Home » Articles » முயன்றேன் வென்றேன்…

 
முயன்றேன் வென்றேன்…


ஆசிரியர் குழு
Author:

ச. ரம்யா

கபடி வீராங்கனை, ஈரோடு

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு என்னும் ஒரு குக்கிராமமே எனது ஊர். எனது தந்தை சண்முகம் விவசாயி தாய் ஞானாம்பாள் அவருக்கு உதவியாக இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்வார். தம்பி கோகுல் ஆனந்த் ஏழாம் வகுப்பு படிக்கிறான். நான் பெரியகொடிவேரி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியிலே பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது பொழுதுபோக்கு, லட்சியம், குறிக்கோள், ஆசை, கனவு, வெறி எல்லாமே கபடி  மட்டுமே தான். 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கேலோ-இந்தியா கபடி போட்டிக்கு இந்திய அணிக்காக தமிழ்நாட்டிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வீராங்கனை நான் மட்டும் தான். இதை விட பெரிய அறிமுகம் வேறு எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.

எனது தந்தை விளையாட்டில் அவ்வளவாக ஆர்வமில்லாதவர்.  ஆனால் எனது தாய்க்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு.  குறிப்பாக கபடி விளையாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்.   எனது பாட்டி என் அம்மாவை அதிகம் விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் என் அம்மா எனது தந்தை மற்றும் பெரியோர்களை எதிர்த்து என்னை கபடி விளையாட ஊக்குவித்து அனுப்பி வைத்தார். என் தாயின் ஊக்கமே என்னை இன்று இந்திய வீராங்கனையாக உருமாற்றியுள்ளது. அடுத்தபடியாக என்னை சாதனை படைக்கும்  வீராங்கனையாக உருவெடுக்கச் செய்தவர் எனது பயிற்சியாளர் பிரகாஷ் அவர்கள். பெரிய கொடிவேரியிலே நிலை கொண்டுள்ள புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்தது முதல் இன்று வரை என்னைச் செதுக்கி உருமாற்றியவர் அவர்தான். ஆறாம் வகுப்பிலே எனக்கு ஆசிரியராக இருந்த பிரகாஷ் என்னை கபடி விளையாட தேர்ந்தெடுத்து எனக்கு நாள்தோறும் பயிற்சி அளித்து இன்று என் திறமையை நாடறிய செய்தவர். எம் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், தினந்தோறும் என்னுடன் கைகோர்த்து கபடி விளையாடும் என் சக தோழிகள் எனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள கபடி விளையாட்டின் பல்வேறு ஆட்ட நுணுக்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்து வலுப்படுத்திய சக்தி பிரதர்ஸ் பயிற்சியாளர் கோவிந்தராஜ், கோவை மாவட்ட இளஞ்சிங்கம் அணியின் பயிற்சியாளர் தர்மன், சுரேஷ், ராம்குமார், தாஸ் மற்றும் பல இடங்களுக்குச் சென்று விளையாட உறுதுணையாக இருந்து நிதி உதவிகள் செய்த கோவை மாவட்ட கபடி கழக துணைச்செயலாளர் திரு. தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களும் சைமன்ராஜ், ஈரோடு மாவட்ட கபடி கழக செயலாளர் NKKP. சத்தியன், பழனிச்சாமி, பி.கே.ஆர் கல்லூரி நிர்வாகம், கிளிண்டன் ஆகியோரின் ஒத்துழைப்பினால் தான் இன்று உங்கள் முன் இருக்கிறேன். மேற்கூறிய அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நான் ஆறாம் வகுப்பிலிருந்து கபடி விளையாடி வருகிறேன். எட்டாம் வகுப்பில் 14 வயதிற்குட்பட்ட SGFI -ல் தேர்வு பெற்று தமிழ்நாடு அணிக்காக விளையாட சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்று வந்தேன். என் பள்ளியிலிருந்து தமிழ்நாடு அணிக்காக விளையாடிய முதல் மாணவி நான் தான். இது என் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அது வரை தடுப்பு ஆட்டக்காரராகவே விளையாடி வந்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து தான் Raider ஆக அவதாரம் எடுத்தேன். பத்தாம் வகுப்பில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் SGFI -ல் தேர்வு பெற்று தமிழ்நாடு அணிக்காக விளையாட மத்திய பிரதேச மாநிலத்திற்குச் சென்று வந்தேன். பின் பதினொன்றாம் வகுப்பில் இந்த ஆண்டு SGFI -ல் தேர்வு பெற்று 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தமிழ்நாடு அணியின் தலைவியாக அணியை மத்திய பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச்  சென்று வந்தேன். அங்கு தான் என் வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றானள [KHELO INDIA] கேலோ இந்தியா விளையாட தேர்வு செய்யப்பட்டேன். அதற்காகத் தேர்வு குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI)இல் நடந்தது. சிறப்பாக செயல்பட்டு தேர்வு பெற்று விட்டேன் ஆனாலும் கடிதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான பயிற்சி முகாம் ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே பள்ளி அளவிலான மாநில போட்டிகளிலும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் மாநில சேம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு மாவட்ட அணிக்காக விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்று வந்தேன். கடந்த ஆண்டு முதல் அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் ஈரோடு மாவட்ட அணி சார்பில் பங்கேற்று விளையாடி இரண்டாம் இடத்தை பெற்று வந்தேன். இந்த ஆண்டும் ஈரோடு மாவட்ட அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.

எந்த போட்டியானாலும் அதில் சிறந்த வீராங்கனையாக நான் தேர்வு செய்யப்படவேண்டும். மேலும் தடுப்பு ஆட்டத்திலும் பல்வேறு நுணுக்கங்களைக் கற்று சிறந்த ஆல்ரவுண்டராக இந்திய வீராங்கனையாக இந்த உலகை வலம் வரவேண்டும். மகளிர் கபடி என்றால் முதலில் நினைவுக்கு வருவது “ ரம்யா ” என்ற எனது பெயராக இருக்க வேண்டும். இவையே எனது இட்சியம், குறிக்கோள், ஆசை எல்லாமே. மற்ற மாணவிகளுக்கு நான் முன் மாதிரியாக இருக்க வேண்டும். இத்தகுதிகளை அடைய தினந்தோறும் பயிற்சி அவசியம். எவ்வளவு கடினமான பயிற்சியாக இருந்தாலும் அதை இன்முகத்தோடு மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

என்னுடன் விளையாடும்  என் தோழிகள் என்னை விட இளம் வயதிலேயே SGFI  மற்றும் மாநில சேம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். எனக்கு பதினொன்றாம் வகுப்பில் கிடைத்த பரிசுகள், பாராட்டுகள் எல்லாம் அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பிலேயே கிடைத்துள்ளது. அதை நினைத்து மிகவும் பெருமைபடுகிறேன்.  குறிப்பாக  லோகேஸ்வரி என்ற மாணவி 14 வயதிற்குட்பட்ட SGFI தமிழ்நாடு அணிக்காக தேர்வு பெற்று சிறப்பாக விளையாடியும் [KHELO INDIA] வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. இளம் தலைமுறையினர் சிறு வயது முதலே கடினமாக முயற்சி செய்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் வளமான எதிர்காலம் உங்கள் வாசல் தேடி வரும்.

இந்த இதழை மேலும்

 

1 Comment

  1. Pannaiyar says:

    வாழ்த்துக்கள் ரம்யா .

    ஆர்வம் இருப்பின் அனைத்தும் நம் வசமே.

    நன்றி

Post a Comment