Home » Articles » சாலை விதி சாதனைக்கு வழி

 
சாலை விதி சாதனைக்கு வழி


ஆசிரியர் குழு
Author:

N. பழனிவேலு,

R.T.O. கோபி

பிறந்ததே சாதிக்கத்தானே! சாதனை வாழ்க்கைக்கு நீண்ட ஆயுள் இன்றியமையாதது. நீண்ட ஆயுளுக்கு இடையூறாக நோய், விபத்து போன்ற வாழ்க்கைச் சூழல்கள் அமைந்துவிடுகின்றது. இதில் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் காரணிகளில் சாலை விபத்து முதன்மையாக உள்ளதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்ற முறையில் சாலை விதிகளைக் கடைபிடிப்பதின் அவசியத்தை தன்னம்பிக்கை இதழின் வாசகர்களிடம் கொண்டு செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விபத்தில்லா வாகனப் பயணத்திற்கு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போமா!!

பாதசாரிகள் செய்யும் தவறுகளும் பாதுகாப்பு வழிமுறைகளும்.

நடைபாதை இல்லாத இடங்களில் உள்ள சாலைகளில் நடப்போர் சாலையின் வலது ஓரங்களில் நடந்து செல்ல வேண்டும். இதனால் எதிரில் வரும் வாகனங்களின் சூழ்நிலையை அறிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விலகிச் செல்ல முடியும். மாறாக இடதுபுறம் நடந்தால் பின்வரும் வாகனங்கள் மோதுகிற சூழ்நிலையினை தவிர்க்க இயலாது.

பாதசாரிகள் செல்போன் பேசிக்கொண்டும், குடிபோதையில் கவனக் குறைவோடும் பாதையைக் கடந்து செல்வதால் விபத்திற்கு ஆளாகின்றனர். மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது சற்றே நிதானித்தும், பொறுத்திருந்தும் கடக்காமல் அவசரப்பட்டு குறுக்கே ஓடி விபத்தில் சிக்கி  உயிரை இழப்பது மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் இடையூரை உண்டாக்குகின்றனர்.

சாதாரணமாக 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு வாகனம் ஒரு விநாடிக்கு 17 மீட்டர் கடந்து விடும். அதுவே 120 கி.மீ வேகமெனில் 35 மீட்டரை கடந்து விடும். இக்குறுகிய இடைவெளியில் குறுக்கே செல்லும் எந்த ஒரு விஷயமும் 100 சதவீதம் விபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

சாலையில் ஜோடியாக செல்லாது ஒருவர் பின் ஒருவராக செல்வதே சரியானது. வெள்ளை/மஞ்சள் கலந்த உடைகளை அணிந்து செல்வோர் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் போது மற்ற வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரிய வசதி என்பதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகளைப் பாதுகாப்புடன் கடந்து செல்ல இயலும்.

சாலை விதிகளில் நேர சிக்கனத்தைப் பார்க்க வேண்டாம் என்பது என் கருத்து.

இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் செய்யும் தவறுகளும் ,வழிமுறைகளும்.

  • ஓட்டுநர் உரிமமும், இன்சூரன்சும் மிக முக்கியம் என்பதை தெரிந்திருக்க  வேண்டும்.
  • இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேர் கூட செல்கிறார்கள். இதனால் அதிக எடை காரணமாக பிரேக் நிற்கமால், நிலைப்புத் தன்மையை இழந்து விபத்து உண்டாகிறது.
  • குடிபோதையில் வாகனம் ஓட்டி இறப்போர் ஏராளம் ( குடி குடியைக் கெடுக்கும்)
  • காவல்துறையின் சர்வேபடி சாலையில் ஒரு கி.மீக்கு இருவர் வீதம் செல்போன் பேசியபடி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகம்.
  • பொறுமையில்லாத, கட்டுப்பாடற்ற வேகத்தினால் விபத்துகள் நிறைய உண்டாகிறது. நகர சாலையில் அதிகபட்சமாக 40 கி.மீ. பிற சாலைகளில் 50 கி.மீ நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ வேகம் பாதுகாப்பானது.
  • குறுகலான இடைவெளியில் ஓட்டுவது விபத்திற்கு வழிவகுக்கும்.
  • சைடு மிரர் பார்க்காமல் சைகையின்றி திடீரென சாலையைக் கடந்து தானும் விபத்தில் சிக்கி,பெரிய வாகன ஓட்டிகளையும் விபத்துக்குள்ளாக்கி இறப்போரும் உண்டு.
  • இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
  • இரு சக்கர வாகன உயிரிழப்பிற்கு பெரும்பாலும் காரணம் தலையில் ஏற்படும் காயமே என்பதால் ஹெல்மெட்டின் அவசியம் உணர்ந்து அணிந்து செல்ல வேண்டும்.
  • மித வேகமே மிக நன்று என்பதால் 100 c.c. க்கள் உள்ள எஞ்சின் திறன்கொண்ட இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு, சவுகரியம், எரிபொருள் சிக்கனம், விலையில் சிக்கனம் போன்ற பலன்களை அடையலாம். இதை விடுத்து, பல லட்சம் விலை கொண்ட ரேஸ் பைக்குள் வாங்கி நம் ஊர் சாலைகளில் ஓட்ட முயற்சித்து உயிரிழப்பது நாட்டுக்கே கேடானது; பரிதாபமானது; வேண்டாமே விபரீதம்!

கார் ஓட்டுநர், பயணிப்போர் செய்யும் தவறுகளும், பாதுகாப்பு வழிமுறைகளும்

பாதசாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். பேருந்து, லாரிகளை குறைந்த இடைவெளியில் பின் தொடர்ந்து செல்லாமல் இருத்தல் வேண்டும். அனைத்து பொது சாலைகளிலும் Keep left விதிப்படி இடது புறம் மட்டுமே செல்லவும். வலதுபுறம் மட்டுமே உரிய சிக்னல் கொடுத்து முந்த வேண்டும்.

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடல் வேண்டும்.

ஓய்வற்ற இரவு நேர நீண்டதூரப் பயணத்தை தவிர்த்தல் வேண்டும்.

சரியாக சாதாரண சாலைகளில் கார் ஓட்டத் தெரியாதோர், தேசிய நெடுஞ்சாலைகளில் (Express way) சாகசம் செய்ய நினைத்து விபத்தை உண்டாக்கி இறப்பைத் தழுவுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட பயிற்சி, நிதானம், எச்சரிக்கை தேவை.

சீட்பெல்ட் என்பது தலைக்காயம் தவிர்க்கும். விபத்தின் போது உடலை நகரவிடாமல் பாதுகாக்கும் என்பதால் வாகனம் உருண்டாலும், ஏர்பேக் விரிந்தாலும் சீட்பெல்ட் அணிந்தால் மட்டுமே உயிரை பாதுகாக்க முடியும் என்பதால்  சீட்பெல்ட் அணிவது அவசியம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை தடுப்பின் மீது மோதி ஆபத்தில் உயிரிழப்போர் ஏராளம். உரிய எச்சரிக்கை பலகைகளோ, பிரதிபலிப்பான்களோ இல்லாத இவ்வாறான சாலைத் தடுப்புகள் உண்டு என்பதால் கவனமாக ஓட்ட வேண்டும். ஓவர்டேக் செய்யும் முன் எதிரில் வாகனம் (அ) சாலைத்தடுப்பு (அ) குறுகிய பாலம் (அ) குறுகிய வளைவு இவை போன்ற இடையூறு உள்ளதா என பார்க்க வேண்டும்.

ஆட்டோமேடிக் சிக்னல் அல்லது அணைந்து எரியும் சிவப்பு எச்சரிக்கைச் சின்னம் இல்லாத இடத்தில் நிதானத்துடனும், மிகுந்த எச்சரிக்கையோடும் சாலையைக் கடக்க வேண்டும்.

இணைச் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வந்து சேரும் போது நில்! கவனி!! செல்!!! விதியினைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

இலகுரக சரக்கு வாகனம் ஓட்டுவோர் கவனத்திற்கு

குறிப்பாக டாடா ஏஸ், தோஸ்த், மகிந்திரா பிக் அப் போன்ற வாகன ஓட்டுநர்களில் பலருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை. விபத்து ஏற்படின் இன்சூரன்சை கிளைம் செய்ய இயலாது.  இவர்களில் பலர் இடது ஓரமாகச் செல்லாது நடுசாலை வரை அடைத்துக் கொள்கிறார்கள். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் வெல்வது அநேகமாக பரவலாக நடைபெற்று ஆபத்தாக முடிகிறது. அளவுக்கு அதிகமான சுமையினை ஏற்றிச் செல்வது தவறு. மேலும் அதிகபடியான ஹாரன்கள், முகப்பு விளக்குகளை மாட்டி எரிய விடுவதால் பேட்டரி சூடாகி வாகனம் எரிந்து விடுவதும் உண்டு.

கனரக வாகன ஓட்டுநர் கவனத்திற்கு

ஓட்டுநர் உள்பட கேபினுள் மூவர் மட்டுமே இருத்தல் வேண்டும். பாடியை விட்டு வெளிப்புறம் சுமை நீட்டியிருக்கக் கூடாது. மணல், செங்கல் சுமைகளை தார்பாய் கொண்டு பாதுகாப்புடன் மூடி எடுத்துச் செல்ல வேண்டும். குறுகிய சாலைகளில் வேகத்தைக் குறைத்து விபத்தினை தவிர்க்க வேண்டும். மலைப் பாதைகளில் செல்லும் போது ஏறும் வாகனத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போதிய ஓய்வை எடுத்த பின்பே ஓட்ட வேண்டும்.

ரவுண்டானா திருப்பத்தில் திரும்பும்பொழுது ஏற்கனவே திரும்பிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செல்ல வேண்டும். பள்ளி, மருத்துவ, நீதிமன்ற வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள், சாலைப்பணி நடைபெறும் இடங்களில் ஹாரன் அடிக்கக்கூடாது. வாகனங்களில் உள்ள அசல் விளக்குகளைத் தவிர L.E.D., கூடுதல் விளக்குகளைப் பொருத்தக்கூடாது.

சாலை விதிகளைப் பின்பற்றி விபத்தைத் தவிர்த்து,

உயிரின் மகத்துவம் உணர்வோம்!

சாதனை வாழ்க்கையை மேற்கொள்வோம் !!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2019

எண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து
ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)
நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்
கடனே உன்னை வசமாக்குவேன்
வெற்றிலை இரகசியம்
உள்ளுணர்வு
நில்! கவனி !! புறப்படு !!! – 3
சாலை விதி சாதனைக்கு வழி
தன்னம்பிக்கை மேடை