Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி ?

தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்களிடையே நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

தமிழ்பாரதி,

எழுத்தாளர் மற்றும் கவிஞர்,

சென்னை.

நீரின்றி அமையாதது உலகு’ என்று நீரின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உணர்த்தினார் திருவள்ளுவர். ஆனால் இப்போது தான் புரிகிறது, அவர் நமக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார். அதாவது நீரின்றி எதுவும் நடக்காது, எனவே இருக்கும் நீராதாரங்களைப் பத்திரப்படுத்துங்கள், நீரை சிக்கனமாக செலவிடுங்கள், இல்லையென்றால் அவதிப்படுவீர்கள் என்பதைத்தான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நாட்டையாண்ட சோழ மன்னர்கள் குளங்கள் வெட்டி நீரைத்தேக்கி, கால்வாய்கள் அமைத்து அவற்றை இணைத்து, விவசாயத்திற்கு நீரும், குடிப்பதற்கு நீரும், கால்நடைகளுக்கு நீரும் கிடைக்க வழி வகுத்தனர். பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பெரிய அணைகள் கட்டப்பட்டன, அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. குடிநீரும், பாசன நீரும் ஓரளவுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால், மக்கள் தொகை பெருக பெருக நீரின் தேவையும் அதிகரித்தது. அதிக விவசாயம், அதிக கால்நடைகள், அதிகமான தொழிற்சாலைகள் என்று நீரின் தேவை அதிகரித்த போது நாமும் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தோம். விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் ஆயிரம் அடி, தோண்டுவதும் சாத்தியமானது. நிலத்தடி நீரை ராட்சச கிணறுகள் மூலம் உறிஞ்சி விட்டதால் நிலத்தடி நீர் இன்னும் பாதாளத்திற்குப் போய்விட்டது.

ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளித் தொலைத்ததால் மணலில் தேங்கி நின்ற தண்ணீரும் இல்லை, நிலத்தடி நீரும் இல்லை என்ற நிலை இன்று. இதனால் பெரிய மரங்கள் கூட பட்டுப் போகும் அபாயம் ஏற்பட்டது. குளத்து நீரும், அணைக்கட்டு நீரும் நமக்குச் சொந்தம், ஆனால் நிலத்தடி நீர் மரங்களுக்குத்தான் சொந்தம். இதுதான் நீர் மேலாண்மை நியதி. நிலத்தின் மேல் தேங்கும் நீர்தான் மனிதனுக்குச் சொந்தம் என்ற நிலைபாடுதான் சிறந்த நீர் மேலாண்மையாக இருக்க முடியும். அதைத்தான் நமது முன்னோர்கள் செய்தார்கள்.

உலக மனிதர்களின் அழிவுச் செயல்களால் இன்று பூமி வெப்பமடைந்து கொண்டு வருகிறது. ‘Global Warming’ ‘Climate Change’ போன்ற சொல்லாடல்கள் சர்வதேச சவால்களாக உலக அரங்கில் நிற்கின்றன. அறிவியல் அறிஞர்கள் இந்த அபாயச் சங்கை ஊதினாலும் பல நாட்டு ஆட்சியாளர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை. அதிலும் அறிவியல் மீது ஆர்வமில்லாத மக்களுக்கு இது புரியவும் செய்யாது. நமது நாட்டிலும் இன்னும் அறிவியல் விழிப்புணர்வு வரவில்லை, அதற்கு மூட நம்பிக்கைகள் பெரும் தடையாக இருக்கிறது. உயிரினம் வாழும் ஒரே கோளம் பூமி, அதற்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்தை நாம் நிச்சியம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. குடிநீருக்கே மக்கள் பரிதவிக்கிறார்கள். சில இடங்களில் தண்ணீர் பங்கீட்டுச் சண்டையில் கொலையும் நடந்திருக்கிறது. சாலை மறியல்களும் நடந்து வருகின்றன. ஆனால் இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. அதற்கு அறிவியல் சிந்தனையால் ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடவும் முடியும். சமுதாய அக்கரையும், அரசாங்கத்தின் பங்களிப்பும் இதற்கு பெரிய அளவில் தேவைப்படுகிறது.

பொது மக்கள் பலவற்றைச் செய்யலாம். மழைநீர் சேகரிப்பு முறையை வீடுகளில் நிறுவலாம், மரம் நடலாம், மரம் வெட்டுவதைத் தவிர்க்கலாம், நீரை வீணடிக்காமல் இருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் நான் சைக்கிளில் திருவள்ளுர் சென்றேன். வீடுகளின் முன்பகுதியில் தாராளமாக தண்ணீர் ஊற்றி ஈரமாக்கி கோலமிட்டிருக்கிறார்கள். உலர்ந்த மண்தரை மீது ஊற்றி தண்ணீரை வீணடித்திருக்கிறார்கள். நனைந்த மண்ணில் அங்கு செயலற்றுக்கிடந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் உயிர் பெற்று அந்த வீட்டில் உள்ளவர்களைத் தொற்றிக் கொள்ளும். அவர்களுக்கு வைரஸ் காய்ச்சலும் வரும். இதைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு அறிவியல் ஞானமும், அறிவியல் மனநிலையும் வேண்டும். ஆனால் அது இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment