– 2019 – November | தன்னம்பிக்கை

Home » 2019 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    துணிச்சல்…

    குதிரையேற்றம் சிக்கலான விளையாட்டுத்தான்!  வாழ்வில் கூட எதிர்பாராத தருணங்கள் வருகின்றன! குதிரை மீது அமர்ந்திருக்கிற எல்லா வினாடிகளும் எதிர்பார்க்காதவையே!  அதன் கண்களுக்கு பிளிங்க்கர்ஸ் மாட்டி இருந்தார் மகிழன்பன்.  மகிழன்பன் ஏறிய குதிரையின் பெயர் பாண்டியன்.  பாண்டியன் ஐந்தாறு வயதான ஆண்மகன். அவன் ரோஷனைப் பார்த்து… கிளர்ச்சியடைந்து கொண்டு கால்களைத் தூக்கிப் பாய்ந்துவிடுவானாம்.  அதனால் மகிழன்பனை ஏற்றி தனியாக அனுப்பிவிட்டார் சீராளன்.  சீராளன் மகிழன்பனின் நண்பர் மகன்.  மகிழன்பனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! ஆனால் உயிரில்லாத வாகனங்கள் மீது ஆர்வம் குறைவு கார், பைக் இத்யாதி வகையறாக்களை சொல்கிறேன்.

    மகிழன்பனின் மகளை குதிரை மீதேற்றி படம்பிடிப்பதற்குள்…  போதும்… போதும் என்று ஆகிவிட்டது.  புதிதாக ஒரு விஷயத்தை பரிசீலித்துப்பார்க்க… தைரியம் வேண்டும்தான்.

    அசட்டுத் துணிச்சல்… அவ்வளவு நல்லதல்ல…

    துணிச்சலுக்கும் அசட்டுத்துணிச்சலுக்கும் அவ்வளவு எளிதில் வித்யாசம் சொல்லிவிட முடிவதில்லை.  எனக்கு தெரிந்த மகிழன்பனின் நண்பர் மகள் யாழினி இ.ஆ.ப தேர்வு எழுதுவதற்காக… பல ஆயிரம் இலட்சம் ரூயாய்கள் சம்பளம் தரும் ‘டிலாய்ட்’ நிறுவன பணியை விட்டுவிட்டு வந்து சென்னையில் இறங்கினாள். தி ஃபிக் ஃபோர் (The Big Four) என்று சொல்லப்படும் நான்கு கணக்கு தணிக்கை மற்றும் நிதி சேவை, கலந்தாலோசனை நிறுவனங்களில் ஒன்று ‘டிலாய்ட்’, மற்ற மூன்று என்ன என்று கேள்வி எழுகின்றதல்லவா?  எழட்டும்…

    இப்படித்தான் மகிழன்பனுக்கு… கேள்வி எழுந்தது… என்ன கேள்வி என்பது இருக்கட்டும்… என்ன சூழ்நிலையில் கேள்வி எழுந்தது என்பது… குறிப்பிடத்தக்கது…  கிட்டத்தட்ட மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தை ஐந்து விநாடித்துளிகளில் அடைந்தபொழுது… குதிரை பாண்டியன்… நான்கு கால் பாய்ச்சலில்… வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தான்.

    பார்த்திபனும், பிரபாகரனும்… மகிழன்பனை வீடியோ எடுக்கலாம் என்று கூட கிளம்பி ஒரு பைக்கில் வந்துகொண்டு இருந்தனர்.   மெதுவாக ட்ராட் செய்திருந்தால் அழகாக சென்ற ஆண்டு பிடித்தது போல ஒரு வீடியோ எடுத்திருப்பார்கள்.  பிரபாகரன் கியர் மாற்றுவதற்குள் முப்பது அடிதூரம் முன்னால் போயிருந்தான் பாண்டியன்…  இவ்வளவு வேகம் வேண்டாம் என்று தோன்றியது.  பாண்டியன் கேட்டால் தானே… செம்மண் பாதையில்… கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர்… புழுதி கிளம்ப மேடுபள்ளத்த்தை ட்டக் ட்டக் ட்டக்… ட்டக்…. ட்டக்ட்டக்… என்று கேட்ரிங்கில் (மூன்றுகால் ஓட்டம்) ஆரம்பித்து… பின்னர் கேல்லப்பில் பாய்ந்து…  தார் ரோட்டை எட்டிப்பிடித்த பொழுது… மகிழன்பன் மனதில் லேசாய் அபாய மணி அடிக்கத் தொடங்கி இருந்தது அவருக்கு எழுந்த கேள்வி… தார் ரோட்டில்…. இன்னும் சில வினாடிகள் கழித்து எழுந்தது.

    கேள்வி… என்றவுடன்

    பிறந்தநாள் கேக்கை… வித்யாசமான இடத்தில் வைத்து வெட்டலாமா?

    என்கின்ற கேள்விகூட எழுந்தது… அதன் பலன் ஒரு இனிமையான அனுபவமே!  மகிழன்பன் பிறந்தநாள் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.  வேல்விழிக்கு பிறந்தநாள் என்று சீராளனின் பண்ணையில் வைத்துத்தான் தெரியவந்தது.  அவள் தங்கை விழாமலர் சொல்லிவிட்டாள்.

    சீராளன் எங்கிருந்தோ கேக் கொண்டுவந்து சேர்த்திருந்தான்.  அவன் தந்தை திருப்பதி… மிகவும் கண்டிப்பானவர்.  ஆனால் மகிழன்பன் வருகையில் மட்டும் நெகிழ்ந்து போய் சிறு குழந்தையாக மாறிவிடுவார். அதனாலேயே மகிழன்பனை முன்னிறுத்தி சீராளனின் திருமண பேச்சுக்கள் நிகழ்ந்தன.  அந்த மகிழ்ச்சிகரமான இல்லத்தில் நிறைய குழந்தைகள், பெரியவர்கள் என பத்து பேருக்குப் பக்கம் கூடியிருந்தனர்.  அது ஒரு கிராமம்…  காஞ்சிபுரம் அருகேயிருந்தது.  தோட்டத்திற்கும் வீட்டிற்கும் மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும்… திருப்பதி… தன் இல்லத்தினர் மற்றும் ஊர்க்காரர்களுக்காக ஒரு பெருமாள் கோவில் எழுப்பியிருந்தார்…  அதிலிருந்த தாமரைகளின் சிரிப்பைச் கண்டதால்… முதன் முதலில் தாமரைகள் பூத்த தடாகம் ஒன்றில் இறங்கி மலர்களை ஸ்பரிசிக்கும் வாய்ப்புப் பெற்றார் மகிழன்பன்.   சந்தோஷத்திற்கு அளவேயில்லை.  குழந்தைகள் சற்றே தயங்கித் தயங்கி ஒவ்வொரு அடியாக சாய்ந்து வளைந்து ஆச்சரியக் குரல்களை எழுப்பிக்கொண்டு… வீல்… வீல் என்று பயத்தில் கத்திக்கொண்டு… உள்ளே…. தத்தக்கா பித்தக்கா என அலைபாய்ந்து நடந்தனர்.[hide]

    மகிழன்பனுக்கு 41 வயது முடிந்துள்ளது.  முதல்முறை தாமரைக் குளத்துள் நடக்கிறார்.   இவ்வளவு வருட கனவு கனவுகள் மிகவும் முயற்சி செய்யும்பொழுதோ… ஆயாசத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுதோ…  முயற்சியினுடைய முழுமூச்சைக் கொடுக்கும் பொழுதோ… எதிர்பார்ப்பின் விளிம்பில் திமிறித் துடிக்கும் பொழுதோ… பலிப்பதில்லை… அவை திடீரென பளீரிடுகின்றன! மகிழன்பனின் நெருங்கிய நண்பர் ஒருவர் கால்நடை மருத்துவர்.  நான்குமுறை இ.ஆ.ப தேர்வு எழுதி…  நான்காவது முறை வென்றார்…

    நான்காவது முறையை நெருங்கிய பொழுது… பக்குவப்பட்டுப் போயிருந்தார்…தோல்வியடைந்தால் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலை…தாமரை குளங்கள் அபாயமானவை. படகில் சென்று பறிக்க வேண்டுபவை. காலில் சுற்றினால் தாமரை வேர்களும் தண்டுகளும் நீச்சல் அடிக்க முடியாமல் செய்துவிடும் சேற்றில் ஒரு வேளை கால் புதைந்துவிட்டால் என்று…  பல தயக்கக் குரல்கள் நாற்பது வருடங்களாய் குளத்தினுள் இறங்கவிடாமல் செய்துவிட்டன.

    இம்முறை திருப்பதி…

    அட நீங்க வேற… இந்தக் குளம் மொத்தமே நாலடி ஆழந்தான்… நான்

    குழந்தையா இருந்தப்ப இருந்து இதில் இறங்கி அலசியிருக்கேன்

    என்றவாறு மளமளவென உள்ளே இறங்கி கொத்துக் கொத்தாக

    பூக்களை அள்ளிப் பறித்தார்.  இலைகளையும் சேகரித்துக் கொடுத்தார்.

    அவர் வீட்டில் இருந்த இரண்டு நாட்களும்… அந்த இலைகளில்தான் சாப்பிட்டார் மகிழன்பன் … மற்றும் எல்லோரும்…

    இலைகளின் மீது துளி… தண்ணீர் விழுந்தால் உருண்டு திரண்டு… ஓடியது… பாதரசம் போல காணப்பட்டு மின்னியது… முத்துக்களாய் மாறி பளபளத்தது…

    வாழ்வில் தோல்விகளோடு ஒன்றிப்போய்

    ஒட்டிப்போய் நின்றுவிடக்கூடாது… என்று

    தோன்றிது…

    யாழினி…

    டி லாய்ட் நிறுவனத்தை விட்டு வந்த முதல் முயற்சியில் பிரிலிம்ஸை இழந்தான்…

    அடுத்த முயற்சியில்…  அவள் நேர்முகத் தேர்வு வரை சென்று திரும்பினாள்…  பணி எதுவும் கிடைக்கவில்லை… அதற்கடுத்த முயற்சியில்…தாமரைக் குளத்திற்குள் தடுமாறும் வேல்விழிக்கு ஐடியா கொடுத்தார் மகிழன்பன் … ஒரு காலை நகர்த்து, உயர்த்து… கீழே வை… அழுத்து… ஸ்திரமாக்கு… ஊன்று… கொஞ்சம் புதையும், அதன்பின்பு, நிற்கும்…

    அவ்வளவுதான்

    அடுத்த காலடி வைக்கலாம்…

    நிதானமாக நகர்… ஆழம்பார்த்து… நகர்…

    என்று அறிவுரை வழங்கி கண்காணித்தார்…

    வேல்விழியும் விழாமலரும் அடுத்த நாள்… பிறந்தநாள் கொண்டாட உள்ளே சளக்… தளப்… என்று நடந்து… திருப்பதி ஐயாவோடு…  தாமரை இலைகளை சேகரித்து அதன்மீது கேக்கை வைத்து நீருக்குள்…  மலர்களின் வாழ்த்துக்களோடு பிறந்தநாள் பாடல் பாடினர்.  அதை வீடியோ எடுத்த மகிழன்பனின் செல்போன் தவறி தண்ணீரில் விழுந்தது…

    அது நீர் புகாதது அல்ல…

    சீராளன், தனது மகிழ்வுந்தின் சூடாக்கும் கருவிக் காற்றால் அந்த செல்போனை குணமாக்க முயற்சித்தான்.

    அதை மீண்டும் சார்ஜ் செய்தால் வெடித்து விடும் அபாயம் இருப்பதாக சிலர் கவலை தெரிவித்தனர்.

    இப்பொழுது… காய்ந்த பிறகு ஆனது ஆகட்டும் என சார்ஜரில் போட்டார் மகிழன்பன்

    அது…

    குதிரை பாண்டியன்… தார் ரோட்டில் திரும்பியதும்… எழுபது எண்பது கிலோமீட்டர் வேகத்தில்… இவ்வளவு நாள் இப்படி ஒரு ஆள் என் மேல் ஏறியதில்லை என்று மொத்த ஆற்றலைக் காட்டுவது போல காற்றில் பறந்தான்.

    தார் ரோட்டில் லாடம்… அடித்து அடித்து எழும் ஒலி…  பட்டாசு போல தெரித்தது…

    கொஞ்சம் பயம் வந்தபோது மகிழ்நன் நினைத்தான்… அச்சம்… வந்துவிட்டால் அது பாண்டியனுக்கு தெரிந்துவிடும்… துணிவு உண்டு!  நெஞ்சம் உண்டு!  நில்லு பாண்டியன்!  என்று கடிவாளத்தை இழுத்தான்…

    பாண்டியன் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை… இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி கேன்டரை… கேல்லப் ஆக்கினான்…

    பயத்துடனேயே நுனிக்கரும்பை சுவைபார்த்தார் மகிழன்பன் பயம் தலை காட்டியது என்றும் சொல்லலாம்… டூ வீலரில் வந்த பார்த்தி… ஒரு வழியாக முறுக்கி முன்னேறி குதிரைக்கு முன்னால் வர முயற்சித்தார்…[/hide]

    இந்த இதழை மேலும்

    நட்பை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்வது எப்படி?

    நட்பு என்பது புனிதமானது,  மனதிலே மகிழ்ச்சியையும், வாழ்விலே ஒரு ஆனந்தத்தையும், அன்பு பரிமாற்றத்தில்  உயர்  நிலையை  அடையச் செய்வதும் நட்பு  மட்டுமே, உணர்ச்சிப்பூர்வமான நேரங்களிலே    துணையாய் இருப்பதும்,  சிரமமான    நேரங்களில்  உதவி  செய்வதும், துன்பமான வேளைகளில்   ஆறுதலைத் தருவதும், கலங்கிய மனங்களுக்கு   மருந்து  தடவதும் நட்பு தான்.

    நட்பு என்பது மனிதனுக்கு  மூன்றாவது கை, மூன்றாவது கண்,  மனசாட்சியின்   மறு வடிவம், ஏழாவது  அறிவு, சில விசயங்களுக்கு   விடை தரும்  களஞ்சியம், அது  இதயத்தின் மொழி.

    உண்மையின் அடிப்படையில் உண்டாகும் நட்பு களங்கம் இல்லாது. பொய்மையின் அடிப்படையில் உண்டாகும் நட்பு மணலினால் கட்டப்பட்ட மாளிகைக்கு ஒப்பானது, போலியானது, எந்த நேரத்திலும்  அது இடிந்து விழலாம்.

    சில நேரங்களில், சில காரணங்களால் நட்பில் விரிசல் உண்டாகி விடுகிறது.  தற்பெருமை பேசுதல், தானே பெரியவன் என்று காட்டிக் கொள்ளுதல், நண்பர்களை தாழ்த்திப் பார்த்தல், மனக் காயப்படுத்துதல், கேலியும் கிண்டலுமாக நண்பர்களை மையப்படுத்திப் பேசுதல், கடுஞ்சொல் பேசுதல், மற்றவர்களுக்கு முன்னாலே அவமரியாதை செய்தல், குறைகளைப் பெரிதுபடுத்துதல், உதவி செய்ய வேண்டிய நிலையிலே ஓடி ஓளிந்து கொள்ளுதல், தேவையாய் இருந்தால் மட்டும் ஓடி வந்து பேசுதல், தொடர்புகளை குறைத்துக் கொள்ளுதல்,  ஒரு நண்பரைப் பற்றி இன்னொருவரிடம் ஏளனமாகப் பேசுதல், கணக்குப் பார்த்து பழகுதல், காரியத்திற்கு மட்டுமே நெருங்குதல் இவைகளெல்லாம் நட்பின்  விரிசலுக்கு ஏதாவது ஒரு வகையில் காரணங்களாக  அமைகிறது.

    ஒரு நல்ல நட்பு, ஆரோக்கியமான முறையிலேமேம்படுத்த வேண்டுமானால் சில பழக்கங்களை நாம் பின்பற்றியாக வேண்டும்.

    நல்ல நட்பை பங்கம் வராமல் பேணிப் பாதுகாக்கவேண்டும், நெருங்கிய நண்பர்களோடு தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும், ஏதாவது ஒரு வகையில் தவறாது அவர்களோடு பேசவேண்டும்.

    பணிவு என்ற ஆபரணம் மட்டும் உங்களிடம் இருந்தால்  நண்பர்கள் எல்லோரும் உங்களுக்கு அன்போடு ஒத்துழைப்பு நல்குவார்கள்.

    நண்பர்கள் சொல்லுவதை அன்போடு காது கொடுத்துக்கேட்க வேண்டும், விவாதங்கள் பிரச்சனைகளை வளர்க்கும், மௌனம் பிரச்சனைகளை நிறுத்தி வைக்கும்,  புன்சிரிப்பு பிரச்சனைகளை முடித்து வைக்கும்  என்பதை உணர வேண்டும்.

    நண்பர்களுக்குள் நம்பகத் தன்மையை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும், பிரச்சனைகள் ஏதும் இருப்பின், அது தொடராமல் இருக்க  பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏதாவது ஒரு வகையில் நண்பர்களை காயப்படுத்தினால்  மன்னிப்பைக் கேட்டு அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். நண்பர்கள் யாரவது உங்களை காயப்படுத்தினால் நீங்கள்  ‘மன்னித்து ’ பழக வேண்டும்.

    உங்கள் மேல் நண்பர்கள் பரிவும் கருணையும் காட்டும் அளவு நடந்துக் கொள்ள வேண்டும், உங்களின் வெற்றியில் பங்குபெற அழைக்க வேண்டும், துன்பங்களில் அவர்களாகவே வந்து  பங்கெடுப்பார்கள். பரிவும், பாசமும், அன்பும், பிரியமும், நேசமும், மன்னிப்பும், கருணையும், இதயங்களை இணைக்கும் மருந்துகள்  ஆகும்.

    “குறைகள் இல்லாத மனிதர்களும் இல்லை,குறைகளை மட்டுமே பார்த்தால் உறவுகளும் இல்லை”  என்று சொல்வார்கள், நண்பர்களிடமுள்ள குறைகளை பெரிது படுத்தக்கூடாது, விமர்சிக்ககூடாது, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வழிகாட்டவேண்டும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் மட்டும்தான் உறவுகளை வலுப்படுத்தும்.

    ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மையோடு உள்ளவர்கள் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால், சகிப்புத் தன்மையும் சமசரமும் உங்களுக்கு வந்து விடும்.

    நண்பர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவேண்டுமே தவிர, துன்பத்தின் தூதுவராக  இருத்தல் கூடாது. அன்பைப்  பகிர்ந்து கொள்ளுதல் என்ற தாரக மந்திரம்தான்  உறவுகளை வலுப்படுத்தும்.

    நட்பின் பழைய  நினைவுகள், மறந்துபோன மகிழ்ச்சிகரமான தருணங்கள், விளையாடிய நேரங்கள், வேடிக்கையாகப் பேசி மகிழ்ந்த காலங்கள், பசுமை நிறைந்த நினைவுகள் இவைகளை நினைவில்  கொண்டு வந்து அடிக்கொரு முறை மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொள்ளும் போது நேசம்  பலப்படுகிறது.

    உங்களது பிரச்சனைகளை நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள், அவர்கள் தரும் ஆலோசனை உங்களுக்கு அருமருந்தாக அமையட்டும். உங்கள் கவலைகளை, அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,சுமை பாதியாகக் குறையும்,

    வேலைப்பளுவின் காரணமாக, குடும்பச்சுமையின் காரணமாக,பணி அழுத்தத்தின் காரணமாக,நண்பர்களை அடிக்கடி சந்திக்க முடியாமல் போவதுண்டு, அந்த நேரங்களில்   நட்புக்கும் சில மணித்துளிகள் ஒதுக்குங்கள், நேரடியாக பார்க்கமுடியாவிட்டால் தொலைபேசியில் பேசுங்கள், நலம் விசாரியுங்கள்.

    நேசத்தைப் பரிமாறுங்கள்,  சுற்றுலாவிற்கு இணைத்து செல்லுங்கள்,  புதிய சந்திப்புக்களுக்கு நாள் குறியுங்கள்.சிறு சிறு விரும்தோம்பல்களில் கலந்து கொள்ளுங்கள், ஆரோக்கியமான பிணைப்புக்கு அது வழி கோலும்,  நேற்று நடந்த  நிகழ்வுகள் பற்றி  மறுநாள் விவாதியுங்கள், குறைகள் இருந்தால் அப்போதே களைந்துஎறியுங்கள்,  மகிழ்ச்சிப்படக் காரணம் இருந்தால்  மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்,  கோபப்படக் காரணம் இருந்தால்  அதனை   மறந்து விடுங்கள்.மறதியைப் போல மாமருந்து இல்லை. தற்பெருமை மட்டும் பேசாதீர்கள்,   தற்பெருமை நட்புக்கு ஒரு பெரும்  கீறல்.[hide]

    நெருங்கிய  நட்புக்கு உதாரணமாக,நட்புக்கு இலக்கணம் வகுக்கும் என் இனிய நெருங்கிய நண்பர்  பொள்ளாச்சி ஜி.டி என்று   அன்போடு  அழைக்கப்படுகிற பொள்ளாச்சி ஜி.டி. கோபால கிருஷ்ணன் அவர்களை  முழுமையான  எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம், தமிழகம் முழுவதும் நிறைய, நல்ல நண்பர்களை பெற்றுள்ளது இவரின் தனித்துவம், நாளும் பொழுதும் அதைப் பேணி காப்பது இவரின் மகத்துவம்.

    நாம் எத்தனை பேரை நண்பராகப் பெற்றிருக்கிறோம் என்பது முக்கியமல்ல, எத்தனைப் பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம், அந்த வகையில்  வாழ்க்கை முழுவதும் உண்மை நட்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்  ஜி. டி. அவர்களை நண்பராகப் பெற்றிருப்பது   எனக்கு கிடைத்த  மிகப் பெரிய  வரம்.

    ஒருவர் உலகை விட்டு மறையும் போது  ஐந்து உண்மையான நண்பர்கள் அவருக்கு கிடைத்திருந்தால் அவர் மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த சாஸ்திரத்தின்படி ஜி. டி அவர்களை நண்பராகப் பெற்ற நாங்கள் எல்லோரும் தலைசிறந்த வாழ்க்கையை பெற்றவர்கள் என்பது  உண்மையிலும்  உண்மை.

    கண்களுக்கு அருகே இல்லாமல் தூரத்தில் இருந்தாலும் இதயத்தின் உள்ளே இருக்கிறவர்கள் தான்  உண்மையான நண்பர்கள்.   நண்பர் ஜி.டி  அவர்கள்  ஒவ்வொருவருடைய  இதயத்திலும் உள்ளார்கள்.

    பொறுமை இருக்கும் இடத்தில்   அமைதி இருக்கும்.  அமைதி இருக்கிற இடத்தில்  அன்பு இருக்கும்.  பொறுமை,  அமைதி, அன்பு இந்த மூன்றும்   ஜி.டி அவர்களிடம் அபரிமிதமாக இருக்கிறது. பொறுமையின் உச்சத்தில், சகிப்புத்தன்மையின் உச்சத்தில் வாழ்ந்தவர்கள் தன் பெயர்களை வரலாற்றில் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். நண்பர் ஜி. டி  அவர்கள்  அந்த வகையில் தன் பெயரை வரலாற்றில் பதிவு செய்து கொண்டுள்ளார்.

    காம்புகளில் உயிரோட்டம் இருக்கும் வரை  இலைகளும் பூக்களும் உதிர்வதில்லை. நட்புகளில் உயிரோட்டம் இருக்கும் வரை நண்பர்கள் பிரிவதில்லை. ஜி,டி அவர்கள் கொண்டிருக்கிற நட்பு என்றென்றும் உயிரோட்டம்   கொண்டது.

    நண்பர்களுக்குள் நெருக்கமான பிணைப்பு ஒரு நொடியில், ஒரு பார்வையில், ஒரு நாளில் வருவதல்ல. அது  இதயங்கள் பேசுகிற மொழியால் இணைக்கப்பட்ட பிரிக்க முடியாத உறவு. ஜி.டி   அவர்களிடம்  அந்த இதயம் பேசுகிற மொழி   அபூர்வமாக வாய்த்திருக்கிறது.

    எந்த சூழலையும் பணிவோடு அனுசரித்து போகிறவர்களே, மிகச்சிறந்த, மேலான நண்பர்களாகக் கருதப்படுவார்கள், அந்தப்  பணிவான அனுசரிப்பு ஜி.டி  அவர்களிடம் உண்டு,

    தானும் மகிழ்ச்சியோடு இருந்து, மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவது நட்பின் அடையாளம். அந்த அடையாளம்  ஜி.டி யிடம் அதிகம் உண்டு.

    தடைகளையும், துயரங்களையும் கண்டு அஞ்சாமல் உண்மையின் பாதையில் செல்வதே நேர்மையான மனிதருக்கு அழகு. அந்த நேர்மையின் அழகு ஜி.டி  அவருக்குண்டு.

    “அப்படி என்ன  அதிசயம் ஜி.டி  அவர்களிடம் இருக்கிறது ? ” என்ற கேள்வி உங்களுக்கு வருவது இயல்பு. அவருடைய புறத்தோற்றமும்  அகத்தோற்றமும், குணங்களும்  செயல்களும், எண்ணங்களும் இயல்புகளும், பழக்கங்களும் வழக்கங்களும், பண்புகளும், நடத்தைகளும்,பாசங்களும்  நேசங்களும்,செயல்களும் சேவைகளும் உள்ளபடியே அதிசயமானவை. பார்த்தால் தெரியாது, பழகினால்   மட்டுமே  புரியும்.

    சிற்பி  வடித்தெடுத்த சிலையைப் போல உடல் வாகு, நேற்றும் இன்றும் என்றும் இளமை மாறாத  அழகு, கம்பீரமான தோற்றம்.  கவர்ச்சியான பார்வை, காந்தம் போல ஈர்க்கும் வசீகரமான முகம், குங்குமப் பூ நிறம்.  குலுங்கிச் சிரிக்காத அளவான சிரிப்பு, மெல்லிய பூங்காற்று அசைந்து வருவதைப் போன்ற நடை, மடிப்புக் கலையாத மல்லிகைப்பூ உடை இது அவருடைய தோற்றம்.

    இனிமையாகப் பேசுவதும், இன்முகத்தோடு பழகுவதும்  இவரின் இயல்பு.

    உத்தம குணங்கள், உன்னதமான நடத்தை, மென்மையான  போக்கு, மேன்மையான எண்ணங்கள்   இவை இவர் உடன் பிறந்தவை. அன்பு பூப்பூக்கும் நெஞ்சத்தோடும், அமைதியாக, ஆழமாக அளந்து பேசுவது இவரின் மலர்ந்தும் மலராத  பழக்கங்கள்.

    எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும்  இயல்பும், எது நடந்தாலும் அமைதியாக இருப்பதும்,  அடக்கமாக இருப்பதும், அரவணைத்து போவதும்,  நேசம் வளர்ப்பதும், நம்பகத் தன்மையை அதிகப்படுத்துவதும்,மற்றவர்களை மதிக்கும் பாங்கும், எதையும் மௌனத்தோடும், மனோதைரியத்தோடும் எதிர்கொள்வதும்,எளிமையாக இருத்தலும்,  எல்லோரையும் நண்பராக ஏற்றுக் கொள்வதும்,  பகை ஒன்றும் இல்லாத பண்பை வளர்த்துக் கொள்வதும்  இவர் வெற்றியின் சூட்சமங்கள்.

    எந்தப் பதவிக்கு  என்றாலும் போட்டியின்றித் தேர்வாகும்  பெருமை   இவர்  மகுடத்தில் சூட்டப்பட்டுள்ள வைரம். பேச வேண்டிய நேரம் எது, அமைதியாக இருக்க வேண்டிய நேரம் எது என்ற கலையை முழுமையாக அறிந்தவர்.மௌனமும், புன்னகையும், அன்பும், வெற்றியாளர்களின் மிகப்பெரிய ஆயுதங்கள்  என்று சொல்வார்கள், அந்த ஆயுதங்களால் இவர் வெற்றி  பெற்ற  நிகழ்வுகள்   ஆயிரமுண்டு.

    பூக்களுக்கு வலிக்காமல் தேனீக்கள் தேன் எடுக்கும் நேர்த்தியைப் போல, பூமிக்கு  நோகாமல் விதைகள் வேர் விடும் நளினத்தைப்  போல, அமைதியாக ஆனால் நிதானமாக நிறுவனங்களை நிர்வகிக்கும் கலை இவர் திறமைக்கு எடுத்துக்காட்டு.

    என்றென்றும் அன்பை மட்டுமே காட்டும் மனைவி, பாசத்தையும், நேசத்தையும் ஊட்டி வளர்க்கப்பட்ட  மகள்கள், குணத்தில் உச்சம் தொட்ட மருமகன்கள்,அறிவிலும் திறமையிலும் சிறந்த பேரன். லட்சுமிகரமான பேத்திகள், புகழின் இமயம் பார்த்த சம்மந்திகள் இவருக்குக் கிடைத்த  ஐஸ்வர்யங்கள், குடும்ப  உறவுகளைப் பொறுத்தவரை இவர் கொடுத்து வைத்தவர்.

    ஒரு மனிதருக்கு  64 அம்சங்களும்  நிறைந்திருந்தால் அவர்  பூர்ணாம்சம்  உடையவர் என சொல்வார்கள்.  ஜி,டி அவர்கள் அந்த 64  அம்சங்களும் நிறைந்த மனிதர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு  இடம் இல்லை.

    பொள்ளாச்சி  தொழில் வர்த்தக சபையின் தலைவர், என்.ஜி.எம், கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவையின் தலைவர். பொள்ளாச்சி தமிழிசைச் சங்கத்தின்  தலைவர். கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட திரையரங்க  உரிமையாளர்கள் சங்கத்தினுடைய செயலர். கோயமுத்தூர் காஸ்மா பாலிடன் கிளப்பினுடைய இணைச் செயலர், பொள்ளாச்சி கிளப்பினுடைய தலைவர், ரோட்டரி சங்க மாவட்டம்  3202ல்  மாவட்டத் தலைமை. இவைகளெல்லாம் இவரின் பங்கேற்பில் கௌரவமும், பெருமையும் பெற்று வருகின்றன.

    நட்பை  வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்ளும் கலையை இவர் முலம்  முழுமையாக அறிந்து  கொள்ளலாம்.

    உங்களைப் பிடித்தவர்களுக்கு உண்மையாக இருங்கள்.

    உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு உயிரைத் தாருங்கள்.

    உங்களின் மௌனத்தில் ஔல்ந்திருக்கும்  அர்த்தங்கள்,

    உங்களின் கோபத்தில் மறைந்திருக்கும் பாசங்கள்

    இவை இரண்டும் யாரால் பரிபூரணமாக உணர முடிகிறதோ

    அவர்கள் உங்கள் இதயத்திற்கு இணக்கமானவர்கள்,[/hide]

    இந்த இதழை மேலும்

    சின்னஞ்சிறு சிந்தனைகள்…

    உயிர் உள்ளவரை உழைத்து, உழைத்து வாழ விரும்புவோம். உழைக்க உழைக்கத்தான் உயிர் வாழ விருப்பம் அதிகரிக்கும்.

    வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம், நீங்கள் தான் பொறுப்பு என்றும் அதை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றீர்களா என்று கண்டு பிடிக்கும் வரை. உங்களுடைய வாழ்க்கையில் எந்த விதமான மாற்றத்தையும், நீங்கள் ஏற்படுத்த முடியாதென தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

    நமக்குத் தேவையில்லாதவை பற்றிச் சிந்திப்பதைக் காட்டிலும், தேவையுள்ளவைக்காக சிந்திக்கக்கூடிய வகையில் நம்முடைய சிந்தனைப் போக்கை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    மகிழ்ச்சியை கூடுதலாக்குவது, நம்முடைய விருப்பத்தைப் பொறுத்தும், செயல்களைப் பொறுத்தும் உள்ள இரகசியமாகும்.

    நாம் வளரும் போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மனித வாழ்க்கையில், அவன் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றின் மூலமாகப் பலவற்றை கற்க வேண்டும் என்பது அடிப்படை வடிவமைப்பாக இருக்கிறது.

    உங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை அறியவும்.

    சிக்கலான தருணங்களை துணிவோடு எதிர்கொண்டு சுயமாக முடிவை எடுத்து எதற்காகவும், யாருக்காகவும், அஞ்சாது செயல் படுபவர்களே வெற்றியாளர்கள்.

    அவரவர் வாழ்வை அவரவரே மேற்கொண்டு நடத்த வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை வீணாக்க வேண்டாம். கடவுள் நமக்குத் தந்த சிநேகங்களோடு பேசுவோம். சண்டையிடுவோம். கொஞ்சிக்குலாவுவோம்.எதாவது செய்வோம், ஆனால் தனிமை வேண்டாம் அது மோசமானது தற்கொலைக்குச் சமமானது காலங்கள் திரும்பிக் கிடைக்காது.

    சில சமயம் எந்தக் காரணமும் இல்லாமல் மனத்தில் ஒரு பயம் ஏற்படுவது உண்டு. எதாவது தவறு நடத்துவிடுமோ என்று நம்மை அறியாமல் பயந்து கொண்டே இருப்பதும் நல்லதற்கு எடுத்துக் காட்டாகாது.

    நாம் நம்முடைய பயம், கவலை போன்ற மனநிலையிலிருந்து, உயரச் செல்ல முடிந்தால் மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி உயர்வதற்கு ஆக்கப்பூர்வமான  எண்ணங்கள் உதவும். நமது எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம்,பயம் மற்றும் கவலை தரும் உணர்வுகளைப் போக்க முடியும்.

    எப்போதும் என்னால் முடிந்த அளவு என் கடமைகளை மனநிறைவாக சரியாக செய்துவிட்டேன், அதன் விளைவு நல்லதாகவே அமையும் என்ற நம்பிக்கை துணிவு என்றும் வேண்டும்.[hide]

    நீங்கள் எதற்கெடுத்தாலும் பயந்து பயந்து வாழ்வீர்கள்  என்றால் நிச்சயம் உடல் மெலிந்து, உயிராற்றல் குறைந்து, ஆரோக்கியம் அற்றவர்களாகவே காட்சி அளிப்பீர்கள்.

    மகத்தான வெற்றியாளர்கள் ஒவ்வொருவருமே , மிகுந்த விருப்பமும் மிகுந்த நம்பிக்கையையும் உடையவர்கள் அவர்கள் ஒவ்வொருவருமே தங்களிடம் உள்ளதை வைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலமாகத் தாங்கள் விரும்பியதை விரும்பியபடி அடைந்தவர்கள்.

    வாழ்வில் ஏற்படும் எந்த ஒரு விளைவும் நமது மனதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளைப் பொறுத்தும், நம்முடைய பலங்கள் பலவீனங்களைப் பொறுத்தும் அமைகின்றன.

    ஒவ்வொருவரும் தங்களின் முன் அனுபவங்களை பொறுத்தே தங்களுடைய நம்பிக்கைகளை உருவாக்குகின்றனர்.

    நாம் எதை நம்பிக்கையோடு நோக்குகிறமோ, அதையே தான் நம்புகிறோம் அல்லது நாம் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே அதையே நம்புகிறோம் அதைப் பொறுத்தே நமது கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கின்றன.

    புற உலகின் பிரதிபலிப்பாக தான் இருப்பதை எப்போது ஒருவன் உணர்ந்து கொள்கின்றரோ அப்போது அவர் அதுவரை சுமந்து கொண்டு இருந்து சுமையை தூக்கி எறிந்து விடுகின்றர்

    ஒரு மனிதனின் அறிய சொத்து அவனுடைய தைரியம் தான். எதிர்காலம் எவ்வளவு இருண்டதாக தோன்றினாலும், தைரியம் மட்டும் உடனிருந்தால் ஒளி நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    எப்போதும் எது நடந்தாலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவை பெற்றவர் அவருடைய துணிச்சலான மனநிலை பேச்சிலும் நடத்தையிலும் எதிரொலிப்பதை கண்கூடாக காணலாம்.

    அதிர்ஷ்டம் என்பது துணிச்சல் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. அந்த துணிச்சல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கின்றது. அதை விடாமல் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான்.

    முதலில் எதைப் பற்றி பயப்படுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பல சமயங்களில் காரணம் இல்லாமல் ஒரு பயஉணர்வு தோன்றுவது உண்டு. அப்போது மனதை ஆக்கபூர்வ எண்ணங்களில் கரைந்திடச் செய்யுங்கள்.

    எந்த சூழ்நிலையிலும் துணிவுடன் உறுதியாக இருந்தால் நல்லதே நடக்கும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    பேனா எங்கே?

    தேடுகிறேன் தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் எப்போது பார்த்தாலும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பார். அங்கே படித்தேன் இங்கே படித்தேன், அதிலே படித்தேன் இதிலே படித்தேன் என்று யாரையாவது கூட்டி வைத்துக் கொண்டு கூத்தடிப்பார். ஒருநாள் சுவாரசியமுடன் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

    மனைவி சொன்னால் முழங்காலில் ஒரே வலி. சமைப்பதற்கு ஒரு குடம் தண்ணீர் பிடித்து வாருங்கள் என்று.

    குடத்தை எடுத்துக் கொண்டு போய் இருவரும் தண்ணீர் பிடிக்கக் குழாய்யைத் திருப்பினர். லேசாக வந்தது. ரொம்பவும் லேசாக. குடம் நிறையட்டும் என்று அப்படியும் இப்படியுமாக நடந்தார். கால்கள் நடந்தன. மனம் எங்கெங்கோ ரெக்கை கட்டிப் பறந்தது.

    குடம் நிரம்பி வழிவது கூடத் தெரியாமல் நடந்து கொண்டேயிருந்தார். இன்னொரு பெண் தண்ணீர் பிடிக்க வந்தாள். அவள் சொன்ன பிறகு தான் குடம் நிறைந்தது அவருக்கே தெரிந்தது. எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குடத்தை வைத்து விட்டு மீண்டும் எழுத உட்கார்ந்தார். எழுதத் தொடங்கினார். பேனாவைக் காணவில்லை. மூடி மட்டும் கிழே கிடந்தது. பேனா எங்கே போய் தொலைந்தது என்று தனது நிம்மதி அனைத்தும் தொலைந்தது போல அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடினார். தேடினார் கிடைக்கவில்லை.

    மனைவியின் மீது கோபம் திரும்பியது. எல்லாம் உன்னால் தான் என்று எரிந்து விழுந்தார். மனைவியை வசைபாட அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு குபீரென்று கிளம்பியது.

    ஏன் என்னால் என்ன வந்ததாம் என்று அவள் சண்டைக்கு வந்து விட்டாள் அவரிடம். ஒழுங்காக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.. தண்ணீர் பிடித்து வா.. அதைக் கொண்டு வா…. இதைக் கொண்டு வா என்று  உன் உயிரை வாங்கினாய்… பார் இப்போது என் பேனாவைக் காணோம்.. எங்கே போனாது என்று தெரியவில்லை. நடுவில் நடுவில் என்னை இப்படி வேலை வாங்காதே என்று உனக்கு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். உன் மரமண்டையில் அது ஏறினால் தானே…வா… வந்து நீயே என் பேனாவைத் தேடிக் கொடு என்று சட்டென எழுந்தவர் சற்றுத் தடுமாறி கீழே விழப் போனார். மனைவி ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். நல்ல வேளை அவர் விழவில்லை. ஆனால் அவருடைய சட்டைப் பையிலிருந்து அந்தப் பேனா விழுந்தது.[hide]

    வைப்பது ஓரிடம், தேடுவது ஓரிடம் என்று மனைவி முறைத்தாள். வந்த மாட்டையும் கட்ட மாட்டேன். போன மாட்டையும்  தேடமாட்டேன் என்றால் எப்படி? இதென்ன வேலை? வேறு எந்த வேலையும் செய்யாமல்?

    மனைவி புலம்பினாள். அவர் தனக்குள்ளாகவே சிரித்துக்  கொண்டார் உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போடுவது போல அப்படி என்னதான் எழுதுகிறார் என்று அவள் எட்டிப் பார்த்தாள்.

    பரம்பொருளைத் தேடுகிறேன் என்று தலைப்பு போட்டு அவர் எழுதிக் கொண்டிருந்தார். சட்டைப் பையில் இருந்த ஒரு பொருளே தெரியவில்லை. பரம்பொருளைத் தேடுகிறாராம். பரம்பொருளை பொருள்படும்படி அவரைப் பார்த்து அவள் நக்கலாகச் சிரித்தாள்.

    அவருக்கு இப்போது ஏதோ ஒரு உண்மை சட்டெனப் புலப்பட்டது.எதையும் நீ தேட வேண்டாம். அது உன்னிடமே இருக்கிறது. மனதைப் பக்குவப்படுத்து எல்லாம் புரியும் என்பதே அது.

    எதை தொலைத்தாலும் கண்டுபிடித்து விடலாம். நம்பிக்கையை தன்னம்பிக்கையைத் தொலைக்கவே கூடாது ஆயிரம் கடவுளை நம்புவதை விட முதலில் உன்னை நீ நம்புவதே நம்பிக்கை என்கிறார் சுவாமி விவேகானந்தர்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்நிலை அறிக முன்னிலை பெறுக

    தன்நிலையும், பன்முக நிர்வாகத் திறமையும்

    தன்னையறிந்தவன், தரணியாள்வான்.

    தனிமனிதனின் கவனம். சிறந்த நிர்வாகத்தின் சூட்சமம்.

    தன்நிலை நிர்வாகத் திறமையானவர்

    என் நிலை நிர்வாகத்திலும் முன்னிலை வகுப்பார்.

    இவையெல்லாம், தன் மேல் தன்னம்பிக்கை, திட நம்பிக்கை கொண்டு, உழைத்து முன்னேறியவர்களின் உண்மையான வெற்றி அனுபவங்களின் எதிரொலிகள்.

    ஒரு காரியத்தை சரியான  நேரத்தில் ஆரம்பித்து, குறித்து நேரத்திற்குள், அந்த வேலையை செய்பவரின், தனிப்பட்ட வாழ்க்கையிலும், சரியான தன்நிலை நிர்வாகத் திறமையால் வெற்றி மேல் வெற்றி வரும், ஆகவே தன்னையறிதல் மிக மிக அவசியம்.

    நவீன மாற்றங்கள் எல்லாம், நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக் கொண்டே போகின்ற காலத்தில், ஒரு நிர்வாகியின் பன்முக திறன் இருந்தால் மட்டுமே நிர்வாகமும் வளர்ச்சியடைய முடியும்.

    ஒரு நிர்வாகக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்… நிர்வாகத்திறமை, என்று ஒன்றை வார்த்தையால் பதில் வரும். அது, படிப்பு, பட்டம் ஒரளவு அனுபவம் என்பதாலோ, அல்லது சிபாரிசு என்ற வகையிலோ நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஆனால், இவர்களால் மட்டுமே நிர்வாக வளர்ச்சியை எட்டிவிட முடியாது. முக்கியமாக, ஒரு கம்பெனியில் தனக்குத் தெரியாத துறைகளையும் நிர்வாகிப்பதே நல்ல திறமையான நிர்வாகி, அதாவது தன் அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது. நல்லது அதை உண்மையாக்கும் விதமாக நடந்த உண்மை நிகழ்வு.[hide]

    பிரபலமான பஸ் கம்பெனியில் பயிற்சிக்காக நான் சென்றிருந்த சமயம், அன்று சர்வீஸ் செய்ய வந்த ஒரு பேருந்தின் உதிரிப் பாகங்கள் மாற்ற வேண்டிருந்தது. ஒரு சில பாகங்கள் நன்றாகவே இருந்தது.  ஆனால் அந்த கம்பெனியில் பேருந்து சர்வீஸ் செய்யும் ஊழியரும், பேருந்து ஓட்டுநரும், அந்த பேருந்து கம்பெனி ஹப்ற்ர் வைசருக்கு சர்வீஸ் விஷயங்கள் அவ்வளவாகத் தெரியாது. ஆதனால் நாம் என்ன சொன்னாலும் கேட்பார் என்று பேருந்தில் மாற்ற வேண்டாத பாகத்தையும் மாற்றியுள்ளதாக, கம்பெனி மேற்பார்வையாளரிடம் கூற. அவரும் அதைப்பற்றி அறிந்திருக்காத காரணத்தால் அவர்கள் சொன்ன பொய்யை நம்பி பொருள் வாங்கி கொடுத்து ஏமாற்றப்பட்டார்.

    இதற்கு காரணம் அந்தப் பேருந்து மேற்பார்வையாளருக்கு சர்வீஸ் குறைபாடுகள் குறித்த எந்த விவரமும் தெரியாததும், எப்படியோ வேலை முடிந்தால் போதும் என்ற பொறுப்பற்ற மனத்தன்மையும் தான் காரணமானது.

    ஆக,  இழப்புகளையும் வளர்ச்சியற்ற நிலையையும், தவறுகளையும் தவிர்க்க ஒரு நிர்வாகிக்கு பன்முகத் திறனிருந்தல் அவசியமாகிறது.  ஆனால் தகுதியற்றவர்களைத் தேர்வு செய்யாமலும், பொறுப்பை ஒப்படைப்பதில் கவனுமும் தேவை.

    பொதுவாக ஒரு குடும்கபத்திலோ. அலுவலகத்திலோ நிதி நிர்வாகம் நல்ல படியாக அமைய ஒரு கணக்காளரிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி நின்று கொண்டு, கணக்கர் கொடுக்கும் வரவு செலவு தகவல்களை மட்டும் வைத்து நிர்வாகிப்பது பெரும் தவறு. அதை பற்றிய ஒரு அடிப்படை தகவல்களை நிர்வாகிக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

    அடுத்து அன்றாட நிர்வாகத்தின் சில சிக்கல்களுக்கு திறவு கோல் என்பது வாடிக்கையாளர்களிடமோ, ஊழியர்களிடமோ மனம் கோணாமல், வார்த்தைகளால், கையாளும் திறமை போல், ஆதாயமான முடிவுகளை ஏக மனதோடு எடுக்கும் மனத்திறமை வேண்டும்.

    இப்படி, தன் நிலை அறிந்து முன்னிலை பெறுவதே நிரந்தர வெற்றியாளராக வழிவகுக்கும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றிச்சிகரத்தின் விளிம்பில் தோல்வியின் கண்ணீர்..

    விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சாட்சி சொன்ன நாட்கள் சமீபத்தில் நம்மைக் கடந்துபோயின. வெற்றியைத் தொடும் நேரத்திர்கு சிறிது முன்பு ஏமாற்றத்தின் செய்திகள் தான் வெளியே வந்தன என்றாலும் இந்திய விண்வெளித் துறையின் சந்திராயன்2 திட்டம் அறிவியல் அறிஞர்களிடையில் அரிதினும் அரிதான ஒன்றாக மாறியது. வருடங்கள் நீண்டு நின்ற ஆராய்ச்சிகளின் முடிவில்தான் ISRO நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பை ஆராய்வதற்கும், கூடுதல் பரிசோதனைகளைச் செய்வதற்கும் சந்திராயன்2 திட்டத்திற்கு ஆரம்பம் குறித்தது. விண்வெளியில் சீறிப் பாய்ந்தபிறகு 3.84 லட்சம் கி.மீ தொலைவையும் கடந்து நிலவின் மேற்பரப்பை அடைந்து 2.1 கி.மீ தூரம் நெருங்கியபோதுதான் ஆய்வு உபகரணமான விக்ரம் lander நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்த orbiter உபகரணத்துடனும், அதன் மூலம் பூமியில் ISRO கூடத்துடனும் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திக்கொண்டது.

    வெற்றியைத் தொடும் தூரத்தில் தோல்வி தந்த கண்ணீரின் உவர்ப்புச் சுவையை இந்தியா ருசித்துப் பார்க்கநேரிட்டது. இறுதி லட்சியத்தை அடையமுடியாவிட்டாலும் தன் கடின உழைப்பினால் ISRO நாட்டின் முழுஆதரவையும் பெற்றது. தேசமே கண் இமைகளைக் கூடச் சிமிட்டாமல் விழி மூடாமல்காத்துக் கொண்டிருந்த கடைசி நிமிடத்தில்தான் வெற்றிச் சிகரத்தின் உச்சியைத் தொடமுடியவில்லை என்ற செய்தி வெளிவந்தது.  2019 ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் விண்கலனை ஏவியதற்குப் பிறகு உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் ISRO வெற்றியையே சுவைத்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 6ம் தேதி விண்கலனின் ஐந்தாவது மற்றும் கடைசி சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் நிகழ்வும் எதிர்பார்த்தது போலவே வெற்றி கண்டது. சந்திராயன்2 பூமியின் சந்திராயன்2 புவியின் சுற்று வட்டப் பாதையை விட்டு விலகி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை ஆகஸ்ட் 20ம் தேதி சென்ரு அடைந்தது. அந்தக் கட்டத்தில் சந்திராயன்2 எடுத்த புகைப்படத்தை ISRO வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 2ம் தேதி விக்ரம் கருவி சந்திராயன்2 orbiter கலனில்  இருந்து பிரிந்து அன்னை பூமியின் மடியில் இருந்து நிலவின் தரையில் ஓடியாடி விளையாடச் செல்லும் குழந்தையைப் போலச் சென்றது. அத்துடன் orbiter நிலவின் சுற்றுவட்டப் பாதையை சுற்றி வரும் ஒரு செயற்கைக் கோளாக மாறிவிட்டது. செப்டம்பர் 4ம் தேதி சுற்றுவட்டப்பாதையும் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் உபகரணம் சந்திரனில் இருந்து 36 கி.மீ தொலைவில் நிலவைச் சுற்றிவர ஆரம்பித்தது.

    பிறகுதான் உலகம் உற்றுநோக்கிய safe landing நிகழ்விற்கான நடவடிக்கைகள் தொடங்கின. அந்தக் கட்டத்திலும் விக்ரம் கருவி பத்திரமாகத் தரையிறங்கும் என்றே நம் விஞ்ஞானிகள் நம்பினார்கள். ஆனால், செட்பம்பர் 7ம் தேதி அதிகாலை 1.52க்குப் பிறகு விக்ரம் கருவியில் இருந்து சமிஞ்ஞைகள் ஆர்பிட்டருக்கு வந்து சேராமல் தடைபட்டுப் போனது.  தொடர்ந்து வந்த நிமிடங்களில் விக்ரம் கருவியின் கதி என்ன ஆயிற்று என்பதை நம் விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள். நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும்வரை விக்ரம் கருவி தன் பாதையில் துல்லியமாகப் பயணித்தது. அதன் பின் விக்ரம் கருவி புவியுடனான தன் தொடர்பை இழந்தது. அந்த ஒரு நிமிடத்தில் நாடும், விஞ்ஞான உலகமும் ஏமாற்றத்தில் மூழ்கியது.

    அதேநேரம் சந்திராயன் நிலவின் மேற்பரப்பிற்கு மிக அருகில் சென்ருசேர்ந்ததே ஒரு சாதனைதான் என்று அறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.நிலவின் தரைப்பகுதியில் இறங்குவதற்கான திட்டத்தில் கடைசி 15 நிமிடங்கள் மிகமுக்கியமானதும், வெற்றி வாய்ப்புகள் மிகவும் குறைவானதும் ஆகும். குறிப்பாக அபாயம் நிறைந்த தென்துருவத்தில் தரையிறங்குவது என்பது மிகவும் கடினமானது ஆகும். அங்குதான் சந்திராயன்2 தன் இலக்கைத் தவறவிட்டது. சந்திரனில் இறங்குவதற்கான இத்தகைய திட்டங்களில் உலக நாடுகள் 37% மட்டுமே இன்றுவரை வெற்றி பெற்றுள்ளன. [hide]அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்வெளித்துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் கூட தரையிறங்கும் கட்டத்தில் (landing) தோல்வியைக் கண்டுள்ளன. 2019ம் வருடத்திலேயே  இஸ்ரேல் நாட்டின் பெரஷீட் என்ற நிலவிற்கான திட்டம் தோல்வி அடைந்தது. இந்த யதார்த்தங்கள் நம் முன்னால் இருந்த நிலையில் தான் நிலவின் தெந்துருவப்பகுதியில் தரையிறங்குவதர்கான கடினமுயற்சிகளை ISRO மேற்கொண்டது. திட்டம் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தது என்றாலும் விக்ரம் கருவியுடன் தொடர்புகளை ஏற்பதுத்துவதற்கான தீவிர முயற்சிக்ள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ISRO கூறியுள்ளது. சந்திராயன்2 தோல்வி அடைந்தாலும் இதுவரை சம்பாதித்து உள்ள அறிவுகள் நம் வருங்காலத் திட்டங்களுக்குப் பெரிதும் உதவும் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.

    சந்திரனின் வெளி வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் கருவியின் ஆயுள்காலம் முதலில் ஒரு வருடமாக இருந்தது. இப்போது இது 7 வருடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணம் தொடர்ந்தும் நமக்கு நிலவின் மேற்பரப்பைக் குரித்த பல அரிய தகவல்களை அளிக்கும் என்ரு நம்பப்படுகிறது. சந்திராயன்1 அளித்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தான் சந்திராயன்2 திட்டத்தை ஐநதஞ ஆரம்பித்ததும், தொடர்ந்து முன்னேறியதும். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களையும், தொழில் நுட்பத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட சந்திராயன்1 நிலவில் நீர் இருப்பதற்கான அரிய தகவலை மனித குலத்திற்கு அளித்தது. பெருமிதத்திற்கு உரிய இந்த விஷயம்தான் நம் விஞ்ஞானிகளை சந்திராயன்2 திட்டத்தை மேற்கொள்ளத் தூண்டியது. 3850 கிலோ எடை உள்ள சந்திராயன்2ஐ விண்வெளியில் ஏவுவதற்காக GSLVmark3 என்ற ராக்கெட்டை ISRO தயாரித்தது. தொடர்ந்து சந்திராயன்2ன் பாகங்களை வெளிநாடுகளின் உதவி எதுவும் இல்லாமல்  நம் விஞ்ஞானிகளே உருவாக்கினார்கள். கடைசி நிமிடத்தில் உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த இந்தியாவின் ஆய்வுக்கருவி  பயணித்துக் கொண்டிருந்த பாதையில் இருந்து வழி மாறிச் சென்றது என்றாலும் விண்வெளி ஆய்வுகளில் மிகவும் ஆபத்தான சந்திரனின் தென் துருவத்திற்கு lander கருவியை அனுப்புவதற்கும், அதை வெற்றிச்சிகரத்தின் உச்சிக்கு அருகில் வரை கொண்டு சேர்ப்பதற்கும் நம் விஞ்ஞானிகள் காட்டிய தளராத தன்னம்பிக்கையையும், ஆராய்ச்சிகளில் அவர்களுக்கு உள்ள அடங்காத ஆர்வத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். சம்பவித்துவிட்ட சிறிய இழப்புகளைப் பற்றி இனி சிந்திக்காமல் சாத்தியமாக்கப்பட்ட முன்னேற்றங்களைக் குறித்து நாம் பெருமைகொள்ளலாம். விக்ரம் வழி மாறிச் சென்றதைப் பற்றி அல்ல மிகவும் சிக்கலான நிலவின் தெந்துருவத்தில் தரையிறங்கவேண்டும் என்ற நம் விஞ்ஞானிகளின் திறமையையும், அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் கண்டு நாடு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

    இன்று நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினைகள் நாளை நம் வலிமையையும், செயல்திறமையையும் பன்மடங்காக அதிகரிக்கச் செய்யும். அறிவியல் வெற்றி தோல்விகளுக்கானது அல்ல. மாறாக, பரிசோதனைகளுக்கானதே ஆகும். கடின உழைப்பு ஒரு நாளும் வீண்போவது இல்லை. புதிய விடியல்களும், பிரகாசமான நாள்களும் வரும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    குறிக்கோள் வெற்றியின் திறவுகோல்

    நம்மிடம் இருக்கும் உட்பகைவர்களை அழித்து வெற்றி காண்பதற்கு நம்மைப் பற்றி நாமே சுய ஆராய்ச்சி செய்து கொள்ள வேண்டும். நமது குறைபாடுகளை உள்ளதை உள்ளபடி அறிந்து சீர் திருத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    நம்மை நாமே ஆராயும் பொழுது நம்முடைய உண்மையான குறைபாடுகள் என்னவென்று தெரியும். அதன் மூலம் குறைபாடுகளைத் தெளிவாக அறிந்து அவற்றை மாற்றிக் கொள்ளவும். முயற்சி செய்ய வேண்டும்.

    அப்படிச் செய்யப்படும் முயற்சியின் காரணமாக நாளடைவில் நம்முடைய குறைபாடுகள் எல்லாம் மாறி சீர்மை பெரும் அப்பொழுது நாம் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.

    தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு சில கேள்விகளுக்குத் தெளிவான விடையைக் கூற வேண்டும். இந்த வினாக்களுக்கு சரியான விடையை அளித்து விட்டால் நாம் வெற்றிக்குத் தகுதி உடையவர்களாக விட்டோம் என்று அர்த்தம் கொள்ள முடியும்.

    வாழ்க்கையில் நமக்கு உற்சாகம் இருக்கிறதா அல்லது வெறுப்பு ஏற்படுகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். வாழ்வில் குறிக்கோள் இருக்கிறதா?

    அப்படி இருந்தால் அதனை அடைய சலிக்காமல் உழைத்து வருகிறோமா? நாம் எப்பொழுதும் வெற்றியைப் பற்றி எண்ணி வருகிறோமா? அல்லது தோல்வியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறோமா என்பதை நினைத்தப் பார்க்க வேண்டும்.

    வயது அதிகமானலும் தன்னம்பிக்கை ஏற்படுகிறதா அல்லது குறைகிறதா? நம்முடைய தொழிலை விரும்புகிறோமா இல்லையென்றால் அதற்கான காரணங்கள் என்ன?

    குறிக்கோளில் வெற்றி பெறத் திட்டம் தயாரித்து இருக்கிறோமா?  அப்படியானால் அதை செயல்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    நம்மிடையே ஆகும் மனப்பான்மை அதிகம் இருக்கிறதா? அல்லது ஆகாது என்ற மனப்பான்மைஅதிகம் உள்ளதா வெற்றி பெறுவோம் என்ற திட நம்பிக்கை நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    தொடர்ந்து முயறசி செய்து விடப்பிடியாக இருந்து வெற்றியைக் கைப்பற்றுவதில் நம்முடைய எண்ணம் குவிந்திருக்க வேண்டும்.

    ஒரு முகப்பட்ட மன நிலையைப் பெற நாம் என்ன முயற்சி செய்து வருகிறோம் என்று எண்ணிப் பார்ப்பதும் அசியமானது. வாழ்வில் முன்னேற ஊக்கமும் உத்வேகமும் இருக்க வேண்டும்.[hide]

    அடிக்கடி எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நாம் ஆரம்பிக்கும் காரியத்தை முடிக்கும் வரையில் உறுதி கொண்டு இருக்க வேண்டும்.

    பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல் புரிய தயக்கம் காட்டக்கூடாது. தினசரி ஆனுபவங்களில் இருந்த படிப்பினைப் பெற்று முன்னேற்றமடைய முயற்சி செய்தே ஆக வேண்டும்.

    வாழ்வில் வெற்றி பெற்று உயர்வடைய வேண்டுமானால் நம்மைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமனதாகும். சுய ஆராய்ச்சியானது வெற்றிக்கு வழி காட்டக்கூடியதாகும்.

    வினாவிற்கு உண்மையான விடையைக்கூறுவதினால் நம்மை பற்றி பிறர் தெரிந்து இருப்பதை விட அதிகமான விஷயங்களை நாம் அறிந்திருக்க முடியும். நம்முடைய உட்பகையை ஒழித்தால் தான் உயர்வடைய இயலும்.

    வாழ்க்கை வளம் பெற அவசியமான குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு முழு சக்தியும், பலத்தையும் உபயோகித்து அதனை அடைய வேண்டும்.

    நீ உண்னை நம்பு. நீ மகா வலிமையும் திடமும் உறுதியும் படைத்தவன் என்பது எப்பொழும் உன் சிந்தனையில் ஊன்றி இருக்ககூடும். அந்த உறுதி தான் உனக்கு வெற்றியைத் தேடித்தரும்.

    எல்லாத் துறையிலும் வெற்றிப் பெற்று உயர்ந்த தலைவர்களின் வரலாற்றை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் அனைவருமே ஒரு திட்ட வடிவமான ஒரு குறிக்கோளை முன் வைத்து உயர்வு பெற்று இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

    நிலையான வெற்றி பெற்றவர்கள் என்ற கருதப்படும் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவம் இந்த உண்மையை தான் எடுத்துகாட்டும்.

    ஒரு நிலையை அடைய வேண்டும் என்றோ, அல்லது ஒரு பொருளைப் பெற வேண்டும் என்றோ ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் அது நிறைவு பெறுவதற்குத் திடமான குறிக்கோள் வேண்டும்.

    அப்படி ஒரு குறிக்கோள் உருவாகி நிலை பெற்றால் தான் அதனை அடிப்படையாகக்க கொண்டு தொடர்ந்துமுயற்சியைச் செய்து செயலில் வெற்றி பெற முடியும் என்று அமெரிக்க கோடிஸ்ரவர் ஆண்ட்ரூ கார்னிகி கூறுகிறார்.

    சிந்தனையையும் செயலையும் எப்பொழுதுமே  அந்தக்குறிக்கோளை அடைவதற்கான வழிகளில் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இதே போல் நாமும் பின்பற்றி நடந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    எங்கேயும் எனிமா

    பயணக் காலங்களில் புதிய இடச்சூழல், குறைபாடுள்ள உணவுகள்  மற்றும் போதிய தூக்கமின்மை ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும் காரணிகளாக இருக்கும். இப்படி மலச்சிக்கல் ஏற்படுவதால், நம் உடல் உஷ்ணமாகி கல்லீரல் நொதிகள் அழிந்து செரிமானம் கெடும். இதனால், நமக்கு சாப்பிடவும் பிடிக்காமல், ஆற்றலும் கிடைக்காமல் உடல் களைத்துப்போவோம். இம்மாதிரியான நிலைகளில் இயற்கை அகிம்சை எனிமாவை எடுப்பதால், குடலின் மலக்கழிவு நீக்கப்பட்டு புத்துணர்வாக்கப்பட்டு, செரிமானம் சீர்பட்டு ஆற்றலாக உணர்வோம்.

    இயற்கை எனிமா எடுப்பதால் பயணக்கால குறைவுணவின் கழிவுகள் மற்றும் விஷவாய்வுகள் வெளியேற்றம் ஆகின்றன. பயணத்தில் ஏற்படும் உடலின் உஷ்ணம் அவ்வப்போது தணிக்கப்படுகிறது. நம் பெருங்குடலின் வாய்வு கணிசமாக வெளியேற்றப்பட்டு நமக்கு சளி பிடிக்கும் வாய்ப்பை மிகுதியாகக் குறைக்கிறது.

    பயணத்தின் களைப்பு நீக்கப்பட்டு பயணம் இனிமையாகிறது. பயணத்தின் போதோ அல்லது அதற்குப் பின்போ ஏற்படவிருக்கும் உஷ்ண நோய்த் தொற்று தவிர்க்கப்படுகிறது.

    பயணங்களில் பிரயாணம் மேற்கொள்வதற்கு முன்னர் எனிமா எடுப்பதால் மலக்குடல் சுத்தமாகி நுரையீரல் சுவாசம் ஆழம்பெற்று புத்துணர்வோடு பிரயாணம் மேற்கொள்ளலாம்.

    அதே போல், பிரயாணம் முடித்த பின்னரும் எனிமா எடுக்க வேண்டும். அப்படி எடுத்த பின்னர் ஓய்வெடுத்தால் உடல் புத்தாக்கம் விரைவாக நிகழும். சரி, நாம் எனிமா எடுக்கும் முறையினைப் பற்றி பார்ப்போம்.

    எனிமா எடுக்க இயற்கை வைத்திய மையங்களில் ஒரு பிலாஸ்டிக் குடுவை (Tumbler) விற்கிறார்கள். அது சுமார் 300 மில்லி லிட்டர் அளவு கொள்ளளவு கொண்ட அந்தக் குடுவையில் நாம் குடிக்கும் தண்ணீரை நிரப்பி நம் தோள் உயரத்திற்கு கட்டித் தொங்க விடவேண்டும்.

    பின்னர் அந்தக் குடுவையோடு இணைக்கப்பட்ட இரப்பர் குழாயின் நீர்க்குமிழிகளை (Air bubbles) வெளியேற்றிவிட்டு அதன் நுனியை (Nossle) சற்று குனிந்த வாகில் நம் ஆசன வாயில் சொருகிக்கொள்ள வேண்டும்.[hide]

    இப்பொழுது குடுவைத் தண்ணீரானது நம் மலக்குடலில் மெல்ல மெல்ல ஏறும். தண்ணீர் முழுவதுமாக ஏறியபின் நுனியை வெளியெடுத்துவிட்டு ஆசன வாயை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து நிமிடங்கள் படுத்த நிலையில் ஓய்வாக இருக்க வேண்டும். அப்படி  படுத்து இருக்கும் போது நம் பெருங்குடலில் ஏற்றிய தண்ணீரானது அதன் வளைவுகளில் ஊறிப் புகுந்து மலக்கழிவை கரைத்து வெளிக்கொண்டுவரத் தயாராய் இருக்கும். இப்பொழுது எழுந்து மலம் கழிக்கும் போது பெருங்குடலின் கணிசமானக் கழிவு வெளி வந்துவிடும். இதுவே எனிமா எடுக்கும் முறையாகும்.

    நாம் பிரயாணங்களில் அவசியம் எனிமா எடுக்க வேண்டுமா என்று அலுப்போடு கேட்பது எனக்குத் தெரிகிறது. உண்மையில் பிரயாணக் காலங்களில் எனிமா எடுப்பதால் பயண அலுப்பு குறைகிறது. அதேபோல், சக்தி செலவின்றி உடல் கழிவு வெளியேற்றம் நிகழ்வதால் மிச்சமாகும் சக்தி பயணத்திற்கு பயன்படுகிறது.

    அப்புறம் விரிவான முறையில் எனிமா எடுக்க நேரமும் இடவசதியும் இல்லையென்றால், வெறுமனே தண்ணீரை உள்ளேற்றி உடனடியாக மலம் கழிக்கலாம். இந்த முறையில் இரண்டு முறை எனிமா எடுத்தால் ஓரளவிற்கு முழுமையான எனிமாவின் பயன் நமக்குக் கிடைக்கும்.

    அன்பு நண்பர்களே! பயணங்களில் எனிமா எடுப்பதன் காரணம் மலச் சிக்கல் போக்க மாத்திரமல்லாது முக்கியமாக நம் உடலின் உஷ்ணத்தை தணிக்கவே. ஆகவே, எங்கு சென்றாலும் எனிமா குடுவையை (டம்ளரை) எடுத்துச் சென்று எனிமா எடுக்கலாம். எனிமா எடுப்பதால் யாதொரு பின் விளைவும் ஏற்படாது. சரியான நல்ல பலன்களே ஏற்படும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். ஆகவே எங்கேயும் எனிமா என்பது நல்லதும் சாத்தியமுமாகும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 71

    வெற்றிப் பாதை.

    “இதனால் எனக்கு என்ன இலாபம்?”.

    “இவரால் எனக்கு கொஞ்சம்கூட பயன் இல்லை”.

    “இந்தச் செயல் செய்வதால், பணம் எனக்குக் கிடைக்காது. பிறகு ஏன் நான் செய்ய வேண்டும்?”

    “ஒரு பைசாவுக்குக்கூட பலன் இல்லை. அங்கே போவதற்கு எனக்கு விருப்பமில்லை”

    – இவ்வாறு சிலர் வாழ்க்கையில் ‘கணக்குப்போட்டு’ வாழ்கிறார்கள்.

    “எந்தச்செயல் செய்தாலும் அதனால் தனக்கு பணவரவு வந்தாக வேண்டும்” என்று எண்ணி இவர்கள் செயல்படுகிறார்கள். தங்களுக்கு பணம் கிடைக்காத நேரத்தில் இவர்கள் மிகவும் சோர்வாகிப் போகிறார்கள். எரிச்சல் அடைகிறார்கள். கோபத்தை கொப்பளிக்கிறார்கள்.

    வாழ்க்கையில் எல்லா செயல்களையும் திட்டமிட்டு செய்வது நல்லதுதான். ஆனால், எந்தச்செயல் செய்தாலும் அதில் தனக்கு இலாபம் கிடைக்குமா? என்று யோசித்துக்கொண்டே இருந்தால், நல்ல செயல்களைச் செய்ய இயலாதநிலை ஏற்பட்டுவிடும்.

    பொதுவாக, மிகழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு சொத்து, பண வசதிகள் அவசியமான ஒன்றுதான். ஆனால், அந்த வசதிகளை ‘எவ்வாறு நாம் பெற்றோம்?’ என்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

    பிறரை ஏமாற்றி, கொள்ளையடித்து, கொலைத் தொழில்புரிந்து பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் நாள்தோறும் பெருகிவருகின்றன. இந்தநிலையில் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிப்பதுதான் வெற்றி வாழ்க்கை என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், முறையாகப் பெறாத எந்த செல்வமும்;; நம்மோடு தங்குவதில்லை என்பதை உணர்ந்துகொள்வதுதான் விவேகமான செயலாகும்.

    அவர் ஒரு பணக்காரர்.

    ஒட்டகம் விற்பனை செய்யும் சந்தைக்குச்சென்று நேரடியாக ஒட்டகத்தை வாங்க நினைத்தார்.

    பின்னர், ஒருநாள் சந்தைக்குச்சென்று ஒரு பெரும் ஒட்டக வணிகரிடம் நெடுநேரம் பேசி, ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்.

    வீட்டுக்கு வந்தபின் ஒட்டகங்களை அடைத்து வைத்திருக்கும் தனது ஒட்டகக் கொட்டிலில் அந்த ஒட்டகத்தை அடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். தனது பணியாளர் ஒட்டகத்தை கொண்டுசென்றார். பின்னர், ஒட்டகத்தின் முதுகின்மீது கட்டப்பட்ட தோல் இருக்கையை (சேணம்) அவிழ்த்தார் பணியாளர். அப்போது, சேணத்திலிருந்து ஒரு சிறிய பை கீழே விழுந்தது. அந்தப் பையை திறந்து பார்த்தார் பணியாளர்.

    நவரத்தின கற்கள் அந்தப் பையினுள் இருந்தது. அதிக விலைகொண்ட அந்த நவரத்தின கற்களைப் பார்த்த பணியாளர், ஆச்சரியப்பட்டார். தனது முதலாளியான பணக்காரரிடம் பையை கொண்டுவந்து காண்பித்தார்.

    “அய்யா இந்தப் பைக்குள் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருக்கின்றன. கடவுள் உங்களுக்கு இந்த ஒட்டகம்மூலமாக ரத்தின கற்களைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அதனை உங்களுக்கே வைத்துக்கொள்ளுங்கள். கடவுள் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது” என்று பணியாளர் தனது முதலாளியிடம் சொன்னார். ஆனால், அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    “இது எனக்குரிய பொருள் அல்ல. தவறுதலாக ஒட்டகத்தோடு வந்த நவரத்தின கற்கள் அந்தப் பெரும் வணிகருக்குச் சொந்தமானது. அதனை உடனே அவரிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்” என்று சொன்னார். அவசரஅவசரமாக ரத்தின பையைத் தூக்கிக்கொண்டு அந்த பெரும் வணிகரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

    பெரும் வணிகரை சந்தித்து ரத்தின கற்கள் அடங்கிய பொக்கி’ பையை கொடுத்தார் அந்தப் பணக்காரர். பையை வாங்கிக்கொண்ட பெரும் வணிகர், “உங்களை நான் பாராட்டுகிறேன். எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையோடு நடந்துகொண்ட உங்களின் பண்பு மிகச்சிறந்தது. உங்களுக்கு நான் பரிசு வழங்க விரும்புகிறேன். நீங்கள் இப்போது கொண்டுவந்த நவரத்தின கற்களில் சிலவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று நவரத்தின பையை கொடுத்தார்.[hide]

    பணக்காரர் அந்தப் பையை வாங்க மறுத்தார்.

    “உங்களிடம் இந்த நவரத்தின பையை தருவதற்குமுன்பே விலை உயர்ந்த இரண்டு ரத்தின கற்களை நான் என்னோடு எடுத்து வைத்துக்கொண்டேன்” என்று சொன்னார்.

    பெரும் வணிகர் ஆச்சரியப்பட்டார்.

    பையிலிருந்த நவரத்தின கற்களை எண்ணிப் பார்த்தார். அவர் ஏற்கனவே பையில் வைத்திருந்த நவரத்தின கற்களில் ஒன்றுகூட குறையவில்லை.

    பெரும் வணிகரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    “பையிலிருந்த இரண்டு ரத்தின கற்களை ஏற்கனவே எடுத்துவிட்டதாக சொன்னீர்கள். ஆனால், நான் வைத்திருந்த ரத்தின கற்கள் அத்தனையும் அப்படியே பையில் இருக்கிறதே?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

    பணக்காரர் நிதானமாக பதில் சொன்னார்.

    “நீங்கள் ஒட்டகத்தை எனக்கு விற்றதன்மூலம் முக்கியமான இரண்டு ரத்தினங்களை எனக்கு பரிசளித்திருக்கிறீர்கள். அதில் ஒன்று, ‘எனது நேர்மை’. இன்னொன்று, ‘எனது சுயமரியாதை’. நான் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன் என்பதை நிரூபிப்பதற்கு இப்போது ஒரு வாய்ப்பு தந்திருக்கிறீர்கள். அது இந்தப் பையில் இருக்கும் ரத்தினக் கற்களைவிட விலை உயர்ந்தது என்று நான் கருதுகிறேன். இன்னொன்று, அடுத்தவர்களின் பொருள் தவறுதலாக கிடைத்தால்கூட அதனை வைத்துக்கொள்வது எனது சுயமரியாதைக்கு அவமானம் என்பதை நான் புரிந்துகொண்டேன். இதுவும் நவரத்தின கற்கள்போன்று மதிப்புமிக்கது என்று உணர்ந்துகொண்டேன். எனவே, உங்கள் நவரத்தின கற்கள் எனக்கு வேண்டாம். ஏற்கனவே உங்களிடமிருந்து எனது நேர்மை, எனது சுயமரியாதை என்ற இரண்டு ரத்தின கற்களையும் எடுத்துக்கொண்டேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார் அந்தப் பணக்காரர்.

    அவரை ஆச்சரியத்தில் பார்த்தார் பெரும் வணிகர்.

    மற்றவர்களின் பொருளுக்கு வீணாக ஆசைப்படாத மனநிலைகொண்ட அந்தப் பணக்காரர் நிம்மதியாக இருப்பதைப்போல, இன்றும் பலர் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை ‘நெருப்பு’ என எண்ணி நீங்கியிருக்கிறார்கள். முறையற்ற செயல்கள்மூலம் கிடைக்கும் செல்வத்தை அவர்கள் மதிப்பதில்லை. “உழைப்பின்மூலம் கிடைக்கும் செல்வம்தான் உண்மையான வெற்றிக்கு அடையாளம்” என்றும் உறுதியாக நம்புகிறார்கள். இதுவே அவர்கள் புகழ் பெறுவதற்கு அடித்தளமாக அமைகிறது.

    எந்த இடத்திலும் இலாபம் குவிக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நகர்த்தினால், பலநேரங்களில் மனதில் எதிர்மறை எண்ணங்கள்வந்து எகிறிக்குதிக்கும். வெற்றிப்படிகளில் ஏறிச் செல்லும்போது வழுக்கி கீழே விழவைத்துவிடும். இதன்மூலம், வாழ்க்கையிலும் சறுக்கல்கள் உருவாகும்.

    எனவே, நேர்மையான முறையில் உழைத்து பணம் ஈட்ட முயலுவது சிறந்த வெற்றி வாழ்க்கைக்கு அழகாகும். எந்தச்சூழலிலும் நேர்மையோடு உழைக்கவும், மற்றவர்களின் பொருளுக்கு வீணாக ஆசைப்படாமல் வாழவும் கற்றுக்கொண்டால், வெற்றிப்பாதையில் பீடுநடை போடலாம்.

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?

    உபவாசம் என்பதற்கு அர்த்தம் அருகில் இருப்பது. எதன் அருகில் இருப்பது? இயற்கையின் அருகில் இருப்பது?

    இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களும், மனிதர்களும் ஆரோக்கியமாக ஆனந்தமாக இருப்பதைக் காண்கிறோம்.

    இயற்கையிலிருந்து விலக விலக நமது கண்டுபிடிப்புகளும், அவற்றின்  உபயோகமுமே நமக்கு ஆரம்பத்தில் ஆனந்தமாயிருந்தாலும், காலப் போக்கில் பாதிப்புகளையே தரும் என்பது கண் கூடு.

    மனிதராய் வாழும் நம் குணாதிசயம் என்னவென்றால் ஒத்தும் உதவியும் மகிழ்ச்சியாக வாழ்வதாகும். இதற்குத் தேவை மனிதநேயம்.

    சக மனிதர்களை மனிதர்களாய் மதித்து கனிவாக, அன்பாகப் பழக வேண்டும். மனித வாழ்க்கையை நான்கு பகுதிகளாய் பிரித்தனர் நம் முன்னோர்.

    இவை பிரம்மச்சரியம், இல்லறம், இராஜயோகம் மற்றும் ஞானயோகம் ஆகும். பிரம்மச்சரியம் என்பது கல்விகற்று, நல்ல பண்புகளைப் பெற்று, தேவையற்ற பழக்கங்களை நீக்கி, பொருளீட்டுவதற்கான தகுதியைப் பெறுவது.

    இல்லறம் என்பது, திருமணம் செய்து கொண்டு, தொழில் புரிந்து அறவழியில் பொருளீட்டி, குழந்தைகளைப் பெற்று வாழ்தல்.

    இராஜயோகம் என்பது பெற்றோர் , வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளைச் சரியாகப் பராமரிப்பதாகும்.

    ஞானயோகம் என்பது சமுதாயத்திடமிருந்து தான் பெற்று, துய்த்து இன்றுள்ள நிலைக்கு உயர்ந்ததை நினைவு கூர்ந்து, தம் உடல், மன ஆற்றலால் சமுதாயக் கடமையாற்றுவது.

    இதைச் செய்வதற்கு பரந்து விரிந்த மனம் வேண்டும். இதைப் பெற அனைத்துக்கும் மூலமான, மேலான ஒன்றை அறிந்து, அதோடு லயித்து ஆனந்திக்க வேண்டும்.

    இதில் முதலிரண்டையும் பக்தி மற்றும் கர்மம் என்று சொல்லலாம்.  பக்தி என்பது சிந்தனையாற்றல் உயராநிலையில், குழந்தைப்பருவத்தில் பெற்றோர்  மற்றும் பெரியோர் சொல் கேட்டு, அவற்றை நம்பி, நடப்பதாகும்.

    சிந்தனையாற்றல் அதிகரித்து, யோசித்து,அலசிப் பார்த்து முடிவெடுக்கும் நிலையில், குழந்தைப் பருவ பழக்கத்துக்குத் தெளிவான விளக்கம் அறிந்து ஆராய்ந்து, சீர்தூக்கி செயல்படுவதாகும்.

    எளிதாக விளைவறிந்து செயல்படுவது என்று சொல்லலாம். குழந்தைப் பருவ வாழ்க்கையை பக்தி என்னும் இலைகளை எண்ணுவதற்கும்; சிந்தித்து திறமை அறிந்து திட்டமிட்டுச் செயல்படும் கர்மயோகத்தை பழங்களை உண்ணுவதற்கும் ஈடாகச் சொல்லலாம்.

    சரியான நேரத்தில் சரியான செயல் இதை ஆங்கிலத்தில் RIGHT ACTION AT RIGHT TIME என்று சொல்லாம்

    சதுரங்கம் என்ற செஸ்விளையாட்டின் தாரக மந்திரம்  RIGHT MOVE AT RIGHT TIME என்பர்.

    சரியான நேரம், சரியான செயல் என்ற இந்த நான்கு சொற்களும் உங்கள் வாழ்க்கையைப் புரட்டி, உங்களை மேலே ஏற்றி விடும்.

    வாழ்க்கையின் இலக்குகளை, குறிக்கோள்களை, இலட்சியங்களை நிர்ணயிப்பதற்கும், அவைகளை அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கும், தீட்டிய  திட்டங்களைக் காலதாமதமின்றி சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கும் ஒரு வீட்டுப் பயிற்சி ( HOME WORK) தேவை.[hide]

    தேவைகள், இருப்பவை, வித்தியாசம் அதைப் பெறுவதற்கான தகுதி, இடைவிடா முயற்சியுடன் கூடிய செயல் இவைகள் தான் வீட்டுப் பயிற்சி.

    இந்தப் பயிற்சி இலைகளை எண்ணும் மன நிலையை மாற்றி பழங்களை உண்ணும் மனநிலைக்கான தகுதிக்கு உயர்த்தும்.

    இந்த நிலையில் அனைவருக்கும் தேவை கற்றதை நினைவில் வைத்து செயல் படுவதாகும். இதற்கு நேர உணர்வு அவசியம் தேவை.

    ஒவ்வொரு விநாடியும் எண்ணப்படுகிறது என்பதை EVERY SECOND COUNTS என்பர்.பருவத்தே பயிர் செய்- என்று தமிழில் அழகாகச் சொன்னார்கள்.

    காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை இயற்கையுடன் இணைந்து, ஏற்று செயல்படுவதற்குச் சொல்லலாம்.

    இலைகளை எண்ணிக் கொண்டிருப்பது பிறரைப் பற்றிய குறைகளை நோட்டமிட்டுச் சொல்லுதல், மற்றவர்களைப் பற்றிய தேவையற்ற விமர்சனம், நமது பழைய செயல்களைத் தேவையற்ற இடத்தில் பேசுதல் போன்றவையாகும்.

    இவற்றில் யாருக்காவது பிரயோசனம் உண்டா? நிச்சயமாக இல்லை.நமது நேரமும் வீண் ; மற்றவர்களுடனான உறவிலும் விரிசல் வந்து சேரும்.

    பழங்களை உண்ணுவது என்பது சரியான நேரத்தில் சரியான செயலுக்கானது. பெரிய தத்துவமே இதில் அடங்கியுள்ளது.

    பழங்களைச் சரியான நேரத்தில் உண்ணாவிட்டால், அவை அழுகி, சாப்பிட லாயக்கற்றதாகிவிடும்.

    காயாக இருக்கும் போதும் உண்ண முடியாது; அதிகமாய் கனிந்த பின்னும் உண்ண முடியாது. சரியான பதத்தில் உண்ண வேண்டும்.

    இதற்குத் தேவை தான் நேர உணர்வு. இந்த நேர உணர்வு இல்லாததால், பல இளைஞர்கள் படிப்பை முடிக்க இயலாமல், வேலை வாய்ப்பைத் தவற விட்டு வருந்துவதைப் பார்க்கிறோம்.

    திட்டமும், அதைச் செயல்படுத்தும் முயற்சிக்கான காட்சியும், செயல்பாட்டை உரிய காலத்தில் முடித்து விடும் பலத்தைத்தரும்.

    விருப்பமும் ஈடுபாடும் செயலுக்கான இரு சக்கரங்களாகும். நம் மூளை ஆபார சக்தி வாய்ந்தது. பாலை உறைய வைத்து தயிராக்கலாம். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து மோராக்கலாம்.

    இதில் எதையும் முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. வெண்ணெயை உருக்கி, நெய்யாக்கலாம். ஆனால், நெய்யை மீண்டும் வெண்ணையாக்க முடியுமா? முடியும்.

    விசித்திரமாயுள்ளது. ( 30மில்லி) ஒரு கப் நெய்யை உருக்கி, அதில் ஐஸ் துண்டுகள் சில சேர்த்து, மிக்சியில் அரைத்தால் நெய் வெண்ணையாக மாறுகிறது.

    சந்தேகமிருப்பின் செய்து பாருங்கள் எனவே, வருங்கால சாதனையாளர்களே!  காலம் உயிர் போன்றது என்பதால் நேர உணர்வுடன் நோக்கத்தை நினைவில் கொண்டு, கவனத்தைச் சிதறவிடாமல், மன ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டு.

    பெற்ற தாயும் பிறந்த நன்னாடும்

    நற்றவ வானினும் நனி சிறந்தனவே

    என்ற வரிக்கிணங்க வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    முற்றும்.[/hide]

    இந்த இதழை மேலும்