October, 2018 | தன்னம்பிக்கை

Home » 2018 » October

 
 • Categories


 • Archives


  Follow us on

  தன்னம்பிக்கை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆயுதபூஜை

  கமலம் கந்தசாமி, செந்தில் நடேசன், கலைசெல்வி செந்தில், சுரேஷ், சசி, விக்ரம், மிருதுளா ,
  செல்வகுமார், விஷ்ணுபிரியா, சங்கீத் பிரசாத், அபர்ணா, அருள்தேவி, விஜயகுமார், விஜயலட்சுமி,
  தனலட்சுமி, சிவராமலட்சுமி, மீனா

  சின்ன சின்ன மாற்றங்கள் பெரியமாறுதல்கள்

  – திருமதி. பிரியா செந்தில்

  மாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்றுக் கொள்ள நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவில் மாற்றம், உடுத்தும் உடையில் மாற்றம் பேசும் மொழியில் மாற்றம், கற்கும் கல்வியில் மாற்றம் காணும் விதத்தில் மாற்றம், கேட்கும் விதத்தில் மாற்றம்…

  பல மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட நாம் ஏன் பேசும் விதம் மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்களை நாம் ஏன் கொண்டு வரக்கூடாது? நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு சிலமாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் நம்வாழ்க்கையில், நம் அணுகுமுறையில், நம் கனவுகளில், நம் குழந்தைகளிடத்தில், நம் குடும்பத்தில் பெரியமாறு தலைகொண்டு வரமுடியும்.

  இது எப்படி சாத்தியம்?உதாரணத்திற்கு நம்மில் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். எனக்கு office-ல Problem,  Business-ல Problem, Personal life-ல Problem, இப்படி சொல்வதால் நம் மனம் மற்றும் மூளை இரண்டும் அந்த பிரச்சனையை பற்றியே வட்டமிடுமே ஒழிய, அதற்கு தீர்வை யோசிக்க முடியாது அந்த விஷயத்துலயே உழன்று கொண்டு இருக்கும் ஆக அதற்கு தீர்வுகாண்பது என்பது நம் ஆழ்மனதின் சக்தியில் உள்ளது. நம் ஆழ்மனதில் உள்ளசக்தியை வெளிகொண்டுவந்து அதை செயல்படுத்த நம்மிடம் உள்ள ஆயுதம் வார்த்தைகள் Problem என்பதை Challenge என்று கூறிப்பாருங்கள். இந்த சொல் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். மனதை வலுப்படுத்தும்.  தீர்வுகாண ஒரு மனதைரியத்தை கொடுக்கும்.

  உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் நம்வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆம்மாற்றத்திற்கான ஆரம்பமாக நிச்சயம் இருக்கும். வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுவதால் நம் ஆழ்மனதில் சக்தியை ஆக்கப்பூர்வமாக மாற்றவும் முடியும்; மேம்படுத்தவும் முடியும்; மனதை நாம் சொன்னபடி கேட்கவைக்கும் முடியும். ஏனெனில் நம் மூளைக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்க்கும் சக்தி இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே கேட்கும். கேட்டுநடக்கும் அறிவியலும் உளவியலும் இப்படி இருக்கும் போது நாம் ஏன் இந்த மாற்றத்தை கொண்டுவர கூடாது?

  வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் அவையே எண்ணங்களாக மாறும். எண்ணங்களே செயல்வடிவம் பெரும். நாம்செய்யும் செயல்களே நம்வெற்றிக்கு வழிவகுக்கும்.

  பேசும் போது கவனித்து பேசுங்கள் உணர்ந்து பேசுங்கள் ஆத்மார்த்தமாக பேசுங்கள் அளப்பரியசக்தி பெறுங்கள். 

  எண்ணம் போல் வாழ்வு!

  திருமுறை கண்ட சோழன் பேரரசர் ராஜராஜன் 1033-வது பிறந்த நாள் சதய திருவிழா

  எதிர்வரும் அக்டோபர் 20-ம் நாள் ஐப்பசி திங்கள் 3-ம் தேதி சனிக்கிழமை மாமன்னர் இராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் விழா விவேகானந்தர் நற்பணி மன்றம் – தமிழ் வளர்ச்சிப் பிரிவு சார்பாக சிறப்புடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் ஒரு பகுதியாக வரும் 15.10.2018 திங்கட்கிழமை கல்லூரி மாணவ மாணவியருக்காக பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பேச்சு போட்டிக்கான தலைப்புகள்

  1. சங்க தமிழ் காட்டும் சமாதன நெறி
  2. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ்
  3. நாயன்மார்கள் வளர்த்த தமிழ்
  4. தமிழ் வளர்த்த தேசியம்
  5. விவேகானந்தரும் தமிழகமும்
  6. அறிவியலும் தமிழும்
  7. இராஜராஜ சோழனின் பன்முக தன்மை

  கட்டுரைப்போட்டி தலைப்புகள்

  1. மாமன்னர் இராஜராஜன்
  2. இராஜராஜ சோழனின் பன்முக தன்மை
  3. கம்பர், வள்ளுவர் காட்டும் சமயநெறி
  4. பாரதியின் பார்வையில் தமிழ்
  5. இயல், இசை, நாடகம், அறிவியல், தமிழ்

  நாள்: 15.10.2018 திங்கட்கிழமை நேரம்: முற்பகல் 11.00 மணி

  இடம்: மாரியம்மாள் மகாலிங்கம் அரங்கம்

  கல்லூரி வளாகம், பொள்ளாச்சி

  நிகழ்ச்சியில் பங்கேற்க விழையும் பொள்ளாச்சி பகுதி கல்லூரி மாணவ, மாணவியர் மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும், கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது படைப்புகளை மேற்கண்ட அரங்க வளாகத்தில் சமர்ப்பிக்கவும்.

  • தமிழ் பணியில்

  சுவாமி விவேகானந்தவர் நற்பணி மன்றம்

  அழைக்கவும் 94894 28074, 93621 38074, 96552 91575

  புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு

  ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ

  மருத்துவத் துறை

  2018 ஆம் ஆண்டிற்கான

  நோபல் பரிசு பெற்றவர்கள்

   

  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

  வாய்நாடி வாய்ப்பச் செயல்

  என்ற குறளில் வள்ளுவர் நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும், அதுவே சிறந்த மருத்துவரின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். இதை தற்போது மருத்துவத் துறையில் நிகழ்த்திகாட்டியிருக்கிறார்கள் இருவர்.

  உலகளவில் பெரிதும் மதித்துப் போற்றப்படும் பரிசு நோபல் பரிசாகும். தலை சிறந்த ஆய்வு மேற்கொண்டதற்கும், இச்சமுதாயத்திற்கு பெரிதும் மாற்றம் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிசார் கண்டுப்பிடிப்பவர்களைப் போற்றும்  விதமாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

  இவ்விருது உலகின் தலைசிறந்த விருது என்பதால் கண்டுபிடிப்பாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இது ஒரு இலட்சிய விருது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் எல்லா ஆண்டும் இவ்விருது வழங்கப்படவில்லை. விருதுக்குத் தேர்ந்தெடுத்தவர்களும் இவ்விருதை வாங்க மறுத்திருக்கிறார்கள். இதுபோன்ற எத்தனையோ சுவாரசியங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் மருத்துவத்துறையில் இந்த ஆண்டிற்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசுகு ஹோஞ்சோ அவர்கள் பரிசைப் பெற்று சாதித்திருக்கிறார்கள்.

  நோபல் பரிசு உருவாக்கிய விதம்

  ஆல்ஃபிரட் நோபல் சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் என்ற நகரில் பொறியாளர் பின்னணியுடைய குடும்பத்தில் பிறந்தார். இவர் சின்ன வயதிலேயே பன்முகத்திறமைக் கொண்டவராக விளங்கினார். அதிலும் குறிப்பாக இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளும் அடங்கும். மேலும் வேதியியலாளர், பொறியியலாளர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மேலும் போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார்.  இவர் 350க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித் துள்ளார்.

  ஒரு நாள் புகழ் பெற்ற பிரெஞ்ச் செய்தித்தாளில் மரண வியபாரி இறந்துவிட்டார் என்ற தலைப்பில் நோபல் இறந்ததாக செய்தி வந்தது. அச்செய்தியைப் பார்த்த நோபல் அதிர்ந்து போனார். ஆனால் அன்று இறந்தது அவரின் சகோதரர். பெயரையும் படத்தையும் தவறாகச் சித்தரித்து வெளியிட்டது. ஆனால் அந்தச் செய்தி அவரை பெரிதும் சிந்திக்க வைத்தது. மரணத்திற்குப் பின்னர் தன்னை எவ்வாறு சித்தரிப்பார்கள் என்பதை மரணத்திற்கு முன்னே அறிந்து கொண்ட நோபல் தான் இறந்த பின்னர் தன்னை மதிக்க வேண்டும் என்று யோசித்து நோபல் பரிசு என்னும் விருதை உருவாக்கினார்.

  இவ்விருது எல்லாத்துறைகளுக்கும் வழங்காமல் மனித இனம் முன்னேற்றத்திற்கு எந்தெந்த துறைகள் பயனுள்ளதாக இருக்கிறதோ அதையெல்லாம் ஒன்று சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று உயிலில் எழுதினார். அந்த வகையில்

  இயற்பியல்

  வேதியியல்

  மருத்துவம்

  இலக்கியம்

  அமைதி

  என ஐந்து துறைகளில் பரிசு வழங்கலாம் என்றும் அதற்கு தன்னுடைய சொத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன்பிறகு பொருளாதாரத்துறைக்கும் இவ்விருது வழங்கப்படலாம் என்றும் முடிவெடுத்தது. அதன் பிறகு வேறு எந்த புது துறைக்கும் விருதுகள் வழங்கப் போவதில்லை என்று  நோபல் அறக்கட்டளை முடிவெடுத்தது. அவரின் சொல்லின் படி நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 தேதி அன்று ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்படும். இவ்விருதின் மதிப்பு ரூ. 8 கோடி ஆகும்.

  நோபல் பரிசு வென்ற தமிழர்கள்:

  1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சர்.சி. இராமன் அவர்கள் பெற்றார்.

  1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பெற்றார்.

  2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் பெற்றார்.

  நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

  இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கும், அன்னைதெரசா, கைலாஷ் சத்தியார்த்தி ஆகியோர் அமைதிக்கான பரிசைப் பெற்றவர்கள்.

  ஜேம்ஸ் ஆலிசன் :

  அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தற்போது எம்.டி ஆண்டர்ஸன் புற்றுநோய் மைய இயக்குநராக இருக்கிறார். புற்றுநோய் சிகிச்சையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு 10 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று இருக்கிறார். இவரின் மனைவி பத்மானி சர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கயானா நாட்டில் பிறந்தவர். இவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை இந்தியர், தாயார் கயானா. பத்மானி அவர்கள் சின்ன வயதிலேயே கயானாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று விட்டார்கள்.

  ஜேம்ஸ் ஆலிசனின் தாயார் மற்றும் இவரது இரண்டு மாமாக்கள் ஆகியோர் புற்றுநோயால் மரணம் அடைந்தவர்கள். எவ்வளவு போராடியும் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை அதுவே இவரின் சாதனைக்கு மூலக்காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டார்.

  நோபல் பரிசு அக்டோபர் 1 ஆம் நாள் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இரவு நேரம். பரிசு  அறிவித்தவுடன் சிலர் அவரைத் தொடர்பு கொள்ள முனைந்தார்கள். ஆனால் அவரின் தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மகனிற்கு அழைத்து விருது கிடைத்தது பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் நடு இரவு என்பதால் செய்திதை உடனே சொல்ல முடியவில்லை. அதன் பிறகு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டுள்ளார்.

  இவர் பல வருடங்கள் அல்லும் பகலும் அயராது ஆய்வு செய்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய இவ்வாய்வை மேற்கொண்டு தற்போது சாதித்துள்ளார்.

  டசுகு ஹோஞ்சோ:

  ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். நோய் எதிர்ப்புத்துறை வல்லுநரான இவர், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு உறுப்பினராக இருந்தவர். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 58

  நமக்குள் ஓர் ஆயுதம்

  அவர் ஒரு மிகச்சிறந்த குரு.

  அவரிடம் பலர் சீடர்களாக இருந்தனர்.

  குருவுக்கு அழகில் சிறந்த ஒரு மகள் இருந்தாள். அந்தப் பேரழகிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் குரு.

  திருமண ஏற்பாடுகளை குரு செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பேரழகியை மணம் முடிக்க ஏராளமானபேர் முன்வந்தார்கள். “இவர்களில் யாரைத் மணமகனாகத் தேர்வு செய்வது?” என்பதில் குருவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

  “ஏதாவது ஒரு போட்டிவைத்து, அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்கலாம்” என்று அவர் முடிவு செய்தார்.

  “என்ன போட்டி வைக்கலாம்?” என்று முடிவு செய்வதற்குள் அவர் குழம்பிப்போனார். முடிவில், போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்தார்.

  “என் மகளை திருமணம் செய்ய நீங்கள் எல்லோரும் ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப்போகிறேன். போட்டி மிக எளிதான ஒன்றுதான். உங்கள் அனைவரிடமும் இரண்டு கேள்விகள் கேட்பேன். அந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்பவர்களுக்கு எனது மகளை மணம் முடித்துத் தருவேன்” என்றார் குரு.

  “போட்டி எப்படி அமையும்? என்பதை நாளை உங்களுக்குத் தெரிவிப்பேன். இன்று நீங்கள் போகலாம். விருப்பப்பட்டவர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம்” என்றும் சொன்னார்.

  குருவின் அறிவிப்பைக் கேட்ட இளைஞர்கள், அடுத்தநாள் குருவின் வீட்டின்முன்பு பெருங்கூட்டமாகக் கூடினார்கள். குரு அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, முதல் கேள்வியைச் சொன்னார்.

  “இந்த உலகத்தில் மிகவும் இனிமையான பொருள் எது? அந்தப் பொருளை நாளைக்கு நீங்கள் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

  மறுநாள், சிலர் இனிக்கும் கரும்போடு வந்தார்கள். வேறுசிலர், அதிகமாய் இனிக்கும் சர்க்கரையோடு வந்து நின்றார்கள். இன்னும்சிலர், இனிப்புப் பலகாரங்களைக் கொண்டுவந்து ‘இதுதான் இனிப்பான பொருள்’ என்று சொன்னார்கள். வேறுசிலர், தேனைக் கொண்டு வந்தார்கள். ஆனால், வந்திருந்த கூட்டத்தில் ஒரேயொரு இளைஞன் மட்டும் மூடப்பட்ட ஒரு சிறு பெட்டியோடு வந்து நின்றான். அவன் குருவின் சீடர்களில் மிக ஏழ்மையான சீடன்.

  குரு அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

  “நீயும் இந்தப் போட்டிக்கு வந்திருக்கிறாயே? உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” – என்று கேட்டார்.

  “குருவே… நான் உங்கள் மகளை அதிகம் விரும்புகிறேன். அவளைக் காதலித்து வருகிறேன். அதனால்தான், போட்டியில் கலந்துகொண்டேன்” என்றான்.

  இந்த இதழை மேலும்

  வாசியுங்கள்! வாகை சூடலாம்

  (வெற்றிச் சிந்தனைகள் நூல்களின் அறிமுகம்)

  தன்னம்பிக்கை மாத இதழின் வாசிப்பாளர்களுக்கு எனது வணக்கங்கள். நான் இந்தத் தொடரில் ஒவ்வொரு மாதமும் வெற்றிச் சிந்தனைகள் குறித்து மேல்நாட்டு அறிஞர்களால் எழுதப்பட்ட ஏதேனும் ஒரு நூலை அறிமுகம் செய்ய இருக்கின்றேன். இத்தொடரை நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது வாசிக்கும் பழக்கத்தால் ஒருவர் எப்படி வெற்றி பெறும் ஆற்றலுடையவர் ஆகிறார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

  வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் (Read and get Rich)

  இந்த நூல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பர்க் ஹெட்ஜஸ் (Burker Hedges) என்பவர் எழுதியது. (இதனை மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் எனும் நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழில் ஆலிரத் அசோக்குமார் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார்.) சரியான நேரத்தில் சரியான புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும். இதற்கு நானே ஒரு ஆதாரமாக இருக்கின்றேன் என்று இந்த நூலின் ஆசிரியரே தன்னை உதாரணமாகக் காட்டி, அவர் வாழ்க்கையை மாற்றிய உலகிலேயே மிகச் சிறந்த விற்பனையாளர் (The Greatest Salesman in the world) என்ற புத்தகம் பற்றி வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். அதுவரை தான் ஒரு சாதாரண வேலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து வந்தேன். இந்த நூலைப் படித்ததும் செல்போன், தொலைபேசி விற்பனை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மிக விரைவில் செல்போன் தொலைபேசி தயாரிக்கும் தொழில் நிறுவனம் தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவராக ஆனதாகச் சொல்கிறார்.

  வாசிக்கும் பழக்கம் மற்ற எந்தவொரு செயல்பாட்டைக் காட்டிலும் நமது உள்ளார்ந்த ஆற்றலை வெளியிடக்கூடிய சக்தி உடையது. ஒரு சிறந்த புத்தகமானது ஒரு வங்கியைக் காட்டிலும் மேலும் அதிக உண்மையான செல்வத்தைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களின் வெற்றி மற்றும் தோல்வியை அவர்கள் தேர்வு செய்யும் விருப்பத் தேர்வுகளே முடிவு செய்கின்றனவேயன்றி வாய்ப்புக்கள் அல்ல என்பதை பர்க்ஹெட்ஜஸ் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

  வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்

  எந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது உங்களுக்கே ஒருபோதும் தெரியாது. அதுவே வாசிப்பதில் இருக்கும் அழகாகும்; அது, அற்புதமான உள்நோக்கும் நுண்ணறிவுகள் ஊடாக. உங்கள் வாழ்க்கையில் உடனடி நிலை மாற்றங்களை எடுக்கும் ஆற்றலை தன்னுள் கொண்டிருக்கிறது. சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் லிங்கனை அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக்கியது அவர் படித்த புத்தகங்களே என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்த உலகத்தில் முன்னேறுவதற்கு உதவும் மிகச் சிறந்த கருவி வாசிக்கும் பழக்கமே என்பதை லிங்கன் தனது இளம் வயதிலேயே புரிந்துகொண்டார். அதனால்தான் ஏழ்மையான நிலையில் இருந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் அளவுக்கு மாபெரும் மனிதராக உயர்ந்தார். அதுமட்டுமல்ல வாசித்தல் பழக்கமே அவரை சிறந்த மேடைப் பேச்சாளராக மாற்றியது என்றும் அவரது வரலாற்றைப் படிப்பதன் மூலம் தெரிகிறோம். அதேபோன்று அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியான ஹாரி ட்ரூமன் கல்லூரிப் படிப்புக் கூட இல்லாத நிலையில்; அவருக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கக் காரணமாக அமைந்தது அவரது வாசிப்புப் பழக்கமே என்று சொல்லப்படுகிறது. முதல் தர தலைவர் ஒருவருக்கு வாசிக்கும் பழக்கம் ஒரு மைல் என்பதைத் தெரிந்திருந்தார். அவரின் சொற்களில் சொல்வது எனில், ஒவ்வொரு வாசிப்பாளரும் ஒரு தலைவராக இருப்பது இல்லை, ஆனால் ஒவ்வொரு தலைவரும் நிச்சயம் ஒரு வாசிப்பாளரகத்தான் இருப்பார். இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வ பள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் எப்போதும் படித்துக்கொண்டே இருந்த ஒரு கல்வியாளர் என்பது நாம் அறிந்ததே. அதேபோன்று பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் எப்போதும் புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தவர்கள் என்பது இங்கு நினைக்கத்தக்கது.

  ஒரு புத்தகத்தை எப்படி வாசிப்பது

   இந்தப் புத்தகத்தின் முக்கியமான பகுதி இதுதான்.

  1. புத்தகத்தின் முக்கிய பகுதிகளை முதலில் வாசிக்கவும்,
  2. சுறுசுறுப்பாக வாசித்து குறிப்புகள் எடுக்கவும்,
  3. உங்கள் குறிப்புகளை மதிப்பாய்வு செய்யவும்

  என்று பரிந்துரைக்கும் பர்க் ஹெட்ஜஸ்; இவை ஒவ்வொன்றையும் விளக்குகிறார். ஒரு வீட்டை வாங்க விரும்புபவர் அந்த வீட்டின் புகைப்படத்தைப் பார்த்து உடனே வாங்கி விடுவதில்லை. நேரில் சென்று வீட்டின் அனைத்துப் பகுதியிலும் நுழைந்து எல்லாப் பகுதிகளையும் ஆய்வு செய்து அதன் பின்னரே வாங்க முடிவு செய்வார். இது போன்றதே புத்தக வாசிப்பும். ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னதாக, அந்தப் புத்தகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் பார்க்க நீங்கள் ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்பு பொருளடக்கம், முக்கியமான அத்தியாயங்கள் என்று முக்கிய பகுதிகளை முதலில் வாசிப்பதால் பிரமிக்கத்தக்க  முக்கியமான அனுபவம் கிடைக்கக்கூடும்.

  இந்த இதழை மேலும்

  உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….

  “தோல்விகளை சந்தித்தவன்

  வெற்றியாளன்    ஆகிறான்

  அவமானத்தை தாங்கியவன்

  சாதனையாளன் ஆகிறான்.”

  என்பதை மட்டும் உள் வாங்கிக் கொள். உனக்கும் சாதனை நிச்சயம். “இளமையில் படி.’ என்பதை மாற்றி “இளமையில் சாதிக்க வேண்டும்’ என  மனஉறுதியுடன் ஒவ்வொரு இளம் பட்டாளமும் வலம்வர வேண்டும்.

  ஏன் நாங்கள் வாழ்வில் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டும்?   என பல பேர் கேட்கலாம். வாழ்க்கை என்பது வாழ்வதற்குதானே, கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டுமா?  என்ன அவசியம்?  என எல்லாரும் நினைக்கலாம். நண்பர்களே, நாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் “சினிமா பிரபலங்கள் பின்னாடியோ, கிரிக்கெட் வீரர்கள் பின்னாடியோ’ சென்று அவர்களுடன் “செல்ஃபி’  எடுத்துக் கொள்வது, அதனையே பெரிய சாதனை போல் “வாட்ஸ் ஆப்’ பிலும், “பேஸ்புக்’கிலும், நண்பர்களுக்கு  பகிர்ந்து மகிழ்ச்சி அடைவது. எப்போது நாம் பிரபலங்கள் பின் செல்வதை விட்டுவிட்டு சாதனயாளராக மாறப் போகிறோம்? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே.

  நாம் ஆயிரம் காரணம் சொல்லலாம், “என்னுடைய குடும்பம் ரொம்ப  ஏழ்மையில் இருக்கு, அப்பா, அம்மா யாரும் என்னை  ஊக்கப்படுத்தவில்லை. “நண்பர்கள் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை’ என ஆயிரம், ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால், உன் சாதனை  நீ இறந்த பிறகும் உலக மக்களால் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும். வயதும், சூழ்நிலையும் எப்போதும் ஒரு சாதனையாளருக்கு பொருட்டல்ல.

  ஒரு வாழ்வியல் சம்பவத்தை நான் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்:

  1987ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்      போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே நின்று பந்துப் பொறுக்கிப்போட்டான் 13வயது சிறுவன். அவனது ஆசை அடுத்த உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று. மிக வலுவான குறிக்கோளுடன், விடாமுயற்சியுடன், போராடி 1991 அடுத்த உலக கோப்பை போட்டியில்… தனது 16 வயதில் மைதானத்திற்குள் வீரராக நுழைந்து, பின் பல சாதனைகளுக்கு நாயகனாகவும் திகழ்ந்தார். அவர் தான் “மாஸ்டர் ஆஃப் கிரிக்கெட்’ சச்சின் டெண்டுல்கர். இது பழமையான செய்தி என்றாலும், இன்னொரு செய்தி சொல்கிறேன்.

  இந்த இதழை மேலும்

  பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்

  பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரம் தான்

  பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை

  என்று சொன்ன பாரதி தான்

  ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

  அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

  பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர்

  நீதி பிறப்பித்தேனே; அதற்குரிய வெற்றி கேளீர்

  மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்மென்றால்

  மனையாளும் தெய்வமன்றோ?

  விண்ணுக்குப்பறப்பது போல் கதைகள்

  சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர்

  பெண்ணுக்கு விடுதலை இங்கில்லை என்றால் பின்

  இந்த உலகினிலே வாழ்க்கை என்பதே இல்லை என்று சொன்னார்.

  பாரதி பெண்ணின் பெருமையையும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் ரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளார். அவர் பெண்ணின் பெருமைக்கு பெரும் பங்கு ஆற்றியவர்.  பெண்ணின் சிறப்புகளையும் பெண் என்பவள் எவ்வாறு இருக்க வேண்டும் தனக்குள் ஓளிந்து இருக்கும் திறமையை எவ்வாறு வெளிக்கொணர வேண்டும் என்பதைக் காண்போம்.

  பெண்ணின் பெருமையை எந்த ஒரு உயர்த்துகின்றதோ அந்த நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும் ஆண்களைவிட அதிமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த தருணத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.

  பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்திலே காரைக்கால் அம்மையார், நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா தேவி, திரௌபதி போன்ற  பெண்களை இன்றும் பல சான்றோர்கள் போற்றுகின்றனர்.

  செய்யாதே! எனில் கேட்பாள் செய்தால் என்ன?

  செய்யென்று செப்பினாள் வினவுவாள் செய்யாயின் என்ன

  என்று எதிர்க் கேள்விக் கேட்டு

  எதிரிகளை மூழ்கடித்து பின் எதையும் செய்யும் திறம் படைத்தவர்

  என முழங்குபவர் பேதைப் பெண்களாம்

  ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்க்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்மாகியது, மணிமேகலையின் துறவு மேன்மையடைந்தது.

  பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆவார்.  பெண் கல்வி வளர்ந்தது.  மகளிரும் தொழில் வாய்ப்பைப் பெற்றனர். எந்தக் காலத்திலும் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததில்லை. விவசாய வேலைகள் முதல் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் வரை ஆண்களுக்கு இணையாக மட்டுமல்ல அவர்களைவிட அதிக அளவில் உழைப்பைச் செலுத்துகிறார்கள் பெண்கள்.

  இந்த இதழை மேலும்

  கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்

  பரேய்லியில் படிக்க இடம் கிடைத்ததே ஒரு வசமாக கோல் முன்னர் கிடைத்த கால்பந்து போலத்தான்.. அந்தத் தருணத்தில் ஜெனிடிக்ஸ், நியூட்ரிஷன், என்று எல்லோரும் விரும்பும் பாடங்கள் எடுத்து காலியான பிறகு… எனக்கு பவுல்ட்ரி சயன்ஸ் கிடைத்தது. இந்திய ஆட்சிப்பணி தேர்வில் கவனம் செலுத்தியதால் கால்நடை மருத்துவ முதுகலை நுழைவுத்தேர்வில் (ICAR- Indian Council of Agricultural Research- JRF) வரிசை எண்(ரேங்க்-Rank) பின்னால் வந்தால் இது கிடைத்தது. கால்பந்து களத்தில் வாகான இடத்திற்கு சில நேரம் ஓட முடிவதில்லை…நூலிழை நேரத்தில் பந்து நழுவுவதுண்டு. இராபர்ட்டோ பேக்கியோ… அவ்வளவு பயிற்சிகளெல்லாம் எடுத்துவிட்டு உலகமே பார்க்கும் பொழுது.. பந்தை உயர உயர தூக்கி

  கோலுக்கு வெளிளே அடித்து விட்டு…தான் செய்த காரியத்தை, தன்னாலேயே புரிந்து  கொண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் மலைத்துப் போனார். இத்தாலி அவரால் தோற்றுப் போனது.

  இப்படி நடக்க சாத்தியம் இல்லை என்றுதான் எல்லோரும் நினைத்திருப்பார்கள்…பிடித்தது ஜெனிடிக்ஸ் முதுகலை ஆனாலும் பவுல்டரி சயன்ஸ் என்னும் பறவையியல் அறிவியல் தான் கிடைத்தது…பிடித்ததெல்லாம் கிடைத்து விடுகின்றதா? என்ன? இயாஸ் சார் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று தான் தேர்வில் கலந்து கொண்டிருப்பார். எனக்கும் எம்.பி.பி.எஸ் க்கு பதிலாக பி.வி.எஸ்.ஸி தான். பள்ளி இறுதி வருடம் முடித்த பின்பு கிடைத்தது. மெஸ்ஸி கூட உலக கோப்பை இறுதிப் போட்டியில் 2014 ஆம் வருடம் ஜெர்மனியிடம் வெற்றி வாய்ப்பை கொடுத்துவிட்டு சோகத்தில் திளைத்தார். தங்க பந்து கிடைத்தும் அவர் முகம் மலரவில்லை.

  Just Be என்று சும்மா இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் தான். 1998 வருட உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் ரொனால்டோவிற்கு( இவர் பழைய பிரேசில் மொட்ட தலை ரொனால்டோ) என்ன ஆனது? என்பது இதுவரை புதிர். அவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் தான் ஆடுவார் என்றே அறிவித்தார்கள். ஆனால் அவர் சரிவர ஆடவில்லை. பிரான்ஸ் ஜெயித்தது. கோல்கள் விழுவதும் அப்படித்தான்… சரியான வாகான இடத்தில் சும்மா இருந்தாலே போதும் பந்து மிகச்சரியாக சப்ளை ஆகி.. கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவாக ஒரு செகண்ட் துளியில் காலில் பட்டு கோலாகும். சரிந்து விழுந்து சறுக்கிக் கொண்டே தள்ளியது கூட கோலியை ஏமாற்றிவிட்டு மெதுவாக நடந்து உருண்டு உற்சாகத்தைப் பொங்கச் செய்யும். அவையெல்லாம் சும்மா இருக்கும் பொழுது செய்த கடின பயிற்சி முயற்சியின் கீரிடங்கள்… பலனை கால்பந்து மட்டுமல்ல வாழ்க்கையும் படிப்பும் தேர்வும் எதிர்பாராத போதுதான் கிடைக்கிறது.

  பதட்டப்படாத பொழுது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. பரேய்லியில் படித்து தேர்வெழுதும் முன்பே மூன்று அட்டம்பட்டுகள் முடித்திருந்தேன்.. நான்காவது அட்டெம்ப்டில் அதிக பதட்டமின்றி சரியான இடத்தில் நிற்பதற்காக ஓடி..

  இந்த இதழை மேலும்

  வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?

  மனிதர்கள் மூன்று வகை. ஆபத்தான சூழ்நிலையில் தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் துணிவுடன் பிறரைக் காப்பாற்றுபவர்கள் முதல் வகையினர். தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள அவ்விடத்தை விட்டு ஓடுவது அல்லது தனக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் பிறரைக் காப்பாற்ற துணிவின்றி ஒதுங்கி கொள்பவர்கள் இரண்டாவது வகையினர். கண்ணியமற்ற, நற்குணமற்ற, நேர்மையற்ற, பண்பற்ற, மனிதர்கள் அறநெறியற்ற செயல்களை துணிவுடன் செய்து விட்டு தன்னை வீரனாக, ஆண்மகனாக பறைசாற்றிக் கொள்பவர்கள் மூன்றாவது வகையினர். இதில் நீங்கள் முதல் இரண்டு வகை என்றால் தவறில்லை. மூன்றாவது வகையினர்தான் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்.

  ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி தீரச்செயல் விருதுக்கு தேசிய அளவில் சிறுவர்-சிறுமியர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  தாங்கள் உயிரை சிறிதும்  பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் சிறுவர்களுக்கு தீரச்செயல் புரிந்தோர்க்கான விருது  ஜந்து பிரிவுகளில் வழங்கப் படுகிறது. பாரத் விருது, சஞ்சய் சோப்ரா விருது, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொது தேசிய வீர விருதுகள் ஆகும். விருது பெறும் சிறார்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ், மற்றும் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விருதைத்தவிர, இந்த குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இந்திரா காந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதுபோலவே, போர்க்களத்தில் தீரச்செயல் புரிந்தமைக்கு இராணுவ வீரர்களுக்கு பரம் வீரசக்ரா, அசோக சக்ரா, மகாவீர சக்ரா, கீர்த்தி சக்ரா விருதுகள் வழங்கப்படுகின்றன.

  பொதுவாக, பலரது உயிரைக் காப்பாற்றியதற்காகவே இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அசாதாரண நிலையில் துணிவுடன் சிறப்பு மிக்க சேவை செய்ததற்க்காக மத்திய அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆண்டுதோறும் தழிழக அரசு தீரச்செயல் புரியும் பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருது  வழங்கி கௌரவிக்கிறது.

  தீரச்செயல்கள்:

  நீர் நிலைகளில் மூழ்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவது, சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட கும்பலைப் பிடிக்க போலீசாருக்கு உதவுவது, பாலியல் தொழில் புரியும் சர்வதேச கும்பலை பிடிக்க போலீசாருக்கு உதவுவது, குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவது, கொடிய விலங்குகளிடம் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது, பொதுமக்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது, தனி ஒருவராக தீவிரவாதிகளின் முகாமை அழித்து பயங்கரவாதிகளை அழிக்கும் ராணுவ வீரர்கள், வாகன விபத்துகளில் சமயோஜிதமாக செயல்பட்டு சக பயணிகளை காப்பாற்றுவது, தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக செயல்பட்டு பெரிய விபத்தை தடுத்து நிறுத்துவது, தீயை அணைத்து காப்பாற்றுவது, மின்சார விபத்திலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட வீர தீர செயல் புரிந்த சிறுவர்-சிறுமிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், இவர்களுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். ஜனாதிபதி தனது மாளிகையில் விருந்து வழங்குகிறார்.

  வட தென் துருவங்களை அடைவது, உலகின் ஏழு கண்டங்களிலும், உள்ள உயரமான மலைச்சிகரங்களை அடைவது, ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு கயிறு மூலம் நடந்து செல்லுதல், பாறை ஏறுதல், சரிவில் இறங்கு தல், மற்றும் ஆறுகளை நீந்தி கடந்து செல்லுதல் உள்ளிட்டவையும் வீர தீர செயல்கள்தான். ஆனால், இவற்றிற்கு விருதோ, நிதியுதவியோ வழங்கப்படுவதில்லை.  கொலம்பஸ், வாஸ்கோடகாமா ஆகியோரின் கடற்பயணங்களும் வீர தீர செயல்கள்தான்.

  இந்த இதழை மேலும்