இரா. கதிர்வேல்
முனைவர் பட்ட ஆய்வாளர்.
முகப்புரை:
தன்னம்பிக்கையோடு வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற, ‘கல்வி’ இன்றியமையாதது. பொதுவாக, எழுதவும் படிக்கவும் அறிதலையே ‘கல்வி’ என்று கருதுகின்றனர். கல்வியானது, எழுத்துக் கேள்விக் கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளை உடையது. மொழி உருவான பின்னர், அறிவைப் பெறப் பயன்பட்ட முறைகளும் ஒன்றே எழுத்துக் கல்வியாகும். ஒருவருக்கு எழுத்துக் கல்வியின் தேவை, மிக இன்றிமையாததே. எனினும் அறிவுப் பெருக்கத்திற்கு, எழுத்து வழிக் கல்வியின் பங்கு குறைவானதே ஆகும். அறிவு வளர்ச்சிக்கு, ஐம்பொறிகள் வழியாகக் கண்டும், கேட்டும், உணர்ந்தும் பெறும் கல்வியே பெரும் பங்கு வகிக்கிறது. அதனுள்ளும் செவி வழியாகக் கேட்டுக் கற்கும் கேள்விக் கல்வி நடைமுறையில் வாழ்வை வெற்றி கொள்ளப் பெருந்துணையாகிறது.
எழுத்தறிவு என்பது வேறு; அறிவு என்பது வேறு. எழுதப் படிக்க அறிந்த அனைவரும் அறிவாளிகள் அல்லர். அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதும் முயற்கொம்பே. பள்ளி, கல்லூரி சென்று, எழுத்தறிவு பெறாத பலர், படிக்காத மேதைகளாய் இருந்து, சிறந்த வெற்றிகளை வாழ்வில் குவித்துள்ளனர். அவ்வெற்றியாளர்களுக்குக் கேள்விக் கல்வியே வாளும், கேடயமாகவும் இருந்துள்ளது.
பேச்சு மொழி:
கருவறையிலேயே குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது என்கிறது அறிவியல். பிறந்த குழந்தை, தன் பெற்றோரும், சுற்றியுள்ளோரும் பேசும் மொழியைக் காதால் கேட்டு, சொற்களஞ்சியம் பெருக்கி, ஓரிரு ஆண்டுகளில் பேசும் மொழியைக் கற்றுக் கொள்கிறது. முறையாகக் கற்றுக் கொடுக்காமலேயே, குழந்தை தானே மொழியறிய, கேட்டலே உதவுகிறது. கேட்டல் வழியே அறிவு பெற்று வாழ்வில் முதல் வெற்றியைப் பதிவு செய்கிறது மனிதக் குழந்தை.
வாழ்வியல் கல்வி:
எழுத்துக் கல்வி அறிமுகம் இல்லாத பழங்காலத்தில் இளையோர், வாழக் கற்றலாகிய வாழ்வியல் கல்வியை அறிவுரைகள், பாடல்கள், பழமொழிகள், கதைகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவற்றின் மூலம் மூத்தோரிடமிருந்து கேட்டல் வழிக் கற்றனர். இக்கேட்டல் கல்வி வழியே தான் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, மரபுகள், பழக்க வழக்கங்கள் போன்றவை ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. தொழிற்கல்வியான உழவு உள்ளிட்ட குடிவழிக் கல்வியும் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் இளையோரால் கற்கப்பட்டது. நவீன காலத்தில் இவை ஏடுகளில் ஏறியிருந்தாலும் பெரும்பாலும் கேள்வி வழியே தான் வாழ்வியல் கற்றல் நிகழ்கிறது.
கேள்விக் கல்வி குறித்து அறிஞர்கள்:
கேட்டல் வழியாகக் கற்றலின் சிறப்பைப் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய ஆசிரியர்கள் தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். ‘கேள்வி முயல்’ என்று ஆத்தி சூடியில் ஒளவையார் கூறுகிறார். எழுத்தறிவாகிய நூற்கல்வியைக் கற்காவிட்டாலும், பிறர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறுக என்ற பொருளில் ‘கற்றினாயினும் கேட்க’ என்கிறார் திருவள்ளுவர். முன்றுறையரைனார் தம் பழமொழி நானூறில் ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்கிறார். ‘இன்பக் கேள்வி இசையவன் காண்’ என்கிறது தேவாரம். செவி வாயாக, நெஞ்சு களனாகக் கேட்க வேண்டும் என்கிறார் பவணந்தி முனிவர். கேட்டவன் கேடில் பெரும்புலவனாவான் என்கிறது சிறுபஞ்சமூலம்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
என்ற இக்குறள் உட்பட, பத்துக் குறள்களின் வழி, கேள்விக் கல்வியின் சிறப்பை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.
முடிவுரை:
வாழ்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் தன்னம்பிக்கை மிக்க உரைகளையும், மூத்தோரின் அனுபவ உரைகளையும், ஆசிரியர்களின் அறிவுரைகளையும் பெற்றோர்களின் அன்புரைகளையும், நம் நலன் விரும்பிகளின் நல்லுரைகளையும் வாய்ப்பமையும் போதெல்லாம் கேட்டு அறிவு பெறுவோர் வாழ்வை வெல்வர் என்பது வெளிப்படை.