– 2019 – March | தன்னம்பிக்கை

Home » 2019 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  அன்பான அனுசரிப்பு…! அகிலமெங்கும் உன் சிறப்பு…!

  டாக்டர் எஸ். ராமகிருஷணன் M.B.B.S.,F.A.C.S( Austria),Dip.Card (Vienna)

  Consultant Cardiologist

  THE POLLACHI CARDIAC CENTRE

  பொள்ளாச்சி.

  அடுத்துவர் மனதை  நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுதும் சுபதினம் என்பார் கவிஞர் கண்ணதாசன். இவ்வரிகள் மருத்துவத்துறைக்கு மிகவும்  பொருத்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக இவருக்கு மிகவும் பொருந்தும்.

  முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால்  சாதாரண மனிதனும் சாதனையாளன் ஆகலாம் என்னும் தாரக மந்திரத்தை தன் வாழ்நாளில் கண்ணாகப் போற்றி சாதித்து வரும் சாதனையாளன்.

  கொங்குப் பகுதியில் தலை சிறந்த இதய நோய் சிகிச்சை மருத்துவர்களில் முன்னோடி.

  தலைக்குள் கனமிருந்தும் தலைக்கனம் சற்றும் இல்லாதவர். அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர்.

  முடிந்தவரை முயற்சிப்பதல்ல முயற்சி ஒரு செயலை திறம்பட முடிக்கும் வரை முயற்சிப்பது தான் சிறந்த முயற்சி என்னும் வாக்கிற்குச் சொந்தக்காரர்.

  அயல்நாடுகளில் கற்ற நுண்ணறிவும், தன் அறிவால் கற்ற செயலறிவையும் கொண்டு இந்தியாவில் தன் பெயரை நிலை நிறுத்தி வரும் THE POLLACHI CARDIAC CENTRE  நிறுவனர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு

  கே: உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்கள்? 

  நான் கொங்கு பகுதிகளின் ஒன்றான பொள்ளாச்சியில் தான் பிறந்தேன். தந்தையார் திரு. சண்முக ரெட்டியார் சுதந்திரப் போராட்ட தியாகி, தாயார் காளியம்மாள். மிகச் சிறு வயதிலேயே தாயும், கல்லூரிப் பருவத்தில் தந்தையாரும் இறந்து விட்டனர்.  நாங்கள் மொத்தம் ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். தற்சமயம் 4 சகோதரர்களும் ஒரு சகோதரியும் தான் இருக்கிறோம்.  மூத்த சகோதரர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கோபியில் உள்ளார். அடுத்த சகோதரர் திரு. முத்துகுமாரசாமி அவர்கள் எங்கள் மருத்துவமனையில் நிர்வாகப்  பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார். இளைய சகோதரர் திரு. சுப்பராயன் ARVIND OPTICALS என்ற பெயரில் பொள்ளாச்சியில் தொழில் செய்கிறார். சகோதரி திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் SSLC படித்து ஆசிரியராக சேர்ந்து திருமணத்திற்குப் பின் அவர் கணவர் திரு. ஜெகன்நாதன் அவதர்கள் ஊக்கத்தின் பேரில் ஆசிரியப் பணியின் இடையே மேலும் M.A., M.Ed., படித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார்.

  எனது மனைவி டாக்டர் கீதா, ஆந்திராவில் பிறந்து கர்நாடாகாவில் வளர்ந்து, சிறு வயது முதல் பெருநகர் பெங்களூரில் வளர்ந்து வந்தாலும் கூட பொள்ளாச்சியில் வாழ்க்கைப்பட்டவுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், துளு போன்ற பல மொழிகளைப் பேசும் பன்மொழி வித்தகர். இவர் ஒரு கண் சிகிச்சை மருத்துவர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  மகன் சுஜய் நிக்கல் என்னைப் போல இருதய நோய் மருத்துவர். மருமகள் டாக்டர் சமீரா கண் மருத்துவர். மாமியார் டாக்டர் கீதாவை போல தற்சமயம் நாங்கள் அனைவரும் எங்களுது மருத்துவமனையில் தான் பணியாற்றுகிறோம். எனது மகள் நிவேதிதாவிற்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், அவர்களை பொறியியல் படிக்க வைத்தேன். மருமகன் ஸ்ரீராம் அவர்களும் பொறியியல் பட்டதாரி. மகளும் மருமகனும் தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்து, அங்கே பணியாற்றி வருகிறார்கள்.

  கே: தங்கள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் பொள்ளாச்சி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் ஆரம்பக்கல்வியும், நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் தான் பயின்றேன். பின்னர் பொள்ளாச்சி NGM கல்லூரியில்  PUC  படித்தேன். பொதுவாக தமிழில் நல்ல ஆர்வம் இருந்ததால்தான் PUC தமிழ் படித்த வரைக்கும் நான் தான் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுப்பேன்.

  சென்னை நகரில் அதன்படி M.B.B.S படித்து முடித்தவுடன் நீலகிரியில் அரசாங்க மருத்துவமனையில் ஒரு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினேன். அதன் பிறகு அரசு ஒரு ஆணைப் பிறப்பித்தது. மத்திய கிழக்கில் உள்ள இரான் நாட்டில் பணியாற்ற நானும் சென்றேன். அங்கு ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். பணியாற்றி முடித்தவுடன் மேற்படிப்பு முடித்து மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆதனால் இங்கிலாந்து நாட்டில் ஒரு  வருடமும் மேற்கு ஜெர்மனி நாட்டில் ஒரு வருடமும் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஆஸ்திரியாவின் தலைநகர் வியண்ணாவில் தான் கார்டியாலஜி சம்மந்தமான அத்துனை நுணுக்கத்தையும் கற்றுக் கொண்டேன். இப்படியே என்னுடைய பயணம் தொடங்கியது.

  கே: தமிழ்நாட்டிற்கு வந்த உங்கள் முதல் மருத்துவப் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

  1974 யிலிருந்த 1984 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலேயே எனுடைய மருத்துவ பயணம் அமைந்தது.  அதன் பிறகு  1984 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தேன். வந்தவுடன் கோவை இராமகிருஷ்ண்னா மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தது.  அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களை நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன். என்னுடைய தந்தையும் அவருடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.

  அப்போது அருட்செல்வர் அவர்கள் ஒரு முறை நான் கோவையில் பணியில் சேர இருக்கும் சந்தர்ப்பத்தில் கோவைப் பகுதியில் மருத்துவம் சார்ந்த அத்துனை சிகிச்சை முறைகளும் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு வெளிநாடுகளில் இருப்பது போல் அவ்வளவு வசதிகள்  இல்லை என்று கூறினேன். அதற்கு, அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இப்பகுதியில் ஒரு மருத்துவமனை தொடங்க கூடாது என்று கேட்டார்.  அவரின் வாக்கினை வேதவாக்காக ஏற்று எங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை மெருகேற்றி மருத்துவமனையாக மாற்றினேன்.

  கோவைப் போன்ற பகுதிகளில் நிறைய மருத்துவமனைகள் இருந்தது. ஆனால் இங்கு அப்படி எதுவுமில்லை. ஆனால் சொந்த ஊரிலே மருத்துவமனை தொடங்கி அங்கே மருத்துவராக இருப்பது என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

  கே: வெளிநாடுகளில் மருத்துவராய் பணியாற்றுவதற்கும், ஒரு சின்னப்பகுதியில் பணியாற்றுவதற்கும் உள்ள வேறுபாடு எப்படியிருக்கிறது.

  மாற்றங்கள் நிறைய இருக்கத்தான் செய்யும்.  இங்கு பணியாற்ற வந்துவிட்டோம்  இனி இங்கு எப்படி பணியாற்ற வேண்டும்  என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். வெளிநாடு சிகிச்சை வேறுபாட்டிருந்தாலும் நோய் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதற்கு வெளிநாடு உள்நாடு என்று எதுவும் இல்லை.

  மருத்துவருக்கு நோயை எப்படி குணம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் யோசிக்க வேண்டுமோ தவிர இடத்தைப் பற்றி யோசிக்க கூடாது. எல்லாத் துறையிலும் கடிமான சூழல் இருக்கத்தான் செய்யும் ஆனால் அங்கு தான் நாம் கற்றுக் கொண்ட பயிற்சிகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

  கே: கார்டியாலஜி துறையைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றி?

  மருத்துவத் துறையில் பல பிரிவுகள் இருக்கிறது. ஆனால் உயிர் கொடுக்கும் துறை என்றால் அது இத்துறை தான்.  அது மட்டுமின்றி இத்துறை மருத்துவத்திலே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  பிடித்த துறையில் பிடித்தார் போல் பணியாற்றுவதில் உள்ள மகிழச்சி வேறு எதிலும் இல்லை. அதிலும் நான் வெளிநாடுகளில் பணியாற்றும் போதும் இத்துறை சார்ந்த சிகிச்சை முறை பற்றி மட்டுமே பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதானல் தான் இத்துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.

  கே: கடந்து வந்த பாதையில் உங்களால் மறக்க முடியாத நோயாளிகள் பற்றி?

  ஒரு மருத்துவருக்கு ஒவ்வொரு சிகிச்சையும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒரு மாற்றத்தையும் மறக்க முடியாத நிகழ்வையும் கொடுத்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையிலும் என் மனதில் நீங்காத நிகழ்வுகள் நிறைய இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திரு. அப்பாசாமி நாயுடு அவர்கள் இறக்கும் முன் மரண சாசனம் என்று ஒரு தாளில் என்னைப் பற்றியும் எனது சிகிச்சை பற்றியும் மிக மேன்மையாக எழுதி வைத்துச் சென்றது மிகவும் பெருமையாக இருந்தது. இன்றும் அக்கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

  கே: வெளிநாடுகளில் நீங்கள் பணியாற்றும் போது அங்குள்ள மருத்துவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

  அங்கு எல்லோம் நேர மேலாண்மையை சரியாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குள் காலதாமதம் ஒரு போதும் இருந்திடாது. ஒரு வேலை எடுத்துக் கொண்டால் அதை முடிக்கும் வரை  அதைப் பற்றி மட்டுமே தான் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

  இவர்களுக்கு யாரும் ஒருவர்; சூப்பர்வைசராக இருந்து கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  அவரவர் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

  வேலை நேரத்தில் வீண் பேச்சு, வெட்டி விவாதம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள்.

  சரியான நேரத்திற்கு உள்ளே வருவார்கள்.  சரியான நேரத்திற்குள் வெளியே சென்று விடுவார்கள்.

  ஓய்வு நாட்களை ஓய்வுக்காக மட்டுமே தான் பயன்படுத்துவார்கள். இப்படி எண்ணற்றவைகளை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

  கே: தற்போது உணவு பழக்க வழக்கங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது, அது பற்றி?

  கலாச்சாரம் என்ற பெயரில் நம்மில் நிறைய பேர் பழமையை மறந்து வருகிறோம்.  முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டது.. ஆனால் தற்போது 16 வயதுடைய கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள்  மட்டுமின்றி மன உளைச்சலும் தான்.

  Fast Food & Fast Life are to be Considered Double Edged Knife

  அது மட்டுமின்றி முன்பெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் நன்றாக விளையாடுவார்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி, கால்பந்து, கைபந்து, கிரிகெட் , கபடி என நிறைய விளையாட்டுகள் விளையாடுவார்கள். உடல் பலமானதாக இருந்தது. அனால் தற்போதை உள்ள பிள்ளைகள் வெளியே சென்று விளையாடாமல் செல்போனில் விளையாடி அதிலே முழ்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களுககு எவ்வித உடல் அசையும் உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது.

  பெற்றோர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். பள்ளி முடிந்தால் ட்யூசன், ட்யூசன் முடிந்ததும் வீட்டில்  படிக்க வைக்கிறார்கள். இது அவர்களின் உடலளவிலும் மன அளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டு விடும். என்று சொல்லிக் கொள்கிறேன்.

  கே: உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?

  என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர். இரண்டு முறை சுதந்திரத்திற்காக சிறைச் சென்றுள்ளார். நாச்சிமுத்து கவுண்டர், சி. சுப்ரமணியம் ஆகியோருடன் நெருங்கி பழகக்கூடியவர். கோவை மாவட்டத்திலேயே முதல் கதராடை கடையை வைத்தவர் இவர் தான். எப்பொழுதுமே வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிவார். பெரிய மீசை வைத்திருப்பார்.

  எனது தந்தை மிகவும் கடவுள் பக்தி உள்ளவர். எங்களிடம் எப்போதும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பார். உண்மையும் உழைப்பும் மட்டும் உன்னை உயர்த்தும் வல்லமை கொண்டது என்று என் தந்தை கூறியதை இன்றும் என் வாழ்நாளில் கடைபிடித்து வருகிறேன். அதுமல்லாமல் ஒருவர் தன் வருமானத்தில் 10 % தானம், தர்மம் செய்து பிறருக்கு உதவ வேண்டும் என்பார். அதே போல் நானும் சுமார் 10 % மற்றவர்களுக்கு உதவ ஒதுக்கி வைப்பேன்.

  இங்கு மருத்துவர் தொழில் ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை என்னால் முடிந்த அளவிற்கு உளமாற நோயாளிகளுக்காக பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மேலும் எங்களுது இருதய நோய் அமைப்பில் நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விட்டேன். தற்போது இந்திய அளவில் உள்ள சிறந்த கார்டியாலஜி மருத்துவர்கள் அனைவரையும் எனக்கு நன்றாக தெரியும். நான் கோவை மாவட்ட  கார்டியாலஜி துறையின் தலைவராக இருந்திருக்கிறேன். தமிழ்நாடு  அளவில் இதே பிரிவில் துணை தலைவராக இருந்திருக்கிறேன். அதுமட்டுமின்றி அகில இந்திய அளவில் ஆலோசனை குழுவிலும் பணியாற்றி இருக்கிறேன். இருதய நோய் தொடர்புள்ள இந்திய மற்றும் சர்வதேச இயக்கங்களிலும் அங்கத்தினராக இருக்கிறேன்.

  கே: தற்போதைய உள்ள இளம் மருத்துவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

  மருத்துவம் என்பது மிகவும் மகத்துவம் நிறைந்தது. தற்போதைய உள்ள இளம் தலை முறை மருத்துவர்கள் அதிகளவில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஒரே  நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஈடுபாடும், இணைப்புத்தன்மையும் சற்று குறைவாகத்தான் இருப்பது போல் தோன்றுகிறது.  அப்போதெல்லாம் நாங்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்ப்போம். பகல் இரவு பாராமல் வேலை செய்வோம். ஆனால் தற்போதைய இளைஞர்கள் இதை செய்வதாக தோன்றவில்லை.

  எங்கள் காலத்தில் எங்களுக்கு என்று முன்னோடிகள் யாரும் இல்லை. அனைத்தையும் நாங்களே தான் கற்றுக் கொண்டோம். எவ்வளவு பெரிய சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அதை நாங்களே நிவர்த்தி செய்து கொண்டோம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட சூழல் இல்லை. ஏதேனும் துறை சார்ந்த சந்தேகம் என்றால் அதைப் போக்க நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். வலைதளத்தல் இல்லாத விபரமே இல்லை.ஆனால் தற்போது இளம் மருத்துவர்கள் மத்தில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. என்பதை என்னால் உணர முடிகிறது. அவர்கள் நிறைய சாதிப்பார்கள்.

  கே: பொதுவாக மருத்துவர் என்றாலே ஓய்வில்லா வேலை என்று சொல்வார்கள் அது பற்றி உங்களின் கருத்து?

  அது உண்மை தான். மருத்துவம் என்பது மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் பல்வேறு அழுத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் வளர்ச்சி நிலையை அடைய முடியும்.

  நான் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்து விடுவேன். மனிதனுக்கு ஓய்வு என்பது ஒரு பரிசு. அது கிடைக்கும் போதெல்லாம் வாங்கி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன், விளையாட்டிற்கு நேரத்தை ஓதுக்குவேன். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் ஆசைக் கொண்டதில்லை. கிடைத்ததை வைத்து எந்தளவிற்கு மன மகிழ்வாய் இருக்க முடியிமோ அப்படி இருந்து விடுவேன்.

  நம்மை விட வசதிப்படைத்தவனை நினைத்து அவருடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. வசதியில் குறைந்தவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டால் வாழ்வு வளமாக இருக்கும். மனஅழுத்தம் இத்தகைய காரணத்தினால் தான் ஏற்படுகிறது.

  கே: ஒரு புறம் நோயும் மறுபுறம் மருத்துவமனையும் பெருகிக் கொண்டு போகிறது. அது பற்றி சொல்லுங்கள்?

  நோயின் பெருக்கதால் தான் மருத்துவமனையின் வளர்ச்சி அதிகளவில் வந்து விட்டது.  தற்போது மக்கள் இடையே விழிப்புணர்வு எவ்வளவு தான் இருந்தாலும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  வருமுன் காப்பது சிறந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.  நல்ல பழக்கங்களை யாரும் கடைபிடிப்பதில்லை. யோகா நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவை செய்தாலே போதும் உடலும் மனமும் நன்றாக இருக்கும்.

  நேரமின்மை என்று இங்கு எதுவுமில்லை. நேரத்தை நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  30 நிமிடம் நேரத்தை ஒதுக்கி யோகா செய்யாமல் இருப்பதால் தான் நோய் ஏற்பட்டு பல நாட்கள் மருத்துவமனையிலேயே தங்குகிறோம்.

  இதைத் தவிர்க்க வேண்டும் . வந்தப்பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பது சிறந்தது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உணவில் அக்கறை செலுத்துங்கள்.

  யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்…

  கே: இதயத்தின் மகத்துவம் பற்றிச் சொல்லுங்கள்?

  இதயம் ஒரு கோயில் இது தான் என்னுடைய தாரக மந்திரம். கோயிலுக்குச் சொல்ல வேண்மென்றால் நம் எப்படி பயபக்தியோடு இருக்கின்றோமோ அது போல் தான் இதயத்தின் மேலும் பக்தியோடு இருக்க வேண்டும்.

  நம் நன்றாக வாழ இதயம் எப்படி எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறதோ அதற்கு நாம் நன்றியை செலுத்த வேண்டும். என கடன் பணி செய்து கிடப்பது என்பது இதயத்திற்கு மிகவும் பொருத்தமான வரிகள்.

  கொழுப்பு சத்துள்ள எண்ணைப் பண்டங்களை சாப்பிடுவதைத் தவிருங்கள். அப்படியே சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றார் போல் நன்றாக உடற்பயிற்சி செய்தாலே போதுமான ஆரோக்கியம் கிடைத்து விடும்.

  உடல் பருமனே அத்துனை நோய்களுக்கு அஸ்திவாரம். அது தான் இதயத்தின் பாதிப்பிறகு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பருமனை தவிர்க்க வேண்டும்.

  ஒரு தாய் கறுவுற்று 5 வது வாரத்திலிருந்து குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி,  வாழ்நாள் முழுவதும் துடித்து கொண்டேயிருக்கும்.

  நாம் தூங்கும் போது  மூளை முதற்கொண்டு எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும் ஆனால் இதயம் அப்படி  இல்லை. ஓய்வெடுக்காமல் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு. அதை நாம் சரியாகப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு.

  கே: இந்திய மருத்துவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

  இந்திய மருத்துவம்  என்பது மகத்துவம் மிகுந்தது. உலகத்திலேயே சிறந்த மருத்துவத்தை கடைபிடித்து வந்த நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான்.

  ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் நம் நாட்டில் இந்திய மருத்துவம் கொடிகட்டி பறந்தது. அவர்களின் வருகைக்குப் பின்னரே இந்திய மருத்துவம் முற்றிலுமாக அழிந்தது. தற்போதும் பாரம்பரியத்தை காக்கும் விதமாக சிலர் இந்திய மருத்துவத்தைத் திறம்பட செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை சரியாக இனங்கண்டு அவர்களிடம் மருத்துவம் பார்க்க வேண்டும்.

  இன்றும் கூட அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் நம் இந்திய பாரம்பரியத்தை காத்த மருத்துவர்களின் புகைப்படம் வைத்து காத்து வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

  கே: தங்களது ஆசிரியர்கள் பற்றி?

  எனது ஆசிரியப் பெருமக்களை நினைத்தாலே மிகப் பெருமையாக இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் கடைசி வரை நான் பயின்ற அத்துனை ஆசிரியர்களுக்கும் நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன். எனது ஆசிரியர் பெருமக்களை நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆறாம் வகுப்பு ஆசிரியர் திரு. வெங்கடாசலம், ஓன்பதாம் வகுப்பு ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி, SSLC ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன்,பியுசி யில் தனது சிம்மக்குரலால் வசீகரித்த திரு. பொன்ராஜ், செந்தமிழை தேனருவி போல் கொட்டும் சிற்பி பாலசுப்ரமணியம் போன்ற ஆசிரியர்கள் தன் வாழ்நாளில் மறக்க முடியாது.  ஏறக்குறைய எனக்கு கல்வி அளித்த அத்துனை ஆசிரியர்களுக்கும் மருத்துவம் பார்த்தேன். அதுவே எம் பாக்கியம்.

  கே: உங்களுக்குப் பிடித்த மனிதர்கள் பற்றி?

  நான் சிறுவயது முதல் பார்த்து பழகிய அருட்செல்வர் டாக்டர். N. மகாலிங்கம் ஐயா அவர்கள் முன்பு வசித்தது எங்களது வீட்டிற்கு சற்று எதிர் வீடு. அவர் ஒரு மகான். தீர்க்கதரிசியாக என்னை ஈர்த்தவர். பல வழிகளில் எனக்கு உதவி புரிந்திருக்கிறார். எனது படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருந்தவர். எனது வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர். அப்பெருமகானோடு பல செஸ் விளையாடிய நாட்களும், அவருக்கு ஒரு மருத்துவராக இருந்தது எனது பாக்கியம்.

  மற்றும் அருட்செல்வரைப் போலவே காந்திய வழியையும் விவேகானந்த கொள்கைகளை இளம் தலைமுறையினருக்கு பரப்புவதை தனது குறிக்கோளாகக் கொண்டவர் அருட்செல்வரின் மருமகனும், பாரதிய வித்யா பவனின் தலைவருமான Dr. B.K. கிருஷ்ணராஜ் வாணவராயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் அழகாகப் பேசக்கூடியவர். தனது மிடுக்கான மெருகூட்டிய பேச்சாற்றலால் அனைவரையும் கவரக் கூடிய காலம் தவறாத சிந்தனையாளர். எங்களது ரோட்ரி சங்கத்தின் பட்டையத் தலைவர். அவருடன் நெருக்கமாகப் பழகி சேவைகள் பல செய்யும் போது சிறு சிறு விஷயங்களில் கூட அவர் காட்டும் ஈடுபாடு என்னை பிரமிக்கச் செய்யும்.

  கே: தங்கள் மருத்துவ நண்பர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் பெரிதும் மதிக்கும் உலகளாவிய பிரசித்தி பெற்ற காலம் சென்ற டாக்டர் K.P. மிஸ்ரா அவர்கள். அப்பல்லோ மருத்துவமனையின் தலைசிறந்த இருதய நோய் நிபுணர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டுமல்லாமல், எனது வழிகாட்டியாகவும், ஆசானாகவும் விளங்கியவர்.

  எனக்கு பல துறைகளிலும் நிறைய மருத்துவ நண்பர்கள் இருக்கிறார்கள். கோவை மாநகரில் உள்ள எல்லா இருதய நோய் மருத்துவர்களுமே எனது நெருங்கிய நண்பர்கள் குறிப்பாக Dr. J.K. பெரியசாமி, Dr.S. முரளிதரன், Dr.S. நடராஜன், Dr. P.R. வைத்தியநாதன், Dr.  தாமஸ் அலெக்ஸôண்டர், உடுமலை ஈழ். சந்திரபாலன், பொள்ளாச்சியில் ஈழ். முத்துக்குமாரசாமி, காலம் சென்ற ஈழ். ஜோதிலிங்கம் அனைவரும் எனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பெரிதும் உதவினார்.

  கே: தாங்கள் பெற்ற விருதுகளைப் பற்றி?

  பல்வேறு சேவா சங்கங்கள் எனக்கு மருத்துவச் செம்மல், மருத்துவ மாமணி, வாழ்நாள் சாதனையாளர் என்பது போன்ற பல விருதுகளையும், இந்திய மருத்துவ சங்கம் BEST DOCTOR AWARD என்ற விருதினையும், நான் படித்த  NGM கல்லூரி, மற்றும் மருத்துவக் கல்லூரியில் BEST ALUMNI AWARD போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.                 எம்ஜிஎம் கல்லூயில் சிறந்த முன்னாள் மாணவன் விருதைப் பெற்றிருக்கிறேன். சிறந்த குடிமகன் விருது, மருத்துவ செம்மல் விருது, மருத்துவ மாமணி விருது இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

  பாரத நாடு பழம்பெருநாடு

  நீரதன் புதல்வர், இந்நினைவகற்றீர்…

  நேர்காணல் : டாக்டர் கலைச்செல்வி செந்தில்

  நன்றி : திரு. K. வெள்ளிங்கிரி.

  இந்த இதழை மேலும்

  நீங்கள் ஒழுங்குமுறையை கையாள்பவரா?

  ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு எற்பட்டிருக்கும் நியதி அல்லது பொருத்தமான முறைகளை கடைபிடிப்பதையே ஒழுங்கு என்கிறோம். சமரசம் செய்து கொள்ளாமல் கண்டிப்பாக இருப்பது, நேர்மையாக இருப்பது, நன்னடத்தையுடன் இருப்பது, எதையும் உரிய  நேரத்தில் சரியாக செய்வது உள்ளிட்டவைகளை கூறலாம். பணியாளர்கள் பணியை  சரியாகச் செய்தால் கண்காணிப்பாளர்கள் தேவையில்லை. திருடர்கள் இல்லையென்றால் காவல் நிலையங்கள் தேவையில்லை. சிறைச்சாலைகள் தேவையில்லை. பிள்ளைகள் நன்னடத்தையுடன் இருந்தால் குடும்பத்தில் பிரிவினை இல்லை.

  தரத்தை சமரசம் செய்து கொள்ளாத வியாபாரிகளுக்கு வியாபாரம் ஒழுங்கான முறையில் நடக்கிறது. தாறுமாறாக நடந்து கொள்ளும் பணியாளர்களிடம்; ஒழுங்காக வேலையைச் செய் என்கிறோம். வீடுகளில் சாமான்களை ஒழுங்காக சீராக வைத்திருந்தால் அது அழகைத் தருகிறது. பற்கள் ஒழுங்காக அமைந்திருந்தால் தனி அழகுதான். வீட்டில், பள்ளியில், அலுவலகங்களில் சமுதாயத்தில் ஒழுங்காக பொறுப்பாக நடந்து கொள்ளும் போது சமூகத்தில் அமைதி நிலவுகிறது.

  கட்டுப்பாடின்றி, மரியாதையின்றி, அடக்கமின்றி, பணிவின்றி, நன்னடத்தையின்றி நல்ல பழக்கமின்றி ஒழுங்கின்றி நடக்கும் போது அங்கு குழப்பம் ஏற்படுகிறது.

  பெர்னாட்ஷா ஒரு சிறந்த நாவலாசியராக வேண்டும்  என்று கனவு கண்டார் .அவருடைய முதல் ஜந்து நாவல்களும் விற்கவே இல்லை. அதற்காக அவர் விரக்தியடைய வில்லை. தினமும் 5 பக்கங்கள் எழுதுவதை தன் வாழ்நாளில் தொடர்ந்து கடைபிடித்து வந்தார். இந்த ஒழுங்குமுறையான செயல் திட்டத்தால் பெர்னாட்ஷா தன்னையே திருத்திக் கொண்டு நாடகாசிரியராக புதுப்பிறவி எடுத்தார். ஒழுங்குமுறையுடன் கூடிய விடாமுயற்சிதான் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் பிரமாண்டமான வெற்றியைத் தருகிறது. ஒழுக்கமான நடத்தைதான் வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடுகிறது. வாழ்வில் விழுந்தவர்கள் அழிந்தவர்கள் வரலாற்றில் ஒழுங்கின்மையே முக்கிய காரணமாக இருக்கும். ஒழுங்கற்று இருப்பவர்களால் லட்சியங்களை அடைய முடிவதில்லை. ஒழுங்கற்று இருப்பவர்களின்  கனவுகள் ஒருபோதும் நனவாவதில்லை. ஒழுங்கற்றவர்களால் உயர்வான மகத்தான பெருமையான காரியங்களை சாதிக்க முடிவதில்லை. பெரும்பாலானவர்கள் எளிதான விஷயங்களை வழிமுறைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். எளிதான தவறான குறுக்கு வழிமுறைகளை தேர்வு செய்யும் போது கஷ்டமான வாழ்க்கையை   பின்னாட்களில் பெறுகிறார்கள். வெற்றியாளர்கள் இன்று கஷ்டப்பட்டால் நாளை நன்றாக வாழ முடியும் என நம்புகிறார்கள்.

  ஓழுங்கற்றவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள், குழப்பம் விளைவிப்பார்கள். நிர்வாக சீர்கேடுக்கு காரணமாக இருப்பார்கள். கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்துவார்கள். மாணவப் பருவத்தில் ஒழுங்கீனமானமாக நடந்து கொள்பவர்கள் பொதுவாக பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்லாமல் தாமதமாக செல்வது, உரிய புத்தகங்களை எடுத்துச் செல்லாமல் இருப்பது மிகக் குறைந்த மதிப்பெண் பெறுவது அடிக்கடி விடுப்பு எடுப்பது பெற்றோர்களை, ஆசிரியர்களை கிண்டலாக பேசுவது விமர்சிப்பது  வெகு நேரம் தூங்குவது உள்ளிட்டவைகளை சொல்லலாம். அருவருப்பான தோற்றத்தில் இருப்பது, வழக்கத்திற்கு மாறான, சமூக நெறிமுறைகளுக்கு புறம்பான அல்லது தாறுமாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது கட்டுப்பாடின்றி நடத்தை விதிகளை மீறுவது உள்ளிட்டவையாகும். துர்நடத்தை, நீசத்தனம், ஒழுங்கீனம் காரணமாக பள்ளியில் இருந்து, அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் நீக்கப்படுகிறார்கள்.

  முழங்காலுக்கு கீழே ஸ்கர்ட் போட்டு வந்ததால் மாணவியை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தார் பள்ளி ஆசிரியர். தனது தவறை  உணர்ந்து திருத்திக் கொள்ளாமல் அந்த மாணவி ஸ்கூலுக்கு வெளியே சென்றதும் ரவுடி போல சட்டையை சுருட்டிக் கொண்டு ஸ்கர்ட்-டை மினி ஸ்கர்ட் போல ஆக்கிக் கொண்டு கேட்டுக்கு வெளியே உனக்கு அதிகாரமில்லை என்பது போல நடந்து கொள்கிறார் என வேதனையோடு தெரிவித்தார்.

  வீட்டில், பள்ளியில், அலுவலகத்தில் சொல்லிக் கொள்ளாமல் வெளியே செல்வது ஒழுங்கீனமான செயல்தான். விளையாட்டு வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறார்கள். உயரதிகாரிகளை மிரட்டும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் பணியிட மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். பணியில் அலட்சியமாக இருப்பவர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். சிலர் மது அருந்தி விட்டால் தாறுமாறாக நடந்து கொள்வார்கள். ஒழுங்கீனம் முரண்பாட்டில் வருகிறது. அது எதிர்மறைகளின் இடையேயான போராட்டம்.

  உடைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது, துவைக்காத உடையை அணிவது, காலணிகளை பாலீஷ் பண்ணாமல் போட்டுக் கொள்வது கழுத்துப்பட்டையில் அழுக்கு படிந்த நிலையில் சட்டையை உடுத்துவது, கைகளில் நகங்களில் அழுக்குடன் இருப்பது, தலைமுடி வாராமல் முடி வெட்டாமல் சுறுசுறுப்பில்லாமல் அசிங்கமாக காட்சியளிப்பது கூட ஒழுங்கீனமாகும். இப்படிப்பட்டவர்கள் நன்மதிப்பை பெறுவதில்லை. மற்றவர்களின் கவனத்தை கவர்வதில்லை. தாறுமாறானவர்கள் தங்களுக்கு கிடைத்த அரிய வாழ்வை, அரிய வாழ்க்கை துணையை, பிள்ளைகளை தான் ஈட்டிய செல்வத்தை, கிடைத்ததற்கரிய பதவியை தக்க வைத்துக் கொள்ள தவறி விடுகிறார்கள்.  மூழ்கிக் கொண்டு இருக்கும் கப்பலைப் போன்றவர்கள். நல்லவற்றை நாசமாக்குவதுதான் எலிகளின் குணம். இவர்கள் தங்கள் சக்தியை எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள்;. சீரழிந்து சிதைந்து காணாமல் போகிறார்கள்.

  அவதூறு வார்த்தைகளைப் பேசி அநாகரீகமாக நடந்து கொள்வது நமது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி விடும். அடிக்கடி விடுப்பு எடுப்பது எவ்வளவு சொல்லியும் கேட்கத் தவறுவது, ஒரு காரியத்தை தொடர்ச்சியாக செய்யாமல் விடுவது போன்றவையே வீழ்ச்சிக்கு வழி வகுத்து விடுகின்றன. ஒழுங்கீனம் தாண்டவமாடுபவர்களின் வாழ்க்கை ஓளியற்று இருண்டு போகிறது. பொறுப்புணர்வு கடமையுணர்வு மறத்து போனவர்கள்.

  எந்த துறையாக இருந்தாலும் அவரவர்கள் தங்கள் பொறுப்புகளில் செம்மையாக செயல்படும்வரை மாற்றப்படவோ, ஒரங்கட்டப்படவோ மாட்டார்கள். புகைப்பழக்கம், மதுப்பழக்கம், போதைவஸ்து காதல் விவகாரங்களில் ஈடுபடுதல் தவறான விஷயங்களுக்கு அடிமையாதல் வாழ்வில் சூறாவளிகளை ஏற்படுத்துகிறது. சமூக வாழ்வு, உறவுமுறை, பாடசாலை, வரவு, குடும்ப பொறுப்பு, தொழில் என்பனவற்றை வெகுவாக பாதிக்கிறது.

  ஒற்றை பெற்றோர்கள் மூலம் வளரும் பிள்ளைகள் பலர் வறுமையால் பாதிக்கப்படுகிறார்கள். வீண் வம்புக்கு இழுப்பது, எதிர்மறை எண்ணங்கள், கவலை, கோபம் தூக்கமின்மையால் அவஸ்தைபட நேரிடுகிறது.

  காதலில் எல்லை தாண்டுதல் அத்துமீறல்கள் இன்று சகஜமாகி விட்டது. சமாதானத்திற்கு உடன்படாமல் தவறாக ஒழுக்கமின்றி நடந்து கொள்வது, கலகம் செய்வது, தீர்க்கதரிசனத்துடன் வழிகாட்டுபவர்களை விமர்சிப்பது, தவறுகளை நியாயப்படுத்தி நண்பர்களுக்கு உபதேசிப்பது பிரிவிளைகளை தூண்டுவது, அடிக்கடி வாக்குவாதம் செய்வது செல்லும் இடங்களுக்கு தேவையானவற்றை முறையாக எடுத்துச் செல்லாமல் தேடிக் கொண்டு இருப்பது முன்கூட்டியே திட்டமிடாமல் இஷ்டத்திற்கு செயல்படுவதால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம்.

  ஒழுங்கற்று செயல்படுவதால் ஏற்படும் அபாயங்கள்:

  வரவுக்கு தகுந்த செலவு செய்யாமல் ஊதாரித்தனமாக செலவளிப்பது, அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தாமதிப்பது, எதையாவது எங்காவது வைத்து விட்டு தேடுவது சிலரது வீட்டிற்கு சென்றால் சுத்தமின்மையால் துர்நாற்றம் வீசும். அழுக்குத் துணிகள் குவிந்து இருக்கும். தரை கூட்டப்படாமல் கழுவப்படாமல் கறை படிந்து இருக்கும். பாத்திரங்கள் கழுவப்படாமல்  ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். இன்றைக்கு சொத்து வாங்குவது ரொம்ப கஷ்டம். அதைவிட கஷ்டம் அவற்றை முறையாக பராமரிப்பது, நமது செல்வத்தை பாதுகாப்பதைப் பொறுத்துத்தான் அவை மென்மேலும் பெருகும். தனி நபர் தூய்மையை வலியுறுத்தி அந்தக் காலத்திலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. கந்தையானாலும் கசக்கி கட்டு. கூழானாலும் குளித்துக் குடி -என்றார்கள். நன்றாக குளிக்காமல்  காலை பத்து மணி வரை பல் தேய்க்காமல் இருந்தால் பக்கத்தில் வருபவர் பயந்து தள்ளி நிற்க வேண்டி வரும். சோம்பல் துட்க்கம் எந்நேரமும் தொலைக்காட்சி பார்ப்பது வரைமுறையில்லாமல் சாப்பிடுவது எல்லாம் கேடான விஷயங்கள்.

  உற்சாகத்துடன் வேலை செய்பவர்கள் காலை சீக்கிரம் எழுந்து விடுவார்கள். சூரிய உதயத்திற்கு பின்பும் படுக்கையை விட்டு எழாமல் தூங்கினால் அந்த வீடு விளங்குமா? பத்து மணி நேரத்திற்கு மேல் துட்ங்குவது நேரமாக படுக்கைக்கு செல்லாமல் அரட்டை வெட்டிப்பேச்ச கம்ப்யூட்டர் டிவி மொபைலில் அளவற்ற நேரத்தை செலவிடுவது தவிர்க்க வேண்டும். கடினமாக உழைக்கும் பெண் வீட்டை பலப்படுத்துகிறாள். நைட்டி அணிந்து கொண்டு தெருவில் உலாவுவது. வீட்டில் சமைத்து சாப்பிடாமல் அடிக்கடி உணவகங்களில் வாங்கி சாப்பிடுவது குடும்பத்திற்கு நல்லதல்ல.

  ஒழுங்கற்ற ஆட்களோடு பழுகுவதால் இன்று பல குடும்பங்கள் சிதைந்து போகின்றன. கூடா நட்பு கேடாகத்தானே முடியும். வேலையை பொறுப்பாக செய்யாமல் நிரந்தரமாக ஒரிடத்தில் பணி செய்யாமல் மாறிக் கொண்டே இருப்பது ஒரே மனைவியுடன் வாழாமல்   சிறு பிரச்சனைகளுக்கு பிரிவது, பெற்ற குழந்தைகளை தவிக்க விடுவது பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் ஒரு நாள் கைது செய்யப்படுகிறார்கள்.

  பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்தால் அங்கு சரியாக படிக்காமல் காதலில் ஈடுபடுவது வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது தூங்க வேண்டிய நேரத்தில் கணினியில் மொபைலில் விளையாடுவது, சரியான நேரத்திற்கு எழாமல் தூங்குவது, பல் துலக்குவதை குளிப்பதை தவிர்ப்பது அல்லது தாமதிப்பது பெற்றோரை ஆசிரியர்களை எதிர்ப்பது விமர்சிப்பது பள்ளி இறுதித் தேர்வுக்கு படிக்காமல் எந்த நேரமும் விளையாட்டில் கேளிக்கைகளில் ஈடுபடுவது, வீட்டில் உள்ள பொருட்களை தவறாக கையாள்வது உடைப்பது சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது சுத்தமின்மையால் தலையில் பொடுகு தூய்மையின்மையால் ஏற்படும் நோய்களுக்கு உள்ளாகிறார்கள். பெற்றோரை எதிர்த்துக் கொண்டு அவர்கள் சம்மதமில்லாமல்  திருமணம் செய்து பெற்றோர்களை தவிக்க விட்டு தானும் மகிழ்ச்சியின்றி வாழ்வது, செய்யும் தொழிலில் துளியும் நேர்மையின்றி  தரமில்லாத பொருட்களை அப்பாவிகளின் தலையில் கட்டி விட்டு எமாற்றுவது   சிற்றின்பத்திற்கு அடிமையாகி ஒழுக்கமற்ற வாழ்வை வாழ்வது முறையற்ற தொடர்புகளால் சந்ததிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது கோவில் போன்ற வீட்டை குப்பைமேடு போல ஆக்கி விடுவார்கள். பணத்திற்க்காக தகாத காரியங்களை செய்து ஒரு நாள் சிறைப்படுகிறார்கள். சரியானவர்களை கண்ணியமானவர்களை நேர்மையானவர்களை, ஒழுக்கமானவர்களை அவதூறாகப் பேசுவது தவறானவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தவறை நியாயப்படுத்துவதும் சரியானதல்ல. பழிக்கும் பாவத்திற்கும் அஞ்சாத ஜென்மங்களால் எவ்வளவு அப்பாவிகள் எவ்வளவு துயர்களை சந்திக்கிறார்கள்.

  உழைக்காமல் சாமர்த்தியமாக ஏமாற்றி மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் ஒரு நாள் அல்லது ஒரு நாள் சிறை செல்கிறார்கள். காவல்நிலையம், சிறைச்சாலை, நீதிமன்றம், மருத்துவமனை கட்டபஞ்சாயத்து என அலைந்து கொண்டு இருக்க நேரிடுகிறது.

  ஓழுங்கானவர்கள்:

  செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் நேரத்திற்கு செய்வார்கள். உணவுப் பொருட்களை வீணடிக்க மாட்டார்கள. நாள் தவறாமல் கடவுளை வழிபடுவார்கள். பணத்தை வீண் விரயம் செய்யமாட்டார்கள். பிள்ளைகளின் படிப்பிற்கு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். சிக்கனமாக இருப்பார்கள்.  நேர்மையாக இருப்பார்கள். வேலைக்கு ஒழுங்காக செல்வார்கள். வெற்றோர்களுக்கு தேவையற்ற மனக்கஷ்டத்தை எற்படுத்த மாட்டார்கள். தாய் தந்தையரை வயதான காலத்தில் அக்கரையுடன் கவனிப்பார்கள். கஷ்டமான நேரத்தில் உடன் பிறந்தவர்களுக்கு உதவுவார்கள். கடன் வாங்குவதை முடிந்த வரையில் தவிர்ப்பார்கள். ஏமாற்ற மாட்டார்கள்.  வீட்டையும் மனதையும் துட்ய்மையாக வைத்துக் கொள்வார்கள். கடினமாக உழைப்பார்கள்.

  இந்த இதழை மேலும்

  உங்கள் உயர்வுக்கு பாதை அமைப்பது எது?

  ஒருவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் அவர் தன்னைப்பற்றி முழுமையாக  சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், தன்னுடைய திறமை என்ன? தன்னுடைய உயரம் என்ன? தான் எதை நம்பித் தொடங்குகிறார்? தான் எந்தக் குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறார்? எதை எதை தனக்கு துணையாக்கிக் கொள்கிறார்? எந்த யுக்திகளை பயன்படுத்திக் கொள்கிறார்? என்பதைப் பொறுத்து வெற்றியின் விகிதம் மாறுபடுகிறது.

  ஒருவருடைய பண்பு நலன்கள்; (VALUES) வேறு அவருடைய குறிக்கோள்கள் (Aims) வேறு , பலர் தங்களுடைய குறிக்கோள் எது? என்பதிலும், பண்பு நலன்கள் எது? என்பதிலும் குழம்பிக்கொள்கிறார்கள், இந்தக் குழப்பம் அவர்கள் எதிர்பார்த்த உயரத்தைத் தொட அனுமதிப்பதில்லை. சிலர் குறைந்த வாய்ப்புக்களையும், குறைந்த திறமைகளையும் கொண்டவராய் இருந்தாலும் கூட குழப்பமில்லாத நிலையில் ,இலக்கை நோக்கி உச்சத்தை அடைகிறார்கள்.

  ஒருவருடைய ஆளுமைத்திறமைக்கு அஸ்திவாரமே அவருடைய பண்பு நலன்கள் ஆகும், அவருடைய பண்பு நலன்களே  அவரை யார் என்ற வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  வெளி உலகிற்கு  அவரை அடையாளப்படுத்துகிறது.

  1. ஆளுமைத் திறனுக்குரிய 5 நிலைகளை அறிந்து  கொள்ளுங்கள்

  ஆளுமைத்திறன் 5 நிலைகளைக் கொண்டது, ஆளுமைத்திறனுடைய வட்டமையப்புள்ளி பண்புநலன்களே (VALUES) ஆகும், ஒருவருடைய பண்பு நலன்கள் நம்பிக்கையை (belief) உருவாக்குகிறது, இது 2வது வட்டமாக அமைகிறது. நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது, இது 3வது சுற்றாக அமைகிறது. எதிர்பார்ப்புகள், கருத்துக்களை மற்றும் எண்ணங்களை (attitude) உருவாக்குகின்றன. இது 4வது சுற்றாக அமைகிறது, கருத்துக்களும்; எண்ணங்களும் செயல்களை (Action)உருவாக்குகிறது, இது 5வது சுற்றாக அமைகிறது. இறுதி வட்டமான செயல்பாடுகள் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன, ஆக செயல்களும், வெற்றிகளும் அவருடைய பண்புநலன்களை    அடிப்படையாக வைத்தே  அமைகின்றன.

  2. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்

  தன்னம்பிக்கை(Self trust) தான் உயர்வுக்கு வழிகாட்டுகிறது. ஒருவரின் உள்ளுணர்வு தான் அவருடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. தன்னம்பிக்கை அதிகமாக அதிகமாக, சுய கௌரவமும்,  வெற்றியை  நோக்கிய பயணமும்  தீவிரமாகிறது, உள்ளுணர்வு எழுப்பும் குரல்களை அல்லது சமிக்ஞைகளை புறம் தள்ளி விடாதீர்கள், அவை தரும் செய்திகளை நம்புங்கள்

  3. உங்களின்  5  பண்பு நலன்களை வரிசைப்படுத்துங்கள்

  உங்களிடமுள்ள, உங்களது வளர்ச்சிக்கு உதவுகிற குறைந்த பட்சம் 5 பண்பு நலன்களை எதுஎதுவென்று யோசித்து வரிசைப்படுத்துங்கள், இதில் எந்தப் பண்புநலன் உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படை காரணியாக அமைகிறது என்பதை தேர்வு செய்யுங்கள், அந்தக் குறிப்பிட்ட பண்புநலன்தான் உங்கள் வளர்ச்சிக்கு காரணம் என்றால் அந்தக் குறிப்பிட்ட பண்பு நலனை  மேம்படுத்தி பட்டை தீட்டுங்கள,; வைரம்  பட்டை தீட்ட தீட்ட அதிகம் மின்னுவது  போல உங்கள் வளர்ச்சியும் ஓளிவிட்டு  மின்னும்,  வெற்றி  உங்களை நாடி வரும்.

  4. மற்றவர்கள் உங்களிடம் விரும்புகிற, உங்களின் குணநலன்களையும், பண்புநலன்களையும் மேம்படுத்துங்கள்.

  மற்றவர்கள் உங்களிடமுள்ள  சில சிறப்புக்  காரணங்களுக்காக உங்களை விரும்புவார்கள், உங்களின் எந்த ஈர்ப்பு சக்தி அவர்களை விரும்பச் செய்கிறது என்றும், உங்களின் எந்தப் பண்பு நலன் அவர்களை வியக்க வைக்கிறது என்றும் கவனியுங்கள், அந்தக் குறிப்பிட்ட பண்புநலன்களை மேலும் வளர்த்துக்கொள்ள பாடுபடுங்கள், அந்தப் பண்பு நலன் அதிகமாகும்  போது உங்களின் சுய மதிப்பும், சுயகௌரவமும், சமுதாயத்தில் அந்தஸ்தும்  கூடும், அந்தப் பண்புநலன்கள் மற்றவரோடு  இன்னும் நெருக்கமான, சுமூகமான, நேசமான உறவை வளர்த்திக் கொள்ள உதவுகிறது என்பதை மனப்பூர்வமாக உணர்வீர்கள், நாடி பெறப்பட்ட அந்த  உறவை  பேணிக்  காப்பாற்றி கொள்ள வேண்டும்.

  5. நிதி சம்மந்தப்பட்ட வெற்றிகளுக்கு உங்களின் எந்த பண்புநலன் வழிகாட்டியது என்பதை எண்ணிப்பாருங்கள்.

  உங்களின் நிதி சம்மந்தமான வளர்ச்சியில்; ஒரு சில பண்புகள் வழிகாட்டியாக அமையும்,; அந்தப் பண்புநலன்கள் உங்களை நிதி நெருக்கடியிலிருந்து  காப்பாற்றும், அந்த நிதி மேலாண்மை படித்துதான்  வரவேண்டும் என்பது இல்லை, அது உங்களின் அனுபவத்தைப் பொறுத்தும், நேர்மையைப் பொறுத்தும் அமையும், உங்களின் வளர்ச்சியை  ஓட்டி    அந்தத் திறமையும்  வளரும்.

  6. உங்கள் நடத்தைகளைக் கண்காணியுங்கள்

  உங்களின் கடந்த கால நடத்தையை இப்போது இருக்கும் நடத்தையோடு ஒப்பிட்டுப் பாருங்கள், மலைக்கும் மடுவிற்கும் இருக்கிற வித்தியாசத்தை உணர்வீர்கள், வளராதபோது இருக்கிற நடத்தைக்கும், வளர்ந்த பிறகு இப்போதைய நடத்தைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும், நீங்கள் வளர வளர எந்த நடத்தைகளை விட்டிருக்கிறீர்கள்? எந்தப் புதிய நடத்தைகளை தொட்டிருக்கிறீர்கள்? என்று பார்த்தால் அது ஆச்சரியமாக இருக்கும், எந்த நடத்தை உங்களை உயர்த்தி இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்வீர்கள், அந்தக் குணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள், அது தான் உங்கள் வளர்ச்சியின் ஆதார சுருதி, அந்தக்குறிப்பிட்ட குணநலனை உயர்த்திக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை உயர்ந்து கொண்டே போகும்.

  7. “நீங்கள் என்னவாக ஆக வேண்டும்” என்ற ஆசையை தீர்மானம் செய்யுங்கள்

  “நீங்கள் யாரைப்போல உயரவேண்டும், என்னவாக மாற வேண்டும் ”என்ற  கனவு உங்களை தூங்க விடாது, உங்கள் மனதில் இந்த ஆசை ,  நெருப்புத் தனல் போல உங்களை  உஷ்ணப்படுத்திக் கொண்டே இருக்கும், ஆரம்பத்திலிருந்து அந்த ஆசைப்பட்ட உயர்வை அடைய ஒவ்வொரு படியாக திட்டமிட்டு முன்னேறுங்கள், உங்கள் இறந்த காலத்தைப்போல எதிர்காலம் இருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் விடியலை நோக்கி, வெளிச்சத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்;, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமல்ல, எதை நோக்கிப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

  8. உங்களையே நீங்கள் விரும்புங்கள்

  உங்கள் உடலமைப்பை, உங்கள் மொழியை, உங்களது குணநலன்களை, உங்கள் பேசும் திறனை, உங்களது வெளிபுறத்  தோற்றத்தை , முகப் பொலிவை பலமுறை  ஆசைப்பட்டு விரும்பிப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்,  உங்களையும்  அறியாமல் ஒரு பெருமையும், பெருமிதமும் உங்களுக்குள் உண்டாகும், இன்னும் பொலிவோடு பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை வளரும்,  ஒவ்வொரு நாளும் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பார்த்து ரசிக்க வேண்டும், நேர்மை,ஓய்வில்லாத உழைப்பு, கடின முயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், உற்சாகம், பொறுமை, நிதானம், முடிவெடுக்கும் திறன், செயல்பாட்டில் வேகம், செய்து முடித்ததில் திருப்தி இவைகள் உங்களிடம் இருக்கிறதா? என்பதை சுய பரிசோதனை செய்துப் பாருங்கள், உங்களின் வசீகரம் அதிகமாகிக் கொண்டு இருப்பதை  அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.

  9. உங்கள் குடும்ப நிலையின் உயர்வுக்கு எந்த பண்புநலன்கள் பயன்படுகின்றன என்பதை பரிசீலியுங்கள்.

  உங்கள் குடும்ப நிலையின் உயர்வுக்கு எந்தெந்த  பண்புநலன்கள் பயன்படுகின்றன என்பதையும் பரிசீலித்து மேம்படுத்துங்கள், இந்த  பண்பு நலன்களை தவறாமல் கடைப்பிடியுங்கள், இன்னும் தேவையானால்  சில சிறப்பான குணங்களை  சேர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பநிலை உயர்வுக்கு நீங்கள் காரணமாய் இருப்பதை உணர்வீர்கள்.

  10. உங்கள் தேக ஆராக்கியம் சம்மந்தமாக எந்தெந்த பண்புநலன்கள் உதவுகின்றன என்பதையும் ஆராயுங்கள்

  உங்கள் தேக ஆரோக்கியத்துக்கு உதவும் பண்பு நலன்களை  எவை எனத் தெரிந்து அவைகளை கவனமாகப் பின்பற்றுங்கள்,  புகைத்தல்,   போதை வஸ்துக்களை உபயோகித்தல், மதுவின் மேல் ஆசை போன்ற இந்த குணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,  இருபது வயதில் செய்வதை அறுபது வயதில் செய்யாதீர்கள். அறுபது வயதில செய்யவேண்டியதை  இருபது வயதில செய்ய  முயற்சிக்காதீர்கள்,  தேக ஆரோக்கியத்திற்கேற்ப உங்கள் செயல்கள் அமையட்டும்.

  11. உங்களின் பண்புநலன் மற்றவரோடு நெருக்கமான மற்றும் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள  உதவுகிறதா  என்பதைப்  பாருங்கள்.  

  இதற்கு உதாரணமாக என் நெஞ்சிற்கினிய நண்பர் உடுமலை மணிவிலாஸ்  R.K. பொன்ராஜ் அவர்களை குறிப்பிட்டாக வேண்டும்.  பெயருக்கேற்ற பொன்நிற மேனி, குணத்தால் மாற்றுக் குறையாத தங்கம், என்னுடைய கல்லூரி காலத்தில் வகுப்பில் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்த அருமையான  நண்பர், விடுதியில் ஒரே  அறையில் இணைபிரியாது இருந்தவர், வேடிக்கை, விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா எதுவாக இருந்தாலும் ஒன்றாகவே இருந்து ரசித்தவர்கள், என் இளமைக்காலம் தொட்டு, என் இறுதிக் காலம் வரை, உயிரோடும், உதிரத்தோடும் கலந்து விட்ட நல்லவர், இனிமையான சுபாவங்களுக்கு சொந்தக்காரர், நல்ல பண்பாளர், எப்போதும் எந்த நேரத்திலும் சிரித்திருக்கும் முகம், மற்றவர்களை ஈர்க்கிற ஒரு  இனம் புரியாத கவர்ச்சியை கொண்டவர், கோபப்படாத ஒரு அருமையான குணம், ஓடோடிச்சென்று மற்றவர்களுக்கு உதவுகிற உத்தமமான பண்பு, எனக்கு ஆலோசனையும் ஆதரவும் அரவணைப்பும் தந்து வளர்த்த நட்பின் இலக்கணம், எல்லோருக்கும் இல்லாத மிகப்பெரிய ராசி இவருக்கு உண்டு, எல்லோரிடமும் நெருக்கமான, சுமூகமான  உறவை   பேணிக்   காப்பவர்.

  நண்பர்களுக்காக எண்ணி எண்ணி கணக்குப்பார்த்து செலவு செய்கிற குணம் என்றுமே இவருக்கு இருந்ததில்லை, கணக்குப்பார்க்காமல் அள்ளி அள்ளி வீசி செலவு செய்கிற பரந்த மனம்  இவருக்கு உண்டு, “இரைக்கிற கிணறுதான் ஊரும்” என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு ,  பணமா? பாசமா? என்று இவரிடம் கேட்டால் பணம் எனக்கு பொருட்டல்ல பாசம்தான்  வேண்டுமென்று சொல்கிற நேசம் மிக்க   நெஞ்சத்திற்கு சொந்தக்காரான,

  இவரின் நண்பர்களின் வட்டாரம் மிகவும் விசாலாமானது, என் கல்லூரிக் காலங்களிலும் சரி, தொழில் நேரத்திலும் சரி எந்த நேரத்திலும், எந்த ஊர் சென்றாலும் இணைபிரியாமல் ஒன்றாக செல்கிற ஒரு ஒற்றுமையும், இனம் புரியாத பாசமும், களங்கமில்லாத நேசமும், கண்களை குளமாக்கும் அன்பும், அணைத்து கூட்டிச்செல்கிற அரவணைப்பும், ஆதரவும், ஆலோசனைகள் தருகிற அனுபவமும், ஒரு மலை போன்ற துணையும்  இவரிடமிருந்து   எனக்கு  எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

  ஒரு செய்தியை சமீபத்தில் படித்தேன், நெஞ்சை நெகிழ வைக்கும் நெருடலான கேள்வி அது.  “ நீங்கள் கடுமையாக நோய்வாய்ப்படும்போது, உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட பணத்தோடு ஒடோடி வரும் உறவினர்கள் (அ) நண்பர்களை வரிசைப்படுத்துங்கள் என்றால் நீங்கள் எத்தனை பெயரை எழுத முடியும் என்று யோசித்துப் பாருங்கள்? ” என்று  கேட்கப்பட்டது, யோசித்துப் பார்த்தால்  என்னால் சிலரை எழுத முடியும், அதில்  R.K. பொன்ராஜ்  பெயர் முதலில் இருக்கும்.

  அரசியலில் பல உயரங்களை தொட வேண்டிய என் நண்பர் தன்னுடைய பெருந்தன்மையால் தனக்கு வர இருந்த பல பதவிகளை விட்டுக் கொடுத்துள்ளார். “தனக்கு வரவேண்டிய புகழை  மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பது” என்றால்; எவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும். அந்த பெரிய மனம் இவருக்கு இருக்கிறது. பொறாமையற்ற உள்ளம், போட்டியற்ற மனம், பெருந்தன்மையான குணம்,  பூரித்துப் போகும் சுபாவம்  இவைகளின் ஓட்டு மொத்த உருவமே   R.K. பொன்ராஜ் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்

  12. சமுதாயத்தில் உங்கள்   ஐம்ஹஞ்ங்  உயர தியாகம் செய்யுங்கள்

  சமுதாயத்தில் தனக்கு இருக்கிற அந்தஸ்தையும், கௌரவத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும், நம் நடத்தையும்,  பண்புநலன்களும் செயல்களும்தான் நமக்கு ஒரு ஐம்ஹஞ்ங் ஐ கொடுத்து உயர்விக்கிறது. குணத்திலும், நடத்தையிலும் பங்கமில்லாமல் பாத்துக் கொண்டாலே நம் அந்தஸ்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம்,   சில பழக்கங்களை நாம் தியாகம் செய்தால்தான்   நம் ஐம்ஹஞ்ங்  உயருமென்றால், நமக்கு பிடித்த அந்தப் பழக்கங்களை நாம் தியாகம் செய்வதில் தவறில்லை,  நம் Image  உயர  சில  தியாகங்கள்  செய்ய  தயாராகுங்கள்.

  பண்பு நலன்கள் பாதை அமைக்கட்டும்

  நம்பிக்கைகள் திசை காட்டட்டும்

  எதிர்பார்ப்புகள் வெளிச்சம்  போடட்டும்

  பழக்கங்கள் துணை  கூட்டட்டும்

  செயல்கள் சிம்மாசனம் போட்டடும்

  சிரசு முடி சூட்டட்டும்

  இந்த இதழை மேலும்

  முயன்றேன் வென்றேன்…

  ச. ரம்யா

  கபடி வீராங்கனை, ஈரோடு

  ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு என்னும் ஒரு குக்கிராமமே எனது ஊர். எனது தந்தை சண்முகம் விவசாயி தாய் ஞானாம்பாள் அவருக்கு உதவியாக இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்வார். தம்பி கோகுல் ஆனந்த் ஏழாம் வகுப்பு படிக்கிறான். நான் பெரியகொடிவேரி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியிலே பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது பொழுதுபோக்கு, லட்சியம், குறிக்கோள், ஆசை, கனவு, வெறி எல்லாமே கபடி  மட்டுமே தான். 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கேலோ-இந்தியா கபடி போட்டிக்கு இந்திய அணிக்காக தமிழ்நாட்டிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வீராங்கனை நான் மட்டும் தான். இதை விட பெரிய அறிமுகம் வேறு எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.

  எனது தந்தை விளையாட்டில் அவ்வளவாக ஆர்வமில்லாதவர்.  ஆனால் எனது தாய்க்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு.  குறிப்பாக கபடி விளையாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்.   எனது பாட்டி என் அம்மாவை அதிகம் விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் என் அம்மா எனது தந்தை மற்றும் பெரியோர்களை எதிர்த்து என்னை கபடி விளையாட ஊக்குவித்து அனுப்பி வைத்தார். என் தாயின் ஊக்கமே என்னை இன்று இந்திய வீராங்கனையாக உருமாற்றியுள்ளது. அடுத்தபடியாக என்னை சாதனை படைக்கும்  வீராங்கனையாக உருவெடுக்கச் செய்தவர் எனது பயிற்சியாளர் பிரகாஷ் அவர்கள். பெரிய கொடிவேரியிலே நிலை கொண்டுள்ள புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்தது முதல் இன்று வரை என்னைச் செதுக்கி உருமாற்றியவர் அவர்தான். ஆறாம் வகுப்பிலே எனக்கு ஆசிரியராக இருந்த பிரகாஷ் என்னை கபடி விளையாட தேர்ந்தெடுத்து எனக்கு நாள்தோறும் பயிற்சி அளித்து இன்று என் திறமையை நாடறிய செய்தவர். எம் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், தினந்தோறும் என்னுடன் கைகோர்த்து கபடி விளையாடும் என் சக தோழிகள் எனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள கபடி விளையாட்டின் பல்வேறு ஆட்ட நுணுக்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்து வலுப்படுத்திய சக்தி பிரதர்ஸ் பயிற்சியாளர் கோவிந்தராஜ், கோவை மாவட்ட இளஞ்சிங்கம் அணியின் பயிற்சியாளர் தர்மன், சுரேஷ், ராம்குமார், தாஸ் மற்றும் பல இடங்களுக்குச் சென்று விளையாட உறுதுணையாக இருந்து நிதி உதவிகள் செய்த கோவை மாவட்ட கபடி கழக துணைச்செயலாளர் திரு. தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களும் சைமன்ராஜ், ஈரோடு மாவட்ட கபடி கழக செயலாளர் NKKP. சத்தியன், பழனிச்சாமி, பி.கே.ஆர் கல்லூரி நிர்வாகம், கிளிண்டன் ஆகியோரின் ஒத்துழைப்பினால் தான் இன்று உங்கள் முன் இருக்கிறேன். மேற்கூறிய அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.

  நான் ஆறாம் வகுப்பிலிருந்து கபடி விளையாடி வருகிறேன். எட்டாம் வகுப்பில் 14 வயதிற்குட்பட்ட SGFI -ல் தேர்வு பெற்று தமிழ்நாடு அணிக்காக விளையாட சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்று வந்தேன். என் பள்ளியிலிருந்து தமிழ்நாடு அணிக்காக விளையாடிய முதல் மாணவி நான் தான். இது என் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அது வரை தடுப்பு ஆட்டக்காரராகவே விளையாடி வந்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து தான் Raider ஆக அவதாரம் எடுத்தேன். பத்தாம் வகுப்பில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் SGFI -ல் தேர்வு பெற்று தமிழ்நாடு அணிக்காக விளையாட மத்திய பிரதேச மாநிலத்திற்குச் சென்று வந்தேன். பின் பதினொன்றாம் வகுப்பில் இந்த ஆண்டு SGFI -ல் தேர்வு பெற்று 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தமிழ்நாடு அணியின் தலைவியாக அணியை மத்திய பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச்  சென்று வந்தேன். அங்கு தான் என் வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றானள [KHELO INDIA] கேலோ இந்தியா விளையாட தேர்வு செய்யப்பட்டேன். அதற்காகத் தேர்வு குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI)இல் நடந்தது. சிறப்பாக செயல்பட்டு தேர்வு பெற்று விட்டேன் ஆனாலும் கடிதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான பயிற்சி முகாம் ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே பள்ளி அளவிலான மாநில போட்டிகளிலும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் மாநில சேம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு மாவட்ட அணிக்காக விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்று வந்தேன். கடந்த ஆண்டு முதல் அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் ஈரோடு மாவட்ட அணி சார்பில் பங்கேற்று விளையாடி இரண்டாம் இடத்தை பெற்று வந்தேன். இந்த ஆண்டும் ஈரோடு மாவட்ட அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.

  எந்த போட்டியானாலும் அதில் சிறந்த வீராங்கனையாக நான் தேர்வு செய்யப்படவேண்டும். மேலும் தடுப்பு ஆட்டத்திலும் பல்வேறு நுணுக்கங்களைக் கற்று சிறந்த ஆல்ரவுண்டராக இந்திய வீராங்கனையாக இந்த உலகை வலம் வரவேண்டும். மகளிர் கபடி என்றால் முதலில் நினைவுக்கு வருவது “ ரம்யா ” என்ற எனது பெயராக இருக்க வேண்டும். இவையே எனது இட்சியம், குறிக்கோள், ஆசை எல்லாமே. மற்ற மாணவிகளுக்கு நான் முன் மாதிரியாக இருக்க வேண்டும். இத்தகுதிகளை அடைய தினந்தோறும் பயிற்சி அவசியம். எவ்வளவு கடினமான பயிற்சியாக இருந்தாலும் அதை இன்முகத்தோடு மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

  என்னுடன் விளையாடும்  என் தோழிகள் என்னை விட இளம் வயதிலேயே SGFI  மற்றும் மாநில சேம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். எனக்கு பதினொன்றாம் வகுப்பில் கிடைத்த பரிசுகள், பாராட்டுகள் எல்லாம் அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பிலேயே கிடைத்துள்ளது. அதை நினைத்து மிகவும் பெருமைபடுகிறேன்.  குறிப்பாக  லோகேஸ்வரி என்ற மாணவி 14 வயதிற்குட்பட்ட SGFI தமிழ்நாடு அணிக்காக தேர்வு பெற்று சிறப்பாக விளையாடியும் [KHELO INDIA] வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. இளம் தலைமுறையினர் சிறு வயது முதலே கடினமாக முயற்சி செய்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் வளமான எதிர்காலம் உங்கள் வாசல் தேடி வரும்.

  இந்த இதழை மேலும்

  இங்கு… இவர்… இப்படி…

  முனைவர் கோ. தேவி

  தாய்மடி அறக்கட்டளை

  சங்ககிரி, சேலம்.

  என்னால் கர்ப்பமடைந்து தாயாக முடியாதுஆனால் எண்ணற்ற ஆதரவற்ற மக்கள் மீது அன்பு கொண்டால் அவர்களுக்கு தாயாகி தாய்மையை உணரலாம்…

  ஆண்மையின் வீரமும்

  பெண்மையின் ஈரமும்

  பிணைந்துப் புரளுது

  உணிரொன்றின் பிறப்பினில்

  கண்ணாகப் பிறந்தினும்- இவள்

  காலத்தின் கோலத்தில்

  கன்னியான கண்ணாகியே

  என மகிழினி எனும் இளம் கவிஞர் இடையினம் எனும் தலைப்பில் திருநங்கையருக்கு புகழாரம் சூட்டுகிறார். கவிஞரின் கவித்துளிகளுக்கு உயிர் நுட்பம் தந்திட எண்ணற்ற திருநங்கையர்கள் இன்று காவல் துறை அதிகாரிகளாகவும், செய்தி வாசிப்பாளராகவும்,  எழுத்தாளர்களாகவும், நாடக நடிகர்களாகவும் தங்களை  அடையாளப்படுத்தி வருகிறார்கள். மேற்குறிப்பிட்டவர்கள் வரிசையில் தான் தான் தாய்மையடைய முடியா படைப்பினிலும் தாய்மையை உணர்ந்து தாயாக வாழும் ஆதரவற்றோர்களின் அன்னை முனைவர் கோ. தேவி அவர்களின் சேவைப் பயணத்தை பற்றிப் பார்ப்போம்.

  சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம்  காளிகவுண்டன் பாளையம் என்னும் ஊரிலுள்ள அரண்மனைக்காடு எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். இவர் கோவிந்தன் முத்துப்பிள்ளை தம்பதியருக்கு  மூன்றாவது  ஆண் குழந்தையாகப் பிறந்தவர்.  பிறந்த ஒரு வருடத்திலேயே இவரின் தந்தை இறந்து விட்டார்.  இதனால் அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஒரு வேலை உணவுக்காகவே பள்ளிக்குப் படிக்க பள்ளிச் சென்றார்.

  ஏழ்மையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். அப்போது தான் உடலால் ஆணாகவும்  மனதால் பெண்ணாகவும் இருப்பதை அவராலே உணர முடிந்தது. இதை அவரால் வெறும் உணர்வாகவே பார்க்க முடியவில்லை. உள்ளத்தாலும் உடலாலும் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒரு முழு பெண்ணாகவே தன்னை மாற்றிக் கொண்டார்.

  சில திருநங்கைகள் தங்கள் வீட்டிலும் ஆதரவின்றி, சமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்டு சூழலில் வேறு விதமான வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்தி வருவார்கள். அதை இவர் முற்றிலும் தவிர்த்தார். இதனால் ஆதரவற்று வறுமையில் வாடும் முதியவர்களையும், ஏழை எளியவர்களையும் தேடி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தார். அதன் பிறகு தாய் என்ற திருநங்கைகளுக்கான சேவை அமைப்பில் தன்னை இணைந்து கொண்டார். பிறகு இத்திட்டத்தால் உருவாக்கப்பட்ட தாய் விழுதுகள் என்ற திருநங்கைகளுக்கான சமூக அமைப்பில் சேலம் ஈரோடு, நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதல் தலைவியாகப் பொறுப்பேற்று தாய் விழுதுகள் அமைப்பை வழிநடத்தினார்.  2007  ஆண்டு தாய் திட்டத்தின் மாநில பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் இவர் வெற்றி பெற்று மாநில பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் மற்றும் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு  பயிற்சியாளராக பணியாற்றி பல திருநங்கைகளை மீட்டுள்ளார்.

  பிறந்த நாளிலிருந்து வறுமையில் வாடிய தேவி தன் வாழ்நாளில் சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கு ஒரு காப்பகம் கட்ட எண்ணி  தான் சேமித்த வைத்த பணத்தால் சொந்தமாக நிலம் வாங்கி அதில் குடிû ஒன்றை அமைத்து ஆதரவற்றோர்களை பல நாட்களாக பாதுகாத்து வந்த தேவி தான் பயணித்து பெற்ற பட்டறிவை கொண்டு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 நாள் தாய் மடி  என்ற  சமுக அமைப்பினை முறைப்படி பதிவு செய்து தனது கனவினை நனவாக்கி தாயாக முடியா நிலையினை உடைத்து பலருக்கு தாயாக தாய் மடியை உருவாக்கினார்.

  தாய் மடி அறக்கட்டளையின் வளர்ச்சியாக குடிசையை மாற்றி  100 நபர்கள் தங்கும் அளவிற்கு காப்பகம் கட்ட தான் சேமித்த பணம் தாயின் நகை மற்றம் நன்கொடையாக வந்த பணத்தையும் கொண்டு இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடித்து 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தன் வயதான குழந்தைகளோடு ஓலக்குடிசையில் இருந்து குடியோறி தனது இலக்கை அடைந்தார்.

  தாய்மடி அறக்கட்டளையில் 100 நபர்கள் வரை  உணவுண்டு பசியாறி பயனடைந்து வருகின்றனர். 20 ஆதரவற்ற முதியவர்கள் முழுமையாக தங்கி காப்பகத்தில் திருநங்கை தேவி காக்கப்படுகின்றனர்.

  சமூக சேவையைத் தொடர்ந்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்  என்ற முழக்கத்தோடு ஆன்மீகத்தில் வெள்ளை வெளிச்சமாய் புரட்சி  செய்து வள்ளலாரின் வழியில் பட்டத்தரசி கோப்பெருந்தேவிக்கு ஆலயம்  அமைத்து அமுத சுரபியை நிறுவி மாதந்தோறும் முழுநிலவு அன்று வறுமையில் வாடும் ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை வழங்கியும், கல்வி கற்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கியும், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மரக்கன்றுகள் வழங்குதல், சிறு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிதிருத்தி, குளிக்க வைத்து புது ஆடை அணிய செய்து உணவளித்து என தாய்மடியின் சேவைகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது.

  தாயிக்கு தாயாகவும் ஆதரவற்றோருக்கு அன்னையாகவும் விளக்கும் திருநங்கையை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

  இந்த இதழை மேலும்

  வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 6

  வாழ்க்கையில் மகத்தான வெற்றிபெறுவதற்கான 1% தீர்வு (The 1% Solution For Work and Life)

  இந்நூலின் ஆசிரியர் டாம் கானல்லன் (Thomas K. Connellan) ஆவார். (தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) இந்நூல் வெற்றிபெற்றவருக்கும் தோல்வியடைபவருக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டும்தான் என்றும் ஒருவர் மேற்கொள்ளும் எந்த விஷயத்திலும் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்த முயன்றால் அது சிறந்த துவக்கப்புள்ளியாக இருந்து அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தவல்லவை என்றும் டாம் கானல்லன் கூறுகிறார்.

  வெற்றியாளர்கள் ஒருபோதும் பிறரைவிட 100 சதவீதம் மேலானவர்களாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் பல விஜயங்களில் மற்றவர்களைவிட 1 சதவீதம் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் ஓட்டப்பந்தய வீரர், பதக்கம் எதுவும் பெறாத, நான்காவது இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிக வேகமாக ஓடிவந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேள்வி கேட்டு அதற்கான ஆதாரங்களை நிறைய இந்நூல் காட்டுகின்றது. அவற்றில் ஒன்றிரண்டு வருமாறு. 2008ல் பிஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட எட்டுப்பேரில் முதலாவது வந்த மைக்கேல் எடுத்துக்கொண்ட நேரம் 50.58 நொடிகள், இரண்டாவது வந்த மிலோரடு எடுத்துக்கொண்ட நேரம் 50.59 நொடிகள். ஆமாம் மைக்கேல் 1 நொடியில் நூற்றில் ஒரு பங்கு நேர இடைவெளியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது வரலாறு. அந்த வேகத்தில் உங்களால் கண்களை மூடித் திறக்கக்கூட முடியாது. தங்கப் பதக்கத்திற்கும், வெள்ளிப் பதக்கத்திற்கும் இடையே இருந்த இடைவெளி 0.002 சதவீதம் மட்டும்தான். அதேபோல 1990ல் நடந்த அயர்ன்மேன் போட்டி 2.4 மைல் நீந்துதல், 112 மைல் சைக்கிள் ஓட்டுதல், 26 மைல் ஓடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய கடுமையான போட்டி. இதில் வெற்றிபெற்ற பின்லாந்து நாட்டு வீரர் பாலி கிர்விற்கும், இரண்டாவதாக வந்த அமெரிக்க வீரர் கென்கிளாவிற்கும் இடையே உண்மையில் ஒரே ஒரு நொடி இடைவெளிதான் இருந்தது. இவ்வாறு வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே அமையும் ஒரு சதவீதத்தை இந்த நூல் 1 சதவீதத் தீர்வு என்று குறிப்பிடுகிறது.

  வாழ்க்கையில் ஏதேனும் ஒரு துறையில் வெற்றிபெற அதாவது சில்லறை விற்பனை, கணினித்துறை, நிதித்துறை, இசை, இலக்கியம், சதுரங்கம் என்று எதுவாக இருந்தாலும் இந்த ஒரு சதவீதம் பெரிய வெற்றியைத் தரும். ஆனால் இதனை அடைய ஒருவர் 10,000 மணிநேரம் பிரக்ஞையுடான பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது ஒரு துறையில் வல்லுநராக ஆக; 10,000 மணிநேரம் பயிற்சி தேவை என்கின்றது இந்நூல். 1 சதவீதம் மாற்றத்திற்கு பத்தாயிரம் மணிநேரம் பயிற்சியா என்று வியப்பு ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மையும்கூட. இதுவரை பெரிய வெற்றியைப் பெற்றுள்ள வெற்றியாளர்கள் பலரும் இந்தப் பத்தாயிரம் மணிநேரத்தைக் கடந்தவர்கள்தான். நீங்கள் ஏதேனும் ஒன்றில் திறமை படைத்தவராக ஆக விரும்பினால் தொடர்ச்சியான பயிற்சியால் மட்டுமே அதை உங்களால் சாதிக்க முடியும். அதுவும் தலைசிறந்தவர்களில் தலைசிறந்தவராக ஆக வேண்டும் என்றால்; நீங்கள் 10,000 மணிநேரம் பயிற்சி செய்துதான் ஆக வேண்டும். பல்வேறு ஆய்வுகள் இந்த முடிவை நிரூபிக்கின்றன என்றும் டாம் கானல்லன் சொல்கிறார்.

  ஆன்டர்ஸ் எரிக்ஸன் என்ற ஓர் உளவியல் அறிஞர் இசைப்பள்ளியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களை ஆய்வு செய்து மூன்று வகையாகப் பிரித்தார்.

  1. பெரிய நட்சத்திரங்களாக ஆகவிருந்த மாணவர்கள்.
  2. உண்மையிலேயே மிகச்சிறப்பாக வயலினை வாசிக்கவும் தொழிலாகவும் கொள்ளவல்லவர்கள்.
  3. ஓரளவு சிறப்பாக வாசிக்கவல்லவர்கள்; அதாவது வயலின் ஆசிரியராக ஆகும் வல்லமை பெற்றவர்கள்.

  இந்த மூன்று வகையினருக்கும் இடையே அவர்கள் கண்டுபிடித்த ஒரே வேறுபாடு என்னவென்று நினைக்கிறீர்கள்? இசைப் பயிற்சிக்கு அவர்கள் செலவிட்ட நேரம்தான். பிறருக்குக் கற்றுக் கொடுக்கப் போதுமான அளவு சிறப்பாக வாசித்தவர்கள் சுமார் 4,000 மணிநேரம் பயிற்சி செய்தனர். உண்மையிலேயே சிறப்பாக வாசிக்கவும், தொழிலாகவும் ஆக்கிக் கொள்ளவும் வல்லவர்கள் 8000 மணிநேரம் பயிற்சி செய்தனர். தனி ஆவர்த்தனம் செய்யும் அளவுக்குத் தலைசிறந்த கலைஞர்களாக ஆனவர்கள் பயிற்சி செய்த நேரம் 10,000க்கும் மேலானதாக இருந்தது. வெறுமனே பயிற்சி இல்லாமல் திறமை படைத்த ஒருவரைக்கூட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கவில்லை என்று ஆன்டர்ஸ் எரிக்ஸன் குறிப்பிடுகிறார்.

  பில்கேட்ஸ் போன்ற வெற்றியாளர்கள் கூட, இந்தப் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்தான். பில்கேட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது; நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் ஒரு பல்கலைக்கழகத்தின் கணினிகளில் புரோகிராமிங் செய்யக் கற்றுக்கொண்டார். காலையில் அவரை எழுப்புவது ஏன் அவ்வளவு கடினமாக இருந்தது என்று அவருடைய பெற்றோர் வியந்தனர்! அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைவிட்டு விலகியபோது புரோகிராம் செய்வதில் 10,000 மணிநேரத்தை அவர் ஏற்கனவே செலவிட்டிருந்தார். இவ்வுலகிலுள்ள மற்ற எவரொருவரையும்விட அவர் மிக அதிகமாகப் பயிற்சி செய்திருந்தார். இவ்வாறான பயிற்சிதான் பில்கேட்ஸ்ஸின் பெரிய வெற்றிக்குத் துணையாக இருந்தது என்று பத்தாயிரம் மணிநேரப் பயிற்சிக்கு பில்கேட்ஸ் உதாரணமாக இந்நூலில் சுட்டிக்காட்டப்படுகிறார். பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை நிறுவியபோது அவருக்கு வயது 20தான். இந்த இடத்தில் ஏ.ஆர் ரகுமான் ரோஜா சினிமாப் படத்திற்கு இசையமைத்து ஒரே நாளில் வெற்றிபெற்றபோது அவருக்கு வயது 16தான். ஆனால் அவர் தனது ஏழு வயதிலிருந்து இசைப்பயிற்சி மேற்கொண்டார் என்பதை நாம் இங்கே நினையலாம். அவர் இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பே 10,000 மணிநேரத்தை இசை கற்பதில் பயிற்சி பெற்றார் என்பதை நாம் இங்கு நினையலாம். அதனால்தான் அவரால் ஆஸ்கார் விருது வரை கால் பதிக்க முடிந்தது. இசையமைப்பாளர் இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசையமைப்பதற்கு முன்னே, இசைத் துறையில் 10,000 மணிநேரத்திற்குமேல் உழைத்திருந்தார் என்பதை நாம் இங்கே மனதில் பதிய வைக்கலாம்.

  ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து உழைக்கத் தொடங்கும்போது; நமது இலக்குகள் குறித்த தெளிவு வேண்டும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள்; எதை விரும்பவில்லை என்பது குறித்து நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். இதில் அடிப்படையாக இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது; சரியான செயல்களைச் செய்வது, இரண்டாவது விஜயங்களைத் திறமையான முறையில் செய்வது.

  முதலில், செய்வதற்குச் சரியான செயல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது, அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களைத் திறமையான முறையில் செய்ய வேண்டும். இதை வேறுவிதமாக இப்படியும் கூறலாம். நீங்கள் செய்யத் தேவையே இல்லாத ஒரு காரியத்தை மிகத் திறமையாகச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இலக்குகளை நோக்கிய பாதையில் சில சவால்கள் இருக்கும்; ஒரு செயலைச் செய்வதற்கு 30 நாள்கள் தொடர்ந்து ஒரு பழக்கத்தை மேற்கொண்டால் அது இலகுவாகிவிடும். நாம் செய்கிற பணி பல் துலக்குவதுபோல; நம்முடன் இயல்பான ஒன்றாக மாறிவிட வேண்டும். அப்படியான ஒரு பழக்கத்திற்குள் நம் இலக்கின் பயணத்தை அமைத்துக்கொண்டால் வெற்றி எளிதாகிவிடும். இலக்கில் தோற்றுவிட்டால் என்ன ஆகும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, இதில் நீங்கள் வெற்றிபெறும்போது நீங்கள் எவ்வளவு சிறப்பாக உணர்வீர்கள் என்பதன்மீது உங்கள் கவனத்தைக் குவியுங்கள். ஒரு நேரத்தில் ஒரு பழக்கத்தை மட்டுமே கையாள்வது நீங்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்களை உங்களுக்குக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, உடலின் எடையைக் குறைக்க எண்ணுபவர் முப்பதுநாள் பயிற்சியில் எடையைக் குறைக்கும் முயற்சியில் வெற்றிபெற வாயப்புண்டு.

  இலக்கில் வெற்றிபெற கடைப்பிடிக்கும் பழக்கங்கள்

  • ஒவ்வொரு நாளும், ஒருமித்தக் கவனத்துடன் வேலை செய்வதற்கென்று ஒரு                குறிப்பிட்ட நேரம், ஒரு சிறு ஓய்விற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம் என்று,        வேலையும் ஓய்வும் மாற்றி மாற்றிச் சுழற்சி முறையில் வரும் விதத்தில் அந்த      நாள் முழுவதையும் திட்டமிட வேண்டும்.
  • ஒரு சமயத்தில் 90 நிமிடங்கள் ஒருமித்தக் கவனம் செலுத்தி வேலை               செய்யுங்கள். நாளின் இடையிடையே ஓய்வு வேலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு வாரமும், உங்களுடைய ஓய்வு இடைவேளைகளில் குறைந்தபட்சம்         மூன்று இடைவேளைகளை 20 நிமிட உடற்பயிற்சி வேளையாக அமைத்துக்கொள்ளுங்கள்.
  • பகலில் 10லிருந்து 20 நிமிடங்கள் வரை ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள்.
  • ஒவ்வோர் இரவு குறைந்தபட்சம் 8 மணிநேரம் தூங்குங்கள்.
  • குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் உல்லாச விடுமுறைகளை      மேற்கொள்ளுங்கள்.

  ஓர் இலக்கை நிர்ணயிப்பதும், அதன்மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதும் முக்கியம்தான். ஆனால் அந்த இலக்கை ஒரு நேரத்தில் ஒரு நடவடிக்கை என்ற முறையில்தான் அடையமுடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். ஆனால் நிகழ்காலத்தில் உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுங்கள். உங்கள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாகத் திகழ ஒரே நேரத்தில் முயற்சிக்காதீர்கள். முதலில் ஒரு பகுதியில் 1 சதவீதம் சிறப்புறுவதற்கு முயற்சித்து, அதில் உங்கள் மேம்பாட்டை உறுதிசெய்து கொள்ளுங்கள். பிறகு இன்னொரு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மீது நடவடிக்கை எடுங்கள். விரைவில் 1 சதவீதம் மேம்படுவது உங்களுடைய இயல்பாக மாறிவிடும் என்கின்றார் டாம் கானல்லன்.

  சின்னச் சின்ன விஜயங்கள் பலவற்றில் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் எப்படி நிரந்தரமான, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் எளிமையான முறையில் விளக்குகிறது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, எளிதாகச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டும்; அவ்வளவுதான். நீங்கள் அப்படிச் செய்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் விளைவுகள் உங்களை பிரமிக்க வைக்கும் என்பது உறுதி.

  இந்த இதழை மேலும்

  இளம் வயதில் ஏற்படும் உடல் பருமன்

  பழங்காலத்தில் உடல் பருமனாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கருதப்பட்டது. ஆனால் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்குப் பலவிதமான நோய்கள் வரும்; முக்கியமாக இரத்த கொதிப்பு அதிகரித்தல், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது, 50 – 80 சதவீத உடல் பருமனான குழந்தைகள் வாலிப வயதிலும் உடல் பருமனாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

  வரையறை

  உடல் பருமன் என்பது உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்து காணப்படுதல்.

  உடல் பருமனை அளக்கும் முறை

  உடற்பருமன் கூட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கண்டறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு, உடல் எடை (கிலோ) உடற்பருமன் கூட்டு (BMI) – உடல் உயரம் (மீ)

  உடல் உயரம் (மீ)

  உடற்பருமன் கூட்டு எண் 18.5 முதல் 24.9க்குள் இருக்குமெனில் அது ஆரோக்கியமான உடல் எடைக்குச் சான்று, ஆஙஐ 24.9 அதிக அளவு இருந்தால் (24.9க்கு மேல்) அது உடல் பருமனுக்குச் சான்று.

  காரணங்கள்

  • வாழ்க்கை முறையில் மாற்றம்
  • தவறான உணவு பழக்கவழக்கங்கள்
  • பழங்காலத்தில் உள்ள சத்து நிறைந்த உணவு பொருட்களைத் தற்போதுள்ள துரித உணவு மாற்றி அமைந்துள்ளது.
  • அதிக அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை உண்பதால் மற்றும் துரித உணவை உட்கொள்ளுவதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • துரித உணவு சுலபமாக கிடைப்பதாலும், விலைகுறைவாகவும், மலிவாகவும், ருசியாகவும் உள்ளதாலும் குழந்தைகள் அவற்றை விரும்பி உண்கின்றனர்.
  • பள்ளியில் கிடைக்கும் பப்ஸ், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் குழந்தைகள் அதிகமாக உண்கின்றனர்.
  • இவ்வகை துரித உணவுகளில் ட்ரேன்ஸ் என்னும் கொழுப்பு நிறைந்த எண்ணெய் உபயோகிக்கப் படுகிறது.
  • இவ்வகை உணவுகளில் புரதம், வைட்டமின்கள் ஆகியவை குறைவானதாகவே இருக்கும்.
  • சரீர உழைப்பு இல்லாமை (Sedentary Life Styles)
  • குழந்தைகள் டி.வி. யின் முன் அமர்ந்து உணவுகளை உண்பதால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவில்லாமல் உண்கின்றனர்.
  • பள்ளி மற்றும் டியூசன்
  • இந்தியாவில் உடல் பருமன் வர ஒரு முக்கியமான காரணம் பள்ளி மற்றும் டியூசன் வகுப்புகளுக்குக் குழந்தைகள் செல்வதால் ஏற்படுவதாகும்.
  • பெரும்பாலான குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கும்.
  • பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் என்பது இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் உடல் பருமன் வர வாய்ப்பு உள்ளது.
  • மரபணு குறைபாடுகள்
  • பரம்பரையாக பருமனாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • பசி மற்றும் ஜீரணத்தைக் கட்டுப்படுத்தும் மரபணுக் களின் குறைபாடு இருந்தாலும் இளவயதிலேயே உடல் பருமன் ஏற்படும்.
  • கர்ப்ப காலத்தில் தாய் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
  • குழந்தையின் உயரம் குறைவாக இருந்தால் உடல் எடை அதிகமாகத் தெரியும்.
  • நிண நீர் சுரப்பிகளின் குறைபாடுகள்
  • தைராய்டு, ஹைபோதெலாமஸ், பிட்யூட்டரி மற்றும் அட்ரினல் ஆகிய சுரப்பிகள் குறைவாகவோ, அதிகமாகவோ சுரப்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும்.

  மருத்துவ காரணங்கள்

  • ஸ்டீராய்டு, வலிப்புக்கான மருந்துகள், மனச் சோர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் ஆகியவையும் உடல் பருமனை அதிகரிக்கலாம்.

  தடுக்கும் முறைகள்

  • இளவயதில் உடல்பருமனைத் தடுக்கும் ஆரம்ப வழிமுறைகள்
  • 1-10%ல் நகரத்தில் வாழும் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு உடல் பருமன் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
  • வாழ்க்கை முறையில் மாற்றம்
  • ஆரோக்கியமான உணவுமுறைகளை உண்ண வேண்டும்
  • உடல்பருமனைத் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், போன்றவை உடல்பருமனைத் தடுக்கும்.

  துரித உணவு, பப்ஸ், கேக், ஐஸ்கிரீம், ஸ்நேக்ஸ், குளிர்பானங்கள், சமோசா, உருளைகிழங்கு சிப்ஸ், சாக்லேட், பர்கர் போன்றவை உடல் பருமனை அதிகரிக்கும்.

  இந்தியாவின் கலாச்சார உணவு முறையைப் பின்பற்றி வந்தால் உடல் பருமன் ஏற்படாது.

  இதற்கு ற்ழ்ஹச்ச்ண்ஸ்ரீ ள்ண்ஞ்ய்ஹப் க்ண்ங்ற் வலியுறுத்தப்படுகிறது.

  அதிக அளவு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்

  சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

  உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு குழந்தையும் தினமும் 1 1/2  மணி நேரம் உடற்பயிற்சி (அ) விளையாட்டினை மேற்கொள்ள வேண்டும். அவை சைக்கிள் ஒட்டுவது, பள்ளிக்கூடத்தில் விளையாடுவது போன்றவை ஆகும்.

  இருந்த இடத்தில் இருந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும்

  ஒரே இடத்தில் 2 மணி நேரத்தில் மேல் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதையும், தொலைபேசி பேசுவதையும் மற்றும் கணினியில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

  குழந்தைகளுக்கு அதிகமாக உணவு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

  குழந்தைக்கு வயதுக்கேற்ற எடை உள்ளதா என்பதைப் பார்த்து அதற்கேற்றஉணவுமுறைகளை வழங்க வேண்டும்.

  புரதச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதன் எடை மற்றும் வளர்ச்சியைப் பார்த்து அதற்கேற்றபடி புரதச்சத்து நிறைந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

  முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் பின்னாளில் பருமனாக வாய்ப்பு குறைவு.

  குழந்தைகளுக்குப் பரிசு பொருட்களாகத் திண்பண்டங்களைக் கொடுக்க கூடாது.

  குறைந்த அளவு உணவாக நாளொன்றுக்கு 5-6 முறை கொடுக்கலாம்.

  டி.வி. பார்த்துக் கொண்டு உணவு உண்ண அனுமதிக்கக் கூடாது.

  உணவு வேளைக்கு முன் திண்பண்டங்களைக் கொடுக்கக் கூடாது.

  குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்ண பழக்க வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம்

  உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். உங்களைப் போல் உள்ளவர்கள் ஏற்படுத்தியதுதான் என்பது பின்பு நன்றாகத் தெரியும். முதலில் உனக்குள் இருக்கும் தடைகளை அகற்றினால் உலகை நீ வெல்வது உறுதி. ஆள்வது உறுதி.

  இன்பம் துன்பம்

  எமது சிந்தனையில் அறிந்ததெல்லாம் இன்பத்தை அனுபவித்தவன் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும்.  துன்பத்தை அனுபவித்தவன் இன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இன்பமும் துன்பமும் ஒவருனுக்கு வாழ்வில் மாறி மாறி வருபவைதான்.

  திட்டுமிட்டுச் செயல்படு:

  எடுத்துக்காட்டாக, ஒரு வீடு கட்டுகிறோம் என்றால் இங்கு இத்தனை இலட்சத்தில் இப்படி வீடு கட்டுவோம் என சன்னல், அறை, வளாகம், குளியல், அறை, மாடி போன்ற வீட்டைப் பற்றிய புள்ளி விவரங்களுடன் முழுத் திட்டத்தையும் வேலை தொடங்கு முன் முதலிலேயே கையில்( மனதில்) வைத்துக் கொண்டு வெள்ளைத்தாளில் கற்பனையில் உருவாக்கிய  அந்த வீட்டுத் திட்டத்தை மனதில் கற்பனை செய்து அதைப் பற்றிச் சிந்தித்து பின்பு அதை உருவாக்க வேண்டும் என்று தீவரமாகச் செயல்படுகிறோம். 2,3  மாத செயல்பாடுகளுக்குப் பின் மனதில் கற்பனையாக கனவு கண்ட  அந்த வீடு நிஜமாகி நனவாகி இறுதியில்  வசிப்பிடத்தைப் பற்றிய திட்டம் வெற்றி அடைந்துவிடுகிறது. இந்த வெற்றிக்குக் காரணம் என்னவென்று இப்பொழுது தங்களுக்கே தெரிந்திருக்கும். இலட்சியமும், இலட்சியத்தைப் பற்றிய தொலை நோக்கு திட்டத்தையும் முதலில்  மனதில் ஆழமாகப் பல வண்ணங்களில் வரைந்து கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நோக்கியே சிந்தகையிலும், செயலிலும் பயணிக்க வேண்டும். அப்படிப் பயணித்தவர்கள் தான் இன்று உலகில் இமாலய வெற்றி அடைந்துள்ளவர்கள் என்பதையும் அறிய வேண்டும்.

  வெற்றியும் – தோல்வியும் மனம் தளராதே

  வெற்றி, தோல்வி என்பது அனைவரது வாழ்விலும் ஒன்றில் இல்லாவிட்டால் இன்னொன்றில்; இன்னொன்றில் இல்லாவிட்டால் ஏதோ ஒன்றில்  நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். அப்பொழுது அந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவங்களைப் பொறுத்தே அடுத்து நடக்கும் வெற்றியும் தோல்வியும் அமையும்.  வெற்றிக்குள் தோல்வி மறைந்திருப்பதையும், தோல்விக்குள் வெற்றி ஓளிந்திருப்பதையும் முதலில் கண்டு கொள்ளுங்கள். வாழ்க்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் எண்ணி மனம் தளர வேண்டாம். மனம் தளரும் பொழுது பலமற்ற மனிதனாகி விடுவாய். தோல்விகளால் தான் உன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ள இயலும்.

  எழுத்தாளர்கள் சொன்ன சூழ்நிலை வாசகங்கள்…

  அடிமேல் அடி விழுந்து மிகவும் சோகமான, துன்பமான மகிழ்ச்சியான எந்தவொரு சூழ்நிலைகளிலும் மனம் நொந்து மனிதன் இருக்கையிலும் , தாங்கள்  இருக்கும் அந்தச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு ஒரு வாசகத்தை பத்திரிகை எழுத்தாளர்கள் சொல்லியிருப்பார்கள். அதைச் சிந்தனையின் மூலம் மனதிற்குள் கொண்டு வாருங்கள். சோகத்தை அகற்றி மனதிற்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும், புத்துணர்ச்சியையும், புது சுகத்தையும் ஆயிரம் பேர் உங்களுடன் இருக்கின்ற ஒரு உணர்வினையும் கொடுக்கும். எல்லோரும் விட்டு விட்டு விலகிச் சென்ற போதும் உயிரையும் கூடக் கொடுக்கும் சிறந்த நல்ல நண்பனாக அந்த வாசகங்கள் உடனிருக்கும். இந்த வாசகங்களே தோல்வியுற்றுக் கிடக்கும் நேரத்தில் வெற்றிச் சிந்தனைகளைக் கொடுக்கும்.

  இளமையை வீணாக்காதே…

  இளமையை முழுவதும் பயன்படுத்துகள். இளமையில் தான் செயல்திறன் மிக்கவர்களாக எதிலும் செயலாற்ற முடியும். எதிர்கால முன்னேற்றத்தின் அடித்தளம் இளமைக்குள்தான் அடங்கியுள்ளது. இளமையை வீணாக்குவதன் மூலம் வெற்றியும் வீணாகிறது என்பதை ஏற்க வேண்டும்.

  பில்கேட்ஸ்- பிரசிடெண்ட்

  பில்கேட்சைப் போன்று ஆக வேண்டும் என்பது நினைப்பது தான் உயர்ந்த நோக்கமுள்ள இக்கால இளைஞனுக்கு அடையாளம். பஞ்சாயத்து பிரசிடெண்டு ஆக வேண்டும் என்பதெல்லாம் குறுகிய மனப்பான்மையுள்ள கற்கால மனிதனின் பிற்போக்கான சிந்தனைகளுக்கும் நோக்கங்களுக்கும் அடையாளமாகும்.

  தாய்மையான நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்

  நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள், அதுதான் தற்போதைய செல்வம். இச் சொத்தை வைத்துத்தான் வருங்கால உயர்வும் கூட ஒரு வகையில் நிர்ணயிக்கப்படலாம்.

  வெற்றியைக் கண்டுபிடித்தவர்கள்:

  வெற்றியைக் கண்டுபிடித்தவர்கள்- தன்னம்பிக்கை மிக்கவர்களும், விடாமுயற்சி உள்ளவர்களும், திறமையான செயல்திறன் மிக்கவர்களும், அமைதியாகச் சிந்தித்து ஆக்கபூர்வமாப பணியாற்றியவர்களும், பணிவோடும் துணிவோடும் பாடுபட்டவர்களும் தான் வெற்றி என்ற பெருமதிப்பிற்குரிய சொல்லைக் கண்டுபிடித்து இவ்வுலகத்திற்குத் தெரிவித்தனர்.

  நீங்களே உமது  வெற்றிக்குத் காரணமானவரும் நீங்களே, தோல்விக்குக் காரணமானவரும் நீங்களே. சாதனையடைவதும் சோதனையடைவதும் உங்களது கையில்; வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் தங்களது செயலில்.

  சாதி மதம் நிறம் குலம்

  வெற்றிக்கு உறுதுணையாக மேற்கண்டவை இருக்கும் என்று நம்புவதெல்லாம் மிகவும் நன்று. தாழ்ந்த சாதியில் பிறந்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். சாதனைக்கு சாதி, மதம் என்பது ஒரு தடையல்ல. ஒருவனது உயர்வுக்கும், தாழ்வுக்கும் இனம் காரணமல்ல, வெற்றி தோல்விக்கும், இனத்திற்கும் எந்தத் தொடர்பும் சம்மந்தமும் இல்லை.

  எடுத்துக்காட்டிற்கு இங்கு ஏகலைவனை எடுத்துக் கொள்ளுங்கள். அன்று கீழ்சாதியென்று தன் குருவால் புறக்கணிக்கப்பட்டு ஓரமாக ஒதுக்கப்பட்டாலும் வில் வித்தையில் வீரனாக தலை சிறந்து சிறப்படையவில்லையா? இக்கலைஞன் போல் எத்தனையோ பேர் ஏடுகளில் எடுத்துக்காட்டாக உங்களுக்கு உள்ளனர். கீழ் ஜாதியாக பிறந்துவிட்டோம். சமூகம் புறக்கணிக்கின்றதென்றும், மேல் ஜாதியாக பிறந்து விட்டோம். அரசாங்கம் புறக்கணிக்கின்றதென்றும் சிந்திப்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான சிந்தனைகளாகும். அனைவரும் அறிந்த டாக்டர் அம்பேத்காரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்த சாதி என்று அனைவருக்கும் தெரியும்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 63

  ஏன் இந்த கோபம்…?

  வாழ்க்கையில் பல்வேறு சூழல்கள் மாறிக்கொண்டே வருகின்றன. எல்லா காலங்களிலும் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

  சுமார் 50 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த நிகழ்வுகள், நூல்களாய் மாறி வரலாறு வடிவில் இன்று வாழ்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் பெற்றோர்களின் மூலம் பிள்ளைகளைச் சென்றடைகிறது. ஆனால், வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் பசுமரத்தாணிபோல நம் நெஞ்சங்களில் நிழலாடுகின்றன. இவை – பலநேரங்களில் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாகவும் மாறிவிடுகின்றன.

  அன்பு, பாசம், நட்பு, காதல், இன்பம், கோபம், எரிச்சல், பகை போன்ற வெவ்வேறு விதமான நிகழ்வுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திவிடுகிறது. அவை – சிலருக்கு பாடங்களாகவும், வேறுசிலருக்கு படுகுழிகளாகவும் தோன்றுகின்றன. இதனால்தான், எந்தவொரு நிகழ்வையும் இனிமையோடு சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது என பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  வெற்றி வரும்போது துள்ளிக் குதிப்பதும், சோகம் நெருங்கும்போது போர்வையைப் போர்த்திக்கொண்டு முடங்கிக் கிடப்பதையும் வாடிக்கையாகக்கொண்டால், வாழ்க்கை ருசிக்காது. வெற்றிகள் நிலைக்காது.

  ஒரு வெற்றிக்குப் பின்னால் எத்தனையோவிதமான வலிகள், தோல்விகள், அவமானங்கள், இழப்புகள், பழிச்சொற்கள், வெறுப்புகள், வேதனைகள், அழுகைகள் – என பல்வேறு விதமான “வாழ்க்கை அழுத்தங்கள்” பதுங்கிக்கொண்டுள்ளன. இதனை முறையாகப் புரிந்துகொண்டால் கவலைகளை கைக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. எந்தச் செயலையும் வெற்றிப் பயணமாக மாற்றிக்கொள்ளலாம்.

  இது ஒரு உண்மை நிகழ்ச்சி.

  பீட்டர் ஒரு கல்லூரி மாணவன்.

  இளமை ஊஞ்சலாடும் காலம்.

  தனது எண்ணத்திற்கு மாறாக யார் நடந்துகொண்டாலும் அவனுக்கு அளவில்லாத கோபம் உடனே வந்துவிடும். இதனால், நண்பர்களாக இருந்தவர்களில் பலர் விலகிச் சென்றார்கள். உதவி செய்தவர்கள்கூட தூரவிலகிப் போனார்கள். வீட்டில் வீணான பிரச்சினைகள் உருவானது. இருந்தபோதும், அவன் தனது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை.

  “கோபம் வந்தால், நான் என்ன செய்வேன் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி தனது கோபத்தை வரமாக நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான். அந்த வரம் இவனுக்கு ஒரு சாபமாக இருப்பது அவனுக்குப் புரியவில்லை.

  “பீட்டர் நீ அடிக்கடி கோபப்படுகிறாய். உனது கோபம் உனக்கு நல்லதல்ல. நாங்கள் உயிரோடு இருக்கும்வரை எங்களிடம் கோபப்பட்டுக்கொள். நீ என் பிள்ளையாக இருப்பதால், பொறுத்துக்கொள்கிறேன்” – என்று அம்மாவும், பீட்டரின் கோபக்கனலைத் தாங்க முடியாமல் தத்தளித்து சொன்னாள்.

  ஒருநாள் பீட்டரின் தந்தை அவனைத் தனியாக அழைத்தார்.

  “நான் சொல்வதை கொஞ்சம் காதுகொடுத்துக் கேள். உன்னிடம் ஒரு சுத்தியலும், நிறைய ஆணிகளையும் தருகிறேன். இதனை பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் நமது வீட்டின் பின் சுவரில் ஒரு ஆணியை சுத்தியலால் அடித்துக்கொள்” என்று சொன்னார் அப்பா.

  “நான் ஏன் ஆணி அடிக்க வேண்டும்?” கேட்டான் பீட்டர்.

  “உனது கோபத்தை குறைப்பதற்காகத்தான் இப்படியொரு ஏற்பாடு” என்று சிரித்துக்கொண்டார்.

  “நான் எங்கே கோபப்படுகிறேன்?. சும்மா அமைதியாக இருக்கிறேன்” என்று பீட்டர் அப்பாவிடம் சொன்னான்.

  “நீ கோபப்படும்போதெல்லாம் சுவற்றில் ஒரு ஆணி அடி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அப்பா.

  ஒருவாரம் கழிந்தது.

  பீட்டர் ஒரு நேர்மையான இளைஞன் என்பதால், அப்பா சொன்னதை தப்பாமல் செய்தான்.

  ஒரு மாதத்திற்குப்பின் வீட்டின் பின்சுவரில் அடிக்கப்பட்ட ஆணிகள் எத்தனை? என பீட்டரும், அவனது அப்பாவும் எண்ணிப் பார்த்தார்கள். 44 ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன.

  “சரி பரவாயில்லை. ஒரு வாரத்தில் 44 ஆணிகளை நீ அடித்துவிட்டாய். இனி உனக்கு கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி எடுத்துவிடு” என்று சொன்னார்.

  ஒருமாதம் முடிந்தது. சுவரிலுள்ள ஆணிகள் அனைத்தையும் பிடுங்கிவிட்டான் பீட்டர்.

  “அப்பா… நீங்கள் சொன்னதுபோல நான் கோபத்தை நிறுத்திவிட்டேன். சுவரில் வந்து பாருங்கள். அத்தனை ஆணிகளையும் பிடுங்கிவிட்டேன்” என்று மகிழ்ந்தான்.

  “ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். அந்த ஆணிகள் ஏற்படுத்திய ஓட்டைகளை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் அப்பா.

  திடுக்கிட்டு விழித்தான் பீட்டர்.

  “ஆணி அடிக்கப்பட்ட நம் வீட்டு சுவற்றில் ஆணியை எடுத்தப்பின்பும், ஆணி அடித்த இடங்களில் வடுக்கள் இருக்கிறதல்லவா? இதைப்போலவே, நீ கோபப்படும்போது பலரது மனதை காயப்படுத்தி இருப்பாய். அந்தக் காயம் வடுவாக அவர்களது மனதில் என்றும் நிலைத்திருக்கும். நீ வேண்டுமென்றால் மறந்துவிடலாம். ஆனால், காயம்பட்டவர்கள் மனம் புண்பட்டுபோய்விடுமல்லவா?” என்று சொன்னார் அப்பா.

  பீட்டர் தனது அப்பாவின் கால்களில் விழுந்தான்.

  “என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. உங்களையும், அம்மாவையும் நான் கோபப்பட்டு காயப்படுத்தியிருந்தால், இன்றே என்னை மன்னியுங்கள். இனிமேல் நான் உங்கள் சொற்படி நடப்பேன். இனிவரும் காலத்தில் யாரிடமும் கோபப்படமாட்டேன். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன்” – என்று உறுதியோடு சொன்னான் பீட்டர்.

  அப்பா மகிழ்ந்தார்.

  பீட்டரின் வாழ்க்கை நிகழ்வைப்போலவே பலரது வாழ்க்கையிலும் கோபப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றத்தான் செய்யும். இந்தப் கோபம் பல நேரங்களில் வெற்றிப் பாதையில் தடைக்கற்களாக அமைந்துவிடுகிறது. இந்தத் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் முயற்சியில் நாள்தோறும் ஈடுபட்டால், கோபம் கோபித்துக்கொண்டு ஓடிவிடும்.

  இந்தக் கோபத்தை குறைப்பது எப்படி?

  எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் அமைதியைக் கடைபிடியுங்கள். ஒருவர் நம்மீது கோபப்பட்டால் உடனே பதில் பேசாமல் மௌனம் காக்க பழகிக்கொண்டால், எதிர்விளைவுகள் இல்லாமல் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், எப்போதும் ‘உம்’மென்று முகத்தை வைத்துக்கொண்டு, “நான் கோபப்படவில்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்தால், கேட்பவர்கள் மனதில் இன்னும் அதிகக் கோபம் உருவாக வாய்ப்பு இருக்கிறது அல்லவா?.

  நம்மீது கோபம் கொள்பவர்களிடம் அமைதி காப்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக, “கோபத்தை வெல்லும் ஆற்றல் நம்மோடு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு இது” என்பதை புரிந்துகொண்டால், எந்தக் கோபத்தையும் எளிதில் வெல்லலாம். கோபமாக பேசும் சூழல் ஏற்பட்டால் கோபப்படுவதற்கு முன்பே, அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்வது நல்லது. வீணாக வார்த்தைகளைக்கொட்டி கோப உணர்ச்சியை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு எதிர்பேச்சை குறைத்துக்கொள்வது பாதுகாப்பான செயலாகும்.

  கோபப்படுவதன்மூலம் பலர் நிதானத்தை இழந்துவிடுகிறார்கள். தனக்கு வருகின்ற நன்மைகளை தள்ளிப்போடும் நிலையையும் உருவாக்கிவிடுகிறார்கள். பொதுவாக – எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலை ஏற்படும்போது கோபம் கொப்பளிக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்துபோய்விடுகிறது. பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் ஏமாற்றங்கள் உருவானாலும், அவை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.

  பயம், கண்ணீர் வடித்தல், கவலையோடு இருத்தல், எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் இருத்தல் – போன்றவைகள் “கோப உணர்வுகளின் வெளிப்பாடு” என்பதை புரிந்துகொள்வதன்மூலம் கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

  எவ்வளவோ முறை நம்மோடு சிரித்துப் பழகிய உறவினர்களும், நண்பர்களும் ஒரு சிறிய தவறு செய்தால்கூட “கோபம்” என்னும் உணர்வை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தும்போது முதலில் பாதிக்கப்படுவது நமது உடல்நிலைதான். இதனால், தேவையற்ற எண்ணங்கள் உருவாகும். அங்கங்கே உடல் வலிகள் ஏற்படும். நமது சிந்தனையும் சின்னாப்பின்னமாய்ப் போய்விடும்.

  எனவே, வெற்றி பெற விரும்புபவர்கள் கோப உணர்வை கட்டுக்குள் வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். எந்தவொரு பழக்கத்தையும் வழக்கமாகக்கொண்டால், அது பழக்கவழக்கமாக மாறிவிடுவதைப்போல கோப உணர்வை குறைக்கவும் பழகிக்கொள்வோம்.

  கோபத்தைக் குறைப்போம். வெற்றிகள் குவிப்போம்.

  தொடரும்.

  இந்த இதழை மேலும்

  மாமரத்தில் கொய்யாப்பழம்

  இவற்றைப் பார்க்கும், கேட்கும், படிக்கும் மக்கள் மனம்  இதையே சிந்திக்கிறது. அந்த நாடுகளில் மக்கள் குற்றங்களே செய்வதில்லையா, செய்கிறார்கள்.

  அனால், அவை செய்திகளாக்கப்படுவதில்லை, இங்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் கவனத்தை திசை திருப்பவே பல செய்திகள் ஜோடிக்கப்பட்டு உலா வருகின்றன.

  காரணம் மக்கள் தான்.

  நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஏதோ அவ்வப்போது எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற இலவசக் கனவுகளின் எதிர்பார்பில் கட்டெறும்பைக் கவனித்துக் கொண்டு யானைகளைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

  அடிப்படையில் நமது உரிமைகள் என்ன கடமைகள் என்ன என்பது கூடப் பெரும் பாலானவர்களுக்கு முழுமையாகத் தெரியாது.

  நம்மோடு வாழும், நம்மை ஆள்பவர்கள் என்ன செய்கிறார்களோ, அதுவே கடமை, உரிமை என அவர்களைக் காப்பியடிக்கும் மனோபாவம் மோலோங்கி விட்டதால், சகிப்புத் தன்மையின் தலைமகனாக இன்று இருக்கிறோம்.

  அண்டை மாநிலங்களில் லஞ்சம், ஊழல் குறித்த மக்களின் விழிப்புணர்வு, நமக்கு நிச்சியமாக இல்லை.

  குழந்தை பிறந்தாலும் லஞ்சம், இறந்தாலும் அடக்கம் செய்யுமிடத்திலும் லஞ்சம், எங்கெங்கு காணினும் லஞ்சமோ லஞ்சம் என்று வெறுப்புடன் சொல்லுமளவு இன்று புரையோடி விட்டது.

  லஞ்சத்துக்கு ஏராளமான செல்லப் பெயர்களை வைத்துக் கொண்டோம். தன்மானம் என்ன என்பதை இதனால் மறந்து, இழந்து விட்டோம்.

  தனியார் மருத்துவமனையில் குழந்தைப்பேறு, பெரிய தொகைக்கு பில் ; செலுத்தி வெளியே வரும் போது டிப்ஸ் என்ற பெயரில் கடைநிலை பணியாளர்களை கவனிக்க வேண்டும், இதை அன்பளிப்பு என்றும் சொல்லலாம்.

  இதுபோல் பல; பட்டியல் வேண்டாம். காற்று இலவசம் என பெட்ரோல் நிலையங்களில் போர்டுகள் உள்ளன.

  வாகனங்களுக்கு காற்றுபிடிப்பவர்கள் சிலர் இனாம் தந்து, அந்த சேவையை செய்பவர்கள் மனதை களங்கப்படுத்துகிறார்கள். இதனால், எல்லோரிடமும் எதிர்பார்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

  இன்று பெரிய பெரிய உணவகங்கள், தங்கும் விடுதிகள் என எல்லா இடங்களிலும் ஏன் விமான நிலையங்களில் இலவச சக்கர நாற்காலி சேவை என்று சொல்லிக் கொண்டு எதையாவது எதிர் பார்க்கும் பிச்சை மன நிலையில் பலரைப் பார்த்து வருத்தப்படும் நிலை நீடிக்கிறது.

  இவர்களுக்கு சம்பளம் கிடையாதா என்றால் சம்பளம் உண்டு. டிப்ஸ் என்று தருபவர்கள் சிலர் சொல்வது : இன்று பல கல்லூரி மாணாக்கர் பகுதி நேரப் பணியாக நம்மூர்களிலும் பல வணிக நிறுவனங்களில் பணிபுரிவதால் அவர்களுக்கு உதவும் நோக்கம் தான் என்று.

  நோக்கம்  சிறந்தது ; செயல்பாடு தவறானது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அந்த நிறுவன உரிமையாளர்களும் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

  டிப்ஸ் கிடையாது என்பதும், அன்பளிப்பு கொடுப்பவர்கள் பொதுவான  உண்டியலில் போடலாம் என்ற நடை முறையும், தனிநபர் மனதில் எதிர் பார்க்கும் இலவச எண்ணத்தை உண்டாக்காது.

  இன்றும் சில உணவகங்களில், சேவை உணர்வுடன், ஊதியமின்றி, கனிவுடன் பணியாற்றும் நல்ல உள்ளங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  எதுவும் இந்த உலகில் இலவசமாகக் கிடைக்காது. இயற்கை வழங்கிய நீர், காற்று இரண்டு மட்டுமே இலவசம் என்ற திட மனம் தேவை.

  உழைப்பதால் பெறும் ஊதியத்துக்குள் உயிர் வாழும் பக்குவம் வந்து விட்டால், மாமரத்தில் கொய்யாப் பழத்தை எதிர்பார்க்கும் மனநிலை உருவாகாது. அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

  ஊதியம் பெற உழைப்பு;  உழைப்பதற்கான அடிப்படை கல்வி. கல்வியறிவு என்பது இன்று கட்டாயம் தேவை. எந்தப் பணிக்கும் கல்வித் தகுதி தான் அடிப்படை.

  முன்பு வர்ணாசிரம வாழ்க்கை முறையில் தொழில்களை பெற்றோருடன் சென்று, பார்த்து கற்று. வம்சாவளியாக தொழில் செய்தனர்.

  இன்று நிலை மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம்.

  தொழிற்கல்வி என்ற வகையில் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆடிட்டர்கள் போன்றவைகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பலவிதமான தொழில் பிரிவுகளுக்கான பயிற்சிகளும், ஐடிஐ எனப்படும் தொழிற் பயிற்சி நிலையங்களில் அடிப்படை, அத்தியாவசியப்பட்ட தொழில்களுக்கான பயிற்சிகளும் போதிக்கப்படுகின்றன.

  இன்று படிப்புக்கும் பார்க்கும் பணிக்கும் சம்பந்தமில்லாத சூழல் உருவாகி விட்டது.  பணியை விளைச்சல் என்று சொன்னால், படிப்பை விளை நிலத்தைப் பண்படுத்துதல் என்று தான் கூற வேண்டும்.

  பண்படுத்துதல் என்பதிலேயே பண்பாடு வந்து விட்டது. பண்பாடு என்பதை கலாச்சாரம் என்றும் சொல்லலாம்.

  கலாச்சாரம் என்பதை கலை மற்றும் ஆச்சாரம் என்று கூறலாம். ஆய கலைகள் 64 எனப் படித்திருக்கலாம்.

  அவை முற்கால வேதங்கள் உள்ளிட்ட அனைத்து சாத்திரங்களும்( புராணங்கள் இதிகாசங்கள் உள்ளிட்டவை) போர் பயிற்சிகளும் ஆகும்.

  அந்த இலக்கியங்களில் மனிதன் வளர்க்கப்பட வேண்டிய முறைகள், வாழ வேண்டிய முறைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

  அன்று மக்கள் தொகை குறைவு ; விஞ்ஞான முன்னேற்றமில்லை. இயற்கையை மதித்து வணங்கி வாழ்ந்தனர். போட்டி, பொறாமை, ஒப்பீடுகள் கிடையாது.

  பெரியோர்களது வாழ்க்கை முறையே இளையோர்களால் தொடரப்பட்டது. நிலத்தைப் பண்படுத்துதல் போல மனத்தைப் பண்படுத்தினர். உண்மையான இறைபக்தி இருந்தது. தொழில் செய்ததை இறை வழிபாடாகவே செய்தனர்.

  கடுமையான உழைப்புக்கு இணை ஏதுமில்லை என்றே வாழ்ந்து மகிழ்ந்தனர். இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்ந்தனர்.

  தேவைகளைப் பெற உழைத்தனர் இலவசம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.  முதல் பாடம் பெரியோருக்கு மரியாதை குழந்தைப் பருவத்தில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா எனக் குறும்புகள் பல செய்தாலும் கற்றல் பருவத்தில் குரு( ஆசான்) வின் உபதேசப் படி பெற்றோரையும், பெரியோர்களையும் வணங்கி ஆசிகள் பெற்றனர்.

  இதனால் பணிவு இயல்பானது. பணிவுடைய மனதிலிருந்து இனிய சொற்களே வெளி வந்தன. சும்மா என்ற வார்த்தை அன்று இல்லை.

  பேசிய ஒவ்வொரு பேச்சும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. பெற்றோரின் தொழிலை குழந்தைகள் செய்ததால் படிப்பு என்பது நல்ல பண்புகள், இயற்கையின் பரிணாம வளர்ச்சி என்பதாக இருந்தது.

  தொடரும்

  இந்த இதழை மேலும்