உயர்ந்த குணங்களின் ஒட்டு மொத்த சாரமே நேர்மை. உண்மை பேசுவது வேறு நேர்மையாக இருப்பது வேறு.
உண்மை பேசுவது முதல்படி, உண்மையாக இருப்பது இரண்டாம்படி, உண்மையாக நடப்பது மூன்றாம்படி. உண்மையாக வாழ்வது நான்காம்படி, நேர்மையாக இருப்பது உச்சப்படி.
உண்மை என்பது பேசுவதைக் குறிக்கும், நேர்மை என்பது செயலைக் குறிக்கும். தலை சிறந்த பண்புகளின் ஒட்டு மொத்தக் கலவைதான் நேர்மை.
நல்ல பண்புகள், உயர்ந்த எண்ணங்கள்,மேன்மையான நடத்தைகள், மாசில்லாத ஒழுக்கம், மனத்தூய்மை,ஈடில்லாத குணங்கள், நேர்மறையான எண்ணங்கள், நேர்த்தியான வாழ்வு, இவைகள் எல்லாம் கறைபடியாத, களங்கம் இல்லாத நேர்மையின் வடிவத்திற்குள் அடக்கம்.
நேர்மை ஒரு மனிதனை புனிதப்படுத்துகிறது, அவன் வாழ்வை மேம்படுத்துகிறது, உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. வாக்கிலும் செயலிலும் இனிமையைத் தருகிறது. சுகமான, இதமான மனதைத் தருகிறது, ஆரோக்கியத்தை வளர்க்கிறது. பதட்டத்தையும், கோபத்தையும் குறைக்கிறது. எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் அறவே தடுக்கிறது. மன அமைதியையும், ஞானத்தையும் அதிகப்படுத்துகிறது. குறையேதும் இல்லாத வாழ்வைத் தருகிறது, புகழை மேம்படுத்துகிறது, நேர்மை ஒருவரை குன்றின் மேல் விளக்காய் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்களின் மத்தியிலே மரியாதையைக் கூட்டுகிறது. அந்தஸ்தையும், கௌரவத்தையும் அதிகப்படுத்துகிறது.
மலர்களைச் சுற்றி பூ வாசம் வீசும் — அது போல
நேர்மையை சுற்றி புகழ் வாசம் வீசும்
வில்லுக்கு கட்டுப்பட வேண்டிய அஸ்திரங்கள் எல்லாம்
நேர்மையின் சொல்லுக்கு கட்டுப்படும்,
ஒருவருடைய நேர்மையினால், ஒழுக்கத்தினால், நடத்தையினால்
செயல்பாடுகளால், பணிகளால், திறமையினால்,
அன்பினால், கருணையினால் புகழ் கிடைக்கிறது.
நாமாக தேடாமல் தானாகக் கிடைப்பது புகழ்
குழந்தைப் பிறக்கும் போது புகழ்ளோடு பிறப்பதில்லை
வளர வளர அதன் நேர்மையான குணங்களால்தான்
புகழ் தேடி வருகிறது,
“ வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும் ”
என்ற பழம் பாடலுக்கேற்ப தனிமனித நேர்மையும், ஒழுக்கமும் சமுதாயத்தை உயர்த்துகிறது, சமுதாயம் உயரும் போது நாடும் உயருகிறது.
இந்த கால கட்டத்தில் நேர்மையாக இருப்பவர்களைப் பார்ப்பதற்கு அரிதாக இருக்கிறது. அத்தி பூத்தாற் போல அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறார்கள். ஒழுக்கத்திலும், நேர்மையிலும் குறைவுபட்ட சமுதாயம் அவர்களைக் கவனிப்பது மில்லை, கண்டு கொள்வதும் இல்லை, நேர்மையாளர்கள் ஏளனமாகப் பார்க்கப் படுகிறார்கள். ‘ பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்ற பட்டம் அவர்களுக்கு சூட்டப்படுகிறது. நேர்மையாக இருப்பவர்கள் கடைசி படியிலே நிற்கிறார்கள், நேர்மையின் நிழல் கூட படியாதவர்கள் உயர்ந்த பீடத்திலே அமர்ந்து கோலோச்சுகிறார்கள், நேர்மை கை கட்டி, வாய் பொத்தி நிற்கிறது.[hide]
நாடு மாற வேண்டுமானால் மக்கள் மாற வேண்டும், மக்களின் மனநிலை மாறவேண்டும், நேர்மை உள்ளவர்களுக்கு உரிய கௌரவமும், மதிப்பும் தரப்படல் வேண்டும்,நேர்மையின் மதிப்புத் தெரியத் தெரியத்தான் இளைய சமுதாயம் நேர்மையைக் கடைப்பிடிக்கும், நேர்மையை நோக்கிப் பயணிக்கும்,
நேர்மையான செயலின் மகத்துவத்தையுளம்,நேர்மையற்ற செயலின் பாதிப்புக்களையும் இளைய சமுதாயம்முழுமையாகவும், மனப்பூர்வமாகவும் உணர வேண்டும். நேர்மை ஒன்றே உயர்வுக்கும் வழி என்றும்,உன்னத வாழ்வுக்குரிய நெறி என்றும்,இதுதான் தாரக மந்திரம் என்றும் இளைய சமுதாயத்திற்கு போதிக்க படல் வேண்டும்.
நேர்மையற்ற வாழ்வு, முறையற்ற செல்வம், களங்கப்படுத்தும் தீய பழக்கங்கள் மனிதனை கரை சேர்க்காது என்ற பாடம் சொல்லப்பட வேண்டும்.
உன்னத புருசர்களின் வாழ்க்கைப் பாடங்கள் இளைய சமுதாயத்திற்கு அனுபவ பாடங்களாக அமைய வேண்டும்.
நேர்மையான முயற்சியால் கிடைக்கும் மகிழ்ச்சியின் உச்சத்தை அளவிடவே முடியாது, இந்த மகிழ்ச்சிக்கு இணையாக எதுவும் ஈடாகாது, மிகுந்த அழகைத் தருவது அன்பு என்பதும், மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது நேர்மை என்பதும் யதார்த்தமான உண்மையாகும்.
சொல்லாலும், செயலாலும், எண்ணங்களாலும் எதையும் மனச்சாட்சிக்கு எதிராக செய்யாமல் இருப்பதே நேர்மையின் இலக்கணம்,
சமையலில் குறையென்றால் ஒரு நாள் இழப்பு. அறுவடையில் குறையென்றால் ஒரு ஆண்டு இழப்பு. நேர்மையில் குறை என்றால் வாழ்நாள்முழுவதும் இழப்பு, அதை இழந்தால் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்தற்கு ஒப்பாகும்.
ஒரு மரம் இலைகளின் எண்ணிக்கையால் மதிப்பிடப்படுவதில்லை, அதன் சுவையான கனிகளால்தான் மதிப்பிடப்படுகிறது என்பதைப் போல ஒரு மனிதன் அவனுடைய செல்வத்தால் மதிப்பிடப் படுவதில்லை, அவனுடைய நேர்மையான பணிகளால்தான் மதிப்பிடப்படுகிறார்.
பேச்சிலே இனிமை, சொற்களிலே தெளிவு, செயலில் உறுதி, வாழ்க்கையில் நேர்மை, தளராத தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒய்வில்லா உழைப்பு, எதையும் எதிர்கொள்ளும்; மனத் துணிவு ஆகிய இந்த எட்டும் உள்ளவர்கள் எதையும் சாதிக்கலாம். எப்போதும், என்றும்,எங்கும் வெற்றியை தொட்டு தொட்டு அனுபவிக்கலாம்,
இந்த நேர்மைக்கு எடுத்துக்காட்டாக எனது இனிய நண்பர் உடுமலைப்பேட்டை, அட்வகேட் சி.ஜெயபாலன் பி.ஏ.பி.எல் அவர்களைக் குறிப்பிட வேண்டும். தன்னுடைய வழக்கறிஞர் பணியில். தொழில் தர்மத்தையும், நேர்மையைளம் இரண்டு கண்களாகக் கொண்டவர். கண்ணை இமைகாப்பது போல நேர்மையைப் பாதுகாக்கும் பெருந்தகையாளர், கடமையே பெரிதென கொண்ட பண்பாளர், தன்னை நம்பி வந்தவர்களுக்கு தன்னையே ஈந்து காக்கும் குணம் உடையவர். சொல்லிலும் நேர்மை, செயலிலும் நேர்மை, தொழிலிலும் நேர்மை இவரை உச்சத்தில் வைத்திருக்கிறது.
அமைதியான போக்கு, அளந்து பேசுகிற பழக்கம், மற்றவர்களை மதிக்கும் வழக்கம், எந்த நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ளாத சின்னச் சின்ன செல்லமான பிடிவாதம், தவறாத வாக்கு, தளாத முயற்சி, யாருக்கும் அடிய பணியாத தைரியம், தவறைத் தட்டிக் கேட்கிற துணிவு, அப்பழுக்கு இல்லாத மனது, அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத குணம், நறுக்குத் தெரித்ததாற் போல் பேச்சு இவைகளெல்லாம் இவருக்கு நேர்மை தந்த பரிசுகள்.
தகுதியான சரியான இடத்தில் உரசப்படும் போதுதான்
தீக்குச்சி நெருப்பை உமிழுகிறது
சூரியனின் சுடரொளிபடும் போது தான்
மௌனமாக இருக்கும் தாமரையின் மொட்டு மலர்கிறது
இவரைப் போல சரியான மனிதர்களைச் சந்திக்கும் போதுதான்
மனது பூப்போல மலருகிறது
ஆறு தனக்காக ஓடுவதில்லை
பழம் தனக்காக பழுப்பதில்லை – என்பதைப் போல
இவர் தனக்காக வலிமையான வாதங்களை வைப்பதில்லை.
அடுத்தவர்களுக்காக திறமையாக வாதிடும் பழக்கம் இவருக்கு அத்துப்படி,
மற்றவர்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து கொள்பவர்கள்; தியாகச் சுடர்கள்,
“ ஒரு செயலை வித்தியாசமாக செய்து முடிப்பது சிறப்பு அல்ல
அதைச் சிறப்பாக செய்து முடிப்பதே வித்தியாசமானது ” என்ற கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது ஒன்றாகும்.
அன்பான மனைவி, அழகான மகள், அருமையான குணம் உள்ள மருமகன், எல்லோரும் பாராட்டும்படியான மகன், இவரின் நேர்மைக்கு இறைவன் தந்த பரிசுகள்.
உங்கள் முன் கதவு, பின் கதவு என இரண்டையும் திறந்து வையுங்கள்,
உங்கள் எண்ணங்கள் அதன் வழியாக வரட்டும் போகட்டும் அனுமதியுங்கள். ஆனால் அவற்றையெல்லாம் அமர வைத்து தேநீர் கொடுக்காதீர்கள்.
நேர்மையான எண்ணங்களை மட்டும் விருந்தோம்புங்கள்,
வாழ்வு நேர்மையின் ஓளியில் பிரகாசிக்கட்டும்,
பொய்மையின் அடித்தளத்தில் உண்டாகும் உறவுகள்
மண்ணால்கட்டப்பட்டமாளிகைக்குசமமாகும்
என்ற உண்மையை உணருங்கள்,
மணல் கோட்டை கட்டுவதை அறவே தவிர்த்திடுங்கள்,
அது நிலையானது அல்ல ,
நேர்மையின் அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகைகள்
காலம் காலமாக நிற்கும் – அவைகள்
வரலாற்றில் தன் பெயரைப் பதிவு செய்யும்,
நேர்மை தவமென அமையுமானால்
வரங்கள் எதிர்பாராததாய் இருக்கும்
செயல்கள் செம்மையாக அமையுமானால்
முடிவுகள் முத்தாய்ப்பாய் இருக்கும்
நேர்மையான எண்ணம்
நேர்மையான பார்வை
நேர்மையான இலக்கு
நேர்மையான பேச்சு
நேர்மையான செயல்
நேர்மையான நடத்தை
நேர்மையான மனநிலை
நேர்மையான வாழ்க்கைமுறை
ஆகிய எட்டுவழி பாதையே
வாழ்வின் உச்சத்தை கிட்ட நின்று தொட்டு மகிழ நம்மை
கூட்டிச் செல்லும் நேர்வழிப்பாதை
என்பதை பிரகடனப்படுத்துங்கள்
வேள்விகளை தொடருங்கள்
வெற்றிகளை சுவையுங்கள்,[/hide]
இந்த இதழை மேலும்