Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்


ஞானசேகரன் தே
Author:

(வெற்றிச் சிந்தனைகள் நூல்களின் அறிமுகம்)

தன்னம்பிக்கை மாத இதழின் வாசிப்பாளர்களுக்கு எனது வணக்கங்கள். நான் இந்தத் தொடரில் ஒவ்வொரு மாதமும் வெற்றிச் சிந்தனைகள் குறித்து மேல்நாட்டு அறிஞர்களால் எழுதப்பட்ட ஏதேனும் ஒரு நூலை அறிமுகம் செய்ய இருக்கின்றேன். இத்தொடரை நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது வாசிக்கும் பழக்கத்தால் ஒருவர் எப்படி வெற்றி பெறும் ஆற்றலுடையவர் ஆகிறார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் (Read and get Rich)

இந்த நூல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பர்க் ஹெட்ஜஸ் (Burker Hedges) என்பவர் எழுதியது. (இதனை மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் எனும் நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழில் ஆலிரத் அசோக்குமார் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார்.) சரியான நேரத்தில் சரியான புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும். இதற்கு நானே ஒரு ஆதாரமாக இருக்கின்றேன் என்று இந்த நூலின் ஆசிரியரே தன்னை உதாரணமாகக் காட்டி, அவர் வாழ்க்கையை மாற்றிய உலகிலேயே மிகச் சிறந்த விற்பனையாளர் (The Greatest Salesman in the world) என்ற புத்தகம் பற்றி வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். அதுவரை தான் ஒரு சாதாரண வேலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து வந்தேன். இந்த நூலைப் படித்ததும் செல்போன், தொலைபேசி விற்பனை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மிக விரைவில் செல்போன் தொலைபேசி தயாரிக்கும் தொழில் நிறுவனம் தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவராக ஆனதாகச் சொல்கிறார்.

வாசிக்கும் பழக்கம் மற்ற எந்தவொரு செயல்பாட்டைக் காட்டிலும் நமது உள்ளார்ந்த ஆற்றலை வெளியிடக்கூடிய சக்தி உடையது. ஒரு சிறந்த புத்தகமானது ஒரு வங்கியைக் காட்டிலும் மேலும் அதிக உண்மையான செல்வத்தைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களின் வெற்றி மற்றும் தோல்வியை அவர்கள் தேர்வு செய்யும் விருப்பத் தேர்வுகளே முடிவு செய்கின்றனவேயன்றி வாய்ப்புக்கள் அல்ல என்பதை பர்க்ஹெட்ஜஸ் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்

எந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது உங்களுக்கே ஒருபோதும் தெரியாது. அதுவே வாசிப்பதில் இருக்கும் அழகாகும்; அது, அற்புதமான உள்நோக்கும் நுண்ணறிவுகள் ஊடாக. உங்கள் வாழ்க்கையில் உடனடி நிலை மாற்றங்களை எடுக்கும் ஆற்றலை தன்னுள் கொண்டிருக்கிறது. சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் லிங்கனை அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக்கியது அவர் படித்த புத்தகங்களே என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்த உலகத்தில் முன்னேறுவதற்கு உதவும் மிகச் சிறந்த கருவி வாசிக்கும் பழக்கமே என்பதை லிங்கன் தனது இளம் வயதிலேயே புரிந்துகொண்டார். அதனால்தான் ஏழ்மையான நிலையில் இருந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் அளவுக்கு மாபெரும் மனிதராக உயர்ந்தார். அதுமட்டுமல்ல வாசித்தல் பழக்கமே அவரை சிறந்த மேடைப் பேச்சாளராக மாற்றியது என்றும் அவரது வரலாற்றைப் படிப்பதன் மூலம் தெரிகிறோம். அதேபோன்று அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியான ஹாரி ட்ரூமன் கல்லூரிப் படிப்புக் கூட இல்லாத நிலையில்; அவருக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கக் காரணமாக அமைந்தது அவரது வாசிப்புப் பழக்கமே என்று சொல்லப்படுகிறது. முதல் தர தலைவர் ஒருவருக்கு வாசிக்கும் பழக்கம் ஒரு மைல் என்பதைத் தெரிந்திருந்தார். அவரின் சொற்களில் சொல்வது எனில், ஒவ்வொரு வாசிப்பாளரும் ஒரு தலைவராக இருப்பது இல்லை, ஆனால் ஒவ்வொரு தலைவரும் நிச்சயம் ஒரு வாசிப்பாளரகத்தான் இருப்பார். இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வ பள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் எப்போதும் படித்துக்கொண்டே இருந்த ஒரு கல்வியாளர் என்பது நாம் அறிந்ததே. அதேபோன்று பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் எப்போதும் புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தவர்கள் என்பது இங்கு நினைக்கத்தக்கது.

ஒரு புத்தகத்தை எப்படி வாசிப்பது

 இந்தப் புத்தகத்தின் முக்கியமான பகுதி இதுதான்.

 1. புத்தகத்தின் முக்கிய பகுதிகளை முதலில் வாசிக்கவும்,
 2. சுறுசுறுப்பாக வாசித்து குறிப்புகள் எடுக்கவும்,
 3. உங்கள் குறிப்புகளை மதிப்பாய்வு செய்யவும்

என்று பரிந்துரைக்கும் பர்க் ஹெட்ஜஸ்; இவை ஒவ்வொன்றையும் விளக்குகிறார். ஒரு வீட்டை வாங்க விரும்புபவர் அந்த வீட்டின் புகைப்படத்தைப் பார்த்து உடனே வாங்கி விடுவதில்லை. நேரில் சென்று வீட்டின் அனைத்துப் பகுதியிலும் நுழைந்து எல்லாப் பகுதிகளையும் ஆய்வு செய்து அதன் பின்னரே வாங்க முடிவு செய்வார். இது போன்றதே புத்தக வாசிப்பும். ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னதாக, அந்தப் புத்தகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் பார்க்க நீங்கள் ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்பு பொருளடக்கம், முக்கியமான அத்தியாயங்கள் என்று முக்கிய பகுதிகளை முதலில் வாசிப்பதால் பிரமிக்கத்தக்க  முக்கியமான அனுபவம் கிடைக்கக்கூடும்.

சுறுசுறுப்பாக வாசித்தல் என்பது தகவல்களை சேகரிக்கவும், நமது புரிந்து கொள்ளுதலை அதிகரிக்கவும் வினாக்களைக் கேட்டு விடை அளிக்கும் ஒரு மனரீதியான செயல்முறையே அன்றி வேறொன்றும் இல்லை. வாசித்து வாழ்வை வளமாக்க வேண்டுமெனில் நாம் அதிகமாக வினாக்களைக் கேட்கத் தொடங்க வேண்டும். அதேவேளையில் உங்களுக்கு முக்கியமெனப்படுவதை அடிக்கோடிட்டும், குறிப்பு எடுத்துக் கொண்டேவும் படிக்கலாம்.

மூன்றாவது படிநிலையாகச் சொல்லப்படும் குறிப்புகளை மதிப்பாய்வு செய்தல் என்பது வாசித்தலின் கடைசிப் படிநிலை ஆகும். ஒரு நூலைப் படித்ததும் படித்த எல்லாம் நினைவில் நிற்பதில்லை. அதேவேளையில் குறிப்புக்களைப் பார்க்கும்போது நமக்கு மறந்து போனது போல தெரிந்தவை எல்லாம் பளிச்சென்று நம் கண் முன்னால் வந்து நிற்பதைக் கண்டு நாம் பெரிதும் வியந்துபோவோம். நாம் அடிக்கோடிட்டு வைத்துள்ள வரிகளில் உள்ள உள் நோக்கும் நுண்ணறிவும் மதிப்பாய்வு செய்யும்போது மடை திறந்த வெள்ளம் போல நம் கண் முன்னால் கரை புரண்டு ஓடுவதைக் காணமுடியும்.

வாசித்தல் தரும் பயன்கள்

புத்தக வாசிப்பின் அளப்பரிய பயன்கள் இந்நூல் முழுமையும் நிரம்பி வழிகின்றன. அவற்றில் சில.

 • வாசிக்கும் பழக்கம் நம்மை பல துறைகளிலும் வளம் அடையச் செய்கின்றது.
 • வாசிப்பாளர்கள் உலக அளவிலான தகவல்களை தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கின்றனர்.
 • வாசிக்கும் பழக்கமானது தடைகளை உடைத்து வெற்றியை அளிக்கிறது.
 • வாசித்தலும், எழுதுதலும் நம்முடைய மன ஆற்றல்களை விரிவாக்குகின்றன.
 • உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ, மனதிற்கு வாசித்தலும் அப்படியே.
 • நீங்கள் என்ன வாசிக்கிறீர்களோ அதுபோலவே இருக்கிறீர்கள்.
 • புத்தகங்கள் நமக்கு சிறகுகள் கொடுக்கின்றன.
 • புத்தகங்களின் சிறந்த அம்சம் என்னவெனில் மாபெரும் மனிதர்கள் நம்மிடம் பேசுகின்றனர். தங்களின் பொன்னான எண்ணங்களை நமக்கு வழங்குகின்றனர்.
 • வாசிப்பதன்மூலம் நமது உலகத்தை, நமது வரலாற்றை மற்றும் நம்மையே நாம் கண்டறிகிறோம்.
 • வாசிக்கக் கூடியவர்கள் இருமடங்கு சிறப்பாக பார்க்கவும் செய்கின்றனர்.

வாசித்தலே வாழ்தல்

தாமஸ் ஜெஃபர்சன் என்ற அறிஞன் சொல்லுவான் புத்தகங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று; ஆம் நாம் வாழ வேண்டுமென்றால் புத்தகங்களை வாசித்துத்தான் ஆகவேண்டும். இந்த உலகில் பெரிய வெற்றி வாகை சூடியவர்கள் எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தவர்கள்தான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மாவீரன் அலெக்ஸாண்டர் தன்னுடன் எப்போதும் அதாவது போர்முனையில் கூட ஹோமர் எழுதிய இடியத்; ஓடிசியை வைத்திருப்பாராம். இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு எப்போதும் படித்துக்கொண்டேயிருந்தவர்தான். இந்தியாவின் சட்ட நூல்களை எழுதிய டாக்டர் அம்பேத்கர் தனது வீட்டில் பெரிய நூலகத்தையே நிறுவி படித்த வரலாறு நாம் அறிந்ததே. லார்ட் பைரன் ஒரு துளி மை, பல இலட்சம் பேரை சிந்திக்கத் தூண்டும் என்பார். ஆமாம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வரியில் வள்ளலாரின் இரக்கத்தையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியில் கனியன்பூங்குன்றனின் உலக ஒருமையையும் “அன்பே கடவுள் என்ற வரியில் திருமூலரின் கடவுள் கொள்கையையும் நாம் வாசித்தல் அனுபவத்தால் பெறுகின்றோம். வாசித்தல் என்பது வெறுமனே படிப்பதல்ல! வாசித்தல் என்பது வாழ்தல் ஆகும். வாசிப்பு மன இறுக்கத்தைக் குறைத்து இளைப்பாறுதலைத் தரும். வாசித்தல் என்பது வெறுமனே தகவலை மட்டும் பெறுவதாகாது! வாசித்தால் வாழ்க்கையே மாறும் என்பதே வாசித்தல் தரும் பயன்.

நல்ல புத்தகங்கள் அதன்

அனைத்து ரகசியங்களையும்

ஒரே நேரத்தில் கொடுத்து

விடாது என்பார்கள். ஒரு

நூலை தொடர்ந்து வாசிப்பதும்

வாசித்தலை வாழ்க்கையில்

பயன்படுத்திட முயல்வதும்

வாசிப்புக் கலையில் உள்ள

பெரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

வாசிப்பதால் நாம் வாகை சூடிடலாம். வாருங்கள் நாம் தொடர்ந்து வாசிப்போம்.

– வாசிப்பு தொடரும்

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்