Home » Articles » மாமரத்தில் கொய்யாப்பழம்

 
மாமரத்தில் கொய்யாப்பழம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இவற்றைப் பார்க்கும், கேட்கும், படிக்கும் மக்கள் மனம்  இதையே சிந்திக்கிறது. அந்த நாடுகளில் மக்கள் குற்றங்களே செய்வதில்லையா, செய்கிறார்கள்.

அனால், அவை செய்திகளாக்கப்படுவதில்லை, இங்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் கவனத்தை திசை திருப்பவே பல செய்திகள் ஜோடிக்கப்பட்டு உலா வருகின்றன.

காரணம் மக்கள் தான்.

நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஏதோ அவ்வப்போது எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற இலவசக் கனவுகளின் எதிர்பார்பில் கட்டெறும்பைக் கவனித்துக் கொண்டு யானைகளைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

அடிப்படையில் நமது உரிமைகள் என்ன கடமைகள் என்ன என்பது கூடப் பெரும் பாலானவர்களுக்கு முழுமையாகத் தெரியாது.

நம்மோடு வாழும், நம்மை ஆள்பவர்கள் என்ன செய்கிறார்களோ, அதுவே கடமை, உரிமை என அவர்களைக் காப்பியடிக்கும் மனோபாவம் மோலோங்கி விட்டதால், சகிப்புத் தன்மையின் தலைமகனாக இன்று இருக்கிறோம்.

அண்டை மாநிலங்களில் லஞ்சம், ஊழல் குறித்த மக்களின் விழிப்புணர்வு, நமக்கு நிச்சியமாக இல்லை.

குழந்தை பிறந்தாலும் லஞ்சம், இறந்தாலும் அடக்கம் செய்யுமிடத்திலும் லஞ்சம், எங்கெங்கு காணினும் லஞ்சமோ லஞ்சம் என்று வெறுப்புடன் சொல்லுமளவு இன்று புரையோடி விட்டது.

லஞ்சத்துக்கு ஏராளமான செல்லப் பெயர்களை வைத்துக் கொண்டோம். தன்மானம் என்ன என்பதை இதனால் மறந்து, இழந்து விட்டோம்.

தனியார் மருத்துவமனையில் குழந்தைப்பேறு, பெரிய தொகைக்கு பில் ; செலுத்தி வெளியே வரும் போது டிப்ஸ் என்ற பெயரில் கடைநிலை பணியாளர்களை கவனிக்க வேண்டும், இதை அன்பளிப்பு என்றும் சொல்லலாம்.

இதுபோல் பல; பட்டியல் வேண்டாம். காற்று இலவசம் என பெட்ரோல் நிலையங்களில் போர்டுகள் உள்ளன.

வாகனங்களுக்கு காற்றுபிடிப்பவர்கள் சிலர் இனாம் தந்து, அந்த சேவையை செய்பவர்கள் மனதை களங்கப்படுத்துகிறார்கள். இதனால், எல்லோரிடமும் எதிர்பார்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இன்று பெரிய பெரிய உணவகங்கள், தங்கும் விடுதிகள் என எல்லா இடங்களிலும் ஏன் விமான நிலையங்களில் இலவச சக்கர நாற்காலி சேவை என்று சொல்லிக் கொண்டு எதையாவது எதிர் பார்க்கும் பிச்சை மன நிலையில் பலரைப் பார்த்து வருத்தப்படும் நிலை நீடிக்கிறது.

இவர்களுக்கு சம்பளம் கிடையாதா என்றால் சம்பளம் உண்டு. டிப்ஸ் என்று தருபவர்கள் சிலர் சொல்வது : இன்று பல கல்லூரி மாணாக்கர் பகுதி நேரப் பணியாக நம்மூர்களிலும் பல வணிக நிறுவனங்களில் பணிபுரிவதால் அவர்களுக்கு உதவும் நோக்கம் தான் என்று.

நோக்கம்  சிறந்தது ; செயல்பாடு தவறானது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அந்த நிறுவன உரிமையாளர்களும் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

டிப்ஸ் கிடையாது என்பதும், அன்பளிப்பு கொடுப்பவர்கள் பொதுவான  உண்டியலில் போடலாம் என்ற நடை முறையும், தனிநபர் மனதில் எதிர் பார்க்கும் இலவச எண்ணத்தை உண்டாக்காது.

இன்றும் சில உணவகங்களில், சேவை உணர்வுடன், ஊதியமின்றி, கனிவுடன் பணியாற்றும் நல்ல உள்ளங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எதுவும் இந்த உலகில் இலவசமாகக் கிடைக்காது. இயற்கை வழங்கிய நீர், காற்று இரண்டு மட்டுமே இலவசம் என்ற திட மனம் தேவை.

உழைப்பதால் பெறும் ஊதியத்துக்குள் உயிர் வாழும் பக்குவம் வந்து விட்டால், மாமரத்தில் கொய்யாப் பழத்தை எதிர்பார்க்கும் மனநிலை உருவாகாது. அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

ஊதியம் பெற உழைப்பு;  உழைப்பதற்கான அடிப்படை கல்வி. கல்வியறிவு என்பது இன்று கட்டாயம் தேவை. எந்தப் பணிக்கும் கல்வித் தகுதி தான் அடிப்படை.

முன்பு வர்ணாசிரம வாழ்க்கை முறையில் தொழில்களை பெற்றோருடன் சென்று, பார்த்து கற்று. வம்சாவளியாக தொழில் செய்தனர்.

இன்று நிலை மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம்.

தொழிற்கல்வி என்ற வகையில் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆடிட்டர்கள் போன்றவைகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பலவிதமான தொழில் பிரிவுகளுக்கான பயிற்சிகளும், ஐடிஐ எனப்படும் தொழிற் பயிற்சி நிலையங்களில் அடிப்படை, அத்தியாவசியப்பட்ட தொழில்களுக்கான பயிற்சிகளும் போதிக்கப்படுகின்றன.

இன்று படிப்புக்கும் பார்க்கும் பணிக்கும் சம்பந்தமில்லாத சூழல் உருவாகி விட்டது.  பணியை விளைச்சல் என்று சொன்னால், படிப்பை விளை நிலத்தைப் பண்படுத்துதல் என்று தான் கூற வேண்டும்.

பண்படுத்துதல் என்பதிலேயே பண்பாடு வந்து விட்டது. பண்பாடு என்பதை கலாச்சாரம் என்றும் சொல்லலாம்.

கலாச்சாரம் என்பதை கலை மற்றும் ஆச்சாரம் என்று கூறலாம். ஆய கலைகள் 64 எனப் படித்திருக்கலாம்.

அவை முற்கால வேதங்கள் உள்ளிட்ட அனைத்து சாத்திரங்களும்( புராணங்கள் இதிகாசங்கள் உள்ளிட்டவை) போர் பயிற்சிகளும் ஆகும்.

அந்த இலக்கியங்களில் மனிதன் வளர்க்கப்பட வேண்டிய முறைகள், வாழ வேண்டிய முறைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

அன்று மக்கள் தொகை குறைவு ; விஞ்ஞான முன்னேற்றமில்லை. இயற்கையை மதித்து வணங்கி வாழ்ந்தனர். போட்டி, பொறாமை, ஒப்பீடுகள் கிடையாது.

பெரியோர்களது வாழ்க்கை முறையே இளையோர்களால் தொடரப்பட்டது. நிலத்தைப் பண்படுத்துதல் போல மனத்தைப் பண்படுத்தினர். உண்மையான இறைபக்தி இருந்தது. தொழில் செய்ததை இறை வழிபாடாகவே செய்தனர்.

கடுமையான உழைப்புக்கு இணை ஏதுமில்லை என்றே வாழ்ந்து மகிழ்ந்தனர். இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்ந்தனர்.

தேவைகளைப் பெற உழைத்தனர் இலவசம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.  முதல் பாடம் பெரியோருக்கு மரியாதை குழந்தைப் பருவத்தில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா எனக் குறும்புகள் பல செய்தாலும் கற்றல் பருவத்தில் குரு( ஆசான்) வின் உபதேசப் படி பெற்றோரையும், பெரியோர்களையும் வணங்கி ஆசிகள் பெற்றனர்.

இதனால் பணிவு இயல்பானது. பணிவுடைய மனதிலிருந்து இனிய சொற்களே வெளி வந்தன. சும்மா என்ற வார்த்தை அன்று இல்லை.

பேசிய ஒவ்வொரு பேச்சும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. பெற்றோரின் தொழிலை குழந்தைகள் செய்ததால் படிப்பு என்பது நல்ல பண்புகள், இயற்கையின் பரிணாம வளர்ச்சி என்பதாக இருந்தது.

தொடரும்

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment