April, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » April

 
 • Categories


 • Archives


  Follow us on

  கல்விக்கு கரம் கொடு சரித்திரத்தில் பெயரெடு

  கார்த்திக் முருகன்

  மேலாண்மை இயக்குநர்

  Amogha Overseas Educational consultant

  கோவை

  கனவுகளை விதைக்கின்ற இரவு வேண்டும்

  கற்பனையில் மதிக்கின்ற கவிதை வேண்டும்

  வைகறையில் மதிக்கின்ற பழக்கம் வேண்டும்

  வாழும் வையகத்தை நினைக்கின்ற நெஞ்சம் வேண்டும்…!

  என்ற வரிகள் வாழும் கவிஞர் ஒருவரின் தன்னம்பிக்கை மிக்க தத்துவ வரிகளாகும்.  அந்த வகையில் தான் பெறாத கல்வியை தன் எதிர்கால சமுதாயத்திற்கு எப்படியேனும் கொடுத்து விட வேண்டும்  என்ற உயரிய நோக்கத்திற்காக வாழ்ந்து வரும் உன்னத மனிதர்.

  வாழ்க்கையில் ஒருமுறை ஒவ்வொருவரும் அவமானம் பட வேண்டும், அந்த அவமானமே நாளை உன்னை அதிகார அரியானையில் ஏற்றும் என்பதே இவரின்  உன்னத வாக்கு.

  ஏழ்மையாய் பிறப்பது உன் தவறல்ல, ஆனால் ஏழ்மையாய் இறப்பது உன் தவறே என்பதை இதயத் துடிப்பாய் எண்ணி ஒவ்வொரு கணமும் ஓடோடி இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் Amogha Overseas Educational consultant நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் முருகன் அவர்களின் வெற்றியின் பகிர்வோடு இனி நாம்.

  கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் பிறந்தது புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஆலங்குடி என்னும் குக்கிராமத்தில் மின்சார விளக்கே இல்லாத ஓலை  குடிசை வீட்டில் தான் பிறந்தேன். என் தந்தையார் முருகன், தாயார் கங்கா விவசாயப் பின்னணி உடைய குடும்பம். எனக்கொரு தம்பி சதிஸ். என்னுடைய மனைவி சுபாஷினி, மகள் அமோகா.  மிகவும் வறுமையான குடும்பம், மதிய உணவிற்காகவே பள்ளிக்குச் சென்ற காலம் அது. இன்று நினைத்தாலும் என் புத்தகப் பையில் அதிகம் புரண்ட என் சாப்பாட்டுத் தட்டு தான் நினைவிருக்கிறது. எங்கள் ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரைப் படித்தேன். வறுமையும் பசியும் எனக்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் என்னவென்றால் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது தான். அதன்படி பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன்.

  இதைப் பார்த்த என் மாமா திரு. கண்ணன் அவர்கள் இவனுக்கு சரியான இடமும் சூழலும் இதுவல்ல என்று என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார். இவரே என் முதல் குரு என்று சொன்னால், அது மிகையாது. இதனால் சென்னையிலுள்ள ஒரு புகழ் பெற்ற பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தேன். என் மாமாவின் வேண்டுகொள்ளுக்கிணங்க சேர்ந்து விட்டேன். ஆனால் தமிழ்வழிக் கல்வியிலேயே ஆரம்பத்திலிருந்து படித்து திடீரென்று ஆங்கில வழிக் கல்வி கற்கச் சென்றது என்னை கண்ணிருந்தும் குருடனாய் மாற்றியது. ஆரம்பத்தில்  ஆங்கிலத்தைப் பார்த்து அதிர்ந்தேன். வாழ்க்கை இது தான் என்று தெரிந்த பின்னர் பயப்படுவதை விட்டுவிட்டு பழகிக் கொள்ள முனைந்தேன். அகராதி வைத்து ஆங்கிலத்தை கற்றுக் கொண்டேன். நேரத்தை ஆங்கிலத்திற்காக அதிகம் செலவழித்தேன். இதன் விளைவாக பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப்பெற்றேன். எனது பெற்றோர் மற்றும் என் மாமாவின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்தேன். இப்படித்தான் எனது பள்ளிக்கல்வி பல சவால்களுக்கு இடையே சென்றது.

  கே: உங்களின் கல்லூரி வாழ்க்கைப் பற்றிச் சொல்லுங்கள்?

  எனக்கு சின்ன வயதிலிருந்தே எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. அதற்கு ஏற்றார் போல்  பனிரெண்டாம் வகுப்பில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்ததாலே சென்னையில் மிகவும் புகழ்பெற்ற குருநானக் கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்தது. அச்சூழலில் இக்கல்லூரியில் பி. காம் படிப்பது ஒரு வரம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட கல்லூரியில் சேர்க்கை கட்டணம் செலுத்த என் தந்தையிடம் பணம் இல்லை. எப்படியோ புரட்டி சேர்க்கை கட்டணப் பணமான 2500 ரூபாய் செலுத்தினார். அப்போது நான் நினைத்தது என்னவென்றால் இனி என் வீட்டில் பணத்தை வாங்கி படிக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டேன் அதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இதனால் படிக்கும் போது பகுதி நேர வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து பல கடை வாசலில் ஏறி இறங்கினேன்.

  அப்போது சென்னையில் புட்வேல்டு என்ற உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்து வேலை கேட்க சென்றேன். ஒரு நாள் இரு நாள் அல்ல பதினைந்து நாள் விடாமல் அந்தக் கடைக்கு வேலை கேட்டு சென்றேன். என்னுடைய இந்த முயற்சியைப் பார்த்து கடையின் மேலாளர் வேலைக் கொடுத்தார் அப்போது என்னுடைய  சம்பளம் 700 ரூபாய். இது தான் என்னுடைய முதல் சம்பளம். ஆனால் இது மட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. இதனால் புரபெசனல் கொரியர், புரெவ்சிங் சென்டர், பிட்ஸா கார்னர் என எல்லா வேலைக்கும் இரவு பகல் பாராமல் உழைத்தேன். ஒரு நாளைக்கு 4 மணி நேர தூக்கம் தான் எனக்கு. 20 முதல் 25 கி.மீ வரை சைக்கிள் பயணம் செய்தேன். நானே சமைத்து சாப்பிட்டு வந்தேன்.   இப்படித்தான் என்னுடைய கல்லூரிப் பயணம் சென்றது.

  கே: சென்னைக்குச் சென்ற பயண அனுபவங்கள் பற்றி?

  சென்னைக்கு படிக்கச் செல்கிறேன் என்று என்னுடைய பெற்றோர்களிடம் சொன்னேன். எனது தாயார் மறுத்தார். ஆனால் என் தந்தையோ நீ சென்னை செல்வதாக இருந்தால் தாராளமாகச் செல், சென்னை ஒன்றும் சாதாரண  ஊர் அல்ல பல சரித்திர நாயகர்களை உருவாக்கி இடம் என்று என்னை அனுப்பி வைத்தார். ஊரிலிருந்து புறப்பட்டேன், எங்கு தங்குவது, உறங்குவது போன்ற எத்தனையோ கேள்விகள் என்னைச் சுற்றி படமாய் ஓடிக்கொண்டிருந்தது. சென்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு. அது பகல் நேரத்தில் ஒரு விதமாகவும், இரவு நேரத்தில் ஒரு விதமாகவும் தென்படும். நண்பர்கள் நிறைய உதவினார்கள் அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்,  சண்முகம், அருண், திலீப், விஜய்பாபு, இளையராஜா அண்ணா, சதிஸ், சக்தி அண்ணா, கணேஷ், சிவா அண்ணன் அது மட்டுமின்றி எனது பள்ளிப் பருவ மற்றும் நான் பிறந்த ஊர் நண்பர்களான சதிஸ், ரியாஸ், பிரபு, சுரேந்தர், செந்தில் ஆகியோர்  என்னால் என்றும் மறக்க முடியாத நண்பர்களாகும்.  அப்போது  தான் என் நண்பனின் மாமா கணேஷ் அண்ணனின் அறிமுகத்தால் எஸ்.எஸ்.என் கல்லூரியில் எம். பி. ஏ படிக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது தான் திலிப் அவர்களின் முலமாக எனக்கு இந்தியன் வங்கியில் கல்வி லோன் வாங்கிக் கொடுத்து உதவினார். அவரின் உதவியால் எம்.பி.ஏ. முடித்தேன். படித்த கையோடு கேபஸ் இன்டர்யூ வந்தது. இதில் தேர்வாகி,  வேலையும் கிடைத்தது. என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஓரே மகிழ்ச்சி, 11,500 சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். கல்லூரியில் எனக்கு ஊக்கமாக இருந்த நண்பர்கள் சுமித், லெட்சுமி, பிரகாஷ், கணேஷ், நந்தக்குமார், செந்தில், ஆனந்த் ஆகியோரை இத்தருணத்தில் நினைவுப்படுத்தியே ஆகவேண்டும்,

  கே: அமோகா உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?

  எனக்கு சின்ன வயதிலிருந்து வெளிநாடுகளில் சென்று பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்தது. அது என்னுடைய ஆசை மட்டுமல்ல என்னுடைய மாமாவின் ஆசையும் அது தான். அதனால் நான் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்தேன். அதன் படி பாஸ்போர்ட் எடுத்து விட்டேன். விசா எடுக்கும் பொழுது உமக்கு 40 லட்சம் மதிப்பிலான சொத்து  இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அப்போது என்னுடைய ஆசை நிறை வேறவில்லை. ஆனால் நான் அதை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் என்னுடைய கனவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

  அப்போது தான் திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஜலந்தர் அண்ணன்

  அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவரை என்னுடைய தொழில் குரு. இவரின் மூலமாக சுவீடன் என்ற நாட்டில் இலவசக் கல்விக் கொடுத்து வருகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் அங்கு சென்று படியுங்கள் என்று கூறினார். அதன் படி நானும் அங்கு சென்றேன். ஆனாலும் என்னால் அங்கு முழுமையாகப் படிக்க முடியவில்லை. இதற்காக நான் மிகவும் சிரமப்பட்டேன். இதை ஏன் நாம் எளிமைப்படுத்தி ஒரு சேவைத் தொழிலாகச் செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அதற்கு நாம் முதலில் இத்துறை சார்ந்த கள ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணி 15 நாடுகளுக்கு பயணம் செய்தேன். எனக்கு உறுதுணையாக இருந்த திரு. ஜலந்தர் அண்ணன் இருந்தார்கள். அவரின் ஊக்கமே என்னை அடுத்தடுத்த எல்லா நாடுகளுக்கும் செல்ல தூண்டியது. இவரை  போலவே சுபேர் அகமது சண்முகம்  வெள்ளிங்கிரி ஆகியோர் என்னுடைய வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள்.

  அப்போது தான் 2008 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில்  படி மாற்றி படி என்ற ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு எங்கள் அமோகா நிறுவனத்தைப் பற்றிச் சொன்னேன். அந்த வருடமே  350 க்கும் மேற்பட்ட மாணவர்களை நாங்கள் வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பி வைத்தோம். நான் மட்டும் தனியாக ஆலோசனைக் கூறி  150 க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பி வைத்தேன்.  அதன் பிறகு என் வளர்ச்சியைப் பாராட்டி அன்றைய புகழ் பெற்ற பல தொலைகாட்சிகள் என்னை நேர்காணல் எடுத்து ஒளிப்பரப்பு செய்தது.

  கே: உங்கள் ஆலோசனை படி வெளிநாட்டிற்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கும் சிறப்புத் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

  எங்களிடம் ஆலோசனைப் பெற்று வெளிநாடு செல்லும் மாணவர்களில் நிறைய பேர் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் தான். அவர்களால் அதிகளவில் பணம் கொடுத்து இங்கு படிக்க முடியாத சூழலில் இருப்பார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் எங்களை நம்பி வரும் பொழுது அவர்களை மிகவும் அக்கரையுடன் அவர்களுக்கு ஏற்ற நாட்டிற்கு அனுப்பி வைப்போம், வெறும் அனுப்பி வைப்பதோடு இல்லாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கும் வரை அவர்களுடன் நாங்கள் இருப்போம். மாணவர்களை ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்கு முன்பே நான் அந்த நாட்டிற்குச் சென்று விடுவேன்.

  அக்கல்லூரி சார்ந்த அத்துனை தகவல்களையும் திரட்டி விடுவேன். கலாச்சாரம் நன்றாக இருக்க வேண்டும், பகுதிநேர வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும், இடம், காலசூழல், ஆங்கிலம் மொழி போன்றவற்றை அறிந்த பின்னரே தான் நான் அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பேன். இதுவரை நான் அனுப்பிய மாணவர்களில் ஒருவர் கூட கல்லூரியையும், நாட்டையும் குறை சொல்லிக் கேட்டதில்லை.  இதுவரை 5,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களைப் படிக்க அனுப்பி வைத்துள்ளோம்.  என்னுடைய  மாணவர்கள் இன்று உலக நாடுகளில் பல இடங்களில் மருத்துவராகவும், பொறியாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இது தான் எங்களுக்கு மிகப் பெருமையாகும்.

  கே: கோவைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?

  2008 ஆம் ஆண்டு கோவைக்கு வந்தேன். நான் எந்த ஊருக்குச் செல்கிறேன் என்றாலும் அந்த ஊர் பற்றிய அத்துனை தகவல்களையும் திரட்டி விடுவேன். ஒரு ஆறு மாத காலம் ஹோட்டலில் தங்கி கோவை சுற்றியுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவற்றை  நன்றாகத் தெரிந்து கொண்டேன். கல்விக்கு ஏற்ற சூழல் இங்கு அதிகளவில் இருப்பதாக உணர்ந்தேன்.

  நான் இங்கே வரும் பொழுது கோவை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஒருவர் ஒரு முறை கோவையில் வந்து  தங்கி விட்டால் அவர்களால் இவ்வூரிலிருந்து அவ்வளவு எளிதாக சென்று விடமுடியாது, அந்த அளவிற்கு இவ்வூர் அனைவருக்கும் பிடித்து விடும். நானும் இப்படித்தான் இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். அதன்படி இங்கு அமோகா நிறுவனம் உதயமாயின. இன்று நான் கோவையிலுள்ள பல பள்ளிகளுக்கு கல்வி ஆலோசனை சார்ந்த விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன். மக்கள் பேசும் மொழியில் மிகவும் மதிப்பிருக்கும், இது போன்ற எண்ண மாறுதல்கள் தான் என்னை இங்கே தொழில் தொடங்க காரணமாக இருந்தது.

  கே:  உங்களின் வளர்ச்சிக்கு ஊடகத் துறையின் எங்கு எந்தளவிற்கு இருக்கிறது?

  சமூகத்தின் நான்கு பெரிய தூண்களில் ஒன்று தான் ஊடகம். இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தின் வளர்ச்சி மிக அதிகளவில் பெருகி இருக்கிறது. உலகத் தலைவர்கள் கூட ஊடகத்தை நம்பியே உறுதி மொழி எடுக்கிறார்கள். அந்த வகையில் என்னுடைய வளர்ச்சிக்கு ஊடகம் பெரும் அளவில் பங்கு வகித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒளிப்பரப்படும் பெரும்பாலான தொலைக்காட்சியில் என்றுடைய நேர்காணல் வந்திருக்கிறது.

  அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயாடிவி, சத்தியம் டிவி மாலை முரசு, மக்கள்டிவி,கலைஞர்டிவி,பாலிமர் டிவி, தந்திடிவி பொதிகை ஆகிய தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணலை வெளியிட்டார்கள் இப்படி என்னுடைய வளர்ச்சிக்கு ஊடகம் பெரும் அளவில் துணைப்புரிந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

  கே: வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

  ஒரு மாணவனுக்கு சின்ன வயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்குள் இருக்கும்.  ஏதேனும் ஒரு சூழலில் அவனால் இந்தியாவில் படிக்க முடியாத நிலைக்கு சென்று விடலாம். இதனால் அம்மாணவனின் மனம் மிகவும் வேதனைக்குள்ளாகும், அப்படிப்பட்ட மாணர்கள் என்னிடம் ஆலோசனைக்கு  வரும் பொழுது உன்னுடைய இலக்கு மருத்துவர் அது இங்கே படித்தால் என்ன அல்லது வெளிநாடுகளில் படித்தால் என்ன உன்னுடைய இலக்கில் எப்படியேனும் நீங்கள் சாதித்து விடலாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன். அதற்கு முதலில் அவனுக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.

  வெளிநாட்டுக் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அவர்கள் அங்கு படிப்பதால் அங்குள்ள கலாச்சாரத்தை நன்கு கற்றுக்கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது.

  இங்கு சுமாராக ஆங்கிலம் பேசும் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்வதன் மூலம் ஆங்கிலம் சரளமாகப் பேசுவதை விட இன்னும் பிற மொழிகளையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது.

  எதையும் புத்தகத்தின் மூலம் அவர்கள் பாடத்தை நடத்த மாட்டார்கள்., எல்லாமே ஆய்வுகள் மூலமாகத்தான் எதையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

  தொழிற்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் போது அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.

  கே: உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நிமிடங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

  என் வாழ்க்கை ஒரு போராட்டக்களம். வறுமையின் வாசனையை மூச்சுக் காற்றாய் சுவாசித்த காலம். தெருவிளக்கில் படித்த நீங்காத நினைவுகள், ஒரு வேளை உணவு கிடைக்காத என்று ஏக்கத்தில் தெருவில் தூங்கி காலம், உறவினர்களின் பொய் போலிதனம், பண்டிகை காலத்தில் வீட்டிற்குச் சென்றால் என் பெற்றோர் புது ஆடை மகன் வாங்கி வந்திருப்பானா என்று தவித்த அத்தருணம்,  நண்பர்களின் எதிர்பாராத உதவிகள், பகுதி நேர வேலையை முடித்த நடு இரவு நேர சைக்கிள் பயணம், காதலித்து மணந்த மனைவி, எங்கள் அன்பிற்கு கிடைத்த மகள், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என் மகன் மருத்துவராகி விட்டான் என்று என்னிடம் நன்றி சொல்லும் தாய் தந்தையர்கள் என்று எல்லாமே என் வாழ்க்கையில் என்றும் நீங்காத நிமிடங்கள் தான்.

  கே: உங்களிடம் வரும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?

  எல்லோருக்குள்ளும் ஒரு பெரிய எதிர்பார்ப்போடு தான் எங்களைச் சந்திக்க வருகிறார்கள். என்னுடைய மகன் ஒரு மருத்துவராக, பொறியாளராக ஆக வேண்டும் என்று ஆசையோடு வருகிறார்கள், என்னுடைய பிள்ளை நன்றாகப் படித்து எங்களை பிற்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் அதிகப்படியான ஆசையாக இருக்கிறது, இதில் தவறு ஏதும் இல்லை. தாங்கள் பெற்ற பிள்ளைகளை அவ்வாறு எதிர்பார்ப்பது சரியான ஒன்று தான். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

  என்னிடம் ஒரு முறை மாணவர்கள் வந்து விட்டால் அவர்களின் மனதில் நம்பிக்கை பிறந்து விடும். அவர்களின் வாழ்க்கைக்கான நல்வழியை காட்டி விடுவேன். இவ்வழியில் அவர்கள் பயணம் செய்தால் நிச்சியம் வெற்றி பெற முடியும் என்பதை புரிய வைத்து விடுவேன்.

  பெற்றோர்களுக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்யும், தன் மகனோ, மகளோ வெளிநாட்டிற்கு அனுப்புவது  பற்றியான அத்துனை தகவல்களையும் முறையாக அவர்களிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். நம்மை நம்பி வருபவர்களை ஒரு போதும் நம்பிக்கை இழக்கும் படி நடந்திடுதல் கூடாது.

  கே: அமோகவின் தனிச்சிறப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

  சாதாரண விவசாயக் குடும்த்தில் பிறந்தவரும் மருத்துவர் ஆகலாம். இதை உண்மையாக்கும் விதத்தில் தான் 12 வருடங்களுக்காக இந்த சேவையை செய்து வருகிறோம்.

  குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் விரும்பும் நாடுகளில் மருத்துவம், பொறியியல் படிக்கலாம்.

  எங்களிடம் எம்.பி.பிஎ.ஸ், இன்ஜினியர், எம்.பி.ஏ எம். எஸ்  ஆகிய  படிப்புகள், வேலைவாய்ப்பு சார்ந்த தொழிற்படிப்புகள் ஆகிய துறைகளை நீங்கள் விரும்பும் நாட்டில் படிக்கலாம்.

  நல்ல தரம் வாய்ந்த கல்லூரிகளான  உக்ரைன், ஜமைக்கா, அர்மோனியா, சீனா,போலந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவிடன் போன்ற நாடுகளில் படிக்கலாம்.

  மாணவர்களுக்கு பாஸ்போர்டு எடுத்துக் கொடுப்பதிலிருந்து, விமான கட்டணம், சேர்க்கை, விசா, பேங்க் லோன் என எல்லா உதவிகளையும் செய்வதோடு அவர்களை நேரடியாக கல்லூரியில் விட்டு அங்கும் எல்லாம் உதவிகளையும் செய்த பின்னரே வருகிறோம்.

  உலக நாடுகளில் எங்கெங்கு என்ன பல்கலைக்கழகங்கள் இருக்கிறது, அங்கு கலாச்சாரங்கள் எப்படி இருக்கிறது என்று எல்லா நாடுகளுக்கும் நான் நேரடியாகச் சென்று ஆய்வு செய்த பின்னரே அங்கு மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.

  பணத்தை நாங்கள் ஒரு போதும் முக்கியமானதாக நினைத்ததில்லை, அது நாங்கள் இதுவரை அனுப்பிய மாணவர்களுக்கு தெரியும்.

  எந்த நாட்டிற்கு மாணவர்களை அனுப்புகிறோமோ நானும் அவர்களுடன் சென்று அவனுக்குத் தேவையான அத்துனை உதவிகளையும் செய்த பின்னரே நான் வருவேன்.

  எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரையும் நான் பல வெளிநாட்டு கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

  ஒரு துறையை ஒரு மாணவன் தேர்ந்தெடுத்து படிக்கும் முன் அத்துறை சார்ந்த அத்துனை நன்மைகளையும் தீமைகளையும் சொல்லிய பின்னர் தான் அதில் பயில அனுமதிப்போம். அது மட்டுமின்றி எதிர்கால வாழ்க்கைக்கு இக்கல்வி எவ்வாறு துணைப்புரிகிறது என்பதையும் சொல்லி அவனுக்கு விழிப்புணர்வு கொடுப்போம்.

  கே: வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

  ஆலோசனை என்பதை விட அறிவுரை என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  மாணவர்களே உங்கள் எண்ணம் போல் வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் நோக்கத்தை வளர விடுங்கள், இங்கு எதுவும் சாத்தியம் என்று புரிந்து கொள்ளுங்கள், இங்கு நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது, அதைத் தேடி ஓடுங்கள்.

  முடியாது என்பது உன்னுடைய முயற்சியில் மட்டும் தான் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தினால் வானத்தையும் எட்டலாம், கடலையும் கடக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

  கே : உங்களின் எதிர்காலத்திட்டம் ?

  திட்டங்கள் நிறைய இருக்கிறது. ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்க வேண்டும்.

  முழுக்க முழுக்க இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கொடுக்கும் கல்விக்கூடத்தை தொடங்க வேண்டும்.

  கிராமப்புற ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் சென்று  படிக்க உதவ வேண்டும்.

  நேர்காணல்:  விக்ரன் ஜெயராமன்

  இந்த இதழை மேலும்

  தண்ணீர் தந்திரம்

  நாம் பயணங்களில் அதிகம் பயப்படுவது தண்ணீர் சார்ந்த நோய்த் தொற்றுக்குத்தான். உண்மையில் இது ஒரு பிரச்சனையே இல்லை. தண்ணீரால் தான் அதிக நோய்ப் பிரச்சனைகள் வருவதாக நாம் கருதி அதனைச் சுட வைத்து அருந்துகிறோம். அல்லது இருக்கவே இருக்கிறது மினரல் வாட்டர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தண்ணீரைச் சுட வைத்து குடித்துவிடுகிறோம். ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றில் குடிக்கும் தண்ணீரைவிட பல மடங்கு கிருமிகள் இருக்கின்றன. அவற்றை எவ்வாறு சுத்தமாக்கி சுவாசிக்க முடியும்? சாத்தியமில்லைதானே? அன்பு நண்பர்களே!  நாம் காற்றை எப்படி அதன் இயல்பிலே ஏற்றுக்கொள்கிறோமோ அதுபோலவே நம் பயணங்களில் கிடைக்கும் தண்ணீரையும் அதன் இயல்பில் ஏற்றுக்கொள்ள நாம் கையாள வேண்டிய தண்ணீர் தந்திரங்களைப் பற்றி இனிப் பார்ப்போம்.

  1. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டம்ளர் தண்ணீர்: நாம் யார் வீட்டிற்குப் போனாலும் அவர்களிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், நாம் பலவிதமான தண்ணீர் தன்மைகளை எற்றுக்கொள்ளவும், அதன் கிருமிகளுக்கு எதிர்ப்புச் சக்தியையும் உருவாக்கிக் கொள்ளவும் வழி கிடைக்கும். அப்படியே நாம் அருந்தும் தண்ணீர் கெடுதலாக இருந்தாலும் நாம் வெறும் ஒரு டம்ளர் தண்ணீரால் அதிக பாதிப்படைய மாட்டோம்.
  2. காதும் காதும் வைத்து: நாம் புதியதாக ஒரு ஊரில் குளிக்க நேரும்போது அவ்வூரின் தண்ணீரை நம் இரு காதுமடல்களிலும் தேய்த்துவிட்டு, பின்னர் நெற்றிப் பொட்டிலும் தண்ணீரை வைத்து பின்னர் தலைக்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் குளிக்கவேண்டும். அப்படிச் செய்வதால் நம் சிறுநீரகத்தின் வெளித் தொடர்பு உறுப்புகளான நம் காதுகள் குளிக்கும் தண்ணீரின் தன்மையை சிறுநீரகங்களுக்கு தெரிவிக்கின்றன. இதனால், நம் உடல் புதியத் தண்ணீரை எற்றுக்கொள்கிறது. நெற்றிப்பொட்டில் வைப்பதால் நாம் குளிக்கப்போகும் நீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது.
  3. ஓஜஸ் மூச்சு: நாம் குளிக்கும் தண்ணீரால் சக்தியும் ஆற்றலும் பெருக வேண்டுமாயின் நம் உள்ளங்கையில் குளிக்க வேண்டிய தண்ணீரை வைத்துக்கொண்டு ஒரு ஓஜஸ் மூச்சை வெளிப்படுத்தினால் போதும், யாதொரு தீங்கும் புதிய நீரால் வராது.
  4. குடிப்பது தண்ணீராக இருக்கட்டும்: நாம் எப்பொழுதும் சுட வைக்காத தண்ணீரை அருந்த வேண்டும். அப்போதுதான், உயிர்ப்புள்ள நீரின் நன்மைகளை நாம் பெறுகிறோம். வீட்டில் இருக்கும்போது சுட வைத்த நீரை (செத்த நீரை) அருந்திவிட்டு வெளியூர்களில் அப்படிச் சுடு நீர் கிடைக்காத போது, நாம் தண்ணீரைக் குடிக்கும்போதும் அதனால் சங்கடங்களைத் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  5. இரசாயன பானங்களைத் தவிர்ப்போம்: பயணங்களில் நாம் வேடிக்கை விளையாட்டாக (Fun drinks) குளிர் பானங்களை அருந்துவது வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் இவ்வித இரசாயனம் மற்றும் இரசாயன சாயம் கலந்த பானங்களால்தான் நம் உடலில் இரசாயனக் கழிவுகள் சேர்க்கப்பட்டு அதற்குண்டான தீவிர வைரஸ் தொற்று நோய்கள் வளர்வதற்கு களமாகின்றன. இந்த உண்மை புரிந்தால், அப்பாவியான தண்ணீரைக் குறை சொல்வதற்கு பதில் அபாண்டமான குளிர் பானங்களைத் தூக்கி எறிவீர்கள்.
  6. இளநீருக்கு வரவேற்பு அளிப்போம்: பயணங்களின் களைப்பு நீங்க இளநீரை நாம் தாராளமாக அருந்தலாம். இளநீரில் நமக்கு வேண்டிய உயிர்ச் மற்றும் தாதுச் சத்துக்களும் அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன. இளநீர் அருந்துவதால் உடல் உஷ்ணமும் தணியும். இளநீரால் சளி பிடிக்கும் என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கக் கதைகள். உடலைக் குப்பையாகவும், வெப்பக் காடாகவும் வைத்துக்கொண்டு திரிபவர்கள் சொல்லும் வேதாள அபத்தமாகும். வாழ்வில் தெளிந்த சிந்தனையும். ஆராய்ந்து பார்க்கும் தன்மையும் கொண்டவர்கள் கூறும் வேதத்தை மதியுங்கள். இளநீர் குடித்தாவது குப்பைகள் சளிகளாக வெளிவரட்டும்.

  இந்த இதழை மேலும்

  நினைப்பதே நடக்கும் – 3

  உயிர் பற்றிய துர்நாற்றம் எவருக்குமே உறுத்தவில்லை. உயிர் பற்றிய ஆராரணம் எல்லோருக்கும் வலிப்பதேயில்லை. உயிர் பற்றிய வாசனை யாருக்குமே அதுவாகப் புரிவதேயில்லை. உயிர் அவரவருக்கு அவரவரின் கற்பிதத்தை மட்டுமே போதிக்கிறது. அவரவர் கற்ற கேட்ட வளர்ந்த விதத்தினூடாகவே ஒரு உயிரினை பெரிதாகவும் சிறிதாகவும் காண்கிறது இவ்வுலகம்.

  உயிரோடிருப்பதில் பெரும் வேதனையையும் அவமானங்களையும் அனுபவிப்பது இன்றைய காலக்கட்டத்தில் பெரியோர்களே. அதிலும் கை முறிந்து கால் முறிந்து வீட்டில் படுத்த படுக்கையாய் இன்னலுறும் எத்தனை அம்மா அப்பாக்களை தாத்தா பாட்டிகளை நாம் நன்றாகப் பார்த்துக்கொள்கிறோமென மனசாட்சியோடு ஒரு கணம் எல்லோரும் யோசித்துப் பாருங்கள். கால் கை உடைந்தால் பொதுவாகப் பார்த்துகொள்வோம் தான், ஆனால் இது தான் குத்துக்கல்லாட்டம் இருக்கே, இதுக்கென்ன கேடு என்று எண்ணுபவர்களும் நம்மிடையே இல்லாமலில்லை.

  எது எப்படியோ வீட்டிலிருந்தும், உறவுகளிடமும், நிறுவனங்களிலும் என பல வசவுகளை வாங்கிக்கொண்டும் மறைத்துக்கொண்டும், மனதழுத்தும் பல வலிகளோடும் தான் நாம் ஒவ்வொருவரும் மருத்துவமனை நோக்கி ஓடுகிறோம். நானும் ஓடி அவசரம் அவசரமாக மேல்மாடி சுற்றி ஐந்தாம் தளம் புகுந்து எனது அலுவளுள் ஓடி அமர்ந்தேன்.

  எனக்கு நினைவெல்லாம் வெப்பம் தகித்தது. மருத்துவமனை வாசனை உள்ளே மனசெல்லாம் பரவிக்கிடந்தது. அதிலும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணொருத்தி கத்தியதும், கால் உதைத்துக்கொண்டு துடித்ததும் கண்ணுக்குள்ளேயே விழித்திருந்தது. எப்படி முனகினாள் அவள். அத்தனை அழகுப் பெண்ணாயினும் பாவம் வலி என்றதும் அக்கம்பக்கம் கூட மறந்துவிடுகிறது அவளுக்கு. எனக்கு மட்டும் முடிந்திருந்தால் கொடம்மா உன் பிள்ளையை நான் பெற்றுத் தருகிறேன் என்று கேட்டு நானே வாங்கிக் கொண்டிருப்பேன். அப்படியொரு வலிபோல் அவளுக்கு. அமர்கிறாள் அமரமுடியவில்லை. நிற்கிறாள் நிற்கமுடியவில்லை. அவ்வளவு இருந்தும் அப்படியொருப் பெண்ணை தனியே மருத்துவமனைக்கு அனுப்பும் ஆண்களை என்ன சொல்வது??!!

  ஆயிரம் கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ, பிடித்து பிடிக்காதோ போகட்டும்; மரணத்தையும் ஜனனத்தையும் அதனோடு சேர்த்துப் பார்ப்பதற்கில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு ஆற்றவேண்டிய கடைமைதனில் ஒன்று அவளுடைய பிரசவ காலத்தில் அவளை தனது கண்ணாகப் போற்றி காத்துகொள்ள வேண்டியதும். அவ்வளவு வலியில் அவள் துடிக்கையில் ஒரு குழந்தையைப் போல மார்பு மீது அவளை அணைத்துக்கொள்ளும் கணவனை எந்தப் பெண்ணும் தான் சாகும்வரை தன்வாழ்நாளில் அந்த நெருக்கத்தை மறப்பதில்லை.

  பொதுவாக உதவுவது என்பதே விதைப்பது தானே, நீ ஒன்றை விதைத்துப்பார், அதிலிருந்து நூறு முளைக்கும். கொடுப்பதும் அப்படித்தான் திரும்ப இரட்டிப்பாய் கிடைக்கும். எதை கொடுக்கிறோம், யாருக்கு, எவ்விடத்தில் அது நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன்களும் மாறுகிறது. எனக்கு எப்போதுமே இதில் ஆழமான நம்பிக்கையுண்டு, எதை கொடுக்கிறோமோ அது கிடைக்குமென்று. எதை நினைக்கிறோமோ அது நடக்குமென்று. அதற்காக உடனே ஜீபூம்பா நான் ஒரு அமெரிக்க அரசனாக ஆகவேண்டும் என்றுக் கேட்டால் இப்போதைய பிரசிடெண்ட் ட்ரம்ப் வந்து நம் தலையில் பெரிய ஒரு குண்டை தூக்கி போட்டாலும் போடுவார்.

  நினைப்பதென்பது நல்லது சார்ந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் இயல்பு விதி. எதையும் பிறர் நன்மைக்காக, ஒரு நல்ல நீதிக்கு வேண்டி எண்ணல் வேண்டும். இது செய்தால் நான் நல்லாருப்பேனா என்று நினைப்பதை விட, இதை செய்தால் பிறர் நன்றாக வாழ்வாரா’ என்று எண்ணிச் செய்யுங்களேன், நீங்கள் தானாகவே நன்றாகிப் போவீர்கள்.

  நினைத்தல் என்பது ஒரு செயலின் ஆணிவேரைப் பிடுங்கி அதை நம் மனதுள் ஆழ நடுவதற்குச் சமம். நட்டால் போதுமா, ஒரு விதையை மண்ணில் அப்படி ஊன்றிவிட்டால் முடிந்ததா? நீர் ஊற்றவேண்டும், வெயில் படவேண்டும், கற்றடிக்கவேண்டும், தேவைப்பட்டால் உரமும் இடவேண்டும். அப்படிதான் நமது எண்ணங்களும்.

  இந்த இதழை மேலும்

  வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 7

  அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

  (The 7 Habits of highly effective people)

  இந்த நூலின் ஆசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி (Stephen R.Covey) ஆவார். (நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) நாம் எதை மீண்டும் மீண்டும் செய்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம். அப்படிப் பார்த்தால், மகத்துவம் என்பது ஒரு செயல் நடவடிக்கையல்ல, அது ஒரு பழக்கம் என்ற அரிஸ்டாட்டிலின் மேற்கோளுடன் இந்நூல் தொடங்குகின்றது. நமது குணநலன்கள் என்பவை அடிப்படையில் நமது பழக்கங்களின் ஒரு கலவை. “ஓர் எண்ணத்தை விதைத்தால் ஒரு செயலை அறுவடை செய்வீர்கள்; ஒரு செயலை விதைத்தால் ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள், ஒரு பழக்கத்தை விதைத்தால் ஒரு குணநலனை அறுவடை செய்வீர்கள், ஒரு குணநலனை விதைத்தால் ஒரு தலைவிதியை அறுவடை செய்வீர்கள்” என்று ஒரு கூற்று உள்ளது. பழக்கங்கள் நம்முடைய வாழ்வில் சக்திவாய்ந்த காரணிகளாக உள்ளன. அவை தொடர்ச்சியானவையாகவும், பெரும்பாலும் நம்மையும் அறியாமல் வெளிப்படுபவையாகவும் இருப்பதால், அவை எவ்வித மாற்றமும் இன்றி ஒவ்வொரு நாளும் நம்முடைய குணநலன்களை வெளிப்படுத்தி, நமது ஆற்றலை அல்லது ஆற்றலின்மையை உருவாக்குகின்றன. ஒரு பழக்கம் என்பது அறிவு, திறமை மற்றும் விருப்பம் ஆகியவற்றின் சந்திப்பு என்று வரையறுக்கிறார் ஸ்டீபன் ஆர்.கவி. மேலும் அறிவு என்பது என்ன செய்யவேண்டும். ஏன் அதைச் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு ரீதியான கருத்துக் கண்ணோட்டம். அதை எப்படிச் செய்வது என்பதுதான் திறமை. அதைச் செய்வதற்கான ஊக்குவிப்புத்தான் விருப்பம். ஒன்றை நம் வாழ்வில் ஒரு பழக்கமாக ஆக்குவதற்கு; இந்த மூன்றும் நம்மிடம் இருக்க வேண்டும்” என்றும் விளக்கம் தருகிறார்.

  ஏழு பழக்கங்கள்

  அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்களாகப் பின்வருவன அமைகின்றன.

  1. முன் யோசனையுடன் செயலாற்றுதல்.
  2. முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல்.
  3. முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்.
  4. எனக்கும் வெற்றி உனக்கும் வெற்றி என்ற சிந்தனை.
  5. முதலில் புரிந்துகொள்ளுதல் பின்னர் புரியவைத்தல்.
  6. கூட்டு இயக்கம்.
  7. புதுப்பித்தல் பழக்கம் அதாவது ரம்பத்தைக் கூர் தீட்டிக்கொள்ளும் பழக்கம்.

  மேற்கண்ட ஏழு பழக்கங்களும் ஆற்றலுக்கான பழக்கங்கள். அவை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால்; நீண்டகாலப் பயனளிக்கும் உச்சபட்ச விளைவுகளை அவை உருவாக்கித் தருகின்றன. இவை ஒரு நபருடைய குணநலன்களின் அடிப்படையாக ஆகி, சரியான ஆற்றல்மிக்க மனிதர் உருவாகிறார். இப்படியான மனிதர் தனிநபராக எந்தப் பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ளவும், வாய்ப்புக்களைப் பெருக்கிக்கொள்ளவும், மேலும் மேலும் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வளர்ந்திடவும் முடியும். மேற்கண்ட ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து சுருக்கமாக வருமாறு பார்ப்போம்.

  முன்யோசனையுடன் செயலாற்றுதல்

  நாம் ஒரு செயலைச் செய்யும்போது இது சரியா? தவறா! என்று முடிவுசெய்து தொடங்குவதை அதாவது ஒரு செயலைச் செய்ய முடிவு எடுப்பதை முன்யோசனை என்று விளங்கிக் கொள்ளலாம். நாம் எடுக்கும் முடிவுகளில் சில சரியாக அமையலாம். இல்லை அமையாமல் போகலாம். ஆனால் ஆற்றல்வாய்ந்த ஒருவர் எடுக்கும் முன்முடிவு தவறாகப் போவது இல்லை என்பது நிதர்சனம். நாம் நமது சொந்த முன்யோசனையுடன் கூடிய செயல்பாட்டை அடையாளம் கண்டு அதை அடைய முயல்கின்றோம். இவ்வாறு உருவாக்கப்படும் முன்யோசனையை அடையும் அறிவு, திறமை, விருப்பம் ஆகியன நமக்கு எப்போதும் இருக்கவே செய்கின்றது. இந்த மூன்றில் எது குறைந்தாலும் நமது செயல்பாடு வெற்றியடைய வாய்ப்பில்லை. நம் வாழ்க்கை முழுவதும் நிறைய பிரச்சனைகள், அழுத்தங்கள், திடீர் திடீரென தோன்றவே செய்கின்றன. இதனை நாம் எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதில் நமது வெற்றி அடங்கியுள்ளது. நாம் நிறைய வாக்குறுதிகள் கொடுப்போம்; ஆனால் அதை நிறைவேற்றுகிறோமா என்பதில்தான் ஒரு மனிதனின் ஆற்றல் அடங்கியிருக்கிறது. முன்யோசனையுடன் கூடிய மக்கள் நேர்மறையான ஆற்றல்களையும் செல்வாக்கையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் எல்லா முன்யோசனைகளும் நிறைவேற்றக்கூடியதாகவும் அமைந்துவிடுகிறது என்று ஸ்டீபன் ஆர்.கவி கூறுகிறார்.

  முடிவை மனதில் வைத்துத் தொடங்குதல்

  முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதற்கு நீங்கள் சென்றடைய விரும்புகின்ற இடத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலுடன் துவங்குதல் என்று பொருள். இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகவும், நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்போதும் சரியான திசையிலேயே இருப்பதற்காகவும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது என்பது அதன் அர்த்தம். முடிவை மனத்தில் வைத்துத் துவங்கும்போதுதான் நாம் உண்மையிலேயே ஆற்றல்வாய்ந்தவர்களாக இருப்போம். முடிவை மனத்தில் வைத்துத் துவங்குவது என்பது ‘அனைத்து விஜயங்களும் இரண்டு முறை உருவாக்கப்படுகின்றன’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து விஜயங்களும் முதலில் மனதில் உருவாக்கப்படுகின்றன. பிறகு வெளியுலகில் இரண்டாவது முறையாக உருவாக்கப்படுகின்றன. நாம் வீடு கட்டுவதை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றார் நூலாசிரியர். முதலில் வீட்டின் வரைபடத்தை உருவாக்கி, கட்டிடத் திட்டங்களை உருவாக்குகிறீர்கள். நிலத்தைத் தோண்டுவதற்கு முன்பே நிலத்தில் அமையப்போகும் கட்டிடம் எப்படி அமையவேண்டும் என்று முடிவு செய்துகொள்கின்றோம். இதுதான் முடிவை மனதில் வைத்துத் துவங்குதல். “இரண்டுமுறை  அளவெடுங்கள் ஒருமுறை வெட்டுங்கள்” என்பது தச்சர்களின் கொள்கை விதி. முடிவை மனதில் வைத்துத் துவங்குதல் என்பது ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் இரண்டாவது பழக்கம் ஆகும். இப்பழக்கம் தலைப்பண்புகளுடன் ரேநடியான தொடர்புடையது ஆகும். சரியானவர் எடுக்கும் சரியான முடிவு. சரியான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு என்று இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

  முதலில் செய்யவேண்டியவற்றை முதலில் செய்தல்

  1வது மற்றும் 2வது பழக்கங்களை நடைமுறைப்படுத்துவதால் விளைகின்ற தனிப்பட்டப் பலன்தான் 3வது பழக்கம். “நீங்கள்தான் திட்டமிடுபவர்” என்று 1வது பழக்கம் கூறுகிறது. “திட்டத்தை எழுதுங்கள்” என்று 2வது பழக்கம் கூறுகிறது.  “திட்டத்தைச் செயல்படுத்துங்கள்”, “திட்டத்தை வாழுங்கள்” என்று 3வது பழக்கம் கூறுகிறது. வாழ்வது என்பது முக்கியமாக, தேர்ந்தெடுப்பதற்கான நமது சுதந்திரம், சுய ஒழுங்கு, நாணயம் மற்றும் நமது இலக்குகளுக்கும் கால அட்டவணைகளுக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தத்தையும், கண்ணோட்டத்தையும் கொடுக்கின்ற சரியான கொள்கைகள் மற்றும் நமது சொந்த ஆழமான மதிப்பீடுகள் குறித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒரு செயல்பாடு. இது முழுவதும் தனிமனித நிர்வாகம் குறித்தக் கொள்கைகள் ஆகும். இதில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த கைக்கொள்ள வேண்டிய காலக்கெடுவுடன்கூடிய பணித்திட்டங்கள், அழுத்தமிக்க பிரச்சினைகள், நெருக்கடிகள் இவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுதல் போன்றன விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

  இந்த இதழை மேலும்

  இரத்தசோகை

  வரையறை

  இரத்தசோகை என்பது இரத்த சிவப்பு அணுக்கள் குறைவுபடும் நிலை மற்றும் ஹீமோகுளோபின் குறைவுபடுவதால் வரும் நிலையாகும். இதனால் இரத்தத்தின் பிராண வாயு எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது.

  காரணங்கள்

  சிவப்பணுக்கள் உற்பத்தியாவது குறைந்தாலும் அல்லது அதன் அழியும் தன்மை அதிகமாகும் போதும் இரத்த சோகை ஏற்படுகிறது.

  சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவு

  • சரியான உணவு ஊட்டம் இல்லாததால் சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறைதல் (எ.கா.) இரும்புச் சத்து குறைவு, போலிக் அமில குறைவு, வைட்டமின் பி 12, வைட்டமின் பி குறைவு.
  • தாய்ப்பாலை மட்டும் நீண்ட நாள் கொடுத்தல்.
  • குழந்தை விரும்புகின்ற உணவை மட்டும் கொடுத்தல்.
  • பாலை மட்டுமே 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கொடுத்தல் (இணை உணவை தாமதமாக கொடுக்க ஆரம்பிக்கும்போது)
  • எலும்பு மஜ்ஜையில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறைவு.

  இரத்த இழப்பு

  • காயங்கள் காரணமாக இரத்த இழப்பு, இரத்த அணுக்கள் குறைவாக உற்பத்தியாதல், இரத்த அணுக்கள் அதிகமாக அழிவது, இரத்தம் உறையும் செயல்பாட்டில் குறை ஆகிய காரணங்களால் இரத்த இழப்பு ஏற்படுகிறது.
  • குடலில் கொக்கிப் புழு இருத்தல்.

  சிவப்பணுக்கள் அதிகமாக அழிதல்

  (i)  சிவப்பணு அல்லாத புறக்காரணங்கள்

  1. மருந்துகள், இரசாயனப் பொருட்கள்
  2. நோய்த் தொற்று
  3. ஆன்டிபாடிகள் எதிர்வினை

  (ii) சிவப்பணு குறைபாடு காரணங்கள்

  1. சிவப்பணுக்களின் மேலுறை குறைபாடுகள்
  2. குறைபாடுள்ள சிவப்பணுக்கள் உருவாதல் (சிக்கிள் செல் இரத்த சோகை, தலசீமியா சின்ட்ரோம் போன்றவை) சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோ குளோபின் உற்பத்தியாகும் அளவிற்கு அழிக்கப்படுகிறது.

  அறிகுறிகள், முதல்நிலை

  • அமைதியின்மை
  • சோர்வு
  • பசியின்மை
  • சக்தி குறைவு
  • தலை வலி

  பின் அறிகுறிகள்

  • கண் மற்றும் தோல் வெளிறிய தன்மையுடன் காணப்படுதல்
  • பலவீனமாக இருத்தல்
  • கல்லீரல் வீக்கம்
  • இருதய துடிப்பு அதிகமாதல்
  • படபடப்பு
  • வகுப்பறையில் தூங்குதல்
  • ஞாபக மறதி மற்றும் படிப்புத்திறன் குறைதல்
  • சுவாசம் அதிகரித்தல்
  • குறுகிய சுவாசம்
  • மண், சாக்பீஸ் போன்றவற்றைச் சாப்பிடுதல்

  பரிசோதனை

  • இரத்த அணுக்களின் எண்ணிக்கை பரிசோதனை
  • ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிதல்

  இரத்த சோகை வகைகள் – மிதமான இரத்த சோகை

  இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8-10 கி வரை இருக்கும்.

  நடுத்தரமான இரத்த சோகை

  ஹீமோகுளோபின் அளவு 6-8 கி வரையே இருக்கும்.

  கடுமையான இரத்த சோகை

  ஹீமோகுளோபின் அளவு 6 கிராமுக்கும் குறைவாக இருக்கும்.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை ஒரு நூலகம்

  தனி மனித முன்னேற்றம் தான் ஒரு சமுதாயத்தையே முன்னேற்றும் முதல் படியை அடைய முடியும். இணைந்து இதயங்கள், தங்கள் குடும்பத்தைச் சார்ந்த உயர்ந்த இடத்தைப் பிடித்துத் தக்க வைத்துக் கொண்டவர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். அப்படிச் செயல்படும் அந்தக் குடும்பத்தின் பின்னணியில் ஒரு சமுதாயமே நல்ல வாழ்வாதாரம் பெற்று பயணிக்கும் போது அந்த தனிமனித முன்னேற்றமானது பல குடும்பங்களுக்கு ஒளிவிளக்காய் அமைகின்றது. எனவே தனி மனித முன்னேற்றமானது பல குடும்பங்களுக்கு ஒளி விளக்காய் அமைகின்றது. எனவே தனி மனித முன்னேற்றத்தின் முக்கிய பங்கு தன்னம்பிக்கை.

  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சேர்ந்து ஆக்கப் பூர்வமான சமுதாயத்தை வளர்க்கும். வளமான சிந்தனைகளை பெருக்கி தெளிவான முன்னேற்றம் காணும் சிந்தனை என்ற பெயரில் நம்மைச் சுற்றி சிலந்தி வலை பின்னி முடக்கும் அளவு நம் சிந்தனை இருக்கக் கூடாது பிறகு அந்த சிலந்தி வலையை சிதைப்பது கடினமான வேலையாகி விடும். அதே  போல் தயக்கம் என்ற ஒரு தடங்கல் குறுக்கிடும். அது ஒரு நோய். அதைத் கிட்ட நெருங்காமல் பார்த்துக் கொண்டாலே தன்னம்பிக்கை நம்மை நிமிர வைக்கும்.

  நாம் செய்யும் தொழில் எதுவானாலும் அதை புனிதமானது, புதுமையானது சவால் ஆனது என்று நினைவில் நிறுத்திக் கொண்டு தொழிலில் பயணப்பட்டு தன்னம்பிக்கை தளராமல் இருக்க மெருகேற்றிக் கொள்ள வேண்டும். மேலும் உடல் வலிமை தான் ஒரு தனிமனித முன்னேற்றத்தை தீர்மாணிக்கிறது.

  நாம் நாயாக, பூனையாக பறவைகளாக மீன்களாகவோ பிறக்கவில்லை. மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். கருவில் இருந்து கல்லறை வரை நாம் நமக்கென்று ஒரு இராஜாங்கம் இருப்பதாக நம்புகிவோம். அதை விதைப்போம், பண்படுத்தி பயிராக வளர்ப்போம். கண்ணுக்குக் கண்ணாக காப்பாற்றி காத்திருப்போம். முற்றிய கதிர் உன்(நம்) கண்முண்னே நாம் காணுவோம்.

  இந்த இதழை மேலும்

  இலக்கு என்ற கோட்டைக்கு ஏழு வாயில்கள்

  ஒவ்வொரு மனிதனும் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு,  அதை செயலாக்க   ஒரு இலக்கினைத் தேர்ந்தெடுத்து, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும், சிறுத்தையோ, புலியோ இரை தேடும் போது பத்து மான்கள் கண்ணிலே பட்டாலும் ஒன்றைத்தான் குறி வைக்கின்றது, குறி வைத்ததை மட்டுமே துரத்தி வீழ்த்துகின்றது, அதே போல பல வாய்ப்புக்கள் நம் கண் முன்னால் இருந்தாலும் கூட, நமக்கு ஏதுவான ஏதாவது ஒரு வாய்ப்பைத் தான் நாம் குறி வைக்க வேண்டும்.   ஒற்றை இலக்கை நோக்கித் தான் நாம்  முயற்சிக்க வேண்டும். ஒரே நேரத்திலே இரு குதிரைகள் மேல் பயணிக்க  கூடாது.

  உங்களுக்கு  எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்துவிட்டால் அதற்குரிய வழி தானாகவே வரும், நீங்கள் என்னவாக வேண்டுமென்ற  கனவும்  நனவாகும், பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை பிடிக்க முயற்சிப்பதில் பலனில்லை, அமர்ந்துள்ள  வண்ணத்துப் பூச்சியின் மீது வலை வீச வேண்டும். உங்கள் குறிக்கோள் தங்கச்   சுரங்கத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும், புலி வேட்டைக்குப் போய் எலி வேட்டையாடல் கூடாது.

  சிலர் நிறைய சிந்திப்பார்கள். அது பற்றி நிறைய பேசுவார்கள்,  புள்ளி விவரங்களை அடுக்குவார்கள், சாதக, பாதகங்களை அலசுவார்கள், அதில் ஆழமான அறிவும் இருக்கும், ஆனால்  செயல்படும்போது பின்வாங்கிவிடுவார்கள், சிலர்  அதிகமாக சிந்திக்கவும் மாட்டார்கள்,   பேசவும் மாட்டார்கள்,  ஒற்றைக் குறிக்கோளை மட்டுமே யோசிப்பார்கள், அதை அடைய தவம் இருப்பார்கள், வெற்றி பெறுவார்கள்.  இலக்கு எனும் கோட்டையை அடைய ஏழு வாயில்கள்  உள்ளன, ஒவ்வொரு வாயிலையும் திறக்க ஒரு சாவி உள்ளது.

  1.இலக்கு தெளிவானதாக ஒன்றை மட்டும் குறிப்பிடுவதாக, முழுமையானதாக இருக்க வேண்டும், இந்த சாவி முதல் வாயிலைத் திறக்கும்.

  இலக்கு பொதுவானதாக இருக்கக் கூடாது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்ற குறிக்கோள் எல்லாம் பொதுவானவை, இவை போன்று இல்லாமல் சிறந்த டாக்டராக வேண்டும், சிறந்த இன்ஜினியராக வேண்டும், சிறந்த பாடகராக வேண்டும், சிறந்த ஐ.ஏ.எஸ், சிறந்த ஐ.பி.எஸ் ஆக வேண்டும் போன்ற ஒன்றை  மட்டுமே குறிப்பிடுவதாக அது இருக்கவேண்டும்,

  2.இலக்கு  பலன் அளவீட்டு  நிபந்தனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், இந்த சாவி இரண்டாம் வாயிலைத் திறக்கும்.

  அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஒரு குறிக்கோள் அல்ல, அது ஒரு ஆசை, அது ஒரு கற்பனை, ஆசையும், கற்பனையும் குறிக்கோளாக அமையாது. ஆசைப்பட்ட அளவு பணத்தை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்  சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அது இலக்கு.

  3.இலக்கு கால அளவீட்டு நிபந்தனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சாவி மூன்றாம் வாயிலைத் திறக்கும்.

  உங்களது குறிக்கோளுக்கு ஒரு காலக் குறியீடு வேண்டும், 6 மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் அல்லது ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்று  கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கெடு வைத்துக் கொண்ட பின்பு அந்தக் கால கெடுவிற்குள் அந்தப் பணியை முடிக்க முயற்சித்தல் வேண்டும்.  அந்தக் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள்  முடியவில்லை என்றால் ஒரு மாற்றுக் காலக் கெடு நிர்ணயித்துக் கொள்ளலாம், அதை நோக்கி வெற்றி பெறும் வரை பயணிக்க வேண்டும்.

  4.இலக்கு ஒரு சவாலாக இருக்க வேண்டும், எப்போது சவால் உங்கள் கண்முன் வருகிறதோ அப்போது நான்காவது வாயில் திறக்கும்.

  ஒரு குறிக்கோள் சவாலை முன்னிறுத்துகிறது என்றால் ஐம்பது சதவிகிதம் வெற்றி உங்களுக்கு நிச்சயம். அந்த சவால் உங்கள் ஒட்டு மொத்தத் திறமையையும் வெளிக் கொண்டு வரும். தேவையான சாதூர்யத்தையும், சாமர்த்தியத்தையும்  அது கொடுக்கும், என்ன செய்ய ஆசைப்படுகீறீர்கள் என்ற கேள்வியும், என்ன செய்யப் போகீறீர்கள் என்ற கேள்வியும், எத்தனை காலம் தொடர்ந்து செய்யப் போகீறீர்கள் என்ற கேள்வியும் உங்களை  தூங்கவிடாது.

  5.அந்த இலக்கு உங்களுடைய குணங்களோடு ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். இந்த சாவி இலக்கு என்னும் கோட்டையின் ஐந்தாம் வாயிலைத் திறக்கும்.

  உங்கள் குறிக்கோள்,உங்கள் குணத்திற்கு,பழக்கத்திற்கு, பண்புகளுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்.  மாறுபட்ட குறிக்கோள்கள் உங்களுக்கு  ஒத்துவராது, உங்கள் பழக்கங்கள் உங்களது  இலக்குக்கு  தடையாக இருத்தல்  கூடாது,

  இந்த இதழை மேலும்

  ஆன்மீகம் ஒரு கலைக்கூடம்

  ஆன்மீகம் என்பது குறுக்கு வழியில் செல்வத்தையும்  சுகத்தையும் தேடுவதல்ல, மிருகத்தன்மையை ஆகற்றி, மனிதன் மனிதனாக வாழவும், ஆரோக்கியமாக வாழவும், தூய்மையான வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருப்பவைகளை உம்மால் வேறெங்கும் கற்க முடியாததைக் கற்கும் இடம்  தான் ஆன்மீகம் என்னும் கூடாரமாகும்

  தூயவனே..

  அடிமையாக இருக்கவும் நினைக்காதே

  ஆண்டவனாக இருக்கவும் நினைக்காதே

  அடிமையாகவும் ஆண்டவனாகவும் இருக்க நினைப்பது தவறு.

  அடிமைத்தனத்தையும் ஆண்டவத்தனத்தையும் அகற்று.

  இறைவனால் முடியாதது இளைஞனால் முடியும். அந்த அளவிற்கு வல்லமை படைத்தவன் நீ.

  சுகம் காண சுகாதாரமான இதயம் வேண்டும்.

  நாட்டையும் ஊரையும் பிறரையும் கெடுத்தவர்கள் கெடுக்க நினைத்தவர்கள் இறுதியில் கெட்டுத்தான் போயிருப்பார்கள். அவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமிருக்காது. இப்படி கெடுப்பதையே பிழைப்பாக வைத்துள்ள கெட்டிக்காரர்களுக்குத்தான் இறைவன் முதலில் கெடு வைக்கின்றான்.

  எது மகிழ்ச்சி என்று தெரியாத  கெட்டவன், கெடுத்து மகிழ்கிறான். எது எது மகிழ்ச்சி இது இது தான் மகிழ்ச்சியென்று தெரிந்தவன் கொடுத்து மகிழ்கிறான் கெடு கொடு இவையிரண்டிற்கு முள்ள வேறுபாடும் இது தான்.

  ஆநீதியாளர்களின் வெற்றியும் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்ததில்லை. நிலைத்ததாக வரலாற்றுச் சரித்திரமில்லை.

  தீய வழியல், தீய செயலில் வரும் சந்தோஷங்களெல்லாம் நிரந்தரமற்றவை.

  மனிதனை தன்னம்பிக்கை மிக்கவனாக செதுக்குவதையும் வடிவமைப்பதையும், மாற்றுவதையும் தான் நவீன யுகத்தின் ஆன்மீகம் செய்து  வருகின்றது.

  பணம், பதவி, புகழ் தேடு என்று சொல்வது லௌகீகம் பணம், பதவி, புகழ் மூன்றையும் முறையாகத் தேடு என்று சொல்வது தான் ஆன்மிகம். ஆனால் நிம்மதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த மூன்றில் மட்டும் இல்லையென்பது ஆன்மிகத்தின் ஆழத்திற்குச் சென்றவர்களுக்குத் தெரியும்.

  தற்காலிக அற்ப சுகத்திற்காக எதையும் இழப்பவன் இந்த சுகமெல்லாம் நிரந்தரமானதா? என்று ஒரு நிமிடம் தனக்குள் ஒரு வினா எழுப்பி எண்ணிப் பார்க்க வேண்டும்.

  சுயநலம் ஒன்றே மனிதத்ன்மையற்று மனிதன் மிருகமாக வாழ காரணமாக இருக்கின்றது.

  மனிதனுக்குள் மனித உணர்வுகளில் சுயநலம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் இந்த உலகம் மனித உறவுகளிலும் மனித நேயத்திலும் சிதைந்து பட்டுப்போகாமல் என்றும் பசுமையாகவே இருக்கும்.

  இந்த இதழை மேலும்

  நில்! கவனி !! புறப்படு !!! – 2

  எழு ! ஒளி வீசு ! (பாதை 1)

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

  “அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

  அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

  கல்வி பயிலும் காலத்தில் “மதிப்பெண்” முக்கியம் என்று எப்போதும் நினைக்கும் நீங்கள் “வாழ்க்கை” எனும் கல்விக்கூடத்தில் “என் மதிப்பும்” முக்கியம் என்று எண்ண வேண்டும்.

  அதாவது, உங்கள் மதிப்பை நீங்கள் உணரவேண்டும்.  அப்போது தான் உங்கள் எதிர்கால வாழ்க்கை அசைக்கவே முடியாத அஸ்திவாரமாக ஆகும்.

  உங்கள் எதிர்காலம் ஓங்கி, உயர்ந்து, சிறந்து விளங்க உதவியாக இருக்கும்.

  வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி சுலபமோ அதுபோல வாழ்க்கையையே  ஜெயிப்பதும் சுலபம் தான் என்று உணருங்கள்.  அது ஒன்றும் அத்தனை பெரிய கடினமான காரியம் இல்லை.

  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சில முக்கியமான  வாழ்வியல் இரகசியங்களை புரிந்துகொள்வது தான்.

  முயற்சியையும், பயிற்சியையும் நீங்கள் கைகொண்டால் – வெற்றி எளிது! மிக எளிது!

  வாழ்க்கை கல்வியிலும், வாழ்விலும் வெற்றி பெற நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் “விழித்தெழுதல்”.

  முதலில் விழித்தெழுங்கள்.  சோம்பலை தள்ளுங்கள்.

  உங்கள் சக மனிதர்களின், ஆசிரியர்களின், நண்பர்களின் மனதில் மதிப்புமிக்க ஒரு பிரஜையாக, சிறப்பான மனிதனாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டு.

  எப்போதும் உற்சாகமாக இருப்பேன் என்று உங்களை நீங்களே தினமும் ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

  ஏனென்றால், உற்சாகம் என்பது “தினக்குளியல்” போன்றது.   ஒரு முறை செய்தால் அதிக நேரம் தாங்காது.  தினமும் தேவைப்படும்.

  குளியல் எப்படி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகின்றதோ, அதேபோல் உற்சாகமாக இருத்தல் உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

  அது உங்கள் சிந்தனைத்திறனை, ஞாபகத்திறனை, மற்றவரோடு பழகும் திறனை, உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தும் திறனை அதிகப்படுத்தும்.

  காலம் முழுவதும் உற்சாகமாக இருக்க முதலில் நீங்கள் “துவங்க” வேண்டும்.  ஆம்.  First you should START.

  START

  பயிர்ச்சி முறை :

  S – SMILE தினமும் காலையில் கண் விழித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை “புன்னகைப்பது”. இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் நாளை நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்பது மனதளவில் உங்களுக்கு மிகப்பெரிய உற்சாக ஊற்றை ஊறச்செய்யும்.  அந்த புன்னகையை நாள் முழுக்க உங்களோடு பயணிக்க செய்யுங்கள்.  எப்போதும் புன்னகையுடன் இருங்கள்.  உங்கள் முகம் மலர்ந்த மலர் போல புத்துணர்வுடன் இருக்கட்டும்.  அது மற்றவர்களின் அன்பை உங்கள் மீது ஈர்க்கும்.  நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.

  T – THANKFUL மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நாளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.  நாள் முழுவதும் நன்றியுணர்வோடு இருங்கள்.  உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களுக்கு (அவை நல்லவையாக இருந்தாலும் சரி – அல்லவையாக இருந்தாலும் சரி), நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.  வாழ்வில் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் அனைத்துக்கும் நன்றி பாராட்டுங்கள்.

  பெற்றோர், கல்வி போதிக்கும் ஆசிரியர், படிக்கும் புத்தகங்கள், செய்து கொண்டிருக்கும் வேலை, அதை உங்களுக்கு அளித்த உங்கள் முதலாளி மட்டுமல்ல, இவை அனைத்துக்கும் மேலாக, உங்களை இயக்கும் கடவுள் – எல்லாவற்றுக்கும் ஆழ் மனதிலிருந்து நன்றி சொல்லுங்கள்.  இந்த தன்மை, பத்து நாட்களுக்குள் உங்களை ஒரு நன்றியுள்ள மானிடனாக மாற்றிடும் ஆற்றல் வாய்ந்தது.  உங்கள் இறுதி மூச்சு வரை உங்களை வாழ்வின் உயரத்தில் வைக்க – இந்த தன்மை மிகவும் பயனளிக்கும்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 64

  காணாமல் போன கவலைகள்

  “என் நண்பன்கூட என்னைப்பற்றி தவறாகப் பேசித்திரிகிறான். எனக்கு கவலையாக இருக்கிறது”.

  “எனது உறவுக்காரப் பெண் என்னைக் கிண்டல் செய்கிறாள். கண்ணீர் வருகிறது”.

  “நான் மிக அதிகமாக பாசமாகப் பழகியும் என்னைப்பார்த்து எங்கள் குடும்ப உறவினர்கள் கேலி செய்கிறார்கள். நான் அவ்வளவு மோசமானவளா?”.

  “எங்கள் ஊருக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறேன். என்னிடம் நேரில் புகழ்ந்து பேசுகிறார்கள். நான் இல்லாத நேரத்தில் என் மனம் புண்படும்படி திட்டுகிறார்கள். நன்றி கெட்ட உலகம் இது”.

  – இப்படி எத்தனையோ கவலைகளை நெஞ்சில் சுமந்த உள்ளங்கள் ஏராளம்.

  “மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?” என்று எண்ணியே வாழ்பவர்களில் பலர் அந்த எண்ணங்களினால் நிம்மதியை இழக்கிறார்கள். உற்சாகத்தோடு நாள்தோறும் விழித்தெழுபவர்கள்கூட பிறரது விமர்சனம்கண்டு விக்கித்தவிக்கிறார்கள். கண்ணீரில் விழுந்து கரைந்து போகிறார்கள்.

  வெற்றிப்படிக்கட்டுகளில் உற்சாகமாக முன்னேறுபவர்கள்கூட மற்றவர்கள் போடும் கூச்சலிலும், வீணான விமர்சனங்களிலும் சிக்கித் தவித்து சிதறுண்டு போகிறார்கள்.

  நல்லவர்களைக்கூட நயவஞ்சகர்களாக சித்தரிக்கும் உலகம் இது. இதனால், நம்மைப்பற்றி வருகின்ற நல்ல தகவல்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் விவேகமான செயலாகும்.

  அது ஒரு குருகுலம்.

  அங்கு பல மாணவர்கள் தங்கியிருந்தார்கள்.

  குருவிடமிருந்து பல்வேறு வித்தைகளைக் கற்றுக்கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் புதிய வித்தைகளைக் கற்றுக்கொள்ளும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அந்த சீடர்களில் ஒரு மாணவன் மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தான்.

  சில நாட்கள் அந்த மாணவனைக் கவனித்த குரு ஆச்சரியமடைந்தார்.

  “இந்தக் குருகுலத்தில் எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. அத்தனை வசதிகளையும் மாணவர்களுக்கு செய்து கொடுத்திருக்கிறேன். நாள்தோறும் புதுப்புது வித்தைகளையும் கற்றுக்கொடுக்கிறேன். தெரியாத சந்தேகங்களுக்கு விளக்கமும் கொடுத்து வருகிறேன். பிறகு ஏன் இந்த மாணவன் மட்டும் சோகத்தோடு காணப்படுகிறான்?” – என்று சிந்தித்தார் குரு.

  ஒருநாள் அந்த மாணவனை மட்டும் தனியாக அழைத்தார்.

  கவலை தோய்ந்த முகத்தோடு குருவிடம் வந்தான் மாணவன்.

  “நீ ஏன் இவ்வளவு சோகத்தோடு இருக்கிறாய்?. உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார் குரு.

  “குருவே… எனக்கு நிம்மதியில்லை. எல்லோரும் என்னை ஏளனமாகப் பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள். எனக்கு எரிச்சலாக வருகிறது. கேலி செய்யாதீர்கள் என்று சொன்னாலும் திரும்பத்திரும்ப சுற்றிவந்து கிண்டலடிக்கிறார்கள். எனக்கு அப்போது கோபம் அதிகமாக வருகிறது. திருப்பி அடித்துவிடலாமா? என்றுகூட நினைக்கிறேன். ஆனால், குருவே உங்களை நினைக்கும்போது எனது மனம் அமைதியாகிறது. நான் ஏதாவது ஒரு சூழலில் கோபம் அதிகமாகி எல்லைமீறி அவர்களைத் தாக்கிவிடுவேன் என்று பயமாகவும் இருக்கிறது. அதனால்தான் நான் தினமும் மனதுக்குள் அழுது கொண்டிருக்கிறேன்” – என்று கண்ணீர் வடித்தான் மாணவன்.

  குரு அமைதியாக சிரித்தார்.

  “நீ சொல்வது ஒரு பிரச்சினையே அல்ல. உனது கவலையைத் தீர்க்கும் மருந்தை நான் உனக்குத் தருகிறேன். நான் சொல்வதை மட்டும் நீ செய். நமது ஊரின் வடக்குபுறத்தில் மிகப்பெரிய ஆலமரம் இருக்கிறதல்லவா. அந்த ஆலமரத்தின் அருகே இருக்கும் கிணற்றில்போய் இன்று மாலைநேரத்தில் ஒரு வாளி நிறைய தண்ணீர் கொண்டுவா. ஆனால், நீ தண்ணீரை கிணற்றிலிருந்து இரைப்பதற்குமுன்பு அந்த பெரிய கிணற்றின் சுற்றுச்சுவரில் ஏறி 25 முறை சுற்றி வர வேண்டும். அதன்பின்னர்தான் தண்ணீர் இரைக்க வேண்டும். இப்படி செய்தால் உனது பிரச்சினையை தீர்த்துவிடலாம்” – என்றார் குரு.

  இந்த இதழை மேலும்