– 2019 – July | தன்னம்பிக்கை

Home » 2019 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உலக அதியசயம் நீயே!

    உலக அதிசயங்களை கேட்டால் ஏழு என்ற பதில் தான் இன்றுவரை. வைரமுத்துவிற்கு மட்டும் அது எட்டு ஆனது சினிமாவிற்காக. ஏழு அதிசயங்கள் என்பதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஏழு அதிசயங்களே சந்தேகமானது எனக்கு.  என்ன தெளிவாக குழப்புவது போல் உள்ளதா. இல்லை தெளிவடையத்தான் இது. எங்கே அந்த ஏழு அதிசயங்களை பட்டியலிடுங்கள்…

    உலக அதிசயம் என்று ஏன் இந்த இந்திய தாஜ்மகால், சீனபெருஞ்சுவர் இவற்றை குறிப்பிடுகிறீர்கள்? அவை போல் மற்றொன்று இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், பழசாகிப் போன தாஜ்மகால், பாசி படர்ந்து இடிந்து போன சுவர், துறுபிடித்த டவர் இவைகளை போல் நம் இன்றைய வல்லுநர்களால் இதை போல் அல்லது இதை விட அதிசயமாய் இன்னொன்றையும் உருவாக்க முடியும் அல்லவா? இன்றைய விஞ்ஞான உலகில் இது சாத்தியம்.

    ஆனால் என்னைப் போல் – நம்மை போல் ஒருவரை யாராவது உருவாக்க இயலுமா?ஒருவரைப் போல் எழுவர் இருப்பர் என்ற திண்ணை பேச்சுகாரர்களிடம் கூட கேளுங்கள். சாத்தியம் இல்லை.  அறிவியல் மற்றும் மருத்துவ உலகிலும் இது போன்ற குளோனிங் சோதனைகள் நடந்த போதிலும் இரு உயிரினங்களின் மனம், செயல் வெவ்வேறாகிப் போனது.

    இது போதாதா நான் தான் – நாம் தான் உலக அதிசயம் என்பதற்கு. இன்னும் நம்ப முடியாதவர்களுக்காக – இயற்கை (அ) இறைவன் தந்த சாட்சிகளைப் பாரீர்

    ஏழு அதிசயங்கள் வௌல்யில் இல்லை – நம் உடலில் தான் உள்ளன உலகில் வேறு எவரிடமும் இல்லாத நமக்கு மட்டுமே உள்ள அந்த ஏழு அதிசயங்கள்.[hide]

    1. முடி – நம் ஒரு முடியை வைத்தே நம் பரம்பரையை சொல்ல இயலும் நுண்ணுயிர் ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!
    2. கருவிழிப்பாவை – நம் உடலில் இருந்து எடுத்து மற்றொறு உடலில் பொருத்திய பிறகு முன் இருந்த சக்தியில் இருந்து மாறுபடுகிறதே – கண் மருத்துவ – ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!
    3. பல் – நம் ஒரு பல் வைத்தே நம் பழக்க வழக்கம் பரம்பரை ஆய்வறிந்து செய்யும் உடல் கூராய்வு ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!
    4. நாக்கு – நம் நாக்கில் உள்ள நரம்புகள் மற்றொறுவரிடம் வேறுபட்ட சுவை உணர்வு கொண்டவை – ஒரு துளி இனிப்பு பல சுவை தரும் ஒவ்வொருவர்க்கும் – சிறு புளிப்பு, மிக இனிப்பு, இனிப்பு என. சுவை உணர்வு ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!
    5. கை விரல் ரேகை – ஏன் சவாலுக்கு கட்டைவிரல் உயர்த்துகிறோம்.. யோசியுங்கள்..(ஒரு முறை ஆசிரியர்களின் பயிற்சியில் பல பதில்களுக்கு பின் கிடைத்த பதில் – எல்லோரும் காட்டுகிறார்கள் நாங்களும் உயர்த்துகிறோம் ) நம் கைவிரல் ரேகை போல் இவ்வுலகில் வேறு எவர்க்கும் இருக்காது. கை ரேகை ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!
    6. உடல் செல் – நம் உடலில் உள்ள நுண்ணுயில் போல் அனைவருக்கும் அமைவதில்லை. வியர்பது முதல் உடல் வாசனை வரை அனைத்துமே அற்புதம் தான். நுண்ணுயிர் ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!
    7. விந்தனு – நம் உடலின் விந்தணுக்கள் மற்ற எவரிடமும் பொருந்தாத காரணத்தினால் தான் நாம் நமக்கென்று பரம்பரை உருவாக்க முடிகிறது.  ஆய்வாளர்களை கேளுங்கள் – அதிசயம் உணர்வீர்கள்!

    என்ன இப்போதாவது தெ(ளி)ரிந்ததா?  நாம் தான் உலக அதிசயம்.. உயிரற்ற அந்த ஏழும் வரலாற்றில் இடம்பெற்று தினசரி செய்திகளாய் பல பேர் வந்து பார்க்கும்படி செய்யும்போது உயிரோடு நடமாடும் நமக்கேன் தாமதம்?

    எழுவோம் ஏழு அதிசயமான நாம், – வையகத்து தலைமை கொள்வோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தடுப்பணை

    சிலவேளை இம்போஸிஸன் போல பத்துமுறை அக்காவை நான் நேசிக்கிறேன், தங்கையையே எப்போதும் யோசிக்கிறேன், என்கிறமாதிரியும் எழுத வைத்துப் பார்த்தார்.

    அதற்கு முன்பு…

    அக்காவை நான் அடிக்க மாட்டேன்

    தங்கையை டீ.வி ரிமோட் கேட்டு கிள்ள மாட்டேன்

    என்றெல்லாம்… நெகடிவ் ஆக எழுதி தடுக்க பார்த்த பிறகு… அது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போலானது…

    அதனால் அப்படி எதிர்மறையாக என்னென்னவெல்லாம் கூடாது, தவறு என்று பட்டியல் போடுவதற்கு பதிலாக, எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நடைமுறை பட்டியல் தயாரிக்கத் தொடங்கினார்கள் கந்தவேல் அன்ட் கோ…  அதையும் தாண்டி அக்கா தங்கைகள் சச்சரவு வரும்பொழுதுதான் தடுப்பதற்காக ஒரு தண்டனை போல அடி கொடுக்க முயற்சி செய்தார் கந்தன்.

    கந்தன் கருணை மேலோங்கியது.

    வேல் இது தவறு… நீ தங்கையை அடித்திருக்க கூடாது.  அதற்கு தண்டணையாக ஒரு அடி நாளைக்கு காலை அந்த பய ரூமில் நாம் இருவரும் உள்ளே தனியாக போய்… உனக்கு அடிகொடுத்த பிறகு வெளியே வருவோம்.  உள்ளே போகுபொழுதும் வெளியே வரும்பொழுதும் புன்னகையோடுதான் வர வேண்டும்.  அப்படி வரும்பொழுது அடிவாங்கினோம் என்ற குற்ற உணர்வு வராது.  என்று கந்தவேல் கூறுவார்.  ஏனென்றால் அவர் சிறுவனாக இருந்த பொழுது… கந்தவேலுடைய அப்பா… நாலுபேர் பார்க்கும் பொழுது… நடு வாசலில் வைத்து… கைக்குக் கிடைத்த குச்சியால்… கண் மண் தெரியாமல் ஓடவிட்டு… துரத்தி அடித்தது.  உண்டு.  இதில் கண்மண் தெரியாமல் ஓடியது கந்தவேல் மட்டும் தான். அவருடைய தந்தைக்கு கண் தெளிவாக தெரிந்திருந்தது என்பதை கந்த வேல் வாங்கிய அடி சொல்ல கேட்டிருக்கின்றார். சில தவறுகள்

    அடித்தால் திருத்தப்படும்…அழுத்தந் திருத்தமாக…என்பது கந்தவேலின் அப்பாவுடைய நம்பிக்கை அது நமது கட்டுரை வழங்கும் நீதி அல்ல.  ஒரு செய்தி மட்டுமே. அது நடந்தது 1980 களில்… ஆனால் 2010 களில் காலம் மருவி விட்டது…சில வேளைகளில் கந்தனும்… வேல்விழியும் வீட்டின் தனியறைக்குள்… தண்டனை அறை… என்றே சொல்லலாம். பயங்கரமாக இருக்கிறது… ஏதோ… “இன்ட்டரோகேஷன் செல்”  மாதிரி…தவறு நடக்காமல்… தடுக்கிற…தடுப்பணை கட்டப்படுகிற…  ஆஹா… கட்டுரை தலைப்பு பொருந்தி வந்துவிட்டது ‘தடுப்பணை’ கட்டுகிற அறை என்று கூட சொல்லிவிடலாம். அதற்குள் சில வேளைகளில் நாடகம் நடக்கும்…அப்பா… அடிக்கிற மாதிரி நடிப்பார்…குழந்தை அழுகிற மாதிரி நடிப்பாள்… கொஞ்சம் நாடகம் நடக்கும்…அதன் பின்னர்…கதவை திறந்து வெளியே வரும்பொழுது வாசல் பக்கத்திலேயே விழாமலர் காத்திருப்பாள்…சில வேளைகளில் காதை கதவுமேல் படியவைத்து, “துப்பறியும் புலி”, வேலையும் பார்ப்பது உண்டு.

    விழாமலர்… என்கிற பெயர் ஆண்டு விழா புத்தகங்களுக்கு பொருந்தும். அது இரண்டாம் பெண்ணுக்கு எப்படி பொருந்தும்? என்று பார்க்கலாம். வாடா மல்லி போல இவள் என்றும் வாடி விழாத மலர் என்று கொள்ளலாம். கந்தவேல் சிலவேளை படக்கென்று கதவை திறந்து வெளியே ஒட்டு கேட்டும் விழாமலரை சரிந்து உள்ளே விழ செய்வதும் உண்டு. என்றைக்கு நிஜமாய் அடிவிழும் என கந்தனுக்கே வெளிச்சம்…

    இந்த திருத்த நடவடிக்கைகள் சிறிது நாள் பயன்பட்டன.  அதுக்கப்புறம் வேல்விழியும் விழாமலரும் அதையும் தாண்டிவிட்டனர்… வளர்ந்தும் விட்டனர்.

    அடிவாங்கி அழுதபின் நார்மல் நிலைக்கு வர கால தாமதமானது.  அதற்காக…  எம்பி குதித்தல்… ஒன் டூ த்ரி… எக்ஸர் சைஸ் செய்தல் குனிந்து எழுதல்… போன்ற பிஸியோதெரபி… பிரயோகம் செய்யப்பட்டது… அவ்வப்போது பலன்கொடுத்தது.  கந்தவேல்… இந்த முறை கேபிள் வயர்களை… “கேஸ்ட்ரா க்னிமியஸ்”  என்னும் பின் முழங்கால் சதையில் மட்டும் அடிக்க கற்றுக் கொண்டிருந்தார்.  இன்முகம்  மாறாமல்… கோபம்… கொள்ளாமல் ‘தடுப்பணை’ (தண்டனை – அல்ல – முதலில் இந்த தலைப்பு கொடுத்து பின்னர் மாற்றப்பட்டது) கட்டப்பட்டது.  கோபம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது ஃபாலோ பண்ணப்பட்டது.  தவறை தடுப்பணை மூலம் திருத்துவதில் கோபம் என்கின்ற மூலக்கூறுக்கு வேலையே இல்லையே… சிலவேளைகளில் சில பெற்றோர்கள்… குழந்தைகளை நல்வழிப்படுத்த முயற்சிக்கும்பொழுது…சினம் மேலிட…சிந்தனையை தவறவிட்டு விடுகின்றார்கள்.  கந்தவேலுடைய அப்பா அப்படித்தான் ஒருமுறை ஒரு திடுக்கிட வைக்கும் கதையை சொன்னார்…கந்தவேல் பிறப்பதற்கு முன்பு… அவருடைய மாமா…அதாவது அம்மாவின் தம்பி கதிர்வேல் என்று வைத்துக்கொள்வோம் அவர் கந்தவேல் குடும்பத்தோடு இருந்திருக்கின்றார்.  ஏதோ ஒருநாள், கோபத்தில் சின்னப் பையனாக இருந்த கதிர் வேலை அறைந்திருக்கிறார்… ஓங்கி… வள்ளுவர் கூறியது போல வேகமாக ஓங்கி மெதுவாக இறக்க மறந்துவிட்டார் போல… கதிர் வேலின்… காது… ங்ங்ஙொய் என்று கொஞ்ச நாள் கேட்காமல் போய்விட்டதாம்.  அதன் பிறகு அவர் மாமா – கதிர்வேல், தனது அக்கா வீட்டிலிருந்து பாதுகாப்பாக கிளம்பிவிட்டது வரலாறு… அதுமாதிரி அடித்துவிடுதல் அபாயகரமானது… தவிர்க்க வேண்டியது… இதையெல்லாம் யோசனை செய்த கந்தவேலு தடுப்பணை கட்டும் அறைக்குள் போனாலே… வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல சிரிக்க ஆரம்பித்து விடுவார்… அவர் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சரியான டைமிங் பஞ்ச்சை எப்போது சொன்னவர்?  என்றால் நம்மால் நம்பவே முடியாது?

    எப்போது

    விழாமலர் – பிறக்க பிரசவ வேதனையோடு அற்புதன்ல்லி லேபர் வார்டுக்குள் வலிதாங்க முடியாத கண்ணீரோடு நகரும் பொழுது… தள்ளும் நகரும் படுக்கையில் கூட கரங்களை ஆறுதலாக கைகளை பிடித்துக்கொண்டு நடந்து வந்த கந்தவேலு… டாக்டர்கள்…போதும் வெளியே இருங்க என்று சொல்லும் பொழுது… அற்புத மல்லியிடம்…சிரித்துக் கொண்டே பெற்றுக்கொள் என கூறி… நன்றாக வசவு வாங்கியது வரலாறு…அது…அவ்வப்போது…ஞாபகப்படுத்தப்படுவது…வலிக்கும் சூழ்நிலைகளை யெல்லாம்… வசந்தமாக்கும்.  எழுத்தாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு. நாகூர் ரூமி அவர்கள் வலிகளை பொறுத்துக் கொள்வதில் பிரசவ வலியையும் தாங்க முடியும், என்று சொல்லியிருப்பார்…[hide]

     இன்னும் ஒருபடி மேலே போய்… தன்மகளுக்கே வலிதாங்கும் பயிற்சி அளித்து… அதாவது வலியை வலியில்லாததாக கருதும் மனப்பாங்கை வரவழைத்துக் கொள்ள செய்து இருப்பார்…அந்த மாதிரி மனநிலை விழா மலருக்கும், வேல்விழிக்கும் கிட்டத்தட்ட வந்துவிட்டது போல தோன்றிய நாள்… தடுப்பணை அறை பயனற்றுப் போன நாள் ஆகும். அக்கா தங்கை மிகுந்த பாசமுள்ளவர்கள் என்றாலும்… என்னுடைய இரப்பர், பென்சில், சாக்ஸ்…முதற்கொண்டு உன்னுடைய என்னுடைய என்று உரிமை கொண்டாடியதில் நேசம் உடைந்து போய் அவ்வப்போது அப்பாவிடம் அழுதுகொண்டு வந்து முறையிடும்…எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க எவ்வளவு முறை பயிற்சி கொடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு உதறிய காலணிகள் ஆளுக்கொரு பக்கம் அவ்வப்போது அப்பாவை கேலி செய்வதுண்டு. கந்தவேல்… சாந்த வேலாக மாறி யோசித்தார்…அப்பா அடிங்க…என்று உடலை விறைப்பாக்கிக் கொண்டு கண்ணை மூடி தயாராகி நின்ற வேல்விழி… க்கு அடிப்பது பலன் தராது… அடிவாங்குவது?…  என்ன தரும் என்று யோசித்தார் கந்த வேல்…

    சென்ற வருடம்… இல்லை.. சில வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறார்… அற்புதன்ல்லியுடன்… பள்ளியில் இருந்து வரும்பொழுது… அபர்ட்மென்ட் வாசலில் கிடந்து விழுந்து அழுது அடம் பிடித்திருக்கிறாள்… விழாமலர்.  அவளை அதுக்கப்புறம் என்றுமே வீழா மலராக ஆக்கியது அப்பாவின் இரகசிய தனியறை தடுப்பணை ட்ரிட்மென்ட் தான்.  அடித்தால் அழுகை.  சரி… ஆனால் அடம்பிடித்து ஏன் அழுகை? அப்படியானால் அடி மிஸ்ஸிங்…எனவே நான் தருகிறேன்.அடி கூடாதெனில் அழுகையும் கூடாது…என்ற விளக்கங்கள் ஏற்கப்பட்டு அடம் பிடித்து அழுவது, மறைந்து அல்லது குறைந்து போனது.  ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’, என்கிற வசனத்தை தயவு செய்து பயன்படுத்தாதே என்று கந்த வேலு… அற்புதன்ல்லியிடம் கெஞ்சுவதுண்டு…என்னை வில்லனாக்கி என்ன பலன்… சின்னவள் ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்பது சரி…அதற்காக அங்கப் பிரதட்சணம் அபார்ட்மென்ட் வாசலில் செய்வது முறையா?  என்று கேட்டார் கந்தன்…

    என்ன செய்யலாகாது என்று தெரியும்.  என்ன செய்வது என்று தெரிய வேண்டாமா? அற்புதமாக பாடக்கற்றுக் கொண்டார்கள் குழந்தைகளும் அப்பாவும் சேர்ந்து… வீட்டில் அடிக்கடி கச்சேரிதான்.  யூட்டூபில் இருந்து பாரதியார் பாடல்களும், பக்திப் பாடல்களும், மெது மெதுவாக கேட்டு வரி வரியாக எழுதி பாடுவதுண்டு.  அது… இதை செய்யாதே!  அதை செய்யாதே!  என்று சொல்வதை குறைத்து இதை செய் என்று சொல்ல வழிகாட்டியது… குழந்தைகள் விருந்தோம்பலிலும் திறம்பெற்று நல்ல பேர் வாங்கினர்.

    இப்படித்தான் ஒருநாள் கந்தனின்‘மேக்ஸ் மாஸ்டர்’ (கணக்கை இப்படிச் சொல்லியே பழகிவிட்டது கிராமத்து கந்தனுக்கு!…) அவனில்லாத பொழுது… கோயமுத்தூர் டு கோயம்பேடு பயணித்து அவர் மகளுடைய கல்யாண பத்திரிக்கை கொண்டு… அழைப்பிற்காக வந்ததார்.  அதற்கு முன்பு அவர் நேரில் வந்தது இல்லை… பல வருடங்களாயிற்று பார்த்து… போன்… செய்தியும் இல்லை… ஒரு நண்பர் மூலம் வீடு தேடி வந்து சேர்ந்து விட்டார்… சனிக்கிழமை பழைய மாணவன்… வீட்டில் இல்லை என்றதும் சோர்ந்துவிட்டார்.

    ஆனால் குழந்தைகள் வேலும், விழாவும் விடவில்லை…“சார்… நீங்க… பரசு இராமநாதர் தானே!… எங்கப்பாவோட மேத்தமெடிக்ஸ் ஆசிரியர்.  அவர் உங்களைப்பற்றி பெருமையாக பலமுறை சொல்லி இருக்கிறார். நாங்க அத்தை கல்யாணத்திற்கு அவசியம் வருவோம்.  தண்ணீர் எடுத்துக்கோங்க…பழரசம் எடுத்துக்கோங்க… மதிய உணவும் எங்க வீட்டில்தான் சாப்பிடணும்…அப்பா இருந்தாலும் அதைதான் செய்து இருப்பார்.  அவர் போன்ல கிடைக்காட்டியும் பரவாயில்லை நீங்க நம்ம வீட்டிலதான், சாப்பிடணும்”.  என்று பாசமழை பொழிந்துள்ளனர்.

    ஆசிரியர் நெகிழ்ந்து போனார். இல்லம்மா…நான் கல்யாண அழைப்பு தர பல இடங்கள் செல்ல வேண்டும்…ஆனாலும் உங்கள் அன்பால் கட்டுப்பட்டு மதியம் எங்கிருந்தாலும் திரும்ப வருகிறேன் என்று கூறிய வண்ணம் அவர் வந்து உணவருந்தி ஆசிகளை அளித்து சென்ற பின்பு…

    மிஸ்ஸூடு கால் பார்த்து அழைத்த பொழுது… அப்பா அம்மா இரண்டு பேரும் வெளியே சென்றுள்ள நிலையிலும் வீட்டில் உள்ள பணிபுரிபவரின் உதவியோடு அழகாக விருந்தளித்த வள்ளுவர் வழி நடந்த குழந்தைகளை பாராட்டியது… கந்தவேலின் கருத்தில் நிறைந்திருக்கிறது. இப்படியானவர்கள்… சிலவேளைகளில் தவறு செய்கையில் அவர்களை… அடித்துப் பலனில்லை… இனிமேல் இல்லவே… இல்லை.  அதனால்… ஒரு நாள் நீங்க அடிங்க

    என்று திருப்பினார்.

    செம்ம… எஃபக்ட்…

    விழா மலர் மறுத்தாள்… நோ… அப்பா நீங்க அடிங்க…  குழந்தைங்க எப்படி பெரியவங்கள அடிக்க முடியும்?

    ஏன் முடியாது? நீங்க ஏற்கனவே என்னை அடிச்ச மாதிரிதான். மனசில அடிச்சிட்டீங்களே!இப்படி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிட்டா… என்னை அடிச்ச மாதிரிதான்.  நீங்க… இப்படி தப்பு பண்ற அளவில நான் உங்களை வளர்த்துடேனே… அது என் தப்பு… இப்படி வளர்ந்தா… ஊர்ல நாலு பேர்… ஏம்ப்பா உன் பொண்ணு ஷூ பாலீஷ் கூட போட்டு வரல…அவளுக்கு ஷூ பாலீஷ் போட கத்து கொடுக்கலயா… இல்ல உனக்கு நேரமில்லையா?என்று நாலு பேர் கேப்பாங்களே!  நான் என் பொறுப்பில தவறிட்டனே அதுக்கு அடிக்கலாமே… அடிங்க என்று குச்சியை கொடுத்தேன்!

    என்னப்பா இது?  குழந்தையாட்டம்…இது மாதிரி நீங்க உங்கப்பாவ அடிப்பீங்களா?  என்ன? என்று கேட்டாள்…

    ஆஹா…அசந்து போய்விட்டான் கந்தவேல்…இந்த கேள்விய எதிர்பார்க்கலையே! இருந்தாலும்… சமாளித்தார்.

    “இல்லியே… எங்கப்பா… என்கிட்ட குச்சிய கொடுத்து அடிக்கவே சொல்லலியே!”

    சரி… ஒரு பேச்சுக்கு… சொல்லியிருந்தா? என்றாள் விழாமலர்… விடாமல்…அடி வெளுத்து வாங்கியிருப்பேன்!  கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருக்கேன் எல்லாத்தையும் கடன் அடைச்சிருப்பேன்… என்று பொய் சொன்னார் கந்த வேல்!

    அப்பா…நீங்க வேணும்னே பொய் சொல்றீங்க என்றாள் வேல்விழி… தெரியுதில்ல… வேணும்னுதான்… அடி வேணும்னுதான்… இப்ப அடிக்கலின்னா… நான் அடிப்பேன் பரவால்லியா?  என்றார் கந்தன்…

    ஓ மை காட்…

    என்று பூவால் வருடுவது போல ஒற்றி எடுத்தாள் விழாமலர். என்ன செஞ்சே!  உனக்கு அடிக்க தெரியல போலிருக்கு… வேணா… உனக்கு ஒரு அடி சாம்பிளுக்கு… எப்படி அடிக்க வேண்டும்னு அடிச்சு காட்டவா என்றார் கந்தன்… அவ்வளவு தான்… ‘சுளீர்’என அடி இறங்கியது… துடித்த மாதிரி நடிக்க அவசியம் இல்லை… கந்தனுக்கு… நன்றாகவே வலித்தது?…  முதுகை வளைத்து நிமிர்த்த பொழுது…குச்சியை வீசிவிட்டு கட்டிப் பிடித்து அழுதார்கள் இரண்டு பேரும்…அழக்கூடாது என்றுதானே இந்த ஏற்பாடு… என்றான் கந்தன்… அப்பா…இது ரொம்ப ஓவர்ப்பா…நல்லாவே இல்லப்பா… என்ன கொடுமைப்பா என்றார்கள்…வேலும் மலரும்…அது சரி… தப்பு செய்தது அப்பாதானே!என்றால்…இனிமே…நாங்கஉங்களை அடிவாங்காம தடுப்போம் என்றனர்… தடுப்பணை… கட்டிவிடுவார்கள் என்று தோன்றியது.  அந்த வீட்டில் தண்டணைகள் இனிமேல் தடுப்பணைகளால் தடுக்கப்படும் என்று தோன்றுகிறது…

    சரி…

    சிம்ரனுக்கு கார்… போனதா? என்று பார்க்க வேண்டும்…

    வரட்டுங்களா?[/hide]

    இந்த இதழை மேலும்

    மாமரத்தில் கொய்யாப்பழம்

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

    இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 788

    நண்பனுடைய துன்பத்தை அப்பொழுதே சென்று துடைப்பதுதான் உயர்ந்த நண்பனின் இயல்பு என்றார் திரவள்ளுவர்.

    இம்மாதிரியான நண்பர்கள் இன்று அரிது. அவர் உதவ நினைத்தாலும் அவர் குடும்ப சூழ்நிலை அனுமதிக்குமா என்பது தெரியாது.

    நட்பின் ஆழத்தை, உண்மையைத் தெரிந்து கொள்ள, அவசரம் என்று நண்பர்களிடம் சொல்லிப்பாருங்கள். உங்கள் நண்பர்களுள் எத்தனைபேர் உங்களுக்கு உதவத்தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    இன்று வாழ்க்கை என்பது அவசரமாக பரபரப்பாகச் செல்வதாய் பொதுவாகவே பேசப்படுகிறது. எதைப்பிடிக்கத்தான் ஓடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

    மக்கள்தொகைப் பெருக்கம், வாகன உபயோக அதிகரிப்பு, தகவல் தொடர்பு சாதனங்களின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஆகியன தான் காரணம்.

    ஓய்வில்லாமல் உழைக்கும் உடல் உள் உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்க வாரம் ஒருநாள் ஒருவேளை உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

    எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் மனதுக்கு, ஒரு சில மணிநேரம் மவுனமாக இருக்கிறேன் என்ற எண்ணத்துடன் மவுனமாக இருப்பதே மருந்தாகும்.

    இவையிரண்டும் மனித வாழ்க்கையை அவசரம், பரபரப்பில் இருந்து திருப்பிவிடும் அற்புத செயல்களாகும். உலகிலேயே மிக வேகமானது நம் மனம்தான். மனம் பயணிக்குமளவு ஒளிக்கதிர்கள் கூட பயணிக்காது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால், அரிதான மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டுள்ள நாம், அவசரகதியில் பயணித்து விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முடியும்.

    பரபரப்பான சூழலிலிருந்து விலகி, சப்தம் குறைவான ஓரிடத்தில் அமைதியாகப் படுத்து அந்தச் சூழலை ரசிக்கும் மனநிலையை எளிமையாக உருவாக்கிக் கொள்ளலாம்.

    நம் நாட்டில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழிகேட்டு அலறுவதை சாலைகளில் அவ்வப்போது பார்க்கிறோம்.

    ஆனால், வெனிநாடுகளில் ஆம்புலன்ஸ் வாகன ஒலி கேட்ட உடனே மற்ற வாகனங்கள் சாலையின் ஓரத்துக்குச் சென்று வழிவிடுவதைப் பார்த்தேன்.

    அங்கு பெரிய நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் மிகத்துல்லியமாகத் தானியங்கி கேமராக்களால் படமெடுக்கப்பட்டு, அபராத நோட்டீசு வருவதை நண்பர்கள் மூலம் அறிகிறேன்.

    ஆனால், நம் நாட்டில் எல்லா ஊர்களிலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பயணிப்போருக்கு முன்னுதாரணமாய் திகழ்பவர்கள் அந்த விதிகளைக் கொண்டு வந்தவர்களும் நடைமுறை படுத்துபவர்களும் தான்.[hide]

    பல காரணனங்களால் வாழ்க்கையின் மீது வெறுப்பு, பிடிப்பின்மையை உருவாக்கிக்கொள்கிறோம்.

    ஏன் பிறந்தோம்? நோக்கம் என்ன? இந்த இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் மற்றும் முயல்பவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே அமைகிறது.

    பெற்றோரின் இணைப்பால் பிறந்தவர்கள் தான் நாம் அனைவருமே.

    தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து  

    தழைத்த தொரு உடலாகி உலகில் வந்தோம்

    பெற்றோரின் முன்பிறவி, அவர்தம் பெற்றோர். பின் பிறவி என்பது அவர்களது குழந்தைகள்தான்.

    அவர்களது குணங்களுடனேயே பிறக்கிறோம். அவர்களால் வளர்க்கப்பட்டு உரிய பருவத்தில் இல்லற வாழ்க்கையைத் துவக்கி, குழந்தைகளுக்குப் பெற்றோராகி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

    வாழும்போது மகிழ்ச்சியும் நிறைவும் முக்கியம். பெற்றோர்கள் நல்ல ரோல் மாடல்கள். அவர்கள் சரியாக அமையாதபோது ஆசிரியர்கள்; அவர்களும் சரியாக அமையாத நிலையில் மகான்கள், ஞானியர், தலைவர்கள் போன்றோர்.வாழ்க்கை வரலாறுகள்தான் நல்ல ரோல் மாடலாகும்.

    பொதுவாகவே சிறுவயது முதலே ஒப்பிட்டு வளர்ப்பது நம் வழக்கமாகிவிட்டது. முற்காலத்தில் இயற்கையுடன் ஒப்பிட்டு அதன் ஆற்றல்களைப் பெற்று வாழுமாறு கூறினார்.

    பணமென்ற ஒன்றைப் படைத்து உபயோகப்படுத்திவரும் இக்காலத்தில் மனிதர்களை எடைபோட, அதுவே அடிப்படையாக அமைந்து விட்டது.

    இந்த அரும்பிறவியில் முன்வினையறுத்து 

    எல்லையில்லா மெய்பொருளை அடைவோம்

    வாழ்வின் நோக்கம் இதுதான்.

    பிறப்பு அரிதான பிறப்பு – சந்தேகமில்லை. அதென்ன? முன்வினை அறுப்பது,

    பெற்றோர்கள் மூலமாய் நாம் பெற்ற பதிவுகளில் தேவை இல்லாதவைகளை நீக்கி மனதைச் சுத்தமாக்குதலே முன்வினை அறுப்பது.

    பிறந்தது முதல் இன்று வரை அவரவர் செய்த செயல்கள் மற்றும் பேசிய பேச்சுக்களுக்கான பலன்களும் சேர்ந்து கொண்டதே! இவற்றிலும் தேவை இல்லாதவைகளை இனம் கண்டு, இனிமேல் செய்யக் கூடாது.

    செய்தவைகளின் பதிவுகளை நீக்குவதற்கு ஒரு வழிகாட்டியைத் தேட வேண்டும். இதைத்தான் தேடுங்கள்; கிடைக்கும் என்று பாடினார்கள்.

    எங்கு சென்று தேடுவது? ஏராளமான போலிகள் அல்லவா உலவுகிறார்கள்.

    வெளியில் எங்கும் தேடவேண்டாம். உள்ளுக்குள், உங்களுக்குள், தேடுங்கள். இதை எளிமையாக தற்சோதனை என்று சொல்கிறோம்.

    இதற்கு நேரம் எங்கே இருக்கிறது? என்று எல்லோருமே சொல்கிறோம். நாள் ஒன்றின் 24மணி நேரத்தில் எத்தனை மணி நேரம் வீணாகிறது அல்லது சும்மா கழிகிறது என கணக்கிட்டால் மலைத்து விடுவோம்.

    எல்லோருக்குமே பலவிதமான பிரச்னைகள். இதனால், நேரத்தை சரியாக உபயோகப்படுத்த முடியவில்லை.

    திருமணமாகி, குழந்தைகளும் பிறந்தபின், பொறுப்புகள் அதிகமான நிலையில் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டுவதற்கு மக்கள் படும்பாடு பெரும்பாடுதான்.

    குடும்பத்தை விட்டு மணிக்கணக்கில், நாள்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என அவரவர் தம் பணிபுரியும் இடத்தின் தூரத்தைப் பொறுத்துத் தனித்துப் பணிபுரியும் நிலைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

    உள்ளூரில் பணி என்றால் மணிக்கணக்கில் பிரிவு.

    பயணநேரம் கூடுதலாகி வெளியூர்களுக்கு மாறுதல் செய்யப்பட்டால் நாள்கணக்கில் பிரிவு.

    பயணக்கட்டணம் கூடுதல் எனும் போது வாரக்கணக்கிலும், பின் மாதக்கணக்கிலும் பிரிவு.

    இதன் உச்சகட்டம் வெளிநாடுகளில் பணி என்றால், வருடக்கணக்கில் பிரிவு. என்ன கொடுமை இது?

    வேலைப்பளு ஒருபுறம்; குடும்பப் பிரிவு ஒருபுறம்; பிரச்னைகள் மறுபுறம். இதனால் நிம்மதி இழந்து நிம்மதியற்ற வாழ்க்கையை வாழும் பலரை நினைத்து பரிதாபப் படுவதைத் தவிர வேறுவழியில்லை.

    வெளிநாட்டுப் பணிகளில் அதிக சம்பளம் என்ற நிலை சரி.

    குறைந்த சம்பளத்தில் தான் பணியென்ற நிலைக்குத் தள்ளப்படும் போதுதான் மாமரத்தில் கொய்யாப் பழத்துக்கு ஆசைபட்டது உறைக்கும்.

    பெரிய ஆசைகளுடன் வெளிநாட்டுப் பணிக்கு பொருட்செலவு செய்து செல்லும் பலர் அங்குபடும் துன்பங்களை அவ்வப்போது செய்திகள் மூலம் அறியும்போது மனம் கனக்கிறது.

    வெளியிடப்பணி என்றாலே உணவு சரியாக அமைவது சிரமம் தான்.

    நம் உடல் இன்றிருப்பது, இதுவரை உண்ட உணவின் வெளிப்பாடுதான். நம் குணங்களுக்கும் நாம் உண்ட உணவே அடிப்படையாக அமைகிறது.

    எண்சாண் உடலுக்கு வயிறே பிரதானம் என்றனர். தற்காலிக நிறைவு, திருப்தி, நிம்மதிக்கு அன்னதானம்.

    நிரந்தர நிறைவு, திருப்தி, நிம்மதி மகிழ்ச்சிக்கு?[/hide]

    இந்த இதழை மேலும்

    நில்! கவனி !! புறப்படு !!! – 5

    செய்வன திருந்தச்செய் ! (பாதை 4)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள் – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    செய்வன திருந்தச்செய் !

    “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என கேட்கும் சமூகம் இது.

    “ஒன்றே செய் ! நன்றே செய் !! அதையும் இன்றே செய் !!! – என்பது பல சாதனை மனிதர்கள் நமக்கு அளித்துள்ள அனுபவ சத்தியம்.

    “செய் அல்லது செத்து மடி !” – என்பதும் வலிமை நிறைந்த வார்த்தைகளே !

    ஆங்கிலத்தில் சொல்வதானால் – ACTION IS BETTER THAN WORDS –  என்ற வரிகளே பல வெற்றியாளர்களின் ஆதார வழி.

    “A STICH IN TIME SAVES NINE” – என்று ஒரு பழமொழி உண்டு.  சரியான தருணத்தில் செய்யாத எதுவும் சிறப்பாக பரிணமிக்காது – என்பதே உண்மை.

    சரியான தருணத்தில் செய்வது எவ்வளவு முக்கியமோ – அதை சரியாக செய்வது அதைவிட முக்கியம்.  இதைத்தான் முன்னோர்கள் நம்மிடம் “செய்வன திருந்தச்செய்” என்றார்கள்.

    தேர்வு தொடக்கி தேர்தல் வரை – சரியாக கையாளாமல் போனால், கஷ்டமும் கவலையுமே கடைசியில் மிச்சம் என்று காலமும் புலம்பும் நிலைக்கு வாழ்க்கை வந்து விடக்கூடாது.

    சரியாக கையாளப்படாத நட்பு – வளராது.  சரியாக கையாளப்படாத கணவன் மனைவி உறவு முறை சோபிக்காது.  அலுவலக நடைமுறைகள், அக்கம் பக்கத்து உறவு முறை இப்படி நீண்ட ஒரு பட்டியல் ஒவ்வொருவரிடம் உண்டு.  கையாளுதல் என்பதன் பொருள் இடத்துக்கு இடம் மாறும்.  சரியாக செயல்படுதல் என்பதே சரி.

    ஆக, சரியாக செயல்படுதல் என்பதைத்தான் “செய்வன திருந்தச்செய்” என்றார்கள்.

    “திருந்தச்செய்யாத” சிகிச்சை – மரணத்தை சீக்கிரம் நெருங்க வைக்கும்.

    “திருந்தச்செய்யாத” வாகன பராமரிப்பு – விபத்தின் தாக்கத்தை அதிகரிக்கும்.

    “திருந்தச்செய்யாத” உணவு முறை – உடல் உபாதைகளை உருவாக்கும்.

    நெருப்பிலும் வெறுப்பிலும் மிச்சம் வைக்கக்கூடாது.  முற்றிலுமாக அணைத்துவிட வேண்டும்.  திருந்தச்செய்ய வில்லை என்றால் அதன் வெப்பம் நம்மை உள்ளும் புறமும் கொல்லும்.  அதாவது, நெருப்பு மனிதனை வாட வைக்கும், வெறுப்பு மனதை வாட வைக்கும்.

    எனவே, எதையும் திருந்தச்செய்ய வேண்டியது உங்கள் கடமை !  இதை புரிந்து கொள்ளத் தவறும் சக மனிதர்களை “திருந்தச்செய்ய வேண்டியது” – எனது கடமை.  ஏனென்றால், சரியாக செய்வதே சாலச்சிறந்தது.  அது உங்களை வெற்றியின் வீட்டுக்கு அழைத்து செல்லும்.  அந்த வழி முழுவதும் வசந்தமாகவே இருக்கும்.

    எதையும் சரியாகச்செய்வது என்பது சராசரி மனிதர்களிடம் இருந்து உங்களை தனித்தன்மையுடன் உயர்த்திக்காட்டுவது.  அந்த உயர்வுக்கு தனி மன நிலை வேண்டும்.  பண்பட்ட மனம் வேண்டும்.  பக்குவப்பட்ட பார்வை வேண்டும்.  செய்யும் செயல்களை சீர்தூக்கி பார்க்கும் சிந்தனை வேண்டும். புலால் உண்ண மாட்டேன் என்று மகாத்மா சொன்னது போல் ஒரு உறுதி வேண்டும்.  எத்தனை துன்பம் வந்தாலும் பொய்யே பேச மாட்டேன் என்று சொன்ன அரிச்சந்திர மகராஜனை போன்ற மன வைராக்கியம் வேண்டும்.

    இந்த தன்மைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் இடம் எதுவென்றால் – நீங்கள் செய்வன திருந்தச் செய்தாகிவிட்டது.  விமர்சகனையும், அவன் விமர்சனத்தையும் மீறி உங்களுக்குள் உருவாகும் ஒரு நிறைவு – மகிழ்ச்சி, நிச்சயமாக மதிப்பு மிக்கதே.  ஆகவே, விமர்சனங்களை விட்டுத்தள்ளுங்கள்.  “செய்வன திருந்தச்செய்” என்ற வாசகம் கண்கள் மூலமாக, செவிகள் மூலமாக உங்களுக்குள் ஊடுருவி – ஆழ்நெஞ்சில் ஆணியாக பதியட்டும்.

    உங்கள் சின்னச்சின்ன செயல்களுக்குள்ளும் ஒரு Perfection இருக்கட்டும்.  Man of Perfection  என்று ஆரம்பத்தில் அழைக்கும் அனைவரும் சிறிது நாளிலேயே உங்களை Perfect Man என்று புரிந்து கொள்வார்கள்.  அவர்கள் மனதில் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் உயரும்.[hide]

    அந்த நிலையை அடைவது கடினமில்லை – சுலபம் தான்.

    பயிச்சி முறை :

    1. உங்கள் இலட்சியத்தை ஒரு தாளில் எழுதுங்கள்.  (உதாரணமாக – நான் ———— பாடத்தில் 90 க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும்.

    2. அந்த இலட்சியத்தை அடைய முனைப்புடன் என்ன விலை கொடுக்கவும் அல்லது செய்யவும் தயாராக இருக்கின்றேன்.  (I am Willing to do anything  & ready to Pay any Price)  என்று எழுதுங்கள்.  (உதாரணமாக – நான் ———— பாடத்தில் 90 க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும்.  எனவே, தினமும் நூலகம் சென்று எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரு மணி நேரம் தேவையான நூல்களை தேடி, படித்து, குறிப்புகள் எடுத்து வருவேன்.  வாரம் ஒரு முறை எனக்கு நானே ஒரு Revision Test வைத்து, என் ஞாபகத்திறனையும், எழுதும் திறனையும் மேம்படுத்திக்கொள்வேன்” –  என்பது போல.

    3. இன்னும் ஒரு வருடத்துக்குள் கார் வாங்க வேண்டும். அந்த இலட்சியத்தை அடைய முனைப்புடன் என்ன விலை கொடுக்கவும் அல்லது செய்யவும் தயாராக இருக்கின்றேன்.  (I am Willing to do anything  & ready to Pay any Price) என்று எழுதுங்கள்.  (உதாரணமாக – நான் ஒரு வருடத்துக்குள் கார் வாங்க வேண்டும்.  அதனால், என் நண்பர்களுடன் செய்யும் அனாவசிய செலவுகள், போலியான உறவினர்கள் என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாங்கும் சிறு சிறு பண உதவிகள், போன்ற தேவையற்ற விரயங்களை முற்றிலும் தவிர்த்து – ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை Bank ல் சேமிப்பேன்.  மேலும், என் ஓய்வு நேரத்தில் Part Time வேலைக்கு சென்று இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிப்பேன்.  அதுமட்டுமல்ல, என் திறமைக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அதிக சம்பளம் தரும் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர முழுமையாக முயற்ச்சிப்பேன். – என்பது போல.

    நினைவு கொள்வீர் !  முழு மனதுடன் கடினமாக முயன்று தீர்க்கமாக செயல்பட உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் – அது உங்கள் லட்சியமே இல்லை, அது உங்களுக்கு தேவையே இல்லை என்று தான் அர்த்தம்.

    எனவே, விலை கொடுக்க தயாராக இருங்கள்.

    வெற்றியை வரவேற்கவும் தயாராக இருங்கள்.

    நீங்கள் அந்த வெற்றியை வரவேற்க என் வாழ்த்துக்கள்.

    Minutes with Mithran – கேள்விகளால் ஒரு வேள்வி

    4. இப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து வயது குழந்தையாக இருந்தால் – அந்த குழந்தைக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்? (உதாரணமாக :“ இப்படியே விளையாட்டாக படிக்காமல் இருந்தால் எப்படி நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்வாய்? வீடு, கார் என்று வாங்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாமா? அதெல்லாம் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் தெரியுமா?  அதனால், உன் குறும்புத்தனம் முழுவதும் மூட்டை கட்டி வைத்து ஒழுங்காக படி!  சரியா?” என்பதுபோல,  –         “இப்படியே பெரியவர்களை மதிக்காமல் துடுக்காக பேசி வந்தால் யாரும் உதவி செய்ய வரமாட்டார்கள்.  அதனால், பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்”  – என்பதுபோன்ற அறிவுரை.

    5. நீங்கள் 5 வயது குழந்தையாக இருந்த நாட்களை நினைவு கொள்ளுங்கள். அந்த குழந்தை எந்தெந்த விஷயங்களில், செயல்களில் சிறப்பாக இருந்தது? (உதாரணமாக :  School Home Work சரியாக செய்வது,  Rhymes ஐ  எல்லோரும் பாராட்டும் வண்ணம் தவறில்லாமல் ஒப்பிப்பது, Sports Activity, Fancy Dress Competition, இவற்றில் பரிசுகள் வாங்கியது – என்பது போன்ற நிகழ்வுகள்.

    இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

    பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதிலில் மட்டுமல்ல – உங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.

    திசைகளை தீர்மானியுங்கள் !  திட்டமிடுங்கள் !  செயல்படுங்கள் !

    கேளாய் மகனே கேளொரு வார்த்தை !  நாளைய உலகின் நாயகன் நீயே ![/hide]

    இந்த இதழை மேலும்

    உழைப்பை விதையாக்கு… உயர்வை வலிமையாக்கு…

    Dr. K. K.கிருஷ்ணமூர்த்தி

    ISCOP (Indian Society for Certification of organic products) தலைவர். 

    ACCOPSA(Agricultural College Coimbatore  Past Students’ Association) தலைவர்.

    Homeopathist, கோவை.

    குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை

    கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

    நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் காட்சியும்

    உலகியல் அறிவோடு உயர்குண இணையவும்

    அமைபவன் நூல் உரை ஆசிரியனே…

    எனும் நூற்பாவில் நன்னூலார் நல்லாசிரியர் பற்றி எட்டு வகை பண்புநலன்களை வரிசைப்படுத்திக்கூறுவர். இவ்வரிசையில் சற்றும் வழித்தவறாதவர்.

    இறை நம்பிக்கையோடு தன்னம்பிக்கையால் இன்று தரணியெங்கும் தனிமுத்திரை பதித்துவருபவர்.

    வேளாண் அறிவியல் துறையில் ஆழ வேரூன்றியவர். மண்ணியல் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர்.

    இறைவா இறைவா என்று இருந்தால் எப்போதும் நிறைவாய் நிறைவாய் இருப்பாய் என்பது தான் இவரின் தாரக மந்திரம்.

    பழகுவதற்கு எளியவர், பண்பில் பெரியவர், எழுத்தாளர், பேச்சாளர், வேளாண் ஞானி, ஹோமியோபதி மருத்துவர், என பன்முகத்திறமை கொண்ட பேராசிரியர், ISCOP மற்றும் ACCOPSA  ஆகியவற்றின் தலைவர், KKK என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்  DR. K. K.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: உங்களின் பிறப்பும் இளமைக் காலத்தைப் பற்றியும் சொல்லுங்கள்?

    பழைய சேலம் மாவட்டம் இன்றைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொன்னையார் என்னும் குக்கிராமம். அப்பா காளியண்ணன் கவுண்டர் மிராசுதாரர் என்று அழைப்பார்கள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம். எங்களுக்குச் சொந்தமாக நிறைய விளை நிலங்கள் இருந்தன. காலப்போக்கில் எங்களால் விவசாயத்தைத் தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதனால் எங்கள் பண்ணையில் வேலை பார்த்தவர்களுக்கே நிலத்தை விற்றுவிட்டோம். என்னுடைய பள்ளிக்கல்வி என்று பார்த்தால் திருச்செங்கோடு அரசுப்பள்ளியில் தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன். ஆசிரியர்களிடத்தில் நற்பெயர் கொண்ட மாணவன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் மேற்படிப்பு படிக்கச் சென்று விட்டேன். என்னுடைய கனவு ஒரு மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ஆண்டு மருத்துவத்துறையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் வேளாண் கல்லூரியில் சேரலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.

    கே: சொந்த ஊரிலிருந்து கோவை வந்தது குறித்து சொல்லுங்கள்?

    மருத்துவராக வேண்டும் என்ற கனவு சில காரணங்களால் தடைப்பட்டது. இதனால் கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி (அக்ரி) பட்டத்திற்கு விண்ணப்பித்தேன்.அதன் படி எனக்கு அங்கு பயில அனுமதி கிடைத்தது. பி.எஸ்.சி யில் சேர்ந்தேன்.  ஆனாலும் மருத்துவராகவில்லையே என்று எனக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு ஆதங்கம் இருந்தது. ஒரு வருடம் பி.எஸ்.சி முடித்தவுடன் அடுத்த ஆண்டு மருத்துவதுறைக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த சில நாட்களில் எனக்கு பயில இடம் கிடைத்தது.  ஆனால் எனக்கு இளம் வயதிலிருந்தே இறை நம்பிக்கை அதிகளவில் இருந்ததால் பி.எஸ்சி(அக்ரி)யை வெற்றிகரமாக முடித்தேன். அக்காலத்தில் பி.எஸ்.சி முடித்தால் மேற்படிப்பு படிக்க இங்கு இடம் இல்லை. ஒன்று டெல்லி செல்ல வேண்டும் இல்லையென்றால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.  என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே கல்லூரியில் அதே ஆண்டு எம்.எஸ்.சி பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்கள். அப்போதும் நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். மீண்டும் அதே கல்லூரியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புப் பெற்று  வெற்றிகரமாக முடித்தேன்.

    கே: மண்ணியல் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணத்தைச் சொல்லுங்கள்?

    வேளாண் துறையில் பல துறைகள் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த துறை மண்ணியல் துறை ஆகும். இதனால் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கும் மண்ணியல் துறையில் தான் ஆய்வு செய்தேன். இப்பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் நான்தான். அப்போது என்னுடன் படித்த நண்பர்கள் எம்எஸ்சி முடித்தவுடன்  DAO பணியில் சேர்ந்து விட்டார்கள். இப்பணியில் பணியாற்றும் போது அவர்களுக்குத் தனி வாகனம் தரப்பட்டது மற்றும் பச்சை மையில் கையெழுத்து இடலாம் அந்தளவிற்கு அது (GAZETTED OFFICER) உயர்ந்த பதவி தான். அவர்கள் என்னைப் பார்த்து இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறாயா என்று ஏளனமாகக் கேட்பார்கள். என்னுடைய ஓரே ஆசை எப்படியும் முனைவர் பட்டம் (Ph.D) முடிக்க வேண்டும் என்பதுதான்.

    கே: நீங்கள் பணியாற்றிய முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

    பி.எச்.டி முடித்தவுடன் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். அரசு வேளாண் வேதியியலார் (Govt Agri Chemist) என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய 32 ஆம் வயதில் பேராசிரியர் பதவி வகித்தேன். 1971 ஆம் ஆண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகமாக உருவானது. அப்போது அப்பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் நான். என்னுடன் என்னுடைய குரு டாக்டர். மரியகுழந்தை மற்றும் ஜான் துரைராஜ் அவர்களும் பணியாற்றினார்கள். பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு மதுரைக்குப் பணிமாறுதல் கிடைத்தது. அடுத்த நாளே செல்ல வேண்டும் என்று என்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய பேராசிரியர் இல்லாமல் போய்விடுமே என்று எங்கள் கல்லூரி முதல்வர் நினைத்தார். இதனால் என்னை அழைத்து மதுரைக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே பணியாற்றுங்கள் என்று சொல்லிவிட்டார். நாட்கள் சென்றன அடுத்தடுத்து சில பதவி உயர்வுகள், அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தேன்.

    கே: மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நீங்கள் முதல்வராய் பொறுப்பேற்ற பின் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி?

    மதுரை வேளாண் கல்லூரி அப்போது மாணவர்களின் சண்டைக்கும் சச்சரவுக்கும் மிகவும் பெயரெடுத்த கல்லூரியாக இருந்தது. அப்போது  ஓரு நாள் திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பில் சார்  கல்லூரி முழுவதும் ஒரே பிரச்சனையாக இருக்கிறது நீங்கள் உடனே வாருங்கள் என்று சொன்னார்கள். நானும் விரைந்து சென்று பார்க்கும் பொழுது கல்லூரியில் நிறையப் பொருட்கள் சேதாரமாகி இருப்பதைப் பார்த்தேன். காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனார்கள் அவர்களுக்கு ‘உங்களால் கல்லூரி பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது, இதனால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் தான் மீண்டும் இக்கல்லூரி திறக்கப்படும் என்று கடிதம் அனுப்பினேன். நான் குறிப்பிட்ட நாளுக்குள் அனைத்து மாணவர்களும் முழுமையாக பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணியில் சேர்ந்த முதல் நாளே, “இத்தனை நாட்கள் கல்லூரி எப்படியிருந்தது என்று எனக்குக் கவலையில்லை, இனிமேல் இக்கல்லூரி கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையதாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் அழைத்துக் கட்டளையிட்டேன். அப்போதே நான் கண்டிப்பான ஆசிரியர் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

    உங்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனுக்குடன் என்னிடம் நேரடியாகத் தெரிவியுங்கள் என்று சொல்லியிருந்தேன். நிறைய மாணவர்கள் முதல்வரை சந்தித்துப் பேசுவதற்கு அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்போது சைலேந்திரபாபு என்ற இரண்டாம்  ஆண்டு படிக்கும் மாணவர் என்னைப் பார்க்க அனுமதி கேட்டிருந்தார். உள்ளே வந்தவுடன் மாணவர்கள் விடுதியில் சில பிரச்சனைகள் இருக்கிறது, அதை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று விடுதிக்குச் சென்று பார்த்தேன். அதை உடனே நிவர்த்தி செய்து வைத்தேன். அவர்தான் தற்போது காவல் துறையில் பணியாற்றும் Dr.சி.சைலேந்திரபாபு IPS,  DGP, ரெயில்வே துறை, தமிழ்நாடு அவர்கள்.

    அதே போல் ஒரு நாள் கல்லூரியின் கடைநிலை ஊழியர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஐயா நாம் கல்லூரியின் நுழைவாயிலில் உள்ள பவுன்டன்(Fountain) உடைந்து விட்டது. அதை சரிசெய்யுங்கள் என்று என்னிடம் கூறினார். அதையும் உடனே நிவர்த்தி செய்தேன்.

    கல்லூரியில் முதல்வர் பொறுப்பை ஏற்ற முதல் நாளே ஏற்கனவே திட்டமிட்டபடி வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களுக்கு வேளாண் அறிவியல் கருத்தரங்களில் ஒரு வாரத்திற்கு போய் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கிருந்து திரும்பி கோவை வந்தேன்.

    மேலும் கல்லூரியில் விளையும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றை வெளியில் கொடுப்பதை விட, விடுதி மாணவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன்.

    கே: முத்தமிழ் விழா தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

    நான் எது செய்தாலும் மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தால் மட்டுமே அதை நடை முறைப் படுத்துவேன். அப்படிக் கொண்டு வந்த பல திட்டங்கள் ஏராளமாக இன்றளவிலும் அக்கல்லூரிரியில் நினைவு கூறத் தக்க வகையில் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த முத்தமிழ்விழா முதல்நாள் தொடக்க விழாவில்  ஒரு மாணவன் என்னை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது KKK என்பது அவரின் பெயர் சுருக்கம் மட்டுமல்ல கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்பதின் சுருக்கம் என்று சொன்னார். மேலும் நீங்கள் வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி, பசுமைப்புரட்சி போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள், இந்தக் கல்லூரியில் முதல்வர் அய்யா செய்வதே அன்புப் புரட்சி என்று கூறி என்னை நெகிழ வைத்தார்கள்.

    கே: நீங்கள் எழுதிய நூல்கள் பற்றி?

    எண்ணங்களும் வாழ்க்கையும், அமைதியைத் தேடி, உலக மதங்களும் உன்னத நோக்கும், வாழ்வில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை, Organic Agriculture for Sustainability போன்றவை.

    கே: பணி ஓய்வுக்குப்பின் ISCOP தொடங்கலாம் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?

    மனமே சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கிறது.  ஓய்வெடுத்தால் மனமும் உடலும் துருப்பிடித்துவிடும். மேலும் நீங்கள் குளங்குட்டையாகவும் இருப்பதை விட நதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.  நதி ஓடும் இடமெல்லாம் பசுமையைத் தந்து விட்டுச் செல்லும். இறுதியாகக் கடலில் கலக்கும், அதுபோலத் தான் மனிதனும் இருக்கும் வரை மற்றவர்களுக்கு உதவி புரிந்து இறுதியாக இறைவனை அடையவேண்டும்

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. நான் கற்ற கல்வி மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணித் தொடங்கியது தான் இந்த ISCOP நிறுவனம்.[hide]

    கே: ISCOP நிறுவனத்தின் நோக்கங்கள் என்ன?

    இஸ்காப் நிறுவனம் இயற்கை வழிச் சான்றிதழ் வழங்குகிறது. இதற்குரிய ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இஸ்காப்பில் சான்றிதழ் மட்டுமே தர முடியும்.

    இந்நிறுவனத்தில் நான்கு விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அவை

    1. பயிர் உற்பத்தி செய்தல் (CROP PRODUCTION)
    2. பதனிடுதல் சான்றிதழ் (PROCESSING)
    3. கணக்கிடுதல் சான்றிதழ் (TRANSACTION)
    4. விற்பனை சான்றிதழ்( TRADE)

    உதாரணமாக நீங்கள் நாளை ஆர்கானிக் (ORGANIC) விவசாயம் செய்கிறீர்கள் என்றால் இன்றே நீங்கள் இராசயன இடுபொருட்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இயற்கை இடு பொருட்ககளைத் தான் இடவேண்டும்.

    ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்று எங்களிடம் ஒரு விண்ணப்பம் இருக்கிறது. அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு சொந்தமாக நிலம் எவ்வளவு இருக்கிறது. பட்டா, சிட்டா , நிலம் வரைப்படம் போன்றவற்றை அதில் குறிப்பிட வேண்டும். இதைப் போன்ற பல தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் ஒரு விரிவான படிவத்தை அவர்கள் நிரப்பி எங்களுக்கு அனுப்ப வேண்டும்

    அதன் பிறகு எங்கள் நிறுவன விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் விவசாயிகளின் நிலத்திற்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுவார்கள், அவர்கள் பார்த்து ஆய்வறிக்கை கொடுப்பார்கள் அதை மதிப்பிடுவார், மதிப்பிட்ட பின்னர் அதை தரக்கட்டுப்பாடு அதிகாரிக்கு அனுப்பி வைப்போம், அதன்பிறகு எல்லாமே சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இறுதியாக என்னிடம் வரும். அதை நான் சரிபார்த்த பின்னர், தகவல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் அதைச் சரிபார்த்து சான்றிதழ் கம்யூட்டர் மூலம் அனுப்புவார்கள் அதில் நான் கையொப்பமிட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

    இச்சான்றிதழை ஒரு ஆண்டுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும், ஒரு ஆண்டு முடிந்ததும் மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். முதல் ஆண்டு சான்றிதழை சி1 என்றும், இரண்டாமாண்டு சி2 என்றும், மூன்றாமாண்டு சி3 என்றும் சான்றிதழ் தருகிறோம். மூன்று ஆண்டுகள் இப்படி சான்றிதழைப் பெற்று விட்டால், மூன்றாம் ஆண்டு முடிவில் இது ஆர்கானிக் விவசாயம் தான் என்று சான்றிதழ் கிடைத்துவிடும்.

    எங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்கிறார்கள். அனைவரும் சரியாக ஆர்கானிக் முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

    கே: KIADEF யில் நீங்கள் இணைந்து  கொண்டது பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள்?

    இந்த KIADEF (Krishnamurthi International Agricultural Development Foundation) நிறுவனம் என்னுடைய குருவும் வழிகாட்டியாகவும் விளங்கியபேராசிரியர் முனைவர் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் துவங்கப்பட்டது. Dr.S.K அவர்கள் தனக்குப் பின்னர் நான் தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அவரின் வேண்டுதலாலும் வழிகாட்டுதலாலும் நான் இந்நிறுவனத்தில் என்னுடைய பொறுப்பில் எடுத்து நடத்தி வருகிறேன்.

    கிடாஃப் நிறுவனத்தின் மூலம் தேவையானவர்களுக்கு நிலத்தை மேம்படுத்தவும், பால்பண்ணைண பராமரிக்கவும் மற்றும் வேளாண்மை சம்மந்தப்பட்ட பல விதமான ஆலோசனைகளும் உத்திகளும் தரப்படுகின்றன. இதற்கு வேண்டிய புராஜெக்ட் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் வேளாண்மை சார்ந்த பல தொழில் நுணுக்கங்கள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு நாள் காளான் வளர்ப்புப் பயிற்சி போன்றவை.

    கே: இந்த நிறுவனங்கள் வேளாண் விஞ்ஞானிகள்,எந்தெந்த துறையில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்? அவர்களின் பணி குறித்து?

    வேளாண்மையில் பலதுறைகள் உள்ளன. மண்ணியல், உழவியல், தாவரவியல், பயிர்ப்பூச்சி இயல், பயிர் நோயியல், பொருளாதாரம், வேளாண்மை விரிவாக்கம் போன்றவை. இதில் ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வல்லூநர்கள் 18 பேர் இஸ்காப்பில் பணிபுரிகிறார்கள்.

    கே: வேறு நாடுகளில் இயற்கை வேளாண்மை உள்ளதா?

    உலகத்தில் சுமார் 138 நாடுகளில் இயற்கை வழி வேளாண்மை பின்பற்றப்படுகிறது. இதில் முதன்மையில் இருப்பது கியூபா, ஆஸ்ட்ரியா, ஆஸ்திரேலியா, பூடான் போன்ற நாடுகள்.

    கே: இயற்கை வேளாண்மை செய்து, நமது இந்தியாவின் உணவு வேளாண் உற்பத்தி இலக்கை எட்டி விட முடியுமா?

    எல்லா விவசாயிகளும் பெரிய அளவில் இயற்கை வழி வேளாண்மையை மேற்கொண்டால் நம்முடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது திண்ணம். இதற்கு அரசின் துணையும் நிதி உதவியும் தேவை.

    கே: ஹோமியோபதி, பிராண சிகிச்சை போன்றவற்றிலும் தாங்கள் அறிவாற்றல் மிக்கவராக விளங்குகிறீர்கள். அதில் எப்படி தங்களுக்கு ஆர்வம் உண்டானது?

    நான் மக்கள் நல்ல உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். நான் முதலில் கூறியது போல மெடிக்கல் கல்லூரியில் சேர முடியவில்லை என்றாலும் என்னுடைய ஆழமான எண்ணம் ஹோமியோபதி, பிராண சிகிச்சை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள என்னை என்னுடைய உள்ளுணர்வு இறை உணர்வு தூண்டியதன் மூலம் நான் மற்றவர்களின் நலனுக்காகவே இதை மேற்கொண்டுள்ளேன்.

    கே: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, வேளாண் துறையில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துள்ளீர்கள்? அதற்கு எவை காரணமாக இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

    தன்னம்பிக்கை, தளராத உழைப்பி நல்லெண்ணம், கனிவு, கருனை, பிறர்நலத்தில் மிகுதியான நாட்டம் இவற்றுடன் இறையருளும் சேர்ந்து என்னை உயர்த்தியிருக்கின்றது என்பதை அனுதினமுமத்  உளமார உணர்கிறேன்.

    கே: குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்?

    மனைவியார் திருமதி. சௌந்தரம் இல்லத்தரசி. எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார்கள். முதல் பெண் டாக்டர் சாந்தி அவரின் கணவர் டாக்டர் தேவராஜ், இவர்களுக்கு விவேக் தேவராஜ், நிவேதிதா தேவராஜ் என்ற குழந்தைகள். விவேக் திருமணமாகி அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நிவேதிதா எம்.டி பட்டம் பெற்றுள்ளார். இவர்களும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இரண்டாவது பெண் சக்தி பொறியியலாளர் இவர் கணவர் செந்தில் இருவரும் பொறியியல் துறையைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சவிதா என்ற மகள் இருக்கிறார்கள். எனது மகன் கிருஷ் சிவக்குமார் அவரின் மனைவி ஹேமலதா இவர்களின் குழந்தைகள் நிலா சிவக்குமார் மற்றும் ஆதவ் சிவக்குமார் இவர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

    கே: தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் இல.செ.க அவர்கள் தங்களோடு பணியாற்றியவர். அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்?

    திரு.இல.செ.க அவர்கள் மிகச்சிறந்த அறிவாற்றலுடையவர். தான் நினைத்ததை அப்படியே சொல்பவர். செயலாற்றுபவர், நேரம் உயர் போன்றது எனக் கருதுபவர். வேளாண்மையில் வித்தகராகிப் பல நூல்கள் எழுதியுள்ளார். மற்றவர்கள் நலம் கருதி சர்வ சதாகாலமும் உழைப்பவர். குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்படுத்துவர், நல்ல நண்பர்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

    ஆக்கம் அதிர்வினாய்ச் செல்லும் அசைவிலா

    ஊக்க முடையா னுழை.

    இக்குறளின் வழி பத்து வகை உடைமைகளை கடைபிடித்தால் நீங்கள் மிகச்சிறந்த மனிதர்களாக வாழ்ந்து வளமைப் பெற முடியும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்-67

    வேண்டாம் இந்தப் பிடிவாதம்..

    “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் உண்டு” என்று சிலர் பிடிவாதம் பிடித்ததுபோல் பேசுவார்கள்.

    “நான் சொல்வதுதான் சரி. உனக்கு ஒன்றும் தெரியாது” என்றும் கூச்சல் போடுவார்கள்.

    “நீங்கள் சொல்வது தவறு” என யாராவது தன்னை எதிர்த்துப் பேசினால், “என்கிட்ட மோதாதே” என்றும் சிலர் வம்பு பேசி வீண் சண்டைக்கு வலை விரிப்பார்கள்.

    இத்தகைய குணம் கொண்டவர்களை ‘பிடிவாதக்காரர்கள்’ என்று சமூகம் முத்திரைக் குத்திவிடுகிறது. இதனால், இவர்களின் வெற்றி முடங்கிப்போய்விடுகிறது.

    “வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது” – என்பது கிராமத்து பழமொழி.

    “உடலில் ஏற்படும் வாதநோய்க்குத் தீர்வாக பல மருந்துகள், மருந்து எண்ணெய்கள், பிசியோதெரபி போன்ற பல மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால், வாழ்க்கையில் ஒருவர் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதமாக இருந்தால், பிடிவாதத்தை நீக்கும் மருந்து எதுவும் இல்லை” என்கிறது அர்த்தமுள்ள இந்தப் பழமொழி.

    வாழ்க்கையில் சில நல்ல கொள்கைகளை நிறை வேற்றுவதற்காக பிடிவாதமாக இருக்கலாம். விடாப்பிடியாக இருந்து கொள்கையை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பவர்களும் உண்டு. ஆனால், தேவையற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் வீண் பிடிவாதம் பிடித்து, “நான் சொன்னதே சரி” என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்பவர்களும் உண்டு. இத்தகைய சூழல்தான் சிலரை சிக்கலில் மாட்ட வைத்துவிடுகிறது.

    “விடு… கொடு… விட்டுக்கொடு” என்பதை வாழ்வியல் தத்துவமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு வாழ்க்கை நாளும் மகிழ்வு நிறைந்ததாக மாறிவிடுகிறது. ஆனால், அதேவேளையில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததால் பொன், பொருள், உடல்நலம் போன்றவைகளை இழந்து, வீதிக்கு வந்தவர்களும் உண்டு. எனவே, எந்த அளவுக்கு பிடிவாதம் பிடிக்காமல் இருக்க வேண்டும்? என்ற புரிதல் கொண்டவர்களுக்கு வாழ்க்கை வந்தமாக மாறிவிடுகிறது.

    அந்தக் குடும்பத்தில் குழப்பம் வருமென்று யாரும் நினைக்கவில்லை.

    “சின்னஞ்சிறு வயதிலிருந்தே எங்கள் சொல்லைக்கேட்டு வளர்ந்த எங்கள் பிள்ளை பிரகாஷ் இப்படி மாறிவிட்டானே!” என்று பெற்றோர்கள் வருந்தினார்கள்.

    “இந்த வாரத்திற்குள் எனக்கு பைக் வாங்கி தராவிட்டால், நான் கல்லூரிக்கு போகமாட்டேன்” என்று பிரகாஷ் அடம்  பிடித்த பின்புதான், அவர்களுக்குள் இந்த எண்ணம் பிறந்தது.

    “நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும்” என்றுசொல்லி வீட்டில் அதிகாரத் தோரணையோடு வலம் வந்தான் பிரகாஷ்.

    பெற்றோர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

    “இப்படி நீ சொல்வது சரியில்லை மகனே” – என்று பாசத்தை அள்ளித் தெளித்தார் அப்பா.

    முகத்தை கடுமையாக்கிக்கொண்டு கோபத்தை வரவழைத்தான் பிரகாஷ் “வசதியில்லாதவர்கள்கூட அவர்கள் பையனுக்கு ‘பைக்’ வாங்கிக் கொடுத்து அழகுப் பார்க்கிறார்கள். நீங்கள் பெரிய வங்கி அதிகாரி என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். எங்கள் கல்லூரியும் திறந்துவிட்டது. ஜூலை மாதம் ‘பைக்’ வாங்கியபின்பு தான், கல்லூரிக்கு வருவேன் என்று நண்பர்களுக்கு நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். நீங்கள் பைக் வாங்கித் தராவிட்டால், நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” – என்று கண் கலங்கினான்.[hide]

    அம்மா சமாதானம் சொல்லிப் பார்த்தாள். பிரகாஷ்; விடுவதாக இல்லை.

    “நீங்கள் இன்னும் 10 நாட்களுக்குள் ‘பைக் வாங்கித்தர வேண்டும். இல்லையென்றால் நான் காலேஜூக்குப் போகமாட்டேன்” – கண்டிஷன் போட்டு பேசினான் பிரகாஷ்.

    முடிவில் பிரகாஷ்; ஆசை நிறைவேறியது. அப்பாவின் ஆப்ரேஷனுக்காக வைத்திருந்த பணம் மோட்டார் சைக்கிளாக உருவெடுத்தது. நாள்தோறும் இரண்டு நண்பர்களை பைக்கில் ஏற்றி, கல்லூரிக்கு வந்தான் பிரகாஷ் ஹெல்மெட் இல்லாத பயணத்தை ரசித்தான். லட்ச ரூபாயை விழுங்கிய மோட்டார் சைக்கிளில் அசூர வேகத்தில் பயணம் செய்ய ஆசைப்பட்டான்.

    திடீரென ஒருநாள் எதிரே வந்த லாரிக்கு வழி விட்டு, மோட்டார் சைக்கிளோடு மரத்தில் மோதி கால்களை இழந்தான்.

    “கடவுளே…! எனக்கு நடந்து செல்வதற்கு கால்களை தாருங்கள்?” என்று கண்ணீர்விட்டான்.

    இந்த நிகழ்வு பிடிவாதத்தால் விளைந்த பரிதாபம் அல்லவா?

    பிடிவாத குணம் கொண்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதில்லை. தங்கள் கருத்தை எதிர்ப்பவர்களை எதிரிகளாகவே கருதும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ‘எல்லா சூழலிலும் தனக்கு வெற்றி வேண்டும்’ என்ற மனப்பாங்கோடு நடந்து கொள்வார்கள். தனது எண்ணங்களை அங்கீகரிப்பவர்களை மட்டுமே அருகில் வைத்துக் கொள்வார்கள். இந்தப் பண்பு பெரும்பாலான சூழலில் பிரச்சினைகளையே உருவாக்கும். இவர்களின் கருத்தை எதிர்ப்பதற்கும், சிக்கலில் இவர்களை மாட்டி வைப்பதற்கும் சிலர் காத்துக் கொண்டே இருப்பார்கள். முடிவில் வேதனையைச் சுமக்கும் சூழலை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

    அவர் ஒரு விவசாயி. அவரது குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது. “தோட்டத்தை விற்று கிடைக்கும் பணத்தில் தான் இனி குடும்பத்தை நடத்த முடியும்” என்று முடிவு செய்தார்.

    “நம் தோட்டத்தை விற்றுவிட்டால், சாப்பாட்டுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்” – மனைவி தடுத்தாள்.

    விவசாயி குழம்பினார்.

    “நம் தோட்டம் முழுவதையும் விற்பதற்குப் பதிலாக, கிணற்றை மட்டும் விற்றுவிட்டால் போதும். சமாளித்துக் கொள்ளலாம். பணத்திற்கும் பிரச்சினை இருக்காது” என்று ஆலோசனை சொன்னாள் மனைவி.

    மனைவியின் சொல்லே அங்கு மந்திரமானது.

    மனைவிபோட்ட திட்டத்தின்படி நல்ல விலைக்கு தனது கிணற்றை விற்றார் விவசாயி.

    அந்தக் கிணற்றை வாங்கியவர், தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றிற்கு வந்தபோது, “நீங்கள் இந்தக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது” என்று தடுத்தார் விவசாயி.

    கிணற்றை வாங்கியவர் அதிர்ந்துபோனார்.

    “நல்ல விலைக்கு கிணற்றை விற்றுவிட்டு இப்போது என்னை தண்ணீர் எடுக்கக்கூடாது என்று சொல்கிறீர்களே! இது நியாயமா?” என்று எரிச்சல்பட்டார் கிணற்றை வாங்கியவர்.

    விவசாயி விடவில்லை. பிடிவாதம் பிடித்தார்.

    “நான் கிணற்றை மட்டும்தான் உமக்கு விற்றேன். வேண்டுமானால் உமது கிணற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். ஆனால், கிணற்றிற்குள் இருக்கும் தண்ணீர் எனக்குத்தான் சொந்தம்” என்று பிடிவாதமாகச் சொன்னார் விவசாயி.

    “இது சரியில்லை. என்னை தடுத்தால் பிரச்சினை பெரிதாகிவிடும். பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் கிணற்றை விலைக்கு வாங்கியவர்.

    “எந்தப் பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள். நான் பயப்படமாட்டேன்” என்று வாதிட்டார் விவசாயி.

    தான் ஏமாந்து போனதாக கிணற்றை வாங்கியவர் உணர்ந்தார். ஊர்ப் பெரியவரிடம் வந்து தனது பிரச்சினையைத் தெரிவித்தார்.

    பிரச்சினையைக்கேட்ட ஊர்ப்பெரியவர் இருவரையும் அழைத்து விசாரித்தார். “தண்ணீர் தனக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாடினார் விவசாயி.

    அமைதியாகக்கேட்ட ஊர்ப்பெரியவர் விவசாயியைப் பார்த்து, “நீங்கள் உங்களது கிணற்றை விற்றுவிட்டதால் இப்போது கிணறு உங்களுக்குச் சொந்தமில்லை. அதனால் நீங்கள் உரிமை கொண்டாடும் தண்ணீரை இந்தக் கிணற்றுக்குள் வைத்துக்கொள்வது நியாயமா? உடனே தண்ணீரை காலி செய்து கொடுங்கள் அல்லது நீங்கள் உரிமை கொண்டாடும் தண்ணீரை கிணற்றுக்குள் சேமித்து வைப்பதற்கு நாள் தோறும் வாடகைக் கொடுங்கள். கிணற்றிலுள்ள நீரை ஒரு வாரத்திற்குள் எடுக்காவிட்டால் உம்மை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம்” – என்று கடுமையான தண்டனையை ‘ஊர்க்கட்டுப்பாடு’ என்னும் பெயரில் தெரிவித்தார்.

    “ஐயா… என்னை மன்னித்து விடுங்கள். எனது பிடிவாத குணத்தால் நான் தவறு செய்துவிட்டேன். இனி நான் வம்பு சண்டைக்குச் செல்லமாட்டேன்” என்று உறுதி அளித்துவிட்டு, தனது வீட்டிற்குத் திரும்பினார் விவசாயி.

    கிணற்றை விற்றபின்பும் தனது பிடிவாத குணத்தால் வாதம் செய்தார் விவசாயி. முடிவில், முதலுக்கே மோசம் வரும் என்பதை உணர்ந்து பேசாமல் நடையைக்கட்டினார்.

    இப்படித்தான் தேவையில்லாத வி’யங்களில் மூக்கை நுழைத்து, தங்கள் பிடிவாத குணத்தை வெளிப்படுத்துகிறார்கள். முடிவில் தங்களின் பெயரையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

    எனவே, ‘வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு’ என்பதை உணர்ந்து கொண்டு வீணான பிடிவாத குணத்தை நீக்கி வாழ்ந்தால், நாள்தோறும் நிம்மதியாக வாழலாம் அல்லவா![/hide]

    இந்த இதழை மேலும்

    சின்னஞ்சிறு சிந்தனைகள்

    எப்போதும் பயங்கொண்டு அடுத்தவரின் அளவுக்கதிகமான தேவைகளுக்கு, அளவுக்கு மீறி வளைந்து கொடுப்பது அவர்களுக்கு நம்மீது உள்ள அன்பு மற்றும் மதிப்பு குறைந்து விடும்.

    பிரச்சனைகள் நமக்கு பயத்தை உண்டு பண்ணுவதில்லை. அந்தப் பிரச்சனைகளைக் குறித்து நாம் எண்ணும் விதமே, பயத்திற்கும் அது தொடர்பான மற்ற கோளாறுகளுக்கும் வித்திடுகிறது.

    வயது முதிர்ந்த பின் நமக்கு வரும் பயங்கள் நாமே வரவழைத்துக் கொள்பவை.

    நமக்கு பயமோ, குழுப்பமோ உண்டானால் முதலில் நடந்தவைகளை அல்லது நடப்பவைகளை அலசிப் பார்த்து அவற்றை மாற்ற முடியுமா என்று யோசிப்போம். அவற்றை மாற்ற முடியாவிட்டால், அவை குறித்த  நம் எண்ணங்களை மாற்றிக்கொள்வோம். அதாவது எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்வது.

    நம் எண்ணங்களை நல்லவற்றில் சந்தோசமானவற்றில் செலுத்தி நம்மை நாமே பயன்படுத்திக் கொண்டால் நாமும், பிறரும் நலமாக வாழவழி செய்யலாம்.

    நம்மை நாமே நல்லவனாக விருப்பத்தக்கவனாக எண்ணினால் முயற்சித்தால் அப்படியே மாறலாம் இது உறுதி.

    ஒன்றைப் பற்றி ஆர ஆமர யோசித்துப்  பார்க்கும் போது தான் நமக்கே நம் நிலைமை புரியும்.[hide]

    பயத்தின் பரிமாணத்தை அதிகப்படுத்துபவை வீணான மன பிரமைகளே எதையும் விபரீதம் என்றும் கொடுமை என்றும் முடிவு என்றும் எண்ண ஆரம்பித்தால், பயம் என்னும் சிலந்தி நம் மனதின் மூலைகளில் வலை பின்ன ஆரம்பித்து விடும்.

    எதிலுமே பொறுமையும் நிதானமும் அவசியம் நம்மை நாமே ஒதுக்கக்கூடாது எப்போதும்.

    எதைப் பற்றியும் சதா சர்வ காலமும் எண்ணிக் கொண்டு இருக்காதீர் எதற்கும் ஒரு எல்லையை வகுத்து அதில்இருந்து விடுபட்டு அடுத்த நிகழ்விலே கலந்து விடுங்கள்.

    ஒரு சிறியை கல்லைப் பெரிய மலையாக்கிப் பார்ப்பது, நமது பிரச்சனைகள் விஸ்பவரூபம் எடுக்க வைத்து நம்மை துன்பக் கடலில் ஆழ்த்திவிடும்.

    நாம் என்னும் எதுவும் பல நாட்களாக நடக்காமல் இருந்தால் இத்தனை நாட்களாக நடக்காதது இனியும் நடக்காது என்று நம்ப வேண்டும். நம்பிக்கை தைரியமாகி மெல்ல மெல்ல இயல்பு நிலையை அடைந்து விடும்.

    தன்னம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு போதும் தாழ்வு மனப்பான்மையை கொண்டு வந்துவிடுதல் கூடாது.

    ஒரு பயம் வந்தவுடன் கூடவே 3,4 ஒட்டிக்கொண்டு வரும். ஒன்றைத் துரத்த முயற்சி செய்யாவிட்டால் அது நம் நிஜ உருவையே நமது சக்தியையே ஒட்டு மொத்தமாக நம்மிடம் இருந்து விரட்டிவிடும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி ?

    தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்களிடையே நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

    தமிழ்பாரதி,

    எழுத்தாளர் மற்றும் கவிஞர்,

    சென்னை.

    நீரின்றி அமையாதது உலகு’ என்று நீரின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உணர்த்தினார் திருவள்ளுவர். ஆனால் இப்போது தான் புரிகிறது, அவர் நமக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார். அதாவது நீரின்றி எதுவும் நடக்காது, எனவே இருக்கும் நீராதாரங்களைப் பத்திரப்படுத்துங்கள், நீரை சிக்கனமாக செலவிடுங்கள், இல்லையென்றால் அவதிப்படுவீர்கள் என்பதைத்தான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நாட்டையாண்ட சோழ மன்னர்கள் குளங்கள் வெட்டி நீரைத்தேக்கி, கால்வாய்கள் அமைத்து அவற்றை இணைத்து, விவசாயத்திற்கு நீரும், குடிப்பதற்கு நீரும், கால்நடைகளுக்கு நீரும் கிடைக்க வழி வகுத்தனர். பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பெரிய அணைகள் கட்டப்பட்டன, அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. குடிநீரும், பாசன நீரும் ஓரளவுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

    ஆனால், மக்கள் தொகை பெருக பெருக நீரின் தேவையும் அதிகரித்தது. அதிக விவசாயம், அதிக கால்நடைகள், அதிகமான தொழிற்சாலைகள் என்று நீரின் தேவை அதிகரித்த போது நாமும் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தோம். விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் ஆயிரம் அடி, தோண்டுவதும் சாத்தியமானது. நிலத்தடி நீரை ராட்சச கிணறுகள் மூலம் உறிஞ்சி விட்டதால் நிலத்தடி நீர் இன்னும் பாதாளத்திற்குப் போய்விட்டது.

    ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளித் தொலைத்ததால் மணலில் தேங்கி நின்ற தண்ணீரும் இல்லை, நிலத்தடி நீரும் இல்லை என்ற நிலை இன்று. இதனால் பெரிய மரங்கள் கூட பட்டுப் போகும் அபாயம் ஏற்பட்டது. குளத்து நீரும், அணைக்கட்டு நீரும் நமக்குச் சொந்தம், ஆனால் நிலத்தடி நீர் மரங்களுக்குத்தான் சொந்தம். இதுதான் நீர் மேலாண்மை நியதி. நிலத்தின் மேல் தேங்கும் நீர்தான் மனிதனுக்குச் சொந்தம் என்ற நிலைபாடுதான் சிறந்த நீர் மேலாண்மையாக இருக்க முடியும். அதைத்தான் நமது முன்னோர்கள் செய்தார்கள்.

    உலக மனிதர்களின் அழிவுச் செயல்களால் இன்று பூமி வெப்பமடைந்து கொண்டு வருகிறது. ‘Global Warming’ ‘Climate Change’ போன்ற சொல்லாடல்கள் சர்வதேச சவால்களாக உலக அரங்கில் நிற்கின்றன. அறிவியல் அறிஞர்கள் இந்த அபாயச் சங்கை ஊதினாலும் பல நாட்டு ஆட்சியாளர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை. அதிலும் அறிவியல் மீது ஆர்வமில்லாத மக்களுக்கு இது புரியவும் செய்யாது. நமது நாட்டிலும் இன்னும் அறிவியல் விழிப்புணர்வு வரவில்லை, அதற்கு மூட நம்பிக்கைகள் பெரும் தடையாக இருக்கிறது. உயிரினம் வாழும் ஒரே கோளம் பூமி, அதற்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்தை நாம் நிச்சியம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இன்று தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. குடிநீருக்கே மக்கள் பரிதவிக்கிறார்கள். சில இடங்களில் தண்ணீர் பங்கீட்டுச் சண்டையில் கொலையும் நடந்திருக்கிறது. சாலை மறியல்களும் நடந்து வருகின்றன. ஆனால் இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. அதற்கு அறிவியல் சிந்தனையால் ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடவும் முடியும். சமுதாய அக்கரையும், அரசாங்கத்தின் பங்களிப்பும் இதற்கு பெரிய அளவில் தேவைப்படுகிறது.

    பொது மக்கள் பலவற்றைச் செய்யலாம். மழைநீர் சேகரிப்பு முறையை வீடுகளில் நிறுவலாம், மரம் நடலாம், மரம் வெட்டுவதைத் தவிர்க்கலாம், நீரை வீணடிக்காமல் இருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் நான் சைக்கிளில் திருவள்ளுர் சென்றேன். வீடுகளின் முன்பகுதியில் தாராளமாக தண்ணீர் ஊற்றி ஈரமாக்கி கோலமிட்டிருக்கிறார்கள். உலர்ந்த மண்தரை மீது ஊற்றி தண்ணீரை வீணடித்திருக்கிறார்கள். நனைந்த மண்ணில் அங்கு செயலற்றுக்கிடந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் உயிர் பெற்று அந்த வீட்டில் உள்ளவர்களைத் தொற்றிக் கொள்ளும். அவர்களுக்கு வைரஸ் காய்ச்சலும் வரும். இதைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு அறிவியல் ஞானமும், அறிவியல் மனநிலையும் வேண்டும். ஆனால் அது இல்லை என்றே தோன்றுகிறது.[hide]

    நாட்டின் பல பகுதிகளில் இயற்கையிலே மழையும் குறைவு, நீர்பாசனமும் இல்லை. தென்னிந்திய நதிகளில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். பெரிய அணைகளிலிருந்து விவசாயத்திற்கு சில காலங்கள் தண்ணீர் வரலாம். மற்ற காலங்கள் ஆறுகள் வறண்டு இருக்கும். எனவே விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. Sprinkler Irrigation, Drip Irrigation போன்ற அறிவியல் முறைகளை பயன்படுத்தினால் விவசாயத்தில் தண்ணீரை சிக்கனமாக்கலாம்.

    முந்தைய காலங்களில் வெட்டப்பட்ட ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்படாமல் இருப்பதால் நீர் கொள்ளளவு குறைந்து விட்டது. அங்கு தண்ணீர் கொண்டு சேர்க்கும் கால்வாய்களும் மூடிவிட்டன. பல கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் ஆகிவிட்டன. இதனால் மழைக் காலத்தில் தேக்க வேண்டிய நீர் கடலுக்கே சென்று விடுகிறது. நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் மழையளவு மிகவும் குறைவு, மற்ற மாநிலங்களை நம்பித்தான் விவசாயமும், குடி நீரும் இருக்கிறது. எனவே நாம் பருவ மழையை மட்டும் நம்பாமல், அண்டை மாநிலத்தவரையும் நம்பாமல் அறிவியலை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இஸ்ரேல் நாட்டைப் போல கடல் நீரை குடிநீராக்கி அதை விநியோகம் செய்யலாம். பொறியியல் படித்தவர்கள் நம்மிடம் லட்சக்கணக்கில் உள்ளார்கள். அவர்கள் இந்தப் பணியை கச்சிதமாக செய்து விடுவார்கள்.

    தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண நதிகளை இணைக்கலாம் என்கிறார்கள். இது நல்ல யோசனைதான், ஆனால் இது சுற்று சூழ்நிலையைப் பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஒரு வேளை நதிகளை இணைத்தால் கோடைகாலத்தில் தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று நதிகள் கூட நதிகளாக இல்லை, சாக்கடைகளாகவே உள்ளன. மனித கழிவுகளையும், சாயக்கழிவுகளையும், இறந்த விலங்குகளையும் ஆற்றில் விடுபவர்களாகவே இன்றும் மக்கள் உள்ளார்கள். எனவே அப்படிப்பட்ட அசுத்தம் கலந்த தண்ணீரை வட நாட்டு நதிகளிலிருந்து பெறுவதால் என்ன பயன்தான் ஏற்படப் போகிறது. நமது நிலம் மாசுபடுவதுடன், நமது கடல் பகுதியும் பெருமளவில் மாசுபட்டு விடும். ஒரு வேளை கோடை காலத்தில் ஓரளவுக்கு சுத்தமான நீர், நதிகள் இணைப்பதால் கிடைத்து விடும் என்றால் அது ஒரு நல்ல திட்டம் தான்.

    ஒரு மனிதனுக்கு ஒரு நாள் 300 லிட்டர் நீரும், ஒரு பசு மாட்டிற்கு 70 லிட்டர் நீரும், ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2495 லிட்டர் நீரும், ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்தி செய்ய 4325 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது. எனவே மக்கள் தொகை பெருகி வரும் காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாகவே வருங்காலங்களில் இருக்கும்.

    இன்று முடியாது என்றாலும் பிற்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மக்கள் ஒன்று செய்ய வேண்டும். வீட்டுக்கு ஒரு குழந்தை போதும் என்ற மன நிலையை உருவாக்க வேண்டும். அதோடு நம்மில் பலர் வெளி நாடுகளில் குடியேற வேண்டும். மக்கள் தொகை சில ஆண்டுகள் கழித்து குறையும் போது, நீரின் தேவை குறையும். 134 கோடி மக்களுக்கான தண்ணீர் இந்தியாவில் இல்லை, 8 கோடி மக்களுக்கான குடிக்க நீரும், குளிக்க நீரும், விவசாயம் செய்ய நீரும் தமிழ்நாட்டில் இல்லை. இன்றைய மக்கள் தொகையை பாதியாக குறைத்தோம் என்றால் அன்றைய தினம் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.[/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    இருபதாண்டுகளாகச் சிறையில் இருந்து விடுதலை அடைந்த குற்றவாளி ஒருவனிடம் யாரும் அன்பு காட்டவில்லை. யாரும் அவனுக்கு வேலையும் கொடுக்கவில்லை. பசிதாங்க முடியாமல் அவன் ஒரு வீட்டின் வெளியில் நின்று பிச்சை கேட்டான். அந்த வீட்டில் வசிக்கும் பாதிரியார் அவனிடம் அன்பாகப் பேசி, அவன் பசியை உணர்ந்து உட்கார வைத்து வெள்ளித்தட்டில் அறுசுவை உணவை அவனுக்களித்து, நல்ல உபதேசம் செய்து படுக்கை அறையில் மெத்தையில் படுக்க வைத்தார்.

    அந்தக் குற்றவாளி விடியற்காலையில் எழுந்து வெள்ளித் தட்டுகள் கரண்டிகள் இன்னும் பல பொருள்கள்  எடுத்துக் கொண்டு பின்பக்க சுவரைத் தாண்டிக் குதித்து ஓடினான். பாதுகாப்புக்காக சுற்றிக் கொண்டிருந்த காவல்காரர்கள் அவனைப் பிடித்து பாதிரியாரிடம் கொண்டு வந்தனர். அவனிடம் இருந்த பொருள்களையெல்லாம் காட்டி உங்களுடையதுதானா? என்று கேட்டார்கள்.

    ஆம். எல்லாப் பொருள்களும் என்னுடையது தான், நான் தான் இவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவனுக்கு இன்னும் எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் இங்கிருந்து எடுத்துச் செல்லட்டும் என்று பாதிரியார்   கூறினார். காவல்காரர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். குற்றவாளி பாதிரியாரின் காலில் விழுந்து மன்னிக்கும்படி அழுதான். பாதிரியார் தட்டிக் கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து இதை வைத்து தொழில் தொடங்கிப் பிழைத்துக் கொள் என்றார். அதன் பின்னர் அவன் நல்வழியில் வாழத் தொடங்கிவிட்டான்.

    வெற்றியே முதற்படி

    கவிமுரசு சு. இலக்குமணசுவாமி

    மதுரை

    மண் விட்டு கிளம்பும் விதைகளைப் பார்

    போராட்டமே வாழ்வென புரியும்!

    மரம் விட்டு மரம் போகும் பறவையைப் பார்

    அதன் சிறகே தன்னம்பிக்கை என்பது புரியும்!

    விண் முட்டும் மலைகளை நிமிர்ந்து பார்

    உயரப் போகும் ஆசை தன்னாலே வந்துவிடும்!

    முடியும் என்று சொல்லிப்பார்

    முயற்சி தன்னால் கூடி வரும்

    விடியலுக்காகக் காத்திருப்போம் – ஆனால்

    வெளிச்சம் இன்றி வாழ்வது சரியா?

    விளக்கே உந்தன் கைகளில் இருக்க – நீ

    விடியலை எண்ணி அழுவது முறையா?

    முதலில் உனக்குள் இருக்கும் ஆற்றலை

    உணர்ந்து பார்… வெற்றி பெற அதுவே – முதற்படி!