Home » Articles » நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்

 
நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்


சுவாமிநாதன்.தி
Author:

நம் மீதான நம்பிக்கை நம்மை அழகாக்குகிறது. ஒரு நாள் நம் இலக்கை நாம் அடைவோம். நமக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களிருந்து இடர்பாடுகளிலிருந்து சோகங்களிலிருந்து மீண்டு எழுவதுதான் கதையின் தொடக்கம். நாம் இலட்சியத்திற்க்காக வாழும் போது நமது கனவுகள் நனவாகிறது.

வாழ்வில் மிகப் பெரிய துயரங்களை எதிர்பாராத கஷ்டங்களை இன்னல்களை சந்திக்கும் நிலை வரலாம். வாழ்வில் தென்றல் மட்டுமல்ல. ஒரு நாள் புயலும் வீசக்கூடும்.  அது சூறாவளியாகவும் இருக்கலாம். நம்மை விழுங்க சுறாக்களும்; திமிங்கிலங்களும்  கூட்டனி சேரலாம். உச்சியிலிருந்த     நாம்  படுபாதாளத்தை நோக்கி திடிர் சரிவை சந்திக்கலாம். நாம் இனி அவ்வளவுதானா? என்ற நிலையை மனிதன் சந்திக்கும் நிலை ஏற்படலாம். கவலைகள் பெருகி அங்கு தொடர்ந்து இருப்பதற்கு அச்சப்படும் நிலை ஏற்படலாம். அப்போது கூட நம்பிக்கையை கைவிடாமல் இருக்கும்போது யாரோ ஒருவர் நமக்கு கைக்கொடுக்க முன் வருகிறார், முடிவுரை அல்ல. அது தொடக்கம். நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் போதுதான் நாம் மேன்மை அடைகிறோம். நன்மதிப்பு பெறுகிறோம். நற்குணங்களை உறுதியாக கடைப்பிடிக்கின்றோம். விலை மதிப்பற்றவர்களாக மாறுகிறோம். உயர்நிலைக்கு தகுதியுடையவர்களாக மாறுகிறோம்.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சங்கடங்கள், கஷ்டங்கள், தடைகள், தொல்லைகள், எல்லாம் தற்காலிகமானவை. நம்பிக்கையுடன் நாம் தொடரும் போது நமக்கு வெற்றி வசப்படுகிறது.

நமது மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பும் போது குப்பைகள் களையப்படுகிறது. மனதில் ஆயிரம் கெட்ட எண்ணங்களுடன் உலாவும் மனிதனால் சமுதாயத்திற்கு கெடுதல்களும், துன்பங்களும் ஏமாற்றங்களும், அவமானங்களும் சிரமங்களும்தான் ஏற்படுகிறது.  சமுதாயம் இருளடைகிறது. ஒரு நல்ல லட்சியத்துடன் அதனை அடைவோம் என்கிற நம்பிக்கையுடன் செயல்படும் போது சமுதாயத்திற்கே வெளிச்சம் ஏற்படுகிறது.

கணவனால் கைவிடப்பட்டு குழந்தைகளுடன் போராடும் பெண்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் போரட்டம்தான். ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். எப்படியெல்லாம் உடலை  ரப்பர் போல் வளைத்து அரங்கத்தில் செய்து காட்டுகிறார்கள். முயற்சியும் நம்பிக்கையும்தான் செய்ய வைக்கிறது.

நம்பிக்கை என்பது சாதாரண உணர்வல்ல. அது நமக்கு ஒரு உத்வேகத்தை உற்சாகத்தை தரவல்லது. இன்று உன்னதமான நிலையில் இருப்பவர்கள் எல்லாம் ஓரு காலத்தில் வலுவான நம்பிக்கையை மனதில் கொண்டு உழைத்தவர்கள்தான். அதன் பிரதிபலன்தான் இன்றைய அவர்களது இமாலய பிம்பங்கள்.

முதல் முயற்சியில் யாருமே அதி புத்திசாலிகளோ, குறைபாடுகளே இல்லாதவர்களோ அல்ல. முதல் சுற்றில் தடுமாறி விழுந்தாலும், சில பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள். எல்லோருமே போராடுகிறார்கள்தான். பிரச்னைகள் வேண்டுமானால் வேறானதாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் போராடுபவர்களும் உள்ளனர். நம்பிக்கையால் முயற்சியால்; எழுந்து நிற்கிறார்கள். வாழ்க்கையை அழகாக்கி கொள்கிறார்கள். மற்றவர்கள் நம் திறமையை சந்தேகித்தாலும், நாம் நம் மீதான நம்பிக்கையை இழக்காமல் சாதிக்கும் போது நம் குடும்பம் பெருமை கொள்கிறது. நமது அளப்பரிய சக்தியை தவறான விஷயங்களில் விரயம் செய்யக் கூடாது. ஒவ்வொரு துறையிலும் மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் உயரங்களை தொட்டவர்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுதான் சாத்தியமாக்கியது.

எல்லா சமயங்களிலும் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருப்பது சாத்தியமானதல்ல. எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்த இடத்திலேயே இருப்பவர்கள் சாதாரணமானவர்கள். வாழ்க்கை அழகானது. நாம் வாழ்வில் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். நமது லட்சியங்களை அடைய எதுவும் நம்மை தடுக்காது.

சாதாரண மனிதன் வாழ்வை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி நேரத்தை பணத்தை விரயமாக்குகிறான். கால்வாயை நீந்தி கடக்கிறார்கள். அக்ஸிஜன் எடுத்துச் செல்லாமல் சிகரத்தை தொட்டவர்கள் உள்ளனர். எந்த வயதிலும் சாதிக்கலாம்.

இலக்கை அடைந்து விட்டோம். அடுத்தது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும். அப்போதுதான் நமது சடலத்தை தூக்க நாலு பேர் வருவார்கள். யாருக்கும் எந்த உதவியையும் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்கள், உதவி செய்பவர்களையும் தடுத்தவர்கள் டைட்டானிக் கப்பல் போன்று ஒரு நாள் திடீர் சரிவை சந்திக்கிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் சறுக்கி விடுகிறது.

அறிவியல் விலகிய இடத்தில் நம்பிக்கை தொடங்குகிறது. அறிவியல் நெருங்கிய இடத்தில் நம்பிக்கை விலகுகிறது. மிகப்பெரிய அறிவுக் கூர்மை உடையவர்கள்கூட நம்பிக்கையின்மையால் முயற்சியை கைவிட்டு தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களால் விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் மிகப்பெரிய சிகரங்களை தொட்டு இருப்பார்கள். பல கனவுகளை கொல்வது சந்தேகம்தான். தோல்வியல்ல.

உண்மையிலேயே நாம் நம்புவதால்தான் பல விஷயங்கள் எப்போதும் நடக்கின்றன. நம்பிக்கைதான் நடக்க வைக்கிறது. அவன் நாசமாய் போய் விடுவான். அவன் உருப்பட மாட்டான். சிறைச்சாலையில் கம்பி எண்ணுவான். என்றெல்லாம் சிலர் திட்டுவார்கள். அவருக்கு கருநாக்கு. அவர் சொன்னால் பலித்து விடும் என்பார்கள். அதாவது எதிர்மறையாக நடக்கும் என்று உறுதியாக நம்பும் போது அது பலித்து விடுகிறது.

நம்பிக்கையால்தான் மனிதன் கட்டமைக்கப்படுகிறான். எப்படி நம்புகிறானோ அப்படி ஆகிறான். நம்பிக்கையை கட்டமைக்க பல வருடங்கள் ஆகிறது. அதை தகர்க்க சீர் செய்ய இயலாத அளவுக்கு சிதைக்க சில நொடிகளே போதுமானதாக உள்ளது. நம்மால் முடியும் என்று நம்பும் போதே நமது இலக்கை நோக்கி பாதி தூரம் நெருங்கி விடுகிறோம்.  அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர்கள் பெரிய வாழ்க்கைக்கு தகுதிபடைத்தவர்கள்.

நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் விருப்பம் மட்டுமே உள்ள 99 நபர்களுக்கு சமமானவன்.

எனக்கு என்ன நேர்ந்ததோ அது நானல்ல. நான் என்னவாக வேண்டும் என்று தேர்வு செய்தேனோ அதுதான் நான்.

நம்மை ஏற்க மறுப்பவர்கள், நம்மை தள்ளுபவர்கள், நம்மை நிராகரிப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு மிகச் சிறந்த வேறு பாதையை உருவாக்க காரணமாகி விடுகிறார்கள்.

நம்பிக்கை என்கிற மந்திர சாவி நமது கனவுகளை திறந்து விடுகிறது. மற்றவர்கள் சந்தேகம் கொள்ளும் போது நீ நம்பு. மற்றவர்கள் உழைக்கத் தயங்கும் போது நீ உழை. மற்றவர்கள் கேளிக்கைகளில் முழ்கும் போது, நி வியர்வையில் குளி. மற்றவர்கள் வெளியேறும் போது, நீ தொடர்ந்து போராடு. உறுதியுடன் நிமிர்ந்து நில். மற்றவர்கள் தோல்வியடையும் போது நீ வெற்றியடைவாய். இவையெல்லாம் எப்படி நடக்கும் என்று தெரியாது, ஆனால், அவையெல்லாம் நடக்கும் என்று நம்புகிறோம் அல்லவா அது தான் நம்பிக்கை.

நெருப்பு தங்கத்தை பரிசோதிக்கிறது. கஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள் மனிதனின் பலத்தை சோதிக்கிறது.

வெற்றி பெறுவோமா என்கிற பயம் தேவையில்லை. நம் இதயத்தில் கனவுகள் வளரட்டும். நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாத மாபெரும் சக்தி. அது நம் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் வெளிப்படுகிறது. நம்முடைய இன்றைய நிலை நமது வலுவான நம்பிக்கையின் பிரதிபிம்பம்தான்.

நாம் முயற்சியை கைவிட நினைக்கும் போது ஓன்றை மறக்கக் கூடாது. இன்று உணரும் வலி நாளைய வாழ்விற்கு தேவையான  உனது வலிமையாக, பலமாக, எதிர்ப்பு சக்தியாக மாறும். கடந்த காலத்தை விட்டு தள்ள வேண்டும். நாம் வளர்வதை அவை தடுக்கப் போவதில்லை. நாம் ஒரு நாள் இவ்வுலகத்தை விட்டு செல்லப் போகிறோம். அதை நம்புகிறோம். இருக்கும் போது நமக்கு உதவியவர்களுக்கு நம்மை உயர்த்தியவர்களுக்கு நன்றியுணர்வு இல்லாமல் விசுவாசம் இல்லாமல் இருக்கலாமா? மற்றவர்களை தமது புத்திகூர்மையால் ஏமாற்றி வாழ்வது ஒரு வாழ்வா? அடுத்தவர் குடும்ப விஷயங்களில் தலையிட்டு வரம்பு மீறி நடந்து கொள்ளலாமா? பொறுப்பில்லாமல், சோம்பேறித்தனமானவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை.

உன்னுடைய பங்களிப்பை தந்து கொண்டிருப்பதை கடவுள் பார்க்கிறார். உனக்கு கிடைத்ததை எவ்வாறு மேன்மைப்படுத்த உழைக்கிறிர்கள். வியர்வை சிந்துகிறிர்கள். அவரது பங்களிப்பை தருகிறார். அப்போது கதவுகள் திறக்கப்படுகின்றன. அதை எந்த மனிதனாலும் மூடவோ தடுக்கவோ முடியாது.

திரு.இறையன்பு இஆப அவர்கள் அழகாகச் சொல்லுவார். பால் பாத்திரம் அடுப்பில் இருக்கிறது. சூடேறிக் கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பால் பொங்குகிறது. தயிர் கடைந்து கொண்டே இருக்கிறோம். தொடர்ந்து கடையும் போது ஒரு கட்டத்தில் திரட்சியாக வெண்ணெய் திரள்கிறது. அதாவது, ஒரு இலக்கை நோக்கி நமது உழைப்பை முயற்சியை நம்பிக்கையுடன் தொடர்கிறோம். ஒரு கட்டத்தில் அதன் பலன் நம்மை நோக்கி பொங்கி வருகிறது.

நம்பிக்கை என்பது வாழ்வில் மிகவும் அற்புதமான விஷயம். விட்டு விடலாம். முயற்சியை விட்டு விடலாம் என பல சந்தர்ப்பங்களில் எண்ணத் தோன்றும். தொடர்ந்து கடக்கும் போது அந்த அற்புதம் நிகழும். உங்களால் முடியாது என்று சொல்ல பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. உங்கள் விடாமுயற்சியும், நம்பிக்கையும் கடவுளும்தான் தீர்மானிக்கிறார்கள்.

நமது கண்ணீர் துடைக்கப்படும். நமது எதிர்பார்ப்பு நிறைவேறும்.  நமது வலி காயங்கள் ஆறி விடும். நம்மை ஒருவன் கண்ணால் பார்க்கிறான். நமது கோரிக்கைகளை காதால் கேட்கிறான். நமது வலியை பார்த்து அவன் அமைதியாய் இருக்க வில்லை. அவன் பார்க்கிறான். அவன் கேட்கிறான். அவன் உனக்கு தருகிறான். அவன்தான் மனித உருவில் இருக்கும் தெய்வம்.

வாழ்வில் கடும்புயல் நம்மை தாக்கலாம். நம்மை தகர்க்கலாம். நாம் போராடும் போது, தத்தளிக்கும் போது, நமக்கு கை கொடுக்க, ஆதரிக்க, வழிகாட்ட ஒருவன் நிச்சயம் ஒவ்வொருவர் வாழ்விலும் வருவதுண்டு. வருங்காலத்திற்கு நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம். நமது கவலைகள், துன்பங்கள், தடைகள், இடையூறுகள் முடிவு தெரியாத பிரச்னைகள் நம்மை சூழ்ந்து இருக்கின்றன. நம்பிக்கையால் நம்மை புதுப்பித்துக் கொள்கிறோம். நம் மனதை நம்பிக்கையால் நிரப்பிக் கொள்கிறோம். தடைகள், துயரங்கள், இடையூறுகள், கவலைகள் நாளடைவில் மெல்ல மெல்ல விலகத் தொடங்குகின்றன. பாதுகாப்பாக உணரத் தொடங்குகிறோம். நமது வாழ்க்கையில் சரியான மனிதர்கள் நமக்கு ஆறுதல் தருகிறார்கள். நம்மோடு இருக்கிறார்கள். தவறான மனிதர்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். சரியான மனிதர்களின் அன்பும் வழிகாட்டுதலும் நம் இதயத்தை மகிழ்விக்கிறது.

சாக்கடை, குப்பை, அழுக்கு எண்ணங்களை நீக்கி மனதை தூய்மைப் படுத்துங்கள்.  மிக மேன்மையான உயர்ந்த லட்சியத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். சிகரங்கள் உங்கள் வசம்;.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment