Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14


ஞானசேகரன் தே
Author:

மழுப்பல்களை நிறுத்துங்கள்

(Stop the Excuses) 

இந்த நூலினை ஆங்கிலத்தில் வேய்ன் டையர் (Wayne Dyer) எழுதியிருக்கின்றார். ( இந்நூலை தமிழில் அகிலா இராம சுப்ரமணியன் மொழிபெயர்த்துள்ளார். இதனை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது) இந்நூல் ஒரு வகையில் மனித வாழ்வில் நிரந்தரமாக இடம்பிடித்துள்ள என்னால் முடியாது நான் எதற்கும் லாயக்கற்றவன் என்பது போன்ற சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கி அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று கூறுகிறது. நாம் ஆழ்மனதில் கொண்டுள்ள தனிப்பட்ட நம்பிக்கைகள் அதாவது நம்முடைய சோகம், ஆரோக்கியமின்மை, ஏழ்மை, துன்பம், அதிர்ஷ்டமின்மை, கோபம், கேட்டது கிடைக்காது போன்ற சிந்தனைகள் ஆகியன நமது மரபுவழிப்பட்டது என்று நம்பி வருகின்றோம். இன்றைய அறிவியல் ஆய்வு 95சதவிகிதம் பேருக்கு மரபியல் காரணங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை; அவர்களாகவே அதற்குள் கட்டுண்டு போனால் தவிர என்று சொல்வதாக வேய்ன் டையர் குறிப்பிடுகின்றார். என்னால் செய்யமுடியாது என்று ஏதேனும் சாக்குப் போக்குகள் சொல்வதைத்தான் வேயன் டையர் மழுப்பல்கள் (Excuses) என்று கூறுகின்றார். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மழுப்பல்களை முதலில் விட்டொழிக்க வேண்டும். மழுப்பல்களை எப்படி விடுவது என்பதை ஆராய்ந்து இந்நூல் ஒரு தத்துவ நோக்கில் சொல்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான சிந்தனைகள் தாவே எனும் கடவுள் சிந்தனைகளைத் தழுவிச் சொல்லப்பட்டுள்ளது.

பிரபஞ்ச விதிக்கேற்ப செயல்படுங்கள், மாறுதல் என்பது தானே நடக்கும் என்பது தாவேவின் கொள்கை. தாவ் என்பது கடவுளைக் குறிக்கும். கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கின்றார். மனித மனம் என்பது கடவுளின் எல்லையே இல்லாத ஆற்றலின் ஒரு பகுதி. இந்தச் சிந்தனை இந்நூல் முழுவதும் இருக்கின்றது.

நல்லதே செய்யுங்கள் – கெடுதல் செய்யாதீர்கள்

உங்கள் எண்ணங்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கத்தை அறிந்துகொள்ளுங்கள்; நல்லதையே செய்யுங்கள், கெடுதல் செய்யாதீர்கள், கெட்ட சிந்தனைகள் உங்களைக் கட்டுப்படுத்தும் செயல்களையே செய்யத் தூண்டும். மாறாக நல்ல சிந்தனைகள் உங்களை மேன்மையுறச் செய்து மகிழ்ச்சியையும், வெற்றியையும் அளிக்கும். நல்லது செய்தல் என்ற இக்கருத்தை வலியுறுத்தும் சீன நாட்டில் வழங்கும் ஒரு கதையை வேய்ன் டையர் தம் நூலில் எடுத்துக்காட்டுகின்றார்.

பல காலத்திற்கு முன் ஒரு சீன ஞானி இருந்தார். அவர் தினமும் தியானம் செய்ய ஒரு மரத்தில் சாய்ந்துகொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். என்ன புயலடித்தாலும் மரத்தின் ஒரு கிளையில் வசதியாக உட்கார்ந்து கொள்வதால் அவரை பறவைக் கூடு என்று கிராமத்தினர் அழைத்தனர். அம்மரத்தின் வழியாக வேட்டையாடவும், சுள்ளி பொறுக்கவும் பலர் சென்றனர். சிலர் தங்கள் கவலைகளை அந்த ஞானியிடம் பகிர்ந்து கொண்டனர். அவருடைய கருணை மிகுந்த சொற்களால் அம்மக்களிடையே அவர் புகழ்பெற்றார்.

பக்கத்திலிருந்த கிராமங்களிலும் அவர் புகழ் பரவியது. நெடுந்தூரத்திலிருந்து அவரைப் பார்க்க மக்கள் வந்தனர். அம்மாநிலத்தின் ஆளுநரும் அவரைப் பார்த்து ஆசி பெற நினைத்து, அவரைத் தேடி வந்தபோது பறவைக் கூடு ஒரு மரத்தின் மேல் வசந்தகாலப் பறவைகளின் இனிய ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஆளுநர் அவரைப் பார்த்து நான் இந்த மாநிலத்தின் ஆளுநர், நெடுந்தொலைவிலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகின்றேன் என்று கூறினார். பின்னர் இதுவரை வந்த ஞானிகளின் முக்கிய போதனை என்ன? புத்தரின் போதனை என்ன? என்று கேட்டார். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. இலைகளின் சலசலப்பு மட்டும் கேட்டது. பறவைக்கூடு சற்று நேரம் கழித்து அளித்த பதில் நல்லதே செய்யுங்கள் – கெடுதல் செய்யாதீர்கள் இதுவே புத்தரின் போதனை. இது மிக எளிதான தத்துவமாகத் தோன்றவே ஆளுநர் எரிச்சலடைந்தார். இதற்காகவா நான் இரண்டு நாட்கள் நடந்தேன். என் மூன்று வயதிலிருந்தே இது எனக்குத் தெரியுமே என்று கூறினார். உடனே அந்த ஞானி கூறினார். ஆம்! மூன்று வயது பாலகர்களுக்குக் கூடத் தெரியும், ஆனால் எண்பது வயது முதியவர் கூட செய்வது கடினம் என்று கூறினார்.

நல்ல செயல்களைச் செய்ய முடியாமல் போகும்போதும் கதையில் வரும் மூன்று வயதுக் குழந்தையை உங்களுக்குள் தேடுங்கள். அதன் அறிவுரையைக் கேட்கும் வாய்ப்பை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள் என்கிறார் இந்நூலாசிரியர். 

பொதுவான சாக்குப்போக்குகள்

மனித வாழ்க்கையில் பொதுவாக அனைவரும் சொல்லும் சாக்குப் போக்குகளும் அவற்றைத் தவிர்க்க பயில வேண்டிய தீர்மானங்களின் சாராம்சமும் வேய்ன் டையரால் வருமாறு சொல்லப்படுகிறது.

  • ரொம்ப கஷ்டமப்பா : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்.
  • இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானாய் இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயமில்லை.
  • இதற்கு நெடுங்காலம் ஆகும் : என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.
  • நான் அதற்குத் தகுதியானவன் அல்ல : நான் ஒரு தெய்வப் பிறவி. ஆகையால் எல்லாவற்றிற்கும் எனக்குத் தகுதி உண்டு.
  • எனக்குச் சக்தியில்லை: என் வாழ்வைப் பற்றிய ஆர்வம் எனக்கு இருக்கிறது. அது என்னை உற்சாகப்படுத்துகின்றது.
  • நான் ரொம்ப பிஸி : நான் என் சுபாவத்தை ஒட்டி, எனக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவற்றை முடிக்க நேரம் கிடைக்கும்.
  • அது ரொம்பப் பெரிய வேலை : என்னால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்வேன். சிறுகக் கட்டி பெருக வாழ்வேன்.
  • எனக்கு வயதாகிவிட்டது : உண்மையில் நான் முடிவற்றவன். வயது உடலுக்கே. என் வயதுக்கும் நான் என்ன செய்கிறேன் என்பதற்கும் சம்பந்தம் கிடையாது.

இவ்வாறு எதை எடுத்தாலும் முடியாது, போதாது, வயதாகிவிட்டது, நேரமில்லை என்று ஏராளமான மழுப்பல்கள் நமக்குள் இருக்கின்றன. இதனை நாம் தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஹிட்லர் சொல்வது இங்கு பொருந்தும். நம்மால் முடியாது என்பதில்லை; நாம் செய்வதில்லை என்பதே உண்மை. ஆமாம் எல்லாரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அதனை வளர்த்தெடுத்தால், நாம் சாக்குப்போக்குகளைச் சொல்லமாட்டோம். உண்மையில் நாம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2019

நம்பிக்கையை மகிழ்ச்சியாக்கு..! நாளை உலகை உனதாக்கு…!
தன்னம்பிக்கை மேடை
எனக்கு அல்ல – உங்களுக்காக ஒரு நொடி
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14
உணவை வீணாக்காதீர்….
சிசு பராமரிப்பு
நில்! கவனி !! புறப்படு !!! – 9
துணிச்சல்…
நட்பை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்வது எப்படி?
சின்னஞ்சிறு சிந்தனைகள்…
பேனா எங்கே?
தன்நிலை அறிக முன்னிலை பெறுக
வெற்றிச்சிகரத்தின் விளிம்பில் தோல்வியின் கண்ணீர்..
குறிக்கோள் வெற்றியின் திறவுகோல்
எங்கேயும் எனிமா
வெற்றி உங்கள் கையில் – 71
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
விழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்
உள்ளத்தோடு உள்ளம்…