Home » Online News

புயலாய்…

மாளிகையை விடுத்து மண் குடிசையின்
மீதே தன்பலம் காட்டும்
அதிகாரவர்க்கமாய் ‘அசுரப்புயல்’ !
கண்ணுக்குத் தென்படாத தென்றல் காற்று நீ…
புயலாய் புறப்பட்டாலோ
புதுத்தடம் பூமியில் போட்டுவிடுகிறாய்…
கால்தடம் வலிமையாய் பதித்து விடுகிறாய்…
காதலியின் மொழியைப்போல்
காற்றின் மொழியும் தலையசைக்க வைக்கும் !
எப்போதும் உன் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாது
தப்பாமல் தலையசைக்கும் மரங்களின்
நேசத்தை மறந்தாய் ! மனதாபிமானம் துறந்தாய் !
பூமியை…புயலாய் ஒரு புறம் புரட்டிப்போட்டாய்
மழையாய் மறுபுறம் மிரட்டிப் பார்த்தாய் !
நீ கடந்தாலும்… நீர் வடிந்தாலும்…
கடந்திடாத எங்கள் கவலையோடும்…
வடிந்திடாத எங்கள் வருத்தத்தோடும்…
புதுவிடியலைத் தேடும் விழிகளோடு புறப்பட்டோம்…
கஜாவே நீ எதைச் சாய்த்தாலும் எம் நம்பிக்கை சாயவில்லை…
மதங்களை மறந்து மனிதத்தால் இணையும்
ஒற்றுமையின் பலத்தை உணர்த்தி விட்டாய்…
நீ சாய்த்த அதே மண்ணில் சாய்ந்து போன
மரங்களின் அருகில் முளைவிடும் புதுச்செடியாய்
தன்னம்பிக்கையோடு தழைக்கின்றோம்…

முனைவர். மா.இராமச்சந்திரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஈரோடு- 52.

தன்னம்பிக்கையின் தந்தையைப் போற்றுவோம் (24.12.1939)

பொது சிந்தனையில் உள்ளவர்கள்
ஒரு போதும் இறப்பதில்லை
அவர்களை நாடும் மறப்பதில்லை
விடுதலைக்கு உழைத்தவர்கள்
மொழிக்கு உழைத்தவர்கள்
உரிமையை மீட்க குரல் கொடுத்தவர்கள்
என பொருண்மை மாறினாலும்

சேவை ஒன்று தான் அது தான் மாற்றம்….
அந்த வழியில் இல.செ.க அவர்கள்
பொறுப்பற்ற இளைஞர்கள் நல் பொறுப்பில்
அமர வேண்டும் அவர்கள் வாழ்வில் நல் ஒளியை
ஏற்றி வைக்க வேண்டும் என்று விரும்பினார்
அதற்கு அவர் எடுத்துக்கொண்ட ஆயுதம் எழுத்தாணி
இதற்கு அவர் உண்ண மறந்து உறங்க மறந்து
உடலை மறந்து புத்தகங்கள் தான்
எதிர்காலத்தின் பொக்கிஷம் என்பதை உணர்ந்து
எழுதி எழுதியே தடம் பதித்த
தன்னம்பிக்கை மகான்

அவர்களை நினைவு கூர்ந்து போற்றுவோம்…

மரத்தை நடுவோம்…

நாளும் அதிகரித்து வரும்
புவியின் வெப்பத்தைப் போக்க…
நாமும் ஒரு மரத்தை நடுவோம்
நலமான சுவாசக் காற்றைப் பெறுவோம்…
மரம் நடுவதில் தன்னலம் இருக்காது

அது சமூக நலன்; உலக நலம்…
இன்று நாம் நடும் மரம்
நாளை வரும் எதிர்கால சந்ததியினருக்கு
அட்சய பாத்திரமாய் அமுத சுரபியாய் திகழும்..
மரம் காற்றும் கனியும்

பழமும் உடலுக்கு நல்ல நலமும் தரும்…
வீதியில் ஒரு மரம் இருந்தால்
விளையாட குழந்தைகள் கூடுவர்
பெரியவர்கள் அமர்ந்து பேசுவர்
அசதியாய் வருபவர் ஓய்வெடுப்பர்
காட்டில் ஒரு மரம் இருந்தால்
பறவைகள் விலங்குகள் கூடும்
மகிழ்ச்சியாய் பாடும் அங்கும் இங்கும் ஓடும்
பட்டுப்போகும் வரை நிழலையும் நிம்மதியையும்
கொடுக்கும் மரத்தை நாமும் நடுவோம்….

சமத்துவம் எனும் சாட்டை எடு…

தமிழன்சபரி
  கோபிசெட்டிபாளைம்.

பலநூற்றாண்டு பண்பாட்ட பண்பாடு எங்கே?

பச்சிளம்பிள்ளைக்கும் பாலியல் தொந்தரவு இங்கே!

உணவையே மருந்தாக்கிய உணவுமுறை எங்கே?

உணவுக்கு முன்பின் மருந்துகள் உண்பது தான் இங்கே!

சமத்துவம் மேலோங்கிய சமுதாயம் எங்கே?

சாதிகளை காரணங்காட்டி சண்டைகள் தான் இங்கே!

நெற்பயிர் முளைத்த விளைநிலங்கள் எங்கே?

பல மாடிக்கட்டிடங்கள் மட்டும் தான் இங்கே!

ஆறுகள் சங்கமிக்க கடலொன்று பிறக்கும்!

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நல்ல சமூகம் பிறக்கும்!

கண்ணியத்தின் கட்டுப்பாட்டால் பெண்ணியத்தை வளர விடு!

கனவுகளை நினைவாக்கக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு விடுதலை கொடு!

கவனமில்லா பயணத்தைக் கனிவோடு நிறுத்திவிடு!

கனத்த இதயத்தையும் கருணையால் மாற்றிவிடு!

பட்டினியில்லா சமூகத்தைப் பக்குவமாய்ப் பரப்பிவிடு!

பூவுலகின் நலன்காக்க புதுமை பல படைத்துவிடு!

பெற்றவர்கள் நலன்காக்க முதியோரில்லத்தை மூடிவிடு!

சாதி மத பேதமின்மையை சமூகத்தில் மூடிவிடு!

செய்யும் தொழில் தெய்வமென்று சத்தமாக உரைத்துவிடு!

நகோதரத்துவம் நாளும்வளர சமத்துவத்தைப் புகுத்திவிடு!

விவசாயிகளின் வேதனையை விரல் கொண்டு துடைத்துவிடு!

விண்ணுலகிலும் நம்கொடியை பட்டொளிவீசிப் பறக்கவிடு…!

வெற்றி முத்தமிடும்

– கவிச்சுடர் ஆர்வீ. பார்த்திபன்

இளைஞனே

காலம் மிகவிரைவாய்

கருத்துடன் உன் வாழ்வை

தயார் படித்துடு-நீ!

விரைவாய் செயல்படு-

அறிவை முடம்மாக்கும்

அம்:மூடநம்மபிக்கையை-நீ!

புறம் தள்ளிகூடு-

அதிஷ்டம் வரும்,என்னும்

வேதாந்த குருட்டு நம்பிக்கையை – நீ!

விட் டொழித்திடு

தன்னம்பிக்கை தனை-உன்

நம்பிக்கை என்றே -நீ

உன்னுல் நிறுத்திடு-எச்

செயலுமே !முடிப்பேன்.

என்னும் உறுதியுடனே.

செயல்படு.

அதோ-

கதிரவன் வீச்சுமே!

நொடுயையும்:வெல்லும்-

தாமதம்:என்னும் சொல்லுக்கே!

இதன் உடேஇல்லை.

இதன் வீச்சாய் தான்-உன்

செயலும்-உனதாகட்டும்.

விடா முயற்ச்சியை மூலதனம்.

ஆக்கிடு-நீயே!

இம்:மூலதனம்:தோல்விகாணாது.

இத்:தோல்வியும் தோற்று ஓடிஒழியும்

ஆரத்தழுவும்.

உழைப்பு

பானுப்ரியா
நீலகிரி

விதை தான் விருச்சமாகிறது
உழைப்புதான் வெற்றியைத்தருகிறது
சுடப்பட்ட தங்கம் தான் நகையாகிறது
சோம்பரிலில்லா மனிதன் தான் வெற்றி பெறுவான்
துன்பத்திலேயே உழன்றவனும் இல்லை
இன்பத்திலேயே மிதந்தவனும் இல்லை
இரண்டும் கலந்ததே வாழ்க்கை
இதுவே உலகத்தின் இயற்கை

உன்னையே பட்டை தீட்டிக்கொள்
வைரமாக ஜொலிரிப்பாய்
உறுதியோடு போராடு
உலகையே வெல்வாய்
மரமில்லாமல் கனியில்லை
விளக்கில்லாமல் ஒளியில்லை
வலிரியில்லாமல் வழியில்லை
உழைப்பில்லாமல் வெற்றியில்லை

விழித்திருக்கும் போது கிடைக்காத விடைகள்
உறக்கத்திலா கிடைக்கும்
சிறு துளி பெரு வெள்ளம்
உன் முயற்சி உலகையே வெல்லும்
நம்பிக்கை கொள்
நட்சத்திரமும் நண்பனாகும்

வெற்றியே முதற்படி

கவிமுரசு சு. இலக்குமணசுவாமி

மதுரை

மண் விட்டு கிளம்பும் விதைகளைப் பார்

போராட்டமே வாழ்வென புரியும்!

மரம் விட்டு மரம் போகும் பறவையைப் பார்

அதன் சிறகே தன்னம்பிக்கை என்பது புரியும்!

விண் முட்டும் மலைகளை நிமிர்ந்து பார்

உயரப் போகும் ஆசை தன்னாலே வந்துவிடும்!

முடியும் என்று சொல்லிப்பார்

முயற்சி தன்னால் கூடி வரும்

விடியலுக்காகக் காத்திருப்போம் – ஆனால்

வெளிச்சம் இன்றி வாழ்வது சரியா?

விளக்கே உந்தன் கைகளில் இருக்க – நீ

விடியலை எண்ணி அழுவது முறையா?

முதலில் உனக்குள் இருக்கும் ஆற்றலை

உணர்ந்து பார்… வெற்றி பெற அதுவே – முதற்படி!

வாகை சூடும் வாழ்க்கை

கவிச்சுடர் அழகுதாசன்

கோவை

வாழ்க்கை என்பது பெரும்வானம் – அதில்

வளர்பிறை யாக வாழுங்கள்!

வாழ்க்கை என்பது பெரும்பயணம் – அதில்

வரையறை செய்து ஓடுங்கள்!

வாழ்க்கை என்பது ஓர்நூலகம் – அதன்

வாசலில் உலகம் பாருங்கள்!

வாழ்க்கை என்பது நம்பிக்கை – அதை

வயிர மாகத் தீட்டுங்கள்!

 

வாழ்க்கை என்பது ஓர்இலக்கியம்

வரிவி டாமல் படியுங்கள்!

வாழ்க்கை என்பது ஓர்புதுமை – அதை

வரவில் வைத்துப் பழகுங்கள்!

வாழ்க்கை என்பது ஓர்வள்ளுவம் – அதை

வாழ்வில் படித்து வணங்குங்கள்!

வாழ்க்கை என்பது பெரும்தவம் – அதை

வரமாய் ஏற்று உழையுங்கள்!

 

வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் – அதை

வென்று சிகரம் அடையுங்கள்!

வாழ்க்கை என்பது பெரும்சோகம் – அதை

வசந்தச் சிரிப்பால் விரட்டுங்கள்!

வாழ்க்கை என்பது பெரும்புரட்சி – அதை

வரலா றாகாப் பதியுங்கள்!

வாழ்க்கை என்பது போர்க்களம் – அதில்

வாகை சூடி மகிழுங்கள்!

முயற்சி

முனைவர் இரா.சி. சுந்தரமயில்

வட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சி கூட
பல வண்ணத்தை
நமக்குக் கற்றுத்தரும்போது
‘வாழ்க்கைச் சக்கரம்
என்னை
மேலும் கீழும்
புரட்டி எடுக்கிறது’ என்று
வருந்துகிறாயே மனிதா
கீழ் வரும் போது
பள்ளத்தைத் தோண்டு
மேல் ஏழும் போது
ஆகாயத்தை ஆட்சி செய்
முயற்சி என்பது
உடல் முழுவதும் இல்லாவிட்டாலும்
விரல் நுனியிலாவது இருக்கட்டும்
அது
முடியாது என்பதை
உன் அருகில்
நெருங்கவிடாது

வெற்றி கொள்வோம்

கவிஞர் இணங்கனூர் தமிழரசு வள்ளல்

அரவக்குறிச்சி

முதன்முதலில் சாதியில்லை!

முளைத்ததுவே தொழிற்கூறில்!

அதன்பின்னர் வந்தபிணி

அறியாமை காரணியே!

சதிகாரக் கும்பல்தான்

சாதிவெறி நாட்டாண்மை!

மதிநெறிக்குப் பொருந்திடுமோ

மனிதனுக்குப் பெருமையாமோ!

அன்புக்குச் சாதியேது!

அறத்துக்குச் சாதியேது!

பண்புக்குச் சாதியேது!

பரிவுக்குச் சாதியேது!

நன்மைக்குச் சாதியேது!

நலத்திற்குச் சாதியேது!

உண்மைக்குச் சாதியேது!

உயிருக்குச் சாதியேது!

உடலுக்குச் சாதியில்லை!

உளத்திற்குச் சாதியில்லை!

உடுப்புக்குச் சாதியில்லை!

உணர்வுக்குச் சாதியில்லை!

தடத்திற்குச் சாதியில்லை!

தாகத்திற்குச் சாதியில்லை!

கடவுளுக்குச் சாதியில்லை!

காற்றுக்குச் சாதியில்லை!

போதிமரப் புத்தர்தம்

போதனைதான் சாதியாமோ!

ஓதியுணர் ‘குர்ஆனின்’

உன்னதந்தான் சாதியாமோ!

நீதிநெறி ‘விவிலியத்தின்’

நிலைப்பாடு சாதியாமோ!

சாதிமத வெறிகொல்வோம்

சமன்பாட்டில் வெற்றி கொள்வோம்!