Home » Articles » இங்கு… இவர்… இப்படி…

 
இங்கு… இவர்… இப்படி…


ஆசிரியர் குழு
Author:

முனைவர் கோ. தேவி

தாய்மடி அறக்கட்டளை

சங்ககிரி, சேலம்.

என்னால் கர்ப்பமடைந்து தாயாக முடியாதுஆனால் எண்ணற்ற ஆதரவற்ற மக்கள் மீது அன்பு கொண்டால் அவர்களுக்கு தாயாகி தாய்மையை உணரலாம்…

ஆண்மையின் வீரமும்

பெண்மையின் ஈரமும்

பிணைந்துப் புரளுது

உணிரொன்றின் பிறப்பினில்

கண்ணாகப் பிறந்தினும்- இவள்

காலத்தின் கோலத்தில்

கன்னியான கண்ணாகியே

என மகிழினி எனும் இளம் கவிஞர் இடையினம் எனும் தலைப்பில் திருநங்கையருக்கு புகழாரம் சூட்டுகிறார். கவிஞரின் கவித்துளிகளுக்கு உயிர் நுட்பம் தந்திட எண்ணற்ற திருநங்கையர்கள் இன்று காவல் துறை அதிகாரிகளாகவும், செய்தி வாசிப்பாளராகவும்,  எழுத்தாளர்களாகவும், நாடக நடிகர்களாகவும் தங்களை  அடையாளப்படுத்தி வருகிறார்கள். மேற்குறிப்பிட்டவர்கள் வரிசையில் தான் தான் தாய்மையடைய முடியா படைப்பினிலும் தாய்மையை உணர்ந்து தாயாக வாழும் ஆதரவற்றோர்களின் அன்னை முனைவர் கோ. தேவி அவர்களின் சேவைப் பயணத்தை பற்றிப் பார்ப்போம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம்  காளிகவுண்டன் பாளையம் என்னும் ஊரிலுள்ள அரண்மனைக்காடு எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். இவர் கோவிந்தன் முத்துப்பிள்ளை தம்பதியருக்கு  மூன்றாவது  ஆண் குழந்தையாகப் பிறந்தவர்.  பிறந்த ஒரு வருடத்திலேயே இவரின் தந்தை இறந்து விட்டார்.  இதனால் அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஒரு வேலை உணவுக்காகவே பள்ளிக்குப் படிக்க பள்ளிச் சென்றார்.

ஏழ்மையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். அப்போது தான் உடலால் ஆணாகவும்  மனதால் பெண்ணாகவும் இருப்பதை அவராலே உணர முடிந்தது. இதை அவரால் வெறும் உணர்வாகவே பார்க்க முடியவில்லை. உள்ளத்தாலும் உடலாலும் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒரு முழு பெண்ணாகவே தன்னை மாற்றிக் கொண்டார்.

சில திருநங்கைகள் தங்கள் வீட்டிலும் ஆதரவின்றி, சமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்டு சூழலில் வேறு விதமான வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்தி வருவார்கள். அதை இவர் முற்றிலும் தவிர்த்தார். இதனால் ஆதரவற்று வறுமையில் வாடும் முதியவர்களையும், ஏழை எளியவர்களையும் தேடி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தார். அதன் பிறகு தாய் என்ற திருநங்கைகளுக்கான சேவை அமைப்பில் தன்னை இணைந்து கொண்டார். பிறகு இத்திட்டத்தால் உருவாக்கப்பட்ட தாய் விழுதுகள் என்ற திருநங்கைகளுக்கான சமூக அமைப்பில் சேலம் ஈரோடு, நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதல் தலைவியாகப் பொறுப்பேற்று தாய் விழுதுகள் அமைப்பை வழிநடத்தினார்.  2007  ஆண்டு தாய் திட்டத்தின் மாநில பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் இவர் வெற்றி பெற்று மாநில பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் மற்றும் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு  பயிற்சியாளராக பணியாற்றி பல திருநங்கைகளை மீட்டுள்ளார்.

பிறந்த நாளிலிருந்து வறுமையில் வாடிய தேவி தன் வாழ்நாளில் சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கு ஒரு காப்பகம் கட்ட எண்ணி  தான் சேமித்த வைத்த பணத்தால் சொந்தமாக நிலம் வாங்கி அதில் குடிû ஒன்றை அமைத்து ஆதரவற்றோர்களை பல நாட்களாக பாதுகாத்து வந்த தேவி தான் பயணித்து பெற்ற பட்டறிவை கொண்டு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 நாள் தாய் மடி  என்ற  சமுக அமைப்பினை முறைப்படி பதிவு செய்து தனது கனவினை நனவாக்கி தாயாக முடியா நிலையினை உடைத்து பலருக்கு தாயாக தாய் மடியை உருவாக்கினார்.

தாய் மடி அறக்கட்டளையின் வளர்ச்சியாக குடிசையை மாற்றி  100 நபர்கள் தங்கும் அளவிற்கு காப்பகம் கட்ட தான் சேமித்த பணம் தாயின் நகை மற்றம் நன்கொடையாக வந்த பணத்தையும் கொண்டு இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடித்து 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தன் வயதான குழந்தைகளோடு ஓலக்குடிசையில் இருந்து குடியோறி தனது இலக்கை அடைந்தார்.

தாய்மடி அறக்கட்டளையில் 100 நபர்கள் வரை  உணவுண்டு பசியாறி பயனடைந்து வருகின்றனர். 20 ஆதரவற்ற முதியவர்கள் முழுமையாக தங்கி காப்பகத்தில் திருநங்கை தேவி காக்கப்படுகின்றனர்.

சமூக சேவையைத் தொடர்ந்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்  என்ற முழக்கத்தோடு ஆன்மீகத்தில் வெள்ளை வெளிச்சமாய் புரட்சி  செய்து வள்ளலாரின் வழியில் பட்டத்தரசி கோப்பெருந்தேவிக்கு ஆலயம்  அமைத்து அமுத சுரபியை நிறுவி மாதந்தோறும் முழுநிலவு அன்று வறுமையில் வாடும் ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை வழங்கியும், கல்வி கற்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கியும், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மரக்கன்றுகள் வழங்குதல், சிறு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிதிருத்தி, குளிக்க வைத்து புது ஆடை அணிய செய்து உணவளித்து என தாய்மடியின் சேவைகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது.

தாயிக்கு தாயாகவும் ஆதரவற்றோருக்கு அன்னையாகவும் விளக்கும் திருநங்கையை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment