Home » Cover Story (Page 2)

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு

ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ

மருத்துவத் துறை

2018 ஆம் ஆண்டிற்கான

நோபல் பரிசு பெற்றவர்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற குறளில் வள்ளுவர் நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும், அதுவே சிறந்த மருத்துவரின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். இதை தற்போது மருத்துவத் துறையில் நிகழ்த்திகாட்டியிருக்கிறார்கள் இருவர்.

உலகளவில் பெரிதும் மதித்துப் போற்றப்படும் பரிசு நோபல் பரிசாகும். தலை சிறந்த ஆய்வு மேற்கொண்டதற்கும், இச்சமுதாயத்திற்கு பெரிதும் மாற்றம் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிசார் கண்டுப்பிடிப்பவர்களைப் போற்றும்  விதமாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது உலகின் தலைசிறந்த விருது என்பதால் கண்டுபிடிப்பாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இது ஒரு இலட்சிய விருது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் எல்லா ஆண்டும் இவ்விருது வழங்கப்படவில்லை. விருதுக்குத் தேர்ந்தெடுத்தவர்களும் இவ்விருதை வாங்க மறுத்திருக்கிறார்கள். இதுபோன்ற எத்தனையோ சுவாரசியங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் மருத்துவத்துறையில் இந்த ஆண்டிற்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசுகு ஹோஞ்சோ அவர்கள் பரிசைப் பெற்று சாதித்திருக்கிறார்கள்.

நோபல் பரிசு உருவாக்கிய விதம்

ஆல்ஃபிரட் நோபல் சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் என்ற நகரில் பொறியாளர் பின்னணியுடைய குடும்பத்தில் பிறந்தார். இவர் சின்ன வயதிலேயே பன்முகத்திறமைக் கொண்டவராக விளங்கினார். அதிலும் குறிப்பாக இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளும் அடங்கும். மேலும் வேதியியலாளர், பொறியியலாளர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மேலும் போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார்.  இவர் 350க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித் துள்ளார்.

ஒரு நாள் புகழ் பெற்ற பிரெஞ்ச் செய்தித்தாளில் மரண வியபாரி இறந்துவிட்டார் என்ற தலைப்பில் நோபல் இறந்ததாக செய்தி வந்தது. அச்செய்தியைப் பார்த்த நோபல் அதிர்ந்து போனார். ஆனால் அன்று இறந்தது அவரின் சகோதரர். பெயரையும் படத்தையும் தவறாகச் சித்தரித்து வெளியிட்டது. ஆனால் அந்தச் செய்தி அவரை பெரிதும் சிந்திக்க வைத்தது. மரணத்திற்குப் பின்னர் தன்னை எவ்வாறு சித்தரிப்பார்கள் என்பதை மரணத்திற்கு முன்னே அறிந்து கொண்ட நோபல் தான் இறந்த பின்னர் தன்னை மதிக்க வேண்டும் என்று யோசித்து நோபல் பரிசு என்னும் விருதை உருவாக்கினார்.

இவ்விருது எல்லாத்துறைகளுக்கும் வழங்காமல் மனித இனம் முன்னேற்றத்திற்கு எந்தெந்த துறைகள் பயனுள்ளதாக இருக்கிறதோ அதையெல்லாம் ஒன்று சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று உயிலில் எழுதினார். அந்த வகையில்

இயற்பியல்

வேதியியல்

மருத்துவம்

இலக்கியம்

அமைதி

என ஐந்து துறைகளில் பரிசு வழங்கலாம் என்றும் அதற்கு தன்னுடைய சொத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன்பிறகு பொருளாதாரத்துறைக்கும் இவ்விருது வழங்கப்படலாம் என்றும் முடிவெடுத்தது. அதன் பிறகு வேறு எந்த புது துறைக்கும் விருதுகள் வழங்கப் போவதில்லை என்று  நோபல் அறக்கட்டளை முடிவெடுத்தது. அவரின் சொல்லின் படி நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 தேதி அன்று ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்படும். இவ்விருதின் மதிப்பு ரூ. 8 கோடி ஆகும்.

நோபல் பரிசு வென்ற தமிழர்கள்:

1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சர்.சி. இராமன் அவர்கள் பெற்றார்.

1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பெற்றார்.

2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் பெற்றார்.

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கும், அன்னைதெரசா, கைலாஷ் சத்தியார்த்தி ஆகியோர் அமைதிக்கான பரிசைப் பெற்றவர்கள்.

ஜேம்ஸ் ஆலிசன் :

அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தற்போது எம்.டி ஆண்டர்ஸன் புற்றுநோய் மைய இயக்குநராக இருக்கிறார். புற்றுநோய் சிகிச்சையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு 10 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று இருக்கிறார். இவரின் மனைவி பத்மானி சர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கயானா நாட்டில் பிறந்தவர். இவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை இந்தியர், தாயார் கயானா. பத்மானி அவர்கள் சின்ன வயதிலேயே கயானாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று விட்டார்கள்.

ஜேம்ஸ் ஆலிசனின் தாயார் மற்றும் இவரது இரண்டு மாமாக்கள் ஆகியோர் புற்றுநோயால் மரணம் அடைந்தவர்கள். எவ்வளவு போராடியும் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை அதுவே இவரின் சாதனைக்கு மூலக்காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டார்.

நோபல் பரிசு அக்டோபர் 1 ஆம் நாள் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இரவு நேரம். பரிசு  அறிவித்தவுடன் சிலர் அவரைத் தொடர்பு கொள்ள முனைந்தார்கள். ஆனால் அவரின் தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மகனிற்கு அழைத்து விருது கிடைத்தது பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் நடு இரவு என்பதால் செய்திதை உடனே சொல்ல முடியவில்லை. அதன் பிறகு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டுள்ளார்.

இவர் பல வருடங்கள் அல்லும் பகலும் அயராது ஆய்வு செய்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய இவ்வாய்வை மேற்கொண்டு தற்போது சாதித்துள்ளார்.

டசுகு ஹோஞ்சோ:

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். நோய் எதிர்ப்புத்துறை வல்லுநரான இவர், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு உறுப்பினராக இருந்தவர். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த இதழை மேலும்

ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!

எஸ்.சண்முகம், தலைமையாசிரியர் (பணி நிறைவு)

தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்

கவுந்தப்பாடி, பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.

தேடிச் சோறு நிதந்தின்று பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி- மனம்

வாடித் துன்பம் மிக உழன்று பிறர்

வாடப் பல செயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ…?

என்ற பாரதியின் வைர வரிகளுக்கு ஏற்றாற் போல வாழும் உன்னத மனிதர். எதிர்காலச் சமுதாயத்தை ஒரு ஏற்றமிகு சமுதாயமாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த வகையில் இவர் பணியாற்றிய அத்தனை பள்ளிகளையும் தரமானதாக உயர்த்தி சாதித்துள்ளார்.

சிறந்த ஆசிரியர், மிகுந்த மனித நேயப் பண்பாளர், மாணவர் நலனே தன் நலன் எனக் கருதுபவர், தலைமைப் பண்பு மிக்கவர், சிறந்த ஆளுமைத்திறன் மிக்கவர், சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர், பேச்சு ஆளுமை மிக்கவர்….. இப்படி பன்முகத் திறமை பெற்றவர் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றதிரு. எஸ். சண்முகம் அவர்கள். அவரது நேர்முகம் இனி நம்மோடு…

கே.உங்களின் பிறப்பு பற்றிச் சொல்லுங்கள்?

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்பலூர் என்னும் கிராமத்தில் சுப்பிரமணியம்-மாராயாள் தம்பதியரின் ஆறு மகவுகளில் தலை மகனாக 1955-ல் பிறந்தேன். எனக்கடுத்து ஒரு தங்கை, பெயர் சிவகாமி. அதன் பின் தங்கவேல், மூர்த்தி, கணேசன், ஆறுமுகராஜன் என நான்கு தம்பியர்கள். எனது தந்தையார் கிராமத்திலேயே சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். பொருளாதார ரீதியாகச் சிரமம் இருந்த போதிலும், வறுமையிலும் செம்மை வாழ்க்கை வாழ்ந்தனர் என் பெற்றோர். குழந்தைகள் அனைவருக்கும் உயர் கல்வி தர முடியா விட்டாலும் உயிரினும் மேலான ஒழுக்கங்களை கற்பித்தார் என் தந்தையார். நல்ல பேச்சு, பெரியோரிடம் மரியாதை, தீமையிலிருந்து விலகி இருத்தல், பணிவு, இன்சொல் பேசுதல், நல்ல நண்பர் சேர்க்கை, மற்றும் உறவுகளைப் பேணுதல் போன்ற மனிதப் பண்புகளை உணவுடன் சேர்த்து உணர்வுடன் ஊட்டி வளர்த்தார். இன்றளவும் அப்பண்புகள் எங்களின் குடும்பச் சொத்தாக இருந்து கொண்டிருக்கின்றன. அப்பண்புகளோடு வளர்ந்த என் தங்கை மற்றும் தம்பியர் குடும்பங்களும் நன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. என் சித்தப்பாவின் ஒரே மகன் என் தம்பி சரவணன் எம்.இ., ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டு கோபியில் குடும்பத்துடன் நன்கு வசித்து வருகிறார்.

கே.உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

கொளப்பலூர் என்னும் கிராமத்தில் பிறந்த நான் ஆசிரியப் பணியின் பொருட்டு எனது குடும்ப வாழ்க்கையை பவானி வட்டம் கவுந்தப்பாடி என்னும் ஊரில் அமைக்க நேர்ந்தது. எனது மனைவி திருமதி. அ.சந்திரா அங்கிருந்த அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் வேதியியல் முதுகலை ஆசிரியையாகப் பணியாற்றினார். எங்களுக்கு நவீன்பிரபு, கௌதம் என்று இரண்டு மகன்கள். அவர்களின் பள்ளிப் பருவத்திலேயே ஆசிரியையாகப் பணியாற்றிய எனது மனைவி 1999-ல் மறைந்து விட்டார்கள். இரண்டு ஆண்டுகள் குடும்பத்தையும் ஆசிரியப் பணியையும் ஒரு சேரக் கவனிக்க முடியவில்லை. இச்சமயத்தில் அருகிலுள்ள கோபியில் சி. கே. கே. மெட்ரிக் பள்ளியில் பணியாற்றிய திருமதி. ஆ. அலமேலு பி. காம்  என்பவர்க்கும் என்னைப் போலவே மறுமணத் தேவை இருப்பதை அறிந்தேன். அவர்களை 2001-ல் மறுமணம் செய்து கொண்டேன். அவர்களின் ஒரே மகள் கீர்த்தனாவை, தற்போது பி.டெக்., பட்டதாரி, என்னுடைய மகளாகவும் வரித்துக் கொண்டு, இப்போது கவுந்தப்பாடியில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் எஸ். நவீன்பிரபு பி.டெக், மருமகள் எம். அனுப்பிரியா எம்.சி.ஏ., இருவரும் நல்ல உத்தியோகத்தில் பேத்தி ஹனுஸ்ரீ உடன் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இளைய மகன் எஸ். கௌதம், மருமகள் கரிஷ்மாகோபி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். அவர்களும் சென்னையில் நல்ல தனியார் நிறுவனங்களில் பணியாற்றி நலமுடன் வசித்து வருகிறார்கள்.

கே. உங்களின் பள்ளி மற்றும் உயர் கல்வி பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் கிராமத்திலேயே புனிதமரியன்னை பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் அதன் பின் பதினொன்றாம் வகுப்பு வரை நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்த கெட்டிச் செவியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்து சென்று என் பள்ளிப் படிப்பை முடித்தேன். 1973-ல் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் பள்ளி முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். 1974 முதல் 1977 வரை கோபி கலைக்கல்லூரியில் பயின்று வேதியியல் பாடத்தில் இளங்கலைப்பட்டமும், 1979-ல் கேரளாவில் உள்ள கொச்சின் பல்கலைக்கழகத்தில் அதே பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். ஆசிரியராகப் பணியேற்ற பின் பி.எட்., எம்.எட்., மற்றும் எம்.பில்., பட்டங்கள் பெற்றேன்.

கே.ஆசிரியப் பணியில் தாங்கள் சேர்ந்தது குறித்துச் சொல்லுங்கள்?

1978-ல் தமிழகத்தில் 2 கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிக் கல்வி ஒட்டுமொத்தமாக ஒரு புதிய மாற்றத்தைப் பெற்ற காலகட்டம் அது. நானும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்திருந்த வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வேதியியல் பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக அரசால் நியமிக்கப்பட்டேன். என்னை ஆசிரியனாக அறிமுகப்படுத்திக் கொண்டு வால்பாறை பள்ளியில் நான் எடுத்த முதல் வகுப்பு தனிமங்கள் (elements) பற்றியது. அந்த வகுப்பின் நாற்பத்தைந்தாவது நிமிட முடிவில் என் எதிரே அமர்ந்திருந்த மாணவச் செல்வங்களின் வியப்பால் விரிந்த விழிகளையும், ஒருவித உற்சாக அதிர்வலைகளையும் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து போனேன். நான் கற்றதைப் பிறருக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்குள் இருப்பதை நான் உணர்ந்த ஆசிரிய மற்றும் ஆச்சரிய நிமிடங்கள் அவை. ஆசிரியப் பணிக்கெனவே நான் படைக்கப்பட்டதை உணர்ந்து, 1980 முதல் 2014 வரை 34 ஆண்டுகள் அந்த அறப்பணிக்காகவே என்னை அர்ப்பணித்தேன்.

கே. தங்களின் ஆசிரியப் பணிக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

1980-ல் முதுகலை வேதியியல் ஆசிரியராகி வால்பாறை, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டம் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒலகடம் மேல்நிலைப் பள்ளி, நான் பயின்ற கெட்டிச்செவியூர் மேல்நிலைப் பள்ளி, கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி    இவைகளில் பணியாற்றினேன். வேதியியல் பாடத்தை அறவே வெறுக்கும் மாணவனும் அப்பாடத்தை விரும்பும் வண்ணம் போதிப்பதில் கவனம் செலுத்தினேன். நான் நேசித்து நடத்திய பாடம் என்பதால், முதலில் என்னை நேசித்த மாணவனை மெதுவாக என் பாடத்தையும் நேசிக்க வைத்ததை என் ஆசிரியப் பணியின் வெற்றியாகக் கருதுகிறேன்.

வகுப்பறைகளில் வேதியியல் பாடத்தோடு மாணவ மாணவியர்க்கு அவர்களின் எதிர் கால வாழ்க்கை பற்றிய புரிதலையும் கற்றுக் கொடுக்க முயற்சிப்பேன். பாடம் என்பது வெளியிலிருந்து நான் தருவது என்பதையும், கல்வி என்பது அவனுக்குள் இருந்து வெளியில் வருவது என்பதையும் புரியவைப்பேன். கற்க வரும் மாணவரிடம் அவர்தம் குடும்பப் பின்னணி கேட்டறிந்து, அனைவருமே குபேரன் வீட்டுக் குழந்தைகளாகப் பிறப்பதில்லை எனச் சொல்லி நேர்மையான உழைப்பு அந்த நிலைக்கு அவர்களை உயர்த்தும் என்று உணர வைப்பேன். பல மாணவர்களின் உயர் படிப்பிற்காக பலரிடம் நிதி உதவி பெற்று படிப்பு தொடர உதவியுள்ளேன். அப்படிப்பட்ட மாணவக் கண்மணிகள் இதய நோய் நிபுணர் டாக்டர் வேதநாயகம், பொறியியல் பட்டதாரி தருண் மற்றும் தீபிகா, செவிலியர் ஷாலினி ஆகியோராவர். “மாணவர் பாதங்களை வெயில் சுட்டால் காலணியாகும் இவரின் இதயம்” என்று என் ஆசிரிய நண்பர்  அந்தியூர் திரு. சுகதேவ் எனக்காக எழுதிய வரிகளுக்கேற்ப என் ஆசிரியப் பணி அமைந்திருந்தது இறைவனின் சித்தமே.

கே. தங்களின் தலைமையாசிரியர் பணி பற்றிச் சொல்லுங்கள்?

24 ஆண்டுகள் ஆசிரியப் பணிமுடித்த பின், 2004-ல் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றேன். ஆசிரியர் என்ற நிலையிலிருந்து நிர்வாகி என்ற அடுத்த கட்டத்திற்கு எனது பயணம் தொடங்கியது. நன்முறையில் எனது ஆசிரிய மற்றும் நிர்வாகப் பணி தொடர காலமும், இடமும், சூழ்நிலையும், நல்ல ஒத்துழைப்பும் அந்தியூர் பள்ளியில் எனக்குக் கிடைத்தன.

பள்ளி நலனில் அக்கறை கொண்ட ஆஸ்திரேலிய டாக்டர் உயர்திரு. இராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் திரு. பத்மநாபன், திரு. கோவிந்தராஜ், அரிமா சங்கத்தினர், நண்பர் திரு. ஜலால் மற்றும் பல ஊர்ப் பிரமுகர்களின் சீரிய உதவி நன்கு கிடைத்தது. மேலும் என் தலைமையின் கீழ் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இவற்றால் அப்பள்ளிக்கு ஈரோடு மாவட்டத்தின்  ஆட்சியர்களிடமிருந்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான முதல் மற்றும்  இரண்டாம் இட மாவட்ட மதிப்பெண்களுக்காக ஆறு முறை விருதுகள் பெற்றுத் தரும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். அங்கு பணியாற்றிய போது தான் ஊர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தால் கல்விச்சிற்பி என்ற பட்டமும், Top light என்னும் அமெரிக்க நிதியுதவி அமைப்பு மூலம் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்ட வாய்ப்பையும், அரிமா சங்கம், JCI அமைப்புக்கள் மூலம் சிறந்த தலைமையாசிரியர் என்ற பட்டமும் கிடைக்கப் பெற்றேன்.

கே. தாங்கள் கடைசியாகப் பணியாற்றிய பள்ளி அங்கு தங்கள் பணி பற்றிக் கூறுங்கள்?

எனக்கு வாழ்வியல் ஆதாரம் தந்த தற்போது நான் வாழ்ந்து வரும் கவுந்தப்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக 2010-ல் பணி மாறுதல் பெற்றேன். அப்பள்ளியிலும் ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட மதிப்பெண்களுக்காக மூன்று ஆட்சியரிடமிருந்து ஐந்துமுறை விருதுகள் பெற்றுத் தந்த பாக்கியம் வாய்க்கப் பெற்றேன். ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளிலேயே முதல் முறையாக மாநில இடம் பெற்றமைக்காக அப்போதைய முதல்வர் மறைந்த மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழை பள்ளிக்குப் பெற்றுத் தந்தேன். அப்பள்ளியில் பணியாற்றிய போது இரண்டு இந்திய சுதந்திர தின விழாக்களில் இரண்டு முறை அப்போதைய மாவட்ட ஆட்சியர்களால் சிறந்த தலைமையாசிரியருக்கான விருதுகள் கிடைக்கப்பெற்றேன்.

அக்காலகட்டத்தில்  பெங்களூரு தமிழ்ச்சங்கம் என்னை அழைத்து திராவிட கழகத் தலைவர் உயர்திரு. கி.வீரமணி அவர்களது தலைமையில் ஒரு பாராட்டு விழா நடத்திச் சான்றிதழ் வழங்கியது. 2012-ல் ஆசிரியப் பணிக்காக தமிழக அரசு எனக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தது. அப்போது ஊர் மக்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் சீருடை அணிந்த மாணவிகளோடு ஊர்வலமாக பள்ளிக்கு என்னை அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர்.  மேலும் எண்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய நபார்டு வங்கி கட்டடமும், சவீதா பல்கலைக்கழக வேந்தர் மரியாதைக்குரிய டாக்டர். என்.எம். வீரையன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் பள்ளிக்கு ஒரு கலையரங்கமும் என்னுடைய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டதை மிகுந்த மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன். 31.05.2014-ல் எனது ஆசிரியப் பணி முழு மன நிறைவுடன் நிறைவடைந்தது.  “ஆசிரியம் என்பது தொழில் அல்ல; அது  ஒரு வாழ்க்கை நெறிமுறை,” என ஆசிரியப் பணியாற்றி பணி திருப்தியுடன் (Job satisfaction) தற்போது வாழ்ந்து வருகிறேன்.

இந்த இதழை மேலும்

கல்லூரிக் கனவுகள்…! களையாத நினைவுகள்…!

25 ஆம் ஆண்டு வெள்ளி விழா

முன்னாள் மாணவர்கள் (1989-1993)

வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

மதுரை

நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்

பள்ளிக்காலம் என்பது பசுமையான நினைவுகள், கல்லூரிக்காலம் என்பது காலம் முழுவதும் மாறாத நினைவுகள். இந்நினைவுகளை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

முகம் தெரியாமல், முகவரி தெரியாமல் அனைவரும் ஒரே கூண்டிற்குள் வரும் பறவையைப் போல கல்லூரிக்கு வந்து, நண்பர்களிடம் பழகி, பிறகு முடிக்கின்ற காலத்தில் கல்லூரி முழுவதும் உறவுகளாக்கிக் கொள்வது தான் நினைவுகள்.

அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்  மதுரை வேளாண் கல்லூரி படித்த அப்போதைய மாணவ மாணவியர்கள், தற்போது 90 % அரசுப்பணி ஊழியர்கள், 5% பேராசிரியர்கள் 5 % தனியார் துறையில் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள்.  அவர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் மதுரை வேளாண் கல்லூரியில் நடைப்பெற்றது. முகமலர்ச்சியான இத்தருணத்தில் அவர்களை சந்தித்தோம்.. அப்போது அவர்களின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து  கொண்டார்கள் அதிலிருந்து நாமும் பயணிப்போம்.

கே : மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தின் தோற்றம் பற்றிக் கூறுங்கள்.

இக்கல்லூரியானது 1965 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திரு. கக்கன் அவர்கள் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது.  கல்லூரித் தொடங்கிய காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது. அதன் பிறகு 1977 ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் வந்தது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் 1989 முதல் 1993 ஆண்டு படித்த மாணவர்கள் தான் நாங்கள். எங்களின் 25 வது ஆண்டு வெள்ளி விழாவை தற்போது இக்கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடினோம்.

கே : உங்களின் கல்லூரி அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

இப்பொழுதும் எங்களுக்கு நினைவு இருக்கிறது. 1989 ஆண்டு  நாங்கள் கல்லூரியில் சேர்ந்து அந்த முதல் நாள். இங்குள்ளவர்களில் பெரும்பாலனோர் கிராமப்பின்னணியில் இருந்து வந்தவர்கள். யாரும் யாருக்கும் அறிமுகமில்லாதவர்கள். எல்லா வகுப்பையும் போலவே  எங்கள் வகுப்பிலும் பெண்களே அதிகம் இருந்தார்கள், 59 பெண்கள், 17 ஆண்கள் இருந்தோம். எல்லோரும் ஒவ்வொரு கனவுகளுடன்  கல்லூரிக்கு வந்தோம்.

சிறிது நாட்களிலேயே  அனைவரிடமும் அன்பாகப் பழக ஆரம்பித்துவிட்டோம். கல்லூரி என்றாலே கலகலப்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது. சொந்த பெயரை விட ஒவ்வொருக்கும் ஒரு மாற்றுப் பெயரை வைத்து தான் அழைப்போம்.

எங்களுக்கு வந்த பேராசிரியர்களும், முன்னாள் சீனியர் மாணவ மாணவியர்களும் எவ்வித சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடன் அதனைத் தெளிவுப்படுத்தி விடுவார்கள். அந்தளவிற்கு இணக்கமான நட்புக் கொண்டிருந்தார்கள். தேர்வு காலங்களிலும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம். இப்படியே எங்களின் இந்த இனிமையான பயணம் தொடர்ந்து சென்றது.

கே: நீங்கள் கல்லூரி முடிந்தவுடன் இதுபோன்று சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொண்டீர்களா?

ஆம். கல்லூரி முடித்துவுடன் விடை நல்கு விழாவில் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்முடைய நட்புத் தொட வேண்டும் என்றால், நம் ஆண்டிற்கு ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தோம். அப்போதைய சூழலில் அது சரியாக இருந்தது. எங்கள் பேஜில் பெண்கள் அதிகம் என்பதால் அவர்களை அனைவரையும் ஒற்றிணைக்க முடியவில்லை.

ஒவ்வொருவரும் கல்லூரியை முடித்தவுடன் திருமணம், மேல்படிப்பு, உள்நாடு மற்றும், வெளிநாடுகளில் வேலை என்று ஒவ்வொரும் இரைத் தேடும் பறவைகளாக பல திசையில் சென்று விட்டார்கள். இது காலத்தின் கட்டாயம் தான் இதை மாற்ற முடியாது. எல்லோரிடமும் பேச முடியவில்லை என்றாலும் சிலர் அன்று முதல் இன்று வரை நட்பைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.

கே : பலதிசைகளில் உள்ளவர்களை எப்படி ஒன்றிணைத்தீர்கள்?

தற்போது அறிவியிலின் வளர்ச்சி அதிகமாக வளர்ந்துள்ளதால் சமூக வலைதளங்கான வாட்ஸ் ஆப், பேஸ்புக்,  ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்திக்  கொண்டோம். 2 மாதங்களுக்கு முன்னரே இதற்கான திட்டத்தைத் தீட்டினோம். அதன் படி அதற்கு என்று தனித்தனியே குழுக்களைப் பிரித்து அனைவரையும் அழைத்து விட வேண்டும் என்று நினைத்தோம். அதன் விளைவாக சுமார் 39  பேர் பங்கு பெற்றார்கள் வெளிநாடுகளில் இருந்தவர்கள் சிலர் ஸ்கைப் மூலம் தாங்கள் வர முடியாத காரணத்தையும், அடுத்து முறை வருகிறேன் என்ற உத்திரவாதத்தையும் கொடுத்தார்கள்.

கே : அன்று ஒரு நாள் நிகழ்வு எப்படியிருந்தது?

நாங்கள் நினைத்தது போலவே தூரத்திலிருந்து வந்தவர்கள் ஒரு நாள் முன்னரே விழா நடக்க இருக்கும் ஹோட்டல் ஆகாஷ் கிளப்பிற்கு வருகைப் புரிந்து விட்டார்கள்.

4 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கெல்லாம் விழா இனிதே தொடங்கியது.  பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மனதில் மிகுந்த முகமலர்ச்சியுடன் சந்தித்து, கைக்குலுக்கி வரவேற்று கொண்டோம்.

5 ஆம் தேதி  காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கிய விழாவில் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அன்று உலக நண்பர்கள் என்பது எங்கள் விழாவிற்கு கூடுதல் பலம் கொடுத்தது.  படிக்கின்ற காலத்திலும் தற்போதும் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளையும், செய்யும் உதவிகளையும் கூறிக்கொண்டார்கள். அனைவரிடத்திலும் முகம் மாற்றம், உடல் மாற்றம் இருந்தது. மாணவர்களாய் பிரிந்து இன்று பல அதிகாரிகளாய் சந்தித்துக் கொண்ட அத்தருணம் மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது. குறிப்பிட்ட நேரப்படி ஒவ்வொரு நிகழ்வையும் சரியாக அமைத்துக்  கொண்டோம்.   பிறகு நாங்கள் அமர்ந்து படித்த வகுப்பை, பேராசிரியர் முருகன் அவர்கள் அழைத்துச் சென்று காட்டினார். மனதிற்குள் மீண்டும் நாங்கள் படிக்க வந்ததாகவே உணர்ந்தோம். அந்தளவிற்கு மட்டற்றமகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த வகுப்பில் நாங்கள் செய்த அத்துனை நிகழ்வுகளும் எங்கள் மனக்கண் முன் காவியமாக ஓடியது. மற்ற நாட்கள் கடிகார முள் சுற்றுவதை விட அன்று வேகமாகச் சுற்றியதை எங்களால் உணர முடிந்தது. கல்லூரிக்கு முன்வாயலில் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

கே: 25 ஆண்டுகளின் உங்களின் கல்லூரி நினைவுகள் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் எங்களின் கால் தடம் படாத இடமே எதுவுமில்லை என்று தான் சொல்ல  வேண்டும். அதற்கு இங்குள்ள மரங்களும் கட்டிடங்களும், கேண்டீனும் தான் சாட்சி.

எல்லா மரங்களும் எங்களைப் பற்றி நன்றாக கூறும், அமர்ந்து படித்த போதும், சாப்பிடும் போதும், நண்பர்களிடம் அரட்டை அடித்த போதும் எங்களோடு ஒன்றோடு ஒன்றாக இருந்த இந்த மரங்கள் தான்.

நாங்கள் படித்த போது இருந்ததை விட நிறைய கட்டிடங்கள் தற்போது வளர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும் எங்களின் கல்லூரி நினைவுகளை நினைவுப்படுத்தும் எத்தனையோ நினைவுச் சின்னங்கள் இன்னும் இருக்கிறது.  மீண்டும் கையில் புத்தகத்துடன் நண்பர்களோடு ஒன்றாக வகுப்பிற்குச் சென்ற அந்த நாட்கள் வராத என்ற ஏக்கமும் எங்களுக்குள் இருக்கிறது.

நாங்கள் படித்த போது இருந்த பேராசிரியர்கள் இன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் மனதிற்குள் ஆனந்தமே தென்பட்டது.

இந்த இதழை மேலும்

விழிப்போடு இரு விண்ணைத் தொடு…

C.பிரதீப்

நிர்வாக இயக்குநர், ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ்

நிர்வாக அறங்காவலர்,லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன்,

கோவை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற பொன் மொழிக்கு ஏற்றவாறு முதல் தலைமுறையினரின் வழிகாட்டுதலால் இரண்டாம் தலைமுறையினரான இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையைôய் வாழ்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருபவர்களில் இவரும் ஒருவர்.

நம்பிக்கையோடு நடைபோடு நாளைய உலகம் உன் கையில் என்ற தாரக மந்திரத்தை நாளெல்லம் நினைத்து, அதன் வழி உழைத்து, இன்று உயர்ந்த சாதனையாளர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

தோல்வி வரும் போது அதைப் படிக்கற்கலாக மாற்றுங்கள், அதுவே வெற்றி பெரும் பொழுது அதை ஊக்கப்படுத்தும் கருவியாகக் கொண்டு மேலும் வளருங்கள் என்னும் தன்னம்பிக்கை வரிகளுக்குச் சொந்தகாரர்.

உன்னதமான பல சேவைகளை செய்து, கூட்டாக, குழுக்களாக ஒன்றிணைந்து இயற்கையோடு இணைந்து வாழ மரங்கள் நட்டும், பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் சுய வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்திருக்கும் சாதனையாளர்.

இவரின் மிகப்பெரிய பலம் சகோதரத்துவம் சார்ந்த ஒற்றுமை, முதல் தலை முறையினரின் வழிகாட்டுதலை பேணுதல், சிறந்த மேலாண்மைத்துவம் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடியவர், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மிக்கவர் இப்படி பன்முகம் திறமைக் கொண்ட ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ் நிர்வாக இயக்குநர், லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் அறங்காவலர் C.பிரதீப் அவர்களின் நேர்முகத்திலிருந்து இனி பயணிப்போம்.

கே : உங்களின்கூட்டுக் குடும்பத்தைப் பற்றச் சொல்லுங்கள்?

எங்களுடைய பூர்வீகம் என்று பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இங்குதான் என் தந்தைப் பிறந்தார். என் தந்தையின் பெயர் திரு. பி. சந்திரசேகர், தயார் திருமதி. ஜெயலட்சுமி, பெரியப்பா பி. அன்பழகன், சித்தப்பா பி. ராமலிங்கம், மற்றும் பி. ஆறுமுகம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் என்னுடைய தாத்தா வெங்காய வியபாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இவ்வியபாரம் எப்பொழுதும் ஒரே விலை நிலையாக இருக்காது. இதனால் இத்தொழில் தொய்வு அடைந்தது.

சில ஆண்டுகளிலேயே என்னுடைய தாத்தா மரணம் அடைந்து விட்டார். இதனால் என் தந்தைக்கும் அவர் உடன்பிறந்தவர்களுக்கும் குடும்பத்தின் மீது பொறுப்பு கூடியது. இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முனைந்தார்கள். அப்போது அவர்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் இரண்டு ரூபாய் தான். என்னுடைய தந்தை சொல்வார் நான் திருமணத்தின் போது தான் கால்சட்டையே(பேண்ட்) அணிந்தேன் என்று, அந்தளவிற்கு அப்போது வறுமையின் பிடியில் இருந்தார்கள். அதன் பின்னர் ஒரு ஸ்கிராப் வியபாரிடம் வேலை செய்து வந்தார்கள் சிறிது காலத்தில் அவர்கள் ஸ்கிராப் பொருளை வாங்கி விற்பனை செய்தார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இப்படி பல சின்னவடிவில் கடைகளைத்திறந்தார்கள். பல சிக்கல்களுக்கும், துன்பத்திற்கு நடுவிலும் எப்போதும் எல்லோர் இடத்திலும் அன்பை மட்டுமே போதித்துக் கொண்டோம். எங்களுக்குள் அவ்வபோது கூச்சல் குழப்பம் இருந்தாலும், அன்பும் அரவணைப்பும், எங்களை ஒற்றுமையாகவே வைத்திருந்தது. இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்றளவும் நாங்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். அந்தக்குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

கே : நீங்கள் படித்தது பயின்றது பற்றிச்சொல்லுங்கள்?

எங்களுடைய பெற்றோர் பட்ட கஷ்டங்களை நாங்கள் படக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். எங்களின் வாழ்க்கையில் மிகுந்த அக்கரை எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தான் படிப்பதற்கு வசதியில்லாமல் படிக்கமுடியவில்லை. நம்முடைய பிள்ளைகள் நன்றாகப்படிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் கோவையிலுள்ள லெசியு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பி. எஸ். ஜி. டெக் கல்லூரியில் பேசன்ஸ் டிசைன்ஸ் படிப்பையும் படித்தேன்.

 ஆரம்பத்தில் நான் சராசரிக்கும் கீழ் படிக்கும் மாணவன் தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது பல தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். இதனால் என்னை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினார்கள், அந்தப் பார்வை தான் என்னை சிந்திக்க வைத்தது. நாமும் நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் எனக்குள் வந்தது. பிறகு தான் பாடத்திட்டத்தை விட எனக்கு என் குடும்பத்திலும் ஆசிரியர் இடத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் மனதிற்குள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பின்னர் தான் சுயமாய் முடிவெடுக்க ஆரம்பித்தேன். பாடத்திட்டத்தை விட எனக்கு கிடைத்த அனுபவம், சூழ்நிலைகள் போன்றவை தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இதற்கு என்பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் என் சுற்றத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.      

கே : பேசன்ஸ் டிசைன் முடித்த நீங்கள் தொழிலில் ஆர்வம் வந்தது பற்றி?

நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் முன்னாள் மாணவர்களுக்கு விடை நல்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இதனால் என்னுடன் பயிலும் சக மாணவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு விழா எடுக்க திட்டம் வைத்திருந்தோம். அதன் படி அனைவரும் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தில் அவர்களுக்கு உணவு பரிமாறினோம். மீதம் பணம் மிஞ்சியது. அந்தப்பணத்தை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான் தையல் மிஷின் வாங்கி வடவள்ளியில் உள்ள உதவும் கரங்களுக்குக் கொடுத்தோம். அப்போது என் மனதில் ஒரு புத்துணர்ச்சித் தோன்றியது.

அதன் படி பழைய இரண்டு மிஷன்களை வாங்கி அவற்றை சில வேலைபாடுகள் செய்து, தேவையான இருவர்களுக்கு கொடுத்தோம். ஆனால் வாங்கிய விலை குறைவு அவற்றை வேலைகள் செய்து கொடுக்கும் போது அந்த மிஷனில் இலாபம் கிடைப்பதை உணர முடிந்தது. ஒரு மிஷினுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை இலாபம் பார்த்தேன். மார்க்கெட்டில்  அதிக இலாபம் கிடைத்ததை என்னால் உணர முடிந்தது. இப்படித்தான் தொழிலில் வர முனைந்தேன்.

கே: குடும்பத் தொழிலில்  இணைந்தது பற்றிச் சொல்லுங்கள்?   

நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு விடுமுறை எனக்குக் கிடைத்தது, இதனால் இவ்விடுமுறையை சிறந்த முறையிலும், தேவையான வழியில் செலவிட வேண்டும் என்று நினைத்து முதன் முதலில் குடும்பத் தொழிலுக்கு வந்தேன். தினந்தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டே இருந்தேன். அடுத்த நாள் அடுத்த நாள் ஆர்வம் பெருகிக்கொண்டே போனது. சென்ற சில நாட்களிலேயே எனக்கு மிகப் பெரிய பொறுப்பை நம்பிக்கொடுத்தார்கள் அதையும் சிறப்பாக கையாண்டேன். எங்கள் குடும்பத்தைப் பொறுத்த வரை எல்லா இடத்திலும் எல்லாப் பணியிலும் பொறுப்புடன் கூடிய சுதந்திரம் கொடுத்தார்கள். இந்த சுதந்திரத்தை நான் முறையாகப் பயன்படுத்திக்  கொண்டேன். மூன்று ஆண்டு கல்லூரிப்படிப்பையும், எம். பி. ஏ பட்டப்படிப்பையும் படித்துக் கொண்டு தொழிலையும் பார்த்து வந்தேன்.

இந்த இதழை மேலும்

இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…

அறுசுவை வள்ளல் திரு. P. ரஞ்சித்’ஸ்

ரஞ்சித்’ஸ் பிளசிங் கேட்டரிங் ,

சமூக சேவகர் மற்றும் மனித நேய மாமணி,

கோவை.

மனித வாழ்க்கையில் அனைவருக்கும் இன்பமான வாழ்வு அமைவதில்லை. சிலர் அதை அடையமுடியவில்லை என்று ஆத்திரம் கொள்வர்கள் உண்டு, வருத்தம் கொள்பவர்களும் உண்டு இவர்கள் எல்லாம் வாழக்கையில் போராட முன் வராதவர்கள் என்றேசொல்லலாம். எவர் ஒருவர் துன்பத்தை ஏணிப்படிகளாக நினைத்து ஏற்றம் கொள்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் சற்றும் சளைத்தவர் அல்ல.

முயற்சி தோற்கலாம் முயற்சிகள் எப்போதும் தோற்கக்கூடாது என்பது தான் இவரது வேதவாக்கு, எப்போதும் சாதிக்க வேண்டும், தன் சாதிப்பால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருப்பவர்.

சிந்தித்து பேசினால் சிறப்பாய் இருப்பாய்

பொறுமையாய் பேசினால் அருமையாய் இருப்பாய்

உண்மையாய் பேசினால் உயர்வாய் இருப்பாய்

நன்மையாய் பேசினால் நலமாக இருப்பாய்

அன்பாய் பேசினால் ஆனந்தமாய் இருப்பாய்

ஆராய்ந்து பேசினால் அறிஞராய் இருப்பாய்

இஃது இவரின் மிகச்சிறந்த பொன்மொழிகள். எப்போதும்  எதுமை மோனையோடும் நகைச்சுவை கலந்தும் வெகுவாக அனைவரையும் கவரும் பேச்சாற்றல் மிக்கவர்.

எளிமை தான் இவரின் சிறந்த அடையாளம். மற்றவருக்கு உதவுதல்  என்பது இவரின் தனித்தன்மை படித்தது குறைவு என்றாலும் இன்று பார் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக் கிறார் என்றால் அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

மனித நேயமிக்கவர், வரியவருக்கு வாரியளிப்பவர், இறைப்பற்று மிக்கவர், சிறந்த நிர்வாகி, மற்றும் மனித நேய மாமணி அறுசுவை வள்ளல் ரஞ்சித்’ஸ் பிளசிங் கேட்டரிங் திரு. ட. ரஞ்சித் அவர்களின் நேர்முகத்தோடு இனி பயணிப்போம்.

கே: உங்களின் இளமைகாலம் பற்றிச் சொல்லுங்கள்?

எனது தந்தையின் ஊர் திருச்சி மாவட்டம் வேலைத் தேடி இலங்கையில் குடிப் பெயர்ந்தார்கள். அங்கு தான் நான் பிறந்தேன். பெற்றோர் பழனிசாமி மாரியம்மாள் இவரும் இலங்கையில் உள்ள அட்டன் என்னும் பகுதியில் டீ எஸ்டேட் தொழில் செய்து வந்தார்கள். அங்குள்ள அரசுப்பள்ளில் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னுடைய தந்தையின் வருமானம் உண்பதற்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. வறுமை எல்லாத் தருணத்திலும் எங்களோடு உறவு கொண்டேயிருந்தது. இதனால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பெற்றோர்களையும் கஷ்டபட வைக்க மனம் வரவில்லை. இதனால் அவர்களோடு நானும் இணைந்து அவர்கள் செய்யும் வேலையை நானும் செய்தேன். என்னுடைய 17 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறியது என்னுடைய குடும்பத்திற்கு அப்போது தெரியாது. எப்படியும் முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை மட்டும் என்னிடம் இருந்தது.

கே: வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அடுத்து உங்கள் வாழ்வில் நடந்தது பற்றி?

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் எங்கு செல்லலாம் என்றும் முடிவெடுத்தேன். எனக்கு இங்கு எல்லா இடமும் புதியது தான் என்பதால் ஊட்டியை நான் தேர்ந்தெடுத்தேன். காரணம் இலங்கையில் செய்த டீ எஸ்டேட் பணி ஊட்டியில் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு சென்றேன்.

பல இடங்களில் வேலைத் தேடி அலைந்தேன். நான் எண்ணியது எதுவும் நடக்கவில்லை. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் அப்போது தான் புரிந்து கொண்டேன். இரவு பகல் பாராமல் வேலைத் தேடி அலைந்து கொண்டேயிருந்தேன். இறுதியாக ஓரு ஹோட்டலில் மேசை கிளின் செய்யும் வேலை கிடைத்தது. சில மாதங்கள் செய்தேன். ஆனால் சம்பளம் முறையாக கிடைக்காததால் அங்கியிருந்து ஈரோடிற்கு சென்றேன். அங்கும் ஒரு ஹோட்டலில் கிளீனர் வேலையே செய்தேன். புஞ்சை புளியம்பட்டியில் வேலை செய்யும் போது ஹோட்டல் சார்ந்த அத்துனை நுணுக்கமான வேலையையும் கற்றுக் கொண்டேன். அப்போது எனக்குத் தெரியவில்லை நாம் ஹோட்டல் தொழிலில் இந்த அளவிற்கு சாதிப்போம் என்று.

தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் வேலைத் தேடி சென்றியிருக்கிறேன். இறுதியாக கோவை பகுதிக்கு வந்தேன். இப்படி சக்கரம் போல் ஓடிய வேலை செய்த போது என்னை நோய் படுக்கைக்கு கொண்டு போனது. அது தான் ப.ஆ நோய். இது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

இதனால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால் மருத்துவமனையில் ஒருவரை அட்மீட் செய்ய வேண்டுமென்றால் உறவினர்கள் யாராவது இருக்க வேண்டும் என்பது நியதி. அப்படியிருக்கும் பொழுது என்னை அரவணைக்கவோ, அன்பு செலுத்தவோ யாருமில்லை என்று சொல்லிவிட்டேன் இதனால் எனக்கு ஆதரவற்றோர் பெயர் பட்டியிலில் சேர்க்கப்பட்டு ஈழ். மோசஸ் அவர்கள் பரிவோடு சிகிச்சை அளித்தார்.

கே: சொந்தமாக எப்போது தொழில் தொடங்குனீர்கள்?

சிகிச்சை முடிந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எலும்பு மேல் போர்த்திய தோல் போல என் உடல் இருந்தது. இதனால்  வேலை கேட்ட இடத்தில் எல்லாம் என்னை நிராகரித்தார்கள். இனி எங்கேயும் வேலை கிடைக்காது என்றநிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது இத்தனை வருடங்கள் என்னுடைய ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு கைக்கொடுக்கும் என்றநம்பிக்கையில் இப்பகுதியிலேயே ஒரு சிறியதாக டீ கடை ஒன்றைஆரம்பித்தேன். நன்றாக போனாது, ஆனாலும் டீ கடையும் பார்த்துக் கொண்டு வீட்டுவீட்டுக்குச் சென்று மசாலாப்  பொருட்களை டோர்டெலிவரி செய்தேன். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு தூங்க 12 மணி ஆகிவிடும் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பேன். ஆனால் தொடங்கிய வேலைகள் அனைத்தும் தோல்விகளிலே முடிந்தது. ஆனாலும்  நான் ஒரு போதும் இதை நினைத்து துவண்டதும் இல்லை துயரம் கொண்டதும் இல்லை.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி என்னிடம் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொண்டேயிருப் பேன்.

நான் செய்யும் வேலையை விரிவுப்படுத்த கோவை கனரா வங்கியில் கடன் வாங்கினேன். அப்போது தான் கேண்டீன் தொழிலைத் தொடங்கினேன். இது தான் என்னுடைய முதல் தொழில். எப்படி தான் என்னுடைய தொழிலின் வளர்ச்சியும் விரிவும்.

கே: கேண்டீன் தொழில் வழிநடத்துவதில் சவால்கள் பற்றி?

மனிதவாழ்க்கையில் எல்லாமே  சவால்கள் நிறைந்தது தான். இந்த சவாலை சங்கடமாக நினைத்தால் சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியாது. வளர்ச்சியின் அடிநாதமாக நினைத்தால் வளர்ச்சியின் வாசலை எட்டிப்பிடிக்க முடியும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

இந்த கேண்டீன் தொழில் என்பது நம்பிக்கை சம்பந்தமானது என்பதால் மற்றதொழிலை விட கூடுதல் அக்கரை தேவைப்படுகிறது. ஒரு திருமண விழா என்றால் வரும் அனைவரும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் சுவைகள் வேறுபாடு மாறுபாடு இருக்கும். அவர்கள் அனைவருக்கும் பிடித்தார் போல் உணவுகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு திருமணத்திற்கு சமைக்க வேண்டும் என்று ஆர்டர் வந்தது. நாங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து வகையான உணவுகள் தயார் படுத்தி வைத்துவிட்டோம். ஆனால் மண்டபத்தில் எங்களைத்தவிர மாப்பிள்ளை வீட்டாரே பெண் வீட்டாரே என்று யாருமே இல்லை. எங்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. நேரம் நெருங்க நெருங்க ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள், ஆனாலும் பெண் மாப்பிள்ளை வரவில்லை. நானும் என்னுடைய நண்பரும் வரவேற்பு இடத்தில் நின்று அனைவரையும் வரவேற்றோம், ஏன் பெண்ணையும் மாப்பிள்ளையும் நாங்கள் தான் வரவேற்றோம். எப்படி நிறைய நிகழ்வுகளை பார்க்கலாம்.

கே: வங்கியில் தள்ளுபடி செய்த கடனை நீங்கள் தானே சென்று கட்டியது பற்றி சொல்லுங்கள்?

நான் கஷ்டப்பட்ட காலத்திலும் தொழிலை மேம்படுத்திலும் வங்கியில் வாங்கிய கடன் பெரிதும் என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது. நான் இப்பொழுது ஒரு பெரிய இடத்திற்கு வந்து விட்டேன்  என்றாலும் கூட என்னால் அந்த கடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று மட்டுமே மனதில் தோன்றி கொண்டேயிருந்தது.

அப்போது ஒரு நாள் நான் கடன் பெற்றகனரா வங்கிக்கு சென்று 27 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு தொகையை கடன் வாங்கினேன் என்று என்னுடைய விவரத்தை வங்கி மேலாளரிடம் சொன்னேன். என்னுடைய பெயரையில் தொகையைப் பார்த்த போது உங்களுடைய  அத்துனை தொகையும்  தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று மேலாளர் சொன்னார்கள். ஆனாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை நான் வாங்கிய தொகையை நிச்சயம் செலுத்தி தான் ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

வங்கி மேலாளரும் என்னுடைய இந்தப் போக்கை பார்த்து பணத்தை வாங்கி வேறு ஒரு நலத்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லி விட்டு என்னை அனுப்பி வைத்தார்.

இந்த செய்தி அப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும்வாரியான பத்திரிக்கைகளிலும், செய்தித்தாளிலும் வெளியிடப்பட் டது. அப்போது இதைப்பாராட்டி சில அமைப்புகள் 105 விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளோடு பாராட்டுகளையும் வழங்கி கௌரவித்தார்கள்.

கே: ஒரு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எவற்றைஎல்லாம் முறையாகக் கடைபிடிக்க வேண்டும்?

தலைமைப் பண்பு என்பது அனைருக்கும் கிடைத்துவிடாது. மற்றவர்களை விட ஏதேனும் ஒரு மாறுதல் பண்பு இருக்கிறது என்றால் நீயும் தலைமை பண்பை அடைத்துவிட்டாய் என்று நினைத்தல் வேண்டும்.

தன்னிடம் பணியாற்றுபவர்களை சில தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். இதை தான் சிலர் தலைமைப் பண்பு என்று நினைத்துக்  கொண்டுயிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

தலைமைப் பண்பில் உள்ளவர்கள் மற்றவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். தவறு நடந்தாலும் அடுத்த முறைஇத்தவறு நடக்காமல் பார்த்துக் கொள் என்று சொன்னால் அவர் வேலையை கூடுதல் அக்கரை செலுத்துவார்கள். இப்படித்தான் மெருகேற்றவேண்டும்.

சிலருக்கு வேண்டுமென்றால் தலைமைப் பண்பு தானாக வந்திருக்கும், ஆனால் என்னைப் போன்றஒரு சிலருக்கு இதன் மகத்துவம் நன்கே புரியும்.

நான் உயர்ந்தவன் என்று நினைக்காமல் நாம் அனைவரும் ஒற்றுமையாளர்கள் என்று நினைத்தாலே அவர் தான் சிறந்த தலைமை நிர்வாகி என்பதில் மாற்றமே இல்லை.

கே: உங்கள் கேண்டீன் தொழிலின் சிறப்பம்சத்தைப் பற்றிக் கூறுங்கள்?

தற்போது உணவு தான் மனித வாழ்விற்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கிறது. காரணம் தினம் தினம் ஏதேனும் புதிய பெயரில் உணவுகள் வந்து கொண்டுயிருக்கிறது. அதன் தீமையை அறியாமல் நம்முடைய நாக்கு ருசிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதனின் சராசரி வயது 90 க்கும் மேல் ஆனால் நாளடைவில் வயது சுருங்கி தற்போது 55 வயது வாழ்ந்தலே போதும் என்றமனநிலை வந்து விட்டது. அந்தளவிற்கு நோய்களும், வியாதிகளும் வயது வித்தியாசமின்றி வருகிறது. இதற்கெல்லாமே நம்  உணவில் ஏற்பட்ட மாற்றம்  தான் காரணம்.

இதனால் எங்கள் கேண்டீன் மூலம் செய்யபடும் உணவுகளை அதிக அக்கரைக் கொண்டு செய்யப்படுகிறோம்.

தினம் தினமும் எண்ணெய் மாற்றம், கொழுப்பு அதிகம் சேராது எண்ணெய் பொருள், அறுசுவையிலும் அளவு போன்றபொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

இந்த இதழை மேலும்

உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்

S.D. சரவணகுகன்

CEO, Green Kitchen Multi Specialty Food, Theni

M.D. GThree Business Assoaites Private limited, Mumbai

நான் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவன், என்று தினமும் சொல்லி வாருங்கள் எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிவிடும் என்பார் விவேகானந்தவர், அவரின் சொல்லின் படி வாழ்ந்து வரும் ஆற்றல் உடையவர்.

உண்மைக்குச் சற்றும் புறமில்லாமல், கடின உழைப்பின் கண்ணாடியாய் எந்நேரமும் மாற்றத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்.

எந்தப் பணியாக இருந்தாலும் தன்னுடைய தேவைக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு செயல்பட்டால் அதில் நிச்சியம் வெற்றி பெறலாம் என்ற சித்தாந்ததின் படி தேவையை அமைத்துக் கொண்டு சாதித்து வருபவர்.

பல உலக நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள திட்டங்களை வரையறுத்துக் கொண்டு நம் நாட்டிற்கும் நம்மால் ஆன துறையில் பல மாறுதல்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

மெக்டொனல்ட்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் போன்ற நிறுவனத்தில் பல்வேறு துறைகளில்  பணியாற்றி தன் பெயரையும் புகழையும் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கையினை மெய்பித்து வரும் கிரின் கிச்சன் தேனி, மற்றும் GThree Business Assoaites Private limited, Mumbai நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் S.D. சரவணகுகன் அவர்களின் நேர்முகம் இனி உங்களோடு…

கே: உங்களைப் பற்றி ?

தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் என்னும் குக்கிராமத்தில் தான் பிறந்தேன். அப்பா தேசபத்து அவர்கள் தலைமை ஆசிரியர், அம்மா அலமேலு அம்மாள் இல்லத்தரசி. அப்பா ஆசிரியர் என்பதால் அப்பகுதியில் பிரபலம். அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். அவரின் பெயரை அறியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும்.. அவர் பணியாற்றிய அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ்வழிக் கல்வியில் தான் பயின்றேன். நான் படிக்கின்ற காலத்தில் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் 4 பேருக்கு தாலுக்கா அளவில், 9 வது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பார்கள், நான்  தாலுக்கா அளவில் இரண்டாம் இடம் பெற்று அப்போது கிடைத்த கல்வி உதவித்தொகை பெரும் உறுதுணையாக இருந்தது.

பிறகு 11 ஆம் வகுப்பு திருவேடகத்திலுள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் படித்தேன். ஆசிரமக் கல்வி என்பதால் சற்று கண்டிப்பு மிகுந்திருக்கும், அதே வகையில் கல்விக்கும் ஒழுகத்திற்கும் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பள்ளியில் படித்தது பெரிதும் எனக்கு உதவியது. அதன் பிறகு 12 ஆம் வகுப்பு கோவை ரங்கம்மாள் பள்ளியில் படித்தேன். நான் கிராமப்புற பள்ளியில் படித்து அந்த சூழ்நிலையிலேயே வளர்ந்ததால் வேளாண்துறையில் மிகவும் ஈடுபாடு வந்தது, அதனால் எனக்கு பொறியியல் படிக்க இடம் கிடைத்தும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கால்நடைத் துறையைப்படிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் சில வாரங்கள் மட்டும் பயின்றேன். அதன் பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் நான்கு வருடம் படித்தேன்.

அப்போது இல.செ. கந்தசாமி ஐய்யா அவர்களின் அறிமுகமும் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எப்போதும் மாணவர்களிடையே ஊக்கம் தரும் வார்த்தைகளை மட்டுமே பேசிக் கொண்டேயிருப்பார். அதனால் தான் என்னால் கதை கட்டுரை, மேடைப் பேச்சு, மேடை நாடகம் போன்றவை இயற்ற முடிந்தது. தமிழ்ப் பற்று வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது. நான்கு ஆண்டு சென்றதே தெரியவில்லை. பின்னர் தான் மதுரை வேளாண் கல்லூரியில் எம். எஸ். சி படிக்கச் சென்றேன். அப்போது படிக்கின்ற போதே மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் விவசாயத்துறைப்பகுதியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியிருந்தேன். ஏதேனும் புதியதாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னை தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது.

கே: படித்த முடித்தவுடன் நீங்கள் செய்த பணிகள் பற்றி?

நான் வேளாண்மை முதுகலைப்பட்டம் பெற்றியிருந்த காலக்கட்டத்தில் மிகவும் எளிதாக வேளாண் இடுப்பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகத்தில் எளிதாக வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால்  அதில் விருப்பமில்லாததால் வேறு வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் தினமும் செய்தித்தாள் படிப்பேன். அப்போது ஒரு நாள் தி இந்து செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தி இந்து செய்தித்தாளின் அலுவலகத்திலிருந்து விவசாயிகளிடம் நேரடியாக காய்களை வாங்கி அதை நுகர்வோரிடம் விற்பனை செய்ய வேண்டும் என்று வந்தது. திரு. கஸ்துரிரங்கன் அவர்களின் மகன் திரு. வேணுகோபால் அவர்கள் இதன் இயக்குநராக இருந்தார். அதே வகையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயன்றவர்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இதனால் நான் இதற்கான நேர்காணலுக்குச் சென்றியிருந்தேன்.

அடிப்படையில் நான் விவசாயத்துறைப் படித்ததால் இதில் பணியாற்றுவதற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் இருந்தது. இதனால் நானும் பணியில் சேர்ந்தேன். என்னுடைய வேலை நிமிர்த்தமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளைப் பார்த்து அவர்களிடம் விலைவித்த காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து சென்னையிலிருந்த தி இந்து Just picked கடைகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. விவசாயிகளுக்கும் மற்றும் அருகிலுள்ள் விலை நிலங்களில் கிடைக்காத காய்கறிகளை காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கொத்தவாசாவடி சந்தைக்குச் சென்று வாங்க வேண்டியிருந்தது. நிறைய பேர் என்னைப் பார்த்து கேட்பார்கள் எம். எஸ். சி விவசாயம் முடித்துவிட்டு இப்படி காய்கறிகளை வாங்கிக் கொண்டுயிருக்கிறீர்கள் என்று, அதற்கு நான் ஒருபோதும் வருத்தம் கொண்டதில்லை, பிடித்து செய்யும் எந்த வேலையும் தவறில்லை என்பதை நாம் மதிப்பவன்.

கே: ஊட்டியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

சென்னை மற்றும்  கொத்தவாசாவடியில் இதே வேலை 14 மாதங்கள் செய்தேன். அதன் பிறகு 8 மாதம் காலம்  ஊட்டியில், 1994 ஆம் ஆண்டு பணியிடம் மாற்றம் செய்தார்கள் அப்போது புதுவிதமாக காய்கறிகளைஆர்கானிக் முறைப்படி உற்பத்தி செய்து அங்கியிருந்து சென்னை அனுப்பி விற்பனை செய்தோம். இக்காய்கறிகளை அங்குள்ள விவசாய அமைப்பின் மூலம் உற்பத்தி செய்தோம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு விவசாய சாகுபடி சம்மந்தமாக நிறைய பயிற்சிகள் கொடுத்தோம். அவர்களும் பயிற்சிகளின் படியே வேலை செய்தார்கள்.

இந்த இதழை மேலும்

உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….

தேக்கம்பட்டி சிவக்குமார், சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்

Catering Owners Association, செயற்குழு உறுப்பினர்

தந்தை பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் புரவலர்

கோவை மாவட்ட அமெச்சூர் கபாடிகழக இணை செயலாளர்,

தேக்கம்பட்டி, கோயமுத்தூர்

ஆரோக்கியமே மனித இனத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் அக்கரைச் செலுத்தினாலே வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் சிறந்த முறையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தயாரித்து இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்றமாநிலங்களில் இவரின் கைவண்ணத்தை சுவைக்காதவர்கள் யாருமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறந்த உணவுத்தயாரிப்பாளர்.

இங்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. ஆனால் பணத்தை விட மனிதர்களின் நலம் தான் சிறந்தது, ஆகையால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், உணவிற்குத் தேவையான மற்றப் பொருட்கள் போன்றவை  பழமை மாறாமல் தயாரித்து அதன் மூலம் உணவைக் கொடுத்து வருபவர்.

உலக இலக்கியம் தொடங்கி உள்ளூர் இலக்கியம் வரை அனைத்தும் கற்றுக் கொண்டு தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், தன்னிடம் பணியாற்றுபவர்களிடமும் நம்பிக்கை விதையை நாளும் விதைத்துக் கொண்டேயிருப்பவர்.

கொடுத்த வாக்கில் உண்மை, நேரம் தவறாதிருத்தல், கடின  உழைப்பு, மற்றவர்களுக்கு மனமுவந்து உதவும் மனப்பான்மை போன்றநற்குணங்களே இவரின் அடையாளம்.

சிறந்த சமையல் கலை வல்லுநர், தலை சிறந்த மேலாண்மைத்துவமிக்கவர், தேக்கம்பட்டி சிவக்குமார் சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்டின் நிறுவனர், இப்படி பன்முகத்திறமை வாய்ந்த தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

கே: உங்களின் இளமைகாலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகிலுள்ள தொட்டதாசனூர் என்னும் குக்கிராமம் தான் என்னுடைய ஊர். ஆனால் நான் பிறந்தது என்று பார்த்தால் என்னுடைய தாயின் ஊரான சாலைவேம்பு என்னும் ஊர். இங்கு தான் என்னுடைய தொடக்கக் கல்வி ஆரம்பித்தது. ஆனால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டேன். அதனால் தொட்டதாசனூர் ஊருக்கே வந்துவிட்டேன். ஏழாம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புஜ்ங்கனூரில் படித்தேன்.

என்னுடைய தந்தை கரும்பாலைத் தொழிலைச் செய்து வந்தார். அவ்வளவு வருமானம் இல்லாத தொழில். ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான். எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று விடுவேன்.

கே: சமையல் கலையின் மீது ஆர்வம் எப்படி வந்தது?

என் தாயின் தந்தை நடேசன். அவர் சமையல் சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தார்.இவர் ஒரு சிறந்த சமையல் தயாரிப்பாளர், அவரின் கைப்பக்குவம் அக்கிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலம். உணவை நாவில் சுவைத்துப் பார்க்காமலேயே வாசனையை வைத்து அவ்வுணவில் உள்ள நிறைக்குறைகளைச் சொல்லிவிடுவார்.

நானும் சின்ன வயதிலிருந்தே இவர்களுடனே இருந்ததால் எனக்கும் இவ்வார்வம் வந்துவிட்டது என்றேசொல்லலாம். சின்ன வயதிலிருந்தே நாம் எதைப் பார்த்து வளர்கிறோமே அது நம் வாழ்வில் பின்னிபிணைந்து விடும். படிக்கின்றகாலத்தில் விளையாட்டைக்கூட மறந்து என்னுடைய தாத்தாவின் உடன் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

பள்ளியில் ஆசிரியர்கள் கேட்கும் பொதுவான கேள்வி. எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நிறைய பேர் ஆசிரியர்,மருத்துவர், ஆட்சியர் என்று அவரவர்கள் விருப்பதைக் கூறினார்கள். ஆனால் என்னைக் கேட்கும் பொழுது சற்றும் யோசிக்காமல் நான் சமையல் கலை நிபுணராக வரவேண்டும் என்று கூறினேன். இதைக் கேட்டு வகுப்பில் உள்ள மற்றமாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் என்னுடைய மருதன் ஆசிரியர் எனக்கு அப்போதே ஊக்கம் கொடுக்கும் படி பேசினார்.

கே: உங்களின் முதல் கேட்ரிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால், இவர்கள் செய்த தொழில்  என் குருதியோடு கலந்து விட்டது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றபொழுது தனியாக ஒரு ஆர்டர் கிடைத்தது. இதை என்னுடைய தந்தையிடம் சொன்னேன். அவருக்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் சற்று பயம் இருந்தது. திருமணம் வீட்டிற்கு சமைத்தல் என்பது சாதாரண காரியம் இல்லை, இதனால் என் பெரியம்மா சின்னப் புதூர் (சமையல் கலைஞர்) அவர்களை என்னுடன் என் தந்தை அனுப்பி வைத்தார்.

ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியும் என்றநம்பிக்கை இருந்தது. காரணம் நான் கற்றுக் கொண்டது என்னுடைய தாத்தாவிடமிருந்து. என்னுடைய பெரியம்மாவிடம் நானே முழுவதுமாகப் பார்த்துக் கொள்கிறேன். ஏதேனும் தடுமாறும் சூழலில் எனக்கு உறுதுணையாக இருந்தால் போதும்  என்று சொல்லிவிட்டேன். அவர்களும் என்னுடைய பேச்சை மதித்து என்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டார்கள். என்னுடைய முதல் முயற்சி பெருத்த வெற்றி சாப்பிட்டவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இது எனக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அப்பகுதியில் என்னுடைய சமையலைப் பரவலாகப் பேசத் தொடக்கிவிட்டார்கள். திருமணம், காதணிவிழா, வலைகாப்பு,  பண்டிகைப் போன்ற விழாக்களுக்குத் தொடர்ந்து ஆர்டர் வர ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கே: சமையலுக்கான வேலையாட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்?

இது மிகவும் முக்கியமான ஒன்று. நான் தேர்ந்தெடுக்கும் அத்துணை வேலையாட்களும் என்னை விட வயதில் குறைந்தவர்களாகவே தேர்ந்தெடுப்பேன். காரணம் என்னுடைய சமையலுக்கென ஒரு தனியான ருசியை வைத்திருப்பேன். அதை மட்டுமே முறையாக பயன்படுத்துவேன்.

அனைவரிடத்திலும் ஆலோசனையும், கருத்துக்களையும் கேட்பேன் ஆனால் முடிவெடுப்பது நானாக மட்டுமே இருப்பேன்.

நாங்கள் தென்னிந்தியா, வடஇந்தியா போன்ற உணவுகளையும் தயாரித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது அது சம்மந்தமான உணவு தயாரிப்பு வல்லுநர்களை பணிஅமர்த்தி அவர்களை என்னுடைய ருசிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கி வருகிறோம்.

கே: உங்கள் கேட்ரிங் சென்டரின் தனித்தன்மைகள் என்ன?

எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மை பெறவேண்டும் என்றால் மற்றநிறுவனத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் சென்டர்  மாறுபட்டதாக காணப்படுகிறது.

  1. உணவு பரிமாறும் பொழுது உணவின் வரிசை முறைஒழுங்காக வரிசைப்படுத்தி பரிமாறுவதற்கு ஏற்றவகையில் முன்கூட்டியே அமைத்துவிடுவோம்.
  2. சமைப்பவர் முதல் பரிமாறும் அனைவருக்கும் ஓரே நிறத்தில் சீறுடை கொடுத்திருக்கிறோம்.
  3. நாங்களே சொந்தமாக தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தயாரித்து அந்தப் பொருள் மூலமே தயாரித்து வருகிறோம்.
  4. சமைக்கும் பாத்திரம் அனைத்தும் காப்பர் பித்தளை பாத்திரங்களையே பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு சமையல் முடிவுக்கு பின்னர் ஈயம் பூசி அதற்கு பின்னரே பயன் படுத்தோம்.
  5. அலுமினியம் பாத்திரம், அஜனமோட்டோ போன்றவற்றைநாங்கள் பயன்படுத்தில்லை.
  6. எங்களிடம் 50 ஆயிரம் பேருக்கு சமைக்ககூடிய பாத்திரங்கள் பணியாளர்கள், உணவைக் கொண்டு செல்ல தனித்தனி வாகன வசதிகள் போன்றவை இருக்கின்றன.
  7. அசைவம் மற்றும் சைவம் இரண்டையும் சிறந்த முறையில் தயாரித்துக் கொடுக்கிறோம்.

இப்படி எண்ணற்றதனித்தன்மைகள் இருக்கிறது. நாங்கள் முற்றிலும் குறைந்த விலையில் அதிக ருசி ஏற்படக்கூடிய அளவில் தான் எப்போதும் உணவைத் தயாரித்து கொடுக்கிறோம்.

வாடிக்கையாளர்களின் மனநலனும், உடல் நலனுமே எங்களைப் பொருத்த வரையில் முக்கியமாகக் கருதுகிறோம்.

இந்த இதழை மேலும்

மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!

திருமதி. சித்ரா பார்த்தசாரதி

ஐசால்வ் & க்யாட் க்ரூப், இயக்குனர் & முதன்மை நிதி மேலாளர்

நேர்காணல் : செந்தில் நடேசன்

விக்ரன் ஜெயராமன்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியமடி

என்பார் பாரதி. கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிகர் சமம். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று இந்த உலகில் சாதிக்க முடியும் என்றவாக்கிற்கிணங்க வாழ்ந்து வருபவர்.

ஒரு பெண் இந்த சமுதாயத்தில் எவ்வாறு எல்லாம் சாதிக்கலாம், சாதிக்க என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறது என்பதை முறையாகப் பின்பற்றி நவீன உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்து தடம் பதித்து வருபவர்.

சாப்ட்வேர் துறைமற்றும் இணையதள தொழிற்நுட்பத்துறையில் பல சாதனைகள் செய்து இன்று உலகம் முழுவதும் வலம் வரும் வரலாற்றுப் பெண்மணி.

நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்றவாக்கிற்கிணங்க பல தொழிற்நுட்பத் துறைகள் தொடங்கி அதனால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்து வரும் திருமதி சித்ரா அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

கே. உங்களின் பிறப்பும் பின்புலமும் பற்றிச்  சொல்லுங்கள்?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூரில். ஒரு பாரம்பரியமான குடும்பத்தில்  பிறந்தேன். என் பெற்றோர்கள் பெயர் திரு. ராஜகோபால், திருமதி. சுந்தரி அவர்கள். எனக்கு ஒரு அண்ணன் திரு. ராமசாமி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணி ராதிகா அவர்கள். என்னுடைய கணவர் திரு. ரா. பார்த்தசாரதி. CADD Centre, isolve Group, ikix Group Chairman & CEO.  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள். பிரித்விக், ரித்விக். இவர்கள் ஐரோப்பாவில் எம். எஸ் படித்துள்ளனர்.

என்னுடைய தந்தை கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் கோவை மாவட்டத்தில் நல்ல புகழ் பெற்றஅவிலா கான்வென்ட் பள்ளியில் படித்தேன்.

மிகவும் ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் போதிக்கும் சிறப்பான பள்ளி. கல்லூரிப் படிப்பை  திரு. அவிநாசிலிங்கம் கல்லூரியிலும் எம். பி. ஏ பட்ட மேற்படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் பயின்றேன்.

கே. உங்கள் வாழ்க்கையில் யார் முன்னோடியாக இருந்தார்கள்?

பள்ளி, கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிக்கும் போது எல்லா ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை தான் பின்பற்றினேன். ஆனால் குறிப்பாக பள்ளி பருவத்தில் எனது மாமாவின் மனைவி (அத்தை) திருமதி. இராஜலஷ்மி வாசன் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரி ஆக இருந்தார்.

அதன் பின்பு அவிநாசிலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது டாக்டர். இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் என் பல லட்சியங்களுக்கு ரோல் மாடல் என்று சொல்லலாம். கல்லூரியில் நான் படித்த வணிகவியல் துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் என்னுடைய இலட்சியங்கள் அடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு இங்கு படிக்கும் போது சிறந்த மாணவிக்கான விருதை (தங்க பதக்கம்) பெற்றேன்.

பாரதியார் பல்கலை கழகத்தில் மேற்படிப்பின் போதும் அனைத்து பேராசிரியர்களும் நாங்கள் எதிர்காலத்தில் நல்ல மேலாளர்களாக வருவதற்கு நல்ல பயிற்சி அளித்தனர். 2015 ஆம் ஆண்டு “Distinguished Alumini Achiever Award” என்றவிருதையும் பெற்றேன். இப்போது, பெப்ஸி நிறுவனத்தின் இந்திரா நூயி எனக்கு பெரிய முன் மாதிரியாக இருக்கிறார்.

கே. நீங்கள் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஒரு தொழிற் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்களா?

எனக்கு ஆர்வம் எல்லாமே IAS படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அத்துறைக்கு போவது சிறிது கடினம் தான் என்று என் பெற்றோர்க்கு இருந்தது. அதனால் அடுத்து என்ன என்று நினைத்து கொண்டிருந்த போது, கல்லூரியில் விருது வழங்க வந்த சிறப்பு விருந்தினர் எம்.பி.ஏ படிக்கலாமே என்று அறிவறுத்தினார். அதன் பின்பு தான் அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது அத்துறையிலும் நான் சிறந்து விளங்கலாம் என்று எம்.பி.ஏ படித்தேன். ஆனால் படிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

கே. நீங்கள் படிக்கின்றகாலத்திலும் தற்போதும் பெண்கல்வி எவ்வாறு மாறுதல்கள் அடைந்துள்ளது?

நிச்சயமாக, நிறைய மாறுதல்கள் அடைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. நான் படிக்கின்றகாலத்தில் எனது வகுப்பில் மொத்தம் 35 பேர். அதில் என்னையும் சேர்த்து 10 பெண்கள் மட்டுமே படித்தோம். அப்போது ஆண், பெண் இருபாலரும் இணைந்து படிக்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் அதிகளவில் இல்லை. ஆனால் இப்போது எல்லாமே இயல்பாகிவிட்டது.

ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத்துறையிலும் படித்து சாதனை புரிந்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு கூட அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது தற்போது பெண் கல்வியின் வளர்ச்சிதானே.

கே. மேலாண்மை படிப்பு மிகவும் கடினமாக இருந்ததா? எப்படி அதை மேற்கொண்டீர்கள்?

ஆம், முதலில் கடினமாக தான் இருந்தது. மேலாண்மை படிப்பில் எல்லா பாடங்களும் இருக்கும் (Accounting, Engineering, Economics, Computer Science etc). அப்படிப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது சற்று சவாலாக இருந்தது. அனைத்து பேராசிரியர்களும் புரியாத பாடங்களைத் திரும்பத் திரும்ப புரியும் வரை எங்களுக்குச் சொல்லி கொடுத்தார்கள். பல நேரங்களில் பல்வேறு துறைகளில் இருந்து வந்த நண்பர்களுடன் குழுப் படிப்பை செய்து புரிந்து கொள்வோம். என் வாழ்க்கையில் எம்.பி.ஏ படித்ததை ஒரு பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

கே. படித்த உடனே தொழில் தொடங்கினீர்களா? உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

படித்தவுடனேயே தொழில் தொடங்கவில்லை. பிரிக்கால் நிறுவனத்தில் (Pricol) என்னுடைய மேலாண்மை ஆய்வை செய்தேன். செய்யும் பொழுது அங்கேயே வேலை கிட்டியது.

அப்போது சில நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூக்கு வருவார்கள். நான் படித்து கொண்டிருந்த போது சிட்டி பேங்க்கிலிருந்து வந்தார்கள். நான் தான் பிரிக்கால் பணி கிடைத்து விட்டதே, இனி எதற்கு சிட்டி பேங்க் நடத்தும் நேர்முகத் தேர்விற்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய பேராசிரியர்கள் என்னை அழைத்து உனக்கு கிடைக்கிறதோ இல்லையோ அதுவும் ஒரு அனுபவம். நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அவர்களின் ஆலோசனை படி நானும் சென்றேன். அங்கு குழு கலந்துரையாடல், நேர்முகம் போன்றவை நடைப் பெற்றது. இறுதியாக இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவர். ஆனால் வேலை மும்பையில், இதை என்  பெற்றோர்கள் எப்படி நினைப்பார்கள் என்று என் மனதில் ஒரு தயக்கம். ஆனால் என்னுடைய தந்தை மிகவும் ஊக்குவித்தார். மும்பை மட்டும் செல்ல அனுமதியளிக்கவில்லை. சென்னையில் சிட்டி பேங்க் அலுவலகம் இருந்தது. அங்கே சென்று பணியில் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் சென்னையி லேயே பணியாற்றினேன்.

பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தேன். அதன் பின் அஆச அம்ழ்ர் பேங்கில் சேர்ந்தேன். மொத்தம் 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன்.

கே. உங்களின் தனித்தன்மை பற்றிச் சொல்லுங்கள்?

நான் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறைநன்கு யோசித்து அதன் பிறகு தான் செயல்பட முனைவேன்.

திட்டமிட்டு செய்யும் எந்த பணியும் சோர்வும், தோல்வியும் அடையாது என்று நம்புவேன். அந்த வகையில் திட்டுமிடுதலை நான் முறையாக கடைப்பிடிப்பேன்.

Measure twice cut once, என்பது எனக்குப் பிடித்த பழமொழி. எங்கு சென்றாலும் என்னை நன்கு தயார் படுத்திக் கொண்டு செல்வேன். மீட்டிங், கருத்தரங்கம் போன்றவற்றிர்க்கு போகும் பொழுது என்னை நானே தயார் படுத்திக் கொள்வேன். எனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன்.

எந்த வினாவிற்கும் விடை தெரியாது என்று முடிந்தவரை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கே. நீங்கள் எப்போது முதலில் தொழில் செய்ய ஆரம்பித்தீர்கள்? உங்கள் நிறுவனத்தில் நீங்கள் செய்யும் பணிகள் குறித்து?

மேலே, நான் கூறியது போல 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன். எனது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் போது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதனால் என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன்.

எனது கணவர் CADD Centre India Private Limited என்ற மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தார், தற்போதும் நடத்தி வருகிறார். இதில் தொழில் நுட்பக்கருவிகள் விற்பனை, மென்பொருள் விற்பனை, க்யாட் பயிற்சி போன்றவை அடங்கும்.

அப்போது வங்கிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள், தங்களுடைய சில சேவைகளுக்கு உதவ அவரிடம் அணுகினர். பெண்கள் எப்போதும் அவருடைய சொந்த காலில் நிற்கவேண்டும் என்றமுற்போக்கு சிந்தனை உடையவர் என் கணவர். அப்போது நான் என் வேலையை ராஜினாமா செய்தவுடன், உனக்குத் தெரிந்த தொழிலான, வங்கிகள் தொடர்பான சேவைகள் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாமே அதற்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து நீ அதை வழி நடத்தலாமே என்று கூறி ஐசால்வ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். இப்படித்தான் நான் ஒரு Entrepreneur ஆனேன். முதலில் பகுதி நேரம் வேலை செய்தேன். பிறகு குழந்தைகள் வளர்ந்தவுடன் முழு நேர பணியாளாராக என்னை இணைத்து கொண்டேன்.

நான் இந்நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். CADD Centre மற்றும் ikix 3D  பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கே. பெரிய நிறுவனத்தை வழி நடத்துவதில் உள்ள சவால்கள் என்ன?

என்னைப் பொறுத்த வரை சவால்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நல்ல பணியாளர்களுடன் சவால்களை மேற்கொள்ள முடியும்.  எல்லாமே சாத்தியம் தான்.

உலகத்தின் மிப்பெரிய இஅஈஈ பயிற்சி தரும் நிறுவனம் எங்களின் CADD Centre தான். 750 கிளைகளும், 22 நாடுகளிலும் இருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவரின் குழுவினரின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தான்.

இதைத் தவிர ஐசால்வ் மற்றும் உலகத்தின் மிகப்பெரிய 3D பிரிண்டிங் நிறுவனமான ikix 3D   பிரிண்ட்ஸ் என்றநிறுவனங்களும் நடத்துகிறோம்.

ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தான்.  அவர்களைச் சரியாக வழிநடத்தினாலே போதும், சாதித்து விடலாம்.

கண்டிப்போடு எதையும் சொல்லுதல் கூடாது. அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். என்பது என்னுடைய கணவருடைய அடிப்படைத் தத்துவம்.

எனக்கும் சரி, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி என்னுடைய கணவர் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இதனால் எங்களால் எல்லாப் பணியும் செம்மையாகச் செய்து முடிக்க இயலும்.

அதே போல் ஒரு வேலையை தனியாகச் செய்வதை விட குழுவாகச் செய்தால் அந்தப் பணி மேலும் சிறப்பாக அமையும்.

அந்த வகையில் எங்கள் நிறுவனத்தில் வேலை பணியாளர்கள் அனைவரும் மிகுந்த அக்கரையும், கவனத்துடனும் பணியைச் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கே. இந்த தொழிற்நுட்ப துறையிலுள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

எல்லாத் துறையிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை சிக்கலாகப் பார்க்காமல், புதிய முறையில் வேலையைக் கற்றுக் கொள்வதாகப் பார்க்க வேண்டும். எல்லாம் சரியாகப் போகும் பொழுது எதுவும் தோன்றாது. ஆனால் சில சவால்களைச் சந்திக்கும் பொழுது தான் நமக்கு புது புது எண்ணங்கள் மனதில் தோன்றும். நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே குழு இருக்கிறது. எது நடந்தாலும் அவற்றைமுறையாகக் ஆராய்ச்சி செய்து அவற்றிக்குத் தீர்வு காணுவார்கள்.

வந்தப் பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பது தான் எங்கள் நிறுவனத்தின் அடிப்படைத் தத்துவம்.

எங்களுடைய நிறுவனம் 24 மணி நேரமும், 365 நாட்களும் இயங்கிக் கொண்டிருக்கும். வெளிநாடுகளுக்கு நாங்கள் செய்திதாளை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் கிளைகள் சென்னையிலும், கோவையிலும் உள்ளன. இங்கிருந்து தான் கிட்டதட்ட 500 பதிப்பகங்களுக்கு 22 மொழிகளில் வடிவமைத்துக் கொடுக்கிறோம். இதைத் தவிர வங்கிகள் மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கு சேவைகள் செய்கிறோம். நாங்கள் நிறுவனத்தில் நேர மேலாண்மை என்பது சரியாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவையை உடனுக்குடன் செய்து கொடுப்போம், ஏனெற்றால் செய்திகள் எப்போது வேண்டு மென்றாலும் வரும் என்பதால் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

கே. உங்களின் எதிர்காலத்திட்டம்?

தற்போது தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய வளர்ச்சி வருகிறது. அதைச் சரியாகக் கையாண்டு எங்கள் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து தொழிற்நுட்ப வசதிகளை பெருக்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகமான சேவைகள் கொடுக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் துறைகளில் சேவைகள் செய்ய உள்ளோம். தொழிற்நுட்ப முறையில் நல்ல உறவு முறைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

மருத்துவ துறைக்கு தொழிற்நுட்பத்தைத் தொடங்கியுள்ளோம். அதன் தேவைகளை சேவைகளாகக் கொடுக்கின்றோம். பெரிதளவில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

கே. தற்போது அரசின் சில அதிரடித் திட்டத்தால் உங்கள் நிறுவனம் பெறும் ஏற்றஇறக்கங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. நாடு வளர வேண்டும் என்றால் சில அதிரடித்திட்டங்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

ஒரு சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் ஏற்படும். இது இயல்பு தான். ஆனால் இந்த மாற்றத்தின் காரணமாக பல புதிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

பணம் இல்லா பரிவர்த்தனை, ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவை சில வளர்ச்சியின் படி நிலைகள் தான்.

ஆரம்பத்தில் பண பரிவர்த்தனையில் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது.

வெளிநாடுகளில் நிறைய இடங்களில் பணம் இல்லாத பரிவர்த்தனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று நம் நாட்டில்  நடந்து வருகிறது.

சென்னையில் ஒரு ஆட்டோவில் அனைத்து தொழிற்நுட்ப வசதிகள், செய்திதாள்கள், புத்தகங்கள் போன்றவை ஓட்டுனர் வைத்திருக்கிறார், ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது அனைத்தையும் நாம் இலசவமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமீபத்தில் செய்தித்தாளில் படித்த பொழுது நிச்சயம் நான் மகிழந்தேன். இது தான் வளர்ச்சியின் அழகு.   .

கே. பெண்கல்வியின் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும்?

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இதில் ஆண், பெண் பாகுபாடில்லை.

ஆரம்பத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது எல்லாத் துறையிலும் பெண்களின் வளர்ச்சி இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலை செய்கிறார்கள்.

ஒரு பெண், கல்வி கற்றால் அப்பெண்ணும் முன்னேறி, அம்முன்னேற்றத்தால் அந்த குடும்பம், அந்த சமுதாயமே வளர்ச்சி பெறும் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.

பெண் கல்வி என்பது நாட்டிற்கு மிகவும் தேவை.

கே. இன்றைய சூழலில் தொழிற்நுட்பத்தின் சேவை எந்தளவிற்கு பயன்படுகிறது?

இன்றைய வியபார உலகில்  அனைத்து துறைகளிலும் தொழிற்நுட்பத்தின் பயன் அதிகளவில் தேவைப்படுகிறது.

புதுமைகள் நிகழ நிகழ தான், வளர்ச்சியும், மாற்றங்களும் அதிகளவில் தோன்றும். இந்த மாற்றம் தான், தனி மனித வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும்.

தற்போது நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது சில தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.

கணினி மயமான உலகில் அனைத்தும் தொழிற்நுட்பத்தின் கீழ் இயங்கி வருகிறது. அப்படியிருக்கும் போது, நாடு வளர்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.

கே. புதியதாய் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நான் இளம் தொழில் முனைவோர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் தான் உங்களின் வளர்ச்சியே இருக்கிறது.

புதியதாய் தொடங்க வருபவர்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் நம்மைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

பணம் வாங்குவது, பெறுவதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைத்து விட்டால், அதை வாடிக்கையாளர்களுக்கு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே அகல கால் வைக்க வேண்டாம். தேவையானதை மட்டும் செய்தல் வேண்டும்.

வேலை செய்யும் பணியாளர்களைச் சரியாக மதிக்க வேண்டும். அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த இதழை மேலும்

உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…

பேராசிரியர். முனைவர் பொ. குழந்தைவேல்

துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

என்ற குறட்பாவில் வள்ளுவர், ஒருவர் எதைச் செய்தாலும் அன்போடும் தர்ம நியாயம் தவறாமலும் செய்தால் அது தான் அவர்களின் இல்வாழ்க்கையின் தன்மையாகும். அதனால் உலகத்துக்கும் நல்ல பயன் உண்டாகும் என்பதே இக்குறளின் நோக்கமாகும். இக்குறளிற்கு ஏற்றார் போல் வாழ்ந்துவருபவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, கிராம சூழ்நிலையில் இயற்பியல் விஞ்ஞானத்தை முடித்து, பல நாட்டு வல்லுநர்களிடம் ஆராய்ச்சிகளில் பாராட்டுப் பெற்று இன்று துணைவேந்தர் பதவியை அடைந்துள்ளவர்.

இயற்பியல் விஞ்ஞானத்தை கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை எளிய முறையில் கற்பித்து பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

எப்பொழுதுமே ரௌத்திரம் இல்லாத நவரசத்தை மட்டுமே அனைவரிடத்திலும் போதிக்கும் அன்பும் அரவணைப்பும் மிக்கவர்.

வாழ்கையில் பெரும் எதிர்பார்ப்பற்று வாழ்வது கடினம் தான். எதிர்பாராத எதிர் பார்ப்புகள் அமைவது மிகக்கடினம். உலகம் பெரும் வித்தியாச மனப்போக்கை கொண்டது. அப்படிப்பட்ட உலகில் “பண பலத்தை விட மனபலம் தான் முக்கியம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் தன் வாழ்வை ஏர் முனையில் ஆரம்பித்தவர்.

நல்ல பண்பாளர், படைப்பாளர், அறிவியல் விஞ்ஞானி, வேளாண் வித்தகர், நேர்மையின் சொந்தகாரர் என்று பன்முக திறமை உடைய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பொ. குழந்தைவேல் அவர்களின் நேர்முகம் நம்மோடு…

கே. உங்களைப் பற்றியும் நீங்கள் கல்விப் பயின்றது பற்றியும் கூறுங்கள்?

நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி என்னும் அழகிய குக்கிராமத்தில் திரு. பொன்மலைக்கவுண்டர் திருமதி. நல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். விவசாயம் மட்டுமே அறிந்த தெரிந்த குடும்பம் எங்கள் குடும்பம். அன்றும், இன்றும், இனியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விவசாயத்தை  நேசிக்கும் குடும்பமாகத் திகழ்ந்து வருகிறது. எனக்கும் சின்ன வயதிலிருந்தே விவசாயம் செய்வது மிகவும் பிடிக்கும். இன்றும் விடுமுறைநாட்களில் வயலுக்குச் சென்று விவசாயம் பார்த்து தான் வருகிறேன். இதற்கு நான் எப்போதும் பெருமைப்படுவதுண்டு. என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதிரிகள். என் மனைவி அமராவதி வீரபாண்டி இரத்தினசாமி அவர்களின் புதல்வி.  எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், மூத்த மகன் டாக்டர். கு. பிரசாத், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகின்றார். எனது இளையமகன்   கு.கல்யாணசுந்தரம், சாப்ட்வேர் இன்ஜினீயராக கோவையில் பணிபுரிகின்றார்.

விவசாயக் குடும்பத்தின் பின்னணி என்றாலும் என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது தந்தையின் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தது. இதனால் அருகிலிருந்த கல்கட்டானூர் என்ற சிற்றூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். அங்கு எனக்கு திரு. சுப்பரமணியம் அவர்கள் ஆசிரியராக இருந்தார் அவர் மாணவர்களிடம் பழகும் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கும். அவர் வகுப்பில் எப்போதும் கல்வியின் சிறப்பினைப் பற்றிக் கூறுவார். இது எனக்கு மிகவும் கல்விப் பயணத்தில் உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போது என்னுடன் இருக்கும் நேர்மையும், நம்பிக்கையும் என்னுடைய தாய் தந்தையிடமிருந்தும், எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களிடமிருந்து வந்தது.

அதன் பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றேன். அன்றைய காலக்கட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அதிகம் மதிப்பெண் எதில் வாங்குகின்றோமோ அதனை ஆசிரியரே தேர்வு செய்து நமது பாடப்பிரிவைத் தேர்வு செய்வார்கள். ஆனாலும் சிலர் தங்களின் விருப்பத்திற்கிணங்க பாடங்களை மாற்றிக் கொண்டார்கள், ஆனாலும் என்னால் இயற்பியல் துறையிலிருந்து மாற்றிக் கொள்ளவில்லை. இயற்பியல் துறையில் எனக்கு அப்பொழுதே ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியர்கள் தேர்வு செய்ததையே படித்தேன்.

கே. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பிற்குள் நுழைந்தது குறித்து சொல்லுங்கள்?

பி.யுசி மற்றும் இளநிலைப் படிப்பை ஈரோட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான சிக்கையநாயக்கர் கல்லூரியில் முடித்தேன்.  முதுகலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரிலுள்ள ஏ.வி.வி.எம் புஷ்பம் கல்லூரியில் பயின்றேன்.  பள்ளியில் பழனிசாமி ஆசிரியர் அவர்கள் தான் நான்  இயற்பியல் எடுத்து படிக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார். எனது இந்த ஆர்வம் என் ஆசிரியர் மூலம் தான் வந்தது என்றுதான் கூற வேண்டும்.

நான் படிக்கும் பொழுது முதுகலையில் நல்ல மதிப்பெண் பெற்றதால் தான் எனக்கு ஆராய்ச்சி செய்ய ஆர்வம் கூடியது. 1979 ல் முதுகலைப் படிப்பை முடித்த நான், 1980ல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எண்ணினேன் அவ்வாறு இருக்கையில் அன்னூரில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அதில் 6 மாதங்கள் மட்டுமே நிலைத்து நின்றேன். எனக்கு ஆராய்ச்சித் துறையில் ஆர்வம் இருந்ததால் நான் எம்.ஐ.டி கல்லூரியில் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். அதற்கு முழுக்காரணமும் என்னுடன் பணிப்புரிந்த இராமய்யா என்பவர் தான். அவர் தான் என்னைப் படிக்கும் படியும் ஆசிரியர் பணியை விடும்படியும் அறிவுறுத்தினார். பிறகு என் பணியில் இருந்து விலகி விட்டு எம்.ஐ.டி கல்லூரியில் சேர்ந்தேன்.

இதுபற்றி வீட்டில் யாருக்கும் தெரியாது. வீட்டில் இவ்வாறு இருந்த தருணத்தில் என் வீட்டில் எனக்கு மணம் புரிய பெண் பார்த்தனர். அப்பொழுது எனக்கு 22 வயதுகளே நிரம்பி இருந்தது. அவ்வாறு இருக்கையில் நான் வேலையை விட்டதைக் கூறிவிட்டு படிப்பைத் தொடரவே திருமண வேலைகள் நின்றன.

ஆரம்பத்தில் என்னுடைய தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்தார். உனக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கும் போது இப்படி வேலையை விட்டுவிட்டு படிக்கிறேன் என்று சொல்கிறாய். என்று முதலில் சொன்னார் அதன்பின் படிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.

கே. வேலையை விட்ட பின்னர் அடுத்த உங்கள் திட்டம் என்னவாக இருந்தது?

சென்னை சென்று படிக்க வேண்டும் என்று நினைத்து கையில் ஒரு பொட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். முதன் முதலில் ஊரை விட்டு வெளியே செல்கிறேன்.

இதற்கு முன் ஒரு முறைசென்னைக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நானும் என் நண்பர் ஒருவரும் சென்றோம் இருவருக்கும் சென்னை புதியது. இருவருக்கும் அந்த முகவரி தெரியாது. ஆனாலும் சரியாகப் பேருந்து பிடித்து சென்று விட்டோம், ஆனால் இறங்கும் இடத்தை விட்டுவிட்டு 5 கி.மீ நடத்தே சென்றது சென்னையின் முதல் அனுபவம்.

அவ்வாறு ஒரு மறக்க முடியாத சம்பவத்திற்கு அடுத்து சென்னை செல்கிறோம், என்று முதலில் சற்று மனதிற்குள் ஐயமாக இருந்தது.

அதுவும் சென்னை போன்றபெரிய நகரம், அங்கு யாரும் தெரியாது, எங்கு தங்குவதும் என்றும் தெரியாது இப்படிப்பட்ட சூழலில் சென்றேன்.

ஒரு கிரமாத்துக்காரன் எப்படி இருப்பாரோ அப்படி நானும் வேட்டி சட்டை கையில் ஒரு பெட்டி, கண்ணில் ஒரு தேடுதல் என்று அங்கும் இங்கும் தேடிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு நெறியாளர் உதவியுடன் அங்கு விடுதியில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

சில ஆண்டுகளுக்கு பின்னர் நான் பேராசிரியர்  பொன்னுசாமி என்பவர்  உதவியால் திருச்சியில் பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். பல இடர்பாடுகளுக்கு இடையில் அங்கு இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். 4 வருட ஆராய்ச்சிக்கு பல விதங்களில் என்னுடைய ஆசிரியர் நடராஜன் அவர்கள் உதவியாக இருந்தார். அடுத்து இயற்பியல் துறைப் பேராசிரியர் இலட்சுமணன் அவர்களின் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

கே. எம்.ஐ. டி யில் முனைவர் பட்டம் பயின்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

வேலையை விட்டு படிப்பதற்கு வந்தவுடன் ISRO நிறுவனத்திடமிருந்து அப்போது ஒரு புராஜெக்ட் வந்தது.     அதில் நானும் இன்னும் இரண்டு பேர் என்னுடன் புராஜெக்ட்டில் இணைந்தார்கள். அதில் என்னுடன் இருந்தவர் நேஷனல் கல்லூரியில் படித்தவர். மீதி இருந்தவர் அங்கேயே படித்தவர்கள்.

அப்போது தான் இந்த நிறுவனம் தனியாரிடமிருந்து அரசாங்கத்திற்கு செல்லும் நேரம். அப்போது இந்நிறுவனத்தை வாங்க நிறைய முதன்மையான நிறுவனங்கள் போட்டிப் போட்டு வாங்க முனைந்தன. ஆனால் மீண்டும் அரசாங்கமே வாங்கிக் கொண்டது.

ஆனால் இப்படிப்பை பி. டெக் என்று மாற்றமுனைந்தார்கள், ஆனால் சிலர் இது டிப்ளமோ என்றபெயரிலேயே இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்த புராஜெக்ட்டில்  எங்களை நன்றாக இணைத்து கொண்டு செய்தோம். நான் எப்போதும் நினைப்பது என்னவென்றால் எதையும் சரியாகவும் துல்லியமாகவும் செய்ய வேண்டும் அப்போதுதான் தன்னை தகுதியானவராக நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதால் தான்.

மிகவும் தரமான படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி நிறுவனம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பார்கள்.  என்னுடன் முனைவர் பட்டம் பயில வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றார்கள். அதன் பிறகு நானும் படிப்பை முடிக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.

கே. அப்போதைய அறிவியல் ஆய்வு முறைக்கும், தற்போது இருக்கும் ஆய்வு முறைக்கும் உள்ளவேறுபாடாக நீங்கள் பார்ப்பது?

தற்போது உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அறிவியல் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் செல்கிறது. அறிவியல் துறைஒரு கடல் போன்றது, அதில் முழ்கிப் பார்த்தால் பல அதிசியங்கள் புதைந்து இருக்கும். அதை யார் முதலில் தேடி கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வரலாற்றில் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

அப்போதும் இப்போதும் தொடர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கமிட்டி முறையை நான் தான் கொண்டு வந்தேன்.

இதன் மூலம் ஆராய்ச்சியின் மகத்துவத்தை ஆய்வாளர்கள் முறையாக பின்பற்றுவார்கள். எதையும் எழுவது அல்ல ஆய்வு, ஒரு பக்கம் எழுதினாலும் ஆய்வு அறிவியல் முறைபடி எழுத வேண்டும்.

இது பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கே. உங்கள் ஆசிரியர் பயணத்தில் பணியாற்றிய பிற பொறுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய ஆசிரியர் பயணத்தில் பல பொறுப்புகளை அடைந்திருக்கிறேன். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  ஆராய்ச்சி டீன், பதிவாளராகவும், பிளானிங் அண்ட் டெவலப்மெண்ட்டில் பொறுப்பாளராகவும், இப்படி நிறைய பொறுப்புகளை பணியாற்றியுள்ளேன்.

ஒவ்வொரு பணியிலும் தலைசிறந்த அம்சங்களைக் கொண்டு வந்தேன். என்றேசொல்லலாம். நம்மிடம் ஒரு பொறுப்பு வரும் பொழுது அது கொண்டு எனனென்ன நலத்திட்டங்கள் கொண்டு வரமுடியுமோ அனைத்தையும் கொண்டு வரமுயன்றேன்.

கே. அறிவியல் துறையில் உங்கள் வாழ்வில் ஏதேனும் வெற்றிடம் விட்டதாக நினைக்கிறீர்களா?

நிச்சயம் என் வாழ்வில் அப்படி எதுவும் விட்டதாக எனக்குத் தெரியவில்லை. நானும் முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும் போது என்ன நினைத்தேனோ, அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதுமைகளை செய்தல் வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நான் பேராசிரியராகப் பணியில் ஓய்வு பெற்றாலும் கூட என்னால் முடிந்த அளவுக்கு பணியைச் சிறப்பாகச் செய்துள்ளேன் என்ற மன நிறைவோடு இருக்கிறேன்.

நான் வருடத்திற்கு ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கு முதலில் ஆய்வு குறித்தான அடிப்படை தகவல்களை மட்டுமே முதலில் போதிப்பேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் அனைத்து பணிகளையும் சரியாகவும் நேர்மையாகவும் செய்தேன் என்பதை இங்கு என்னால் சொல்ல முடியும்.

கே. தாங்கள் ஆசிரியர் பணியில் இணைந்ததைப் பற்றிக் கூறுங்கள்?

எனது முதல் ஆசிரியர் பணி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்தேன். டிசம்பர் மாதம் 1984ல் ஆசிரியராகப் பணியில் முதன் முதலில் அமர்த்தப்பட்டேன். ஊட்டியில் பணியில் சேர்ந்த நான் 3 மாதங்களில் இடமாற்றுதல் கேட்டு விண்ணபித்து சிவகங்கையில் சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் மாற்றுதல் பெற்று தர்மபுரி, திண்டிவனம் என்று மாறிய பின் இறுதியில் ஊட்டிக்கே மாற்றமானேன். 1986 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து ஊட்டியில் ஒரு பெரிய வீட்டில் வாடகையில் தங்கினோம்.

குறைந்த சம்பளத்துடன் வாடகை வீட்டில் நானும் என் மனைவியும் தங்கினோம். என் மனைவி பேறு காலமாய் அவரது இல்லம் செல்ல நான் விடுதியில் தங்கி பணிபுரிந்தேன். இந்த  நான்கு ஆண்டு கால இடைவெளியில் எனது இரண்டு ஆராய்ச்சிகளை வெளியிட்டேன். அதற்குமேல் எந்த ஒரு முன்னேற்றமும் எனது ஆராய்ச்சியில் இடம் பெறவில்லை. இதன் நடுவே கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக்கல்லூரியில் பணியில் சேர்ந்தேன்.  இவ்வாறு இருக்கையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் பணியில் இணையும் பொழுது நான் ஆசிரியரின் மாற்றம் பெரும் பயணம் இத்தோடு நிற்குமென நான் அறியவில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி தூய நெஞ்சத்துடன் ஆசிரியர் பணிக்குள் நுழைந்தேனோ, அந்த மன நிலையில் தான் இன்று வரை இருக்கிறேன் என்பதே நிதர்சனம்.

கே. இயற்பியல் துறையில் தாங்கள் செய்த சாதனைகள் பற்றிக்  கூறுங்கள்?

நான் எப்போதும் ஒரு சாதனையாளராய் என்னை அடையாளப்படுத்திக்  கொள்ள விரும்பவில்லை, எனது பணியை நான் சரிவர செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பயிற்சி வகுப்புகளைவிட பாடம் எடுப்பதில் கைத்தேர்ந்தவன். 1988ல் ஆரம்பித்த எனது பணி 28 வருடங்களாக அங்கேயே தொடர்ந்தது. இயற்பியல் துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நான் வெகுவாக முயன்றேன். அதற்கு என்னுடன் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தார்கள். நான் செல்வது வெறும் பாதையில் செல்லும் சாதாரண பயணமாக இல்லாமல் சரித்திரப் பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு மாணவனை மட்டுமே எனது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினேன். எனது ஆராய்ச்சி கட்டுரைகளை அற்புதமாக வெளியிட்டோம். இதுவரை நாங்கள் 175 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். இதற்கு என்னுடன் பணியாற்றி ஆராய்ச்சி மாணவர்கள் தான் காரணம். இன்னும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கிறேன்.

நான் பல வெளிநாட்டில் தங்கி பல விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். அதில் மிகவும் உயர்ந்த Fulbright(USA), JSPS(Japan) Royal society (UK) Germany  போன்ற நாடுகளில் ஆராய்ச்சி நிதி உதவி பெற்று ஆய்வுகள் செய்தது, மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்.

Molecular Structure, Interactions, molecular dynamics போன்ற பல பாடப்பிரிவுகளை ஆராய்ச்சி செய்தேன். நான் இயற்பியல் துறையின் துறைத்தலைவராக 9 வருடங்கள் பணிபுரிந்தேன். பல ஆசிரியர்கள் எனக்கு நல்முறையில் உதவினர். நான் செய்யும் மாற்றங்களுக்கு எனக்கு  உறுதுணையாய் நின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

கே. கல்வி ஆராய்ச்சி தலைவராக தாங்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் பற்றிக் கூறுங்கள்?

நான் ஆராய்ச்சி முதன்மையாளராக 3 வருடங்கள் பணி புரிந்தேன். அந்த நாட்களில் நான் ஆராய்ச்சி துறையில் பல மாற்றங்களையும், பல கட்டுபாடுகளைக் கொண்டு வந்தேன்.

பெரிய கல்வி நிறுவனங்களில் 20% மட்டுமே பயிலும் மாணவர்களுக்கு 80% பண உதவியும், நமது பல்கலைக்கழகம் போன்றவற்றில் 80% மாணவர்களுக்கு 20% பண உதவியும் வழங்குவது என் மனதில் நீண்ட நாள் நெருடலாகவே இருந்து வந்தது. இன்னும் விடை கிடைத்தபாடில்லை. எங்களது ஆராய்ச்சி வேகம் தடை பட  ஒரே காரணம் கணினியின் வேகக்குறைவு மட்டும் தான். இதனால் கணினியின் தட்டுபாட்டை தடுக்க புதுவித கணினி மையத்தை அமைக்க எண்ணினேன். பல முன்னேற்ற படிகளுக்கு பிறகு தான் கணினி மையம் அமைத்தேன்.

திறன்மிகு ஆராய்ச்சிகளை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தொகை புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் உதவித்தொகை வழங்க பெரும் உதவியாக இருக்கும். இது போன்ற ஆராய்ச்சி திட்டங்களை கொண்டு வர எனது முழு முயற்சியையும் செலவிடுவேன்.

கே. பெரியார் பல்கலைகழகம் துணைவேந்தராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு?

பெரியார் பல்கலைகழகத்தில் நான் துணை வேந்தராக பல கட்ட தேர்வுக்கு பிறகு தான் அமர்ந்தேன். அதிக எண்ணிக்கையில் இந்தப் பதவியில் அமர விண்ணப்பித்தனர். நேர்மைக்கும், தன்னலமற்றபணிக்கும் தான் எனக்கு இந்தப் பணி கிடைத்துள்ளது. இறுதியில் ஆளுநரிடம் நேரடித் தேர்வுக்கு பிறகு முறையான தீர்வு கிடைத்தது.

எங்களது பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் தன்னாட்சி கல்லூரிகள் கேட்கும் விதங்களில் அவர்களுக்கு நான் உதவத் தயாராக இருகின்றேன். புதுமுறையான கட்டமைப்புகளை நிறுவவும், அவர்களது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், வீடியோ காட்சி கருத்தரங்கங்கள் நடைபெறவும், புதுவிதமான பயிற்சி வகுப்புகளைத் தொடரவும் நான் உதவத் தயாராக இருகின்றேன்.

பல்கலைகழக்கதில் அறிவியல் பூங்கா ஒன்றை நிறுவி மாணக்கர்களுக்கு வித்தியாசமான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதற்கு உதவியாக இருக்கும் படி அறிவியல் பூங்கா ஒன்றை அமைக்க இருகின்றோம்.

கே. வளரும் தலைமுறையினருக்கு தாங்கள் கூறும் கருத்து என்ன?

ஒரு பாடப்பிரிவில் கால் ஊன்றி நிலைத்து நின்று புது புது கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும். இன்றைய தலைமுறையினரின் பல விதங்களில் ஏறுமுகம் உண்டு என்ற போதும் பல விதங்களில் இறங்கு முகமும் உண்டு. அவர்களுக்கு விடாமுயற்சியாய் பணி செய்யும் வழக்கமற்று, வேலைகளை எளிதில் முடிக்கவே முயல்கின்றனர். இதுவே அவர்களிடம் உள்ள பெரும் பின்னடைவாக உள்ளது.

இன்று 100% மாணவர்களில் 80% மாணவர்கள் எளிதாகப் பணியை முடிக்கவே எண்ணுகின்றனர். அதில் 10 முதல் 20% மாணவர்கள் மட்டுமே விடாமுயற்சியை கைக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமே இளம் தலைமுறையினரை படிக்க வைத்து முன்னேற்ற துடிகின்றனர். மாணவர்களும் படித்து, சாதனைகளை புரிய வேண்டும்.

கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது?

உண்மையாய் இருங்கள். எந்த நிலை வந்தாலும் உண்மைக்கு சற்றும் புறம்பாக நடந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் மற்றவர்களை விட முன் மாதிரியாக திகழ வேண்டுமா? மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் நீங்கள் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருப்பின் உங்களுக்கென்று வரலாற்று பக்கத்தில் ஒரு பக்கம் நிச்சயம் காத்திருக்கும்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பை போன்று தன்னம்பிக்கை என்ற ஒன்று எப்பொழுதும் உங்களோடு உறவாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவ்வாறு இருப்பின் நீங்களும் சாதிக்கலாம், சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

இந்த இதழை மேலும்

மனமே நலம்! மாற்றமே வளம்!!

டாக்டர்  க. மாதேஸ்வரன்

மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்

நிறுவனர், ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்.

மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற, சாதனைகள் புரிய, பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் வல்லமை படைத்தவர்கள் பலர் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன் மாதிரியாக வடிவம் பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் தலை சிறந்தவர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

கோவைப் பகுதியில் தலைசிறந்த மருத்துவர்கள் பட்டியலில் இவரைத் தவிர்க்க முடியாது என்பது நிதர்சனம். மருத்துவத் துறையில் காலத்தின் தேவையை அறிந்து, அனைத்து அதிநவீன வசதிகளையும் கொடுக்கும் மருத்துவமனையை நிறுவி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருபவர்.

தொடங்கும் எல்லா செயலிலும் வெற்றி, அதற்கு காரணம் இவரின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புத் தன்மை, தூய எண்ணம் போன்ற நல்லொழுக்கங்களைக் கொண்டவர்.

இத்தனை நற்பண்புகளைக் கொண்டு விளங்கும் ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்  க. மாதேஸ்வரன் அவர்களை ஒரு அழகிய மாலைப் பொழுதில் நேர்முகம் கண்டோம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை அழகிய கொங்குத் தமிழில் சொன்னார். அதிலிருந்து இனி உங்களோடு பயணிப்போம். கே. உங்களின் பிறப்பும், படிப்பும் பற்றிச் சொல்லுங்கள்?

ஈரோடு மாவட்டத்திலுள்ள  சித்தோடு பகுதியில் தான் பிறந்தேன். பெற்றோர். திரு. கருப்பண்ணசாமி, திருமதி. வள்ளியாத்தாள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம்.  என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர். நான் நடுப்பையன். என்னுடைய மனைவி ஸ்ரீகலா இல்லத்தரசி. மூத்தமகள் மினுமாதேஸ்வரன் காது மூக்கு தொண்டை சம்மந்தமான நிபுணத்துவத் துறையைப் படித்து வருகிறார். இளைய மகள் லலித் சித்ரா பி. எஸ். சி படித்து வருகிறார்.

எங்கள் குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயத்தைத் தவிர வேறு தொழில் அறியாதவர்கள் என்றே சொல்லலாம். வீட்டில் பால் தரும் கறவை மாடுகளும், தேங்காயும் எப்பொழுதும் இருக்கும். இது தான் எங்கள் குடும்பத்தின் வருமானம்.

நான் படித்தது என்று பார்த்தால் கோவையிலுள்ள ‘மைக்கேல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் எனக்கும் என் பெற்றோருக்கும் இடையிலான உறவுமுறை சற்று தூரமாகவே இருந்தது. காரணம் நான் முதல் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுதியிலேயே படிக்கும் சூழல் ஏற்பட்டது. விழாக்காலங்களில் மட்டுமே வீட்டிற்குச் செல்வேன். அப்பொழுது நானும்  என் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்வேன். 11 ஆம் வகுப்பு முடித்தவுடன் பி.யு.சி பட்டப்படிப்பை ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியல் படித்தேன். நாங்கள் தான் பி.யு.சி பட்டப்படிப்பை இறுதியாகப் படித்தவர்கள்.

கே. மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எவ்வாறு எழுந்தது?

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவது தான் பிள்ளைகளுக்குப் பெருமை என்று சொல்வார்கள். என் தாயாரின் விருப்பம் தான் என்னை ஒரு மருத்துவராக மாற்றியது.

என் தாயாருக்கு நீண்ட நாள் ஆசை. நம் குடும்பத்தில்  யாராவது ஒருவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பது.  முதலில் என் அண்ணாவிடம் கேட்டார், அவர் மறுத்துவிட்டார். அடுத்து என் தம்பி ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனால் என்னைக் கேட்ட பொழுது எவ்வித மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்.

சின்ன வயதிலிருந்தே டாக்டர் என்ற என் தாயாரின் ஆசை என் மனதில் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. இதனால் எந்நேரமும் படிப்பு படிப்பு என்றே ஆகிவிட்டது.

பி.யு.சி முடித்தவுடன் பெங்களூரிலுள்ள எம். எஸ் இராமய்யா மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பைப் படித்தேன். படிக்கின்றபோது மருத்துவத்தின் மகத்துவத் தையும், தனித்துவத்தையும் அறிந்தும், புரிந்தும் படித்தேன். மருத்துவராக விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் தனித்து அடையாளத் துடன்  வர வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். அதில் எனக்கு மூளைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

அதன் பிறகு மதுரையில்  நீயூரோ சர்ஜரி துறையைப் படித்தேன். இத்துறையை 5 வருடம் படிக்க வேண்டும். இதையும் வெற்றிகரமாக 2002 ஆம் ஆண்டு முடித்தேன். கே . உங்களின் முதல் மருத்துவர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?

எம். சி. எச் படிப்பை முடித்தவுடன் தூத்துக்குடியில் மெடிக்கல் கல்லூரியில்  பணியில் முதன் முதலாகச் சேர்ந்தேன். நான் சேர்ந்த பொழுது எனக்குள்ளே சில வரையறைகளை வகுத்துக் கொண்டேன். அது என்னவென்றால்.

எவ்வித பாகுபாடுமின்றி, நான் கற்றதையும், மருத்துவத்தில் பெற்றதையும் அவ்வாறே வெளிபடுத்த வேண்டும்.

மருத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இங்கு உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம், நல்லவர், கெட்டவர் என்ற எந்த பாகுபாடுமில்லை. தன்னை நாடி, வருபவர்களை நோயற்றவர்களாக மாற்றவேண்டும் என்பது மட்டுமே சிந்தனையாக இருக்க வேண்டும். இது தான் நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி. இன்றும், இனியும் இதையே கடைபிடிப்பேன்.

தூத்துக்குடியில் பணியாற்றிய பின்னர் 2004 ஆம் ஆண்டு கோவைப்பகுதிக்கு வந்து பயிற்சி மேற்கொண்டேன்.

கே. ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை உதயமானது குறித்துச் சொல்லுங்கள்?

உன் மீது நம்பிக்கை இருந்தால்  வானையும் அளக்கலாம், கடலையும் கடக்கலாம் என்பது தன்னம்பிக்கை பழமொழி. இந்த மருத்துவமனையின் உதயத்திற்கு இது தான் காரணம்.

நான் மதுரையில் பணியாற்றும் பொழுது டாக்டர் விஜயன் அவர்களின் நட்பு கிடைத்தது. அவரும் நானும் இணைந்து முதலில் ஈரோட்டில் தான் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஏதோ ஒரு தவிர்க்க முடியாது சூழலில் அது தடைப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே எண்ணம் உதயமாயின. ஆனால் இந்த முறை எவ்வித சவால்களையும் சந்தித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு தான் கோவையைத் தேர்ந்தெடுத்தேன்.

2012 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டேன். இதனால் கட்டடம் கட்ட வேண்டும் முதலில் நிலம் வாங்க வேண்டும், அந்த நிலமும் சரியான இடத்தில் வாங்க வேண்டும், கட்டடம் கட்ட அனுமதி வாங்க வேண்டும், விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும் எப்படி நிறைய வேலைகள் இருக்கிறது. அனைத்தையும் முறையாக கையாண்டு 14 மாதத்திற்குள் கட்டடம் முடிந்து 2016ல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கே . தனியார் மருத்துவமனை என்றாலே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கருத்து நிலவுகிறது, அது பற்றி?

இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும் இதிலுள்ள உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒரு மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் வங்கியில் மற்ற தொழிற் நிறுவனங்களுக்கு என்ன அடிப்படையில் பணம் கொடுப்பார்களோ அதே அடிப்படையில் தான் இதற்கும் பணம் கொடுக்கிறார்கள்.

தற்போது அனைவரின் பார்வையும் மருத்துவமனை என்றாலே பணம் சம்பாதிக்கும் தொழிலாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமின்றி கார்ப்பரேட் மருத்துவமனை என்றால் ஏதோ ஒரு தவறு செய்யும் கூடாரமாகவே பார்க்கப் படுகிறது. நாம் ஒரு தரமான மருத்துவத்தை குறைந்த செலவில்  கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், மருத்துவ பொருட்களின் விலை மிகவும் அதிகம். இவ்வளவு விலை கொடுத்து ஒரு இயந்திரம் தேவைதானா என்ற வினா கூட எழலாம். ஆனால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் இயந்திரத்தில் சிகிச்சையை மிக சுலபமாக பின் விளைவின்றி கையாளலாம்.

எந்த மருத்துவமனையும் 100 சதவிதம் விலை கூடுதலாகவும் இலாப நோக்கோடும் நடத்த மாட்டார்கள். அதே சமயத்தில் நஷ்டத்திலும் நடத்த மாட்டார்கள். ஒட்டு மொத்த  செலவையும் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப் படுகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையும் அவர்களுக்கு என்று ஒரு கட்டண மதிப்பீடு இருக்கும்.

கே . ஒரு மருத்துவமனையின் நிர்வாகம்  எவ்வாறு இருந்தால் அது சாலச் சிறந்தது?

பிரச்சனைகள் என்பது யாரிடமும் சொல்லிவிட்டு வராது, எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அவ்வாறு இரவு 12 மணிக்கு வந்தாலும் அவர்களை முறையாக அணுகி,  பிரச்சனையைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்தல் வேண்டும்.

மருத்துவமனையை நாடி வருபவர்களின் தேவையை அறிந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை முதலில் போக்கிக் கொள்ள வேண்டும்.

அதே போல் சிகிச்சைக்கு வந்தவர்கள் உங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த 30 நிமிடத்தில் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நோயாளிகளை அலைகழிக்கக் கூடாது. செவிலியர்களும் நோயாளிகளிடம் அன்பாகவும் அரவணைப்பாகவும் பழகுதல் வேண்டும்.

இவ்வாறு இருப்பின் மருத்துவமனையின் நற்பெயரை நிலைநிறுத்திக் கொள்ளலாம். கே . மருத்துவர் நோயாளிகளின் உறவு முறை பற்றிச் சொல்லுங்கள்?

எந்த நோயாளியும் மருத்துவமனைக்கு வருவதற்கு முன் டாக்டர் என்ன சொல்லி விடுகிறாரோ, என்று மனதில் பயத்துடனும், கவலையுடனும் தான் வருவார்கள்.

முதலில் அவர்களைச் சந்தித்து ஆறுதலாகவும், அன்பாகவும் சில வார்த்தைகளைச் சொல்லி அவர்களின் பயத்தை முதலில் போக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நோயாளி டாக்டரைப் பார்க்க உள்ளே வந்தவுடன் அந்தப் பரிசோதனை செய்து விட்டதா? இந்தப் பரிசோதனை செய்து விட்டதா? என்று முதலில் அதை செய்து வாருங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தல் கூடாது.

மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் அவரவர் விருப்பமான கடவுளையே நாடிச் செல்வர். அப்படியிருக்கும் போது நம்முடைய நடத்தையும் பேச்சும் அவர்களை பாதி நோயிலிருந்து விடுவிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

டாக்டரிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். டாக்டரும் இதை கடைபிடிக்க வேண்டும்.

எந்த மருத்துவரும் தன்னிடம் வரும் நோயாளி முழுமையாக குணம் ஆகிவிடக் கூடாது என்று நினைக்கமாட்டார். தன்னை நாடி வருபவர்கள் அனைவரும் முழு உடல் நலத்துடன் செல்ல வேண்டும் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நம்பிக்கையான வார்த்தை தான் நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மருத்துவர்களும் மனிதர்கள் தான். என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கே. ஆங்கில மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

ஆங்கில மருத்துவ முறைஎன்று சொல்வதை விட “விஞ்ஞான மருத்துவ முறை’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

விஞ்ஞானம் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்படும் கண்டுபிடிப்பு. இதன் அடிப்படையில் தான் தற்போது மருத்துவ முறைகள் நடை பெற்று வருகிறது. சாதாரண மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அவருக்கு அது இதயம் சார்ந்தது மட்டும் தான் தெரியும் ஆனால் ஒரு விஞ்ஞான மருத்துவர் அதை ஆராயும் போது தான் இன்ன பிற பிரச்சனைகள் இருப்பதும் புலப்படும்.

சர்க்கரை நோயாளிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சனை வரும் போது வலிதெரியாது. இதை மற்ற எந்த மருத்துவ முறையிலும் கண்டுபிடிக்க முடியாது. நம் மருத்துவ முறையில் தான் கண்டுபிடிக்க முடியும்.

ஒருவர் சாலையில் மிதிவண்டியில் பயணித்து வருவதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வருகிறது, என்றால் அவருக்கு முதல் உதவி கொடுக்கும் விதமாக, நிச்சயம் விஞ்ஞான மருத்துவரால் மட்டுமே அதற்கான சரியான தீர்வு காண முடியும்.

24 மணி நேரமும்  டாக்டர்கள், செவிலியர்கள் எப்போதும் இந்த மருத்துவமுறையில்  தான் இயங்கிக் கொண்டேயிருப்பார்கள்.

கே .மருத்துவ துறையிலுள்ள சிக்கல்கள் அதை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?

நிச்சயம், சிக்கல்கள் நிறைந்த துறைதான்.  உதாரணமாக ஒருவர் இரவு 12 மணிக்கு சாலை விபத்தில் அடிப்பட்டு உயிருக்குப்  போராடிக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் அவரை எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்.

அவர் யார், முகவரி என்ன, எந்த ஊரைச் சார்ந்தவர் என்று எதுவும் தெரியாது. அவரிடமும் அவர் சார்ந்த எந்த அடையாளமும் இல்லை. இத்தருணத்தில் ஒரு மருத்துவராய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் இது தான் மருத்துவர் என்பதின் மகிமை.

அவரின் உயிரைக் காப்பாற்றிய பின்னர், ஏதேனும் ஒரு முறையில் அவரின் வீட்டின் முகவரியை அறிந்து. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்த பின்னர், சிகிச்சை செலவை சொல்லும் போது அவர்களின் வறுமையின் காரணமாக கட்டமுடியாத சூழல் ஏற்படலாம். இதை எல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும்.

இப்படித்தான் நிறைய மருத்துவமனைகள் இப்படிப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறது.

சில ஊடகங்களும் செவிவழியாக சில செய்தியைக் கேட்டறிந்து தவறான தகவல்களைப் பரப்ப முற்படுகிறது.

அதே போல் எங்கள் மருத்துவமனை மிகப்பெரிய ஊழியர்களைக் கொண்டது. 1200  பேர் பணியாற்றுகிறார்கள். கூட்டம் எங்கு மிகுதியாக இருக்கிறதோ அங்கு பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். அவற்றையும் சமாளித்து ஆக வேண்டும்.

இப்படி நிறைய சவால்களை சந்தித்தால் தான் சாதனைப் பக்கத்தில் இடம் பிடிக்க முடியும்.

கே. உங்களின் நேர நிர்வாகம் பற்றிச் சொல்லுங்கள்?

24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் மூவர், மருத்துவர், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள். இவர்களுக்கு எப்போதும்  ஓய்வென்பதே இல்லை.

நான் விடுமுறை என்றோ, விழா என்றோ எதற்கும் விடுப்பு எடுத்தது கிடையாது. குடும்பத்தின் இடையே நேர செலவழிப்பு என்பது மிகவும் குறைவு. அதை என்னுடைய மனைவியும் மகள்களும் புரிந்து கொள்வார்கள்.

ஓய்வென்றே நினைக்க முடியாத தொழில். நான் ஒரு நான்கு நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்பே என்னைத் தயார் படுத்திக்  கொள்ள வேண்டும். அதற்கு என்னிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைத்துக் கொள்ள வேண்டும்..

அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே வெளியூருக்குச்  செல்ல முடியாது. காரணம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் வினா எழுப்புவார். டாக்டர் அடுத்த நாளே சென்று விட்டார் என்று வருத்தமும் கொள்வார். இதை எல்லாம் பார்த்து தான் ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும்.

கே. உங்கள் மருத்துவர் வாழ்வில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்று நீங்கள் நினைப்பது?

அப்படிச் சொல்ல வேண்டுமென்றால் நிறைய இருக்கிறது. நான் ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் நிறைய சிகிச்சை செய்திருக்கிறேன். வயதானவர்கள் முதல் பச்சிளம் குழந்தை வரை சிகிச்சை அளித்துள்ளேன்.

அதிலும்  ஒரு 14 மாதம் குழந்தைக்கு மூளையில் கட்டியை அகற்றி சிகிச்சை அளித்தது சற்று சவாலாக இருந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்தேன். பணம் கட்டும் இடத்திலிருந்து ஒரு பெண் குரல் டாக்டர் என்றது. திரும்பி பார்த்தேன் ஒரு 20 வயது மதிப்புத்தக்க பெண் என்னைப் பார்த்து ஓடிவந்து என்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்குச் சரியாக நினைவில்லை என்று சொல்லிவிட்டேன். நீங்கள் தான் ஒரு 10 வருடத்திற்கு முன்னால் என்னுடைய மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுனீர்கள் என்று தற்போது நான் கல்லூரியல் படிக்கிறேன் என்ற தகவலையும் சொன்னார் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரு மருத்துவராய் இதைத் தவிர என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. இப்படி எண்ணற்ற நிகழ்வு இருக்கிறது.

கே . இத்தருணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் பார்ப்பது?

என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று பார்த்தால் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய பெற்றோர்கள், அவர்கள் இல்லை என்றால் இன்று ஒரு மருத்துவராக நிச்சயம் ஆகியிருக்க முடியாது. அடுத்து என்னுடைய மனைவி ஸ்ரீகலா, மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வது உண்மை தான். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் அறிந்து நான் சோர்ந்து போகும் காலத்தில் எல்லாம் என்னுடைய கரமாக இருந்து செயல்படுத்தியவர். வீட்டில் நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து வழி நடத்துவதில் சிறப்பு பெற்றவர்.

ராயல் கேர் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழாவில் ராயல் கேர் என்ற பெயரில் சுகாதார பராமரிப்பு தொடர்பான செய்தி மடலை நரம்பியல் நிபுணர் டாக்டர் கே.விஜயன் வெளியிட மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த செய்தி கடிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு வரும். என்னுடைய மச்சான் கே.பி. அளகேசன், டாக்டர் கே.சொக்கலிங்கம் இருதய சிகிச்சை நிபுணர் இவர்கள் இருவரும் ராயல் கேர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இப்பொழுது வரை மருத்துவ மனைக்கு தூண்டுகோளாய் விளங்குகிறார்கள்.

மிகவும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய கே.எம்.சி. எச் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் நல்ல பழனிச்சாமி அவர்களை நிச்சயம் இந்த இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

கே. இன்றைய இளம் மருத்துவர்களுக்கு உங்களின் ஆலோசனை?

எதைச் செய்தாலும் 100 சதவீதம் உண்மையாகச் செய்தல் வேண்டும். மருத்துவர் என்பவர் கடவுளுக்கு ஒப்பானவர். இப்படியிருக்கும் போது இதன் மகத்துவத்தை புரிந்து நடத்துதல் வேண்டும்.

நோயாளி குறித்தான அத்துணைத் தகவல்களையும் அவரின் உறவினரிடையே முன் கூட்டியே சொல்லி விட வேண்டும்.

நாமும் எந்த நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க போகிறோம் என்பதையும் சொல்லி விட வேண்டும்.

கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஒரு முறைமட்டும் முயன்றவர்கள் யாராலும் வெற்றி பெறமுடியாது. தொடர்ந்து யார் முயன்று கொண்டேயிருக்கிறார்களோ அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். இதனால் எதையும் முடிக்க முடியும் என்ற உத்வேகம் உங்களுக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டால்  அதை வெற்றி பெறும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கே. நீங்கள் செய்த, செய்கின்ற சமூக சேவைகள் பற்றி?

எங்கள் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்களுக்கு உதவி செய்த மற்றும் எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களை அழைத்து 1000 பேர் கொண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

அவ்விழாவில் “”உயிரின் சுவாசம்” என்ற தலைப்பில் ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மரம் நடுதல் பணியைச் செய்து வருகிறோம்.

முதல் கட்டமாக 10000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டுயிருக்கிறோம். 2022 ஆம் ஆண்டுக்குள் கோவை மற்றும் ஈரோடு பகுதியில் 2 கோடி மரங்கள் நட வேண்டும் நிச்சயம் இதை நடத்தி காட்ட வேண்டும்  என்ற வேகத்துடன் செயல்பட்டுவருகிறோம்.

மாதம் 3 இலட்சம் மரம் வீதம் நடவேண்டும். இதை எல்லாம் என்னுடைய மருத்துவமனையில் நான் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் இதற்காக செலவிடுகிறேன்.

ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொது மக்கள் பயன் பெரும் வகையில் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மருத்துவமனையில் பதினைந்து சிறப்பு மருத்துவப் பிரிவுகள் சார்பில் சிறப்பு மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது.

பல்லாயிரக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவத் துறையின் நவீன சிகிச்சை முறைகளை அறிந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் நடைபெற்றவிழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் திருமதி. தாரிணி, திரு. பாலசுப்ரமணியம், கோவை மண்டல மேலாளர், மற்றும் மேலாளர் மற்றும் சூலூர் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மாதப்பூர் பாலு கலந்து கொண்டார்.

விழாவில் முத்தாய்ப்பாக மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அடைந்தார்கள் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை அறியும் வகையில் 150 நபர்களுக்கு மூன்று இலட்சம் கட்டணமில்லா சிகிச்சை பெரும் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பத்திரத்தை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் இலவசமாக வழங்கினார். மேலும் ஊழியர்கள் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த இதழை மேலும்