Home » Articles (Page 2)

உலக அதியசயம் நீயே!

உலக அதிசயங்களை கேட்டால் ஏழு என்ற பதில் தான் இன்றுவரை. வைரமுத்துவிற்கு மட்டும் அது எட்டு ஆனது சினிமாவிற்காக. ஏழு அதிசயங்கள் என்பதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஏழு அதிசயங்களே சந்தேகமானது எனக்கு.  என்ன தெளிவாக குழப்புவது போல் உள்ளதா. இல்லை தெளிவடையத்தான் இது. எங்கே அந்த ஏழு அதிசயங்களை பட்டியலிடுங்கள்…

உலக அதிசயம் என்று ஏன் இந்த இந்திய தாஜ்மகால், சீனபெருஞ்சுவர் இவற்றை குறிப்பிடுகிறீர்கள்? அவை போல் மற்றொன்று இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், பழசாகிப் போன தாஜ்மகால், பாசி படர்ந்து இடிந்து போன சுவர், துறுபிடித்த டவர் இவைகளை போல் நம் இன்றைய வல்லுநர்களால் இதை போல் அல்லது இதை விட அதிசயமாய் இன்னொன்றையும் உருவாக்க முடியும் அல்லவா? இன்றைய விஞ்ஞான உலகில் இது சாத்தியம்.

ஆனால் என்னைப் போல் – நம்மை போல் ஒருவரை யாராவது உருவாக்க இயலுமா?ஒருவரைப் போல் எழுவர் இருப்பர் என்ற திண்ணை பேச்சுகாரர்களிடம் கூட கேளுங்கள். சாத்தியம் இல்லை.  அறிவியல் மற்றும் மருத்துவ உலகிலும் இது போன்ற குளோனிங் சோதனைகள் நடந்த போதிலும் இரு உயிரினங்களின் மனம், செயல் வெவ்வேறாகிப் போனது.

இது போதாதா நான் தான் – நாம் தான் உலக அதிசயம் என்பதற்கு. இன்னும் நம்ப முடியாதவர்களுக்காக – இயற்கை (அ) இறைவன் தந்த சாட்சிகளைப் பாரீர்

ஏழு அதிசயங்கள் வௌல்யில் இல்லை – நம் உடலில் தான் உள்ளன உலகில் வேறு எவரிடமும் இல்லாத நமக்கு மட்டுமே உள்ள அந்த ஏழு அதிசயங்கள்.

இந்த இதழை மேலும்

தடுப்பணை

சிலவேளை இம்போஸிஸன் போல பத்துமுறை அக்காவை நான் நேசிக்கிறேன், தங்கையையே எப்போதும் யோசிக்கிறேன், என்கிறமாதிரியும் எழுத வைத்துப் பார்த்தார்.

அதற்கு முன்பு…

அக்காவை நான் அடிக்க மாட்டேன்

தங்கையை டீ.வி ரிமோட் கேட்டு கிள்ள மாட்டேன்

என்றெல்லாம்… நெகடிவ் ஆக எழுதி தடுக்க பார்த்த பிறகு… அது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போலானது…

அதனால் அப்படி எதிர்மறையாக என்னென்னவெல்லாம் கூடாது, தவறு என்று பட்டியல் போடுவதற்கு பதிலாக, எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நடைமுறை பட்டியல் தயாரிக்கத் தொடங்கினார்கள் கந்தவேல் அன்ட் கோ…  அதையும் தாண்டி அக்கா தங்கைகள் சச்சரவு வரும்பொழுதுதான் தடுப்பதற்காக ஒரு தண்டனை போல அடி கொடுக்க முயற்சி செய்தார் கந்தன்.

கந்தன் கருணை மேலோங்கியது.

வேல் இது தவறு… நீ தங்கையை அடித்திருக்க கூடாது.  அதற்கு தண்டணையாக ஒரு அடி நாளைக்கு காலை அந்த பய ரூமில் நாம் இருவரும் உள்ளே தனியாக போய்… உனக்கு அடிகொடுத்த பிறகு வெளியே வருவோம்.  உள்ளே போகுபொழுதும் வெளியே வரும்பொழுதும் புன்னகையோடுதான் வர வேண்டும்.  அப்படி வரும்பொழுது அடிவாங்கினோம் என்ற குற்ற உணர்வு வராது.  என்று கந்தவேல் கூறுவார்.  ஏனென்றால் அவர் சிறுவனாக இருந்த பொழுது… கந்தவேலுடைய அப்பா… நாலுபேர் பார்க்கும் பொழுது… நடு வாசலில் வைத்து… கைக்குக் கிடைத்த குச்சியால்… கண் மண் தெரியாமல் ஓடவிட்டு… துரத்தி அடித்தது.  உண்டு.  இதில் கண்மண் தெரியாமல் ஓடியது கந்தவேல் மட்டும் தான். அவருடைய தந்தைக்கு கண் தெளிவாக தெரிந்திருந்தது என்பதை கந்த வேல் வாங்கிய அடி சொல்ல கேட்டிருக்கின்றார். சில தவறுகள்

அடித்தால் திருத்தப்படும்…அழுத்தந் திருத்தமாக…என்பது கந்தவேலின் அப்பாவுடைய நம்பிக்கை அது நமது கட்டுரை வழங்கும் நீதி அல்ல.  ஒரு செய்தி மட்டுமே. அது நடந்தது 1980 களில்… ஆனால் 2010 களில் காலம் மருவி விட்டது…சில வேளைகளில் கந்தனும்… வேல்விழியும் வீட்டின் தனியறைக்குள்… தண்டனை அறை… என்றே சொல்லலாம். பயங்கரமாக இருக்கிறது… ஏதோ… “இன்ட்டரோகேஷன் செல்”  மாதிரி…தவறு நடக்காமல்… தடுக்கிற…தடுப்பணை கட்டப்படுகிற…  ஆஹா… கட்டுரை தலைப்பு பொருந்தி வந்துவிட்டது ‘தடுப்பணை’ கட்டுகிற அறை என்று கூட சொல்லிவிடலாம். அதற்குள் சில வேளைகளில் நாடகம் நடக்கும்…அப்பா… அடிக்கிற மாதிரி நடிப்பார்…குழந்தை அழுகிற மாதிரி நடிப்பாள்… கொஞ்சம் நாடகம் நடக்கும்…அதன் பின்னர்…கதவை திறந்து வெளியே வரும்பொழுது வாசல் பக்கத்திலேயே விழாமலர் காத்திருப்பாள்…சில வேளைகளில் காதை கதவுமேல் படியவைத்து, “துப்பறியும் புலி”, வேலையும் பார்ப்பது உண்டு.

விழாமலர்… என்கிற பெயர் ஆண்டு விழா புத்தகங்களுக்கு பொருந்தும். அது இரண்டாம் பெண்ணுக்கு எப்படி பொருந்தும்? என்று பார்க்கலாம். வாடா மல்லி போல இவள் என்றும் வாடி விழாத மலர் என்று கொள்ளலாம். கந்தவேல் சிலவேளை படக்கென்று கதவை திறந்து வெளியே ஒட்டு கேட்டும் விழாமலரை சரிந்து உள்ளே விழ செய்வதும் உண்டு. என்றைக்கு நிஜமாய் அடிவிழும் என கந்தனுக்கே வெளிச்சம்…

இந்த திருத்த நடவடிக்கைகள் சிறிது நாள் பயன்பட்டன.  அதுக்கப்புறம் வேல்விழியும் விழாமலரும் அதையும் தாண்டிவிட்டனர்… வளர்ந்தும் விட்டனர்.

அடிவாங்கி அழுதபின் நார்மல் நிலைக்கு வர கால தாமதமானது.  அதற்காக…  எம்பி குதித்தல்… ஒன் டூ த்ரி… எக்ஸர் சைஸ் செய்தல் குனிந்து எழுதல்… போன்ற பிஸியோதெரபி… பிரயோகம் செய்யப்பட்டது… அவ்வப்போது பலன்கொடுத்தது.  கந்தவேல்… இந்த முறை கேபிள் வயர்களை… “கேஸ்ட்ரா க்னிமியஸ்”  என்னும் பின் முழங்கால் சதையில் மட்டும் அடிக்க கற்றுக் கொண்டிருந்தார்.  இன்முகம்  மாறாமல்… கோபம்… கொள்ளாமல் ‘தடுப்பணை’ (தண்டனை – அல்ல – முதலில் இந்த தலைப்பு கொடுத்து பின்னர் மாற்றப்பட்டது) கட்டப்பட்டது.  கோபம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது ஃபாலோ பண்ணப்பட்டது.  தவறை தடுப்பணை மூலம் திருத்துவதில் கோபம் என்கின்ற மூலக்கூறுக்கு வேலையே இல்லையே… சிலவேளைகளில் சில பெற்றோர்கள்… குழந்தைகளை நல்வழிப்படுத்த முயற்சிக்கும்பொழுது…சினம் மேலிட…சிந்தனையை தவறவிட்டு விடுகின்றார்கள்.  கந்தவேலுடைய அப்பா அப்படித்தான் ஒருமுறை ஒரு திடுக்கிட வைக்கும் கதையை சொன்னார்…கந்தவேல் பிறப்பதற்கு முன்பு… அவருடைய மாமா…அதாவது அம்மாவின் தம்பி கதிர்வேல் என்று வைத்துக்கொள்வோம் அவர் கந்தவேல் குடும்பத்தோடு இருந்திருக்கின்றார்.  ஏதோ ஒருநாள், கோபத்தில் சின்னப் பையனாக இருந்த கதிர் வேலை அறைந்திருக்கிறார்… ஓங்கி… வள்ளுவர் கூறியது போல வேகமாக ஓங்கி மெதுவாக இறக்க மறந்துவிட்டார் போல… கதிர் வேலின்… காது… ங்ங்ஙொய் என்று கொஞ்ச நாள் கேட்காமல் போய்விட்டதாம்.  அதன் பிறகு அவர் மாமா – கதிர்வேல், தனது அக்கா வீட்டிலிருந்து பாதுகாப்பாக கிளம்பிவிட்டது வரலாறு… அதுமாதிரி அடித்துவிடுதல் அபாயகரமானது… தவிர்க்க வேண்டியது… இதையெல்லாம் யோசனை செய்த கந்தவேலு தடுப்பணை கட்டும் அறைக்குள் போனாலே… வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல சிரிக்க ஆரம்பித்து விடுவார்… அவர் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சரியான டைமிங் பஞ்ச்சை எப்போது சொன்னவர்?  என்றால் நம்மால் நம்பவே முடியாது?

எப்போது

விழாமலர் – பிறக்க பிரசவ வேதனையோடு அற்புதன்ல்லி லேபர் வார்டுக்குள் வலிதாங்க முடியாத கண்ணீரோடு நகரும் பொழுது… தள்ளும் நகரும் படுக்கையில் கூட கரங்களை ஆறுதலாக கைகளை பிடித்துக்கொண்டு நடந்து வந்த கந்தவேலு… டாக்டர்கள்…போதும் வெளியே இருங்க என்று சொல்லும் பொழுது… அற்புத மல்லியிடம்…சிரித்துக் கொண்டே பெற்றுக்கொள் என கூறி… நன்றாக வசவு வாங்கியது வரலாறு…அது…அவ்வப்போது…ஞாபகப்படுத்தப்படுவது…வலிக்கும் சூழ்நிலைகளை யெல்லாம்… வசந்தமாக்கும்.  எழுத்தாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு. நாகூர் ரூமி அவர்கள் வலிகளை பொறுத்துக் கொள்வதில் பிரசவ வலியையும் தாங்க முடியும், என்று சொல்லியிருப்பார்…

இந்த இதழை மேலும்

மாமரத்தில் கொய்யாப்பழம்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 788

நண்பனுடைய துன்பத்தை அப்பொழுதே சென்று துடைப்பதுதான் உயர்ந்த நண்பனின் இயல்பு என்றார் திரவள்ளுவர்.

இம்மாதிரியான நண்பர்கள் இன்று அரிது. அவர் உதவ நினைத்தாலும் அவர் குடும்ப சூழ்நிலை அனுமதிக்குமா என்பது தெரியாது.

நட்பின் ஆழத்தை, உண்மையைத் தெரிந்து கொள்ள, அவசரம் என்று நண்பர்களிடம் சொல்லிப்பாருங்கள். உங்கள் நண்பர்களுள் எத்தனைபேர் உங்களுக்கு உதவத்தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

இன்று வாழ்க்கை என்பது அவசரமாக பரபரப்பாகச் செல்வதாய் பொதுவாகவே பேசப்படுகிறது. எதைப்பிடிக்கத்தான் ஓடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

மக்கள்தொகைப் பெருக்கம், வாகன உபயோக அதிகரிப்பு, தகவல் தொடர்பு சாதனங்களின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஆகியன தான் காரணம்.

ஓய்வில்லாமல் உழைக்கும் உடல் உள் உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்க வாரம் ஒருநாள் ஒருவேளை உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் மனதுக்கு, ஒரு சில மணிநேரம் மவுனமாக இருக்கிறேன் என்ற எண்ணத்துடன் மவுனமாக இருப்பதே மருந்தாகும்.

இவையிரண்டும் மனித வாழ்க்கையை அவசரம், பரபரப்பில் இருந்து திருப்பிவிடும் அற்புத செயல்களாகும். உலகிலேயே மிக வேகமானது நம் மனம்தான். மனம் பயணிக்குமளவு ஒளிக்கதிர்கள் கூட பயணிக்காது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால், அரிதான மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டுள்ள நாம், அவசரகதியில் பயணித்து விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முடியும்.

பரபரப்பான சூழலிலிருந்து விலகி, சப்தம் குறைவான ஓரிடத்தில் அமைதியாகப் படுத்து அந்தச் சூழலை ரசிக்கும் மனநிலையை எளிமையாக உருவாக்கிக் கொள்ளலாம்.

நம் நாட்டில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழிகேட்டு அலறுவதை சாலைகளில் அவ்வப்போது பார்க்கிறோம்.

ஆனால், வெனிநாடுகளில் ஆம்புலன்ஸ் வாகன ஒலி கேட்ட உடனே மற்ற வாகனங்கள் சாலையின் ஓரத்துக்குச் சென்று வழிவிடுவதைப் பார்த்தேன்.

அங்கு பெரிய நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் மிகத்துல்லியமாகத் தானியங்கி கேமராக்களால் படமெடுக்கப்பட்டு, அபராத நோட்டீசு வருவதை நண்பர்கள் மூலம் அறிகிறேன்.

ஆனால், நம் நாட்டில் எல்லா ஊர்களிலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பயணிப்போருக்கு முன்னுதாரணமாய் திகழ்பவர்கள் அந்த விதிகளைக் கொண்டு வந்தவர்களும் நடைமுறை படுத்துபவர்களும் தான்.

இந்த இதழை மேலும்

நில்! கவனி !! புறப்படு !!! – 5

செய்வன திருந்தச்செய் ! (பாதை 4)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள் – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

செய்வன திருந்தச்செய் !

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என கேட்கும் சமூகம் இது.

“ஒன்றே செய் ! நன்றே செய் !! அதையும் இன்றே செய் !!! – என்பது பல சாதனை மனிதர்கள் நமக்கு அளித்துள்ள அனுபவ சத்தியம்.

“செய் அல்லது செத்து மடி !” – என்பதும் வலிமை நிறைந்த வார்த்தைகளே !

ஆங்கிலத்தில் சொல்வதானால் – ACTION IS BETTER THAN WORDS –  என்ற வரிகளே பல வெற்றியாளர்களின் ஆதார வழி.

“A STICH IN TIME SAVES NINE” – என்று ஒரு பழமொழி உண்டு.  சரியான தருணத்தில் செய்யாத எதுவும் சிறப்பாக பரிணமிக்காது – என்பதே உண்மை.

சரியான தருணத்தில் செய்வது எவ்வளவு முக்கியமோ – அதை சரியாக செய்வது அதைவிட முக்கியம்.  இதைத்தான் முன்னோர்கள் நம்மிடம் “செய்வன திருந்தச்செய்” என்றார்கள்.

தேர்வு தொடக்கி தேர்தல் வரை – சரியாக கையாளாமல் போனால், கஷ்டமும் கவலையுமே கடைசியில் மிச்சம் என்று காலமும் புலம்பும் நிலைக்கு வாழ்க்கை வந்து விடக்கூடாது.

சரியாக கையாளப்படாத நட்பு – வளராது.  சரியாக கையாளப்படாத கணவன் மனைவி உறவு முறை சோபிக்காது.  அலுவலக நடைமுறைகள், அக்கம் பக்கத்து உறவு முறை இப்படி நீண்ட ஒரு பட்டியல் ஒவ்வொருவரிடம் உண்டு.  கையாளுதல் என்பதன் பொருள் இடத்துக்கு இடம் மாறும்.  சரியாக செயல்படுதல் என்பதே சரி.

ஆக, சரியாக செயல்படுதல் என்பதைத்தான் “செய்வன திருந்தச்செய்” என்றார்கள்.

“திருந்தச்செய்யாத” சிகிச்சை – மரணத்தை சீக்கிரம் நெருங்க வைக்கும்.

“திருந்தச்செய்யாத” வாகன பராமரிப்பு – விபத்தின் தாக்கத்தை அதிகரிக்கும்.

“திருந்தச்செய்யாத” உணவு முறை – உடல் உபாதைகளை உருவாக்கும்.

நெருப்பிலும் வெறுப்பிலும் மிச்சம் வைக்கக்கூடாது.  முற்றிலுமாக அணைத்துவிட வேண்டும்.  திருந்தச்செய்ய வில்லை என்றால் அதன் வெப்பம் நம்மை உள்ளும் புறமும் கொல்லும்.  அதாவது, நெருப்பு மனிதனை வாட வைக்கும், வெறுப்பு மனதை வாட வைக்கும்.

எனவே, எதையும் திருந்தச்செய்ய வேண்டியது உங்கள் கடமை !  இதை புரிந்து கொள்ளத் தவறும் சக மனிதர்களை “திருந்தச்செய்ய வேண்டியது” – எனது கடமை.  ஏனென்றால், சரியாக செய்வதே சாலச்சிறந்தது.  அது உங்களை வெற்றியின் வீட்டுக்கு அழைத்து செல்லும்.  அந்த வழி முழுவதும் வசந்தமாகவே இருக்கும்.

எதையும் சரியாகச்செய்வது என்பது சராசரி மனிதர்களிடம் இருந்து உங்களை தனித்தன்மையுடன் உயர்த்திக்காட்டுவது.  அந்த உயர்வுக்கு தனி மன நிலை வேண்டும்.  பண்பட்ட மனம் வேண்டும்.  பக்குவப்பட்ட பார்வை வேண்டும்.  செய்யும் செயல்களை சீர்தூக்கி பார்க்கும் சிந்தனை வேண்டும். புலால் உண்ண மாட்டேன் என்று மகாத்மா சொன்னது போல் ஒரு உறுதி வேண்டும்.  எத்தனை துன்பம் வந்தாலும் பொய்யே பேச மாட்டேன் என்று சொன்ன அரிச்சந்திர மகராஜனை போன்ற மன வைராக்கியம் வேண்டும்.

இந்த தன்மைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் இடம் எதுவென்றால் – நீங்கள் செய்வன திருந்தச் செய்தாகிவிட்டது.  விமர்சகனையும், அவன் விமர்சனத்தையும் மீறி உங்களுக்குள் உருவாகும் ஒரு நிறைவு – மகிழ்ச்சி, நிச்சயமாக மதிப்பு மிக்கதே.  ஆகவே, விமர்சனங்களை விட்டுத்தள்ளுங்கள்.  “செய்வன திருந்தச்செய்” என்ற வாசகம் கண்கள் மூலமாக, செவிகள் மூலமாக உங்களுக்குள் ஊடுருவி – ஆழ்நெஞ்சில் ஆணியாக பதியட்டும்.

உங்கள் சின்னச்சின்ன செயல்களுக்குள்ளும் ஒரு Perfection இருக்கட்டும்.  Man of Perfection  என்று ஆரம்பத்தில் அழைக்கும் அனைவரும் சிறிது நாளிலேயே உங்களை Perfect Man என்று புரிந்து கொள்வார்கள்.  அவர்கள் மனதில் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் உயரும்.

இந்த இதழை மேலும்

வெற்றி உங்கள் கையில்-67

வேண்டாம் இந்தப் பிடிவாதம்..

“நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் உண்டு” என்று சிலர் பிடிவாதம் பிடித்ததுபோல் பேசுவார்கள்.

“நான் சொல்வதுதான் சரி. உனக்கு ஒன்றும் தெரியாது” என்றும் கூச்சல் போடுவார்கள்.

“நீங்கள் சொல்வது தவறு” என யாராவது தன்னை எதிர்த்துப் பேசினால், “என்கிட்ட மோதாதே” என்றும் சிலர் வம்பு பேசி வீண் சண்டைக்கு வலை விரிப்பார்கள்.

இத்தகைய குணம் கொண்டவர்களை ‘பிடிவாதக்காரர்கள்’ என்று சமூகம் முத்திரைக் குத்திவிடுகிறது. இதனால், இவர்களின் வெற்றி முடங்கிப்போய்விடுகிறது.

“வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது” – என்பது கிராமத்து பழமொழி.

“உடலில் ஏற்படும் வாதநோய்க்குத் தீர்வாக பல மருந்துகள், மருந்து எண்ணெய்கள், பிசியோதெரபி போன்ற பல மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால், வாழ்க்கையில் ஒருவர் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதமாக இருந்தால், பிடிவாதத்தை நீக்கும் மருந்து எதுவும் இல்லை” என்கிறது அர்த்தமுள்ள இந்தப் பழமொழி.

வாழ்க்கையில் சில நல்ல கொள்கைகளை நிறை வேற்றுவதற்காக பிடிவாதமாக இருக்கலாம். விடாப்பிடியாக இருந்து கொள்கையை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பவர்களும் உண்டு. ஆனால், தேவையற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் வீண் பிடிவாதம் பிடித்து, “நான் சொன்னதே சரி” என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்பவர்களும் உண்டு. இத்தகைய சூழல்தான் சிலரை சிக்கலில் மாட்ட வைத்துவிடுகிறது.

“விடு… கொடு… விட்டுக்கொடு” என்பதை வாழ்வியல் தத்துவமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு வாழ்க்கை நாளும் மகிழ்வு நிறைந்ததாக மாறிவிடுகிறது. ஆனால், அதேவேளையில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததால் பொன், பொருள், உடல்நலம் போன்றவைகளை இழந்து, வீதிக்கு வந்தவர்களும் உண்டு. எனவே, எந்த அளவுக்கு பிடிவாதம் பிடிக்காமல் இருக்க வேண்டும்? என்ற புரிதல் கொண்டவர்களுக்கு வாழ்க்கை வந்தமாக மாறிவிடுகிறது.

அந்தக் குடும்பத்தில் குழப்பம் வருமென்று யாரும் நினைக்கவில்லை.

“சின்னஞ்சிறு வயதிலிருந்தே எங்கள் சொல்லைக்கேட்டு வளர்ந்த எங்கள் பிள்ளை பிரகாஷ் இப்படி மாறிவிட்டானே!” என்று பெற்றோர்கள் வருந்தினார்கள்.

“இந்த வாரத்திற்குள் எனக்கு பைக் வாங்கி தராவிட்டால், நான் கல்லூரிக்கு போகமாட்டேன்” என்று பிரகாஷ் அடம்  பிடித்த பின்புதான், அவர்களுக்குள் இந்த எண்ணம் பிறந்தது.

“நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும்” என்றுசொல்லி வீட்டில் அதிகாரத் தோரணையோடு வலம் வந்தான் பிரகாஷ்.

பெற்றோர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

“இப்படி நீ சொல்வது சரியில்லை மகனே” – என்று பாசத்தை அள்ளித் தெளித்தார் அப்பா.

முகத்தை கடுமையாக்கிக்கொண்டு கோபத்தை வரவழைத்தான் பிரகாஷ் “வசதியில்லாதவர்கள்கூட அவர்கள் பையனுக்கு ‘பைக்’ வாங்கிக் கொடுத்து அழகுப் பார்க்கிறார்கள். நீங்கள் பெரிய வங்கி அதிகாரி என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். எங்கள் கல்லூரியும் திறந்துவிட்டது. ஜூலை மாதம் ‘பைக்’ வாங்கியபின்பு தான், கல்லூரிக்கு வருவேன் என்று நண்பர்களுக்கு நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். நீங்கள் பைக் வாங்கித் தராவிட்டால், நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” – என்று கண் கலங்கினான்.

இந்த இதழை மேலும்

சின்னஞ்சிறு சிந்தனைகள்

எப்போதும் பயங்கொண்டு அடுத்தவரின் அளவுக்கதிகமான தேவைகளுக்கு, அளவுக்கு மீறி வளைந்து கொடுப்பது அவர்களுக்கு நம்மீது உள்ள அன்பு மற்றும் மதிப்பு குறைந்து விடும்.

பிரச்சனைகள் நமக்கு பயத்தை உண்டு பண்ணுவதில்லை. அந்தப் பிரச்சனைகளைக் குறித்து நாம் எண்ணும் விதமே, பயத்திற்கும் அது தொடர்பான மற்ற கோளாறுகளுக்கும் வித்திடுகிறது.

வயது முதிர்ந்த பின் நமக்கு வரும் பயங்கள் நாமே வரவழைத்துக் கொள்பவை.

நமக்கு பயமோ, குழுப்பமோ உண்டானால் முதலில் நடந்தவைகளை அல்லது நடப்பவைகளை அலசிப் பார்த்து அவற்றை மாற்ற முடியுமா என்று யோசிப்போம். அவற்றை மாற்ற முடியாவிட்டால், அவை குறித்த  நம் எண்ணங்களை மாற்றிக்கொள்வோம். அதாவது எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்வது.

நம் எண்ணங்களை நல்லவற்றில் சந்தோசமானவற்றில் செலுத்தி நம்மை நாமே பயன்படுத்திக் கொண்டால் நாமும், பிறரும் நலமாக வாழவழி செய்யலாம்.

நம்மை நாமே நல்லவனாக விருப்பத்தக்கவனாக எண்ணினால் முயற்சித்தால் அப்படியே மாறலாம் இது உறுதி.

ஒன்றைப் பற்றி ஆர ஆமர யோசித்துப்  பார்க்கும் போது தான் நமக்கே நம் நிலைமை புரியும்.

இந்த இதழை மேலும்

தன்னம்பிக்கை மேடை

நேயர் கேள்வி ?

தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்களிடையே நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

தமிழ்பாரதி,

எழுத்தாளர் மற்றும் கவிஞர்,

சென்னை.

நீரின்றி அமையாதது உலகு’ என்று நீரின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உணர்த்தினார் திருவள்ளுவர். ஆனால் இப்போது தான் புரிகிறது, அவர் நமக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார். அதாவது நீரின்றி எதுவும் நடக்காது, எனவே இருக்கும் நீராதாரங்களைப் பத்திரப்படுத்துங்கள், நீரை சிக்கனமாக செலவிடுங்கள், இல்லையென்றால் அவதிப்படுவீர்கள் என்பதைத்தான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நாட்டையாண்ட சோழ மன்னர்கள் குளங்கள் வெட்டி நீரைத்தேக்கி, கால்வாய்கள் அமைத்து அவற்றை இணைத்து, விவசாயத்திற்கு நீரும், குடிப்பதற்கு நீரும், கால்நடைகளுக்கு நீரும் கிடைக்க வழி வகுத்தனர். பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பெரிய அணைகள் கட்டப்பட்டன, அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. குடிநீரும், பாசன நீரும் ஓரளவுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால், மக்கள் தொகை பெருக பெருக நீரின் தேவையும் அதிகரித்தது. அதிக விவசாயம், அதிக கால்நடைகள், அதிகமான தொழிற்சாலைகள் என்று நீரின் தேவை அதிகரித்த போது நாமும் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தோம். விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் ஆயிரம் அடி, தோண்டுவதும் சாத்தியமானது. நிலத்தடி நீரை ராட்சச கிணறுகள் மூலம் உறிஞ்சி விட்டதால் நிலத்தடி நீர் இன்னும் பாதாளத்திற்குப் போய்விட்டது.

ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளித் தொலைத்ததால் மணலில் தேங்கி நின்ற தண்ணீரும் இல்லை, நிலத்தடி நீரும் இல்லை என்ற நிலை இன்று. இதனால் பெரிய மரங்கள் கூட பட்டுப் போகும் அபாயம் ஏற்பட்டது. குளத்து நீரும், அணைக்கட்டு நீரும் நமக்குச் சொந்தம், ஆனால் நிலத்தடி நீர் மரங்களுக்குத்தான் சொந்தம். இதுதான் நீர் மேலாண்மை நியதி. நிலத்தின் மேல் தேங்கும் நீர்தான் மனிதனுக்குச் சொந்தம் என்ற நிலைபாடுதான் சிறந்த நீர் மேலாண்மையாக இருக்க முடியும். அதைத்தான் நமது முன்னோர்கள் செய்தார்கள்.

உலக மனிதர்களின் அழிவுச் செயல்களால் இன்று பூமி வெப்பமடைந்து கொண்டு வருகிறது. ‘Global Warming’ ‘Climate Change’ போன்ற சொல்லாடல்கள் சர்வதேச சவால்களாக உலக அரங்கில் நிற்கின்றன. அறிவியல் அறிஞர்கள் இந்த அபாயச் சங்கை ஊதினாலும் பல நாட்டு ஆட்சியாளர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை. அதிலும் அறிவியல் மீது ஆர்வமில்லாத மக்களுக்கு இது புரியவும் செய்யாது. நமது நாட்டிலும் இன்னும் அறிவியல் விழிப்புணர்வு வரவில்லை, அதற்கு மூட நம்பிக்கைகள் பெரும் தடையாக இருக்கிறது. உயிரினம் வாழும் ஒரே கோளம் பூமி, அதற்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்தை நாம் நிச்சியம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. குடிநீருக்கே மக்கள் பரிதவிக்கிறார்கள். சில இடங்களில் தண்ணீர் பங்கீட்டுச் சண்டையில் கொலையும் நடந்திருக்கிறது. சாலை மறியல்களும் நடந்து வருகின்றன. ஆனால் இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. அதற்கு அறிவியல் சிந்தனையால் ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடவும் முடியும். சமுதாய அக்கரையும், அரசாங்கத்தின் பங்களிப்பும் இதற்கு பெரிய அளவில் தேவைப்படுகிறது.

பொது மக்கள் பலவற்றைச் செய்யலாம். மழைநீர் சேகரிப்பு முறையை வீடுகளில் நிறுவலாம், மரம் நடலாம், மரம் வெட்டுவதைத் தவிர்க்கலாம், நீரை வீணடிக்காமல் இருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் நான் சைக்கிளில் திருவள்ளுர் சென்றேன். வீடுகளின் முன்பகுதியில் தாராளமாக தண்ணீர் ஊற்றி ஈரமாக்கி கோலமிட்டிருக்கிறார்கள். உலர்ந்த மண்தரை மீது ஊற்றி தண்ணீரை வீணடித்திருக்கிறார்கள். நனைந்த மண்ணில் அங்கு செயலற்றுக்கிடந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் உயிர் பெற்று அந்த வீட்டில் உள்ளவர்களைத் தொற்றிக் கொள்ளும். அவர்களுக்கு வைரஸ் காய்ச்சலும் வரும். இதைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு அறிவியல் ஞானமும், அறிவியல் மனநிலையும் வேண்டும். ஆனால் அது இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த இதழை மேலும்

சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு

த. ரவிச்சந்திரன்

தலைவர், சேரன் விளையாட்டுக் குழு

உடுமலைப்பேட்டை.

நதிகள் சங்கமித்துக் கடலாவது போல அனைத்து விளையாட்டுகளும் சங்கமித்து ஒரு குழுவாக உருவானதுதான் சேரன் விளையாட்டுக் குழு. அந்தக் குழு தோன்றி வளர்ந்த வரலாற்றினைக் கூறுகிறார், அந்தக் குழுவின் தலைவர் ரவிச்சந்திரன் அவர்கள்.

எங்கள் ஊர் இயற்கையின் ரம்மியம் சற்றும் குறையாத உடுமலைப்பேட்டையிலுள்ள எஸ்.வி.புரம். இருபுறமும் ஓடும் திருமூர்த்தி அணை மற்றும், அமராவதி அணைகள் கோடை காலத்திலும் வற்றாத அணைகள். விவசாயமும், மில் தொழிலும் இங்கு பெரும் பங்கு வகிக்கும் ஊர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் இவ்வூரில் தான் சேரன் விளையாட்டுக் கழகம் இருக்கிறது. இங்கு விளையாட நேரம் கிடைப்பது அதிசயம் தான். நான் என்னுடன்  என் நண்பர்கள் சிலர் சிறு வயதில் இருந்த காலத்தில் 1989-ல் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. முதலில் ஆர்வத்துடன் வெகுவிரைவாக 20 பேர் 30 பேர் என்று துடிப்புடன் செயல்பட்டோம். பின்னர் எங்களின் ஆர்வத்தைப் பார்த்து வீட்டிலும் பெரியவர்களிடமும் ஆதரவு கிடைத்தது. ஒரு சிலர் குறை கூறினார்கள். சிலர் வேலை வாய்ப்பின் காரணமாக இங்கிருந்து சென்றுவிட்டனர். மீதி இருந்தவர்கள் சற்று சோர்வு அடைந்தனர். பின்னர் ஊர் பொதுமக்களின் உதவியும் எங்களின் கூட்டு முயற்சியும் இருந்ததால் தான் தற்பொழுதுவரை திறமையாக செயல்பட்டு வருகிறோம்.

இக்குழுவின் சார்பாகக் கபடி, ஹாக்கி, போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் படுகிறது. இதற்கெனத் தனி அரங்கங்கள் அமைத்துத் தனித்தனிப் பயிற்சியாளர்களையும் அமைத்து விளையாட்டுக்களை நடத்துகிறோம். இதற்கெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் அளித்தவர்கள் எங்கள் ஊர்ப் பொதுமக்கள்தான். கிராமத்தில் இருந்து இப்படி ஒரு குழு முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு முழுமையான காரணம் எங்கள் ஊர்ப் பொதுமக்கள் மட்டுமே எங்கள் குழுவில் நிறைய விளையாட்டுக்கள் இருந்தாலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது கபடி தான்.

குழுவின் சார்பாக விளையாடக்கூடிய அனைவருமே மிகத் திறமை வாய்ந்தவர்கள். பற்பல கஷ்டங்களைத் தாண்டித்தான் இத்தகைய வெற்றிகளை அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவில் இருந்து முதலில் மாவட்ட அளவிற்குச் சென்றனர். பின்னர் அதிக உழைப்பு மற்றும் கடினப் பயிற்சியின் காரணமாக  மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு வெற்றிவாகை சூடினோம். நாங்கள் அத்துடன் எங்கள் முயற்சியை நிறுத்திவிடவில்லை மேலும் முயன்று கபடியில் தேசிய அளவிலான கோப்பையையும் வென்றிருக்கிறோம்.

நாங்கள் பெண்களுக்கும் தனியாகக் குழு தொடங்கியுள்ளோம். எங்கள் ஊர் கிராமம் என்பதால் ஆரம்பத்தில் பெண்களை விளையாட அனுமதிக்கவில்லை. இத்தகைய எதிர்ப்புகளையும் மீறிப் பெண்கள் குழுவினை ஆரம்பம் செய்தோம். ஆரம்ப காலத்தில் பெண் என்பதால் சரியாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத போதிலும் அதனையும் மீறிக் கடினப் பயிற்சிகளைச் செய்து பெண்கள் சாதனை படைத்தார்கள். பெண்கள் குழுவில் ஒரு அணியும் ஆண்கள் குழுவில்  ஜீனியர், சப்-ஜீனியர் அணியும் இருக்கிறது. பெண்கள் குழு 2013-ல் தொடங்கப்பட்டது. தற்பொழுது நன்றாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். தினமும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று போட்டிகளில் விளையாடி வருகிறோம்.

எங்களது குழுவின் சார்பாக அதிக இடங்களில் போட்டிகள் நடத்தியது என்று பார்த்தால் கபடிதான். குழு ஆரம்பித்தது முதலாக இன்றுவரை மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது கபடி மட்டுமே வருட வருடம் மே மாதம் எப்பொழுது வரும் என்று மக்களை எதிர்பார்க்க வைப்பது கபடி. கபடியில் பெண்கள் அணியின் சார்பில் இருவரும் ஆண்கள் அணியின் சார்பில் ஒருவரும் தேசிய அளவிலான கோப்பையைப் பெற்றிருக்கிறார்கள். சேரன் விளையாட்டுக் குழு என்ற பெயரில் கபடிக்கென்று போட்டிகளை வருட வருடம் மே மாதத்தில் நடத்துகிறோம். பொருளாதார அடிப்படையில் உதவியவர்கள் எங்களுக்கு அதிகம். ஊர்ப்பொதுமக்களின் உதவியும் மற்றும் போட்டிகளின்போது அரங்கங்கள் அமைப்பது மற்றும் உணவு, பொருள் உதவிகளை அரசியல்வாதிகள் சிலர் செய்து கொடுத்தனர்.

குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மே மாதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். மேலும் மழையின் தாக்கம் குறைந்த மாதம் என்பதாலும் நாங்கள் இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் காரணமாக மட்டுமே ஜீன் மாதத்தில் விளையாட்டினை நடத்துகின்றோம்.

ஹாக்கி விளையாட்டிற்குச் செலவு மிகவும் அதிகம். இந்தக் குழு ஆரம்பித்த பொழுது ஹாக்கி விளையாட்டானது பஞ்சுத் தொழிற்சாலைகளுக்காக விளையாடப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிக அளவு ஹாக்கி விளையாடப்படுவதில்லை.  உடுமலைப்பேட்டையில் தான் ஹாக்கி அதிகம் விளையாடப் பட்டது. பெண்கள் அணியில் கல்லூரி அணி மட்டுமே ஹாக்கியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த இதழை மேலும்

புறப்பட ஆயத்தமாகுங்கள்

Your problem is to bridge the gap between

Where you are now and the goals you intend to reach.

– Earl Nightingale

நீங்கள் நாடு முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் போக முடிவு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பயணப்பட்டியலை முன்கூட்டியே திட்டமிட்டு, பயணம் போகும் முறையும், பயணநேரமும், தங்கும்  இடமும்,தேவையான முன்பதிவுகளும்,வேண்டிய அனுமதிகளும் கொண்ட ஒரு முறையான பயணப்பட்டியல் தயாரித்தப்  பின்புதான் பயணம் தொடங்குவீர்கள்.

இது போலத்தான் வாழ்க்கையையும், தொழிலையையும்    திட்டமிட்டு    அமைத்துக் கொண்டால்தான்  அது  வளர்ச்சியும், வளமும் உடையதாக அமையும்.

உதாரணமாக, உங்கள் எடையை குறைக்க  விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், முதல் வேலை தற்போது தங்கள் எடை எவ்வளவு  என கணக்கிட்டுக் கொள்வதுதான், செய்ய வேண்டிய  உடற்பயிற்சி என்ன?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் செய்வது? பயிற்சிகளை எப்படி மேற்கொள்வது? என்று திட்டமிடுவீர்கள் அல்லவா? அது போல் தான் உங்கள் முன்னேற்றத்திற்கும் மாதவாரியாக திட்டமிடல் வேண்டும்,  காலக் கணக்குப் போட்டு வைத்து  கொண்டு அதைப் பின்பற்றவேண்டும்.

ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்து விட்டீர்கள்,  எங்கு, எப்போது  ஆரம்பிப்பது  என்றும் முடிவு செய்து   விட்டீர்கள், முதலீடுகள் பற்றியும் முடிவு செய்து விட்டீர்கள்,  யார்  நிர்வகிக்கப் போகிறீர்கள் என்பது பற்றியும் முடிவு செய்து விட்டீர்கள்,   தொழில் தொடங்கினால் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும், செலவு எவ்வளவு இருக்க வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு (Expected)  நிதிநிலை அறிக்கையும் கணக்கிட்டு விட்டீர்கள்,  பிறகு என்ன?  புறப்பட ஆயத்தமாகுங்கள்.

தொழில் தொடங்கிய பின்பு, முதல் ஆண்டு வரவும் செலவும் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் (Break Even Point), நஷ்டம்   இல்லாமல் நிர்வாகம் செய்ய  வேண்டும்,  தொழில் நிலையான பிறகு ஆண்டுக்கு இவ்வளவு வருமானம், இவ்வளவு நிகர லாபம்  என்பதைக் கணக்கிட்டு லாபகரமாக தொழிலை நடத்த வேண்டும்.

ஆண்டு ஒன்று  கழிந்த பின்பு, மாதம்  ஒன்றுக்கு நிகர லாபம் எவ்வளவு  என்பதைக் கணக்கிட்டு    மாதம்  ஒரு முறைஒப்பிட்டுப் பார்த்து  கொள்ள வேண்டும்.

ஆண்டு மொத்த நிகர லாபம் பார்த்ததைப் போல, மாதம் ஒரு முறை நிகர லாபம் கணக்கிட்டுப் பார்ப்பதைப் போல, ஒரு நாளைக்கு எவ்வளவு  வருமானம்  என்பதையும், நிகர லாபம் எவ்வளவு நிற்கும் என்பதையும், ஒவ்வொரு நாளும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது போல  ஒரு ஆண்டு வருமானம், ஒரு மாத வருமானம், ஒரு நாள் வருமானம்  பார்த்து தொழில் நடத்துவது போல்,  ஒரு மணிக்கு  எவ்வளவு   வருமானம்,  எவ்வளவு  நிகர லாபம்  என்பதை கணக்குப்  பார்க்க வேண்டும், “ஒரு மணி நேர வருமான” ஒப்பீடுதான், நீங்கள் எந்த உயரத்தில் இருக்கிறீர்கள் என்பதை அது  காட்டும். இன்னும் எந்த அளவு உயர வேண்டும் என்றஎதிர்பார்ப்பைக் கூட்டும்,  அதற்கு இன்னும் என்ன என்ன தேவைகள் வேண்டும் என்பதையும் ,எதில் எதில், என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதையும் அது சுட்டிக் காட்டும்.

மேலை நாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில்  தற்போது  “ ஒரு மணி நேர வருமானம்” கணக்கீடு முறைதான் பின்பற்றப்படுகிறது, காலக் கணக்குத்தான் மிக முக்கியமானது.

இந்த ஒரு மணி நேர நிகர லாபம் கணக்கு ஒப்பீடு தான், ஆரோக்கிய வளர்ச்சிக்கு வித்தாகும், இதை உயர்த்துவதற்கேற்ப முயற்சியும், உழைப்பும் அதிகமாக தேவைப்படும், தொழில்நுட்ப அறிவும், நுணுக்கங்களும், அனுபவ சாலிகளின் ஆலோசனையும் இப்போது உங்களுக்கு அதிகம் தேவைப்படும்,

5 ஆண்டுகள் கழித்து நிறுவன விரிவாக்கத்திற்கு  முயற்சித்தல்  ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.           உங்களுடையதற்போதை சொத்தின் மதிப்பையும் கணக்கிடுங்கள், அடுத்து வரும் ஆண்டுகளில்  உங்களுடைய   சொத்து மதிப்பு  எவ்வளவு உயர  வேண்டும் என்பதையும்  கணக்கிடுங்கள். அதை  அடைவதற்குரிய  முயற்சியை  ஆரம்பியுங்கள்.

முன்னை விட தற்போது உள்ள, உங்களது  திறமைகளின் வளர்ச்சி பற்றியும், தொழில்  நுணுக்க  மேம்பாடு  பற்றியும் ஆராயுங்கள்,  எந்தத் துறையில் பலமுள்ளவராக இருக்கிறீர்கள் ? எந்த  துறையில் பலவீனமாக இருக்கிறீர்கள்?குறைகள் என்ன? அதை  நிவர்த்திக்க வேண்டிய  வழிகள் என்ன? பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?  என்பதை ஆராய்ந்து  அதற்குரிய   நிவாரண முறைகளை பின்பற்றுங்கள்.

இந்த இதழை மேலும்

பெண்ணிய உரிமைகள்

ஒரு பெண் இரவில் தனியாக பாதுகாப்பாக எப்பொழுது செல்ல முடியுமோ அப்போது தான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம் என்றார் மகாத்மா காந்தியடிகள்.

நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆனாலும் நாம் உண்மையான சுதந்திரம், குறிப்பாக பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது அன்றாட செய்திகளை காண்பவர்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் கடத்தப்பட்டு, அல்லது தனியாகச் சென்றால் மானபங்கப்படுத்தி கொலை செய்வது எதைக் காட்டுகிறது.

நேதாஜி படையில் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கிய தமிழ்ப் பெண் லட்சுமி முதல் பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் நிர்வாகத் தலைவர் நூயி, விண்வெளி வீராங்கனை சாவ்லா, புரட்சி வீராங்கனை சல்மா மற்றும் விளையாட்டுத்துறையில் உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் நாட்டிற்கு புகழ் சேர்த்தாலும் அவர்களுக்கு என்ன கைமாறு செய்கிறோம்.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தான் அதிகம். பணிக்குச் செல்லும் இடங்களில் பாலியில் தொந்தரவு, வரட்சனைக் கொடுமை. ஈவ்டீசிங், பிரசவ காலங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இல்லாமை, வீட்டில் தனியாக உள்ள பெண்களிடம் நகைக் கொள்ளை ஆகியவை முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவை.

இந்தியாவில் குடியரசு தின விழாவில்  பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பெண்களைப்பற்றி உயர்வாக ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

எனது இந்திய பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் ராணுவத்தில் பெண்களைப் பார்த்தது தான். ஜனாதிபதி மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியவரும் ஒரு பெண் தான்.

இந்தியாவில் ஆட்சி நடத்துவது உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் காண்பித்துள்ளனர். தலைவர்களில் பலர் பெண்கள் தான்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் இளம் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடும் முன்னேறும், என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருக்கிறோம். ஒரு நாடு முன்னேற விரும்பினால், பெண்களின் திறமைகளை புறக்கணிக்கக் கூடாது.

பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைப்பதில் ஆண்களுக்கு பங்கு உண்டு என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது மகன்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள் மகள்களுக்கும் கிடைக்க வேண்டும், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள், கணவன் ஆகியோருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து விட்டு, அவசரமாகப் பணிக்கும் செல்ல வேண்டும்.

குடும்பம், அலுவலகம் ஆகிய இருவேறு சூழ்நிலைகளால் மகளிர் தாய்மை என்பதில் முழுமை அடையவில்லை. ஏனென்றால் குழந்தைகளை வளர்க்கப் புட்டிப்பால், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றை நாட வேண்டும்.

இயல்பாகவே குழந்தை வளர்ப்பு பெண்களைச் சார்ந்துள்ளது. மொத்ததில் பெண்கள் குடும்பத்தில் சம்பளத்துடன் கூடிய உயர்தர வேலைக்காரியாகவும், அலுவலகத்தில் வேளைப்பளு நிறைந்த அலுவலராகவும் உள்ளனர்.

ஒன்றைப் பெறவேண்டுமாயின் ஒன்றை இழந்தாக வேண்டும் என்ற நிலையினை பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.

இந்த இதழை மேலும்