Home » Articles » எப்போதோ போட்ட விதை!

 
எப்போதோ போட்ட விதை!


அனந்தகுமார் இரா
Author:

‘உணர்வது உடையார் முன் கூறல்’ என்று வள்ளுவர் 718 ஆவது குறளில் சொல்வது இதுதான் போலும்.  ஒரு பயிற்சியாளர், அல்லது போட்டித் தேர்வு ஆசிரியர் சொல்வதை ‘கப்’ என்று பிடித்துக்கொண்டு, அதே மாதிரி படிக்கின்ற, அதையும் தாண்டி படைக்கின்ற சிஷ்யர்கள்… மாணவர்கள்… மாண்பு மிக்கவர்கள்.  ஆசிரியர்களின் ஆனந்தச் சிற்பிகள்.  ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இருக்கலாம்.  அதை சிரமேற்கொண்டு செய்யும் மாணவர்கள் ஆசிரியர்கள் பிறந்ததற்கே அர்த்தம் சேர்க்கிறார்கள்.  பல சூழ்நிலைகளில் பயிற்சியாளர்கள் மாணவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்.  எவ்வளவு சொல்லித்தரலாம் எப்படி சொல்லித்தரலாம் என்று… அப்படியான எனது இளைய குருக்களில் சிலர்… டாக்டர் கோபிநாத் இ.வ.ப., டாக்டர் சுந்தரேசன் இ. வருவாய்பணி, டாக்டர். இராம் பிரசாத் இ.ஆ.ப., டாக்டர் இளம்பரிதி, இ.ஆ.ப… டாக்டர் ஜெயசீலன் இ.ஆ.ப… மற்றும் செல்வி.ஹேமலதா, இ.கா.ப. (2017) என்று பிரமிக்க வைக்கின்ற சாதனையாளர்களின் பட்டியல் தொடர்கின்றது.  பெயர்கள்… எதற்காக தரப்பட்டுள்ளன என்று பலர் ஆச்சரியப்படலாம்… இந்தக் கோணத்தில் பெயர்களை நினைத்துப் பார்த்து எழுதும்பொழுது… நிச்சயமாக படித்துக்கொண்டிருக்கும் தன்னலமற்ற பயிற்சியாளர்கள் தங்களது உன்னதமான மாணவச் செல்வங்களை நினைப்பது மட்டுமன்றி அவர்களது பெயர்களை பதிலீடு செய்துகொள்வார்கள்.

அவர்களுக்கு நாம் ஏன் பயிற்சியளிக்க வேண்டும்… என்பதற்கு… “உண்டால் அம்ம இவ்வுலகம்” என தொடங்கும் புறநானூற்றின் 182 ஆவது பாடலை, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய பாடலை உதாரணமாக, காரணமாக காட்டலாம்.  இந்தப்பாடலை அ.முத்துலிங்கம் ஐயா தனது ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ புத்தகத்தில் அதே தலைப்பிலான சிறு கட்டுரையில் எடுத்தாண்டு இருப்பார்.  காரணமே இல்லாமல் பிறர்க்கு உதவுபவர்கள் இருப்பதனால்தான் இந்த உலகம் இயங்குகின்றது… இருக்கின்றது என்று பொருள்.  எவ்வளவு ஆழமான பொருள்? வாழ்வில் அப்படிப்பட்டவர்கள் பயிற்சியாளர்கள்!  ஆசிரியர்கள்.  தங்கள் ஊதியம்… பயிற்சிக் கட்டணம் எல்லாவற்றையும் தாண்டி… தன் மாணவன், மாணவி வெற்றி பெறவேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வத்தோடு… ஒரு வித்தையை… கற்றுத்தரும் எல்லா பயிற்சியாளர்களும்… இந்த புறநநூற்றுப் பாடலில் பொருந்துவார்கள்.  பத்து என்றால் பதினைந்தாய் செய்கின்ற நாடியா போன்ற மாணவிகள், சிஷ்யர்கள் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில், கற்றுத் தருகின்ற பரவசத்திற்காக கட்டணமே இல்லாமல் உழைக்கின்ற பயிற்சியாளர்களும் பலர் உண்டு.

உண்டு… உறங்கி… எதிர்காலம், இலக்கு, என்கின்ற சிந்தனைகள் ஏதுமின்றி இருக்கின்ற இளையோரை… எப்போதாவது கண்விழித்துக் கொள்வார்கள் என்று பயிற்சி கொடுக்கின்ற ஆசிரியர்களை கண்டதுண்டு.  நிச்சயம் அவர்களும் ஒரு நாள்… விழித்தெழுவார்கள் என்பது நம்பிக்கை.ஊதுர சங்கை ஊதி வைப்போம்! என்று கடமைக்காகவும் பயிற்சியாளர்கள் வகுப்பெடுக்க வேண்டி உள்ளது.  ஏனெனில்… ஒருகாலத்தில்… அந்த மாணவர்கள், பயிற்சியாளர்கள் வற்புறுத்திய விஷயங்களை, காலம் கடந்தாவது புரிந்துகொள்ளக் கூடும்.  இதற்கு நாடியா… லெவல் எடுத்துக்காட்டு வேண்டியதில்லை.  நம் எடுத்துக்காட்டே போதும்.

 1. ஐஞ்சு மணிக்கு எந்திரிடா!
 2. குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா!
 3. எடுத்த பொருள எடுத்த இடத்தில வைடா!
 4. மாலை ஆறு மணிக்கு படிக்க வீட்டிற்கு திரும்பி வந்துடு!
 5. ஒரு நாளைக்கு பத்து புரியாத வார்த்தைகளுக்கு… அகராதியை (Dictionary) பார்த்து அர்த்தம் எழுதி வை.
 6. அதிக நேரம் பகல்ல தேவையில்லாம தூங்காதே!
 7. செலவு செய்கின்ற காசிற்கு கணக்கு எழுதிவை!
 8. ஊருக்கு கிளம்பும்பொழுது பொருட்களை முதல்நாளிரவே எடுத்து அடுக்கி வை. பொருள் பட்டியலை எழுதி (செக் லிஷ்ட் – Check list) சரிபார் (Tick mark) என்றெல்லாம், அப்பா… எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.  எல்லா அப்பாக்களையும் போல.  எவ்வளவு எளிமையான அறிவுரைகள்.  அப்படியே பின்பற்றியிருந்தால் இன்னேரம்… என்ன ஆகியிருக்கலாம்… என்றெல்லாம் யோசிப்பது உண்டு… கண்டிப்பாக இருக்கிறாரே!  என்று இம்சையாக ஃபீல் பண்ணிய நாட்களுக்கு இப்பொழுது நன்றி சொல்லிக்கொண்டு இருக்கின்றோம்.  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!  என்று அவர் மேற்கொள் காட்டும் சொற்றொடரில் சொன்னாலும், நாற்பது வயதுகளில் அப்பாவின் அறிவுரைகள் இப்போது இனிக்கின்றன… வழிகாட்டுகின்றன.  இவை ஏதோ ஒருவருக்கு அவங்க அப்பா சொல்லிய விஷயமாக இல்லாமல்… எல்லோருக்கும் அவரவர் பயிற்சியாளர் சொல்ல வேண்டிய… நாடியா போன்று… பயிற்சியாளர் சொன்ன அளவைக்காட்டிலும் அதிகமாக செய்யப்பட வேண்டிய விஷயங்களாகும்.

விஷயங்களை பலவாறு ஆராய்ச்சி செய்து, நாடியா… கலந்துகொண்ட 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆட்ட மின்ன்ணு தகவல் பலகை வடிவமைப்பையும் விஞ்சிய வரலாற்றை விட்டுவிட கூடாது.  நாடியா பொதுவாக… தான் களத்தில்… மேடையில் ஏறி… விளையாட தொடங்கிய பின்பு… தான் கற்றதை; பயிற்சி செய்ததை, வெளிப்படுத்துவதில் மட்டுமே, கவனம் செலுத்துவாராம்.  அது முடிந்த பிறகு… மதிப்பெண் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பது கிடையாதாம்.  நானே எனக்கு மனசார 9.9 கொடுத்துக்கொண்டேன்.  முழு மதிப்பெண் பெறுவேன், என்று எதிர்பார்த்தேன்!,  என்று பொய் கூற விரும்பவில்லை என்று பேசுகின்றார்.  பயிற்சியாளரும் அப்படித்தான் கூறுகிறார்.  யு.பி.எஸ்.ஸி., டி.என்.பி.எஸ்.ஸி போன்ற தேர்வுகள் நீண்டநாட்கள் படிக்கச் செய்பவை.  (முதல் முயற்சியில் வெற்றி பெறுபவர்கள், கூட குறைந்தபட்சம் ஒரு வருடம் படிக்க வேண்டி உள்ளது – (இதைப் படிக்கின்ற தேர்வர்கள் அனைவரும் அந்த வகையைச் சேர வாழ்த்துகின்றோம்) – அப்படிப் படிக்கையில் பல வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன.  பயிற்சி செய்வது… அடிப்படையில் ஒன்றுதான்.  தேர்வு எழுதுவதும் ஒரு வித்தை தான்.  அதிலும்…

 1. அன்றாடம் படித்தல்
 2. கற்பனை செய்து பார்த்தல்
 3. மொழிபெயர்த்து நினைவு நிறுத்தல்
 4. பதட்டம் குறைத்தல் , எமோஷனல் இன்டலிஜென்ஸ்

என்பதுபோன்ற சிறப்பு அறிவுரைகள் சொல்லப்படுகின்றன… காலங் காலமாக… அறிவுரைகள் – கசப்பு மருந்துகள், என்று நினைக்கிறவர்கள் புன்னகைக்காலம்.  ஆனாலும் எங்கேயோ கேட்ட கதை போல…  எப்போதோ போட்ட விதை போல…

காலம் கடந்துகூட அத்தகைய டிப்ஸ்கள் (வழிகாட்டுதல்கள்) கைமேல் பலன்தரக் கூடும். கூடுமான அளவு ஆற்றலைக் கூட்டி நாடியா… காற்றில் கரணமடித்து… 1976 ல் அழகாக தரையில் தேவதை போல… (ஸ்லோ… மோஷனில்) இறங்குகிறார்.  வழக்கம் போல… மதிப்பெண் பலகையை பாராமல்… நடந்து கடந்து போகிறார்.  கரகோஷம்… விண்ணைப் பிளக்க… தொடர்ந்து… உயர்ந்துகொண்டு போக… என்ன நடந்தது… என்று புரியாமல்… நாடியா திரும்பி… என்ன நடந்தது என்று அறிந்து கொள்வதற்காக, மதிப்பெண் அறிவிப்பு பலகையை பார்கின்றார்…

அங்கே…

1.0 என்கின்றஎண்தான் காணப்படுகின்றது.அவர் குழம்பிப் போய்விடுகிறார்…மின்னணு கருவியை வடிவமைத்தவர், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் நிபுணர் உட்பட யாருமே முழு இரண்டு இலக்க எண்ணான 10 ஐ ஒருவர் பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை.  எனவே 9.9க்கு அடுத்து அதில் உள்ளீடு செய்யப்படவே இல்லை.  பத்து என அடித்ததும் அது ஒன்று என வெளிவந்துவிட்டது.  என்கின்ற உண்மை… ஒலிபெருக்கியில் அறிவிப்பாளர் ஆச்சரியத்தின் உச்சத்தில்… அலறிய பொழுதுதான் தெரிய வந்தது… அந்த விளையாட்டுலக அற்புதம் நடந்தது.  நாடியா அன்றுமுதல்… பயிற்சி செய்பவர்கள் பழுதில்லாத வெற்றி ஈட்ட முடியும் என்று நிரூபிப்பதன் – கொள்கை விளக்கமாக.  உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இளைய முதிய தலைமுறைகளை பிரமிக்கச் செய்து முயற்சி செய்ய உத்வேகத்துடன் தூண்டுகின்ற ஒரு ஆற்றலாக இருக்கின்றார்.  இப்படியெல்லாம்… பல ஜனாதிபதிகளிடம் பாராட்டுப்பெற்றது… தொடர்ந்து வந்த 1980 ஒலிம்பிக்… போட்டியில்… மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தது… போன்ற பல செய்திகள்… ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரின்… பாடல் ஒன்றிற்கு… நாடியா என்கின்ற பெயரையே சூட்டியது (ஏனெனில்… ஏற்கனவே பிரபலமாக இருந்த அந்த இசை… நாடியாவின் ஒளிப்படத்திற்கு… பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டு அதனால் மேலும் புகழ்பெற்றதும் காரணமாகும்)  இப்படி… நாடியாவின் சாதனை… பலருக்கு முன்னுதாரணமாக இருப்பது நிதர்சனமான உண்மை.

இப்படியெல்லாம்… மீண்டும் நீச்சல் பயிற்சியை திரு.முனியாண்டி என்னும் பயிற்சியாளரிடம்… தொடங்கி இருக்கின்ற கோபிகா, தீபிகாவோடு… நாடியாவுடைய யுட்யூப் வீடியோவை பார்த்து அற்புதமாக… ஊக்குவிப்பு (மோட்டிவேட்… Motivate)  செய்துவிட்டோம் என்கின்ற உற்சாகத்தில் அடுத்த நாள் அவர் எழுதிக்கொடுத்த பயிற்சி நிகழ்ச்சி நிரலை (Workout) செய்து முடிக்க… அவர்களுக்கும் முன்பே எழுந்து… தூங்கிக்கொண்டிருந்தவர்களை ‘டங்கல்’ பாடல் போட்டு உசுப்பி… நாடியாவின்… சிந்துவின், திருஷ் காமினியின் பாதையில் பயணிப்பார்கள் என்கிற ஆர்வத்தில் இப்படி பதினைந்து பக்கம்… எழுதும்பொழுது பார்த்தால்…  குழந்தைகள் மீண்டும் போர்வைக்குள்   நெளிந்துகொண்டு இருந்தார்கள்… கோபமே இல்லாமல்… பயிற்சியை விட்டுவிடலாமா?  என்று கேட்டபோது…

“அப்பா… இன்னும் நேரம் இருக்கிறது!”

என்று பதில் வந்தது…

அப்பா எழுப்பும்பொழுது… உறங்கிய நினைவும் வந்தது…

எப்போதோ போட்ட விதை!!

நேரம் வரும்போது முளைக்கும்… செழிக்கும்!

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்