S. தங்கவேல்
தலைவர் மற்றும் தாளாளர்
ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
கோவை
இன்று புதிதாய் பிறந்தோம்
என்று நீவிர் எண்ணமதைத்
திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி
இன்புற்று இருந்து வாழ்வீர்…
என்ற பாரதியின் வரிகளில் நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கின்றன. இந்த நம்பிக்கை வரிகள் தான் இவரின் நடைமுறை வாழ்க்கையின் உத்வேக வரிகளாகும்.
வெற்றியைத் தலைக்கும், தோல்வியை இதயத்திற்கும் எடுத்துச் செல்லாத எளிய மனிதர்.
ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை எங்கும் முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து பயணித்து வரும் மாமனிதர்.
ஆசான் என்பவர் வெறுமனே அதட்டுபவராக மட்டுமே இல்லாமல் அன்பானவராய், அரவனைப்பாளராய், அக்கரையாளராய் இருந்திடல் வேண்டும் என்று மாணவர்களிடம் நட்புறவுடன் பழகி வருபவர்.
இயற்கை நேசிப்பாளர், தன்னம்பிக்கையாளர், பொறியாளர், வேளாண் வித்தகர். தொழில் வல்லூநர், சிறந்த பண்பாளர் என பன்முகத்திறமையுடைய ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தாளாளர் S. தங்கவேல் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டாரத்திற்குட்பட்ட செங்கோடம்பாளையம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். விவசாயக் குடும்பம், எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் என்னுடைய தந்தையார் விவசாயம் பார்த்து வந்தார். இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மூன்று கிணறுகள், அந்தக் கிணறுகளையும் ஆண்டு தோறும் ஆழப்படுத்தினால் தான் ஒரு ஏக்கர் அளவிற்காவது பயிர் செய்ய முடியும் என்ற நிலை. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். என்னுடைய தந்தையார் எங்கள் எல்லோரையும் அவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் படிக்க வைத்தார். எங்களை எல்லோரையும் ஆசிரியராக்கி பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அரசுப்பள்ளயில் தமிழ்வழியில் தான் அனைவரும் படித்தோம்.
நான் படிக்கின்ற காலத்தில் அவ்வளவாக ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது. மிகவும் வசதிப்படைத்தவர்கள் மட்டுமே இப்பள்ளியில் படித்தார்கள். படிக்கின்ற காலத்தில் எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் மட்டுமே எடுத்தேன். அப்படிப்பட்ட சூழலில் பள்ளிப்படிப்பை முடித்து ஈரோட்டில் மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான கிக்கய நாயக்கர் கல்லூரியில் பியுசி பட்டத்தை முடித்தேன்.
அதன் பிறகு கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் வேளாண் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இக்கல்லூரி தொடங்கிய இரண்டாவது பேஜ் மாணவர்கள் நாங்கள். அங்கு எங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் மிகவும் கல்வித்துறையில் கற்றுத்தேர்ந்தவர்கள். 1978 ஆம் ஆண்டு பி.இ பட்டப்படிப்பை முடித்தேன். முடித்த கையோடு எனக்கு அதே கல்லூரியில் வேலையும் கிடைத்தது. வேலை செய்து கொண்டே எம்.இ. மற்றும் பிஎச்டி ஆகிய பட்டங்களைப் பெற்றேன். 1978 முதல் 2006 ஆம் ஆண்டு அக்கல்லூரியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்.
கே: பேராசிரியராய் பணியாற்றிய நீங்கள் ஒரு கல்லூரி தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?
என்னுடைய தந்தையார் மேலே கூறிய கடினமான சூழலில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு கால்நடை தீவினகடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் அவ்வளவாக வருமானம் இல்லை. இதனால் நெல் வியபாரம் செய்து வந்தார். அவ்வாறு செய்யும் பொழுது பல இடங்களுக்கு வாடகை லாரியின் மூலம் சென்று நெல் கொள்முதல் செய்து வந்தார். நாம் ஏன் சொந்தமாக ஒரு லாரி வாங்கக்கூடாது என்று எண்ணி இருக்கும் பணத்தை வைத்து ஒரு லாரியை வாங்கி அவரே லாரியின் ஓட்டுநராகவும் உரிமையாளராகவும் இருந்தார். எங்கள் கிராமத்திலிருந்து முதன் முதலாக லாரி வாங்கியவர் அவர் தான். “லாரிக்காரர் வீடு ” என்று தான் எங்கள் வீட்டை அடையாளப்படுத்துவார்கள்.
இன்று கல்லூரி தொடங்குவதற்கு என் தந்தை தான் காரணம். அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது இருந்த பற்றுதல் தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது என்று சொல்லலாம். என்னுடன் பிறந்த மூன்று சகோதரிகளும் ஆசிரியராகவே இருந்தார்கள். நான் பொறியியல் படிக்கும் பொழுது கூட நீ படிப்பை முடித்தவுடன் வேறு வேலைக்கு செல்லாமல் ஆசிரியர் தொழிலுக்கு மட்டும் செல் என்று என்னிடம் கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை தான் என்னுடைய வாழ்வில் ஒரு பசுமரத்தாணி போல் பதிந்தது. நான் பணியாற்றிய காலத்தில் ஒரு பகுதியை கோவைப் பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினேன். அதில் ஒரு கல்லூரி கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனால் வேளாண் கல்லூரியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அதன் பிறகு என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.
கே: பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி எழுந்தது?
நான் படித்தது வேளாண் பொறியியல் துறை என்பதால் இத்துறை சார்ந்த அத்துனை நுணுக்கங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். இத்துறை ஒரு தொழில் சார்ந்தது. படித்து முடித்தவுடன் பணி என்ற நிலையில் இருக்கும் துறை. பொறியியல் துறை மூன்று துறைகளைக் கொண்டது, அது மெக்கானிக்கல், சிவில், எலட்ரிக் ஆகிய துறைகளை உள்ளடக்கியது. இந்த மூன்று துறைகளில் எல்லா வேலைகளும் வந்து விடும்.
நான் படிக்கின்ற காலத்திலும், தற்போதும் பொறியில் படிப்பு என்று வேலைவாய்ப்பு சம்மந்தமான படிப்பு என்பதால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். தன் பிள்ளை நன்றாகப் படித்து நல்லதொரு வேலைக்கு சென்று குடும்பத்தை அவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆவல் கொள்கிறார்கள். அந்த ஆவலை பொறியியல் துறை வெகு விரைவாகக் கொடுத்து விடுகிறது. இப்படிப்பட்ட காரணத்தால் தான் இத்துறை சார்ந்த கல்லூரியைத் தொடங்கினேன்.
கே: கோவை மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தன் காரணம் குறித்துச் சொல்லுங்கள்?
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தப் படியாக வளர்ந்த மாவட்டம் என்றால் அது கோவை மாவட்டம் தான். நான் படிக்கும் பொழுது தமிழகத்தில் ஒன்பது பொறியியல் கல்லூரி மட்டுமே இருந்தது. அதில் சென்னையில் இரண்டு கல்லூரியும், கோவையில் மூன்று கல்லூரியும் இருந்தது. அப்போதே பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு தேவையாக இருக்கிறது. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு அத்தொழில் படிப்பு பழகியதாக இருக்கும். ஆனால் விவசாயப் பின்னணியிலிருலுந்து வரும் பிள்ளைகளுக்கு இத்தொழில் கல்வி புதுமையாக இருக்கும். அவர்களுக்கு சற்று கூடுதலாகச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். என்னை பொருத்தவரை பொறியியல் கல்லூரிக்கு ஏற்ற மாவட்டம் கோவை தான்.
கே: நீங்கள் படித்த காலத்திலும், தற்போது வளர்ந்து வரும் காலத்திலும் பொறியியல் கல்வியின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?
நாங்கள் படிக்கின்ற காலத்தில் குறைந்தளவு பொறியியல் கல்லூரிகள் தான் இருந்தது. அதிகபட்சமாக ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் பட்டப்படிப்பு படிக்க முடியும். ஆர்வம் இருந்தாலும் படிக்க முடியாத சூழல் தான் இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் மாணவர்களுக்கு மேல் பொறியியல் படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் , 1972 ல் ஆண்டுதோறும் 1 இலட்சம் மாணவர்கள் SSLC தேர்வு எழுதினார்கள். அதில் 1000 பேருக்கு தான் பொறியியல் படிக்கும் வாய்ப்பு (1 % மட்டுமே) இருந்தது.
தற்பொழுது ஆண்டுதோறும் சுமார் 8.5 இலட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதிகிறார்கள். அதில் 2 இலட்சத்திற்க்கு மேற்ப்பட்ட மாணவர்களுக்கு (25%) பொறியியல் படிக்கும் வாய்ப்பு உள்ளது.
நமது மாணவர்கள் அமேரிக்கா உட்பட அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்க்கும் , ஐ.டி துறையில் அபரிவிதமான வளர்ச்சிக்கும் பொறியியல் கல்லூரிகள் பெறும் பங்கு வகுகின்றன.
கே: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியியல் துறையின் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது?
பொறியியல் துறையின்றி ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், பொறியாளர்கள் தான் உருவாக்குகிறார்கள். குறிப்பாக வரும் காலத்தில் நமது நாடு மின்னனுவியல் துறை மற்றும் எரிசக்தி துறை ஆகிய இந்த 2 துறைகளிலும் மிக பெரிய வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
தற்பொழுது நாம் ஆண்டுதோறும் 70 பில்லியன் டாலர் (ரூ. 4,90,000 கோடி) அளவிற்கு மின்னனு சாதனங்களை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த இறக்குமதியை குறைத்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர வேண்டும்.
அடுத்தாக ஆற்றல் துறையை எடுத்து கொண்டால், தற்பொழுது ஆண்டுதோறும் நாம் சுமார் 350 GW அளவிற்கு மின்சார உற்பத்தி செய்கிறோம். ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் 80 சதவீததிற்கு மேல் அனல் மின்சாரமே.
தற்பொழுது சுமார் 5 சதவீதம் அளவிற்கு சூரிய சக்தி முலமூம் , மேலும் 6 சதவீதம் அளவிற்கு காற்றாலை முலமூம் மின்சார உற்பத்தி செய்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 சதவீத அளவிற்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
இத்துடன் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து எடுத்து அதனை எரிபொருளாக பயன்படுத்தி அனைத்து வாகனங்களையும் இயக்கும் தொழில்நுட்பத்தையும் மேம் படுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல், அடுத்த பத்து ஆண்டுகளில் டீசல் மற்றும் பெட்ரொல் இல்லாமலேயே அனைத்து இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் இயங்கும் நிலை ஏற்படும் அதையும் பொறியாளர்களே சாதிப்பார்கள். தற்போதைய நம் வாழ்வில் பிளாஸ்டிக் என்பது தவிர்க்க முடியாத பொருட்களில் ஒன்றாகி விட்டது. அரசாங்கம் இதை தவிர்க்க எத்தனையோ திட்டங்களை வகுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அதை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. இதை ஒரு பொறியாளர் மறுசுழற்ச்சி செய்ய பல வழிகளைக் கண்டுபிடிப்பார். திருப்பூர் போன்ற தொழில் நகர்களில், சாயக்கழிவுகளை எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அது அருகிலுள்ள ஆறு, ஏரிகளில் கலந்து சுற்றுப்புற சூழலை மிகவும் மாசுபடுத்தியது. தற்போது சாயக்கழிவுகளை முற்றிலும் சுத்திகரிப்பு செய்து, அந்த நீரை அவர்களே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பொறியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். பெரும்பாலான சாயப்பட்டறைகள் இந்த நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
கே: தங்கள் கல்லூரி குறிகிய காலத்தில் தன்னாட்சி பெற்றது பற்றி ?
நான் ஏற்கனவே கூறியது போல் எதையும் திட்டமிட்டு செயல்படுகிறோம். 8 ஆண்டுகளில் , நான்கு துறைகளுக்கு NBA சான்றிதழ் பெற்றோம். NAAC அமைப்பின் “A” தர சான்றிதழ், ஒட்டு மொத்த கல்லூரிக்கும் பெற்றோம். தரமான ஆசிரியர்கள், உயர் தர வேலை வாய்ப்பு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள் சமரிப்பித்தல் ஆகிய அனைத்தையும் கணக்கிட்டுத் தான் தன்னாட்சி வழங்கபட்டது. இதன் மூலம் தொழில்கூடங்களுடன் இணைந்து, தொழில்பயிற்ச்சியுடன் கூடிய கல்வியை வழங்க இயலும். 4 ஆண்டுகளில் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை அயல் நாட்டு பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்து அவர்களின் திறன் உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்.
கே: உங்கள் கல்லூரியின் தனிச்சிறப்புகள் பற்றி?
இக்கல்லூரிக்கான தனிச்சிறப்புகள் ஏராளம் இருக்கிறது. அதில்…
இங்கு படிக்கும் அத்துனை மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பினை வாங்கிக் கொடுக்கிறோம்.
ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பின் இறுதியாண்டில் அவனுக்கு எதிர்கால தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றார்போல் பயிற்சி அளித்து வருகிறோம்.
ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு அம்மொழியைக் கற்றுக் கொடுக்கிறோம், அதற்கான பிரத்யோக ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு அந்நாட்டு மொழியை 1 ஆண்டு காலம் கற்றுக் கொடுக்கிறோம்.
கெரியர் டெவலப்மெண்ட் என்ற ஒரு துறை இருக்கிறது. இதில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தகுதி சார்ந்த பயிற்சியினை வழங்கி வருகிறார்கள். எங்கள் கல்லூரியிலேயே அதிக ஆசிரியர்கள் பணியாற்றும் ஒரு துறை இது தான்.
எங்கள் கல்லூரியில் பன்மொழி பேசும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியை விட அவரவரின் தாய் மொழியை முறையாக எழுதவும் படிக்கவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறார்கள்.
இங்கு படித்து முடித்த மாணவர்களில் 20 சதவீதம் பேர் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 195 த்திற்கும் மேல் கட்டப் எடுக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், பேருந்து கட்டணம் படிப்பு முடியும் வரை இலவசம் தான்.
190 க்கும் மேல் எடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் எதுவும் இல்லை. பேருந்து மற்றும், விடுதிக்கட்டணம் செலுத்தினால் போதும்.
விளையாட்டு மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பல உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறோம்.
கே: உங்களின் கனவுத்திட்டம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறார்களா?
நான் எந்தச் செயலை செய்ய வேண்டும் என்றாலும் நன்றாக யோசித்து, முறையாகத் திட்டமிட்டு, எதிர்கால நலனில் கருத்தில் கொண்டு தான் செய்வேன். திட்டம் சரியாக இருந்தால் தான் வெற்றி இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியிருக்கும் போது நல்லதொரு எண்ணத்துடன் தொடங்கிய இக்கல்லூரி மிகச்சிறப்பாக பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் நல்லதொரு பெயரை எடுக்கிறது என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
நம்முடைய பயணம் என்பது பல்வேறு படிநிலைகளை அடியொற்றியது. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
மாணவர்களில் எதிர்கால வாழ்க்கைக்கு எது தேவையோ, அதை முறையாக அவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
திறமையான ஆசிரியர்கள் கொண்டு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இக்கல்லூரியில் 250 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த பயிற்சி கொடுத்து வருகிறோம்
கே: புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்குவதில் உள்ள சவால்கள் என்ன?
பொறியியல் கல்லூரியின் மீது செயற்கையான சில முரண்பாடுகளை தற்போது சிலர் உருவாக்கி வருகிறார்கள். இது என்ன வென்றால் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்பது தான் அது.
மாணவர்களின் சேர்க்கைக்கு அக்கரை கொள்ளும் நிறுவனங்கள் அவர்களின் திறமையின் மீது அக்கரை கொள்வதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு.
தற்போது தொழிற்துறையில் நாடு 7 சதவீதம் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 2 சதவீதம் தான் உயர்ந்து இருக்கிறது. இதை அவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொறியியல் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கிறது, இதை புதிதாக கல்லூரி தொடங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய புதிய சிந்தனைகள், நுணுக்கங்கள், எதிர்கால தேவைகள், படித்தவுடன் வேலை எவ்வாறு கொடுப்பது போன்றவற்றை கல்லூரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொறியியல் துறை என்பது வாழ்க்கைக்கு உயிரியியல் துறை என்பதை கல்லூரிகள் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் விளக்கிச் சொல்லுதல் வேண்டும்.
இத்துறை படித்தால் இத்தகைய வேலைகள் இருக்கிறது, சுயமாக தொழில் தொடங்க என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லி கொடுக்க வேண்டும்.
கே: ஆசிரியர் மாணவரின் தொடர்பு எப்படியாக இருத்தல் வேண்டும்?
ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று முன்னோர்கள் வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லி விடவில்லை. ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஏணிப்படியாக இருத்தல் வேண்டும்.
நான் நன்றாகத் தான் சொல்லிக் கொடுக்கிறேன், ஆனால் மாணவன் சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறான் என்று கூறினால் அவர் நல்லாசிரியர் அல்ல. புரியாத ஒரு பாடத்தை புரிந்து கொள்ள முடியாத ஒரு மாணவனுக்கு புரியும் படி நடத்துவது தான் ஒரு சிறந்த ஆசிரியர்.
ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை நடத்தும் ஆசிரியர் ஒரு மணி நேரம் பாடத்தை நடத்தினால் அவர் சிறிதேனும் சக்தி இழந்தாக கருதக்கூடாது மாறாக அன்று முழுவதும் பணியாற்றுவதற்கு சக்தி பெற்றதாக கருத வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் மீது அன்பும் நேசமும் வைத்திருந்தாலே அவர்கள் வெற்றி பெற்ற ஆசிரியர்களாக மாறிவிடுகிறார்கள். மாணவர்களின் பிரச்சனையை அதட்டிக் கேட்காமல் அன்பாகச் சொன்னால் அவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்ய மாட்டான்.
கே: மாணவர்களிடம் தங்களின் அணுகுமுறை?
நான் ஒரு நாளும் இக்கல்லூரியின் தாளாளராய் என்னை தகவமைத்துக் கொண்டதில்லை. ஒவ்வொரு நாளும் வகுப்பிற்குச் செல்வேன். நான் கற்றதைப் பெற்றதை அவர்களிடம் போதிப்பேன்.
ஆசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு கட்டுபடாத மாணவர்களை நானே நேரில் அழைத்துப் பேசுவேன். அவர்கள் என்னுடைய அறைக்கு வந்தவுடன் முதலில் அமரச் சொல்வேன் பிறகு நான் அமரும் இடத்தின் அருகிலேயே மாணவனை ஒரு நாற்காலி போட்டு அமர வைத்துப் பேசும் போது அவரின் பிரச்சனைகள் முழுவதும் சில சமயம் கண்ணீருடன் அவர்கள் சொல்லி விடுவார்கள்.
அது மட்டுமின்றி எங்கள் கல்லூரியில் பயிலும் அத்துனை மாணவர்களிடமும் என்னுடைய தொலைபேசி எண் இருக்கும். ஏதேனும் மாணவனுக்கு தேவை என்றால் வாட்ஸ்அப் வழியாக எனக்கு தகவலை அனுப்பி விடுவார்கள். அதற்கான தீர்வை உடனே கண்டு விடுவேன்.
கே: பிடித்த மனிதர்கள், படித்த புத்தகம் பற்றி?
எனக்கு பிடித்த மனிதர்கள் என்றால் அது பெரியாரும், காரல் மார்க்ஸ் இருவரும் தான். ஏனென்றால் அவர்கள் இருவரும் உண்மையை மட்டுமே சொல்லி அதன் படி வாழ்ந்தவர்கள்.
படித்த புத்தகம் நேரு தனது மகளான இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள், திருக்குறள், பாரதியின் கவிதைகள் ஆகியவை நான் எந்நாளும் பாதுகாத்து வைத்துக் கொண்ட புத்தகம். தற்போதைய இலக்கியங்களில் கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம்.
கே: இந்நிறுவனம் பெற்ற பட்டம் பாராட்டுகள் பற்றி?
NBA என்று சொல்லக்கூடியதை கல்லூரித் தொடங்கிய எட்டு வருடத்திலேயே வாங்கினோம். இது இந்திய அளவில் மிகக் குறைந்த ஆண்டில் எங்கள் கல்லூரி தான் பெற்றிருக்கிறது.
கல்லூரித் தொடங்கி 12 ஆண்டுகளில் எங்கள் கல்லூரி தன்னாட்சி பெற்று விட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சிறந்த கல்லூரிக்கான விருதைக் கொடுத்து எங்களை கௌரவித்தது.
கே: குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?
என் தந்தை திரு. செங்கோடக் கவுண்டர்,தாயார் திருமதி. பழனியம்மாள். என்னுடைய துணைவியார் திருமதி. ராஜேஸ்வரி, எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் தீபன் இவரின் மனைவி மதுவந்தனி இவர்களின் ஒரு மகள் ஆதிரா. இளையமகன் சீலன் இவரின் மனைவி ஸ்ரீமதி இவர்களின் மகன் யுகன். இவர்கள் எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரியை நிர்வகித்து வருகிறார்கள்.
கே: எதிர்காலத்திட்டம் பற்றி?
என்னுடைய எதிர்காலத்திட்டம் பெரிய அளவில் இருக்கிறது. அதை சிறிது சிறிதாக செய்து வருகிறேன்.
இந்தக் கல்லூரியை வெகு விரைவில் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு நல்லதொரு கல்வியைக் கொடுக்க வேண்டும்.
கே: தன்னம்பிக்கை வாசகர்ளுக்கு நீங்கள் கூறுவது?
இவ்விதழை தொடங்கிய இல. செ. கந்தசாமி அவர்கள் என்னுடைய கல்லூரி ஆசிரியர்.. இவர் எப்போதும் மாணவர்களையும், இளைஞர்களையும் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பார். அப்படித் தொடங்கியது தான் இந்த இதழ்.
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். இவையின்றி எதுவும் சாதிக்க முடியாது. தன்னம்பிக்கைக்கும், தற்பெருமைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கையோடு வாழ்வோம்…
தரணியில் தனித்துவமாய் வாழ்வோம்…
இந்த இதழை மேலும்