Home » Articles » நில்! கவனி !! புறப்படு !!! – 3

 
நில்! கவனி !! புறப்படு !!! – 3


மித்ரன் ஸ்ரீராம்
Author:

பிறகு என்று சொல்லாதே ! (பாதை 2)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

‘அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்’ – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

 பிறகு என்று சொல்லாதே !

பிறகு என்பது வெற்றியை நோக்கிய பயணத்துக்கு ஒவ்வாத ஒரு வார்த்தை.

அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பது ஒரு ஆபத்தான விளையாட்டு.

இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் எப்போதும் சந்திப்பது தோல்வியை மட்டுமே – என்பதை மனதில் பதிய வையுங்கள்.

எதையுமே அப்போதே உடனுக்குடன் செய்வதுதான் வெற்றியாளனுக்கு அழகு.

பிறகு பார்ப்போம், பிறகு செய்வோம், பிறகு முடிவெடுப்போம் – என்பதெல்லாம் முட்டாள்களின் வாழ்வில் முதலிடம் பிடிப்பவை.

பிறகு பிறகு என்று எதையும் தள்ளிப்போடுபவர்கள் இப்போது நினைக்கும் விஷயத்தை புத்திசாலிகள் எப்போதோ செய்து முடித்திருப்பார்கள்.

ஆசிரியர் கொடுத்த Assignment களை முடிப்பது, Project Work களை முழுமையாக முடிப்பது, Revision Test Papers ஐ வைத்து மாதிரி பரீட்சை எழுதுவது தொடங்கி School Uniform Iron செய்து தயாராக வைப்பது வரை எதையுமே உடனுக்குடன் செய்வது தான் சரி – என்பது மாணவர்களுக்கான வழிமுறை.

காலம் தாழ்த்த தாழ்த்த – ஒரு வேளை பிறகு உங்களுக்கு நேரமே கிடைக்காமல் போகலாம்.

ஐநூறு ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றாமல் – பிறகு பார்ப்போம் என்று நினைத்த பலர், கடைசி நேரத்தில் அதை மாற்ற முடியாமல் வெறும் காகிதமாக வைத்துக்கொண்டு இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே.

Bus ம், Trian ம் கிளம்ப நிறைய நேரம் இருக்கிறது – இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கிளம்புவோம் என்று தாமதமாக புறப்பட்டவர்கள் Traffic ல் சிக்கிக்கொண்டு, மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு சென்று வண்டியை தவற விட்ட நிகழ்வு – நேர மேலாண்மை தெரியாத பலருக்கு நிகழ்ந்திருக்கிறது.

பரீட்சை நெருங்கும் நேரம் படித்துக்கொள்ளலாம் – இப்போது என்ன அவசரம் என்ற எண்ணத்தில் இருந்து – கேள்வித்தாளை பார்க்கும் போது, கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் விடை தெரியாத விந்தையாக மாறி, தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களை இந்த சமூகம் இன்னும் கண்டுகொண்டு தான் இருக்கின்றது.

படிப்பு மட்டுமல்ல, அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு எழுதும் தேர்வில் கூட இதுபோன்ற அணுகுமுறையால் வளர்ச்சி, பதவி, பணம், அதிகாரம் என அனைத்தையும் நூலிழையில் தவறவிட்ட அன்பர்களை பல அலுவலகங்கள் அனுதினமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது.

பிறகு செய்யலாம் என்ற பல செயல்கள், வேலைகள், கடமைகள் எல்லாம் – எப்படி பார்த்தாலும் கடைசியில் நீங்கள் தான் செய்ய வேண்டிவரும்.  யாரும் உதவிக்கு வரப்போவது இல்லை, ஏனென்றால், அவர்கள் அவர்களது வேலைகளை செய்துகொள்ளவே நேரம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கும்போது – உங்கள் வேலைகளையோ, அல்லது உங்களுக்கு உதவவோ அவர்களுக்கு நேரம் எப்போதும் இருப்பது இல்லை, என்பது தான் நிதர்சன நிஜம்.

பழுதான கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டுமுறை சரியான நேரத்தையே காட்டுகின்றது.

அதே சமயம் சரியான கடிகாரம் துல்லியமான நேரத்தை அப்புறம் காட்டலாம் என்ற ஒரு முடிவெடுத்தால் சரியாக வருமா?

வியாதி சிறியதோ பெரியதோ – சரியான மருந்தை, சிகிச்சையை அப்புறம் கொடுக்கலாம் என்று ஒரு மருத்துவர் முடிவெடுத்தால் என்ன ஆவது?

சரியான பருவத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யாமல் அப்புறம் செய்யலாம் என்று ஒரு பெற்றோர் முடிவெடுத்தால் – அந்த பெண்ணின் வாழ்க்கை என்ன ஆவது?

இதற்கு தீர்வு என்ன?

முறையாக, சரியாக, திட்டமிட்டு தள்ளிப்போடாமல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செய்கையுமே உங்களை ஒரு  Fully Organized Personality யாக ஆக்கும்.ஏனென்றால், முடிக்காத வேலைகள் சுமையாகத்தான் உங்கள் தோளில் இருக்கும்.  நீங்கள் சுமைதூக்கி அல்ல என்று உணருங்கள்.

எப்படி தள்ளிப்போடும் பழக்கத்தை விடுவது?

கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களை தயார் படுத்த முதலில் எளிமையான சில பயிற்சிகளை செய்வதுபோல் – இங்கே நான் சொல்லும் சில எளிமையான மாற்றங்களை உங்கள் அன்றாட வாழ்வுக்குள் கொண்டு வாருங்கள். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு இந்த பயிற்சிமுறையும் உங்களை சில நாட்களிலேயே ஒரு Fully Organized Personality யாக மாற்றும்.

பயிர்ச்சி முறை :

1. உங்கள் அறையிலிருந்து 10 பொருட்களை எடுத்து – தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை தூர எறியுங்கள்.

2. தினமும் – உங்களுக்கு தேவையில்லாத ஒரு விஷயத்தை உங்களிடமிருந்து விரட்டுங்கள். அது உங்கள் சோம்பலாக இருக்கலாம், அதிகமான தூக்கமாக இருக்கலாம், இப்படி பல.   கண்டுபிடித்து விரட்டுங்கள்.

3. உங்கள் புத்தக அலமாரியில் நீங்கள் படிக்காத புத்தகங்கள், ஏற்கனவே படித்து முடித்த புத்தகங்கள், எழுதாத, பயன் படுத்தாத பேனாக்கள் இவற்றை எல்லாம் எடுத்துவிட்டு – தேவையான புத்தகங்களை மட்டும் வைக்க பழகுங்கள்.

4. உங்கள் மேஜையில் உங்களது படிப்பு சம்மந்தமான, வாழ்வின் வெற்றிக்கான விஷயங்களுக்கு மட்டும் இடம் கொடுங்கள்.

அதை அடிக்கடி சுத்தம் செய்து ஒழுங்காக பராமரியுங்கள்.

பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய தாள்களை, குறிப்புகளை உடனுக்குடன் File செய்து தனியாக பெயரிட்டு பராமரியுங்கள்.

5. இந்த செயல்களை மெல்ல மெல்ல உங்கள் குடும்ப கடமைகளில் செயல்படுத்த துவங்குங்கள்.  பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைகின்றதா என்று சீர்தூக்கி பாருங்கள்.

6. மாற்றம் மலர மலர – உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

இந்த விஷயங்கள் படிப்பதற்கு சுலபமாக தோன்றினாலும், செய்வதற்கு சிரமம் உண்டு.

ஏனென்றால் எல்லா பொருளும் உங்களுக்கு தேவையானவையாகவே தோன்றும்.

இதை தொடர்ந்து பயிர்ச்சி செய்யும் போது – ஒரு தெளிவு உங்களுக்குள் வரும்.

உங்கள் படிக்கும் அறை, நீங்கள் வசிக்கும் அறையின் சூழ்நிலை (Atomsphere) நீங்கள் எப்போது நுழைந்தாலும் அமைதியையும், ஆனந்தத்தையும் தூண்டும் விதமாக உங்களால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமல்ல, உங்கள் இல்லமும் தூய்மையான, சரியான, அழகான, நேர்த்தியான இடமாய் இருக்கும்.

பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் இருந்தால், வீடு அழுக்கும், குப்பையும், அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் துணியும், பாத்திரமும், புத்தகமுமாய் – விருந்தினர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் முகம் சுளிப்பதாகவே இருக்கும்.

இவை இல்லாமல், எல்லோரும் பாராட்டும் வண்ணம் வாழ வேண்டும் என்றால் “பிறகு பிறகு” என்ற சொல்லுக்கு நீங்கள் விடைகொடுத்தே ஆக வேண்டும்.

இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதில் மட்டுமல்ல – உங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.

அதுவே உங்கள் வெற்றி.

அந்த வெற்றி உங்களை தொடர என் வாழ்த்துக்கள்.

திசைகளை தீர்மானியுங்கள் !  திட்டமிடுங்கள் !  செயல்படுங்கள் !

கேளாய் மகனே கேளொரு வார்த்தை !  நாளைய உலகின் நாயகன் நீயே !

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment