April, 2019 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2019 » April (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  ஊசல்

  அவருக்கு பதில் சொல்லும்பொழுது…. பலன் எதிர்பாராத உதவியை செய்கின்ற பண்பை குறித்து விளக்கம் கூறினேன். செய்நன்றி அறிதல்… என்பது நன்றி பாராட்டுதல் என்பதும் என்ன என்று விளக்கினேன். சுப. வீரபாண்டியன் அவர்களது ‘குறள் வானம்’ என்னும் புத்தகத்தில் தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும் செய்யவேன்றிய உதவி மற்றும் நன்றி குறித்து சொல்லப்பட்டு இருக்கும். உதவியவர்களுக்கே திரும்பி உதவுவதல்ல உதவியின் பொருள்… உதவி தேவைப்படுபவர்களுக்கு அதை உரிய நேரத்தில் செய்வதுதான் அதன் இலக்கணம். பள்ளி கல்லூரிகள் நாம் ஏறிவந்த ஏணிகள். நாம் அடுத்த தலைமுறைக்கு ஏணிகளாக இருப்பதுவே அவர்களுக்கு செய்யும் மறு நன்றி. அப்பா என்னை படிக்க வைத்தார்…. திரும்ப நன்றியோடு அவரை நான் படிக்க வைப்பேன் என்பது என்ன நன்றி. நந்தனம் கலைக்கல்லூரி கூட எனது தான்… நீங்கள் யாவரும் என் கேளிர்… என் கடமையைச் செய்வதே! என் கல்லூரிக்கான கடன்! என்று பதில் கொடுத்தேன். மற்றவர் குழந்தைகளை அன்போடு ஊட்டி வளர்த்தால் தன் குழந்தைகள் தானே வளர்வார்கள் என்றொரு வழக்கு இருப்பதையும் நினைவூட்டினேன் அருணாச்சலம்…. சார் நான் எதிர்பார்க்காத நல்ல பதில் என்றார்… பக்கத்தில் மேடையில் வீற்றிருந்த சுதாகர் IPS “ பாஸீ” செம பதில்… என்று பாராட்டினார். தனக்கு அந்த பதில் மிகவும் பிடித்திருந்ததாக கூறினார்.

  வாழ்க்கை வசந்த கால ஊஞ்சல்களை அசைத்த வண்ணம் இருக்கிறது. நாம் தான் அடையாளம் சரிவர கண்டு பிடிக்க வேண்டும். எண்ணங்கள் தானாய் வருமென்றால் நாம் சும்மா இருந்தாலே போதுமா? எதுவுமே செய்ய வேண்டமா? என் இல்லத் துணைவியாரை …. ஸ்போர்ட்ஸ் T சர்ட், டராக் சூட் அணிந்து ஓடுங்கள்… ஆள் பாதி ஆடை பாதி… என்று சொல்லி… அதற்குரிய உடை அணிந்தாலே விளையாட்டு வீராங்கனை ஆகிவிடலாம் என்று பத்து வருடங்களாக… ஏன் பதினைந்து வருடங்களாக சொல்லி வருகிறேன். இதுவரை நடக்கவில்லை! என்று நினைத்தேன். மனம் ஊசலாடியது. சொல்வதை நிறுத்தி ஆயிற்று. சும்மா இருந்தால் எல்லாம் நடந்துவிடுமா?

  பயோமெட்ரிக் அட்டன்டென்ஸ் வைக்க வேண்டாமா? கிரிக்கெட் பவுலிங் பிராக்டீஸ் செய்யாமல் விக்கெட் கிடைக்குமா….? படிக்காமல் எப்படி தேர்வில் வெல்வது? ஆப்ரேஷன் செய்யாமல் ஹார்ட் பிளாக் எப்படி நீங்கும்? என்று ஊசலாடியது கேள்விகள்? தூரி நோன்பு மனதில் நடந்தது. கேள்விகள் தூரியில் அமர்ந்து ஆடின….

  தியானமும் அமைதியும் உலக நிகழ்வுகளில் இருந்து தூர அழைத்துச் சென்றுவிடவேண்டும் என அவசியமே இல்லை. சிம்பலிஸம் (குறியீடுகள் – Symbolism) என்று ஒரு கருத்து நிலவுகின்றது. கிட்டத்தட்ட நம்ம ஊர் சகுனம் பார்ப்பது போல. டால்ஸ்டாயின் 1872 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை ஒன்றை படிக்க நேர்ந்தது. அந்த கதை கு.ப. ராஜகோபலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. “ அவனின்றி அணுவும் அசைவதில்லை” என்று தமிழில் தலைப்பு வைத்து இருந்தார். ஆங்கிலத்தில் “ கடவுள் உண்மையை பார்க்கிறார், ஆனால் காத்திருக்கிறார்” (God sees the Truth, but waits) என்றும் உள்ளது. இந்தக் கதையில் அப்பாவி இவான் டிமிட்ரிச் அக்சினோவ் (Ivan Dmitrich Aksinor)  என்பவர் தான் செய்யாத குற்றத்திற்காக சைபீரியா சிறையில் பல நாள் வாடியபோதும் தனக்கு அநீதி இழைத்தவனை மன்னித்து இறுதியில் மரணிக்கிறான். இதில் சிம்பலிசம் என்ன? என்றால்… அவன்… விதி விளையாடும் நாள் அன்று கிளம்பும் போது… அவனது மனைவி … போகாதே போகாதே …. என் கணவா? பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று அழுது தடுக்கிறாள். இதையே… வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் பழைய தமிழ்ப் படத்தில்…வாழை தோப்பு அழிதல், பட்டத்து யானை சாதல் என பல குறிப்புகளால்.. சிம்பல்களால்… உணர்த்தி… வெள்ளத்துரையை அவர் மனைவி (திரையில் ஜெமினிகணேசன் பத்மனி) தடுப்பதாக அமைத்திருப்பார்கள். இதுவேதான் ஜீலியஸ் சீசரின் கதையிலும் அவர் மனைவி போக வேண்டாம் என்று தடுக்க தடுக்க… கொஞ்சநேரம்… ஊசலாடி… தடுமாறிவிட்டு… சீசர் கிளம்பி போய் குத்து வாங்கியதாக வரலாறு சொல்கிறது. இப்படி கெட்டதை மட்டும்தான் ‘குறிகள்’ முன் உணர்த்துமா? என்றால்…. “நாளென்ன செயும்… எனை நாடிவந்த கோளென் செயும்”? என்று அருணகிரிநாதரும்…. “ ஆறு நல்ல நல்ல அவை நல்ல….” என்று திருஞானசம்பந்தரும்… எல்லா நாட்களும் நேரங்களும் நல்ல நேரமே என்று முடித்திருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

  இந்த இதழை மேலும்

  மாமரத்தில் கொய்யாப்பழம்

  ஆனால், இன்றைய கல்வி நிலை முழுதும் மாறி விட்டது. மந்திரத்தால் மாங்காய் வரவழைக்கும் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. இதை விட இன்றைய குழந்தைகளின் அறிவாற்றல் மெச்சத் தகுந்ததாக உள்ளது.

  ஏன் மாமரத்தில் கொய்யாப்பழம் காய்க்காது என்று கேள்வி கேட்கும் மனநிலை உருவாகி விட்டது.

  காரணம் இன்றைய சமுதாயச் சூழ்நிலை தான். உடன் வசிக்கும் மனிதர்கள். அதிகாரத்தில் இருப்போர். மக்களின் பிரதிநிதிகளாய் தேர்வாகி ஆட்சி புரிவோர் ஆகியோரின் வாழ்க்கை முறை தான் சமுதாயச் சூழ்நிலையாகும்.

  நேர்மை, நாணயம், மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதெல்லாம் புத்தகங்களில் மட்டுமே என்ற அளவில் இன்றைய பொது வாழ்க்கை சிதைத்து விட்டது.

  எனவே, படிப்பு என்பது பெயரளவுக்கு என்ற சித்தாந்தம் உருவாகிவிட்டது. ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபெற அடிப்படைக் கல்வித் தகுதி 10+2+4  தான்.

  என்ன படித்திருந்தாலும் பரவாயில்லை. தேர்வு செய்தபின் தேவையான பயிற்சிகளை அவர்கள் வழங்கி, தங்கள் தொழிலுக்குத் தயார் படுத்தி விடுகின்றனர்.

  மழலைப் பருவ மகிழ்ச்சியைத் திட்டமிட்டே பெற்றோர்கள் புறக்கணிக்கின்றனர். ஐந்து வயது முடிந்து 6 வயது தொடக்கத்தில் தான் ஆரம்பக் கல்வி என்ற நிலை இன்று மாற்றப்பட்டு விட்டது. மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு கல்வி முறையில் தேவையற்ற படிப்புகளை உருவாக்கிவிட்டது.

  நூற்றுக்கணக்கில் துவங்கப் பட்ட பொறியியல் கல்லூரிகளில் பல இழுத்து மூடப்பட்டு விட்டன. இதே போல பாடத்திட்டத்தில் ஏராளமான பிரிவுகள். எந்தப் பிரிவுக்கு என்ன வேலை கிடைக்கும் என்பதே தெரியாத அளவுக்கு துவங்கப்பட்ட பல பாடப்பிரிவுகளும் இன்று கைவிடப்பட்டன.

  ஒரு சிலரின் தவறான முன்னெடுப்பால் உருவானவை தான் பிளே ஸ்கூல் (PLAY SCHOOL) மற்றும் கிண்டர் கார்டன் (KINDER GARDEN) போன்றவை.

  தெரிந்தோ தெரியாமலோ இன்று முதல் வகுப்புக்குச் செல்லும் எல்லாக் குழந்தைகளுமே LKG மற்றும் UKG படித்துள்ளன. படித்திருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

  இந்தப் படிப்பு பள்ளியில் சேருவதற்கான தகுதிகளைத் தருவதான கண்ணோட்டமே உள்ளது.

  உதாரணமாக கோவைக்கு அருகில் அமராவதியில் சைனிக் பள்ளி உள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிவதற்கான தகுதிகள் பயிற்சிகள் மூலம் போதிக்கப்படுகின்றன. நம் நாட்டில் இது போல் 25 பள்ளிகள் உள்ளன.

  இங்கு பையன்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். 6 ம் வகுப்பில் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை இராணுவத்தில் எதிர்காலத்தில் பணிபுரிவதற்காகத் தேர்வு செய்கின்றனர்.

  இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக மாணவர்களைத் தயார் செய்வதற்கென்றே சில ஆரம்பக் கல்விக் கூடங்கள் தோன்றின. இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

  இந்த இதழை மேலும்

  தடம் பதித்த மாமனிதர்கள்- 2

  ராஜராஜ சோழன்(கி.பி 985- கி.பி 1014)

  இயற்றுலும் ஈட்டலும் காத்தலும் காத்த

  வகுத்தலும் வல்லது அரசு. – குறள் 385

  பொருள் வருவாயை மேன்மேலும் உண்டாக்கலும், வந்த பொருட்களை ஓரிடத்தில் சேர்த்தலும்,சேர்ந்தவற்றை பிறர் கவராமல் காத்தலும் காத்தவற்றை அறம், பொருள், இன்பவழியில் செலவிடப் பகுத்தலும் வல்லவனே அரசன் என்ற வள்ளுவரின் கூற்றிற்கு உதாரணமாக விளங்கியவன் பிற்கால சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவானாகக் கருதப்படும்  ராஜராஜ சோழன் ஆவான் . இவனது 30 ஆண்டுகள் ஆட்சிக்காலம் பொற்காலம்  என்று  தென்னிந்திய வரலாறு முத்திரை குத்தியுள்ளது. இவ்வரசனின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது.

  ராஜராஜனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன். இவன் பக்குவப்பட்ட நடுத்தர வயதில் அரசபதவியை ஏற்றது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இவனது தந்தை சுந்தர சோழன் கி.பி. 957 முதல் கி.பி 973 வரை சோழநாட்டை ஆட்சி செய்தான். இவனது மூத்த மகன் ஆதித்த கரிகாலன், பகைவர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். அந்த கவலையில் அவன் இறந்ததும் சுந்தர சோழனின் இளைய சகோதரன் உத்தம சோழன் சோழ நாட்டை கி.பி. 973 முதல் கி.பி985 வரை ஆண்டான். கி.பி. 985 ல் உத்தம சோழன் இறந்ததும் சுந்தர சோழனின் இரண்டாம் மகன் ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தான்.

  ராஜராஜசோழன் பதவியேற்றதும் தம்முடைய சிறந்த அறிவுத் திறமையால் நாட்டின் கஜானா எந்நாளும் குறையாமல் பார்த்துக் கொண்டார். தன்னுடைய பல்வேறு யுக்திகளால் நாட்டிற்கு வருமானம் வரும் வகையில் செயல்பட்டான் அவசரம் சத்தினர் எவரும் பணி செய்யாமல் வாழ்வதை முற்றிலும் தடுத்து அவர்களையும் மற்றவர்களோடு பணி புரியும் படி வழிநடத்தினான். வாரிசு உரிமையை அவன் வழக்கப்படுத்தவில்லை. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கல்வெட்டுகளில் புதிவு செய்யும் வழக்கத்தை நடைமுறை செய்தான். செப்பேடுகளிலும் சில முக்கிய விவரங்கள் இவனது காலத்தில் பதிவு செய்யப்பட்டன. இலங்கையில் பாலி மொழியில் எழுதப்பட்ட சிறப்புமிக்க மகாவம்சம் அலெக்ஸ்டான்டிரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயின் கடலின் வழிகாட்டி நூல் தொலேமி புவியினரால் எழுதப்பட்ட கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மற்றும் கோவில் கல் தூண்களில் பொறிக்கப்பட்ட செய்திகளும் பொதுவாக சோழ மன்னர்களின் வரலாறு பற்றி குறிப்பிடுகின்றன.

  தன்னைச் சுற்றியுள்ன நாட்டு மன்னர்களோடு போரிட்டு சோழ நாட்டை இவனது ஆட்சி காலத்தில் விரிவு படுத்தினான். காந்தனூர் சாலை என்ற இடத்தில் சேர, பாண்டிய மன்னர்களை எதிர்த்து போராடினான். சேரன் பாசுரவர்மனை எதிர்த்து வென்று அவனுடைய கப்பற்படையையும் அழித்து உதகை,வழிஞை என்ற பகுதிகளை வென்றான். சேர மன்னனிற்கு உதவி பாண்டிய மன்னன் அமரடியங்களை அழித்து அவனுக்கு உதவிய இலங்கை மன்னனையும் அழித்து இலங்கையின் வடபகுதியை சோழ நாட்டுடன் இணைத்துக் கொண்டான். இரண்டாம் முறையாகச் சேரனுடன் போர் செய்து எஞ்சிய சேர நாட்டுப்பகுதியையும் சோழ நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். சோழ நாட்டின் வடதிசையில் வாழ்ந்த கங்கர்கள் தோற்கடித்து கங்கர் பாடியை கைப்பற்றினான்.தென் திசையில் மும்முடிச் சோழபுரம் என்ற பெயரைப் பெற்ற ஈழம் மட்டுமின்றி மேற்கு கரைக்கு அப்பால் உள்ள அரபிக்கடலில் உள்ள கடாரத்தின் மீதும் இவன் படையெடுத்து வென்றதாக இவன் காலத்து செப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இவனது வெற்றிகளுக்கு காரணம் இவனால் உருவாக்கப்பட்ட கப்பற்படையும் இவனது திறமை மிக்க மகன் முதலாம் ராஜேந்திர சோழனும் ஆகும்.

  இவனது வீரத்திற்கு அடித்தப்படியாக இவன் கட்டடக்கலை மீது காட்டிய ஆர்வமும், இவன் ஆன்மீகத்தின் மீது காட்டிய ஈடுபாடும்  பல அரிய பெரிய செயல்களைச் செய்ய  காரணமாய் இருந்தது எனலாம். இவனது மேற்பார்வையில் கி.பி. 1003 முதல் கி.பி. 1010 வரை கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் பொருளியல் மேம்பாட்டிற்கான நினைவுச் சின்னமாகும். கிரேனைட் கற்கலால் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை சிறந்த சுற்றுலா இடமாகவும், உலக மரபுக் கோவில்  என்றும் இக்கோயில் இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்த வண்ணம் உள்ளது. இவன் சைவ மதத்தை பின்பற்றினாலும் மற்ற மதங்களில் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை இலங்கையில் உள்ள புத்த விஹாரம் ஒன்றின் பெயர் ராஜ ராஜ பெரும் பள்ளி ஆகும். அதே போன்று தமிழ்நாட்டிலும் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விஹார் இருந்தாகச் செப்பேடுகள் சிலவற்றில் இச்செய்திகள் உள்ளன. விஷ்னுவிற்கான சில கோவில்கள் இவன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவைகளே.

  இந்த இதழை மேலும்

  பாராட்டு எனும் மந்திரம்

  சத்திய ஒளிச்சுடராய் சரித்திரத்து நாயகரின்

  வித்தகத்தை எடுத்துரைத்தல் விரும்பிய நல்மந்திரமாம்.

  எச்சிறப்பும் இல்லாத எத்தர்களைப் புகழ்ந்துரைத்தல்

  உச்சத்தின் இழிச்செயலாம் உயிர் வளர்க்கும் தந்திரமாம்.

  வாய்மை வழி செல்லும் வள்ளல் பெருமக்களை

  தூய்மை மனத்துடனே துகித்து நாம் போற்றிடுவோம்.

  எனும் கவிதை வரிகளில் தொடங்கி பாராட்டு எனும் மந்திர வார்த்தையின் சிறப்பை வரைகிறேன்.

  மகாத்மா காந்தி, அன்னை தெரசா, ஆபிரகாம் லிங்கன் போன்றோர் மனித குலத்திற்கு சேவை செய்து வரலாற்று நாயகர்களாக மக்களால் பாராட்டு பெற்றனர். இவர்களைப் போன்று பெரும் சாதனை புரியவில்லை என்றாலும் நம்மிடையே வாழும் மனிதர்களில் பலரும் அவரவர் சக்திக்கேற்ப தம் தனித்திறனை வெளிப்படுத்தும் பாராட்டுக்கு உரியவர்களே !

  நீண்ட பாலைவன பயணத்தில் சோலை ஒன்று தென்படும் போது உடலும், மனமும் மகிழ்வதைப் போல், நம் மனம் பாராட்டினால் கிடைக்கும் மகிழ்வை எதிர்நோக்குகிறது. இதனால் தான் பாராட்டுக்கு ஏங்குவதே மனித மனம் என்றார் வில்லயம் ஜேம்ஸ் பாராட்டினால் கிடைக்கும் மகிழ்வை கற்று அலசிப் பார்ப்போம்.

  உங்கள் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற பாராட்டை எண்ணிப்பாருங்கள். உதாரணமாக, ஒரு கனரக வாகனம் ஒன்று வேகமாக வரும்போது அதன் குறுக்கே ஒரு குழந்தை ஓடுகிறது; அதை நீங்கள் கவனித்து விட்டீர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாவிச் சென்று அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள். இதை கவனித்த சாலையில் செல்வோரும், கனரக வாகன ஓட்டுநரும் குழந்தையைக் காப்பாற்றிய உங்களை வெகுவாகப் பாராட்டுகிறார்கள் என்பது என்றோ உங்கள் வாழ்வில் நடந்த சம்பவம் எனக் கொள்வோம். உங்கள் மனதில் தற்போதும் கூட இச்சம்பவம் தோன்றும் போதெல்லாம் நீங்கள் பெற்ற பாராட்டை எண்ணி பெருமிதம் அடைகிறீர்கள் அல்லவா !

  பணியில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய நேரத்திற்குள் திறமையாகவும், ரசனையோடும் செய்து தரமான உற்பத்தித் திறனை காட்டுகிறீர்கள். இதை உங்கள் உயர் அதிகாரி அனைவரின் முன்பு பாராட்டித் தள்ளினார் என்பது எப்போதோ நடந்த சம்பவம் எனக் கொள்வோம்.

  இச்சம்பவம் உங்கள் நினைவிற்கு வரும் போதெல்லாம் அவ்வதிகாரியின் மேல் உங்களுக்கு அன்பையும், மரியாதையையும் ஏற்படுத்துகிறது அல்லவா! இதையே திருப்பிப் போட்டு பார்த்தோமாயின், நீங்கள் பெற்ற பாராட்டைப் போலவே நீங்கள் கொடுக்கும் பாராட்டும் உங்களால் பாராட்டுப் பெற்றவர் வாயிலாக உங்களுக்கு நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும்.

  தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்தினர் தாங்கள் வேறு நிறுவனத்திற்கு செல்லாமல் இங்கேயே நீடிப்பதற்கு தங்கள் நிறுவனம் பாராட்டிக் கொடுத்த அங்கீகாரமே என்கின்றனர்.

  இந்த இதழை மேலும்

  நேர்மை… உண்மை…

  நீதி நேர்மை நியாயம் சத்தியம் அகிம்சை இவையெல்லாம் அப்படியே அப்பழுக்கில்லாமல் நமது அடுத்தடுத்த தலை முறைகளுக்குப் போய்ச் சேருமோ என்ற சந்தேகம் இப்போதெல்லாம் மிக வலுவாக ஏற்படத் தொடங்கிவிட்டது.

  பள்ளிப் பருவத்திலேயே இது படித்த கதைத்தான் என்றாலும் இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு இது எத்தனை தூரம் ஒத்து போகிறது என்பதைப் பாருங்கள்.

  ஓநாய் ஒன்று முயலை அடித்துப் பிடித்துக் கொன்று விட்டது. ஆத்திரம், அவசரம் அதற்கு. யாராவது பங்குக்கு வந்து விடு வார்களோ? தன் வயிற்றுக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம். அவசர அவசரமாக அடித்த முயலைக் காலை சிற்றுண்டியாகக் கபளீகரம் செய்து விட்டது. திடீரென்று எலும்பொன்று தொண்டையில் சிக்கிக் கொண்டது.

  விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் வலியோ வலி. அவஸ்தை பட்டது அந்த ஓநாய் பாவம். எலும்புத் துண்டை எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்கின்ற இக்கட்டானச் சூழ்நிலை யார் யாரிடமோ உதவி கேட்டது. யாரும் முன் வரவில்லை. ஓநாயின் குணம் எப்படிப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும் தானே.

  எங்கே உதவி செய்யப்போய் நமக்கே உபத்திரவமாக முடிந்து விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஓநாயிடமிருந்து விலகி இருக்கவே செய்தது. கடைசியில் நாரை ஒன்று உதவி செய்ய துன்வந்தது. ஓநாய் வலியால் துடிப்பதைப் பார்த்து மனம் பொறுக்காமல்.

  தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்புத்துண்டை எடுத்து எனக்கு உதவி செய்தால் நான் உனக்கு அதற்காகத் தக்க சன்மானம் அளிப்பேன் என்று உறுதி கூறியது ஓநாய்.

  சரியென்று நாரையும் தனது கூர்மையான நீண்ட அலகினை அதன் தொண்டையில் விட்டு இலகுவாகச் சிக்கிக் கிடந்த எலும்புத் துண்டை எடுத்து வெளியே போட்டது.

  பிறகு தான் ஓநாய்க்கு உயிரே வந்தது அப்படா என்று நிம்மதியாகப் பெரு மூச்சு விட்டது. நன்றிக்கும் ஓநாய்க்கும் சிறதும் சம்பந்தம் இல்லை என்பது போல அது சிறிது நேரத்தில் நாரையைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடையைக் கட்டப் பார்த்தது.

  இந்த இதழை மேலும்

  வாழ்க்கையை வாழ்ந்து காட்டு

  நான் மிகப்பெரிய அளவில் நாடு போற்றும் நற்சாதனைகளைச் செய்யப் போகிறேன். என்னை தூற்றியவர்களையும், அவமதித்தவர்களையும் பழிவாங்கப் போகிறேன். எப்படி இது சாத்தியம்…?

  வாழ்ந்து காட்ட வேண்டும். அவர்களின் முன் மகிழ்ச்சியாகவும், எப்பொழுதும் போல் இயல்பாகவும், மேலும் மேலும் நம்மை காயப்படுத்தினாலும் சிரித்துக் கொண்டே சிகரத்தை தொட முயற்சிகளை மேற்கொள்ளவுமான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊற்றுபோல் பெருக்கிக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்.

  நல்ல நண்பர்கள் எப்போதும் நம் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளுக்குத் தோள் தருவார்கள். நமது எதிரிகளே நம்மை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல காரணமானவர்கள் ஆவார்கள். எனவே நண்பர்களை விடவும் எதிரிகளின் மீது நமக்கு மரியாதை கூடுதலாகத்தானே இருக்க வேண்டும்.

  வாழ்க்கையை அனுபவிக்க அனுபவம் அவசியம் தான். ஆனால் ஒவ்வொரு விசயத்திலும் அனுபவத்தை எதிர்பார்ப்பது ஆபத்தானதே. மற்றவர்களின் அனுபவத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். அவன் அனுபவப்பட்டால் தான் அவனுக்கு புத்திவரும் என்று மற்றவர் சொல்லிக் காண்பிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளுதல் கூடாது.

  வாழ்வை ரசித்து, ருசித்து ஒவ்வொரு நிமிடமும் இது என்னுடைய வாழ்க்கை என்று வாழும் வாழ்க்கையில் கசப்பான அனுபவம் வாய்க்கப் பெறினும் அதுவும் ஒரு சுவை தானே. அந்தச் சுவையை அனுபவிக்கும் பொழுது தானே மகிழ்வால் கிடைக்கப்பெறும் இனிப்பு எவ்வளவு இனிமையானது என்பது புரியும்.

  கடந்த கால அனுபவங்களை நினைத்துக் கொண்டே இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுலகில் எதிர்பார்த்து காத்திருந்தாலும் நிகழ்காலத்தை யார் வாழ்வது? இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் என்னுடையது; யாருக்காகவும், எதற்காகவும் என்னுடைய நிகழ்காலங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், நமது மகிழ்ச்சியின் கதவுகளை அடுத்தவர் வந்துதான் திறக்கவேண்டும் என்ற அவசியம் இருக்காது. வாழ்வை அழுத்துக் கொண்டாலும் அதை நாம் தானே வாழ்ந்தாக வேண்டும். மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருப்போருக்கு ஏமாற்றங்களையும் ஏமாந்து போகச் செய்யும் மனம் கிடைக்கப் பெறுவது உறுதி.

  ஒரு நல்ல மனித நேயத்திற்கு வேண்டிய ஒரு சிறிய நடைமுறையில் நடந்த எதார்த்த கதை: ஒரு உயர்தர வகுப்பைச் சேர்ந்த செல்வச்சீமாட்டிப் பெண் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. அப்போது அவளருகில் வயதான கிராமத்து பாட்டி வந்து நின்றார். அந்தப் பெண் பாட்டியை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் சற்று முன்னோக்கி பாட்டியைத் தொடதவாறு உட்கார்ந்திருந்தாள். இதைக் கவனித்த அவளருகில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, “ஏன் சவுகரியம் பார்த்தவில்லையா உன் இருக்கையில்?” என்று கேட்க, அதற்கு ஆம் என்பது போல் சொன்ன அவளிடம், “அப்படியானால், சரி, உனக்கு சவுகரியப்படும்படி நின்று கொள், பாட்டிக்கு இடம் கொடு” என்றாள் அந்தப் பெண்மணி. “அப்படியெல்லாம் இடம் கொடுக்க முடியாது… நீங்கள் யார் அதைச் சொல்ல” என்று எதிர்கேள்வி கேட்டாள் அவள். உடனடியாக எழுந்த அந்த நடுத்தர வயதுப்பெண், தன் இருக்கையை அந்தப்பாட்டிக்குக் கொடுத்தாள். வேறு வழியே இல்லாமல், பாட்டியின் அருகில் உட்கார்ந்தாக வேண்டும் அந்தப் பெண், இல்லாமல் எழுந்திருந்தால் அவளது கர்வத்திற்கு இழுக்கு என்ற நிலையில் பயணம் செய்தாள் அவள். நிற்க முடியாமல் வந்த அந்த பாட்டிக்கு எழுந்து நின்று இடம் தந்தவள் என்றும் மனதில் நின்றவளாக இருப்பாள்.

  இந்த நவீன நாகரிக காலத்தில் மனிதாபிமானங்களையும், மனித நேயங்களையும் வருகின்ற தலைமுறைகளுக்கு சொல்லித்தராமல் விடுவது பரிதாபம். பின்னாளில் தனக்கும், தன் சந்ததியினருக்கும் ஏற்பட இருக்கும் பரிதாப நிலையும் தான் அது என்பதை உணர மறந்துவிடுகின்றனர்.

  மனித காடுகளுக்குள் வாழ்ந்து வரும் நாம், பல விதமான குணாதிசயங்களைக் கொண்ட மனங்களுடையவர்களுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

  மற்ற உயிரினங்களுக்கு எப்போதுமே அதனதன் குணாதிசயங்கள் மட்டுமே இருக்கும். பாம்பென்றால் சீறும். தேள் என்றால் கொட்டும். புலி என்றும் புல்லைத் திண்ணாது. பேய் என்றாலும், பிசாசு என்றாலும் கூட அதனதன் குணத்தில் தான் அதுவதுவாக வாழ்ந்து வரும்.

  இப்படி… இப்படி… ஆனால் மனித மனங்கள் மட்டுமே எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தனக்கென்று குணாதிசயங்களைக் கொண்டாலும் இடத்திற்கு தகுந்த மாதிரியான முகமூடிகளை மாற்றிக் கொண்டு இனிக்க இனிக்க பேசும் வார்த்தைகளில் இனிப்பும், மனதினில் நஞ்சும் கலந்த மனிதர்களுடன் நகர்த்தும் காலம் அமையப் பெற்றால் என்ன செய்வது??

  நல்லதென பேசும் மனிதருக்குள்ளும் நஞ்சென்ற ஒன்று ஒலிந்திருக்கும். தீயதென நினைக்கும் மனிதருக்குள்ளும் நறுமணம் கொண்ட மனம் இருக்கும்.

  நமக்கெதற்கு என்று ஒதுங்குபவர் சிலர், வேண்டாத விரும்பாததானாலும் கடமைக்கு செய்பவர் சிலர், விரும்பியதை அடையாத விரக்தியில் பழி சொல்லித் திரிவர் சிலர், அப்படியும் சிலர், இப்படியும் சிலர் என்று எங்கும் எங்கும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் மனிதம்.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி?

  பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பாலியல் கல்வி முறை கொண்டு வருவது அவசியமா? அவசியமற்றதா ?

  அருணாதேவி,

  சேலம்.

  பாலியல் கல்வி அவசியம் என்பது அறிவியல் உண்மை. எனவே தான் பாலியல் கல்வி பாடப்பிரிவுகள் பள்ளி அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இது நல்லது தான், இதை நாமும் வரவேற்கலாம்.

  வளரும் குழந்தைகளுக்கு சந்தேகங்கள் பல வரும். சூரியன் ஏன் சுடுகிறது, கடலில் ஏன் உப்பு ? வானில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்? பறவை எப்படி பறக்கின்றன? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நம்மை துளைத்து எடுப்பார்கள். அதற்கெல்லாம் ஏதோ ஒரு பதில் தருகிறோம், ஆனால் அது எனக்கு உண்மையிலேயே தெரியாது என்று எவரும் நேர்மையாகப் பதில் சொல்வது இல்லை. குழந்தைகள் கேட்கும் இத்தகைய கேள்விகளால் பெற்றோருக்கு எந்த அசௌகரியம் ஏற்படுத்துவது இல்லை.

  ஆனால் குழந்தைகள் எப்படிப் பிறக்கின்றன என்று அவர்கள் கேட்டால் பெற்றோர் நெளிகிறார்கள், சற்று நிலை குலைகிறார்கள். என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளிடம் ‘பேசாமல் படுத்து தூங்கு’  என்று மிரட்டி தூங்க வைத்து விடுகிறார்கள். இந்த இயற்கையான சந்தேகங்களுக்கு விடைகளைக் காண குழந்தை முயல்கிறது, பலரிடமும் போய் கேட்கிறது. தாய் தந்தையர் இந்தக் கேள்வி கேட்டதால் கோபப்பட்டார்கள் என்பதால், வீட்டில் வரும் விருந்தினரிடமும் கேட்டுவிடுகிறது. இது போன்ற நேரங்களில் பெற்றோரே சந்தேகங்களுக்கு அறிவியல் விளக்கம் அளிப்பது தான் நல்லது. இல்லை என்றால் குழந்தை ஒரு பாலியல் குற்றவாளியிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க நேரிடும். அது குழந்தைக்கு ஆபத்தாகவும் முடியும்.

  ஒரு ஆண் குழந்தைக்கு பெண் குழந்தையின் மீதும் பெண் குழந்தைக்கு ஆண் குழந்தையின் மீதும் கவர்ச்சி ஏற்படுவது இயற்கையானது. எனவே ஆண் – பெண் வித்தியாசம் என்ன என்பது அந்தக் குழந்தைக்கு நாமே தெரிவித்தாக வேண்டும். ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் ஒன்று தான். ஆனால் இனப்பெருக்க உறுப்புகள் மட்டும் தான் வெவ்வேறானது என்பதை குழந்தைகளுக்கு விளக்கியாக வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை சமமாக நடத்தவும், மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

  உடலில் தோன்றும் ஹர்மோன்கள், அந்த ஹர்மோன்களால் இனப் பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, மற்றும் செயல்பாடு போன்றவை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். அப்போது அவர்களுக்கு எந்த வித குழப்பமும் அச்சமும் இருக்காது. இனப் பெருக்கம் எப்படி நடக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். இந்த அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடைகிறார் என்றால் என்ன? அது எந்த வயதில் நடைபெறும், அதற்கு பிறகு எப்போது திருமணம் செய்ய தகுதி வருகிறது. எந்தெந்த கால பருவத்தில் பெண் கருத்தறிக்கிறாள்? குடும்பக் கட்டுப்பாடு முறைகள் யாவை? என்பதெல்லாம் இன்றைய பாடப்புத்தகத்தில் வந்துவிட்டது. ஆனால் இவற்றை பள்ளிகளில் விவாதிப்பதற்கு ஆசிரியர்கள் கூட கூச்சப்படுகிறார்கள். எனவே இதை வெளிப்படையாக பிள்ளைகளிடம் பெற்றோர் விவாதிப்பதில் தவறில்லை என்று தான் தோன்றுகிறது. குறிப்பாகப் பெண் குழந்தைகளிடம் ஒரு தாயார் இதையெல்லாம் விளக்கிக் கூற கூச்சப்படத் தேவையில்லை. பாலின சுகாதாரம், பாலின ஆரோக்கியம் போன்றவை இருபால் குழந்தைகளுக்கும் அவசியம் தெரிந்தாக வேண்டும்.

  வளர் இளம் பருவ குழந்தைகள், ஆண் பெண்ணிடம் பேசவும் பெண் ஆணிடம் பேசவும் ஆர்வம் காட்டுவது இயல்பு. அப்படி ஆர்வம் காட்டவில்லை என்றால், ஏதோ உடலில் கோளாறு இருக்கிறது என்று பொருள், அப்போது பெற்றோராகிய நாம் கவலைப்பட வேண்டும். ஆனால் அந்தப் பருவத்தில் பிள்ளைகளை பெற்றோர் தீவிரமாகக் கண்காணிக்கவும் வேண்டும். அவர்களிடம் பாலியல் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை தெளிவாகவும் கண்டிப்பாகவும் எடுத்துச் சொல்லியாக வேண்டும். பெண் குழந்தை கற்பமாகி விட்டால் அது எவ்வளவு பெரிய துயரத்தை அந்தக் குழந்தைக்கும், குடும்பத்திற்கும் ஏற்படுத்திவிடும்! அதுவும் அந்தக் குழந்தைகளுடன் பழகியவன் ஒரு பாலியல் நோயாளி என்றால் அந்த நோய் குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளும் என்பதையும் எடுத்து விளக்கிச் சொல்ல வேண்டும்.

  குழந்தைகளுக்கு இருக்கும் பாலியல் ஆர்வத்தைத் தவறாகப் பயன்படுத்த கயவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. சமீபத்தில் ஒரு வாய்ப் பேச முடியாத குழந்தையை வாட்ச்மேன் கெடுத்ததுடன், அவனது நண்பர்களும் கெடுக்க உதவி செய்திருக்கிறான். இது சில ஆண்டுகளாகவே நடந்திருக்கிறது. எனவே தான் பெற்றோர்கள் பெண் குழந்தைக்கு இந்த விவரங்கள் எல்லாம் கூச்சப்படாமல் விளக்கிச் சொல்லிவிட வேண்டும். உடல் புனிதமானது என்றும், அடுத்தவர் எவரும் குழந்தையின் உடலைத் தொட எந்த தகுதியும் இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உணர்த்த வேண்டும். அதுபோல ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடக் கூடாது என்று ஆண் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

  குறிப்பு: இங்கு குழந்தைகள் என்று நான் குறிப்பிடுவது 18 வயது நிரம்பாத மனிதர்களைத்தான்.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  ஒரு பெண், தத்துவ மேதையான அரிஸ்டாட்டிலை சந்தித்தாள். அப்போது அவரிடம் அப்பெண், ஐயா என் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதை  எப்போது தொடங்க வேண்டும் என்று கேட்டார்.

  இதற்கு அவர் அம்மா உன் மகனின் வயது என்ன என்று கேட்டார்.

  என் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது என்று பதில் அளித்தாள் அப்பெண்.

  இதைக் கேட்ட உடனே அரிஸ்டாட்டில் கோவமாக கத்தத் தொடங்கினார்.

  உடனே நீங்கள் வேகமாக வீட்டிற்குச் சென்று உன் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் போங்கள், ஏற்கனவே அவனுக்கு ஐந்து வருடங்கள் வீணாக்கிவிட்டாய்.

  ஒரு குழந்தைக்கு கல்வி கற்றுக்கொடுப்பது என்பது அந்தக்குழந்தை பிறந்த உடனேயே தொடங்கி விடுகிறது. குழந்தைகளின் முதல் ஆசிரியர் அவர்களின் பெற்றோர்கள் தான். ஏன் என்றால் அவர்கள் தான் வீடு என்ற பள்ளியில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை முதலிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள் என்று கூறினார்.

  வெற்றி கொள்வோம்

  கவிஞர் இணங்கனூர் தமிழரசு வள்ளல்

  அரவக்குறிச்சி

  முதன்முதலில் சாதியில்லை!

  முளைத்ததுவே தொழிற்கூறில்!

  அதன்பின்னர் வந்தபிணி

  அறியாமை காரணியே!

  சதிகாரக் கும்பல்தான்

  சாதிவெறி நாட்டாண்மை!

  மதிநெறிக்குப் பொருந்திடுமோ

  மனிதனுக்குப் பெருமையாமோ!

  அன்புக்குச் சாதியேது!

  அறத்துக்குச் சாதியேது!

  பண்புக்குச் சாதியேது!

  பரிவுக்குச் சாதியேது!

  நன்மைக்குச் சாதியேது!

  நலத்திற்குச் சாதியேது!

  உண்மைக்குச் சாதியேது!

  உயிருக்குச் சாதியேது!

  உடலுக்குச் சாதியில்லை!

  உளத்திற்குச் சாதியில்லை!

  உடுப்புக்குச் சாதியில்லை!

  உணர்வுக்குச் சாதியில்லை!

  தடத்திற்குச் சாதியில்லை!

  தாகத்திற்குச் சாதியில்லை!

  கடவுளுக்குச் சாதியில்லை!

  காற்றுக்குச் சாதியில்லை!

  போதிமரப் புத்தர்தம்

  போதனைதான் சாதியாமோ!

  ஓதியுணர் ‘குர்ஆனின்’

  உன்னதந்தான் சாதியாமோ!

  நீதிநெறி ‘விவிலியத்தின்’

  நிலைப்பாடு சாதியாமோ!

  சாதிமத வெறிகொல்வோம்

  சமன்பாட்டில் வெற்றி கொள்வோம்!