Home » Articles » வாழ நினைத்தால் வாழலாம் – 23

 
வாழ நினைத்தால் வாழலாம் – 23


மித்ரன் ஸ்ரீராம்
Author:

சவால்கள்

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா? என்ற மன்னரின் சவாலுக்கு பதில்தான் அந்த கவிதை.

அந்த கவிதையில் பிழை இருக்கின்றது என்ற ஒரு கவிஞனின் சவாலுக்கு பதில்தான் கடவுளின் வாக்குவாதம்.

அந்த வாக்குவாதச் சவாலுக்கு பதில்தான் நெற்றிக்கண் திறந்து தண்டனை.

அந்த தண்டனை சரியா என்ற சவாலுக்கு பதில்தான் இறைவனின் கருணை.

அந்த கருணையின் சவாலுக்கு பதில்தான் மனிதனின் பக்தி.

இப்படி ஒன்றுக்கொன்று தொடராக இருப்பதே சவால்களின் சிறப்பு.

சகுனியின் சவால்கள் – பஞ்சபாண்டவர்களை “பஞ்ச” – பாண்டவர்களாக ஆக்கியது.

Guinness World Records புத்தகத்தின் பக்கங்கள் பிரதிபலிப்பது சவால்களும் – அதன் விடைகளும் – விளக்கங்களும் – மற்றும் விடைசொன்ன சாதனையாளர்களின் விலாசங்களும் தான்.

விஞ்ஞானம் வைத்த சவால்கள் தான் கற்காலத்தில் கணைகளை வீசிய மனிதன் இப்போது ஏவுகணைகளை வீசும் அளவு வளர்ந்த கதை.  அவை வரலாற்றின் பெருமைப் பக்கங்களில் பதிவு செய்து வைக்கவேண்டியவை.

“சவால்கள்” – வெற்றியாளர்களின் உற்சாக சுரப்பி.

“சவால்கள்” – சாதனைப் பிரியர்களின் பெருமைப் பொக்கிஷம்

“சவால்கள்” – எதிர்க்கத் துணிபவரின் ஏழாம் அறிவு

“சவால்கள்” – வளமான எண்ணங்களின் வண்ணப் கோலம்

“சவால்கள்” – அர்த்தமுள்ள வாழ்வின் அடுத்த படிக்கட்டு

இந்த குணங்கள் சுவர்க்கபுரியின் கதவுகளை திறக்கும் சாவிகள் – என்பதே நிதர்சனமான நிஜம்.

ஒரு உயர்ந்த கோபுரம்.  அதன் உச்சியில் ஒரு தீபம்.  அதை எட்டிட வேண்டும், தொட்டிட வேண்டும் என்பதே ஒரு தவளைக் கூட்டத்துக்கு விடுக்கப்பட்ட சவால்.  செங்குத்தான கோபுரத்தின் சுவர்கள் முழுதும் வழுக்கும் பாறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டது.  பல தவளைகள் பாதியிலேயே விழுந்தது.  உங்களால் முடியாது என்று பலர் கொடுத்த குரல்களின் எதிரொலி – எஞ்சியிருந்த சில தவளைகளின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.  ஒரேயொரு தவளை மட்டும் – மேலே, மேலே – இன்னும் மேலே என்று ஏறி உச்சியின் முகப்பை தொட்டது.  பாராட்டுகள் குவிந்தன.  எப்படி உன்னால் முடிந்தது என்ற கூட்டத்தின் கேள்விகள் அதன் காதில் விழவில்லை – காரணம் அதற்க்கு காது கேட்காது.

“தன்னம்பிக்கையை தகர்க்கும் வார்த்தைகளை காதில் வாங்காமல் முயன்றால், முடியாதது ஏதும் இல்லை” என்பதை இந்த தவளை உணர்த்தியது.

நீங்களும் தவளைகளாக இருங்கள் என்று நான் சொன்னபோது, அறிவில் சிறந்த சில ஞானிகள் “மனிதர்கள் தவளைகளாகத்தான் இருக்கிறார்கள்.  “கோபுரத்தின் மடியில் அல்ல – கிணற்றின் அடியில்” கிணற்றுத்தவளைகளாக – என்றார்கள்.

அதிர்ச்சியாக இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும்போது , அவை உண்மை என்றே என்னால் உணர முடிந்தது.  இதோ அந்த ஆதாரங்களின் அணிவகுப்பு.

முதிர்ந்த இலைகளை கொண்டு, ஊதும் முன்பே உதிரும் நிலையில்தான் பெரும்பாலான முதியவர்கள்.  முதியோர் இல்லத்து கதவுகளும், தங்கள் மகன் வீட்டு சுவர்களும் தான் அவர்கள் கடைசிவரை கண்டது.  தன் மகனையும் எதிர்க்க முடியாமல், எமனையும் ஏற்க முடியாமல் சாவோடு போராடும் போராட்டம் ஒன்றுதான் அவர்களின் “சவால்”.  மரணத்தை அவர்கள் வென்றாலும் (முக்தி அடைதல்) மரணம் அவர்களை வென்றாலும் (இறந்துபோதல்) – அவர்களுக்கு நன்மைதான்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.  இன்றைய மன்னர்கள் இப்போது “மதுவின் மயக்கத்தில்”.  இளவரசர்களும் இப்படித்தான்.  இளைய தலைமுறையின் உண்மையான சவால்கள் இதோ!

Unqualified ஆட்கள் ஆசிரியர்களாக பல பள்ளி, கல்லூரிகளில் பாதிப்பேருக்கும் மேல் பாரபட்சம்.  இது கல்வித்துறை வைக்கும் சவால்.

புத்தகம் படிக்கும் பழக்கம் போதிக்கப் படாததால் – பல சரித்திர சாதனைகளை பற்றிய அறிவே இல்லாமல் இருப்பது, இன்றைய இளைஞர்களை “சரித்திரம் படிக்கவும் விடுவதில்லை – சரித்திரம் படைக்கவும் விடுவதில்லை.  ஆமாம்.  Sardar Patel இப்போது சிலை திறந்த பின் தான் பலருக்கும் தெரிகின்றது.

ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், Engineer கள், Doctor கள் என ஒவ்வொரு வருடமும் படித்துமுடித்து வெளியில் வந்து – படிக்க முடியாத இன்னொரு கூட்டத்துக்கும் போட்டியாக இணைவதால் – வேலையில்லாத் திண்டாட்டம் வெறிகொண்ட நாய் போல பயமுறுத்துகின்றது -மிகப் பெரிய சவால் தான்.  இதிலே இன்னொரு பிரச்சினை என்னவென்றால் – மற்ற மொழிகளை மதிக்கக்கூடாது என்று யாரோ சிலர் எதற்கோ சொன்ன பேச்சை நம்பி தமிழைத் தவிர எதுவுமே தெரியாமல் தடுமாறும் அவலம்.  ஆங்கிலமும் அரைகுறை.  தமிழ்நாட்டு ஆர்ழ்க்ங்ழ் ஐ தாண்டிப்போக முடியாத அவலம் -அறிவு மனிதனிக்கு வைக்கும் ஒரு சவால்.

அரசாங்க உத்தியோகம்தான் வேண்டும் என்று காத்திருப்பது.  (பின் சம்பளம் போதவில்லை என்று Strike செய்வது தனிக்கதை)  தகுதிக்தேர்வுகள் தமிழில்தான் நடத்த வேண்டும் என்ற தர்க்க வாதம்.  வாதம் முடிந்து வாழ்க்கைக்கு வரும்போது வேறு மொழி தெரிந்தவன் வேலையில் சேர்ந்திருப்பான்.  இது மொழி மனிதனுக்கு வைக்கும் மற்றொரு சவால்.

America வில் இருக்கும் நிறுவனம் அல்ல் மூலமாக அகில உலகமும் வியாபாரம் செய்யும் சூழலில், உள்ளூர் முதலாளி உயிரைக்கொடுத்து தொழில் செய்தாலும் பெரிய வளர்ச்சி இல்லை.  இந்த நிலை தொடர்ந்தால் – Industrial Estate p Estate தான் இருக்கும் Industry அதிகம் இருக்காது – என்பது தொழில்துறை விடுக்கும் சவால்.

இத்தனை பலவீனமான அடித்தளத்தை நம்பி கோட்டை கட்டுவது சரியா?  சிந்திக்க வேண்டும் சமூகம்.

“காலையில் கண் விழிப்பது தொடங்கி இரவு கண் தூங்குவது வரை” – சவால்களின் தொகுப்பாகவே வாழ்க்கை ஆகிப்போனது.  பெரும்பாலும் சவால்களே ஜெயிக்கின்றன!  சமூகம் தோற்கின்றது!

இத்தனை சவால்கள் இருக்க, தொலைகாட்சி Game Show, Blue Whale ல் உயிரை விடுவது, சீட்டாடுவது தப்பு என்று சொல்லும் பாரம்பரியத்தில் வந்ததை மறந்து Online Rummy விளையாடி – தன்னை ஒரு Dummy ஆக்கிக் கொண்டு, பெரும்புள்ளி ஆகவேண்டிய ஒரு பெரிய சமூகக் கூட்டம் கரும்புள்ளியோடு கொஞ்சமும் கவலையே இல்லாமல்.

தரமற்ற கல்வி – மோசமான சூழ்நிலைகள் – சுகாதாரமின்மை – போதை பழக்கம் – நாகரீகமற்ற நடத்தை – சுயநலம் – என்ற கலவைகளை கொண்டு கட்டப்படும் சமூகம் எனும் கட்டடம் – நிழல் கூட தராது என்பதே நிதர்சனம்.

Building Strong but Basement Weak!

மருந்துகள் மட்டுமல்ல, இப்போது பல மருத்துவர்களும் போலி என்பது வியாதிகளை விட பெரிய வியாதியாகி விட்டது.  மருத்துவ மனைகளுக்கு Master Wealth Checkup செய்ய வேண்டிய அளவுக்கு மருத்துவம் Costly ஆகிப்போனது – மருத்துவத்துறை மனிதன் மீது தொடுக்கும் மற்றொரு சவால்.  பல மருந்துகளை நோயாளிகளின் மீது திணிப்பதால் – பலர் பாவம், இல்லாத வியாதிக்கும் சேர்த்து மருந்து உட்கொள்கிறார்கள்.

குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தும் தொடர்கள், நட்பை கேவலப்படுத்தும் காட்சி அமைப்புகள், ஆண்டவனையும், ஆன்மீகத்தையும் அசிங்கப்பத்தும் தீர்ப்புகள் – இப்படி திரும்பிய திசையெங்கும் சமூகத்தை சகதியில் வீழ்த்த முயலும் சதிகள்.  இந்த சவால்களை எல்லாம் உணர்ந்துகொள்ள வேண்டிய தருணத்தில் தான் ஒவ்வொருவருமே.

பத்து ரூபாய் தேநீருக்கே Perfection பார்க்கும் குணம் கொண்ட மனிதன் – பல சவுக்கடிகள் பெற்றும், தான் ஏமாளியாக நிர்ப்பதுகூட தெரியாமல் விழிப்பது – வேடிக்கை அல்ல வேதனை.  ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே ஏமாந்து கொண்டிருக்கும் இந்த மனிதப்பூனைக்கு தெளிந்த சிந்தனை எனும் “மணியை” கட்டுவோம்.

மணி (Money பணம்) ன் அருமையும் தெரியாமல், மணி (Time நேரம்) ன் அருமையும் தெரியாமல் வாழும் பல குருட்டுப் பூனைகளுக்கு இந்த வெளிச்ச மணிகள்.

முடிந்தவரை பல மொழிகளின் ஆளுமையை குழந்தைகளின் மூளைக்குள் செலுத்துங்கள்.  படிப்பும், மொழியும் 2 கண்களைப் போன்றவை என்று புரிய வையுங்கள்.

என் இந்த கருத்துக்கு காரணம் உண்டு.  ஒவ்வொரு நாளும் வாழ்வின் தரம் குறைந்துகொண்டே போகின்றது.

உங்கள் முப்பாட்டன் வாழ்ந்த ஆரோக்கியமாக வாழ்வை – உங்கள் பாட்டன் வாழவில்லை.

உங்கள் பாட்டன் வாழ்ந்த அமைதியான வாழ்வை – உங்கள் அப்பன் வாழவில்லை.

உங்கள் அப்பன் வாழ்ந்த தொலைந்துபோன தர்மமான வாழ்க்கை முறையை – இப்போது நீங்கள் வாழவில்லை.

நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்குலைந்து வரும் மனிதநேய வாழ்க்கை முறையை விட கேவலமான நிலையை உங்கள் பிள்ளைகளுக்கு, அடுத்த தலைமுறை அரசர்களுக்கு கொடுக்காதீர்கள்.

அன்பும், பண்பும், பாரம்பரியமும், கலாச்சாரமும் சிதைந்து போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சிறப்பாக வாழ்வது சிரமம் தான்.

எல்லா வளமைகளையும், செழுமைகளையும், பெருமைகளையும், உரிமைகளையும் தலைமுறை தலைமுறையாக இழந்துவிட்டு – இப்போது இழக்கவும் ஏதுமில்லாமல், கொடுக்கவும் ஏதுமில்லாமல் – நிராதரவான நிலையில் நீங்கள்.

“அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கவுரவம், அவர்மேல் தொடுத்ததே அர்ச்சுனன் கவுரவம் – என்ற சுயநல மனோபாவத்தில் இருந்து விடுபட்டு, இன்றைய எதார்த்த நிலையை சீர்தூக்கி பார்த்தால் “கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா, கதிரவன் வரவுகண்டு கமலமுகம் மலர்ந்ததம்மா” – என்ற தெளிவை அடைய முடியும்.

அப்படி வாழ்ந்தால், “நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பதுதான் நீதியடி, இல்லாமை மாறிவிட்டால் எந்த உயிரும் வாழுமடி, பல்லாண்டு பாடுங்கடி பறவைபோல ஆடுங்கடி, பதினாறும் பெரு வாழ்வும் வருகவென்று கூடுங்கடி” – என்ற கவியரசரின் கூற்றை அடுத்த தலைமுறைக்கு அறைகூவலாக – அவர்கள் சந்திக்கின்ற சவால்களுக்கு சரியான பதிலாய் சந்தோஷமாக அளிக்கலாம்.

அளித்தால், அவர்கள் வாழ்வும் விளங்கும்.

அதுமட்டுமல்ல,

“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்