Home » Articles » வெற்றி உங்கள் கையில் – 63

 
வெற்றி உங்கள் கையில் – 63


கவிநேசன் நெல்லை
Author:

ஏன் இந்த கோபம்…?

வாழ்க்கையில் பல்வேறு சூழல்கள் மாறிக்கொண்டே வருகின்றன. எல்லா காலங்களிலும் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சுமார் 50 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த நிகழ்வுகள், நூல்களாய் மாறி வரலாறு வடிவில் இன்று வாழ்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் பெற்றோர்களின் மூலம் பிள்ளைகளைச் சென்றடைகிறது. ஆனால், வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் பசுமரத்தாணிபோல நம் நெஞ்சங்களில் நிழலாடுகின்றன. இவை – பலநேரங்களில் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாகவும் மாறிவிடுகின்றன.

அன்பு, பாசம், நட்பு, காதல், இன்பம், கோபம், எரிச்சல், பகை போன்ற வெவ்வேறு விதமான நிகழ்வுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திவிடுகிறது. அவை – சிலருக்கு பாடங்களாகவும், வேறுசிலருக்கு படுகுழிகளாகவும் தோன்றுகின்றன. இதனால்தான், எந்தவொரு நிகழ்வையும் இனிமையோடு சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது என பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வெற்றி வரும்போது துள்ளிக் குதிப்பதும், சோகம் நெருங்கும்போது போர்வையைப் போர்த்திக்கொண்டு முடங்கிக் கிடப்பதையும் வாடிக்கையாகக்கொண்டால், வாழ்க்கை ருசிக்காது. வெற்றிகள் நிலைக்காது.

ஒரு வெற்றிக்குப் பின்னால் எத்தனையோவிதமான வலிகள், தோல்விகள், அவமானங்கள், இழப்புகள், பழிச்சொற்கள், வெறுப்புகள், வேதனைகள், அழுகைகள் – என பல்வேறு விதமான “வாழ்க்கை அழுத்தங்கள்” பதுங்கிக்கொண்டுள்ளன. இதனை முறையாகப் புரிந்துகொண்டால் கவலைகளை கைக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. எந்தச் செயலையும் வெற்றிப் பயணமாக மாற்றிக்கொள்ளலாம்.

இது ஒரு உண்மை நிகழ்ச்சி.

பீட்டர் ஒரு கல்லூரி மாணவன்.

இளமை ஊஞ்சலாடும் காலம்.

தனது எண்ணத்திற்கு மாறாக யார் நடந்துகொண்டாலும் அவனுக்கு அளவில்லாத கோபம் உடனே வந்துவிடும். இதனால், நண்பர்களாக இருந்தவர்களில் பலர் விலகிச் சென்றார்கள். உதவி செய்தவர்கள்கூட தூரவிலகிப் போனார்கள். வீட்டில் வீணான பிரச்சினைகள் உருவானது. இருந்தபோதும், அவன் தனது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை.

“கோபம் வந்தால், நான் என்ன செய்வேன் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி தனது கோபத்தை வரமாக நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான். அந்த வரம் இவனுக்கு ஒரு சாபமாக இருப்பது அவனுக்குப் புரியவில்லை.

“பீட்டர் நீ அடிக்கடி கோபப்படுகிறாய். உனது கோபம் உனக்கு நல்லதல்ல. நாங்கள் உயிரோடு இருக்கும்வரை எங்களிடம் கோபப்பட்டுக்கொள். நீ என் பிள்ளையாக இருப்பதால், பொறுத்துக்கொள்கிறேன்” – என்று அம்மாவும், பீட்டரின் கோபக்கனலைத் தாங்க முடியாமல் தத்தளித்து சொன்னாள்.

ஒருநாள் பீட்டரின் தந்தை அவனைத் தனியாக அழைத்தார்.

“நான் சொல்வதை கொஞ்சம் காதுகொடுத்துக் கேள். உன்னிடம் ஒரு சுத்தியலும், நிறைய ஆணிகளையும் தருகிறேன். இதனை பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் நமது வீட்டின் பின் சுவரில் ஒரு ஆணியை சுத்தியலால் அடித்துக்கொள்” என்று சொன்னார் அப்பா.

“நான் ஏன் ஆணி அடிக்க வேண்டும்?” கேட்டான் பீட்டர்.

“உனது கோபத்தை குறைப்பதற்காகத்தான் இப்படியொரு ஏற்பாடு” என்று சிரித்துக்கொண்டார்.

“நான் எங்கே கோபப்படுகிறேன்?. சும்மா அமைதியாக இருக்கிறேன்” என்று பீட்டர் அப்பாவிடம் சொன்னான்.

“நீ கோபப்படும்போதெல்லாம் சுவற்றில் ஒரு ஆணி அடி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அப்பா.

ஒருவாரம் கழிந்தது.

பீட்டர் ஒரு நேர்மையான இளைஞன் என்பதால், அப்பா சொன்னதை தப்பாமல் செய்தான்.

ஒரு மாதத்திற்குப்பின் வீட்டின் பின்சுவரில் அடிக்கப்பட்ட ஆணிகள் எத்தனை? என பீட்டரும், அவனது அப்பாவும் எண்ணிப் பார்த்தார்கள். 44 ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன.

“சரி பரவாயில்லை. ஒரு வாரத்தில் 44 ஆணிகளை நீ அடித்துவிட்டாய். இனி உனக்கு கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி எடுத்துவிடு” என்று சொன்னார்.

ஒருமாதம் முடிந்தது. சுவரிலுள்ள ஆணிகள் அனைத்தையும் பிடுங்கிவிட்டான் பீட்டர்.

“அப்பா… நீங்கள் சொன்னதுபோல நான் கோபத்தை நிறுத்திவிட்டேன். சுவரில் வந்து பாருங்கள். அத்தனை ஆணிகளையும் பிடுங்கிவிட்டேன்” என்று மகிழ்ந்தான்.

“ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். அந்த ஆணிகள் ஏற்படுத்திய ஓட்டைகளை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் அப்பா.

திடுக்கிட்டு விழித்தான் பீட்டர்.

“ஆணி அடிக்கப்பட்ட நம் வீட்டு சுவற்றில் ஆணியை எடுத்தப்பின்பும், ஆணி அடித்த இடங்களில் வடுக்கள் இருக்கிறதல்லவா? இதைப்போலவே, நீ கோபப்படும்போது பலரது மனதை காயப்படுத்தி இருப்பாய். அந்தக் காயம் வடுவாக அவர்களது மனதில் என்றும் நிலைத்திருக்கும். நீ வேண்டுமென்றால் மறந்துவிடலாம். ஆனால், காயம்பட்டவர்கள் மனம் புண்பட்டுபோய்விடுமல்லவா?” என்று சொன்னார் அப்பா.

பீட்டர் தனது அப்பாவின் கால்களில் விழுந்தான்.

“என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. உங்களையும், அம்மாவையும் நான் கோபப்பட்டு காயப்படுத்தியிருந்தால், இன்றே என்னை மன்னியுங்கள். இனிமேல் நான் உங்கள் சொற்படி நடப்பேன். இனிவரும் காலத்தில் யாரிடமும் கோபப்படமாட்டேன். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன்” – என்று உறுதியோடு சொன்னான் பீட்டர்.

அப்பா மகிழ்ந்தார்.

பீட்டரின் வாழ்க்கை நிகழ்வைப்போலவே பலரது வாழ்க்கையிலும் கோபப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றத்தான் செய்யும். இந்தப் கோபம் பல நேரங்களில் வெற்றிப் பாதையில் தடைக்கற்களாக அமைந்துவிடுகிறது. இந்தத் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் முயற்சியில் நாள்தோறும் ஈடுபட்டால், கோபம் கோபித்துக்கொண்டு ஓடிவிடும்.

இந்தக் கோபத்தை குறைப்பது எப்படி?

எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் அமைதியைக் கடைபிடியுங்கள். ஒருவர் நம்மீது கோபப்பட்டால் உடனே பதில் பேசாமல் மௌனம் காக்க பழகிக்கொண்டால், எதிர்விளைவுகள் இல்லாமல் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், எப்போதும் ‘உம்’மென்று முகத்தை வைத்துக்கொண்டு, “நான் கோபப்படவில்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்தால், கேட்பவர்கள் மனதில் இன்னும் அதிகக் கோபம் உருவாக வாய்ப்பு இருக்கிறது அல்லவா?.

நம்மீது கோபம் கொள்பவர்களிடம் அமைதி காப்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக, “கோபத்தை வெல்லும் ஆற்றல் நம்மோடு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு இது” என்பதை புரிந்துகொண்டால், எந்தக் கோபத்தையும் எளிதில் வெல்லலாம். கோபமாக பேசும் சூழல் ஏற்பட்டால் கோபப்படுவதற்கு முன்பே, அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்வது நல்லது. வீணாக வார்த்தைகளைக்கொட்டி கோப உணர்ச்சியை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு எதிர்பேச்சை குறைத்துக்கொள்வது பாதுகாப்பான செயலாகும்.

கோபப்படுவதன்மூலம் பலர் நிதானத்தை இழந்துவிடுகிறார்கள். தனக்கு வருகின்ற நன்மைகளை தள்ளிப்போடும் நிலையையும் உருவாக்கிவிடுகிறார்கள். பொதுவாக – எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலை ஏற்படும்போது கோபம் கொப்பளிக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்துபோய்விடுகிறது. பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் ஏமாற்றங்கள் உருவானாலும், அவை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.

பயம், கண்ணீர் வடித்தல், கவலையோடு இருத்தல், எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் இருத்தல் – போன்றவைகள் “கோப உணர்வுகளின் வெளிப்பாடு” என்பதை புரிந்துகொள்வதன்மூலம் கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

எவ்வளவோ முறை நம்மோடு சிரித்துப் பழகிய உறவினர்களும், நண்பர்களும் ஒரு சிறிய தவறு செய்தால்கூட “கோபம்” என்னும் உணர்வை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தும்போது முதலில் பாதிக்கப்படுவது நமது உடல்நிலைதான். இதனால், தேவையற்ற எண்ணங்கள் உருவாகும். அங்கங்கே உடல் வலிகள் ஏற்படும். நமது சிந்தனையும் சின்னாப்பின்னமாய்ப் போய்விடும்.

எனவே, வெற்றி பெற விரும்புபவர்கள் கோப உணர்வை கட்டுக்குள் வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். எந்தவொரு பழக்கத்தையும் வழக்கமாகக்கொண்டால், அது பழக்கவழக்கமாக மாறிவிடுவதைப்போல கோப உணர்வை குறைக்கவும் பழகிக்கொள்வோம்.

கோபத்தைக் குறைப்போம். வெற்றிகள் குவிப்போம்.

தொடரும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2019

அன்பான அனுசரிப்பு…! அகிலமெங்கும் உன் சிறப்பு…!
நீங்கள் ஒழுங்குமுறையை கையாள்பவரா?
உங்கள் உயர்வுக்கு பாதை அமைப்பது எது?
முயன்றேன் வென்றேன்…
இங்கு… இவர்… இப்படி…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 6
இளம் வயதில் ஏற்படும் உடல் பருமன்
யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம்
வெற்றி உங்கள் கையில் – 63
மாமரத்தில் கொய்யாப்பழம்
எல்லாம் அசாதாரணமே
ஊசல்
பயணங்களில் எடுக்க வேண்டிய உணவுகள்
நில் ! கவனி !! புறப்படு !!! 1
உலகில் தடம் பதித்த சிறப்புமிக்க மாமனிதர்கள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்