Home » Cover Story » எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…

 
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…


ஆசிரியர் குழு
Author:

திரு. S.M. உதயகுமார்

இயக்குநர், SPIRO ACADEMY பயிற்சி நிறுவனம்

சென்னை மற்றும் நாமக்கல்

சென்றதினி மீளாது மூடரே நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து

குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடியின் புற்றிருந்து வாழ்வீர்

தீமையெல்லாம் அழிந்து போகும், திரும்பி வாரா…

இவ்வரிகள் மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை உணர்த்தும் தத்துவ வரிகளாகும். இவ்வரியை தனது வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வாழ்ந்து வரும் தன்னம்பிக்கையாளர்.

வெற்றி என்பது அரிதல்ல… எளிது… ஆனால் அதற்கு நம்பிக்கை என்னும்  போராட்ட குணமும், முயற்சி என்னும் தன்னம்பிக்கை குணமும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற தத்துவத்தை தனது மாணவர்களுக்குப் போதித்து வரும் நல்லாசான்.

கனவு காணுங்கள் என்று சொன்னார் கலாம் அவர்கள்.. அந்தக் கனவை நனவாக்க என்னிடம் வாருங்கள், உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்கிக் காட்டுகிறேன் என்று நாளும் நம்பிக்கை விதையை மாணவர்கள் மனதில் விதைத்து வரும் SPIRO ACADEMY பயிற்சி நிறுவனத்தின் இயங்குநர் திரு. S.M. உதயகுமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பத்து கல் தொலைவிற்கு அப்பால் உள்ள புதன் சந்தைக்கு அருகில் S. உடுப்பம் என்னும் சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன். இவ்வூருக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில்  தான் என்னுடைய தொடக்கக்கல்வி முதல் உயர்நிலை கல்வி வரைப் படித்தேன். நன்றாகப் படித்ததால் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்றேன். இதனால் சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம் பொறியியில் கல்லூரியில் பி. இ. கம்யூட்டர் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

கே: படித்து முடித்தவுடன் உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

எனது பெற்றோர் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்னையும் படிக்க வைத்தார்கள். கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் இனியும் பெற்றோர்களிடம் பணம் வாங்கி படிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே 2005 ஆம் ஆண்டு கல்லூரியை முடித்தவுடன் ஓரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியாளராக வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் என்னுள் எடுத்துக் கொண்ட தீர்மானம்  என்னவென்றால் நாம் செய்யும் எந்தப் பணியும் இழிவானது அல்ல, செய்யும் எல்லா வேலையும் தெய்வமாக நினைத்துப் போற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் எனக்குள் சின்ன வயதிலிருந்தே சம்பளம் வாங்கும் இடத்தில் இருப்பதை விட கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அந்த வகையில் அந்த தனியார் நிறுவனத்தில் ஒரு நாற்பத்தி ஐந்து நாட்கள் வேலையில் இருந்தவிட்டு பிறகு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க முனைந்தேன்.

கே: நீங்கள் படித்தது பொறியியல் ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்ததோ பயிற்சி நிறுவனம் அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் படிக்கின்ற காலத்தில் இது போன்ற பயிற்சி நிறுவனங்களோ, ஆலோசனை மையங்களோ இல்லை. இதனால் நான் படிக்கின்ற காலத்தில் என்னைப் போல எத்தனையோ மாணவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. நினைத்த வேலை ஓன்று செய்யும் வேலை வேறாக இருந்தது. இது தான் என்னை ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கும் நிலைக்கு உந்தியது.

ஆரம்பத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பிராஜெக்ட் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினேன். எதிர்பார்த்து காத்திருந்த எத்தனையோ மாணவர்கள் தொடங்கிய ஆண்டே எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார்கள். நான் எப்போதும் தொடங்குவதற்கு முன் பலமுறை யோசித்துவிடுவேன். தொடங்கிவிட்டால் என்னுடைய யோசனை எல்லாம் அதன் வளர்ச்சி சார்ந்ததாக மட்டும் தான் இருக்கும்.

முதலில் சென்னையிலுள்ள அமிஞ்சகரையில் தான் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன்பிறகு ஆண்டிற்கு ஒரு இடத்தில் என்று நிறுவனத்தின் வளர்ச்சி பெருகி கொண்டே போனது. அதன்பிறகு SPIRO ACADEMY நிறுவனம் என்னும் பெயரில் தொடங்கி மாணவர்களுக்கு JEE, NEET, IIT போன்ற போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலவகையில் பயன் பெற்றனர். எங்கள் நிறுவனம் தொடங்கியதன் முதன்மை நோக்கமே JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளை மற்ற மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக அளவில் தேர்வு பெற்று வந்தார்கள், அவர்களை போல தமிழ்நாட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கம் தான்.

கே: SPIRO ACADEMY  பெயர் காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

இதற்கு மூன்று பொருள் இருக்கின்றன. ஒன்று சூரியன் உதயமாதல், சுவாசம், இரண்டு அணுக்கதிர்கள் போதும் ஒன்றை ஒன்று மோதும் பொழுது உருவாகும் ஒரு சக்தி தான் SPIRO என்பது.

படிக்கும் மாணவனுக்கு தன்னிடம் இருக்கும் உந்து சக்தியை மேம்படுத்தி அவன் சந்திக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதால் தான் இப்பெயர் வைக்கப்பட்டது.

இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் நீட் தேர்விற்கு 1,175,000 பேர் எழுதினார்கள். இந்தியா முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இதை இரண்டிலும் சேர்ந்து 65,000 சீட் தான் இருக்கிறது. அத்துனை பேர் எழுதும் தேர்வுக்கு வெறும் இவ்வளவு சீட் தான் இருக்கிறது. அதே போல் தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேர் எழுதினார்கள் ஆனால் இங்கு சீட் என்று பார்த்தால் வெறும் 2 ஆயிரம் தான். இதைப் பார்க்கும் போது மாணவர்கள் மனதில் ஒருவித பயத்தைக் கொடுத்து விடும்.

இதனால் ஒரு தேர்வு சார்ந்த பயத்தை மாணவர்களிடம் நீக்குதல் வேண்டும். அதே சமயத்தில் தேர்வு சார்ந்த ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். அவனுக்கே தெரியாமல் மனதளவில் அவனை தயார் படுத்தி அவன் மனதில் இருக்கின்ற சக்தியை வெளிகொணர்வது இந்நிறுவனத்தின் நோக்கம். இதன் அடிப்படையில் தான் இந்நிறுவனத்திற்குப் இந்தப் பெயரை வைத்தோம்.

கே: மாணவர்களின் சேர்க்கையையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் எப்படி பூர்த்தி செய்தீர்கள்?

இது ஒரு போட்டி நிறைந்த உலகம். எல்லோரும் ஒரு எல்லையை அடைய ஓடியும் தேடியும் கொண்டியிருக்கிறார்கள். இங்கு எத்தனையோ விதமான போட்டித் தேர்வுகள் இருக்கிறது. நமக்கு மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றும் பெரிதல்ல, தன்னிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்களை தயார்படுத்தி சாதிக்க வைத்திடுவோம்.

இச்சாதனையை படிப்பவர்களும் பார்ப்பவர்களும்  எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பே எங்களிடம்  200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

இந்தியாவில் இருக்கின்ற எல்லா மருத்துவக் கல்லூரியும் நீட் க்கு கீழே வந்து விடும். ஏஎம்எஸ் மருத்துவக்கல்லூரி ஜீப்மர்ஸ் இரண்டு மருத்துவக் கல்லூரியும் இந்தியாவின் அதி முக்கிய  மருத்துவக் கல்வி நிறுவனம் என்பதால் இந்த இரண்டிற்கும் சில விலக்குகள் இருக்கிறது. ஏம்எம்எஸ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். இந்த இரண்டு கல்வி நிலையங்களிலும் 200 சீட் இருக்கிறது. இதில் எங்கள் SPIRO ACADEMY லிருந்து 40 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஜீப்மர்ஸ்ல்  30 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் குறிப்பிட்ட பேர் எங்கள் நிறுவனத்திலிருந்து தேர்ச்சி பெற்று செல்வதால் இதைப்பார்க்கும் மாணவர்களும் பெற்றோர்களும் எங்களை நாடி வருகிறார்கள்.

2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு இருந்தது. ஆனால் அதன் பிறகு அரசு இத்தேர்வை நீக்கிவிட்டது. ஆனாலும் எங்கள் நிறுவனம் ஆகில இந்திய நுழைவுத் தேர்வான ஏஎம்எஸ், ஜீப்மர்ஸ், ஜெஇஇ போன்ற தேர்வுகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். தற்போது நீட் தேர்வு வந்தவுடன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இத்தேர்வு குறித்தான விழிப்புணர்வு அதிகம் வர ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள்.

இங்கு அறிவு குறைந்த மாணவர்கள் என்று யாரும் இல்லை. மாணவர்களில் இரண்டு படிநிலைகளில் இருக்கிறார்கள். ஒன்று சட்டென்று புரிந்து கொள்பவர்கள் மற்றொருவர் சற்று தாமதமாகப் புரிந்து கொள்வர்கள். இவர்களை சரியாக கையாண்டால் வெற்றி பெற்றுவிடுவார்கள்.

கே: கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கப்படும் பயிற்சிப் பற்றிச் சொல்லுங்கள்?

நகர்ப்புற மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். காரணம் அவர்களில் ஒரு சிலர் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களாக இருப்பார்கள். இதை அவர்கள் பெரிய குறைகளாகக் கருதுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை கிராமப்புற மாணவர்களே சிறந்தவர்கள் என்று சொல்வேன். காரணம் அவர்களுக்குள் அதிகபடியான கனவுகள் இருக்கும். உழைக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.

ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தாலும், கற்றுக் கொண்ட பின்னர் அவர்களின் கற்றல் போக்கு மிகவும் தெளிவாக இருக்கும். நகர்ப்புறத்தில் படிக்கும் மாணவர்களை சிறுவயதிலிருந்தே பெற்றோர்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி அவர்களை நன்றாகத் தயார் படுத்தி விடுகிறது. இதனால் அவர்கள் எதையும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

சென்ற ஆண்டுகள் 465 பேர் மெடிக்கல் கல்லூரிக்குத் தேர்வாகி சென்றார்கள். அதில் 40 பேர் கிராமப்பின்னணியில் தமிழ்வழிக் கல்விப் படித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகக் கருதுகிறேன்.

கே: உங்கள் நிறுவனத்தின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

மனிதனின் வளர்ச்சி படிநிலைகளில் எல்லா காலத்திலும் ஒவ்வொரு தேர்வை எதிர் கொண்டு தான் இருக்க வேண்டும். அதிலும் போட்டித் தேர்வு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வளர்ச்சியைக் கொடுக்கும் தேர்வாகும். இவ்வாறு இருக்கும் போட்டித் தேர்வில் இத்தனை வினாவிற்கு இவ்வளவு மதிப்பெண் என்று முடிவு செய்து விடுவார்கள். உதாரணமாக நீட் தேர்வில்  மொத்தம்180 வினாக்கள், 180 நிமிடங்கள் ஒரு வினாவிற்கு ஒரு நிமிடம் தான். இரண்டு ஆண்டுகள் அவர்கள் தினமும் இரவு பகல்  பார்க்காமல் படித்ததை இந்த மூன்று மணிநேரம் தான் தீர்மானிக்கிறது. ஒரு வினாவை சரியாக எழுதினால் 4 மதிப்பெண், ஆனால் தவறாக எழுதினால் மதிப்பெண் இல்லை மைனஸ் 1 மதிப்பெண். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை ஒரு மாணவன் எவ்வாறு தீர்மானிக்கிறான், கால மேலாண்மையை எப்படி சமாளிக்கிறான் போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு மாணவர்கும் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம் எஸ். சி. எஸ்.டி பிரிவினர் ஐந்து முறை எழுதுலாம். நீட் தேர்வு ஒரு ஆண்டு  பயிற்சி வகுப்பாக நடைபெற்று வருகிறது. மருத்துவர் கனவோடு தற்போது 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. சற்று கடினமான சூழலை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

நாங்கள் காலை 5 மணிக்கெல்லாம் மாணவர்களைத் தயார் படுத்தி விடுவோம். 6 மணிக்கு வகுப்புகள் தொடங்கி விடும். 6 மணியிலிருந்து 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் 1.30 மணியிலிருந்து  2 மணி வரை உணவு இடைவேளை, 2 மணியிலிருந்து 3 மணி வரை அவர்களுக்கு ஓய்வு அவர்கள் உறங்கிக் கொள்ளலாம். 3 முதல் 5 வரை ஆசிரியரின் மேற்பார்வையில் அவர்கள் படிக்க வேண்டும். 5 முதல் 6 வரை விளையாட வேண்டும். 6 மணியிலிருந்து 8 வரை படிக்க வேண்டும். இரவு உணவு அருந்திய பின்னர் அன்று நடத்திய பாடத்தை படிக்க வேண்டும் இப்படியே தொடர் சங்கிலியாக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பொழுது அவர்களும் சோர்வடையவோ, மன அழுத்தம் ஏற்படா வண்ணம் அவர்களை அவர்களே தயார்படுத்திக் கொள்வார்கள்.

பொதுவாக நீட் எழுதும் மாணவர்க்கு இயற்பியல், வேதியியல் பாடம் சற்று கடினமான இருக்கும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் எங்கள் அகாடெமியில் படிக்கும் எந்த மாணவனும் அந்தப் பாடத்தை படிக்கச் சொல்ல மாட்டார்கள். காரணம் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடையே எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு எப்போதும் இருக்கும்.

கே:  இந்த நிறுவனத்தின் ஆசிரியர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

எங்களிடம்  பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும், ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றிப்  பெற்றவர்களாகவும், 15 வருடத்திற்கும் மேலாக அனுபவம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பல இடத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சாதித்த வல்லுநர்களை மட்டுமே நாங்கள் ஆசிரியர்களாக நியாமித்து வருகிறோம்.

நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்