர். சுதாகர்

மேலாண்மை இயக்குநர்

சுதா மருத்துவமனை, ஈரோடு.

நம்பிக்கையும், உறுதியும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு செயலாற்றி வருபவர் இவர். மகத்தான பணிகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம் எனக் கூறி சமூக நற் பணிகளை நிரம்ப செய்து வருபவர்.

நம் எண்ணங்கள் எப்படியோ, அப்படி தான் வாழ்க்கை அமையும் எனவே எல்லா சூழ்நிலைகளிலும் சிறந்தவையே எண்ண முயற்சிப்போம் என்று சிறப்பான செயல்பாடுகளுடனேயே செயல்பட்டு வருபவர்.

“”உணவே உயிர்” என்ற அமைப்பைத் தொடங்கி தினமும் அன்றாடத் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாத 150 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர்  கொடுத்து உதவி வருகின்ற உயிர்ச் சேவையை திறம் பட செய்து வருபவர்.

தண்ணீர், சுற்றுச் சூழல்  மாசுபாடு தவிர்க்க ஈரோடை சேவை அமைப்பை உருவாக்கி மக்களின் ஆரோக்கியம்  மேம்பட பாடுபட்டு வருபவர்.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள டாக்டர் சுதாகர் அவர்களை நாம் நேர்முகம்  கண்டதிலிருந்து இனி…

கே: நீங்கள் பிறந்து, வளர்ந்து, பயின்ற அனுபவம் குறித்து…?

நான் ஈரோடு மாவட்டத்தில் திரு. கந்தசாமி, திருமதி. தனபாக்கியம் அவர்களின் மகனாக 1978ம் ஆண்டு பிறந்தேன்.  பெற்றோர் இருவருமே மருத்துவர்கள்.

நான் படித்தது எல்லாமே ஊட்டியில் தான் . எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை க்ளுப் ஸ்கூலில்தான் பயின்றேன். குழந்தைக்கல்வியை மிக அழகாக போதிக்கும், அந்தப் பள்ளியில் 4ம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது.

அதன் பின்னர் ஊட்டியில் உள்ள பிரபலமான  லாரன்ஸ் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும் பயின்றேன். இப்பள்ளியில் பயின்றதால் எதையும் சமாளிக்கக் கூடிய வலிமையும், அறிவையும் பெற்றேன்.

பின்னர் எனது சொந்த ஊருக்கே வந்து பாரதி வித்யாபவன் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தேன். படிக்கின்றபோதே டாக்டராக வரவேண்டும் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பேன். அதையே இலட்சியமாகவும் கொண்டேன்.

மருத்துவம் தான் என்னுடைய குறிக்கோள். அதை அடைய வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தேன். என்னுடைய உழைப்புக்கு பலன் கிடைத்தது.

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., பட்டத்தைப் பெற்றேன். பின்னர் M. D., ஜென்ரல் மெடிசனை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதன் பிறகு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் டி.என்.பி. கார்டியாலாஜி முடித்தேன். 12 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பையே படித்தேன்.

அந்த 12 வருடத்தில் கற்றுக்கொண்ட அனுபவம் மிகவும் அதிகம். மருத்துவம் சார்ந்த அனைத்து உத்திகளையும் துல்லியமாகக் கற்றுக்கொண்டேன்.

கே: படிப்பை முடித்து எப்பொழுது மருத்துவப்பணியைத் தொடங்கினீர்கள்…?

மருத்துவத்திலேயே மூன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் பெற்றதால் என்னால் அனைத்து விதமான நோய்களுக்கும் செம்மையாக சிகிச்சை அளிக்க முடியும் என்ற உந்துதல் எனக்குள் தோன்றியது. அதன்பிறகு 2009ம் ஆண்டு ஈரோட்டிற்கு வந்தேன். என் பெற்றோர்களும் மருத்துவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து கார்டியாலாஜியாக பணியாற்றினேன்.

கே: சுதா மருத்துவமனை எப்பொழுது தொடங்கப்பட்டது….?

எனது தந்தையின் முயற்சியால் முதலில் ஒரு கிளினிக் மிகவும் சிறிய அளவில் தொடங்கப் பட்டது. பின்பு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையுடன் நேரடியாக தொடர்பு வைத்து அப்போலோ இதயம் மருத்துவமனை என்று ஒரு மருத்துவமனையை தொடங்கினோம். ஆரம்பத்தில் நன்றாகப் பெயரெடுத்தோம். ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்து விட்டோம். அப்போது நான் சென்னையில் மருத்துவப்படிப்பை முடித்திருந்தேன் நேரம். மீண்டும் இங்கு வந்து மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டேன்.

அருகிலுள்ள சத்தியமூர்த்தி மருத்துவ மனையை வாடகைக்கு எடுத்து இரண்டு வருடம் நல்லதொரு சிகிச்சைப் பணியை மேற்கொண்டேன். அதன் பிறகு 2012ம் ஆண்டு ‘சுதா இன்ஸ்டியூட் மெடிக்கல் சயின்ஸ்’ என்றபெயரில் மருத்துவமனையை நிறுவினோம். 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி மக்களின் நன்மதிப்போடு செயல்பட்டு வருகிறது.

கே: இம்மருத்துவமனையின் மூலம் நீங்கள் செய்து வரும் சேவைகள் குறித்து…?

‘வந்தபின் எதிர்கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது’ என்ற வைர வரியை மருத்துவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறியாகும். சேவை என்பதும் தொண்டு என்பதும் மற்றவர்களுக்கு எவ்வாறு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஒருமுறை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பொழுது ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் அதிகளவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரத்தைப்  படித்தேன். ஒரு மருத்துவராய் இந்த செய்தி என்னை மிகவும் கலங்கடித்தது.

இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். அப்பொழுதுதான் தண்ணீரால்தான் அதிகளவில் நோய் பரவியுள்ளது என்பதையும், அதற்கான காரணம் இங்கு அமைந்திருக்கும் நீரோடைகளின் பரிதாப நிலைதான் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இதனால், ஈரோடை சேவை அமைப்பு ஒன்றைநிறுவி ஓடைகளை சுத்தம் செய்தோம். தொழிற்சாலைகள், சாயக்கழிவுகளிலிருந்து வெளியேறும் நீர் காவேரி ஆற்றில் கலக்கிறது. அதைத்தான் இப்பகுதிகளில் குடிநீருக்காகப் பயன்படுத்துகிறோம் என்றவிழிப்புணர்வுடன், இந்த குடிநீர் மாசுபாட்டை தவிர்க்க வெளிமாநிலங்களிலிருந்து பல சேவை அமைப்புகளை தொடர்பு கொண்டு இந்த மாசுப்பாட்டை தவிர்க்க வழிவகை செய்து வருவதோடு, விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறோம்.

கே: நீங்கள் செய்த சேவையில் உங்களை நெகிழ வைத்த சேவை என்று நீங்கள் நினைப்பது…?

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் இவை தான். நம் ஊரில் எத்தனையோ பேர் தங்க இடமில்லாமல், உடுத்த ஆடையில்லாமல் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இவைகள்  இல்லாமல்  கூட  உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால், உணவில்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. இதை கருத்தில்  கொண்டு “உணவே உயிர்” என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி தினமும், 150 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வருகிறோம்.

இவர்கள் அனைவரும் தங்களின் அன்றாடத் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வாழ்பவர்கள். எந்தவொரு சேவை அமைப்பும் தொடங்கும்பொழுது மக்களின் கருத்துக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கும். பழகப்பழக அதன் பயன்களைத் தெரிந்து கொள்வார்கள். தேவையைப் புரிந்து கொள்வார்கள்.

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழித்திட வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றேஇந்த திட்டத்தை செயல்படுத்த வழிவகை செய்தது. தொடர்ந்து 5 மாதங்களாக நடைபெற்று வரும். இத்திட்டம் வெற்றிகரமாக மேலும் தொடரும்.

பயன்பட வாழ உறுதி எடு! பாரதம் போற்றப் பெயர் எடு!!

திரு. M. மணி

வலசுமணி ஃபார்ம் மிஷின்ஸ் பிரைவேட் லிமிடெட்,

சிவகிரி, ஈரோடு

ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்திற்கு எவரொருவர் முதன்மை கொடுக்கிறாரோ, அவரே முன்னேறுகிறார் என்பதற்கு உதாரணமானவர் இவர்.

கல்லூரிக்கல்வியைத் தொடாவிட்டாலும், நடைமுறை அறிவைப் பெருக்கிக் கொண்டு எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழிலை வடிவமைத்துக் கொண்டு விவசாயத்திற்குப் பயன்படும் தொழில் நிறுவனர் இவர்.

கடின உழைப்பு, தெளிவான திட்டம், செய்யும் தொழிலில் நேர்மை  இருந்தாலே குறிக்கோளை அடையத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை சக்தி கொடுக்கும் என நம்பி செயல்படக் கூடியவர் இவர்.

செய்யும் தொழிலில்தனித்துவமான சாதிப்புகளை நிகழ்த்தி விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

உயர் தன்மைக்கு முதல் அறிகுறி, எளிய தன்மை என்று சொல்வார்கள்.  அந்த எளிய தன்மையுடன் நாள்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சியை விவசாயத்தில் புகுத்தி வருபவர் இவர்.

இத்தகைய சிறப்புகள் மிக்க திரு. M. மணி அவர்களை நாம் நேரில் சந்தித்ததிலிருந்து இனி…

உங்களின் பிறப்பு, இளமைக் காலம் குறித்து…?

ஈரோடு மாவட்டம் சிவகிரி வட்டத்தைச் சேர்ந்த லிங்ககவுண்டன் வலசு என்றகுக்கிராமத்தில் பிறந்தேன். ஐந்து பேர் கொண்ட எளிய குடும்பம். தந்தையார்

திரு. முத்துச்சாமி கவுண்டர், தாயார் ராமாயி அம்மாள், கொஞ்ச நிலத்தில் வேளாண்மை செய்து வந்தார்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அந்த வேளாண்மை தொழிலிருந்து கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை..

என்றாலும், பெற்றோர் என்னை படிக்க வைத்தார்கள். எனக்கு படிப்பைக் காட்டிலும் தொழில் மீதான ஆர்வமே அதிகம் இருந்தது.. பதினொன்றாம் வகுப்பு வரை படித்தேன்.

நான் பள்ளி செல்லும் வழியில் ‘லேத் மெஷின்’ சார்ந்த ஒரு தொழில் நிறுவனம் இருந்தது. தினமும் அதைப் பார்த்தவாறேபள்ளிக்குச் செல்வேன். அப்பொழுது இந்தத் தொழிலின் மீது எனக்கு மிகுந்த பற்று உருவானது. இதனால், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இத்தொழிலைச் செய்ய வேண்டும் என்றஓர் உந்துதல் எனக்குள் அன்றைக்கே ஏற்பட்டது. இதனால், அருகிலிருந்த ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

தாங்கள் முன்னெடுத்த முதல் தொழில்…?

நான் படித்து முடித்து நன்றாக ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பது தான் என் பெற்றோரின் ஆசையாகவும், கனவாகவும் இருந்தது. ஆனால், எனக்கு கல்லூரிப் படிப்பைத் தொடர வசதியில்லை. அப்போது, ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்.

ஆனால், நாம் செய்யும் வேலை பலருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. நானும் சின்ன வயதிலிருந்தே விவசாய இயந்திரம் சார்ந்த வேலைகளைப் பார்த்து வளர்ந்ததால், அது சார்ந்த ஒரு நிறுவனத்தில் சில வருடம் பணிபுரிந்தேன். பிறகு அதே நிறுவனத்தில் சில வருடங்கள்  பங்குதாரர்  இருந்தேன். அதன் பிறகு 1985ம் ஆண்டு நான் மட்டும் “வலசு மணி லேத் ஒர்க்ஸ்” என்ற நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சிப் பெற்று வலசுமணி “ஃபார்ம் மிஷின்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தை நடத்தி தற்போது வருகிறோம்.

சட்டென படிப்பை விட்டு தொழில் நிறுவனத்தை அமைத்த போது பெற்றோரின் ஊக்கம் கிடைத்ததா…?

எங்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் அளவில் நிலம் இருந்தது. இந்நிலத்தில் தான் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம்… சின்ன வயதிலிருந்தே மின்சாரம் சம்பந்தமான, இயந்திரம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நான் நன்றாகக் கற்றுணர்ந்து அவ்வேலைகளைச் செய்வேன். என்னுடைய இந்த ஆர்வத்தை என் பெற்றோர்கள் எப்பொழுதும் ஊக்குவித்துக் கொண்டேதான் இருந்தார்கள்..

நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் நுணுக்கமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்பதால் என் பெற்றோரும் என் ஆசையைப் புரிந்து கொண்டு எனக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து என்னைப் பயணிக்க வைத்தார்கள்.

எப்படியும் நான் சாதித்து விடுவேன் என்பதை என் ஆர்வத்தையும், வேகத்தையும் கொண்டு என்னை நன்றாக கணித்தார்கள். அவர்களின் கணிப்பை நான் இதுவரை பொய்யாக்கியதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சொந்த ஊரிலேயே தொழில் நிறுவனம் தொடங்கியதற்குக் காரணம்…?

நான் ஒரு பெரிய நிறுவனத்தைத் தொடங்க வேண்டும், அதன் மூலம் நிறைய விவசாயிகள் பயனடைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இந்நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பக்காலத்தில் விவசாயம் சார்ந்த தொழில் கருவிகள் தேவை, என்றால், பெரிய நகரம் என்று சொல்லக்கூடிய சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற நகரங்களுக்குத் தான் சென்று வரவேண்டும்.

என்னிடம் நிறைய விவசாயிகள் இது ஒரு மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். இதனால் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவுதான் எங்கள் ஊரான சிவகிரியில் இந்த நிறுவனத்தைத் தொடக்கக்காரணமாக அமைந்தது.

மேலும் தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களுக்கும் எங்கள் இயந்திரத்தின் தேவை அதிகமாக தேவைப்பட்டது.

பிறந்த மண்ணில் நாமும் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி விவசாயிகளுக்கு நன்மைகளை செய்வதன் மூலம் மனநிறைவு கிடைத்திருக்கிறது.

தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம்…?

நம்பகத்தன்மை உள்ளவர்களிடம்தான் மக்கள் தேடிச் செல்வார்கள் என்பதை நம்புபவன் நான். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் இத்தொழிலைச் செய்து வருகிறேன். எங்களிடம் இயந்திரத்தை வாங்கிச் சென்றவர்கள் முழுப்பலனையும் அடைந்துள்ளனர். அதில் எவ்வித குறைபாடுகளையும் கூறியதில்லை.

ஒருமுறை இயந்திரத்தை எங்களிடம் வாங்கிச் சென்றால் அடுத்தமுறை, அடுத்தமுறை என்று வந்து கொண்டேதான் இருப்பார்கள். இவர்கள் ஆர்வமாக வருவதுதான் எங்களின் வெற்றி என்றே சொல்வேன்.

நம்பி வருபவர்களின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் வீணாக்கியது இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்வேன்.

முடியாததை முடித்துக்காட்டு! வெற்றிக்கு நீயே எடுத்துக்காட்டு!!

திருமிகு. பழனிச்சாமி

நிறுவனர், ஸ்ரீ சக்தி இன்வெஸ்ட்மென்ட்

காங்கேயம்.

பிறவியிலோ அல்லது இடையிலோ ஏற்பட்ட உடல்குறைபாடு என்பது வெற்றிகரமான எண்ணம், மகிழ்ச்சிகரமான மனநிலை, உறுதியுடன் செயல்படும் பழக்கம் உள்ளோரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

நற்செயல்கள், நற்சிந்தனைகள், எழுச்சியூட்டும் நம்பிக்கை நிரம்பப் பெற்றவர்களுக்கு சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை இன்றும் நிரூபித்து வருபவர்.

“நன்கு சிந்தித்து திறமையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் வாழ்ந்து, சாதித்து ஊர் போற்ற நற்பெயர் பெறுவதே உண்மையான, நன்மையான வாழ்க்கை” அத்தகைய வாழ்க்கையை சிறப்போடு வாழ்ந்து 06.12.2015-ல் “ஆயிரம் பிறை கண்ட அருள் விழா’ காணும் சிறப்பிற்குரியவர்.

நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல. அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா; அந்த வகையில் வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எப்போதும் ஓர் உந்து சக்தியாக இருக்கும் தன்னம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.

சிறந்த நம்பிக்கையுள்ளவர்களே அச்சமின்றி சிந்தித்து, சிந்தித்ததை செயல்படுத்தி, வெற்றியை நிலைப்படுத்தக் கூடியவர்கள். அதுவாய் மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை மாற்றி நல்வழிப்படுத்துகின்ற செயல்கள் நிரம்பிய வேதாத்திரி மகரிஷி அவர்களின்  மனவளக்கலை மன்றத்தின், காங்கேய மனவளக்கலை மன்றத்தலைவராக இருந்து நற்பணிகள் பல செய்து வருபவர்.

“கூட்டுக்குடும்பம்” என்கிற பண்பாட்டுக் கலாச்சாரத்தை இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்.

பாரம்பரியமாக நூறு ஆண்டுகளாக தொடர்கின்ற “அன்ன சேவையில்’ தன்னை இணைத்துக் கொண்டு பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.

இப்படி பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட திருமிகு. பழனிச்சாமி அவர்களை நாம் நேர்முகம் கண்டபோது…

“வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எப்போது நிறைவேறுகிறது என்றால், துடிப்போடு, திறமையோடு செயல்படும்போதுதான்” என்றார்.

இனி அவரோடு நாம்…

உங்களின் பிறப்பு, இளமைக் காலங்கள் குறித்து?

காங்கேயத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பா.பச்சாபாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் கருப்பண்ணசாமிக்கவுண்டர். கோவிந்தம்மாள். அப்பா அக்காலத்தில் அரசு நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் பொறுப்பாளராக இருந்தார். அக்கிராமத்தில் அப்பொழுது பேருந்து வசதியெல்லாம் இல்லை.

மடவிளாகத்தில் ஆரம்பக் கல்வியையும், அடுத்து காங்கேயம் உயர்நிலைப்பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் கற்றேன். அப்போது, பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் நடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது சைக்கிள் வைத்திருந்த ஒரே குடும்பம் எங்கள் குடும்பம் மட்டும்தான்.

எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய வலது காலில் ஒரு சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலப்போக்கில் கட்டியின் அளவு பெரிதாகத் தொடங்கியது. இதனால் வலியும் வேதனையும் என்னை வெகுவாகப் பாதித்தது. பல மருத்துவமனைகள் சென்றும் குணப்படுத்த முடியவில்லை. வலது காலினை எடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று என் தந்தையிடம் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். கால் போனாலும் பரவாயில்லை, மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்று நினைத்து, என் தந்தை “உன் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் தான் நீ உயிர் பிழைப்பாய்” என்றார். முடியாது என்றுதான் மறுத்தேன். என்றாலும், எடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதால் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு கால் கொண்டு பள்ளிக்கு சென்றால் கேலி செய்வார்கள் என்று எண்ணி பள்ளிக்கு செல்வதை விட்டுவிட்டேன்.

படிக்கும் வயதில் காலை இழந்து நினைக்கவே மனநிலை ஒரு மாதிரி ஆகும்போது நீங்கள் அந்த வயதில் இதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?

எனக்கு அது ‘வலி’ மிகுந்த நேரம். பரிதாப பார்வை என் மீது விழுந்தது. அது எனக்கு கஷ்டமாகப் பட்டது. என் வாழ்க்கை இதோடு முடங்கி போய் விடக்கூடாது என உறுதியான மனநிலைக்கு மெல்ல மெல்ல வந்தேன்.

குறையை நினைத்தால் தானே வலி, அதை இனி மறந்து விட வேண்டும், என்று எண்ணி எப்பொழுதும் போல் என் வாழ்க்கையை இயல்பாக வாழத் துவங்கினேன்.

முடங்கிடந்தால் சிலந்திவலையும் ஒரு சிறைச்சாலை; எழுந்து நடந்தால் எரிமலையும் ஒரு ஏணிப்படி என்று ஒரே காலில் மிதிவண்டி ஓட்டிப் பழகினேன். காடு, மேடு, பள்ளம், மலை என எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மிதிவண்டியிலேயே பயணம் செய்தேன். “எல்லாம் விதி என்று ஒதுங்குபவன் அல்ல நீ, எதுவானாலும் எதிர்கொண்டு சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ” என எனக்குள் தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நாள்தோறும் உற்சாகமாக உழைக்க ஆரம்பித்தேன். ஒரு கால் இல்லையே என்கிற குறையை மறந்தே போனேன்.

சிறு தொழில் என்றாலும் அதை முழுமையாக கற்றபின்பே அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக இடைவிடாத முயற்சியையும், பயற்சியையும் மேற்கொண்டேன். தொழிலில் இனி ஈடுபடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

தொழிலை எப்படி தீர்மானித்தீர்கள்?

மனித வாழ்க்கையில் முதல் மூன்று தேவைகள் மிகவும் முக்கியம். அவை உணவு, உடை, இருப்பிடம் ஆகும். அந்த மூன்றிலும் மனிதனின் மானத்தைக் காப்பது உடை மட்டுமே. இதனால் உடை சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

முதன்முதலில் K.P. சாமி என்ற பெயரில் டெய்லரிங் தொழிலை மேற்கொண்டேன். ரெடிமேட் ஆடைகள் இல்லாத காலகட்டத்தில் துணி எடுத்து தைத்து அணிவது மட்டும் இருந்தது. நான் மேற்கொண்ட டெய்லரிங் பணி பலருக்கும் பிடித்துப் போனது. சில மாதத்தில் அலுவலர்கள், அதிகாரிகள் என்று பலர் என்னுடைய தினசரி வாடிக்கையாளராகி விட்டார்கள். இது என்னுடைய அடுத்த பரிணாமமாக அமைந்தது.

அதனால் இன்னும் டெய்லரிங் சார்ந்த நுணுக்கங்களைக் கற்று ‘கோட் சூட்’ போன்ற ஆடைகளையும் தைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு சென்று ஒரு மாதம் பயிற்சியைத் தொடங்கி, கற்றுதேர்ந்த தையலக நிபுணராக வந்து என் பணியைத் தொடங்கினேன்.

தொழிலகம் வளர்ந்தது. இழந்த காலுக்கு செயற்கை காலை பொருத்திக் கொண்டேன். அந்தக் காலும் விசேஷ நாட்களுக்கு மட்டும்தான். மற்ற நாட்களில் ஒரு கால் கொண்டே என் பணிகளை திறம்பட செய்து வருகிறேன். எதிர்பாராத இழப்புக்களை உடல் சந்திக்கும் பொழுது ‘எல்லாம் போச்சு’ என்று புலம்புவதை விட, ஒன்று போனால் என்ன இன்னொன்று இருக்கே என துணிவை வரவழைத்துக் கொண்டால் “முடியும் எல்லாம் முடியும்”.

இந்த இதழை மேலும் படிக்க

வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!

திரு. கார்த்திகேயா சிவசேனாபதி

சேவை மைய மேலாளர்

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம், காங்கேயம்.

 • அரண்மனை பரம்பரைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனக்கும் பயன்கொடுத்து, பிறர்க்கும் பயன்கொடுக்கும் தொழிலையே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து விவசாயத்தின் விசுவாசியாக, கால்நடைகளுக்கென தனி ஆராய்ச்சி நிலையத்தையே உருவாக்கி அதனை திறம்பட செய்து வருபவர்.
 • குறைந்து வரும் காங்கேயம் இன மாடுகளை காத்திடவும், பெருக்கிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்.
 • அதிகம் இலாபம் பெற வேண்டும் என்பதற்காக நச்சுப் பொருளைக் கலந்து விவசாயம் செய்தல் கூடாது. இன்று நீங்கள் செய்யும் சிறிய தவறு நாளை உங்களின் சந்ததிகளை சோதிக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது எனக் குரல் கொடுத்து வருபவர்.
 • பலரின் வாழ்க்கைத்தரம் உயரவும், பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழவும் பள்ளி கல்லூரிகளில் தன்னம்பிக்கை விதைகளை விதைத்து வருபவர்.
 • இப்படி, பல்வேறு சிறப்புகள் பெற்ற திரு. கார்த்திகேயா சிவசேனாபதி அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி……

உங்களைப் பற்றி?

திருப்பூர் மாவட்டம் குட்டப்பாளையம் என்னும் சிற்றூரில்தான் பிறந்தேன்.   விவசாயம் எங்களின் குருதியோடு கலந்த தொழில். விவசாயத்தோடு கால்நடைகளை வளர்த்து வந்தோம். கால்நடைகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற காங்கேயம் காளைகளையும் கூடவே வளர்த்து வந்தோம். இது எங்களுக்கொரு நல்ல அங்கீரத்தைக் கொடுத்தது.

எனது பள்ளிக்கல்வி கொடைக்கானல், சென்னை என்று பல ஊர்களில் அமைந்தது. எனினும் கல்வியை நான் மிகவும் நேசித்ததன் காரணமாக தங்குதடையின்றி வெற்றிகரமாக முடித்தேன். அதன் பின்பு பி.ஏ., மொழியியல் பாடத்தை சென்னையில் பயின்றேன்.

கல்வி ஒரு புறம் இருந்தாலும், எனக்கு விவசாயத்தின் மீதும் கால்நடைகளின் மீதும் அளப்பறிய பற்றுதல் இருந்தது. ஒருமுறை எதாச்சையாக ஒரு புத்தகம் ஒன்றைப் படித்தேன். அந்தப் புத்தகம்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. அப்புத்தகத்தில் காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலையில் சென்றால் நாளை வெறும் புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பதை படித்துணர்ந்தேன். 2006 ஆம் ஆண்டு மூன்று பேருடன் அறக்கட்டளையைத் தொடங்கினேன்.

இந்த சேவை மையம் தொடங்கியதன் நோக்கம் குறித்து?

இதன் நோக்கம் அழிந்து வருவதை நம்மால் ஆன முயற்சியைக் கொண்டு காக்கப்பட வேண்டும் என்பதுதான். உலகளவில் பாஸ் இண்டிகஸ், பாஸ் டாரஸ் என்ற இருமாட்டினங்கள் உண்டு. பாஸ் இண்டிகஸ் என்பது இந்திய துணைக் கண்டங்களான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கக்கூடியது.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாஸ் டாரஸ் என்ற மாட்டினம் இருந்தது.

நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய காட்டினமாக இருந்த மாடு, நாய் போன்ற விலங்கினங்களை மனிதன் வளர்க்க ஆசைப்பட்டான். மக்களும் ஒரே இடத்தில் வாழாமல் வடக்கும் மேற்குமாக சென்றார்கள்.

அதன்பிறகு மாடுகளின் வளர்ச்சியும் மாறுப்பட்டது. இப்பொழுது இந்தியாவில் மூன்று வகையான மாடுகள் இருக்கிறது. வடஇந்தியாவில் வளர்க்கப்படும் மாடுகளை (Milks Animals) பால் கொடுக்கும் மாடுகள் என்றும், நடு இந்தியாவில் இருக்கக் கூடிய மாடுகள் பால் கொடுப்பதாகவும் இருக்கும், மனிதனுக்கு வேலையும் செய்வதாக இருந்தது, தென்இந்தியாவில் இருக்கும் மாடுகள் வேலைகளை அதிகமாக செய்தாலும், பால் மிகவும் குறைவாக கிடைக்கும். இப்படி மாறுப்பட்ட மாட்டினங்கள் இருந்தது.

மாடுகளின் வகைகள் பலவாறாக இருந்தாலும் மனிதனின் தேவையை எது அதிகமாகப் பூர்த்தி செய்கிறதோ அதைத் தேடிதான் செல்வார்கள்.

உலகப் புகழ் பெறும் அளவிற்கு காங்கேயம் மாடுகள் வளர்ச்சி அடைந்ததன் காரணம் என்ன?

மாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார் போல் மாறுதல்கள் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மைசூரு பகுதிகளில் அதாவது கர்நாடகாவில் அமிர்த்மஹால், கிருஷ்ணா, ஹாலிகர், தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், புலியக்குளம், தஞ்சாவூர் உள்ள உம்பளச்சேரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலாம்பாடி போன்ற மாடுகள் இடத்திற்கேற்றார் போல் இருந்தது.

தமிழ்நாட்டில் நாட்டினமாடுகளில் தகப்பன் இனமாக இருப்பது காங்கேயம் இன மாடுகள்தான். தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும் பொழுது உம்பளச்சேரி மாடுகள் என்றும், மதுரை பக்கம் செல்லும் பொழுது புளியக்குளம் மாடுகள் என்றும், அந்தியூர் பகுதியில் இருக்கும் பர்கூர் மலைமீது இருக்கும் மாடுகள் பர்கூர் மாடுகள் என்றும் பெயர் பெறுகிறது. இவற்றை பல ஆய்வுகள் கொண்டு வெளியிட்டுள்ளார்கள் டாக்டர் கந்தசாமி, டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர்..

ஆரம்பக் காலக்கட்டத்தில் காங்கேயம் காளைகள் மிகச்சிறிய உருவத்தில்தான் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் என் குடும்பத்தின் மூதாதையர் ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் அவர்கள் காங்கேயம் காளைகளின் அழகை மேலும் மெருகேற்ற கர்நாடகாவிற்கு சென்று அமிர்த்மஹாலில் ‘பூரிணி மாடு’ என்ற மாட்டை வாங்கி வந்து இங்கிருக்கும் மாட்டோடு இனம் சேர்த்து இன்று இருக்கும் காங்கேயம் மாடுகளை உருவாக்கினார்.

இன்று இந்தக் காங்கேய மாடுகள் அழகாகக் காட்சியளிக்கிறது, என்றால் அது இவரை மட்டுமே சாறும். அக்காலக்கட்டத்தில் இவர் 6000த்திற்கு மேற்பட்ட மாடுகளை தனது பண்ணையில் வளர்த்து வந்தார்.

1960 ஆம் ஆண்டு “நில உச்சவரம்பு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு மேய்ச்சலுக்கு நிலம் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்பொழுது தான் மாடுகளின் எண்ணிக்கை முதன் முதலில் குறைய ஆரம்பித்தது.

மாடுகள் வளர்ப்பதிலுள்ள சவால்கள் என்னென்ன?

‘மேப்புப்பாதி தோப்புப்பாதி’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்திய துணைக்கண்டத்திலுள்ள எல்லா மாடுகளுக்கும் மேய்ச்சல் தரைத்தேவைப்படுகிறது.

சில மாடுகள் கட்டி வைத்து மேய்ச்சல் கொடுத்தால் மட்டுமே அது உண்ணும். மேலும் சில மாடுகள் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டால் நன்றாக உண்ணும், இந்த இரண்டாவது நிலை மாடுகளை நன்றாக வளர்த்து விடலாம்.

வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…

திருமதி. நிர்மலா பெரியசாமி

செய்தியாளர்

வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும்போது நாம் திறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்தகையவர்கள்தான் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்” என்பார் டாக்டர் இல.செ.க. அவர்கள். அதுவாய் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனிமுத்திரை பதித்திருக்கும் சிறப்பிற்குரியவர் இவர்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு பயணப்பட்டாலும் பயணப்பாதையைப் பிறருக்கு ‘பயன்படும் பாதையாக’ மாற்றிக் கொண்ட பெருமைக்குரியவர் இவர்.

‘வணக்கம்’ என்ற ஒரே சொல்லில் அழுத்தமான பதிவை எல்லோருக்குள்ளும் உண்டாக்கியவர் இவர்.

உறுதியான தீர்மானங்களை எடுக்க வைத்து பிரிந்திருந்த பல குடும்பங்களை இணைத்து வைத்து ஊடகத்துறையில் புதுமையை புகுத்தியவர் இவர்.

“நல்ல நூல் நிலையம் பெரியோரின் ஆன்மாக்கள் வாழும் புண்ணிய ஸ்தலம்” எனக் கற்றுணர்ந்து மக்கள் நலம் சிறக்க பேசிவரும் செய்தியாளர் இவர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்களை நாம் நேரில் சந்தித்த சந்திப்பிலிருந்து இனி…

உங்களைப் பற்றி…?

அன்புக்கும், பாசத்திற்கும், கடுமையான உழைப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் பெரிதும் பெயரெடுத்த கொங்கு நாட்டுப் பகுதியில் விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு விளங்கும் கரூர் மாவட்டத்தில் வாங்கல் பசுபதிபாளையம் என்ற எழில் மிகு கிராமத்தில் பிறந்தேன்.

இப்பகுதியில் எங்கள் குடும்பம் நல்ல பாரம்பரியமுள்ள குடும்பம். என்னுடைய தந்தையார் ஒரு சிறந்த மார்க்சீயவாதியாகவும், காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர். அவரின் சிந்தனைகள் அனைத்தும் முற்போக்குத் தன்மையாக  இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து அவரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பார்த்து வளர்ந்த காரணத்தால் எனக்குள்ளும் இச்சிந்தனைகள் வந்துவிட்டது என்று கருதுகிறேன்.

மிகச்சிறிய வயதிலேயே காந்திஜியின் ‘சத்தியசோதனை’ புத்தகத்தை மிகவும் விருப்பமாக பலமுறைபடித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 1000 பக்கங்களுக்கு மேல் படிப்பேன் என்று அப்பா கூறுவார்கள்.  எங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு பழமை வாய்ந்த நூலகம் இருந்தது. அந்த நூலகத்தில் நான் படிக்காத புத்தகங்களே இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புத்தகத்தின் மீது பற்றுதலும், ஈர்ப்பும் இருந்தது. இதற்கு முதன்மைக் காரணம் என் தந்தை மட்டுமே.

பள்ளிக் காலங்களில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்றால் நான்தான் முதல் பரிசை வெல்வேன். எல்லாப்பாடத்திலும், நனி நன்று, நனிமிகு நன்று என்ற பாராட்டுக்களைத்தான் பெறுவேன்.

பெண்கள் அவ்வளவாக பொதுவாழ்க்கைக்கு வர ஈடுபாடு காட்டுவதில்லையே ஏன்?

பொதுவாழ்க்கைக்கு வர ஆண், பெண் பாகுபாடு தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாழ்க்கைக்குள் வர வேண்டுமென்றால் மற்றவர்களை நேசித்தாலே போதுமானதாக இருக்கும். தன் குடும்ப உறவுகளை மட்டுமே பார்க்காமல் மற்றவர்களையும் தன் உறவுகளாக நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவம் தோன்றும்.

பிறரின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய தந்தை பொது வாழ்க்கைக்காக அவரையே அற்பணித்துக் கொண்டவர்.

ஆம், அவர் தன்னுடைய சொந்த விவசாய நிலத்தை, சொத்துக்களை விற்று இல்லாதவர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்து வந்தார். ஒருமுறை மற்றவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும், மீண்டும் சேவை செய்வதை விடவே முடியாது என்றார்.

ஆனால், இன்றைய சமுதாயத்தில் அனைவரும் அமெரிக்க சிந்தனைகளோடு வாழ்ந்து வருகிறோம். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் இந்நிலை மாறவேண்டும். மற்றவர்களை மதிக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் பொது வாழ்க்கைக்கு வரும் பெரும்பாலானவர்கள் பெரிதும் எண்ணுவது பதவி, அதன்மூலம் தன்னை, தன் குடும்பத்தை மட்டும் எவ்வாறு வளப்படுத்திக் கொள்ளலாம் என்பதை மட்டுமே. இது மிகவும் பரிதாபமான நிலை. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் சேவை, தொண்டு செய்யும் மனம் கொண்டவர்களாக, இவற்றின் உன்னதம் புரிந்தவர்களாக வாழ வேண்டும்.

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்வோர் மீண்டும் தாயகம் திரும்பத் தயங்குகிறார்ளே…?

அங்குள்ள சுத்தம், சுகாதாரம், ஆடம்பரம், பருவநிலை எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு கிடைக்கும் பணம் முழு சுதந்திரம்  போன்றவை காரணமாக இருக்கலாம், என்ன கிடைத்தாலும் அது நம் தாய் நாடாகாது.

இன்றைய சூழலில் குழந்தைக் கல்வி எவ்வாறு இருக்கிறது…?

மிகவும் நன்றாக இருக்கிறது. என்ன ஒன்றே ஒன்று, இன்று குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் என்னும் கல்விமுறை சுத்தமாகவே இல்லை. விளையாட அனுமதியில்லை. வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மிகவும் வேதனையான நிலை இது.

நாம் படிக்கின்ற காலத்தில் நீ முதல் மதிப்பெண் பெறவேண்டும். இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் வற்புறுத்தியது கிடையாது. நான்றாக படி என்று மட்டுமே சொல்வார்கள். ஆனால், இன்று எல்.கே.ஜி படிக்கும் குழந்தையிடம் கூட நீ இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களே கட்டாயப்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே “ரோல் மாடலாக” பெற்றோர்கள் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதன்படி தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இது மட்டுமே சரியான வழி.

பல்துறைகளில் பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளீர்கள், அதில் பிடித்தது, சவால் நிறைந்தது என்றால்…?

நான் இளமைக் காலத்திலிருந்து இன்றுவரை ஒரு சுதந்திரம் மிக்க பெண்மணியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். நான் எதைச் செய்தாலும் பிடித்தமானதை மட்டுமே செய்ய விரும்புவேன். எந்த வேலையையும் வேண்டா, வெறுப்பாக நான் செய்ததில்லை.

என்னுடைய திறமை முழுவதையும் வெளிப்படுத்தும் அளவிற்குத்தான் நான் ஒவ்வொரு பணியையும் செய்வேன். நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறேன். சவால்களை சந்திக்கும் மனநிலையும், நுட்பமும் என்னுள் இருக்கிறது என்று நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். இது என்னுடைய தன்னம்பிக்கையை பெருமளவில் வளர்த்தது.

குடும்பப் பிரச்சனை சார்ந்த நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளீர்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் குடும்ப உறவுகளின் நிலை என்பது எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்?

இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு பிரச்சனைகள் உள்ள மனிதர்களை சந்திக்க நேர்ந்தது. மனிதர்களாய் பிறந்து விட்டால் பிரச்சனைகள் வருவது இயல்பு. இந்தப்பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது நிறையப் பேருக்குத் தெரியவதில்லை.  எளிய வழிகாட்டுதல் மூலம் பலநூறு குடும்பங்களுக்கு உதவி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது

இந்நிகழ்ச்சியின் மூலம் நான் கற்றுணர்ந்த உண்மை என்னவென்றால் பிரச்சனை என்பது இயல்பு. இதில் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை. தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை.. எந்த மனிதனும் முழுமையான குற்றவாளி இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். ஏதேனும், தவிர்க்க முடியாத சூழலில் ஒருவன் தவறு செய்கிறான்,  அந்தத்தவறால் சமூகத்திற்கு முன் குற்றவாளியாக நிற்கிறான். அவனுள் இருக்கும் நல்ல தன்மைகளைத் தூண்டி விட்டால், அவனும் மனிதனாகி விடுகிறான்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

நமக்கு நாமே எதிரியாகக் கூடாது. அகங்காரம், சுயநலம், பேராசையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதுவும் நிலையானது அல்ல என்னும் ஆன்மீகத் தத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும்…?

இன்றைய நாகரீக உலகில் வளரும் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வேகமாகவும் சிந்திக்கவும், செயல்படவும் செய்கிறார்கள். அவ்வாறு வளரும் குழந்தைகளை இப்படி வளர்க்க வேண்டும். இதுவாக ஆக வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தாமல், அன்பால் அறிவூட்ட வேண்டும். சின்னக் குழந்தைகளிடம் தங்களின் ஆசைகளைத் திணித்தால், அவர்கள் குழம்பி விடுவார்கள். அவர்களின் எதிர்கால ஆசைகளை, கனவுகளை அவர்களின் போக்கில் விட்டு, எல்லை மீறும் போது, எடுத்துச் சொல்லி வழி காட்டுவதுதான் பெற்றோரின் கடமை.

பொய் சொல்லாதே என்று குழந்தையிடம் சொல்லி வளர்ப்பதைவிட, பொய்யே சொல்லாத பெற்றோர்கள் இருந்தால், குழந்தைகளும் பொய் சொல்லாது.

எல்லாத் தவறுகளையும் தம்மிடம் வைத்துக் கொண்டு வெறுமனே, வெற்று வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்ளாது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள்தான் முன்மாதிரியாக விளங்க வேண்டும். குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்வது பெற்றோர்களிடம்தான்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதற்கு ஏற்றார்போல், கணவன் மனைவிக்குள்ளே ஒரு நல்ல புரிதல் வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனநிலை இருவரிடமும் இருந்தாலே குழந்தைகள் நல்ல சான்றோராக வளர்வார்கள்.

நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நாம் ‘பாஸ்’ (BOSS) அல்ல அதிகாரம் செலுத்துவதற்கு, அவர்களை அன்போடு, பொறுமையாக வழி நடத்துவதற்கு மட்டுமே இறைவன் நம்மிடம் அனுப்புகிறான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆண் பெண் உறவு முறையின் இன்றைய நிலை…?

நம் நாட்டின் வலிமையே குடும்பம் அமைப்புதான். அதை சிதைத்து விட்டால் சமூதாயம் சீரழியும். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியிலும், வாழ்க்கையிலும் இருக்கிறது. மனிதன் சமூகத்துக்குக் கட்டுப்பட்டவன். தனி மனித சுதந்திரம் என்றபெயரில், குடும்ப சமுகக் கட்டமைப்புக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் அவன் செய்யக் கூடாது.

ஆணும், பெண்ணும் சேர்ந்து பழகும் சூழ்நிலை சர்வ சாதாரணமாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் தங்கள் எல்லைகளை உணர்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நல்ல நட்போடு பழகினால் நல்லது. நட்புக்கோ, காதலுக்கோ, உறவுகளுக்கோ உண்மையாக இருப்பது மிக முக்கியம்.

ஆன்மீகத்தின் மீது தங்களுக்கு உண்டான ஈடுபாடு குறித்து?

நம் நாடு ஆன்மீக பூமி. வெளிநாடுகளிலெல்லாம் உடலையும், பொருளையும் முன்னிலைப்படுத்தி வாழ்ந்தபோது, நம் முன்னோர்கள் மனதையும் அதன் எல்லையில்லா ஆற்றலையும் உணர்ந்து, அவற்றின் துணை கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே அண்ட சராசரங்களையும், அவற்றையெல்லாம் படைத்த அந்த மாபெரும் சக்தியையும் உணர்ந்தவர்கள்.

மனித வாழ்க்கையின் இறுதி இலட்சியம் இறைவனை அடைவது. அந்த இறுதி இலட்சியத்தை எவ்வாறு அடைய வேண்டும் என்பதற்கான ஆன்மீகக் கருத்துக்களை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதன் விளைவாகத்தான் வெளிநாட்டினர் கூட்டு நுண்ணோக்கி, ராக்கெட், செயற்கைக்கோள் என்று பல்லாயிரம் கோடி டாலர் பணம் போன்றவைகளின் துணையோடு நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளை நம் ரிஷிகளும், முனிவர்களும் செலவே இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, எந்தவொரு தொழில் நுட்ப வசதியும் இல்லாமல் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நொடிக் கணக்கில் துல்லியமாகக் கணிக்கப்படும் ஜாதகம், பஞ்சாங்கம், கிரக அமைப்புகள் இவையெல்லாம் சாதாரண காரியம் அல்ல. ஜோதிட சாஸ்திரம் உண்மையானது. மிகப்பெரிய விஞ்ஞானம். ஆனால் இங்கே இருக்கும் ஜோதிடர்களெல்லாம் உண்மையானவர்களா? முழுமையாகக் கற்றுணர்ந்தவர்களா? என்பதில்தான் பிரச்சனையே.

நம் முன்னோர்கள் எதையும் ஆன்மீக ரீதியான உணர்வை, உள்ளுக்குள்ளையே உணர்ந்து வழி நடக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் எதைச் செய்தாலும், கருவிகள் கொண்ட செய்முறையாகப் பார்த்தார்கள். இது அனைத்தும் புற உலகத்திற்காகச் செய்யப்படும் சிந்தனையாகவும், தேடலாகவும் இருந்தது. அதுவே வளர்ந்து, வளர்ந்து இன்று வளர்ந்த நாடாக வலம் வருகிறார்கள். நாம் அவர்களின் பிரமாண்டத்தைப் பார்த்து பிரமிக்கிறோம், பின்பற்றுகிறோம்.

நம் நாட்டில் அறிவியல் கல்வி எவ்வாறு இருக்கிறது…?

ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள், வான சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள், அறுவை சிகிச்சைகளில் நிபுணர்கள், கட்டிடக் கலையில் வல்லுநர்கள், ஆரியபட்டா, சுசுருதர் தொடங்கி, சர்.சி.வி.இராமன், இராமனுஜன், சமீபத்தில் மறைந்த ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் வரை கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத எத்தனையோ அறிவியலாளர்களின் பங்களிப்பில் நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

வெறும், சில நூறு கோடிகளில் பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தி, பல்வேறு விதமான ஏவுகணைகள் தயாரித்து அமெரிக்காவை அதிர வைத்தோம். பாகிஸ்தானை பயந்து போக வைத்தோம். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருந்தாலும், அறிவியல் வளர்ச்சியில் நாம் எவருக்கு சளைத்தவர் அல்ல.

மன அழுத்தத்தை எவ்வாறு போக்கிக் கொள்வது…?

உடல் சோர்வு போன்று மனதுக்கு சோர்வு வரும். அதற்கான முக்கிய காரணம் தங்களுக்கு பிடிக்காத வேலைகளைச் செய்வது எதைச் செய்தாலும், முழுமனத்தோடு, விருப்பத்தோடு திட்டமிட்டு செய்ய வேண்டும். தவிர்க்கவே முடியாத வேலைகளையும், சூழ்நிலைகளையும் விருப்பமானதாக மாற்றிக் கொள்ள மனதைப் பழக்க வேண்டும். மனிதனால் ஆகாதது எதுமில்லை. மனம் போகும் போக்கெல்லாம் போகக்கூடாது. நம் மனம் நம் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும்.

பெரும்பாலும் பணம், வேலை, காதல், உடல்நிலை இவற்றால்தான் மனஅழுத்தம் வருகிறது. யாருக்கும் இங்கு எதுவும் இல்லாமல் இல்லை. விரும்பியது கிடைக்க நேர்மையாக, கடுமையாக உழைக்கலாம். கிடைப்பதை ஏற்று நிறைவாக வாழலாம்.

குப்பை கூடங்களும், தூசியும், இருளும் நிறைந்த அறையை யாராவது விரும்புவார்களா? அதை சுத்தம் செய்து ஒரு விளக்கும் மணமான ஊதுபத்தியும் ஏற்றி வைத்தால் எப்படி இருக்கும்? அதைப்போல நம் மனதையும் இறுக்கமாக மூடி வைக்காமல், பேராசை, அகங்காரம், சுயநலம், பொறாமை போன்ற நெகடிவ் எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக திறந்து வைக்க வேண்டும். இன்பதையும் துன்பத்தையும் ஒன்று போல ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பினால் மன அழுத்தம் காணாமல் போகும்.

கிராமப்புற பின்னணியில் பிறந்த நீங்கள் நகரத்தில் வசிக்கும் போது பெற்றது, இழந்தது…?

நகர வாழ்க்கையில் பெற்றது ஏராளம், எனக்கான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. தேவையற்ற விமர்சனங்கள் குறைந்தது. என் அக வளர்ச்சியிலும் புறவளர்ச்சியிலும் முழு கவனம் செலுத்த முடிந்தது. என் வாழ்வின் எல்லைகள் மிகப்பெரிதானது. நிறையப் புகழ் பெற்ற சாதனை மனிதர்களின் சந்திப்பும் நட்பும் கிடைத்தது என்று ஏராளமாகச் சொல்லலாம்.

இழந்தது என்றால் காவிரித் தண்ணீர்,  நல்ல காய்கறிகள், நல்ல காற்று, கோவில் திருவிழாக்கள், உறவினர் வீட்டு விஷேங்கள் இவற்றில் அடிக்கடி கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.

இன்றைக்கு என் பெயரைச் சொன்னால் தெரியுமளவுக்கு வளர்ந்திருப்பது, பெயர் வாங்கிக் கொடுத்தது எல்லாம் நகர வாழ்க்கைதான்.

ஆங்கிலத்துறையில் பயின்று ஊடகத்துறையில் நுழைந்த விதம் குறித்து…?

மொழிகளின் மீது இயல்பாகவே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. எனக்குள் இருந்த தாய்மொழிப் பற்று, உச்சரிப்பு, பேசும்திறன் இவற்றை என் அப்பா சிறு வயதிலிருந்தே கவனமாக வளர்த்தார்கள். பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே கட்டுரை, பேச்சு, நாடகம், பட்டிமன்றம், கவிதை, வினாடி வினா போன்ற போட்டிகளில் பெரும்பாலும் முதல் பரிசு பெறுவேன். அந்த ஆர்வம்தான் ஊடகத்தில் நுழைய உறுதுணையாக இருந்தது.

கிடைத்த வாய்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இத்துறையில் முன்னேற்றம் அடைந்தேன். நம்முடைய தனித்திறமையை வெளிக்காட்டுவதன் மூலம், தானாக பிடித்தமான பணிகள் தேடி வரும். எதற்கும் காத்திருப்பு அவசியம்.

இன்றைக்கு, இளைய தலைமுறையினரிடம் தீயபழக்கவழக்கங்கள் குடிகொண்டுள்ளது, அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்…?

இன்றல்ல, எந்தத் தலைமுறையினரிடம் கேட்டிருந்தாலும் அன்றைய இளைய தலைமுறையைப் பற்றி இதே விமர்சனத்தைத்தான் வைத்திருப்பார்கள்.

கால மாற்றத்தில் இது சகஜமான ஒன்று. மேலை நாட்டினரை கண்மூடித்தனமாக பின்பற்ற முயற்சிப்பதால் ஏற்படும் அவலம் இது. நம் நாட்டுப் பருவநிலைக்கேற்ற உடை எவ்வளவு முக்கியமோ அதேபோலத்தான் உணவும், காலாச்சாரமும். அதை மீறுவதால் நிச்சயமாக நன்மை கிடைக்காது. மாறாக பெருந்தீமையே விளையும் என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் தீய பழக்கங்கள் காணாமல் போகும்.

ஒருவன் குடிகாரன், ஸ்தீரி லோலன் என்று பெயர் எடுப்பது சிறப்பானதா? இவற்றை ஆண் செய்தால் தானும் செய்வேன் என்று எத்தனிக்கும் பெண்களுக்கு மதிப்பிருக்குமா?

எது பெருமைக்குரியதோ, சமூகத்தில் மதிப்பானதோ அதைத்தானே செய்ய வேண்டும்? அதற்காகத்தானே மனிதனுக்கு ‘ஆறாவது அறிவு’.

 தமிழ் மொழியின் நிலை இப்பொழுது?

தமிழ் மொழியின் நிலை என்றும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பார்க்கும் பெண்களை எல்லாம் தாயாக நினைத்துப் போற்றவது நல்ல பண்பென்றாலும் பெற்றதாயை இன்னும் சிறப்பாகப் பேணுவது கடமை அல்லவா? அதைப் போலத்தான் ஆங்கிலமும். பிறமொழிகளைத் தேடிக் கற்றாலும் தாய்மொழியாம் தமிழை ஆழ்ந்து கற்பது நமது இன்றியமையாக் கடமை. இதை பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து முழு முனைப்புடன் தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். இதைச் செய்தால் நம் மொழியின் நிலை இன்னும் நன்றாக இருக்கும்.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…?

“சோதனை இல்லாத வாழ்க்கை இல்லை

தடைக்கற்கள் இல்லாத பாதை இல்லை

வெற்றி தோல்வி இல்லாத பயணம் இல்லை”

தன்னைவிட பலவீனமானவர்களை துன்புறுத்துவதில் ஆண்மையின் கம்பீரம் இல்லை.

பெண்ணை சக ஜீவனாக மதிக்கத் தெரியாதவன் ஆணுமில்லை.

பெண்மையின் மென்மையை கைவிட்டவள் பெண்ணுமில்லை.

கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாதவனுக்கு வெற்றிகள் இல்லை.

வெற்றிக்கு பொறுமை வேண்டும். கவனம் சிதறாத உழைப்பு வேண்டும்.

வெற்றி வரும், நிச்சயம் வரும், வரும்வரை காத்திருக்க வேண்டும்!…