Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 6

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 6


ஞானசேகரன் தே
Author:

வாழ்க்கையில் மகத்தான வெற்றிபெறுவதற்கான 1% தீர்வு (The 1% Solution For Work and Life)

இந்நூலின் ஆசிரியர் டாம் கானல்லன் (Thomas K. Connellan) ஆவார். (தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) இந்நூல் வெற்றிபெற்றவருக்கும் தோல்வியடைபவருக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டும்தான் என்றும் ஒருவர் மேற்கொள்ளும் எந்த விஷயத்திலும் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்த முயன்றால் அது சிறந்த துவக்கப்புள்ளியாக இருந்து அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தவல்லவை என்றும் டாம் கானல்லன் கூறுகிறார்.

வெற்றியாளர்கள் ஒருபோதும் பிறரைவிட 100 சதவீதம் மேலானவர்களாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் பல விஜயங்களில் மற்றவர்களைவிட 1 சதவீதம் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் ஓட்டப்பந்தய வீரர், பதக்கம் எதுவும் பெறாத, நான்காவது இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிக வேகமாக ஓடிவந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேள்வி கேட்டு அதற்கான ஆதாரங்களை நிறைய இந்நூல் காட்டுகின்றது. அவற்றில் ஒன்றிரண்டு வருமாறு. 2008ல் பிஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட எட்டுப்பேரில் முதலாவது வந்த மைக்கேல் எடுத்துக்கொண்ட நேரம் 50.58 நொடிகள், இரண்டாவது வந்த மிலோரடு எடுத்துக்கொண்ட நேரம் 50.59 நொடிகள். ஆமாம் மைக்கேல் 1 நொடியில் நூற்றில் ஒரு பங்கு நேர இடைவெளியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது வரலாறு. அந்த வேகத்தில் உங்களால் கண்களை மூடித் திறக்கக்கூட முடியாது. தங்கப் பதக்கத்திற்கும், வெள்ளிப் பதக்கத்திற்கும் இடையே இருந்த இடைவெளி 0.002 சதவீதம் மட்டும்தான். அதேபோல 1990ல் நடந்த அயர்ன்மேன் போட்டி 2.4 மைல் நீந்துதல், 112 மைல் சைக்கிள் ஓட்டுதல், 26 மைல் ஓடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய கடுமையான போட்டி. இதில் வெற்றிபெற்ற பின்லாந்து நாட்டு வீரர் பாலி கிர்விற்கும், இரண்டாவதாக வந்த அமெரிக்க வீரர் கென்கிளாவிற்கும் இடையே உண்மையில் ஒரே ஒரு நொடி இடைவெளிதான் இருந்தது. இவ்வாறு வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே அமையும் ஒரு சதவீதத்தை இந்த நூல் 1 சதவீதத் தீர்வு என்று குறிப்பிடுகிறது.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு துறையில் வெற்றிபெற அதாவது சில்லறை விற்பனை, கணினித்துறை, நிதித்துறை, இசை, இலக்கியம், சதுரங்கம் என்று எதுவாக இருந்தாலும் இந்த ஒரு சதவீதம் பெரிய வெற்றியைத் தரும். ஆனால் இதனை அடைய ஒருவர் 10,000 மணிநேரம் பிரக்ஞையுடான பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது ஒரு துறையில் வல்லுநராக ஆக; 10,000 மணிநேரம் பயிற்சி தேவை என்கின்றது இந்நூல். 1 சதவீதம் மாற்றத்திற்கு பத்தாயிரம் மணிநேரம் பயிற்சியா என்று வியப்பு ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மையும்கூட. இதுவரை பெரிய வெற்றியைப் பெற்றுள்ள வெற்றியாளர்கள் பலரும் இந்தப் பத்தாயிரம் மணிநேரத்தைக் கடந்தவர்கள்தான். நீங்கள் ஏதேனும் ஒன்றில் திறமை படைத்தவராக ஆக விரும்பினால் தொடர்ச்சியான பயிற்சியால் மட்டுமே அதை உங்களால் சாதிக்க முடியும். அதுவும் தலைசிறந்தவர்களில் தலைசிறந்தவராக ஆக வேண்டும் என்றால்; நீங்கள் 10,000 மணிநேரம் பயிற்சி செய்துதான் ஆக வேண்டும். பல்வேறு ஆய்வுகள் இந்த முடிவை நிரூபிக்கின்றன என்றும் டாம் கானல்லன் சொல்கிறார்.

ஆன்டர்ஸ் எரிக்ஸன் என்ற ஓர் உளவியல் அறிஞர் இசைப்பள்ளியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களை ஆய்வு செய்து மூன்று வகையாகப் பிரித்தார்.

  1. பெரிய நட்சத்திரங்களாக ஆகவிருந்த மாணவர்கள்.
  2. உண்மையிலேயே மிகச்சிறப்பாக வயலினை வாசிக்கவும் தொழிலாகவும் கொள்ளவல்லவர்கள்.
  3. ஓரளவு சிறப்பாக வாசிக்கவல்லவர்கள்; அதாவது வயலின் ஆசிரியராக ஆகும் வல்லமை பெற்றவர்கள்.

இந்த மூன்று வகையினருக்கும் இடையே அவர்கள் கண்டுபிடித்த ஒரே வேறுபாடு என்னவென்று நினைக்கிறீர்கள்? இசைப் பயிற்சிக்கு அவர்கள் செலவிட்ட நேரம்தான். பிறருக்குக் கற்றுக் கொடுக்கப் போதுமான அளவு சிறப்பாக வாசித்தவர்கள் சுமார் 4,000 மணிநேரம் பயிற்சி செய்தனர். உண்மையிலேயே சிறப்பாக வாசிக்கவும், தொழிலாகவும் ஆக்கிக் கொள்ளவும் வல்லவர்கள் 8000 மணிநேரம் பயிற்சி செய்தனர். தனி ஆவர்த்தனம் செய்யும் அளவுக்குத் தலைசிறந்த கலைஞர்களாக ஆனவர்கள் பயிற்சி செய்த நேரம் 10,000க்கும் மேலானதாக இருந்தது. வெறுமனே பயிற்சி இல்லாமல் திறமை படைத்த ஒருவரைக்கூட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கவில்லை என்று ஆன்டர்ஸ் எரிக்ஸன் குறிப்பிடுகிறார்.

பில்கேட்ஸ் போன்ற வெற்றியாளர்கள் கூட, இந்தப் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்தான். பில்கேட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது; நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் ஒரு பல்கலைக்கழகத்தின் கணினிகளில் புரோகிராமிங் செய்யக் கற்றுக்கொண்டார். காலையில் அவரை எழுப்புவது ஏன் அவ்வளவு கடினமாக இருந்தது என்று அவருடைய பெற்றோர் வியந்தனர்! அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைவிட்டு விலகியபோது புரோகிராம் செய்வதில் 10,000 மணிநேரத்தை அவர் ஏற்கனவே செலவிட்டிருந்தார். இவ்வுலகிலுள்ள மற்ற எவரொருவரையும்விட அவர் மிக அதிகமாகப் பயிற்சி செய்திருந்தார். இவ்வாறான பயிற்சிதான் பில்கேட்ஸ்ஸின் பெரிய வெற்றிக்குத் துணையாக இருந்தது என்று பத்தாயிரம் மணிநேரப் பயிற்சிக்கு பில்கேட்ஸ் உதாரணமாக இந்நூலில் சுட்டிக்காட்டப்படுகிறார். பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை நிறுவியபோது அவருக்கு வயது 20தான். இந்த இடத்தில் ஏ.ஆர் ரகுமான் ரோஜா சினிமாப் படத்திற்கு இசையமைத்து ஒரே நாளில் வெற்றிபெற்றபோது அவருக்கு வயது 16தான். ஆனால் அவர் தனது ஏழு வயதிலிருந்து இசைப்பயிற்சி மேற்கொண்டார் என்பதை நாம் இங்கே நினையலாம். அவர் இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பே 10,000 மணிநேரத்தை இசை கற்பதில் பயிற்சி பெற்றார் என்பதை நாம் இங்கு நினையலாம். அதனால்தான் அவரால் ஆஸ்கார் விருது வரை கால் பதிக்க முடிந்தது. இசையமைப்பாளர் இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசையமைப்பதற்கு முன்னே, இசைத் துறையில் 10,000 மணிநேரத்திற்குமேல் உழைத்திருந்தார் என்பதை நாம் இங்கே மனதில் பதிய வைக்கலாம்.

ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து உழைக்கத் தொடங்கும்போது; நமது இலக்குகள் குறித்த தெளிவு வேண்டும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள்; எதை விரும்பவில்லை என்பது குறித்து நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். இதில் அடிப்படையாக இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது; சரியான செயல்களைச் செய்வது, இரண்டாவது விஜயங்களைத் திறமையான முறையில் செய்வது.

முதலில், செய்வதற்குச் சரியான செயல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது, அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களைத் திறமையான முறையில் செய்ய வேண்டும். இதை வேறுவிதமாக இப்படியும் கூறலாம். நீங்கள் செய்யத் தேவையே இல்லாத ஒரு காரியத்தை மிகத் திறமையாகச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இலக்குகளை நோக்கிய பாதையில் சில சவால்கள் இருக்கும்; ஒரு செயலைச் செய்வதற்கு 30 நாள்கள் தொடர்ந்து ஒரு பழக்கத்தை மேற்கொண்டால் அது இலகுவாகிவிடும். நாம் செய்கிற பணி பல் துலக்குவதுபோல; நம்முடன் இயல்பான ஒன்றாக மாறிவிட வேண்டும். அப்படியான ஒரு பழக்கத்திற்குள் நம் இலக்கின் பயணத்தை அமைத்துக்கொண்டால் வெற்றி எளிதாகிவிடும். இலக்கில் தோற்றுவிட்டால் என்ன ஆகும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, இதில் நீங்கள் வெற்றிபெறும்போது நீங்கள் எவ்வளவு சிறப்பாக உணர்வீர்கள் என்பதன்மீது உங்கள் கவனத்தைக் குவியுங்கள். ஒரு நேரத்தில் ஒரு பழக்கத்தை மட்டுமே கையாள்வது நீங்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்களை உங்களுக்குக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, உடலின் எடையைக் குறைக்க எண்ணுபவர் முப்பதுநாள் பயிற்சியில் எடையைக் குறைக்கும் முயற்சியில் வெற்றிபெற வாயப்புண்டு.

இலக்கில் வெற்றிபெற கடைப்பிடிக்கும் பழக்கங்கள்

  • ஒவ்வொரு நாளும், ஒருமித்தக் கவனத்துடன் வேலை செய்வதற்கென்று ஒரு                குறிப்பிட்ட நேரம், ஒரு சிறு ஓய்விற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம் என்று,        வேலையும் ஓய்வும் மாற்றி மாற்றிச் சுழற்சி முறையில் வரும் விதத்தில் அந்த      நாள் முழுவதையும் திட்டமிட வேண்டும்.
  • ஒரு சமயத்தில் 90 நிமிடங்கள் ஒருமித்தக் கவனம் செலுத்தி வேலை               செய்யுங்கள். நாளின் இடையிடையே ஓய்வு வேலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு வாரமும், உங்களுடைய ஓய்வு இடைவேளைகளில் குறைந்தபட்சம்         மூன்று இடைவேளைகளை 20 நிமிட உடற்பயிற்சி வேளையாக அமைத்துக்கொள்ளுங்கள்.
  • பகலில் 10லிருந்து 20 நிமிடங்கள் வரை ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள்.
  • ஒவ்வோர் இரவு குறைந்தபட்சம் 8 மணிநேரம் தூங்குங்கள்.
  • குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் உல்லாச விடுமுறைகளை      மேற்கொள்ளுங்கள்.

ஓர் இலக்கை நிர்ணயிப்பதும், அதன்மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதும் முக்கியம்தான். ஆனால் அந்த இலக்கை ஒரு நேரத்தில் ஒரு நடவடிக்கை என்ற முறையில்தான் அடையமுடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். ஆனால் நிகழ்காலத்தில் உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுங்கள். உங்கள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாகத் திகழ ஒரே நேரத்தில் முயற்சிக்காதீர்கள். முதலில் ஒரு பகுதியில் 1 சதவீதம் சிறப்புறுவதற்கு முயற்சித்து, அதில் உங்கள் மேம்பாட்டை உறுதிசெய்து கொள்ளுங்கள். பிறகு இன்னொரு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மீது நடவடிக்கை எடுங்கள். விரைவில் 1 சதவீதம் மேம்படுவது உங்களுடைய இயல்பாக மாறிவிடும் என்கின்றார் டாம் கானல்லன்.

சின்னச் சின்ன விஜயங்கள் பலவற்றில் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் எப்படி நிரந்தரமான, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் எளிமையான முறையில் விளக்குகிறது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, எளிதாகச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டும்; அவ்வளவுதான். நீங்கள் அப்படிச் செய்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் விளைவுகள் உங்களை பிரமிக்க வைக்கும் என்பது உறுதி.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment