Dr.N. நாகரத்னம் M.B.B.S.,M.D.,(O.G).,FRM.,DRM(GERMANY)
இயக்குநர், ரத்னா மருத்துவமனை
(பெண்கள் மகப்பேறு மற்றும்
குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனை)
செக்காலை, காரைக்குடி.
இலட்சியங்கள் கனவுகள் மலரட்டும், அவை
செய்யும் பணியில் மணக்கட்டும்
புதிய முயற்சிகள் தொடரட்டும், அவை
புத்துணர்வாய் நெஞ்சில் துளிர்க்கட்டும்
என்னும் தன்னம்பிக்கை வரிகளை தன்னகத்தே கொண்டு தான் கொண்ட மருத்துவத்துறையில் சாதித்து வரும் சாதனைப் பெண்மணி.
தான் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக கற்ற மருத்துவத்தை சொந்த ஊரிலே செய்ய வேண்டும் என்று தன்னால் முடிந்த மருத்துவ சேவையை செய்து வருபவர்.
குழந்தையில்லா தம்பதியினர் யாரும் இருந்திட கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவ புதுமைகளைப் புகுத்தி வரும் மருத்துவர்.
மருத்துவமனை தொடங்கி குறுகிய ஆண்டுகளே ஆனாலும் தான் தொடும் அனைத்தையும் சாதனைகளாகவே முடிக்கும் குணம் கொண்ட ரத்னா மருத்துவமனையின் இயக்குநர் திருமதி. Dr. N. நாகரத்னம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
செட்டிநாட்டுப் புகழ் என்று அழைக்கப்படும் காரைக்குடியில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை டாக்டர் நாகப்பன், தாயார் திருமதி. தெய்வானை. எனக்கு ஒரு சகோதரி. எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது தான். அது தான் என்னுடைய ஆசையும் கனவாகவும் இருந்தது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை தான். என் தந்தை ஒரு கண் மருத்துவர். எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமானவர். அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். தன்னிடம் வருபவர்களை ஒரு நோயாளியாய் பார்க்க மாட்டார், ஒரு உறவினர் போல் அனுசரணையோடு பழகுவார். இதையெல்லாம் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததால் நாமும் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பள்ளிக் கல்வி என்று பார்த்தால் மதுரையில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளி. தொடக்கக் கல்வியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் காரைக்குடியிலுள்ள முத்தையா அழகப்பா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன்.
எம்.பி.பி.எஸ் படிப்பை கோவையில் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி மெடிக்கல் கல்லூரியிலும், M.D(O.G) யை சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா ஆய்வு மையத்திலும் படித்தேன்.
கே: மகப்பேறு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?
திருமணம் ஆன எல்லா தம்பதியனர்களும் நினைப்பது நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது தான். அவ்வாறு குழந்தையில்லாத போது அது குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனையாகிவிடுகிறது. ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறார் என்றால் அது அவரின் தாய்மையின் போது தான். தாய்மை உணர்வைத் தாண்டி இவ்வுலகில் பரிசுத்தமான உறவு எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தாய்மைக்கு பெருமை உண்டு.
ஒவ்வொரு முறையும் குழந்தைப்பிறக்கும் பொழுதும் அந்த பெண் மறுஜென்மம் அடைகிறார். தாய் மற்றும் குழந்தைக்கு நடுவே நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை எண்ணும் போது மனதிற்கு மிகவும் மகிழச்சியாக இருக்கும். அந்தக்குடும்பம் மற்றும் அந்தக் குழந்தை காலம் முழுவதும் சொல்லிக் கொள்ளும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன் என்று இந்த மருத்துவர் தான் நம் பிறக்கும் போது உடன் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளும். இது போன்ற இன்னும் எத்தனையோ சிறப்புகள் மகப்பேறு மருத்துவத்தில் இருக்கிறது.
கே: ரத்னா மருத்துவமனை உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?
நான் படித்த முடித்து சில ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வரும் நிறைய பெண்களின் ஏமாற்றமான எதிர்பார்ப்பு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தையில்லை என்பது தான். அப்போது தான் என் மனதில் உதயமாயின, நாம் ஏன் முழுவதுமாக ஒரு மகப்பேறு சம்மந்தமான மருத்துவம் கொடுக்ககூடாது என்று. இதனால் இதை மென்மேலும் தெரிந்து கொள்ள நினைத்தேன். இதனால் இந்திய முழுவதும் இத்துறை சார்ந்த தேடுதலை தீவிர படுத்தினேன். பல பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டேன்.
கேரளாவில் Fellowship in Reproduction என்னும் துறையை ஒரு ஆண்டு படித்தேன். மேலும் ஜெர்மனியில் கீல் யுனிவர்சிட்டியில் Diploma in Reproductive medicine முடித்தேன். இங்கெல்லாம் படித்த அனுபவம் என்னை மிகவும் வலிமைபடுத்தியது. எதுவும் சாதாரணமாக தொடங்குவதில் எனக்கு ஒரு போதும் உடன்பாடு இருக்காது. ஒன்றை தொடங்குகிறோம் என்றால் அது சார்ந்த அத்துனை தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதால் அனைத்து உபகரணங்களுடன் தொடங்கியது தான் இந்த ரத்னா மருத்துவனை.
கே: குழந்தையில்லா தம்பதியினருக்கு டெஸ்ட்டியூப் பேபி முறை இறுதி தீர்வா?
தற்போது சூழலில் மக்களின் மனநிலை எப்படி மாறியுள்ளது என்றால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தையில்லை என்றால் அது டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தவறான புரிதல்கள் இருக்கிறது.
திருமணம் ஆகி ஒரே ஆண்டில் குழந்தைப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளும் ஆகலாம். சிலருக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லை என்றதும் எங்களை அணுகுவார்கள். அவர்களை சோதித்து பார்த்து அவர்களின் உடலின் சாதாரண பிரச்சனைகள் தான் இருக்கும், மருந்து மாத்திரை மூலமே சரி செய்து விடலாம். மேலும் சிலர் விழிப்புணர்வு இன்றி இருப்பார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதன் மூலமே அவர்கள் கருத்தரித்திருக்கிறார்கள். இப்படி நிறைய தம்பதியினர்கள் நம் மருத்துவமனையில் கருவுற்று இருக்கின்றனர். டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை அனைவருக்கும் பொதுவான தீர்வல்ல.
கே: நம் முன்னோர்களின் காலத்தில் இயற்கையாகவே கருதரித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளதே அது பற்றி சொல்லுங்கள்?
உலகம் முழுவதும் இந்த நிலை மாறியுள்ளதாக சில ஆய்வுத்தகவல்கள் நம்மை எச்சரிக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் காலம் தாழ்த்தி திருமணம் செய்வது உணவுப் பழக்கங்கள், வேலைபளு ஆகியவை.
நம் முன்னோர்கள் சரியான வயதில் திருமணம் செய்தார்கள், சரியான வயதில் குழந்தைகள் பெற்றெடுத்தார்கள். சில குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைக் கூட பார்த்திருக்கிறோம். அப்போது தேவைகள் குறைவாக இருந்தது, குறுகிய வருமானம் இருந்தாலே குடும்பத்தை நடத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது அப்படியில்லை. பட்டங்கள், பணிகள்,சேமிப்புகள் என தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வயது ஆகிவிடுகிறது. திருமணம் ஆனப்பின்னரும் அவர்கள் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வதில்லை, அதற்கும் வருடங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.
ஆண், பெண் இருவரும் வேலைக்கு போகிறார்கள், அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும், வீட்டில் சமைப்பதில்லை, இதனால் கடையிலிருந்து துரித உணவுகள் வாங்கி வந்து உண்கிறார்கள். இதனால் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது, பெண்களுக்கு சரியான மாதவிடாய் ஏற்படுவதில்லை. வேலை செய்யும் இடத்தில் மனஅழுத்தம் போன்றவை குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.
கே: டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுவதற்கான காரணம்?
டெஸ்ட்டியூப் பேபி முறைக்கு போக வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அணுக்கள் மிக குறைவாக அல்லது விந்தணு வெளிப்படாமல் போனால்.
பெண்களுக்கு கருமுட்டை உருவாகாமல் இருந்தால். வயது கூடும் போது பெண்களுக்கு கருமுட்டையின் தன்மை குறைய தொடங்கும். அப்போது முட்டை தானம் பெற்று டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படும்.
கருக் குழாயில் அடைப்பு இருத்தல் போன்ற காரணங்களால் டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுகிறது.
கே: திருமணம் ஆன எல்லோராலும் தாய்மை நிலை அடைய முடியுமா?
இது தான் எங்களின் தளராத முயற்சி. எல்லோரும் தாய்மை நிலையை அடைய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். அதனால் எங்கள் மருத்துவமனையில் இத்துறை சார்ந்த அதிநவீன இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வைத்திருக்கிறோம்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கொடுப்பதில்லை. ஒவ்வொரு தம்பதியனரும் பல விதமான பிரச்சனைகளில் வருவார்கள், அவர்களின் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் அதை சரி செய்ய வேண்டும்.
கர்ப்பப்பையில் இரத்த கசிவு ஏற்படும், இவ்வாறு இருப்பவர்கள் கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினம், அவ்வாறு தரித்தாலும் கரு கலையும் சூழல் எற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் வரும் போதுகூட அவர்களின் உடலை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தைப்பேற்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.[hide]
கே: பொதுவாக டெஸ்ட்டியூப் பேபியின் மூலம் பிறக்கும் குழந்தைகள் சுகப்பிரசவமாகப் பிறப்பதில்லையே அதற்கான காரணம் என்ன?
கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்பதால் இயற்கையாய் கருத்தரிப்பவர்களை விட அதிக அக்கரையாளர்களாக இருப்பார்கள்.
டெஸ்ட்டியூப் பேபியின் மூலம் கருத்தரிப்பவர்கள் பொதுவாக ஓய்விலேயே இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது உடல் அசைவின்றி அமர்ந்தே படுத்துக்கொண்டோ இருப்பார்கள். அவர்களுக்குள் ஒரு வித பயஉணர்வு இருக்கும். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்திருக்கிறோம் ஏதேனும் செய்து எதாவது ஆகிவிடும் என்று என்று நினைப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள்.
நாங்கள் நிறைய உடல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்கிறோம், ஆனாலும் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மனதளவிலும் அவர்கள் தயார்நிலையில் இருப்பதில்லை. அதனால் தான் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை.
கே: உங்களின் மருத்தவப் பயணத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு பற்றி?
நான் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் மறக்க முடியாதவர்களாக தான் இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல ஒரு சிலவற்றைக் கூறலாம்.
ஒரு ஐம்பது வயதுடைய மாதவிடாய் நின்று போன பெண் ஒருவர் எங்களிடம் டெஸ்ட்டியூப் பேபி மூலம் கருத்தரித்திருந்தார், அவர் மிகவும் கிராம பின்னணியை உடையவர், படிக்காதவரும் கூட, அவர்களுக்கு ஒவ்வொன்றையும் புரிய வைத்து, விழிப்புணர்வு கொடுத்து சரியாக கையாண்டு அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து அவர்கள் கையில் கொடுத்தோம்.
மாதவிலக்கு ஆன பின்பும் கருத்தரித்து ஆரோக்கியமான பத்து மாத குழந்தையை பெற்று எடுத்த அவரின் கண்ணீர் துளிகளை என்னால் என்றும் மறக்க முடியாது.
அது போலவே பிறப்பிலே இரட்டை கர்ப்பபை இருந்த ஒரு பெண் பல இடங்களில் சிகிச்சை செய்தும் தனக்கான பிரச்சனை என்னவென்று தெரியாமல் எங்களை நாடி வந்தார்கள். இரண்டு கருக்குழாயிலும் அடைப்பு இருந்தது. இது மிகவும் சவாலான விஷயம். அவர்களை பரிசோதித்து, இரண்டு கர்ப்பபையை கண்டறிந்து ஒன்றாக்கி, கருக்குழாய் அடைப்பை நீக்கி இயற்கையான முறையில் சிகிச்சை அளித்து அவர்களுக்கும் ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது. இது போன்ற நிகழ்வுகள் மறக்கமுடியாதவை. இன்னும் பல.
கே: நகரப் பகுதியில் தொடங்குவதை விட காரைக்குடி போன்ற டவுண் பகுதியில் தொடங்கியதன் காரணம் என்ன?
செட்டிநாடு என்றாலே உணவு பாரம்பரியமிக்க ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. அது போல எங்கள் மருத்துவமனையும் இந்த பகுதியில் பெயரெடுக்க வேண்டும். என்னுடைய ஒரே நோக்கம் ஏழை எளிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு இந்த சிகிச்சை எட்டாக்கனியாக இருந்துள்ளது, அதை மாற்றி அவர்களும் குழந்தை செல்வம் பெற்று பயனடைய வேண்டும் என்பது தான்.
ஏதேனும் பிரச்சனை என்றால் நகரப் பகுதிக்கு செல்லும் சூழலில் இன்று நகரத்தில் இருப்பவர்கள் கூட எங்களை நாடி வருகிறார்கள் அதற்கெல்லாம் காரணம் எங்களின் சிகிச்சை முறையும் அணுகுமுறையும் தான்.
மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து நிறைய பேர் வருகிறார்கள். அது மட்டுமின்றி துபாய், அந்தமான், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தைப்பேறுடன் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.
கே: உங்கள் மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றி?
குழந்தையின்மை பிரச்சனைக்கு வருபவர்கள் அதிகபடியான மன அழுத்ததில் இருப்பார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்றாக கேட்டறிவோம். கேட்டறிந்து உடன் நேரடியாக மருத்துவம் செய்வதில்லை. அவர்களுக்கு புரியும் படி கவுன்சிலிங் கொடுப்போம், கவுன்சலிங் கொடுக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவம் பற்றி நன்றாகப் புரிய வைப்போம்.
ஆண், பெண் என தனித்தனியே பிரச்சனைகள் கேட்டறிந்து அவர்களின் உடல் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.
எங்கள் மருத்துவமனையில் கட்டணம் மிகவும் குறைவு, எல்லாத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய அளவில் தான் கட்டணங்கள் வாங்கப்படுகிறது. இங்கு அதிநவீன ICSI- IMSI, PICSI செய்யப்படுகிறது
ஆண்களுக்கு விந்து வெளிப்படாத தன்மையில் (OBSTRUCTIVE AZOOSPERMIA) இருப்பவர்களின் உடலில் ஊசியின் மூலம் உயிருள்ள விந்தணுக்களை (TESA, PESA) எடுத்து அதன் மூலமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. Donor விருப்பம் இல்லாதவர்கள் இந்த நவீன சிகிச்சையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.
All in one Roof குழந்தையின்மை பிரச்சனைக்காக வரும் தம்பதியருக்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் நம் மருத்துவமனையில் உள்ளது.
கே: கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி?
கர்ப்பகால பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
துரித உணவுகளை முழுவதுமாக தவிர்த்திடுதல் நல்லது.
மருத்துவர் கூறும் அறிவுரைகளை பின்பற்றி சுகமாக கர்ப்பக் காலத்தில் மகிழச்சியுடன் இருக்கலாம்.
கே: குடும்பத்தினரிடையே நேர செலவழிப்பு என்பது எப்படி இருக்கிறது?
என்னுடைய கணவர் டாக்டர் அருணாச்சலம் அவர்கள். அவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையாளராக இருக்கிறார், என்னுடைய வெற்றிக்கு முதுகெழும்பாகவும், உந்து சக்தியாகவும் இருந்து செயல்படுகிறார். மருத்துவப் பணியைப் பற்றி நன்கு அறிந்தவர். எனது இந்தப் பயணத்திற்கு முழு உதவியும் தூண்டுகோலாகவும் இருப்பவர். நேரத்தை நாங்கள் சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறோம். எனக்கு ஒரு மகள் திவ்யதர்ஷினி பள்ளிப்படித்து வருகிறார். இவர் எங்கள் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். எங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். எங்கள் பணியில் நான் முழுமையாக ஈடுபட நன்முறையில் ஒத்துழைப்பு கொடுத்து, என் சிகிச்சையின் வெற்றியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து நன்கு ஊக்குவிப்பார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள், அது எங்கள் குடும்பத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். திருமணமாகி குழந்தைப் பிறந்தவுடன் தான் என் மேற்படிப்புகளை தொடர்ந்தேன். இதற்கு பெரிதும் காரணமாய் இருந்தவர்கள், என் பெற்றோர் மற்றும் என் கணவர், கணவரின் பெற்றோர் என அனைவரின் ஒத்துழைப்பும், ஊக்கமும், புரிதல் தன்மையும் தான் என்னை இன்று வரை இத்துறையில் நீண்ட பயணம் மேற்கொள்ள உதவியது.
மருத்துவர் என்றாலே நேர செலவழிப்பு என்பது மருத்துவமனையில் தான் இருக்கும். என்னை பொறுத்தவரையும் அப்படித்தான் நான் எப்போதும் மருத்துவமனை என்றே இருப்பேன்.
கே: மருத்துவமனை தொடங்கிய தன் நோக்கம் நிறைவேறி விட்டதாக நினைக்கிறீர்களா?
மருத்துவசேவை என்பது ஒரு தொடர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு வெற்றி தான். அந்த வெற்றி அதோடு நிற்பதில்லை. புதிய புதிய தேடுதலை நோக்கி நாங்கள் பயணம் செய்து கொண்டே தான் இருக்கிறோம்.
கருத்தரித்த நாள் முதல் அப்பெண்களை முறையாக கவனித்து, குழந்தை வளர்ச்சியை ஒவ்வொரு மாதமும் பரிசோதித்து, அக்குழந்தைகளை முழுமையாகப் பாதுகாத்து அவர்களின் பெற்றோர்களின் கையில் குழந்தையை கொடுக்கும் பொழுது அவர்கள் அடையும் ஆனந்தத்தை வார்த்தையால் சொல்லி விட முடியாது.
கே: எதிர்காலத்திட்டம் பற்றி?
எந்த வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று தான் யாரும் தோல்வியை தேடி வாங்கிக் கொள்வதில்லை.
வெற்றிக்கு நேர்மறை தோல்வி, மருத்துவத் துறையிலும் இது இயல்பு தான் என்றாலும் தோல்வி சதவீதத்திலிருந்து வெற்றி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.
இதுவரை 500 க்கும் மேற்பட்ட டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை கொடுத்திருக்கிறோம். அதில் 75 சதவீதம் வெற்றியில் முடிந்திருக்கிறது. மேலும் இதை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சை முறைகளும் இங்கு வந்து விட்டது.
நம் துறை சார்ந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நம் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
எல்லோரும் தாய்மை நிலையை அடைய
எங்களால் ஆன முயற்சியை மகிழ்ச்சியாய் கொடுப்போம்…
நேர்காணல்: விக்ரன் ஜெயராமன்[/hide]
இந்த இதழை மேலும்