October, 2018 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2018 » October (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி? 

  தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லையே அதற்கான காரணங்கள் பற்றிச் சொல்லுங்கள்?   

  ஷாலினிபிரியா.கோ

  கணிதவியல் துறைஆய்வாளர்

  சேலம்மாவட்டம், மூக்கனூர்.

  கண்டுபிடிப்புகள் மகத்தானவை, கண்டுபிடிப்புகள் மூலம் இன்று உலகம் வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவை அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலும் அறிவியலைப் பற்றிய ஆர்வமும் ஞானமும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் அறிவியல் பற்றியும், கண்டுபிடிப்புகள் பற்றியும் கேள்வி எழுப்பியமைக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

  காரைக்குடியில் மின்வேதியியல் ஆராய்ச்சி மையம், காவலூரில் விண்வெளி ஆய்வு மையம் என பல ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இவைகளில் கண்டுபிடிப்புகள் விவரம் என்னிடம் இல்லை, ஆனால் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் அரிசி, கரும்பு, காய்கறி, பழங்கள் என அதிக விளைச்சல் தரும் ரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டு மட்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எட்டு வீரிய ரகங்களும் மூன்று பண்ணைக் கருவிகளும் வெளியிட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த ரகங்களை நாம் தினமும் உணவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

  ஏழுகோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 2250 பள்ளிக்கூடங்களும் 552 பொறியியல் கல்லூரிகளும், 1150 அறிவியல் கலைக்கல்லூரிகளும், 53 பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இந்தக் கல்விச்சாலைகளில் படிக்கும் மாணவர்களும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றை அறிவியல் கண்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் கரூர், வெள்ளியணை அரசுப்பள்ளியில் படித்த ஹரிகரன் என்ற மாணவன் உலர் கழிப்பறை ஒன்றைத் தயாரித்தார். அவனுக்கு உதவியாய் இருந்தவர் ஆசிரியர் தனபால். இருவரையும் அழைத்துப் பாராட்டினேன். அந்த மாணவனை ஜப்பானிற்கு அனுப்பி வைத்தது அரசு. அவருக்கு ஒரு பள்ளிக்கூட தாளாளரிடம் உதவி பெற்று, அவரைத் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தேன்.

  ஹரிகரனைப் போல மாணவர்களும், தனபால் போன்ற ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களைக் கண்டு ஆச்சரியப்படவும், பாராட்டவும், அறிவுரை கூறவும், அக்கறைகாட்டவும், பரிசளிக்கவும் பொதுமக்கள் இங்கு இல்லை. அவர்களுக்கு வெற்றியின் மீது எல்லாம் அக்கறை இல்லை. ஏதாவது ஒரு ஊருக்குப் போய் சில சம்பிரதாயங்களைச் செய்தால் அவர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி அங்கு சென்று, இருக்கும் பணத்தை செலவு செய்து வீட்டிற்குத் திரும்பி வரும் போது குளிர் அல்லது ஜுரம் என்று நோயையும் வாங்கி வந்து விடுவார்கள். இதில் ஒரு வார காலத்தையும், ஒரு ஆண்டு சம்பாதித்த பணத்தையும் தொலைத்துவிட்டு, தொடர்ந்து அதேநிலையில் வாழ்கிறார்கள். ஆக, அறிவியல் சிந்தனை இல்லாததும், அறிவியலை புரியும் நிலையில் இல்லாத மக்கள் இருப்பதால் இது போன்ற மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை இல்லாமலும், அங்கீகாரம் இல்லாமலும், ஆதரவு இல்லாமலும் போய்விட்டன. மக்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதால், ஊடகங்களும் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது.

  இந்த இதழை மேலும்

  காய்ச்சல்

  காய்ச்சல் என்பது சீரான அளவில் அதிகரிக்கும் உடலின் தட்பவெப்பம் ஆகும். குழந்தைகளின் உடல் பெரியவர்களை விட பொதுவாகவே அதிக தட்பவெப்பத்தை கொண்டிருக்கும். உடலின் வெப்பம் பொதுவாக 36.10C முதல் 37.80C வரை (970F-1000F) இருக்கும்.

  அளவிடும் முறை

  உடலின் தட்பவெப்பத்தை அளவிட பல வழிமுறைகள் உள்ளன. வெப்பமானி என்பது உடலின் வெப்பத்தைக் கண்டறிய உதவும் கருவி. இதை நாக்கிற்கு அடியிலோ, அக்குள் பகுதியிலோ, ஆசன வாயிலோ வைத்து கண்டறியலாம். ஆசன வாயில் வெப்பமானி வைத்து கண்டறியும் முறையே சிறந்ததாகும். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லாததால் குழந்தைகளுக்கு அக்குளில் வைத்து கண்டறியலாம். இம்முறையில் கண்டறியும் போது Thermometerp 10F அளவை வரும் அளவோடு கூட்டிக் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு அக்குளில் வைத்து அளக்கும் போது 98.60F என்று வந்தால், இதனுடன் 10F  கூட்டி 99.60F என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 1000F மேல் வெப்பநிலை இருந்தால், காய்ச்சலுக்கான மருந்து கொடுக்க வேண்டும்.

  காய்ச்சலைக் கண்டறிய இரண்டு வகை வெப்ப மானிகள் பயன்படுத்தப் பட்டு வந்தன. ஒன்று பாதரசம் அடங்கியது. இவ்வகையில் ஆபத்து என்னவென்றால், பாதரசம் எதேச்சையாக கசிந்துவிட்டால் அது குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தலாம். அதனால் தற்பொழுது டிஜிட்டல் வெப்பமானிகளை மருத்துவர்கள் உபயோகப்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.

  காரணம்

  காய்ச்சல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. தொற்றுநோய், தடுப்பூசிகள், காயங்கள், மருந்துகள், புற்றுநோய் மற்றும் பரம்பரை சார்ந்த நோய்கள் என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.

  காய்ச்சல் என்பது நோயின் அறிகுறி; நோய் அல்ல. எனவே காய்ச்சலின் காரணத்தை கண்டறிவது முக்கியமாகும். காய்ச்சலின் தன்மையை வைத்து சிலசமயம் காய்ச்சலின் காரணத்தைக் கண்டறியலாம்.

  சிகிச்சை

  காய்ச்சல் என்பது நோயல்ல என்பதால் காய்ச்சலை வரும்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்த வேண்டாம்.

  இந்த இதழை மேலும்

  மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்

  Problems in the world will increase:  therefore,

  I  should increase my capacity for dealing with problems

  We all must face problems

  But it is how you face them that counts

  – English  proverb 

  உலகில்  பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும், அதனால் அந்தப்பிரச்னைகளை சமாளிக்க  நம்முடைய திறமையை வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பிரச்னையை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம், ஆனால் நாம் பிரச்னைகளை எவ்வாறு எந்த கோணத்தில் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தீர்வுகள்  அமைகிறது.

  வாழ்க்கையில் முன்னேற என்ன வேண்டும்?  என்ற கேள்விக்கு, அமெரிக்கக் கோடீஸ்வரரான பால் கெட்டி     ( How to be rich )      “ஹவ் டு பி ரிச்  ”   என்ற புத்தகத்தில்   சில காரணிகளை வகைப்படுத்துகிறார்.

  1. பழக்கங்களும், எண்ணங்களும் தான் மனிதனை உருவாக்குகின்றன.  நல்ல பழக்கங்கள், நல்ல எண்ணங்களையும்,  நல்ல சிந்தனைகளையும் தருகின்றன. தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் தோற்றுவித்து அவனை திசை  மாறச்செய்கிறது.
  2. எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது பணிச்சுமையை  எளிதாக்குகிறது, மனதை லேசாக்குகிறது,  உடனிருப்பவர்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது
  3. ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சொன்னபடி முடிக்க வேண்டும், காலம் தாழ்த்துபவனுக்கு வெற்றி கைகூடாது.
  4. செலவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.
  5. சூழ்நிலைகள் மாறும் போதும், சோதனைகள் ஏற்படும்போதும், பதட்டம் அடையாமல் அமைதி  காத்தல் வேண்டும்,  புதிய பிரச்னைகள் எழுந்தால் நிலை தடுமாறாமல் புத்திக்கூர்மையோடு  அணுக வேண்டும்.
  6. தனிப்பட்ட வாழ்க்கையிலும்சரி, தொழிலும் சரி  எந்தப் பழக்கங்கள் உதவி செய்கின்றன,  எந்தப் பழக்கங்கள் இடையூறாக இருக்கின்றன என பட்டியலிட்டு வேண்டாததை விலக்கவும், வேண்டியவற்றை பின்பற்றவும் வேண்டும்.
  7. பலரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்புக்களை அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் தனித் திறமையையும், புதிய யுக்திகளையும் கற்றுக் கொள்ள முடியும்.
  8. மற்றவர்களை குற்றம் குறை  சொல்லாமல் இருக்க வேண்டும்.
  9. நேர்மையான,  உண்மையான, தேவையான பாராட்டுக்களை வழங்க வேண்டும்.
  10. உடனிருப்போருக்கு முன்னேறத் தேவையான ஆர்வத்தையும், முயற்சியையும் தூண்டவேண்டும்.

  குறை சொல்வதால் ஒருவரை திருத்திவிட முடியும் என்பது சரியானதல்ல, தங்களின் குறை சொல்லும் குணத்திற்கு தனக்கு ஆதரவாக ஆளாளுக்கு  ஒரு காரணம் சொல்வார்கள். இதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

  நாம் பிறரை குறை சொல்லும் போது,  மற்றவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முயற்சிப்பதாக நாம் நம்புகிறோம், ஆனால் அதே சமயம் நம்மீது யாராவது குறை சொன்னால், ஏன் இப்படி இவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்? எப்போது இவர்கள் திருந்துவார்கள் ? என்று வருந்துகிறோம்.

  இந்த இதழை மேலும்

  உடம்பும் – இலக்கும்

  ஊக்கம் இருப்பவனிடத்தில் தான் ஆக்கமும் இருக்கும்.

  ஊக்கம் இருப்பவனிடத்தில் ஏக்கமிருக்காது.

  மனவலிமை உள்ளவனால் வல்லவனாகத் திகழ முடியும்.

  மன உறுதி உள்ளவனிடத்தில் செயலிலும் உறுதி இருக்கும்; எதிலும் வல்லமை படைத்தவனாக பாடுபடுவான்.

  எனவே, ஊக்கத்தால் ஆக்கம் ஏற்படும்; ஏக்கமும் அகலும். மனவலிமை, செயல்வலிமையை ஏற்படுத்தும்.

  மன  உறுதி வல்லரசனாக ஒருவனை மாற்றும்.

  மனவலிமையால் தோன்றும் சிந்தனை வலிமை, மனித சக்தி வாய்ந்த முழு மனிதனாக ஒருவனை உருவாக்குகிறது.

  ஒரு காரியத்தை செய்ய, ஒரு விசயம் வெற்றியடைய, அடிப்படையாக அனைத்திற்கும் அஸ்திவாரமாகிய மனதில் முதலில் வலிமை இருக்க வேண்டும்.

  இரண்டாவது சிந்தனையில் வலிமை இருக்க வேண்டும். (இந்த வலிமை மனதில் வலிமையிருந்தால் தான் வரும்).

  மூன்றாவதாக: செயலில் வலிமை இருக்க வேண்டும் (இந்த வலிமை மனதிலும் சிந்தனையிலும் இருந்தால் தான் வரும்.

  ஒரு காரியம் வெற்றியடைய வேண்டும் என்றால் மிகமிக முக்கியமான இம்மூன்றும் தேவைப்படுகிறது.

  மூன்றையும் ஒரே சமயத்தில் ஒரு செயலில் ஈடுபடுத்தினால் தான் வெல்ல முடியும். இன்று வென்றுள்ளவர்களெல்லாம் இப்படி ஈடுபடுத்தியவர்களே.

  எது வேண்டும்? உடல் நலமா? மனநலமா?

  எது பெரிது? உடல் நலமா? மனநலமா?

  உடல் நலம் பெரிது என்றால் – மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும்.

  மனநலம் பெரிது என்றால் குணநலம் அதாவது நல்ல எண்ணங்கள் உள்ளிருந்தால் தான் மனநலம் நன்றாக அமையும்.

  இந்த இதழை மேலும்

  சிந்திக்க வைக்கும் சீனா

  ஷாங்காயில் A.P. மால் என்ற பெரிய கடைத் தொகுதி சென்று, பொருட்கள் வாங்க ஒரு மணி நேரம் சுற்றினோம். பலர் சூட்கேஸ், பேக் வாங்கினர். நான் மேக்னெட் சாவனிர் வாங்கினேன்.

  அதன் பிறகு ஹூவாங்பு நதியில் படகுப் பயணம் சென்றோம். இந்த இடத்தில் நதி 400 மீட்டர் அகலமும் 9 மீட்டர் ஆழமும் உள்ளதாம். இந்நதி நகரை இரண்டாகப் பிரிக்கிறது.

  2 மாடியுள்ள சிறு கப்பலில் (CRUISE) 50 நிமிடப் பயணமாக இரவு 7.20 முதல் 8.10 முடிய நதியில் சென்று திரும்பினோம். கரையில் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. நதியில் பல கப்பல்கள் வண்ண விளக்குகளுடன் கடந்து சென்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.

  பின் பஸ் ஏறி ஓட்டல் திரும்பி இரவு உணவாக கொத்து பரோட்டா, மெதுவடை, சாம்பார், தயிர்சாதம் சாப்பிட்டு 9.30 க்கு அறைக்குச் சென்றோம்.

  சீனா முழுதும் வாட்ஸ் அப், கூகுள், பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. போட்டோக்களை அங்கிருந்து அனுப்ப இயலவில்லை.

  நான் சீனா சிம் ஒன்று ரூ 2200 க்கு வாங்கி, இந்தியாவிலிருந்த குடும்பத்தாருடன் பேசினேன். 180 நிமிடம் பேசலாம் என்றனர். இதை விட இங்கிருந்தே சிம் கார்டில் பேசும் வசதியுடன் செல்வது சிறந்தது.

  மறுநாள் 6 மணிக்கு எழுந்து தயாரானோம். 7.30 மணிக்கு வழக்கம் போல் காலை உணவு முடித்து 8.30 க்கு பஸ்ஸில் சுற்றிப் பார்க்க புறப்பட்டோம்.

  10 மணிக்கு லோங்கியாங் என்ற ரயில் நிலையம் சென்றோம். இங்கிருந்து புடாங் விமான நிலையத்துக்கு தூரம் 30 கி.மீ. இத்தூரத்தை மேக்னெட் ரயில் 7 நிமிடங்களில் கடக்கிறது.

  போக வர டிக்கெட் 80 யுவான் தான். ஆனால் கைடு முதல் நாளே 100 யுவான் என வசூலித்து விட்டார். கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை. 33 பேருக்கு 660 யுவான் சுமார் 7000 அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

  டிரைவர் இல்லாத ரயில். புறப்பட்டு வேகம் கூடிக் கொண்டே 430 கி.மீ சென்று சிறிது நேரம் ஓடி, பின் குறைந்து கொண்டே வந்தது. விமான நிலைய ரயில் நிலையத்தில் இறங்கி, அதே ரயிலில் ஏறித்திரும்பினோம்.

  இந்த இதழை மேலும்

  வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை

  சு. ஜிவிதா

  கபாடி விளையாட்டு வீராங்கனை, கோவை

  வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்

  பெண்மையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே

  நாய் என்ற பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்

  தாய் என்று  காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே

  மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

  காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே

  என்று பெருங்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பெண்ணிற்குச் சூட்டியுள்ள அருமையான புகழாரமாகும். அவ்வகையில் ஆண்களைப் போலவே அத்துனை துறையிலும் சாதித்து வரும் எத்தனையோ பெண்களின் சாதிப்புப் பக்கங்களைப் பார்த்தும் செய்தித்தாள்களில் படித்தும் வருகிறோம்.. அவ்வாறு கபாடி விளையாட்டில் சாதித்து வரும் சு. ஜீவிதா அவர்களின் சாதனைப் பயணத்தைப் பற்றிப் பார்ப்போம்..

  நாமக்கல் மாவட்டம்  நத்தமேடு என்னும் கிராமம் தான் நான் பிறந்த ஊர். அப்பா லாரி ஓட்டுநர். அம்மா கூலி வேலை செய்து வருகிறார். சகோதரர் கௌதம். மிகவும் ஏழ்மையான குடும்பம் தான். இந்த ஏழ்மையிலும் என் பெற்றோர்கள் என்னை நன்றாகப் படிக்க வைத்தார்கள். எனக்குப் படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது.  நான் பத்தாம் வகுப்பு வரை கிரிஸ்டி கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நாமக்கலில் தான் படித்தேன். நான் ஆரம்பத்தில் அத்லெட்டிக் 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றிருக்கிறேன்.

  சின்ன வயதிலிருந்தே நமது தமிழர்களின் வீரத்தின் அடையாள விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மீது எனக்கு தீராத காதல். ஆனால் அதில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால் கபாடி விளையாட்டின் மீது என்னுடைய பார்வை படத் தொடங்கியது. இதனால் கபாடி பற்றிய நுணுக்கங்களையும், அதன் அடிப்படை வழிமுறைகளையும் கற்றுக் கொண்டேன். இதனால் பள்ளி அளவிலேயே நிறைய கபாடிப் போட்டியில் கலந்து கொண்டேன். நாமக்கல்லில் உள்ள Sports Development  Authority of Tamilnadu ( தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்)  விளையாட்டுப் பிரிவில் பி. ஏ ஆங்கிலம் படித்தேன்.

  வறுமையிலிருந்தும் என் பெற்றோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். எனக்கு ஆர்வமிருந்தும் வறுமை என்னை தடைப்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் அருளாளும்,  என் பெற்றோர்களின் நம்பிக்கையும் என்னைப் பெரிதும் வளர்ச்சியடைய வைத்தது. இத்தகைய வளர்ச்சியில் என்னுடைய பயிற்சியாளர் புவனேஷ்வரி இவர்களின் பயிற்சி எனக்கு மிகுந்த நம்பிக்னையும், கடின உழைப்பு கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. இந்த மூவரையும் என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது.

  இந்த இதழை மேலும்

  தலைவலி

  தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான குமட்டல் அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான நோய் அறிகுறியாகும்.

  இது ஆண்களை விட பெண்களில்தான் அதிகம் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அசாதாரண நிலையாகும்.

  தலைவலி ஏற்படும் முன்னர் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

  அவை

  • பார்வை புலத்தில் மாற்றம் ஏற்படல்
  • கழுத்து, தோள் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு
  • உடல் சமநிலை குழம்புதல்
  • பேச்சில் தடுமாற்றம் ஏற்படல்
  • மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன.

  தலைவலியை தூண்டும் காரணிகள்

  மனோவியல் காரணிகள்

  • மன அழுத்தம்
  • கோபம்
  • பதற்றம்
  • அதிர்ச்சி

  உடலியல் காரணிகள்

  • களைப்பு
  • தூக்கமின்மை
  • அதிக நேர பயணம்
  • மாதவிடாய் நிறுத்தம்

  உணவு வகைகள்

  • உணவு குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்
  • உடலில் நீரின் அளவு குறைதல்
  • எண்ணெய் வகை உணவுகள்
  • குளிர்பானங்கள்
  • மதுபானம்
  • காப்பி, தேநீர்
  • சாக்லேட், ஐஸ்கிரீம்

  சூழலியற் காரணிகள்

  • பிரகாசமான செயற்கை ஒளி
  • அதிக இரைச்சல்
  • காலநிலை மாற்றம்
  • மருந்துகள் ( கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் )

  முக்கிய வகை தலைவலிகள்

  • முதன்மை தலைவலி (Primary headache)
  • இரண்டாம் தலைவலி (Secondary headache)

  முதன்மை தலைவலி

  90% தலைவலி இவ்வகையை சார்ந்தது. பொதுவாக 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இவ்வகையில் பொதுவாக காணப்படுபவை போன்றவை. ஒற்றை தலைவலி, பதற்றம் வகை தலைவலி (ம) கிளஸ்டர் தலைவலி ஆகும்.

  இரண்டாம் தலைவலி

  இந்த வகை தலை வலிகள் சற்று ஆபத்தானவை தலையில் (அ) கழுத்தில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளால் இவ்வகை தலைவலி உண்டாகும். அவை Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல், பக்கவாதம், கண்ணின் அழுத்தம் அதிகரிப்பு (glaucoma) போன்ற காரணங்களால் ஏற்படும்.

  இந்த இதழை மேலும்

  “வாழ நினைத்தால் வாழலாம்” – 21

  “இரகசியம்” 

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  சங்ககிரியில் ஒரு மகளிர் கல்லூரியில் பயிலரங்க வகுப்பு எடுக்க போயிருந்தபோது – ஒரு மாணவி என்னிடம் “உங்கள் வெற்றியின் இரகசியம்” என்ன? என்று கேட்டாள்.

  வெற்றிக்கான இரகசியங்கள் எவை என்று சொல்லப்போன எனக்கு வியப்பாக இருந்தது.  அதே நேரம் பெருமையாகவும் இருந்தது.

  தயக்கமே இல்லாமல், தனக்குத் தோன்றிய ஒரு சந்தேகத்தை தைரியமாக கேட்கத் துணிந்த அந்த மாணவியின் ஆர்வம் பாராட்டுக்குரியது.

  வெளியில் சொன்னால் இரகசியம் எப்படி இரகசியமாக இருக்கும் ? என்ற கேள்விக்கான விடையை இரகசியமாக வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.

  “இரகசியம்” என்ற ஒரு சொல் – சாதனையாளர்கள் பலரும் இன்று வரை பயன்படுத்தி வரும் ஒரு சொல்லே.

  சரித்திரம் சில விஷயங்களை “இரகசியமாகவே” வைத்திருக்கின்றது.  Egypt u Pyramid கள் ஏறக்குறை 4500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை.  அதுவும் இன்றைய காலகட்டம் போல தொழில் நுட்பமும், உபகரணங்களும் முற்றிலும் அல்லது அதிகம் இல்லாத போதும் – ஒரு உலக அதிசயத்தை உருவாக்கிய விதம் எப்படி? என்ற கேள்வி இன்று வரை விடை இல்லாமல் “இரகசியமாகவே”  இருப்பது ஒரு விந்தை தான்.

  அனைவருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்த “Hitler”ன் மறைவு, தற்கொலை என்று வரலாறு பதிவு செய்திருந்தாலும் – அதன் உண்மைத் தன்மை எவருக்கும் தெரியாதது எதார்த்தம் என்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?  அதுவும் இரகசியமாகவே இருக்கின்றது.

  அதுமட்டுமல்ல.

  பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு குளிர் பானத்தின் சுவை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சுவை, மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்தின் மைசூர்பாக்கின் சுவையின் பின்புலம், தலைமுறைகள் கடந்த பின்பும் தளராமல் இருக்கும் சில தலைவர்களின் புகழ், வேலை வாய்ப்புகள் அரிதாகிவிட்டது என்ற அங்கலாய்ப்புகளுக்கு இடையேயும் – சில துறை படிப்புகளுக்கு இன்றளவும் இருக்கும் “மவுசு” – என்று ஒரு பட்டியல், நீண்ட இரகசிய பட்டியல் என்பதே நிஜம்.

  கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும் ஒரு கூட்டத்துக்கும் சரி – கடவுளை சரண் கொண்டால் சாதிக்க முடியும் என்று ஆத்திகம் பேசும் சில கூட்டத்துக்கும் சரி – எப்படி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்?  இந்த ஜனக் கூட்டத்தின் இரகசியம் என்ன என்ற கேள்வியும் சிந்திக்கத் தூண்டுவதே இரகசியத்தின் சிறப்பு.

  இந்த இதழை மேலும்

  முதுமையா? முதிர்ச்சியா?

  ஒரு இலை பழுத்து உதிர்வது முதுமையாகும் (Senescence) அதுவே, ஒரு காய் பழமாகிக் கனிந்து இனிப்பது முதிர்ச்சியாகும் (Maturity). அதுபோலவே, ஒரு மனிதன் வளர்ந்த பின் தேய்ந்து, தளர்ந்து, உதிர்வது முதுமையாகும். ஆனால், அதுவே வளர்ந்து, பண்பட்டு, அனுபவத்தில் பழுத்து இன்முகத்தில் மலர்ந்து ஞானவான் ஆவதுவே முதிர்ச்சியாகும். என் பாட்டியம்மாள் திருமதி சொர்ணாம்பாள் நடேசன் அவர்களின் வாழ்க்கையை நீங்களும் தெரிந்துகொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆக, என் பாட்டி வாழ்ந்த கதை இதோ!

  என் பாட்டியின் ஆரம்ப திருமண வாழ்க்கையானது கொடுமையான வறுமையை ஒட்டியே அமைந்திருந்தது. ஒருமுறை அவர் சொல்லக் கேள்விப்பட்டது என்னவென்றால், நிறைய முறை காய்கறிகள் வாங்குவதற்கு பணமில்லாமல், வீட்டிற்கு வெளியே வளர்ந்திருக்கும் குப்பைக் கீரையை கிள்ளி வந்து துவட்டி வெந்த சாதத்தோடு கலந்து கிண்டிதான் சாப்பாடு போடுவாராம். அந்த வறுமைச் சூழலிலும் அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வீட்டு சுகப்பிரசவத்திலேயே பிறந்தார்களாம். என் பாட்டியார் சர்வசாதாரணமாக இப்படிச் சொல்வார் “பிரசவத்தின் போது தலை தெரியும் குழந்தையை வெளியே இழுத்து கடாசிவிட்டு வேலைப் பொழப்பை கவனிக்கப் போய்விடுவாராம். அப்போதுதான் அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்குமாம். அப்புறம் பிள்ளைகள் வளர்ந்து பல தொழில்களில் சிறக்க ஆரம்பித்த போது அவர்களின் பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டது. ஆக, வறுமையிலும் அதிகமாகப் பிள்ளை பெற்றதன் பலனை பொருளாதார முன்னேற்றத்தில் கண்கூடாக கண்டனர்.

  அப்புறம் என் பாட்டிக்கு மருமகள்கள் வந்த பின்னர் ஒவ்வொரு மருமகளோடும் சதா சண்டைகள்தான் நடக்கும். இதை நாங்கள் வளர்ந்த பின்னர் பார்க்கும்போது என் பாட்டி மீதுதான் எனக்கு கோபம் வரும். காரணம் நான் அம்மா பக்கம் இருந்தேன். ஆனால், நான் பின்னாளில் பக்குவப்பட்டு நோக்கும்போதுதான் புரிந்தது என் பாட்டியிடம் சண்டைக்கு நிற்பது பக்குவப்படாத என் அம்மாதான் என்று. அப்புறம் என் பாட்டியை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோதுதான் எனக்கு அவரின் ஆழ்ந்த அனுபவப் பக்குவமும், வாழ்க்கை ஞானமும் தெரிய ஆரம்பித்தது. ஆக, என் வாழ்க்கையின் முதல் ஞான குரு என் பாட்டிதான். அன்று அங்கு தொடங்கிய என் ஞானப் பாதைதான் இன்று பல ஞான குருமார்களின் ஞானத்தாலும் அருளாசியாலும் ஒரு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்தது.

  அப்புறம் விஷயத்திற்கு வருவோம். என் பாட்டியார் ஒரு முறை பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விட்டார். அவரின் பிள்ளைகளும் மகள்களும் அடுத்து அவரின் காரியங்களுக்கு என்ன செய்யலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் நானும் என் இரட்டையர் தம்பியும் ஊரிலிருந்து வந்து பார்த்ததும், எங்கள் ஹோமியோபதி மருத்துவரின் துணையோடு அவரை மீட்டெடுத்தோம். அப்புறம் எங்கள் பாட்டியின் முழு ஆசிர்வாதமும் எங்கள் இருவர்க்கு மட்டும்தான் கிடைத்தது. அப்புறம் அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தார்.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  அவர் ஒரு ஜப்பானிய சாமானியர். புதுமையாக ஏதாவது படைக்க வேண்டும் என்பது அவரது உத்வேகம். ஆனால் உத்வேகத்திற்கு ஏற்ற உந்து சக்தியாக குடும்பச் சூழலோ, பொருளாதாரச் சூழலோ அமையவில்லை. இருப்பினும்  அவர் முயற்சியை தன் மூச்சாகக் கொண்டிருந்தார்.

  அதனால் கார்களில் பொருத்தப்படும் பிஸ்டன்களைப் புதிய முறையில் பல போராட்டத்திற்குப் பிறகு வடிவமைத்தார். அதனை விற்பனை செய்ய டொயோட்டா கார் நிறுவனத்தை அணுகிய போது பலரின் கேலிகளே அவருக்கு கிடைத்தது. கேலிகளை வளர்ச்சிக்கான வேலிகளாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

  புதியதாகத் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார் அது வெற்றி பெறும் தருணத்தில் ஜப்பானில் நிலநடுக்கும் ஏற்பட்டது. அனைத்தும் தரைமட்டம் ஆனது. இதனால் அவரை மனச்சுமை அழுத்தியது. பணச்சுமை இறுக்கியது. ஆனால் முயற்சியை மட்டும் அவர் விட்டபாடில்லை.

  மீண்டும் தொழிற்சாலை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.  விழாக்கோலம் பூண்டு திறப்பு விழாக் காணும் நேரத்தில் இடி விழுந்தது போல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.  போரில் தொழிற்சாலை மீண்டும் தரைமட்டமானது.

  தோல்விக்கு மேல் தோல்வி, ஆனால் எந்தத் தோல்விகளும் அவரை முடக்கவில்லை. மனச்சுமைகள் கூடக் கூட மனதைரியம் பெற்றார். இதன் விளைவு தான் தன்னைக் கேலி செய்த டொயோட்டா கம்பெனியை விட இன்று அதிக கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்துள்ளார்.  அந்த ஜப்பானிய சாமானியர் தான் ஹோண்டா. ஹோண்டா தன் தோல்விகளுக்குச் சன்மானமாகக் கொடுத்தது தனது பொருள், பணம், அறிவு, உழைப்பு முதலியவை மட்டுமே. ஆனால் பெற்றதே பெரும் வெற்றி.

  அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.