Home » Articles » கடனே உன்னை வசமாக்குவேன்

 
கடனே உன்னை வசமாக்குவேன்


ஆசிரியர் குழு
Author:

N. ஈஸ்வர கிருஷ்ணன்,

Chartered Accountant

இன்றைய சூழ்நிலையில் கடன் என்பது வியாபாரத்தில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகத் திகழ்கிறது. வியாபாரத்தில் வெற்றியை ஈட்ட வேண்டுமெனில் ஒரு வியாபாரிக்கு கடனைக் கையாள்வது என்பது ஒரு முக்கியமான திறமையாகக் கருதப்படுகிறது. ஆனால்,  பெரும்பாலான தொழில் முனைவோருக்கு கடனை கையாளும் ஆற்றல் அவ்வளவு எளிதாக வருவதில்லை.

இன்றைய மாறி வரும் பொருளாதார சூழலில் பல சிறு மற்றும் குறு வியாபாரங்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதை நாம் அனைரும் நன்கு அறிவோம். பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திப்பதற்கு சரியான நிதி மேலாண்மையைப் பின்பற்றாததே காரணம் எனக் கூறுவேன். அதிலும் சரியான கடன் மேலாண்மை கொள்கைகள் மற்றும் யுக்திகள் செயல்படுத்தப்படாததே ஒரு முக்கியமான காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே, வியாபார பயன்பாட்டிற்காக கடன் வாங்கும் தொழில் முனைவோர் வாங்கிய கடனை சிறப்பான முறையில் கையாளுவதற்கான சில அம்சங்கள் குறித்தும் கடன், வட்டி சுமையைக் குறைப்பதற்கான சில ஆலோசனைகள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.

கடனுக்கான தேவையைப் புரிந்து கொள்ளுதல்:

வங்கியில் கடன் வாங்குவதற்கு முன், தேவை அறிந்து கடன் வாங்குவது மிகவும் முக்கியமான விஷயமாகும். வங்கிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்று ஒவ்வோருவர் வீட்டு வாசல் தேடி வந்து கடன் வழங்கும் ஒரு விநோத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தொழில் முனைவோருக்கான மூலதனத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாம் வகை நிரிந்தர மூலதனம் (Fixed capital), இரண்டாம் வகை சூழலும் மூலதனம் (Working capital). நிரந்தர மூலதனம் என்பது நாம் தொழில் நாம் தொழில் தொடங்க தேவையான கட்டுமான தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படும் மூலமனமாகும். தொழில் தொடங்க தேவையான இடம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் இதர தேவைகள் அத்தொழிலுக்கு இன்றியமையாத தேவையாகும்.  மேலும் புதிதாக தொழில் தொடங்குவோரோ அல்லது தொழில் அபிவிருத்தி செய்பவரோ தொழில் தொடங்குமுன் நிரந்தரத் தேவைக்காக கணிசமான ஒரு தொகையை முதலீடாகக் கொண்டு வர வேண்டும்.

சூழலும் மூலதனம் என்பது தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி செலவு, தொழிலாளர்களுக்கான கூலி, சரக்குகளின் இருப்பு தேவைகள் மற்றும் விற்பனை கடன் போன்ற விஷயங்களுக்காக தேவைப்படும் மூலதனமாகும். இந்த வகை மூலதனம் தொழிலின் அளவைப் பொறுத்து மாறுபடும். அதே போல வெவ்வேறு காலகட்டங்களில் இதன் தேவைûயானது மாறிக் கொண்டே வரும் மேலும் வியாபாரத்தின் வரவு செலவு நிலைக் கேற்ப சுழன்று கொண்டே இருக்கும்.

எனவே, தொழில் முனைவோர் தங்கள் நிதி தேவையைச் சரிவர புரிந்து கொள்ள வில்லையென்றால் கடன் பெறுவதில் அவர்களுக்கு குழப்பம் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நிரந்தர மூலதனத்திற்கான தேவைக்கு நெடுங்கால கடன் வசதியை நாட வேண்டும். ஏனெனில் நிரந்தர தேவைகள் கணிசமான தொகையாக இருக்கும். அதை திருப்பிச் செலுத்த கொஞ்சம் அதிகமான கால அவகாசம் தேவைப்படும். அதே போல சுழலும் மூலதன தேவைக்குக் குறுகிய கால கடன் வசதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இவ்வகை நிதி தேவைகளை தொழில் புழங்கும் பண சுழற்சியைக் கொண்டு செலுத்திவிடலாம்.

நிதி இருப்பு நிûமை குறித்து ஆய்வு

கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு முன் ஒருவர் தன் தொழிலின் நிதி நிலவரம் குறித்தும், நிதி தேவை மற்றும் நிதி பற்றாக்குறை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் தொழிலின் தற்போதைய நிதி கையிருப்பு, முதலீட்டாளரின் நிதி பங்களிப்பு, எதிர்கால பணவரவு செலவு குறித்த பட்டியல், எதிர்கால கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதி தேவைகள், எதிர்கால வர்த்தக தேவைகளுக்கான நிதி தேவைகள் குறித்த ஆய்வு மேற்கொள்வது மிக முக்கியமானதொரு பணியாகும்.

இந்த ஆய்வின் இறுதியில் நிதி நிலவரம் குறித்த ஒரு முழுமையான புரிதல் ஏற்படும். முதலீட்டாளர்கள் அல்லது உரிமையாளர்கள் எவ்வளவு நிதி திரட்ட வேண்டும் மற்றும் வங்கிகள் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு தொகை கடனாகப் பெற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த ஆய்வு உதவியாக இருக்கும்.

முறையான ஒரு ஆய்வை  மேற்கொள்ளாமலோ அல்லது சரிவர மேற்கொள்ளப்படாத ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளோ தொழில் முனைவோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தம் நிதி தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாங்கப்படும் கடன் சுமையை சமாளிப்பதென்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. உதாரணமாக கட்டுமான தேவைகளை உணராமல் குறுகிய கால அடிப்படையில் வாங்கப்படும் கடன் சுமை, அந்த வியபாரிக்கு ஒரு நிதி முடக்கத்தை ஏற்படுத்தி, கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை உண்டாக்கும். பல தொழில்கள் கடன் சுமையால் முடங்கி போவதற்கு இம்மாதிரி சரியான ஆய்வை மேற்கொள்ளாது எடுக்கப்படும் முடிவுகளே காரணமாகும்.

திட்டமிட்டு செயல்படுதல்

கடன் வாங்குவதற்கு முன், ஒரு முழுமையான நிதி திட்டம் (Financial Plan) தயாரிக்க வேண்டும். இது அந்நிறுவனத்தின் வருங்கால வரவு செலவு குறித்தும் கடன் மற்றும் வட்டியை திருப்பி செலுத்த தேவையான நிதி வளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட முன் கணிப்பு திட்டம் ஆகும்.

அந்நிறுவனத்தின் வருங்கால விற்பனை, கொள்முதல், இதர செலவுகள், கடனுக்கான வட்டி, கடன் அல்லது தவணையை செலுத்துவதற்கு தேவையான நிதி வளம், உரிமையாளருக்கு வழங்க வேண்டிய சம்பளம், லாப தொகை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தின் வருங்கால லாப நஷ்ட கணக்கை கணித்து ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டும்.

குறைந்தது அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்காவது ஆண்டு வாரியாக இத்திட்டத்தை தயார் படுதிடல் வேண்டும். எந்த ஒரு செயலையும் முழுமையாகத் திட்டமிட்டு செயலாற்றினால் அதில் வெற்றி என்பது நிச்சயம். அது போல முறையான நிதி திட்டம் தீட்டுவதால் ஏற்படும் தெளிவு மற்றும் நன்மைகள் அந்நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் . குறிப்பாக கடன் வாங்கும் பொழுது அக்கடனின் வட்டி சுமை மற்றும் தவணைகளை சரியாக கையாள இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.

கடன் பயன்பாடு குறித்த அறிதல்

வாங்கிய கடனை எந்த நோக்கத்திற்காக  வாங்குகிறோமோ அந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இன்றைய எதார்த்த உலகில் கடன் வாங்குவதற்கு பல பொய்கள் சொல்லி கடன் தொகை பெற்ற பிறகு அத்தொகையை  வேறு நோக்கத்திற்காகவோ அல்லது உரிமையாளரின் தனிப்பட்ட தேவைகளுக்காகவோ பயன்படுத்தவது பரவலான விஷமாகி விட்டது.  இப்படி தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பணம், குறித்த நேரத்தில்  நிறுவனத்திற்கு போதிய நிதி வளத்தை கொடுக்காது.

நிறுவனத்தின் நிதி நிலைமையில் ஒரு மந்த நிலையை பல நேரங்களில் உருவாக்கிவிடும். கடன் வட்டியையோ அல்லது தவணையையோ திரும்ப செலுத்துவதில் ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கிவிடும். எனவே தொழில் முனைவோர் கடன் வாங்கும் போது அதன் உண்மையான நோக்கத்தை நன்கு தீர்மானித்து கடன் தொகையை உண்மை நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.

கணக்கு சரிபார்த்தல்

ஒவ்வொரு நிறுவனமும் சரியான நேர்த்தில் லாப நஷ்ட கணக்கை சரி பார்த்தல் வேண்டும். பல நேரங்களில் தொழில் முனைவோர் தங்கள் வியாபாரம் குறித்த கணக்கை பராமரித்தல் மெத்தனம்  காட்டுகிறார்கள். பலர் விற்பனையிலோ, உற்பத்தியிலோ காட்டும் தீவிரத்தை கணக்கு வழக்குகளில் காட்டுவதில்லை என்பது கவலைக்குரியது.

எப்படி ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் முக்கியமோ அப்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் நிதி ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எப்படி பரிசோதனை இன்றி நமது தேக ஆரோக்கியத்தை கண்டறிய முடியாதோ அப்படி கணக்கை சரி பார்க்காமல் ஒரு நிறுவனத்தின் நிதி நிலவரத்தை கண்டறிய முடியாது. வியாபாரத்தில் ஏற்படும் நிதி சிக்கல்களை சரியான நேரத்தில் கண்டறிந்தால் அதற்கான மாற்று ஆலோசனைகளையும், திட்டங்களையும் சரியான நேரத்தில் கண்டறிந்தால் அதற்கான மாற்று ஆலோசனைகளையும், திட்டங்களையும் சரியான நேரத்தில் செய்து பல சிக்கல்களிலிருந்தும் நம் தொழலை காப்பாற்றிக் கொள்ளலாம்.

உரிய நேரத்தில் வட்டியை செலுத்துவது கணக்குகளை சரியாக பராமரிப்பது, தணிக்கைக்கு அவ்வப்போது கணக்கை உட்படுத்தி சரி பார்ப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

கடன் அன்பை முறிக்கும் என்றும், கடன் இல்லாத வாழ்க்கையே சிற்ந்த வாழ்க்கை என்றும் நம் முன்னோர்கள் வாழ்ந்து சென்றிருக்கலாம். ஆனால், இன்றைய போட்டியமான சூழலில் தொழில் வளர்ச்சிக்கும், போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கும் கடன் வாங்குவது என்பது அவசியமான தேவையாகிறது. சமயோஜிதமும் புத்திசாலித்தனமுமே இன்றைக்கு ஒருவரை வெற்றியாளராக மாற்றுகிறது. எனவே மேற்கூறிய கருத்துக்களைக் கடைபிடித்து உங்கள் தொழிலின் கடன் சுமையை நிர்வகிக்கக் கற்றுக் கொண்டால் எந்த ஒரு கடன் சுமையையும் நீங்கள் இலகுவாக கடந்து செல்லலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2019

எண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து
ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)
நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்
கடனே உன்னை வசமாக்குவேன்
வெற்றிலை இரகசியம்
உள்ளுணர்வு
நில்! கவனி !! புறப்படு !!! – 3
சாலை விதி சாதனைக்கு வழி
தன்னம்பிக்கை மேடை