Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 7

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 7


ஞானசேகரன் தே
Author:

அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

(The 7 Habits of highly effective people)

இந்த நூலின் ஆசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி (Stephen R.Covey) ஆவார். (நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) நாம் எதை மீண்டும் மீண்டும் செய்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம். அப்படிப் பார்த்தால், மகத்துவம் என்பது ஒரு செயல் நடவடிக்கையல்ல, அது ஒரு பழக்கம் என்ற அரிஸ்டாட்டிலின் மேற்கோளுடன் இந்நூல் தொடங்குகின்றது. நமது குணநலன்கள் என்பவை அடிப்படையில் நமது பழக்கங்களின் ஒரு கலவை. “ஓர் எண்ணத்தை விதைத்தால் ஒரு செயலை அறுவடை செய்வீர்கள்; ஒரு செயலை விதைத்தால் ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள், ஒரு பழக்கத்தை விதைத்தால் ஒரு குணநலனை அறுவடை செய்வீர்கள், ஒரு குணநலனை விதைத்தால் ஒரு தலைவிதியை அறுவடை செய்வீர்கள்” என்று ஒரு கூற்று உள்ளது. பழக்கங்கள் நம்முடைய வாழ்வில் சக்திவாய்ந்த காரணிகளாக உள்ளன. அவை தொடர்ச்சியானவையாகவும், பெரும்பாலும் நம்மையும் அறியாமல் வெளிப்படுபவையாகவும் இருப்பதால், அவை எவ்வித மாற்றமும் இன்றி ஒவ்வொரு நாளும் நம்முடைய குணநலன்களை வெளிப்படுத்தி, நமது ஆற்றலை அல்லது ஆற்றலின்மையை உருவாக்குகின்றன. ஒரு பழக்கம் என்பது அறிவு, திறமை மற்றும் விருப்பம் ஆகியவற்றின் சந்திப்பு என்று வரையறுக்கிறார் ஸ்டீபன் ஆர்.கவி. மேலும் அறிவு என்பது என்ன செய்யவேண்டும். ஏன் அதைச் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு ரீதியான கருத்துக் கண்ணோட்டம். அதை எப்படிச் செய்வது என்பதுதான் திறமை. அதைச் செய்வதற்கான ஊக்குவிப்புத்தான் விருப்பம். ஒன்றை நம் வாழ்வில் ஒரு பழக்கமாக ஆக்குவதற்கு; இந்த மூன்றும் நம்மிடம் இருக்க வேண்டும்” என்றும் விளக்கம் தருகிறார்.

ஏழு பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்களாகப் பின்வருவன அமைகின்றன.

  1. முன் யோசனையுடன் செயலாற்றுதல்.
  2. முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல்.
  3. முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்.
  4. எனக்கும் வெற்றி உனக்கும் வெற்றி என்ற சிந்தனை.
  5. முதலில் புரிந்துகொள்ளுதல் பின்னர் புரியவைத்தல்.
  6. கூட்டு இயக்கம்.
  7. புதுப்பித்தல் பழக்கம் அதாவது ரம்பத்தைக் கூர் தீட்டிக்கொள்ளும் பழக்கம்.

மேற்கண்ட ஏழு பழக்கங்களும் ஆற்றலுக்கான பழக்கங்கள். அவை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால்; நீண்டகாலப் பயனளிக்கும் உச்சபட்ச விளைவுகளை அவை உருவாக்கித் தருகின்றன. இவை ஒரு நபருடைய குணநலன்களின் அடிப்படையாக ஆகி, சரியான ஆற்றல்மிக்க மனிதர் உருவாகிறார். இப்படியான மனிதர் தனிநபராக எந்தப் பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ளவும், வாய்ப்புக்களைப் பெருக்கிக்கொள்ளவும், மேலும் மேலும் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வளர்ந்திடவும் முடியும். மேற்கண்ட ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து சுருக்கமாக வருமாறு பார்ப்போம்.

முன்யோசனையுடன் செயலாற்றுதல்

நாம் ஒரு செயலைச் செய்யும்போது இது சரியா? தவறா! என்று முடிவுசெய்து தொடங்குவதை அதாவது ஒரு செயலைச் செய்ய முடிவு எடுப்பதை முன்யோசனை என்று விளங்கிக் கொள்ளலாம். நாம் எடுக்கும் முடிவுகளில் சில சரியாக அமையலாம். இல்லை அமையாமல் போகலாம். ஆனால் ஆற்றல்வாய்ந்த ஒருவர் எடுக்கும் முன்முடிவு தவறாகப் போவது இல்லை என்பது நிதர்சனம். நாம் நமது சொந்த முன்யோசனையுடன் கூடிய செயல்பாட்டை அடையாளம் கண்டு அதை அடைய முயல்கின்றோம். இவ்வாறு உருவாக்கப்படும் முன்யோசனையை அடையும் அறிவு, திறமை, விருப்பம் ஆகியன நமக்கு எப்போதும் இருக்கவே செய்கின்றது. இந்த மூன்றில் எது குறைந்தாலும் நமது செயல்பாடு வெற்றியடைய வாய்ப்பில்லை. நம் வாழ்க்கை முழுவதும் நிறைய பிரச்சனைகள், அழுத்தங்கள், திடீர் திடீரென தோன்றவே செய்கின்றன. இதனை நாம் எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதில் நமது வெற்றி அடங்கியுள்ளது. நாம் நிறைய வாக்குறுதிகள் கொடுப்போம்; ஆனால் அதை நிறைவேற்றுகிறோமா என்பதில்தான் ஒரு மனிதனின் ஆற்றல் அடங்கியிருக்கிறது. முன்யோசனையுடன் கூடிய மக்கள் நேர்மறையான ஆற்றல்களையும் செல்வாக்கையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் எல்லா முன்யோசனைகளும் நிறைவேற்றக்கூடியதாகவும் அமைந்துவிடுகிறது என்று ஸ்டீபன் ஆர்.கவி கூறுகிறார்.

முடிவை மனதில் வைத்துத் தொடங்குதல்

முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதற்கு நீங்கள் சென்றடைய விரும்புகின்ற இடத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலுடன் துவங்குதல் என்று பொருள். இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகவும், நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்போதும் சரியான திசையிலேயே இருப்பதற்காகவும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது என்பது அதன் அர்த்தம். முடிவை மனத்தில் வைத்துத் துவங்கும்போதுதான் நாம் உண்மையிலேயே ஆற்றல்வாய்ந்தவர்களாக இருப்போம். முடிவை மனத்தில் வைத்துத் துவங்குவது என்பது ‘அனைத்து விஜயங்களும் இரண்டு முறை உருவாக்கப்படுகின்றன’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து விஜயங்களும் முதலில் மனதில் உருவாக்கப்படுகின்றன. பிறகு வெளியுலகில் இரண்டாவது முறையாக உருவாக்கப்படுகின்றன. நாம் வீடு கட்டுவதை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றார் நூலாசிரியர். முதலில் வீட்டின் வரைபடத்தை உருவாக்கி, கட்டிடத் திட்டங்களை உருவாக்குகிறீர்கள். நிலத்தைத் தோண்டுவதற்கு முன்பே நிலத்தில் அமையப்போகும் கட்டிடம் எப்படி அமையவேண்டும் என்று முடிவு செய்துகொள்கின்றோம். இதுதான் முடிவை மனதில் வைத்துத் துவங்குதல். “இரண்டுமுறை  அளவெடுங்கள் ஒருமுறை வெட்டுங்கள்” என்பது தச்சர்களின் கொள்கை விதி. முடிவை மனதில் வைத்துத் துவங்குதல் என்பது ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் இரண்டாவது பழக்கம் ஆகும். இப்பழக்கம் தலைப்பண்புகளுடன் ரேநடியான தொடர்புடையது ஆகும். சரியானவர் எடுக்கும் சரியான முடிவு. சரியான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு என்று இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் செய்யவேண்டியவற்றை முதலில் செய்தல்

1வது மற்றும் 2வது பழக்கங்களை நடைமுறைப்படுத்துவதால் விளைகின்ற தனிப்பட்டப் பலன்தான் 3வது பழக்கம். “நீங்கள்தான் திட்டமிடுபவர்” என்று 1வது பழக்கம் கூறுகிறது. “திட்டத்தை எழுதுங்கள்” என்று 2வது பழக்கம் கூறுகிறது.  “திட்டத்தைச் செயல்படுத்துங்கள்”, “திட்டத்தை வாழுங்கள்” என்று 3வது பழக்கம் கூறுகிறது. வாழ்வது என்பது முக்கியமாக, தேர்ந்தெடுப்பதற்கான நமது சுதந்திரம், சுய ஒழுங்கு, நாணயம் மற்றும் நமது இலக்குகளுக்கும் கால அட்டவணைகளுக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தத்தையும், கண்ணோட்டத்தையும் கொடுக்கின்ற சரியான கொள்கைகள் மற்றும் நமது சொந்த ஆழமான மதிப்பீடுகள் குறித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒரு செயல்பாடு. இது முழுவதும் தனிமனித நிர்வாகம் குறித்தக் கொள்கைகள் ஆகும். இதில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த கைக்கொள்ள வேண்டிய காலக்கெடுவுடன்கூடிய பணித்திட்டங்கள், அழுத்தமிக்க பிரச்சினைகள், நெருக்கடிகள் இவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுதல் போன்றன விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2019

கல்விக்கு கரம் கொடு சரித்திரத்தில் பெயரெடு
தண்ணீர் தந்திரம்
நினைப்பதே நடக்கும் – 3
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 7
இரத்தசோகை
தன்னம்பிக்கை ஒரு நூலகம்
இலக்கு என்ற கோட்டைக்கு ஏழு வாயில்கள்
ஆன்மீகம் ஒரு கலைக்கூடம்
நில்! கவனி !! புறப்படு !!! – 2
வெற்றி உங்கள் கையில் – 64
ஊசல்
மாமரத்தில் கொய்யாப்பழம்
தடம் பதித்த மாமனிதர்கள்- 2
பாராட்டு எனும் மந்திரம்
நேர்மை… உண்மை…
வாழ்க்கையை வாழ்ந்து காட்டு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்