Home » Articles » பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்

 
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்


உஷாராணி ராஜாராமன்
Author:

பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரம் தான்

பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை

என்று சொன்ன பாரதி தான்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர்

நீதி பிறப்பித்தேனே; அதற்குரிய வெற்றி கேளீர்

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்மென்றால்

மனையாளும் தெய்வமன்றோ?

விண்ணுக்குப்பறப்பது போல் கதைகள்

சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர்

பெண்ணுக்கு விடுதலை இங்கில்லை என்றால் பின்

இந்த உலகினிலே வாழ்க்கை என்பதே இல்லை என்று சொன்னார்.

பாரதி பெண்ணின் பெருமையையும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் ரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளார். அவர் பெண்ணின் பெருமைக்கு பெரும் பங்கு ஆற்றியவர்.  பெண்ணின் சிறப்புகளையும் பெண் என்பவள் எவ்வாறு இருக்க வேண்டும் தனக்குள் ஓளிந்து இருக்கும் திறமையை எவ்வாறு வெளிக்கொணர வேண்டும் என்பதைக் காண்போம்.

பெண்ணின் பெருமையை எந்த ஒரு உயர்த்துகின்றதோ அந்த நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும் ஆண்களைவிட அதிமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த தருணத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.

பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்திலே காரைக்கால் அம்மையார், நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா தேவி, திரௌபதி போன்ற  பெண்களை இன்றும் பல சான்றோர்கள் போற்றுகின்றனர்.

செய்யாதே! எனில் கேட்பாள் செய்தால் என்ன?

செய்யென்று செப்பினாள் வினவுவாள் செய்யாயின் என்ன

என்று எதிர்க் கேள்விக் கேட்டு

எதிரிகளை மூழ்கடித்து பின் எதையும் செய்யும் திறம் படைத்தவர்

என முழங்குபவர் பேதைப் பெண்களாம்

ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்க்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்மாகியது, மணிமேகலையின் துறவு மேன்மையடைந்தது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆவார்.  பெண் கல்வி வளர்ந்தது.  மகளிரும் தொழில் வாய்ப்பைப் பெற்றனர். எந்தக் காலத்திலும் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததில்லை. விவசாய வேலைகள் முதல் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் வரை ஆண்களுக்கு இணையாக மட்டுமல்ல அவர்களைவிட அதிக அளவில் உழைப்பைச் செலுத்துகிறார்கள் பெண்கள்.

இப்படி பலதுறைகளிலும் தங்களை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே சென்றாலும்கூட, பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மட்டும் பாரபட்சம் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.  வயலில் நாற்று பறிக்கும் ஆணுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், அந்த நாற்றுகளை நாள் முழுவதும் நடும் பெண்ணுக்குத் கொடுக்கப்படுவதில்லை. இருப்பினும் நமது நாட்டில் பெண்களுக்கென்றே சில சிக்கல்கள் இருப்பதை முதலில் கவனத்தில்கொள்ள வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் குறுகிய காலத்திலேயே வேலையை விட்டு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது பாதுகாப்பு அற்ற நிலை, திருமணம், தன் கணவனை விட அதிக அளவு சம்பளம் ஈட்டுவது குழந்தைப் பராமரிப்பு, பெரியோர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு, வேலையிடத்துக்கும் வீட்டுக்கும் உள்ள அதிகத் தொலைவு.  ஆனால் பெண்கள் இத்தடைகளை உடைத்து வர வேண்டும்.

பெண்ணாய்ப் பிறந்தாலே கள்ளிப் பாலுக்கு கல்லறையாகும் காலம் மறைந்து மலையேறிவிட்டது.  இன்று அவள் சொல்லுக்காக நாடே வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது.

அகிலம் அறிய மனைவிக்கு பாதி உடலைத் தந்தான் ஈசன். அன்றே ஆணும் பெண்ணும் சரிசமம் என்று உணர்த்தினான். இல்லறம் அல்லது நல்லறம் அல்ல என்று கூறியவர் இல்லறத்தைத் துறந்த ஒளவையார். எனவே இல்லறத்தில்தான் ஒருவனுக்கு முக்தி கிட்டும் என்கிறது சாஸ்திரம். இல்லறத்தை இனிமையாக ஆள நல்ல இல்லாளின் துணை தேவை. நாட்டிற்க்கே ராணியாக இருப்பினும் அவள் வீட்டில் அன்பைப் புகுத்தி கணவன் மனதில் மென்மையாகப் புகுந்து தன்னையும் தன் சுற்றத்தையும் பேணிக் காக்கும் காவல் தெய்வங்களாக விளங்குகிறாள்.

சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என் சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. ஆயினும் நடைமுறையில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா என்பது ஆய்வு செய்ய வேண்டியதாகும். பெண் பிள்ளை பிறந்தால் தனக்கு இழப்பு என்றும் ஆண் பிள்ளை பிறந்தால் அவன் ஈட்டித் தருவான் என்றும், இச்சமூகம் நினைக்கிறது. பெண்ணிற்க்குப் பெண்களே எதிரிகளாகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் அநீதி முற்காலத்திலிருந்தே உள்ளது.

சிலப்பதிகாரத்தின் நாயகி கற்புக்கரசி கண்ணகி, தனக்கு துரோகமிழைத்த கணவனுக்கு அடங்கியொடுங்கிய மனைவியாகச் சித்தரிக்கப்படுகின்றாள்.

சீதா தேவியின் கற்பு ஒழுக்கம் தீக்குளித்து நிரூபிக்கப்படுகின்றது.  கற்புக் கனல் தமயந்தி நடு இரவில் கானகத்தே தனித்து விடப்படுகின்றாள்.

கற்பின் செல்வி திரௌபதி அரசவையில் துகிலுரியப்பட்டு காட்சிப் பொருளாகின்றாள். இவ்வாறு காவியங்களில் பெண்ணுக்கு நடைபெற்ற சோதனைகளும், வேதனைகளும் எத்தனையெத்தனையோ.  ஆனால் இதன் முடிவாக பாரத தேசம் அழிவையே சந்திக்கிறது.

கண்ணகியின் கனல் மதுரையை எரித்தது, சீதையின் சீற்றம் பூமி பிளந்தது.  திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி மஹாபாரதப் போர் மூண்டது. எனவே பெண் என்பவள் நெருப்பைப் போன்றவள் அனைத்தையும் பஸ்பமாக்கும் திறன் உடையவள். அவளை பழி சுமத்தினால் பெரும் அழிவையே இவ்வுலகம் சந்திக்கும்.

தற்காலத்தில் பெண்ணிற்க்கு இழைக்கப்பட்ட அநீதி அளவற்றவை. பள்ளி மாணவி முதல் பருவமடைந்த பெண்கள், முதியவர்கள் வரை பாதுகாப்பற்ற சூழ்நிலையே உள்ளது.  இந்த பாதிப்பு காப்பிய காலங்களிலிருந்தே இருக்கிறது.

“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞான நல்லறம் வீரசுதந்திரம் பேணுதல்

நற்குடிப் பெண்ணின் குணங்களாம்

கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் வற்புறுத்தி பெண்ணைக்

கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என்று

அடித்துக் கூறினான் பாரதி.”

சீறிவந்த புலியை முறத்தினால் அடித்த தமிழச்சி, வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி வழி வந்த பெண்ணினம் நம் பெண்ணினம் என்பதை மனதில் தீர்க்கமாக எண்ணிச் செயல்படவேண்டும். ஆண் பெண் என்கிற இருவேறு ஆளுமைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் சமூகம் சீரடையும். ஆணும் பெண்ணும் முரண்பட்டு நிற்காமல் சமன்பாட்டு நிலையில் வாழ்தல் அவசியம். அதற்கு பெண் முன்னேற்றத்திற்கு பெருந்துணை புரிவோம்.  மேலும் வழி நெடுகிலும் உள்ள கற்களையும் முட்களையும் அகற்றுவோம். மேலும் பலப்பல ஜான்சி ராணி, முத்துலட்சுமிரெட்டி, கல்பனா சாவ்லா போன்றோரை உருவாக்குவோம்.

ஜான்சி ராணி, முத்துலட்சுமி ரெட்டி, வேலு நாச்சியார் போன்றோர் முன்னேற்றப் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்த போது, வழியில் இருந்த தடைக் கற்களையும், முட்களையும், முட்புதர்களையும் களையெடுத்தார்கள். அவர்கள் முன்னேற முழக்கமிட்டவர்களின் சக்தியினால்தான் நாம் இன்று பெண்ணின் பெருமையும், பெண்ணியத்தையும் போற்றுகின்றோம். எனவே நாமும் பலர் நடக்கும் நடைப்பாதையை செப்பனிடுவோம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்