Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

சினிமாவின் பின் தற்போதைய உள்ள இளைய சமூகம் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது, அது பற்றி உங்களின் கருத்து?

பொன்னுச்சாமி,

நூலகர், சேலம்.

சினிமாவின் பின் தற்போதைய இளைய சமூகம் சென்று கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது, அதே தான் எனக்கும் தெரிகிறது. ஆனால் அதற்காக அவர்களையும் குறை கூற முடியாது. ஏனென்றால் இதற்கு முந்தைய சமுதாயமும் சினிமாவின் பின் சென்றிருக்கிறது, அவர்களிடமிருந்து இந்த சினிமா பண்பாடு இன்றைய இளைஞர்களுக்கு வந்திருக்கிறது. சினிமா மோகத்தில் வயது வேறுபாடு காணமுடியவில்லை.

சினிமா என்பதே சமீபத்திய கண்டுபிடிப்புதான். முதல் தமிழ் சினிமா‘கீச்சக்கவதம்’1918 ஆம் ஆண்டும், முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’ 1931 ஆம் ஆண்டும், முதல் கலர் படம்‘கொஞ்சும் சலங்கை’ 1962 ஆம் ஆண்டும் வந்திருக்கிறது. சினிமா என்பது ஒரு உயர் தொழில் நுட்பம்; வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், சினிமாவில் பிரதிபலிக்கும். அதைத் தவிர்க்க முடியாது. அன்று முதல் இன்று வரை சினிமா மக்களை கவர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சினிமா அரங்குகளில் மக்கள் காத்துக்கிடந்தகாலம் மாறி வீடுகளிலேயே சினிமாபார்க்கும் நல்லகாலம் வந்திருக்கிறது.

சினிமா மோசமானது அல்ல. அது ஒரு ஆற்றல் மிக்க ஊடகம். அனைத்து கலைவடிவங்களை விட சினிமா வலுவானது என்றார் விலாடிமர் லெனின். எதையும் ஆழமாக ஆணித்தனமாகவும் சினிமாவால் சொல்ல முடியும். அண்ணன் – தங்கை பாசத்தையும், ஊழலின் கெடுதலையும், வறுமையின் வலியையும், மூட நம்பிக்கைகளையும், புற்றுநோயையும் சினிமாக்கள் சிறப்பாக சித்தரித்தன. நல்ல நோக்கம் கொண்ட சினிமா தயாரிப்பாளர்கள் இது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். ஆனால் வியாபார தயாரிப்பாளர்கள் பாலியல் உணர்வு மற்றும் வன்முறை போன்ற பலவீனத்திற்கு தீனியிடும் வகையில் சினிமாக்கள் எடுத்துவிடுகிறார்கள். பாலியில் உணர்வு(Sex) மற்றும் வன்முறை (aggression) ஆகியவை மனிதனின் இனவிருத்திக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான உணர்வுகள் என்று உளவியல் அறிஞன் சிக்மன் பிராய்டு கூறுவதையும் கவனிக்க வேண்டும். பெரிய ரவுடிகளை கதாநாயகர்களாக சித்தரித்துவிடுகிறார்கள். இதனால் இளைஞர்களுக்கு ரவுடியாக இருப்பதே பரவாயில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. நீதிபதிகளையும், காவல் அதிகாரிகளையும் ஏழனம் செய்கிறார்கள். இருந்தாலும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு என்பதால் இது போன்ற சினிமாக்கள் வருவதை தடுக்க முடியவில்லை.

சினிமா பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். சினிமா நிஜமல்ல, இதில் எதையும் மிகைப்படுத்தி மக்களை நம்பவைக்கவும் முடியும். பொய்யைக் கூட உண்மையாக்கி விட முடியும். அதிகமான வெளிச்சத்தில் கறுப்பான முகம் சிவப்பாகவும், குட்டையானவர் உயரமாகவும் தெரிவார். ஒருவருக்காக குரல் வளம் மிக்க இன்னொருவர் பாடுவார். பின்னணி ஓசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் திரை மறைவு தாக்கங்களால் திரையில் காணும் எல்லாமே பிரமாண்டமாக இருக்கும். அதைப்பார்ப்பவர் பரவசமடைந்து விடுவார்கள். இவை நமது உடலில் மகிழ்ச்சிக்குரிய வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே நாமும் புத்துணர்ச்சி பெற்று இதற்கு அடிமையாகி விடுகிறோம். மது, போதைப் பொருள், வாட்ஸ் அப் போன்றவைக்கு அடிமையாவதைப் போல சினிமாவிற்கு அடிமையாகிவிட்டோம். உலகின் மிக அழகான மோசடி சினிமாதான் என்றார் ஜீன்  லு கேடாட் என்பவர்.

நீங்கள் கேட்ட கேள்வியில் ஒரு ஆழமான பொருள் மறைந்திருப்பது எனக்கு தெரிகிறது. ‘இளைய சமூகம் சினிமா பின்னால் சென்று கொண்டிருப்பது ஆபத்தல்லவா? அவர்கள் அதன்பின் செல்லத்தான் வேண்டுமா?’ என்பது தான் உங்கள் கேள்வி. இது மிகசிக்கலான கேள்வி, இந்த கேள்விக்கான பதிலை இளைஞர்கள் தான் சிந்திக்க வேண்டும். இதற்கான தீர்வை அவர்கள்தான் கண்டுபிடிக்கவும் வேண்டும் என்றுதான் நான் சொல்லுவேன்.

முன் காலங்களில் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். இருட்டு அறையில் அமர்ந்து கொண்டு வெளிச்சத்தில் அவர்கள் கண்டது ஆச்சரியமாக இருந்தது. அழகான மனிதர்கள், அறை குறை ஆடைகள், ஆடம்பரம், ரம்மியமான இயற்கைக் காட்சிகள், ஒருவரே பலரை அடித்து வீழ்த்தும் நம்பமுடியாத சண்டைகள், ஒருவரே இருவராக தோன்றியது, ஏழை பணக்காரனாகும் பிரம்மாண்ட கதை, தீயவனை நல்லவன் வென்ற கதை என்று அவர்கள் வாழ்க்கை கனவுகளை அங்கே திரைக்கதையாக கண்டார்கள், ரசித்தார்கள், எல்லாவற்றையும் நம்பினார்கள்.

ஆனால் அறிவியல் கற்ற இன்றைய இளைஞர்களுக்கு சினிமா கதைகள் மிகைப்படுத்தப்பட்டது என்றும், அவை பலமுறை சொல்லப்பட்டது என்றும், அறிவுக்கு அப்பாற்பட்டது என்றும், சந்தேகமின்றி புரியும். இருந்தும் இவர்களும் இப்படி சினிமாவிற்குப் பின்னால் ஏன் செல்கிறார்கள், கல்வி என்ற உயர்ந்த வேலையை ஒதுக்கிவிட்டு பணத்தையும் நேரத்தையும் அறிவையும், முயற்சியையும் இதற்காக ஏன் செலவழிக்கிறார்கள் என்று புரியவில்லை.

அப்படி சினிமாவில் என்ன கதைதான் சொல்வார்கள்? ஒரு ஆண் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து இறுதியில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துவிட்டது, அரசியல் புரட்சி, தீயவர்களோடு மோதுவது போன்றவை பிரம்மாண்ட கதைகளா என்றும் இதில் உண்மை உண்டா என்பதும் படிக்கும் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதேவேளையில் மிகப்பெரிய கதைகள் பள்ளியிலும், கல்லூரியிலும் சொல்லப்பட்டு வருகிறது. நீங்கள் அவற்றை செவிசாய்த்துக் கேட்க வேண்டும், அவ்வளவுதான். அவையாவன:

பூமிஉருவான கதை

மனிதர்கள் தோன்றிய கதை

மின்சாரம் கண்டுபிடித்த கதை

விமானம் பறந்த கதை

நிலாவில் மனிதர்கள் கால்பதித்த கதை

போலியோ நோய்க்கு மருந்து கண்டுபிடித்த கதை

இந்தகதைகள் உங்கள் அறிவிற்குப் பெரிய சவாலாக இருப்பவை. வகுப்பறையில் நடக்கும் அற்புத கதைகளில் ஒப்பற்ற கதாநாயகர்களும் நடிப்பார்கள்.

மைக்கேல் பாரடே.

சர் ஐசக் நியூட்டன்

சார்லஸ் டார்வின்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ரிச்சர்ட் பீமன்

ஜொனால் சால்க்

நீல் ஆம்ஸ்ட்ராங் போன்ற நடிகர்கள் அவர்கள்.

இவர்கள் நிஜமனிதர்கள், அறிவியல் அறிஞர்கள், உலகை அளந்தவர்கள் மட்டுமல்ல உலக நாகரீகத்தையே மாற்றி அமைத்தவர்கள். இந்த கதாநாயகர்கள் இன்னும் நமது இளைஞர்களுக்கு அறிமுகமாகவில்லை. அவர்களை அறிமுகம் செய்ய அறிவியல் ஆசிரியர்கள் படாதபாடுபடுகிறார்கள் !

மனிதர்களுக்கு பொழுது போக்கு தேவைப்படுகிறது. இளைஞர்களுக்கு பொழுது போக்கு சினிமா மட்டுமே என்றாகி விடக்கூடாது. ஆக்கப் பூர்வபொழுது போக்குகள் வேறு பல உள்ளன. அவையாவன:

அ. வாசிப்பது – செய்தித்தாள், நூல்கள்.

ஆ. விளையாட்டு – கைப்பந்து, கால்பந்து, ஓடுதல்.

இ. இசை  –  இசைக்கருவி வாசிப்பது, பாடுவது.

ஈ. சமூகப்பணி – புயலால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி.

உ. சுற்றுலா – பல இடங்களுக்கு போய் வருவது.

ஊ. மொழிக்கற்றல் – பிறமொழிகளைக் கற்பது.

எ. சாகசம் – எவரஸ்ட் சிகரம் ஏறுவது.

இப்படியான பலவிதமான பொழுது போக்குகளில் ஈடுபட்டால், ஒரு இளைஞனுக்கு ஆளுமை உருவாகும்.

இளைஞர்களுக்கு வாழ்க்கைத் தொழில் பழக நேரம் வேண்டும். சினிமா பற்றி சிந்தித்து, சினிமா பாடல் ஒலிக்கச் செய்தால், மூளையில் வேறு எதையும் கற்றுக் கொள்ள இடமில்லாமல் போய்விடும். ஒரு தொழிலை சரியாகச் செய்ய முடியாதவரால் வருமானம் ஈட்ட முடியாது. வருமானம் இல்லை என்றால் வாழ்க்கைத்தரம் குன்றும். அப்படிப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளைத் தான் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு தொழிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு பொழுது அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு மிகவும் அவசியம். அந்த தேவையை சினிமா சரியாக நிறைவேற்றி விடுகிறது. ஆனால் சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டும் தான் என்பதை இளைஞர்கள் உணர்ந்து அதைத் தவிர்த்து தங்களது பொன்னான நேரத்தையும், சிந்தனையையும், பணத்தையும், உழைப்பையும் தொழில் சார்ந்த கல்வியில் செலவழிப்பத அவர்களுக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்