சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
சிற்ப கலா மாமணி ராமகிருஷ்ண ஸ்தபதி
ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடம்
புளியம்பாக்கம், வாலாஜாபாத்
காஞ்சிபுரம்.
மலைகள் இறைவன் செயலென்றால்
சிலைகள் சிற்பி திறனன்றோ
பருத்தி இறைவன் பசியென்றால்
உடைகள் நமது செயலன்றோ…
என்ற வரிகள் கவிஞர் கண்ணதாசனின் கவித்துவமான வரிகளாகும். இக்கவிதையில் ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அவருக்குரிய திறமைகளை அவரவர்கள் வளர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் எப்படியும் வெற்றிப் பெற்று விடுவார்கள். அந்த வகையில் இவர் தனக்கென்று தேர்ந்தெடுத்தத் துறையில் திறமையை வளர்த்து இன்று தமிழகம் முழுவதும் சாதித்து வரும் சாதனையாளர்.
எளிமை, நேர்மை, உண்மை இதுவே இவரின் அடையாளம், எடுக்கும் செயலை திறம்பட முடிப்பதே இவரின் தனித்துவம்.
இவரின் கை வண்ணத்தால் இன்று எத்தனையோ கோயில்களின் கருவறையில் இறைவன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். தலைசிறந்த ஸ்தபதிகளின் ஒருவரான சிற்ப கலையின் பெருமை மிக்க அடையாளமாய் விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ள ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடத்தின் நிறுவனர் சிற்ப கலா மாமணி திரு. ந.ராமகிருஷ்ண ஸ்தபதி அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் கோயில் திருமாகாளம் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தேன். இந்து விஸ்வகர்மா பாரம்பரியத்தை சேர்ந்த என்னுடைய குடும்பம் அடிப்படையில் கோயில் திருப்பணி வேலைகளைச் செய்து வரும் குடும்பமாகும். என் முன்னோர்கள் வழித் தொட்டு அனைரும் இத்தொழிலை மட்டுமே செய்து வருகிறோம். என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி ஆவர். நாங்கள் மூவரும் எங்கள் ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் தான் படித்தோம். எனக்கு ஏழு வயது இருக்கும் போது என்னுடைய தந்தை காலமாகிவிட்டார். குடும்பத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இறந்துவிட்டார் என்றால் அந்தக்குடும்பம் எத்தகைய சூழலை அடையுமே அதை நாங்கள் சந்தித்தோம். ஆனாலும் என்னுடைய தாயார் எங்களைப் படிக்க வைக்க முனைந்தார். ஆனாலும் என்னால் பள்ளிக்கல்வி வரை தான் படிக்க முடிந்தது.
எனக்கும் சிறு வயதிலிருந்தே எங்கள் தொழில் மீது தீராத ஒரு பற்றுதல் இருந்து வந்தது. என்னுடைய தந்தையின் சகோதரர் எங்கள் குலத் தொழிலை எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். என்னோடு எங்கள் குடும்பமும் பெங்களூருக்கு வந்துவிட்டார்கள். புதிய தொழில் என்றால் ஒருவித பயமும் தடுமாற்றமும் இருக்கும். ஆனால் எனக்கு அவ்வித பயமில்லை. காரணம் சிறு வயதிலிருந்து என் குருதியோடு கலந்த தொழில் என்பதால் எனக்கு ஆர்வம் வெகுவாக இருந்தது. என்னுடைய சித்தப்பா தான் என்னுடைய இத்தொழிலுக்கு ஆஸ்தான குருவாக இருந்தார். அப்போது தான் சிருங்கேரி என்னும் ஊரில் பெரிய ராஜகோபுரம் ஒன்றை கட்டுவதற்கு என்னுடைய சித்தப்பா அதற்கு உரிமம் பெற்றிருந்தார். அப்போது அவருக்கு உதவியாக நானும் உடனிருந்தேன். இதுதான் என்னுடைய முதல் பணி என்று சொல்வேன். அப்போது நான் கற்றுக் கொடுத்தது போதும் இவன் மேலும் நன்றாக வளர வேண்டும் என்று கருதி என்னுடைய சித்தப்பா மாமல்லபுரத்தில் இயங்கி வரும் அரசு சிற்பக்கலைக் கல்லூரியில் நான்காண்டு பட்டயப்படிப்பில் சேர்த்து விட்டார்கள். இக்கல்லூரி என்னை மேலும் பண்படுத்தியது. சிற்ப சாஸ்திரங்கள் அறிந்து கொண்டேன். கட்டிடக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன் இவ்வாறே என்னுடைய பயணம் தொடர்ந்தது.
கே: சென்னைக்கு வந்தது குறித்துச் சொல்லுங்கள்?
நான்காண்டுபட்டயப்படிப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்று, ஓரளவிற்கு சிற்பக் கலை சார்ந்த அத்துனை சாஸ்த்திரங்களையும் கற்றுக் கொண்டேன். அப்போது என்னுடைய மாமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பெரிய ஸ்தபதியாக இருந்த அவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள் மேலும் தருமபுர ஆதினம், திருவாடுதுரை ஆதினம் ஆகிய ஆதினத்துக்கு ஆஸ்தான ஸ்தபதியாக இருந்தார்கள். அவர்களுடன் ஒரு ஆறுமாதம் நானும் பணி செய்தேன்.
அடுத்த நான் படித்த கல்லூரியின் முதல்வர் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள், இவர் எனக்கு நெருங்கிய உறவினரும் ஆவார். இவர் டெல்லியிலுள்ள இராமகிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் உத்திரசாமிமலை என்னும் ஒரு பெரிய முருகன் கோயில் அதுவும் முருகனின் ஆறுபடை வீட்டின் ஒன்றான சுவாமி மலை போல் கட்டப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதை கல்லூரியின் முதல்வர் அவர்கள் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டார்கள். பெரிய கோயில் என்பதால் அதற்கான கல் எங்கு கிடைக்கும் என்று பார்க்கும் போது சென்னை புறநகர் பகுதியிலுள்ள வாலாஜாபாத்திற்கு அறுகாமையில் பட்டுமலைக்குப்பம் எனும் கிராமத்தில் கிடைக்கும் என்று தெரியவந்தது. அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பு யாரெல்லாம் ஸ்தபதியாகவும், உதவி ஸ்பதியாகவும் இருக்க போகிறார்கள் என்று ஆலோசனை மூலம் முடிவு செய்தார்கள். அதன்படி என்னை உதவி ஸ்தபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
அதன்படி 1965 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் மூன்று அக்கோயிலுக்கான திருப்பணிகள் சுமார் 70 சிற்பியர்களைக் கொண்டு நடைப்பெற்றது. அதன் பிறகு டெல்லிக்குச் சென்று அந்தக் கோயில் சார்ந்த திருப்பணிகளைச் செய்ய மூன்று ஆண்டுகள் அங்கேயே தங்கி பணிகளைச் செய்து முடித்தோம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் முன்னிலையில் மஹாகும்பாபிசேகம் நடைபெற்றது. டெல்லி சென்று சென்னை திரும்பிய பிறகு மஹாராஷ்ட்டிரா மாநிலம் பம்பாயில் திருச்செம்பூர் நகரில் முருகன் ஆலய கருங்கல் திருப்பணியை சுமார் எட்டு ஆண்டு காலம் நிர்மாணித்து முடித்துக் கொடுத்துள்ளேன். மேலும் எனக்கு மீனாட்சி சுந்தரம், மகேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்று தற்பொழுது என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
கே: சிலைகள் மற்றும் கற்கோயில்கள் செய்வதற்கான கற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஒவ்வொரு சிலைகளுக்கும் என்று தனித்தனியே கற்கள் இருக்கிறது. அதில் முதலாவது பாலசிலை, யவன சிலை, விருத்தசிலை, நபும்சகசிலை என்று வகைப்படுத்தலாம்.
ஒரு சிலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தப்பின்னர் கற்கள் இருக்கும் இடத்திற்கு உளியும், சுத்தியலையும் எடுத்து சென்று விடுவோம். அப்போது தேவையான கற்களை முதலில் தட்டிப் பார்ப்போம். அதில் எவ்வளவு சிலிக்கான் இருக்கிறது என்றெல்லாம் சரிபார்ப்போம். நாங்கள் எதிர்பார்த்த வகைகளில் சிலை கற்கள் இருந்தால் அதைத் தேர்ந்தெடுத்துவிடுவோம். அதன் பிறகு கல்லில் ஒரு விதமான ஓசை வரும். சிலை செய்வதற்கு இந்த ஓசை தான் முதன்மையானது.
மெதுவாக உளியை கொண்டு அடித்தாலும் வெண்கல பாத்திரத்தின் ஓசையும், கோயில் மணியின் ஓசையும் அதில் கேட்கும். இப்படி ஓசை வந்தால் இக்கல்லில் பிராணன் இருக்கிறது என்றும் அதுதான் சிலை செய்வதற்கு சரியானதாக இருக்கும் என்பதை கருதுவோம்.
கல்லில் கருப்பு நிறத்தில் கோடுகளோ அல்லது வெடிப்புகளோ ஏதேனும் இருந்தால் சிலை முடியும் தருவாயில் இருந்தாலும் அந்தக் கல்லினை நீக்கிவிட்டு புதிய கல்லில் தான் மீண்டும் அந்த சிலை செய்யப்படும். இவை அனைத்தும் என்னுடைய முன்னோர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதை என்றும் நாங்கள் மீறாமல் அதன் வழியே பின்பற்றி இன்று வரை சிற்பங்களை வடிவமைத்து வருகின்றோம்.
கே: சாஸ்த்திரங்கள் நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள்?
எங்கள் தொழிலின் சிறப்புப் பெற்ற நூல் சிற்ப சாஸ்த்திரம் ஆகும். சாஸ்த்திரங்கள் 18 வகையாக இருக்கிறது. அதில் காஸ்யபம், மயமதம், மானசாரம், விஸ்வகர்மீயம், சில்பரெத்தினம், ஆகிய ஐந்து நூல்கள் முக்கியமானது. கர்ப்பக்கிரகத்திற்கு என்று சில அளவு முறைகள் இருக்கிறது.
சிலைகளை வடிவமைக்க கூறும் ஆலய கர்த்தாவானவர் அளிக்கும் அளவு முறையையும் எந்த சிலை செய்ய வேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு அவர்கள் கூறிய சிலை கருவறைக்கு ஏற்ற உயரத்தில் செய்வதற்கு கர்த்தா நட்சத்திரத்தையும் சுவாமி நட்சத்திரத்தையும் எடுத்துக் கொண்டு ஆயாதி சிற்ப சாஸ்த்திரத்தின் அடிப்படையில் பொருத்தங்களை கணித்துத்தான் அச்சிலையை வடிவமைப்போம்.
ஒவ்வொரு சிலைக்கும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் அனைத்தும் சாஸ்த்திரத்தில் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. விநாயகர் என்றால் சதய நட்சத்திரம். அம்மாள் போன்ற பெண் தெய்வங்களுக்கு பூரம் நட்சத்திரம், சிவன் என்றால் திருவாதிரை நட்சத்திரம், மஹாவிஷ்ணு திருவோணம் நட்சத்திரம், காளிதேவி என்றால் கார்த்திகை நட்சத்திரம், மாரியம்மன் என்றால் மஹம் நட்சத்திரம், அனுமர் என்றால் மூலம் நட்சத்திரம், என்றும் இப்படி நட்சத்திர பெயர் முறைகள் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் படியே சிலைகளை வடிவமைப்போம். சிற்ப சாஸ்த்திர நூல்கள் எங்கள் தொழில் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
கே: ஒரு சிலைக்கு முகம் வடிவம் எப்படி கொடுக்கிறீர்கள்?
ஓவியமானாலும் சரி, சிற்பமானாலும் சரி முகம் தான் மிகவும் முக்கியமான ஒன்று. சாந்தம் நிலை என்றால் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அகோர நிலை என்றால் சற்று கோபமாக இருக்க வேண்டும் எப்படி சிலை கேட்கிறார்களோ அதுபோல வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம்.
ஒரு சிலை செய்வதற்கு முன் அதை பொது அளவாக ஒன்பது பாகங்களாகப் பிரிந்து கொள்வோம். இதற்கு நவாம்ஸம் என்று பெயர் ஒவ்வொரு சிலையும் 124 அம்சத்தில் செய்யப்படலாம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கிறது.
ஆண்தெய்வ சிற்ப்பம் என்றால் ஒரு அம்சம், பெண் தெய்வம் என்றால் ஒரு அம்சம் என பிரிவுகள் இருக்கிறது. சாஸ்த்திர ரீதியாக உத்தம தெசதாளம், மத்யம தெசதாளம், கன்யசததாளம், என்றும் உத்தம தெசதாளம் என்றால் 124 அம்சமாகவும் மத்யம தெசதாளம் என்றால் 120 அம்சமாகவும் கன்யச தெசதாளம் என்றால் 116 அம்சமாகவும் சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தம தெசதாளத்தில் சிவம் மற்றும் விஷ்ணு விக்ரஹங்களும் மத்யம தெசதாளத்தில் பார்வதி முதலான பெண் தேவதைகளையும் கன்யதசதளாத்தில் முருகன் மற்றும் சூரியன் முதலான தேவதைகளை செய்ய வேண்டும்.
கே: ஆண் தெய்வ சிலைக்கும், பெண் தெய்வ சிலைக்கும் உள்ள உடல் வேறுபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்?
அனைத்துக் கோயில்களிலும் ஆண், பெண் சிலைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அத்துனை சிலைகளும் ஒன்றைப் போலவே இருப்பதில்லை. ஏதேனும் ஒன்று வேறுபாடு காணப்படும்.
ஆண் தெய்வ சிலையை உடம்பு ரிஷப முகம் என்று சொல்வார்கள். முகத்தின் அளவும் மார்பின் அளவும் ஒன்றைப் போலவே இருக்க வேண்டும். ஆண் என்றால் வலிமையான உடல் அமைப்புடன் காணப்படும்.
அதுவே பெண் உடல் அமைப்பு என்று பார்த்தால் உடுக்கை போன்று அமைப்புடன் இருக்க வேண்டும். சிங்கத்தின் உருவத்தைப் போலவும், ஒவ்வொரு உடல்பாகமும் ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கிறது. உதராணத்திற்கு கைகள் என்றால் பனங்கிழங்கு போன்றும், கண் என்றால் மீன், வில் போன்ற வடிவில் இருக்க வேண்டும். பெண் என்றால் மென்மையானவர் என்றால் அவர்களுக்கு அவ்வாறு தோற்றப் பொலிவுடன் வடிவமைக்க வேண்டும்.
கே: நம் முன்னோர்களே தெய்வம் என்று கருதும் போது, சில தெய்வங்களுக்கு பல கைகள், பல முகங்கள் கொடுக்கப்படுகிறதே அதற்கான காரணங்கள் என்ன?
அதற்கு காரணம் தன்னை விட தனக்கு மேல் ஒரு தெய்வ சக்தி இருக்கிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள். அது மனிதனைப் போல் அல்லாமல் சற்று மாற்று உருவம் தேவைப்படுகிறது. அது தான் ஒரு காரணம்.
ஒவ்வொரு கடவுளுக்கும் பல உருவங்கள் இருக்கிறது. ஒரு சிலர் ஒரு தெய்வத்தை சாந்தமாக பாவித்து வணங்குவார்கள். மற்றொருவர் அதற்கு சற்று உக்கிரமாக வடிவத்தைக் கொடுப்பார்கள். மனிதர்களை விட சக்தி மிகுந்த உருவத்தை தான் நாம் தெய்வமாக ஏற்றுக் கொள்வோம். காளி போன்ற பெண்தெய்வம் ஆகோர தோற்றமுடையது. அதற்க்கு சாதாரணமாக இரண்டு கைகளுடன் இருந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு அச்சுறுத்தலாக இருக்காது, அதே 16 கரங்களுடன் ஒவ்வொரு கரங்களிலும் ஒவ்வொரு பொருள் இருக்கும். அதைப் பார்ப்பதற்கே பயத்தைக் கொடுப்பதாக காணப்படும். தவறு செய்பவர்கள் கூட கடவுள் நம்மை தண்டித்து விடுவார் என்ற பயத்தால் தவறு செய்வதைத் தவிர்த்து விடுவார்கள்.
வில், அம்பு, சங்கு, சக்கரம் இன்னப்பிற பொருட்கள் எல்லாமே காணப்படும். பிரம்மா போன்ற தெய்வ உருவத்திற்கு நான்கு முகங்கள். இது எதற்கு என்று பார்த்தால் நான்கு வேதங்களையும் குறிக்கும் விதமாக காணப்படுகிறது. இது அனைத்தும் ஆகம தத்துவத்தின் படியே கடைப்பிடித்து வருகின்றன.
கே: இக்கலையிலுள்ள சவால்கள் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
சவால்கள் நிறைந்த உலகத்தில் எதையும் சவால்களுடன் பார்த்தால் அதை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த சவாலை சமாளிக்கும் ஆற்றல் இருந்தால் எவ்வளவு பெரிய வலியையும் வலிமையாக்கலாம். இது தான் என்னுடைய தாரக மந்திரம்.
இத்தொழில் மற்ற தொழில்கள் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டது தான். சில வேலைகளை எல்லோரும் செய்யலாம். ஆனால் இந்த சிற்பக்கலையை முழுமையாகக் கற்றுக் கொண்டால் தான் இதில் வேலை செய்ய முடியும். சில சமயங்களில் வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் எங்களிடம் பணியிலுள்ள சிற்பிகள் கைத்தேர்ந்தவர்கள் ஆகையினால் எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளையும் செல்வனே எதிர்கொள்கிறோம்.
கோயில் பணி என்பது ஒரு குடும்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. ஒரு ஊர் சார்ந்து, ஒரு நகரம் சார்ந்து இருக்கும். அப்படி இருக்கும் போது வணங்க வரும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
கே: பண்டைய கால கற்கோயிலுக்கும், தற்போதைய கற்கோயிலுக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்களா?
கோயில்கள் என்றாலே சிற்ப சாஸ்த்திரம் வழியை மட்டுமே தான் அப்போதும், இப்போதும், எப்போதும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கர்ப்பக்கிரஹத்தை கருவறை என்பார்கள். அர்த்த மண்டபம் என்பது கருவறைக்கு வெளியே இருப்பது, மகாமண்டபம் என்பது பெரிய அளவுடையது, அங்கு வணங்க வருபவர்கள் அமர்ந்து கொள்ளலாம்.
கர்ப்பக்கிரஹ அளவில் அர்த்த மண்டபம் அறை, முக்கால், முழு அளவில் இருக்கலாம். மஹா மண்டபம் கர்பக்கிரஹத்தை போன்று மூன்று மடங்கு பெரிதாக இருக்கலாம். சோபான மண்டபம் தூண் போன்றவை இருக்கும். நிருத்த மண்டபம் நாட்டிய நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கும். இப்படித்தான் அனைத்துக் கோயில்களையும் ஒன்றைப் போலவே வடிவமைக்கப்படுகிறது.
மனித உடலை போன்ற அமைப்பைத்தான் கோயிலாக வடிவமைக்கப்படுகிறது. கோயிலின் மேல் உள்ள விமானங்கள் மாறுபடலாம். ஆனால் கோயிலின் வடிவமைப்பு எப்போதும் சாஸ்த்திரம் படியே இருக்கும்.
கே: சாதாரண ஒரு கல்லை சிற்பமாக்கி அதைத் தெய்வாக்கி மக்கள் அனைவரும் வணங்கும் பொழுது உங்களின் மனநிலை எப்படியிருக்கிறது.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அது என்னுடைய இந்தத் தொழிலுக்கு மிகவும் பொருந்தும். அப்படிருக்கும் போது மனதுக்கு ஆனந்தமாகவும், மனநிறைவாகவும் இருக்கும். ஒரு விக்ரஹம் செய்து முடித்தவுடன் அதோடு முடிவதில்லை. அது மக்கள் வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சிப் பெற வேண்டும், அதை செதுக்கும் சிற்பியும் வளர வேண்டும், கிராமமும் வளர வேண்டும். இப்படி எல்லாத்தையும் பார்க்க வேண்டும்.
கோயில் இல்லாத ஊர் பாழ் என்று சொல்வார்கள், அப்படியிருக்கும் போது எவ்வளவு நுட்பமாக செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சிலையை செய்தவுடன் ஜலாதிவாசம், தன்யாதிவாசம், புஷ்பாதிவாசம், ஷீராதிவாசம் இப்படி நிறைய பூஜைகள் இருக்கிறது. சிலையை ஆர்டர் செய்தவர்கள், அதை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் முன்னர் இங்கேயே மாத்ரு பூஜை ஒன்றை செய்வோம். ஆர்டர் செய்தவர்களே பூஜைக்கு தேவையான அத்துனை பொருட்களையும் வாங்கி வந்து விடுவார்கள். அதைக் கொண்டு அத்துனை பூஜைகளும் செய்து முடித்துத் தான் விக்ரஹங்கள் எடுத்துச் செல்லப்படும்.
கோயிலுக்கு சென்றவுடன் சிலையை 48 நாட்கள் ஜலாதிவாசம் செய்வித்து அடுத்த 48 நாட்கள் தான்யாதிவாசம், அடுத்த புஷ்பாதிவாசம், பிறகு ஷீராதிவாசம் அடுத்து தனாதிவாசம் செய்வித்து இறுதியாக ஸ்தபதி ஆனவர் விக்ரஹத்திற்கு தங்க ஊசி மற்றும் வெள்ளி சுத்தியலைக் கொண்டு கண்திறத்தல் சுபநிகழ்ச்சியை செய்விப்பார்கள். இதை நேத்ரோன்மிலனம் என்று சொல்வார்கள். இவ்வாறு கண் திறத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமு விக்ரஹம் கண்ணாடியில் முகம் பார்த்து பிறகு கன்றுடன் கூடிய பசு, சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள், யாவரும் பார்த்து முடித்த பின்னர் விக்ரஹங்களுக்கு தீப ஆராதனைகள் நடைபெற்று கடைசியாக சயனாதிவாசத்தில் செய்வித்து பிறகு விக்ரஹத்தை கருவரைக்குள் எடுத்துச் சென்று மந்திர ரூபமான யங்திரம் நவரத்தினம் ஆகியவற்றை விக்ரஹத்திற்கு கீழ் வைத்து திரிபந்தனம் இட்டு பிரதிஷ்ட்டை செய்து அஷ்டபந்தனம் செய்விக்கப்படும்.
கே: நீங்கள் கடந்த வந்த இந்த வாழ்க்கைப் பயணத்தில் உங்களால் மறக்க முடியாத சம்பங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
என் வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சிலையும் செய்யும் போது மனதில் மிகுந்த பயபக்தியோடு தான் செய்திருக்கிறேன்.
ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 33 அடியில் விஷ்வரூப அனுமன் விக்ரஹம் (27 அடியில் விக்ரஹமும் 6 அடியில் ஆதாரபீடமும்) செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த விஸ்வசம்ரண மாருதி சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் மூலமாக ஆர்டர் பெற்று விக்ரஹம் செய்வதற்கு தேவையான 33 அடி நீளம் கொண்ட ஒரே கல்லினை சிருதாமூர் என்ற கிராமத்தில் உள்ள கல் குவாரியில் தேர்ந்தெடுத்து எங்களது சிற்பக்கலைக் கூடத்திற்கு எடுத்து வந்து அவர்கள் எண்ணியது போல் சிலையை அழகுபட செய்து கொடுத்தது எப்போது நினைத்தாலும் என் மனதில் நீங்காத ஒரு நினைவுகள் இந்த சிலையை வடிவமைத்தது தான்.
கே: சமீப காலமாக நம் பாரம்பரிய சிலைகளைத் திருடப்பட்டு, அச்சிலைகளை மீட்கப்பட்டு வருகிறது, அது பற்றிச் சொல்லுங்கள்?
அப்படி கடத்தப்படும் சிலைகள் எதுவும் தெய்வமாக வணங்க எடுத்துச் செல்வதில்லை. பண்டைய காலத்தில் செய்யப்படும் சிலைகள் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது என்பதால் அது விலை மதிப்பு மிக்கது.
ஆகவே அச்சிலையை திருடுபவர்கள் அதனை விற்பனை செய்து விடுவார்கள். அல்லது வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகத்திற்கு விற்பனை செய்து விடுகிறார்கள். இதற்காகத்தான் சிலைகள் திருடப்படுகின்றன. தற்போது நிறைய பழையான சிலைகள் மீட்கப்பட்டு வருவது சிறப்பான ஒன்று தான்.
கே: எதிர்காலத்தில் இது போன்று ஒற்றை வடிவமைக்க வேண்டும் என்று எதையாவது நினைத்ததுண்டா?
அப்படி நிறைய இருக்கிறது. கிராம தேவைகள் என்று சொல்வார்கள். அதற்கு என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இத்தனை காலம் ஆதாரம் இல்லாமல் தான் அச்சிலைகளை செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு ஆதாரம் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக கருப்பசாமி தெய்வம் ஏன் ஆக்ரோசமான தெய்வமாகவே கருதப்படுகிறது. அது ஏன் கையில் வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறது, போன்றவை பார்க்க வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதற்கு இதுதான் ஒரு வடிவம் என்று முறைப்படுத்த வேண்டும்.
நிறைய கோயில்கள் சென்று ஒவ்வொரு கடவுளையும் பார்த்து, அதில் உள்ள சுவாமி வடிவமைப்பு, ஆயுதங்களை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன். சேகரித்த தகவல்களை அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும். இது தான் என்னுடைய கனவாக இருக்கிறது.
கே: பெற்ற பட்டங்கள் குறித்து?
திறமையும் புதுமையும் இருந்தால் பட்டங்கள் நம்மை வந்து தானாவே சேரும் என்பதை நம்புவன் நான். அப்படி நிறைய பட்டங்கள் வாங்கியிருக்கிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாக சிற்ப கலாமாமணி விருது, ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய குரு ஸ்வாமிகள் ஆதீனத்தின் மூலம் எழில் சிற்ப மாமணி விருது, அக்காடமி ஆஃப் யுனிவர்சல் குலோபல் பீஸ் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம், சுதேசி பத்திரிக்கை அமைப்பு மூலம் தர்மோ தாரண விருது மற்றும் தமிழக அரசின் பூம்புகார் கலைக்கூடம் வழங்கிய 2016-2017 ஆம் ஆண்டிற்கான வாழும்பலைப் பொக்கிஷம் விருதினையும் பெற்றுள்ளேன்.
கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் உங்களுக்கான துறையை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களால் முடிந்தளவிற்கு உழைத்திட வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும.
நம் உடலில் அனைத்து விதமான சக்தியும் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் வெற்றி பெற்று விடலாம்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story