Home » Online News » விதைகளின் விருட்சங்களைத் தேடி…

 
விதைகளின் விருட்சங்களைத் தேடி…


ஆசிரியர் குழு
Author:

இவ்வுலகம் தோன்றிய விதம், இவ்வுலகில் உள்ள உயிர்த்தொகைகள் பிறந்த விதம் இவைகளைப் பற்றி இரண்டு விதமான கருத்துகள் உண்டு. ஒன்று மதங்களும் புராணங்களும் கூறும் கருத்து. மற்றொன்று விஞ்ஞானிகள் கூறும் கருத்து. புராணக்காரர்கள், “இவ்வுலகம் இன்றுள்ள உருவிலேயே கடவுகளால் ஆக்கப்பட்டது. கடவுள் மக்களையும் பறவை, விலங்கு, செடி கொடி, நீர் வாழ்வன சூரிய சந்திர நட்சத்திரங்கள் யாவற்றையும் படைத்தார். மக்களுக்குரிய ஒழுக்கங்களையும் அவர்கள் கடைப்பிடித்து வாழவேண்டிய வழிமுறைகள், சாஸ்திரங்கள் யாவற்றையும் இறைவனே ஆக்கித்தந்தான்” என்பது இவர்களது கொள்கையாகும்.

உலகத் தோற்றத்தை ஆய்ந்து கண்ட அறிஞர்கள் வேறுவிதமாகக் கூறுகின்றனர். “சூரியனிடமிருந்து பிரிந்து தெறித்து விழுந்த நெருப்புக்கோளமே உலகமாயிற்று. இஃது சுமார் 200 கோடி ஆண்டுகட்கு முன்பு நடந்திருக்கலாம். மேலும் 100 கோடி ஆண்டுகட்கு முன்புதான் உலக உயிரினங்கள் தோன்றி இருக்கக் கூடும் என்ற கணிப்பு உருவாகியது.”

முதலில் தோன்றிய உயிர்கள் ஒரு பையுள்ள கிருமிகள். அவைகள் பல பைகளைக் கொண்ட கிருமிகள் மாறின. இந்த மாற்றம் நிகழ்ந்த ஐம்பது அறுபது ஆண்டுகட்குப் பின்னர்தான் புழுக்கள் தோன்றின. இப்புழுக்களிலிருந்து மீன்கள், மீன்களிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் அவற்றிலிருந்து ஊர்வன, ஊர்வனவற்றிலிருந்து பறவைகள், தங்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளும் தோன்றின. விலங்கினங்களில் ‘தேவாங்கு’ எனும் பிராணி தோன்றியது. தேவாங்கிலிருந்து வாலுடைய குரங்கு பிறந்தது. வாலுடைய குரங்கிலிருந்து வாலில்லாக் குரங்கு தோன்றியது. வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதக்குரங்கு தோன்றியது. அம்மனிதக்குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான்.

இப்படித் தோன்றிய மனிதனே இன்று வளர்ச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்கும் வளர்ச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்கும் சகல சக்திகளையும் பெற்றிருக்கிறான். மனித வளர்ச்சி இதோடு நின்று விடாது. எதிர்காலத்தில் மனித உருவத்திலும் மாறுபாடு ஏற்படலாம். அந்த மாறுபாடு நாகரிக வளர்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து ஆகும்.

இவ்விரு சாரார் கொள்கையும் ஆராய்ந்து நோக்கும் போது விஞ்ஞானிகளின் கூற்றே ஏற்புடையதாக அமைகின்றது. பன்டைக்கால மக்களின் சிந்தனைகளையும் இன்றைய மக்களின் வாழ்வியல் கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால், பண்டைக்கால மக்களின் சிந்தனை, செயல், வாழ்வு இவைகளைவிட இக்கால மக்களின் செயலும் சிந்தனையும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்பொழுது எந்தத்துறையை எடுத்துக் கொண்டாலும் மக்கள் முன்னேறியிருப்பதைக் காண்கிறோம். கல்வி, அரசியல், தொழில், கலை, சிந்தனை, சமூக வாழ்வு, ஆடை அணிகலன்கள், செல்வப் பெருக்கம் போன்ற இன்ப வாழ்வுக்குத் தேவையான சாதனங்களைக் கண்டுபிடித்தல் போன்ற பல துறைகளில் மக்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்.

அரசியல்:

மக்கள் தாம் செய்யும் பயிர்களை அழிப்பதற்கு வரும் விலங்குகளை விரட்டியடிக்கக் காவலர்களை ஏற்படுத்தினர். இக்காவலர்களை மக்களே தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்குத் தங்களது பயிரிட்டு அறுக்கும் தானியங்களில் பங்கு கொடுத்து வந்தனர். இவர்களே பின்னாளில் அரசன் எனப்பட்டான்.

மன்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதற்குச் சான்றாக,

“கழுமலத்தில் யாத்த களிலும் கருவூர்

விழுமியோன் மேல்சென் றதனால் – விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது”.

எனும் பழம்பாடல் வழி அறியலாம்.

நாளடைவில் மன்னர்கள் பரம்பரையாக ஆளும் உரிமை பெற்றவர்களானார்கள். மக்களும் மன்னன் துணையில்லாமல், மன்னன் ஆதரவில்லாமல் வாழ முடியாது என்று நம்பி வந்தனர். இதனால் மக்களின் உயிராக மன்னன் மதிக்கப்பட்டான்.

இதனையே,

“மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்” என்று போற்றினர்.

பேரரசனாக இருப்பினும் பெரியோரின் பொன்னுரையை வழித்துணையாகக் கொள்ளாவிடின் தானே அழிவான் என்பதையே,

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்”

என்று அறிவுறுத்துகிறது. மேலும் நீதிமுறை தவறி ஒன்றையும் ஆராயாமல் ஆட்சி புரியும் அரசன் உணவையும் நாட்டையும் ஒருசேர இழந்து விடுவான் என்பதை,

 “கூழும் குடியும் ஒருங்கிழக்கும்; கோல்குடிச்

சூழாது செய்யும் அரசு” என்று உணர்த்துகிறது.

பண்பட்ட நிலை:

வாழ்வியலைக் காட்டும் இலக்கியங்களும் சமயங்களும் பண்பாட்டை மறந்தில என்பதை மேலும் திருஞான சம்பந்தர் தேவாரமும் தாயுமானவர் பாடல்களும் வள்ளலாரின் அருட்பாக்களும் நினைவூட்டுகின்றன.

“வாழ்க அந்தணர்; வானவர் ஆன்இனம்;

வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;

ஆழ்க தீயது எல்லாம்; அரசன் நாமமே;

சூழ்க வையமும் துயர் தீர்கவே”

எனும் சம்பந்தர் தேவாரம் நினைவூட்டுகின்றன.

இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கெல்லாம் சோறு போடவும் வேண்டும். பல கலைகளையும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும் என்ற உயரிய நோக்கில் பாரதியும்,

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு

வாழும் மனிதருக்கெல்லாம்

பயிற்றிப் பலகல்வி தந்தே-இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்” என்கிறார்.

நல்லறம்:

பண்டைத் தமிழர்கள், மனிதத் தன்மையைக் காப்பதிலே முனைந்து நின்றனர். மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதினர். உயர்ந்த நிலையில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றும் இதற்காக உழைப்பது தமது கடமை என்றும் கருதி வாழ்ந்தனர்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்

துஞ்சலும் இவர்பிறர் அஞ்சுவது அஞ்சி

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வு இலர்

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”

எனவே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் பண்பில் பண்பட்டு வாழ்ந்தனர் என்பதற்கு இஃதே சான்று.

பிறர்க்கு உதவி செய்யும் குணமே சிறந்த குணம். மனிதத் தன்மையுமாகும். நன்றி மறவாது நல்லறத்துடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ நம் தமிழரின் வாழ்வியலை வேதமெனக் கொண்டு ஒழுகின் வாழ்வின் ஏற்றமே அன்றித் தாழ்வில்லை.

ப. தனலட்சுமி

உதவிப் பேராசிரியை

தமிழ்த்துறை

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி

கரூர் – 3.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்