Home » Articles » நில்! கவனி !! புறப்படு !!! – 5

 
நில்! கவனி !! புறப்படு !!! – 5


மித்ரன் ஸ்ரீராம்
Author:

செய்வன திருந்தச்செய் ! (பாதை 4)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள் – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

செய்வன திருந்தச்செய் !

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என கேட்கும் சமூகம் இது.

“ஒன்றே செய் ! நன்றே செய் !! அதையும் இன்றே செய் !!! – என்பது பல சாதனை மனிதர்கள் நமக்கு அளித்துள்ள அனுபவ சத்தியம்.

“செய் அல்லது செத்து மடி !” – என்பதும் வலிமை நிறைந்த வார்த்தைகளே !

ஆங்கிலத்தில் சொல்வதானால் – ACTION IS BETTER THAN WORDS –  என்ற வரிகளே பல வெற்றியாளர்களின் ஆதார வழி.

“A STICH IN TIME SAVES NINE” – என்று ஒரு பழமொழி உண்டு.  சரியான தருணத்தில் செய்யாத எதுவும் சிறப்பாக பரிணமிக்காது – என்பதே உண்மை.

சரியான தருணத்தில் செய்வது எவ்வளவு முக்கியமோ – அதை சரியாக செய்வது அதைவிட முக்கியம்.  இதைத்தான் முன்னோர்கள் நம்மிடம் “செய்வன திருந்தச்செய்” என்றார்கள்.

தேர்வு தொடக்கி தேர்தல் வரை – சரியாக கையாளாமல் போனால், கஷ்டமும் கவலையுமே கடைசியில் மிச்சம் என்று காலமும் புலம்பும் நிலைக்கு வாழ்க்கை வந்து விடக்கூடாது.

சரியாக கையாளப்படாத நட்பு – வளராது.  சரியாக கையாளப்படாத கணவன் மனைவி உறவு முறை சோபிக்காது.  அலுவலக நடைமுறைகள், அக்கம் பக்கத்து உறவு முறை இப்படி நீண்ட ஒரு பட்டியல் ஒவ்வொருவரிடம் உண்டு.  கையாளுதல் என்பதன் பொருள் இடத்துக்கு இடம் மாறும்.  சரியாக செயல்படுதல் என்பதே சரி.

ஆக, சரியாக செயல்படுதல் என்பதைத்தான் “செய்வன திருந்தச்செய்” என்றார்கள்.

“திருந்தச்செய்யாத” சிகிச்சை – மரணத்தை சீக்கிரம் நெருங்க வைக்கும்.

“திருந்தச்செய்யாத” வாகன பராமரிப்பு – விபத்தின் தாக்கத்தை அதிகரிக்கும்.

“திருந்தச்செய்யாத” உணவு முறை – உடல் உபாதைகளை உருவாக்கும்.

நெருப்பிலும் வெறுப்பிலும் மிச்சம் வைக்கக்கூடாது.  முற்றிலுமாக அணைத்துவிட வேண்டும்.  திருந்தச்செய்ய வில்லை என்றால் அதன் வெப்பம் நம்மை உள்ளும் புறமும் கொல்லும்.  அதாவது, நெருப்பு மனிதனை வாட வைக்கும், வெறுப்பு மனதை வாட வைக்கும்.

எனவே, எதையும் திருந்தச்செய்ய வேண்டியது உங்கள் கடமை !  இதை புரிந்து கொள்ளத் தவறும் சக மனிதர்களை “திருந்தச்செய்ய வேண்டியது” – எனது கடமை.  ஏனென்றால், சரியாக செய்வதே சாலச்சிறந்தது.  அது உங்களை வெற்றியின் வீட்டுக்கு அழைத்து செல்லும்.  அந்த வழி முழுவதும் வசந்தமாகவே இருக்கும்.

எதையும் சரியாகச்செய்வது என்பது சராசரி மனிதர்களிடம் இருந்து உங்களை தனித்தன்மையுடன் உயர்த்திக்காட்டுவது.  அந்த உயர்வுக்கு தனி மன நிலை வேண்டும்.  பண்பட்ட மனம் வேண்டும்.  பக்குவப்பட்ட பார்வை வேண்டும்.  செய்யும் செயல்களை சீர்தூக்கி பார்க்கும் சிந்தனை வேண்டும். புலால் உண்ண மாட்டேன் என்று மகாத்மா சொன்னது போல் ஒரு உறுதி வேண்டும்.  எத்தனை துன்பம் வந்தாலும் பொய்யே பேச மாட்டேன் என்று சொன்ன அரிச்சந்திர மகராஜனை போன்ற மன வைராக்கியம் வேண்டும்.

இந்த தன்மைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் இடம் எதுவென்றால் – நீங்கள் செய்வன திருந்தச் செய்தாகிவிட்டது.  விமர்சகனையும், அவன் விமர்சனத்தையும் மீறி உங்களுக்குள் உருவாகும் ஒரு நிறைவு – மகிழ்ச்சி, நிச்சயமாக மதிப்பு மிக்கதே.  ஆகவே, விமர்சனங்களை விட்டுத்தள்ளுங்கள்.  “செய்வன திருந்தச்செய்” என்ற வாசகம் கண்கள் மூலமாக, செவிகள் மூலமாக உங்களுக்குள் ஊடுருவி – ஆழ்நெஞ்சில் ஆணியாக பதியட்டும்.

உங்கள் சின்னச்சின்ன செயல்களுக்குள்ளும் ஒரு Perfection இருக்கட்டும்.  Man of Perfection  என்று ஆரம்பத்தில் அழைக்கும் அனைவரும் சிறிது நாளிலேயே உங்களை Perfect Man என்று புரிந்து கொள்வார்கள்.  அவர்கள் மனதில் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் உயரும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment