Home » Online News (Page 2)

பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆய்வு மாணவர் தெருக்கூத்தில் புதியமுயற்சி

கணபதி தமிழ்ச் சங்கம் – பசுமை காப்பகத்தின் திருக்குறள் பயிற்சி வகுப்பின் 800 வது வார நிறைவு மற்றும் 16 ஆம் ஆண்டு திருக்குறள் பன்முகப் போட்டி விழா நடைபெற்றது.

திருக்குறள் திருவிழாவில் திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், ஓவியம், கதை, கவிதை மற்றும் புதுக்கவிஞர் மகிழினி மேகலா அவர்களின் “பூகம்பத்தில் பூ” கவிதை நூல் வௌpயிடப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பெ.வெங்கடேஷ் அவர்கள் தெருக்கூத்தில் இதுவரை புராணக் கதைகள், இதிகாசங்கள், இனவரைவியல், நாட்டுப்புறக்  கதைகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்தது. அதனை நவீன உலகிற்கு புதுப்பிக்கும் வகையில் தமிழர் அற இலக்கியமான திருக்குறளை மையப் பொருளாகக் கொண்டு தெருக்கூத்து வரலாற்றில் முதல் முறையாக வள்ளுவமே வாழ்க்கை என்கின்ற ஏலேல சிங்கன; தெருக்கூத்தினை எழுதி இயக்கி தெருக்கூத்தின் பரிணாமத்தில் புதியதோர் தடம் பதித்து நலிந்து வரக்கூடிய தெருக்கூத்தி;னை மீட்டுருவாக்கம் செய்தார். வள்ளுவமே வாழ்க்கை தெருக்கூத்துக் கதையினை அ.காளிதாஸ், ரா.செந்தாமரை, ப.கோபி, ர.பொன்னுசாமி, செ.அஸ்வின்ராஜா, செ.அரவிந்தராஜா, செ.ஆகாஸ், கோ.அப்பு (எ) பாலகிருஷ்ணன், கு.ராம்குமார், கோ.சக்திபிரபு, ஆ.சின்னதுரை ஆகிய   தெருக்கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்தினார்கள்.

தெருக்கூத்தினை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி.வேலுமணி அவர்களின் அண்ணன் அன்பரசு அவர்கள் தெருக்கூத்து கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

தெருக்கூத்தினை சிரவையாதீனம் முனைவர் குமரகுருபர சுவாமிகள் துவங்கி வைத்தார். விழாவினை கணபதி தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் ந.நித்தியானந்த பாரதி ஏற்பாடு செய்து முன்னிலை வகித்தார். தெருக்கூத்தினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆர்வமுடன் கண்டுக்களித்தார்கள்.

வெல்லும் சொல்!

கவிஞர் இரா. இரவி

வெல்லும் சொல்லை எப்போதும் பயன்படுத்துங்கள்

வெல்வார்கள் சாதிப்பார்கள் வளரும் குழந்தைகள் !

அவச்சொல் என்றும் எப்போதும் சொல்லாதீர்கள்

அதிர்வலைகளை ஏற்படுத்தும் தோல்வியில் வீழ்த்தும் !

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்

என்பது பொன்மொழி மட்டுமல்ல உண்மையாகும்!

மனதார வாழ்த்துங்கள் மற்றவரைப் பாராட்டுங்கள்

மனதில் நல்லதை மட்டுமே எப்போதும் நினையுங்கள்!

எதிர்மறை எண்ணமும் சொல்லும் வேண்டாம்

எதிலும் உடன்பாட்டுச் சிந்தனையே இருக்கட்டும் !

உன்னால் முடியாது என ஒருபோதும் சொல்லாதீர்கள்

உன்னால் முடியுமென்று உடன் ஊக்கப்படுத்துங்கள் !

உருப்பட மாட்டாய் என்று உச்சரித்தல் கூடாது

உருப்பட வழி சொல்லி பயிற்றுவியுங்கள் !

எதற்கும் இலாயக்கு இல்லை என்று என்றும்

யாரையும் திட்டுடதல் கூடவே கூடாது !

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை

முயற்சி செய்திட ஊக்கம் தாருங்கள்!

வளமாக வருவாயென வாயார வாழ்த்துங்கள்

வையகம் போற்றும் வண்ணம் சிறப்பார்கள் !

நல்ல சொற்கள் நல்ல அதிர்வை உண்டாக்கும்

நல்ல பலன் தரும் அறிவியல் உண்மையாகும் !

விழித்தெழுக என் தேசம்

– வித்யாசாகர்

உலகின் வெவ்வேறு நிலங்களில் விழும் மழைத்துளிகளைப் போல, ஆங்காங்கே அந்தந்த நிலத்தின் நீதிக்கேற்ப ஒரு புரட்சியும், அந்தப் புரட்சியை நிலமெங்கும் பரப்பி வெற்றியை நாட்ட ஒரு கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு கண்ணியம் மிக்க ஒரு தலைவனும், அந்தத் தலைவனிலிருந்து தொண்டன் வரை போராட உந்துசக்தியைப் பாய்ச்சும் பல உணர்வுப்பூர்வமான படைப்பாளிகளும், அந்த படைப்பாளிகளின் எழுத்திலிருந்து நெருப்புக்குஞ்சாக எழுந்துநின்று உண்மைதனை உறக்கக் கத்திச்சொல்ல ஒரு சில சொற்களும், சொல்லுள் நின்று இந்த சமுதாயத்தையே புரட்டிப்போட சில எழுத்துக்களும், எழுத்துக்களை ஆயுதமாய் ஏந்தியே தனது வாழ்நாட்களை இந்த மண்ணிற்காகவும் தனது மக்களுக்காகவும் வாழ்ந்தது தீர்க்கும் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் காலங்காலமாய் நமக்காக பிறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தென்பது விதைநெல்லை போன்றது. ஆலமரத்தின் ஆயிரம் விழுதுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறு விதையினைப் போலத்தான் எழுத்தும் தனக்குள்ளே பல வீரிய வெற்றி மரங்களையும், காடுகளையும், எத்தனைப் பேர் வந்து திறந்தாலும் தீர்ந்திடாத பல மர்மங்களையும் உள்ளடக்கிகொண்டுள்ளது.

எழுத்தை வெறும் ஒரு புத்தகமாக கடந்துப்போதல் தீது. அறிவின் பொக்கிஷம் புத்தகம் என்ற்றிதல் வேண்டும். உணர்வின் மொத்த கலைவடிவமாகவும் இலக்கிய வெளித்தோன்றல்களாகவுமே புத்தகங்களைப் பார்க்கவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக எழுத்தென்பது அனுபவங்களின் கூட்டுச் சோறு. நடந்த வரலாற்றின் சுவடுகள் பதிந்ததும் நடக்கவிருக்கும் எதிர்காலத்து கற்பனையுமாய் நமக்கு கிடைக்குமொரு அரிய பொக்கிஷம் தான் ஒவ்வொரு புத்தகமும் எனும் மதிப்பு நமக்குள் மேலோங்கி நிற்கவேண்டும்.

அவ்விதத்தில், இதுவரை இங்கிருந்து ஒருவர் வந்துவிடமாட்டாரா எனும் நம் போன்றோர்களின் ஏக்கத்தை ஒட்டுமொத்தமாய் தீர்க்கும் பொருட்டு தமிழிலக்கியத்தின் வரப்பிரசாதமாக வந்தவொரு படைப்புதான் இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் ஐயா திரு. ஜெயபாரதனின் கவிதைத் தொகுப்பு.

நிலா என்பதைப் பெண்ணாகவும், நதி என்பதை காதலியாகவும், மழை என்பதை கதைகளோடும் கண்ட நமக்கு, மழையை மழையாகவும் நிலவை நிலவாகவுமே அறிவியல் கண்கொண்டுப் பார்க்கும் ஒருவரின் சிந்தனைக்கு தமிழால் வாரித்தந்த பரிசுக் குவியல்கள் தான் இப்படைப்பு. எரிமலையை கவிதையினால் குடையும் சக்தியும், அதன் மூலத்தை தேடும் அறிவும், கடகரேகை மகரரேகைகளை காதல் போலவும் காதலியினுடைய முத்தத்தின் இனிப்பினோடும் பார்க்கும் தெளிவு இப்படைப்பின் அதிகார உச்சமாகும்.

இணையங்களில் கவிஞர் திரு. ஜெயபரதன் அவ்வப்பொழுது அறிவியல் பற்றிய ஏதோவொரு படைப்பைக் கொண்டுவந்து “இது நியுட்ரின்” “அது பாஸ்டரின்” “இது மூலக்கோடு” “அது முதல்சுற்று” “இங்கே பூமி இப்படி இருக்கும்” “அங்கே நட்சத்திரங்கள் அப்படி இயங்கும்” என்றெல்லாம் அறிவியல் சார்ந்த புதிரான பல கட்டுரைகளை கவிதைகளை பதிவிடும்போதெல்லாம் எங்கோ நீரின்றி பாலைவனங்களில் திரிபவனுக்கு திடீரென வானம் பிளந்து மழை சோவெனப் பெய்ததைப் போலவொரு ஆதிமொழியின் அறிவியல் வளங்கண்ட பெருமை மனதுள் நிறைவதுண்டு. அப்படிப்பட்ட அவருடைய இப்படைப்பிற்கு அணிந்துரை எழுதுவது என்பதே ஆங்கிலம் பயின்ற யானையிடம் சென்று தமிழில் உன் பெயரென்ன என்று கேட்பதற்குச் சமம் தான். என்றாலும், அத்தனை அறிவிற்கு வலிக்காமல், மிக எளிமையாகப் படித்து நகர்ந்துகொள்ள, சீராக அறிவியல் கூறுகளைப் பற்றி புரிந்துக்கொள்ள ஏதுவாகவே எண்ணற்ற கவிதைகள் அமைந்துள்ளது என்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.

அணு ஆயுதம் சக்தி, தேய்பிறை கோலம், அக்கினிப்பூக்கள், தொடுவானம், அழகின் விளிப்பு என கவிதைகளின் தலைப்புக்களை மிக அழகாக தேர்ந்தெடுத்துள்ளார் கவிஞர் திரு. ஜெயபாரதன். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் தான் தேடிய விஞ்ஞான அறிவை குளோப்ஜாமூனுள் கரைந்த இனிப்பாக கரைத்துள்ளார் என்பதும் மிகையில்லை.

ஷேக்ஸ்பியர், ரூமி, வால்ட் விட்மன், பாப்லோ, உமர் காயம், அன்னை தெரசா மீராவின் கவிதைகள் என நீண்டு இரவீந்திர நாத் தாகூர் வரை ஒரு கவிதைப் பயணத்தையே மேற்கொண்டிருக்கிறார் கவிஞர். பேராசையிலிருந்து விடுப்பு, நிரந்தரமாய் கண்மூடும் நேரம், வாழ்வியல் கட்டுப்பாடு என பல தத்துவார்த்த கவிதைகளும் புத்தகத்திற்கு பலம் சேர்கிறது.

“பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக்களாகி, அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகி,

துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகி பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகி
சீராகி சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என் அன்னை”

என்று முடிக்குமாறு கவிதை இந்தப் பிரபஞ்சத்தின் சூழ்ச்சுமத்தை தனக்கானதொரு அறிவின்படி சொல்வதாய் அமைந்துள்ளது. அதுபோல, இன்னொரு கவிதையில் பொங்கல் விழாவைப் பற்றிச் சொல்கிறார் பாருங்கள், இவர் உண்மையிலேயே தமிழ்மண்ணின் வாசம் மறக்காத ஆங்கில தேசத்து அற்புத விஞ்ஞானி என்பதற்கு இந்த கவிதை தான் சான்று,

“பொங்கல் வைப்போம்
புத்தரிசிப்
பொங்கல் வைப்போம்
சர்க்கரைப்
பொங்கல் வைப்போம்
வீட்டு முற்றத்தில்
மாட்டுப்
பொங்கல் வைப்போம்
முன் வாசலில்
கோல மிட்டு, பெண்டிர்
கும்மி அடித்து
செங்கரும்புப் பந்த லிட்டு
சீராய்த் தோரணம்
கட்டிப் பால்
பொங்கல்வைப்போம் !”

அதுபோல், இன்னொரு கவிதையில் –

“ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெலாம் பரவும்
கரும்புகைச் சாம்பல் !

துருவப் பனிமலைகள்
உருகி
உப்பு நீர்க் கடல் உயரும்!

பருவக் கால நிலை
தாளம் மாறி
வேளை தவறிக் காலம் மாறும்,
கோடை காலம் நீடிக்கும்,
அல்லது
குளிர்காலம் குறுகும்; பனிமலைகள்
வளராமல்
சிறுத்துப் போகும்
துருவ முனைகளில் !

நிலப்பகுதி நீர்மய மாகும்
நீர்ப்பகுதி நிலமாகிப் போகும்
உணவுப் பயிர்கள் சேத மாகும்
மனித நாகரீகம் நாசமடைந்து
புனித வாழ்வு வாசமிழந்து
வெறிபிடித் தாடும்
வெப்ப யுகப் பிரளயம்”

என உலக அழிவு பற்றி கூறுகிறார். பல கவிதைகள் வசனக் கவிதைகளாக இருப்பினும், உள்ளிருக்கும் விளக்கங்கள் யாவும் வேறொருவர் சொல்ல இயலாதவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வீட்டு விளக்கில் நாட்டுக்கெனப் படித்த பல விஞ்ஞானிகள் நம்மில் இருப்பினும், கோள்கள் பற்றியும், கொதிநீர் ஆழத்தின் சூழல் குறித்தும் பேசும் எண்ணற்ற கவிதைகளின் வழியே இப்படைப்பு தனியிடத்தைப் பெற்றுக் கொள்கிறது.

பொதுவாக எழுதுபவர்கள் அத்தனைப் பெரும் கண்ணதாசனாகவே இருக்கவேண்டும் என்று நம் தமிழன்னை விரும்பியிருப்பின் அவருக்குப் பின்னொரு வாலியும், வைரமுத்துவும், அறிவுமதியும், பழனிபாரதியுமென, யுகபாரதி வரை பல பாவலர்களை இம்மண் இன்று காலத்திற்கு நிகராகப் பெற்றிருக்காது.

வெளியே புகழ்மணக்க இருக்கும் பல கவிஞர்களை இலகுவாய் சொல்லமுடிகிற நமக்கு, ஐயா இலந்தை சு ராமசாமி போலவும், சந்தர் சுப்பிரமணியத்தைப் போலவும், புலவர் ராமமூர்த்தி போலவும், புலவர்கள் மா வரதராசன், அழகர் சன்முகமென ஒரு பெரிய பட்டியல் நீண்டு கவிஞர் வள்ளிமுத்து வரை, கவிஞர் இசாக், கவிஞர் அலியார், கவிஞர் சேவியர், கவிஞர் சாதிக், கவிஞர்கள் விக்டர் தாஸ், ருத்ரா, வரையென தமிழ் உலகெங்கும் பரவியிருக்கும் எண்ணற்ற அரிய பல கவிஞர்களை அறியமுடியாமல் தானே ஒரு சூழல் நம்மண்ணில் இன்றும் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றுவோம். எழுதும் புனிதர்களை மனதுள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்போம். என்றோ குப்பைகளை குவித்த ஒரு கிறுக்கனின் அறிவிலிருந்து தான் பல புரட்சிகளை உடைத்த விடுதலையின் குரல்கட்டுகள் அவிழ்கின்றன.

அங்ஙனம், இப்பேரண்டமும் ஒரு நாள் நல்ல பல சிந்தனைகளால் விழித்துக்கொண்டு, அறிவு பெருகி, மனது விசாலமடைந்து, இருப்போர் இல்லார்க்கு விட்டுக்கொடுத்து, அன்பினால் அனைவரும் கட்டியணைத்து, ஏற்றத்தாழ்வில்லா ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொள்ளுமென்று நம்புவோம். அதற்கு துணையாயிருக்கும் அத்தனைப் படைப்பாளிகளோடு’ ஐயா அணுவிஞ்ஞானிக் கவிஞர் திரு.ஜெயபாரதன் அவர்களின் புகழும் நிலைத்து நிற்கட்டுமென வாழ்த்தி, இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் கவிதைத் தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கானதொரு அரிய இடத்தை பெற்றுக்கொண்டு, அடுத்தடுத்து பல நல்ல படைப்புக்களை தர மூல விதையாக அமையட்டுமென்று வேண்டி விடைகொள்கிறேன். நன்றி.

வணக்கம்

தன்னம்பிக்கை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆயுதபூஜை

கமலம் கந்தசாமி, செந்தில் நடேசன், கலைசெல்வி செந்தில், சுரேஷ், சசி, விக்ரம், மிருதுளா ,
செல்வகுமார், விஷ்ணுபிரியா, சங்கீத் பிரசாத், அபர்ணா, அருள்தேவி, விஜயகுமார், விஜயலட்சுமி,
தனலட்சுமி, சிவராமலட்சுமி, மீனா

சின்ன சின்ன மாற்றங்கள் பெரியமாறுதல்கள்

– திருமதி. பிரியா செந்தில்

மாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்றுக் கொள்ள நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவில் மாற்றம், உடுத்தும் உடையில் மாற்றம் பேசும் மொழியில் மாற்றம், கற்கும் கல்வியில் மாற்றம் காணும் விதத்தில் மாற்றம், கேட்கும் விதத்தில் மாற்றம்…

பல மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட நாம் ஏன் பேசும் விதம் மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்களை நாம் ஏன் கொண்டு வரக்கூடாது? நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு சிலமாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் நம்வாழ்க்கையில், நம் அணுகுமுறையில், நம் கனவுகளில், நம் குழந்தைகளிடத்தில், நம் குடும்பத்தில் பெரியமாறு தலைகொண்டு வரமுடியும்.

இது எப்படி சாத்தியம்?உதாரணத்திற்கு நம்மில் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். எனக்கு office-ல Problem,  Business-ல Problem, Personal life-ல Problem, இப்படி சொல்வதால் நம் மனம் மற்றும் மூளை இரண்டும் அந்த பிரச்சனையை பற்றியே வட்டமிடுமே ஒழிய, அதற்கு தீர்வை யோசிக்க முடியாது அந்த விஷயத்துலயே உழன்று கொண்டு இருக்கும் ஆக அதற்கு தீர்வுகாண்பது என்பது நம் ஆழ்மனதின் சக்தியில் உள்ளது. நம் ஆழ்மனதில் உள்ளசக்தியை வெளிகொண்டுவந்து அதை செயல்படுத்த நம்மிடம் உள்ள ஆயுதம் வார்த்தைகள் Problem என்பதை Challenge என்று கூறிப்பாருங்கள். இந்த சொல் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். மனதை வலுப்படுத்தும்.  தீர்வுகாண ஒரு மனதைரியத்தை கொடுக்கும்.

உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் நம்வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆம்மாற்றத்திற்கான ஆரம்பமாக நிச்சயம் இருக்கும். வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுவதால் நம் ஆழ்மனதில் சக்தியை ஆக்கப்பூர்வமாக மாற்றவும் முடியும்; மேம்படுத்தவும் முடியும்; மனதை நாம் சொன்னபடி கேட்கவைக்கும் முடியும். ஏனெனில் நம் மூளைக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்க்கும் சக்தி இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே கேட்கும். கேட்டுநடக்கும் அறிவியலும் உளவியலும் இப்படி இருக்கும் போது நாம் ஏன் இந்த மாற்றத்தை கொண்டுவர கூடாது?

வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் அவையே எண்ணங்களாக மாறும். எண்ணங்களே செயல்வடிவம் பெரும். நாம்செய்யும் செயல்களே நம்வெற்றிக்கு வழிவகுக்கும்.

பேசும் போது கவனித்து பேசுங்கள் உணர்ந்து பேசுங்கள் ஆத்மார்த்தமாக பேசுங்கள் அளப்பரியசக்தி பெறுங்கள். 

எண்ணம் போல் வாழ்வு!

திருமுறை கண்ட சோழன் பேரரசர் ராஜராஜன் 1033-வது பிறந்த நாள் சதய திருவிழா

எதிர்வரும் அக்டோபர் 20-ம் நாள் ஐப்பசி திங்கள் 3-ம் தேதி சனிக்கிழமை மாமன்னர் இராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் விழா விவேகானந்தர் நற்பணி மன்றம் – தமிழ் வளர்ச்சிப் பிரிவு சார்பாக சிறப்புடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் ஒரு பகுதியாக வரும் 15.10.2018 திங்கட்கிழமை கல்லூரி மாணவ மாணவியருக்காக பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேச்சு போட்டிக்கான தலைப்புகள்

 1. சங்க தமிழ் காட்டும் சமாதன நெறி
 2. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ்
 3. நாயன்மார்கள் வளர்த்த தமிழ்
 4. தமிழ் வளர்த்த தேசியம்
 5. விவேகானந்தரும் தமிழகமும்
 6. அறிவியலும் தமிழும்
 7. இராஜராஜ சோழனின் பன்முக தன்மை

கட்டுரைப்போட்டி தலைப்புகள்

 1. மாமன்னர் இராஜராஜன்
 2. இராஜராஜ சோழனின் பன்முக தன்மை
 3. கம்பர், வள்ளுவர் காட்டும் சமயநெறி
 4. பாரதியின் பார்வையில் தமிழ்
 5. இயல், இசை, நாடகம், அறிவியல், தமிழ்

நாள்: 15.10.2018 திங்கட்கிழமை நேரம்: முற்பகல் 11.00 மணி

இடம்: மாரியம்மாள் மகாலிங்கம் அரங்கம்

கல்லூரி வளாகம், பொள்ளாச்சி

நிகழ்ச்சியில் பங்கேற்க விழையும் பொள்ளாச்சி பகுதி கல்லூரி மாணவ, மாணவியர் மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும், கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது படைப்புகளை மேற்கண்ட அரங்க வளாகத்தில் சமர்ப்பிக்கவும்.

 • தமிழ் பணியில்

சுவாமி விவேகானந்தவர் நற்பணி மன்றம்

அழைக்கவும் 94894 28074, 93621 38074, 96552 91575

சாதித்த ஆசிரியர்

ப. சரவணன்,

தலைமையாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

பாளத்தோட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாளேத்தோட்டம் கிராமத்தில் உள்ள இப்பள்ளி சீரும் சிறப்போடும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 01-11-2011 முதல் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வரும் திரு. ப. சரவணன் பணியேற்ற நாள் முதல் பள்ளியில் மாணவர்களுக்கு கீழ்கண்ட தேவையான அடிப்படை வசதிகளை கொடை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்களை சந்தித்து பள்ளிக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்.

இதை ஆய்வு செய்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் சிறந்த தலைமையாசிரியருக்கான பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.

மேலும் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றமைக்காக அன்றைய மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் IVDP தொண்டு நிறுவனத்தின் மூலம் சிறந்த தலைமையாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2017-18 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த ஆசிரியர்க்கான தமிழக அரசின் டாக்டர் இராதகிருஷ்ணன் விருது கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னை கலைவானர் அரங்கில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தினவிழாவில் மான்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களால் பாரட்டுச்சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கி பாராட்டுப்பெற்றார்.

இவர் பணி காலத்தில் பள்ளி மேம்படுத்திய அடிப்படை வசதிகள்:

 1. சென்னை ஹீண்டாய் கார் நிறுவனத்தின் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் 150 செட் பென்ச் மற்றும் டெஸ்க் நன்கொடையாக பெறப்பட்டது.
 2. சாம்பல்பட்டி பவர் கம்பெனி மூலம் ரூ. 2.75 லட்சம் மதிப்பீட்டில் நீர் சுத்தகரிப்பு இயந்திரம் நன்கொடையாகப் பெறப்பட்டது.
 3. போச்சம்பள்ளி MGM மெட்ரிக் பள்ளியின் சார்பில் ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டித்தரப்பட்டது.
 4. இரண்டு வகுப்பறைகளுக்கு தரைத்தளத்திற்கு VPN ஒப்பந்ததாரர் மூலம் நன்கொடையாக ரூ. 50 ஆயிரம் மதிப்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.
 5. பள்ளி வளாகத்திற்குள் சுமார் 250 மரங்கள் பசுமையாக உள்ளது.
 6. 2018-19 ஆம் கல்வி ஆண்டில் போச்சம்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள SHOE நிறுவனத்திடமிருந்து ரூ.6.4 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான நவீன கழிப்பறை கட்டுமான பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.

இது போன்று பல்வேறு நிலைகளிலும் மாணவர்களுக்கு படிப்பதற்கு ஏற்ற நல்ல சூழலை உருவாக்கியதின் மூலம் மாணவர்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பள்ளிக்கு வருகைப்புரிந்து கல்வி கற்கின்றனர்.

இவர் பணிபுரிகின்ற ஆசிரியர்களோடும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தோடும் ஒருங்கிணைந்து ஏற்றத் தாழ்வு இல்லாமல் நல்ல பண்பாளராய் நட்பு பாராட்டி வருகிறார் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

என் இனிய தமிழே

தேன்கனியே தெவிட்டாத தேனமுதே

தென்றல் தெளிக்கும் இன்முகமே

அழகின் சுவையெடுத்து குமரியில் நீ பறக்க

கும்பிடுவேன் உன் குணமறிந்தே…!

பாடுகள் நீ பட்டு பல துன்பம் நீவடைந்து

பயிலும் என்னை பாதையிலுத்து

பயிற்சி அளிக்கும் பன்முகமே

பார் போற்றும் பல்லுணர்வே…!

தமிழ் காற்று வீச தனிமையை மறக்க

தவம் பெற்ற தன்னினமே

தவழ்ந்து கிடந்த தளர்ச்சியில் விழுந்த

தர்மம் செய்ய மாட்டாயோ நீ இன்பம் தர மாட்டாயோ…!

அன்பின் சுவையே அழகின் ரூபவதியே

அண்டினோர்க்கு அடைக்கலம் தரும் அன்புருவமே

அனாதை போல் அலைந்த என்னை பிணைத்து

பின் இணைத்த என் இமயமே இதய சிகரமே…!

உன்னை மறப்பேனோ என் மரணம் மடியும் வரை

மண்ணில் பிறந்த நான் விண்ணில் படர்ந்த உன்னை

கண்ணில் அல்ல தன்னில் வைத்தேன்

தனிமையில்லா உறவிலந்தேன்…!

என் தாய் தமிழே எனை தள்ளி விட மனமில்லாமல்

அள்ளி வந்தனைக்கும் அருந்தேனே

தேன் கனியே தெவிட்டாத தன்மையுடைய மனியே

என் தேனினிதே செந்தமிழே உனை மறப்பேனோ…!

–  ச. ராஜ்குமார் (திருச்சி)

காலந்தோறும் வாழும் கவிஞர் பாரதி

பேராசிரியர் டாக்டர் கு.ஞானசம்பந்தம் பேச்சு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 11.09.2018 அன்று மகாகவி பாரதியாரின் 97வது நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் ந. ஜெயகுமார் முன்னிலை வகித்தார்.

பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சரவணச்செல்வன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரை வழங்கிய துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் பெ. திருநாவுக்கரசு அவர்கள் பாரதியார் எழுதிய ஆத்திச்சூடியையும் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியையும் ஒப்பிட்டுப் பேசினார். பாரதி நாட்டில் நிலவிய பெண்ணடிமைத்தனம், சாதியம் போன்றவற்றை தன் கவிதைகளால் விமர்சனம் செய்வதையும் நாட்டு விடுதலை சமூக விடுதலையை முன்னிலைப்படுத்திய பாரதியின் கவிதைகளையும் எடுத்துக் கூறினார்.

பாட்டுக்கொருப் புலவன் பாரதி என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேரூரை வழங்கினார். அவர் பேசுகையில் ‘மகாகவி பாரதி இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல இனிவருகின்ற எல்லா யுகத்திற்கும் பொருந்திப் போகின்ற ஒரு யுக கவிஞன். வாழும் காலத்தில் இருந்து எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்தித்த அற்புதமான ஒரு சிந்தனையாளன்.

பாரதியின் இலக்கியங்கள் எத்தனை முறை படித்தாலும் தீர்ந்து போகாத வளமும் பொருண்மையும் உடையது. ஆகையால்தான் அவனே தன் கவிதையை “சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தானே போற்றிக் கொண்டான். பிறரின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்காத மகாகவி. தன்மனத்திற்குப்பட்டதை எந்த ஒளிவும் மறைவும் இன்றி எடுத்துரைத்தவர்.

எமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று தன்னைத் தானே பிரகடனம் செய்தவர், பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்று தேசியம் பேசியவர் பாரதி. இந்தியத் திருநாட்டை தந்தையர் நாடு என்று கூறிய முதற்கவிஞன்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியைத் தலைமேல் கொண்டாடியவன். பாரதி போற்றிய தமிழ் மொழியைக் காப்பாற்ற தாய்மொழியில் பேசுவதும், தாய்மொழியிலே சிந்திப்பதும் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.

பேசபடாத மொழி அழிந்துபோகும் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும். பாரதியை நாம் நினைவுகூர்வதன் ஒரு பகுதியாக தாய்மொழியை பேசுவதையும் சிந்திப்பதையம் ஒரு வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவின் நிறைவாகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் தே. ஞானசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.

விழாவில் பாரதியார் பல்கலைக்கழக அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மாணவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் போசிரியர்களும் மாணவர்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வாழ்வை வெல்ல கேள்விக் கல்வி

இரா. கதிர்வேல்

முனைவர் பட்ட ஆய்வாளர்.

முகப்புரை:

தன்னம்பிக்கையோடு வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற, ‘கல்வி’ இன்றியமையாதது. பொதுவாக, எழுதவும் படிக்கவும் அறிதலையே ‘கல்வி’ என்று கருதுகின்றனர். கல்வியானது, எழுத்துக் கேள்விக் கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளை உடையது. மொழி உருவான பின்னர், அறிவைப் பெறப் பயன்பட்ட முறைகளும் ஒன்றே எழுத்துக் கல்வியாகும். ஒருவருக்கு எழுத்துக் கல்வியின் தேவை, மிக இன்றிமையாததே. எனினும் அறிவுப் பெருக்கத்திற்கு, எழுத்து வழிக் கல்வியின் பங்கு குறைவானதே ஆகும். அறிவு வளர்ச்சிக்கு, ஐம்பொறிகள் வழியாகக் கண்டும், கேட்டும், உணர்ந்தும் பெறும் கல்வியே பெரும் பங்கு வகிக்கிறது. அதனுள்ளும் செவி வழியாகக் கேட்டுக் கற்கும் கேள்விக் கல்வி நடைமுறையில் வாழ்வை வெற்றி கொள்ளப் பெருந்துணையாகிறது.

எழுத்தறிவு என்பது வேறு; அறிவு என்பது வேறு. எழுதப் படிக்க அறிந்த அனைவரும் அறிவாளிகள் அல்லர். அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதும் முயற்கொம்பே. பள்ளி, கல்லூரி சென்று, எழுத்தறிவு பெறாத பலர், படிக்காத மேதைகளாய் இருந்து, சிறந்த வெற்றிகளை வாழ்வில் குவித்துள்ளனர். அவ்வெற்றியாளர்களுக்குக் கேள்விக் கல்வியே வாளும், கேடயமாகவும் இருந்துள்ளது.

பேச்சு மொழி:

கருவறையிலேயே குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது என்கிறது அறிவியல். பிறந்த குழந்தை, தன் பெற்றோரும், சுற்றியுள்ளோரும் பேசும் மொழியைக் காதால் கேட்டு, சொற்களஞ்சியம் பெருக்கி, ஓரிரு ஆண்டுகளில் பேசும் மொழியைக் கற்றுக் கொள்கிறது. முறையாகக் கற்றுக் கொடுக்காமலேயே, குழந்தை தானே மொழியறிய, கேட்டலே உதவுகிறது. கேட்டல் வழியே அறிவு பெற்று வாழ்வில் முதல் வெற்றியைப் பதிவு செய்கிறது மனிதக் குழந்தை.

வாழ்வியல் கல்வி:

எழுத்துக் கல்வி அறிமுகம் இல்லாத பழங்காலத்தில் இளையோர், வாழக் கற்றலாகிய வாழ்வியல் கல்வியை அறிவுரைகள், பாடல்கள், பழமொழிகள், கதைகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவற்றின் மூலம் மூத்தோரிடமிருந்து கேட்டல் வழிக் கற்றனர். இக்கேட்டல் கல்வி வழியே தான் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, மரபுகள், பழக்க வழக்கங்கள் போன்றவை ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  தொழிற்கல்வியான உழவு உள்ளிட்ட குடிவழிக் கல்வியும் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் இளையோரால் கற்கப்பட்டது. நவீன காலத்தில் இவை ஏடுகளில் ஏறியிருந்தாலும் பெரும்பாலும் கேள்வி வழியே தான் வாழ்வியல் கற்றல் நிகழ்கிறது.

கேள்விக் கல்வி குறித்து அறிஞர்கள்:

கேட்டல் வழியாகக் கற்றலின் சிறப்பைப் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய ஆசிரியர்கள் தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். ‘கேள்வி முயல்’ என்று ஆத்தி சூடியில் ஒளவையார் கூறுகிறார். எழுத்தறிவாகிய நூற்கல்வியைக் கற்காவிட்டாலும், பிறர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறுக என்ற பொருளில் ‘கற்றினாயினும் கேட்க’ என்கிறார் திருவள்ளுவர். முன்றுறையரைனார் தம் பழமொழி நானூறில் ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்கிறார். ‘இன்பக் கேள்வி இசையவன் காண்’ என்கிறது தேவாரம். செவி வாயாக, நெஞ்சு களனாகக் கேட்க வேண்டும் என்கிறார் பவணந்தி முனிவர். கேட்டவன் கேடில் பெரும்புலவனாவான் என்கிறது சிறுபஞ்சமூலம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

என்ற இக்குறள் உட்பட, பத்துக் குறள்களின் வழி, கேள்விக் கல்வியின் சிறப்பை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.

முடிவுரை:

வாழ்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் தன்னம்பிக்கை மிக்க உரைகளையும், மூத்தோரின் அனுபவ உரைகளையும், ஆசிரியர்களின் அறிவுரைகளையும் பெற்றோர்களின் அன்புரைகளையும், நம் நலன் விரும்பிகளின் நல்லுரைகளையும் வாய்ப்பமையும்  போதெல்லாம் கேட்டு அறிவு பெறுவோர் வாழ்வை வெல்வர் என்பது வெளிப்படை.