திரு. கார்த்திகேயா சிவசேனாபதி
சேவை மைய மேலாளர்
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம், காங்கேயம்.
- அரண்மனை பரம்பரைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனக்கும் பயன்கொடுத்து, பிறர்க்கும் பயன்கொடுக்கும் தொழிலையே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து விவசாயத்தின் விசுவாசியாக, கால்நடைகளுக்கென தனி ஆராய்ச்சி நிலையத்தையே உருவாக்கி அதனை திறம்பட செய்து வருபவர்.
- குறைந்து வரும் காங்கேயம் இன மாடுகளை காத்திடவும், பெருக்கிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்.
- அதிகம் இலாபம் பெற வேண்டும் என்பதற்காக நச்சுப் பொருளைக் கலந்து விவசாயம் செய்தல் கூடாது. இன்று நீங்கள் செய்யும் சிறிய தவறு நாளை உங்களின் சந்ததிகளை சோதிக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது எனக் குரல் கொடுத்து வருபவர்.
- பலரின் வாழ்க்கைத்தரம் உயரவும், பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழவும் பள்ளி கல்லூரிகளில் தன்னம்பிக்கை விதைகளை விதைத்து வருபவர்.
- இப்படி, பல்வேறு சிறப்புகள் பெற்ற திரு. கார்த்திகேயா சிவசேனாபதி அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி……
உங்களைப் பற்றி?
திருப்பூர் மாவட்டம் குட்டப்பாளையம் என்னும் சிற்றூரில்தான் பிறந்தேன். விவசாயம் எங்களின் குருதியோடு கலந்த தொழில். விவசாயத்தோடு கால்நடைகளை வளர்த்து வந்தோம். கால்நடைகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற காங்கேயம் காளைகளையும் கூடவே வளர்த்து வந்தோம். இது எங்களுக்கொரு நல்ல அங்கீரத்தைக் கொடுத்தது.
எனது பள்ளிக்கல்வி கொடைக்கானல், சென்னை என்று பல ஊர்களில் அமைந்தது. எனினும் கல்வியை நான் மிகவும் நேசித்ததன் காரணமாக தங்குதடையின்றி வெற்றிகரமாக முடித்தேன். அதன் பின்பு பி.ஏ., மொழியியல் பாடத்தை சென்னையில் பயின்றேன்.
கல்வி ஒரு புறம் இருந்தாலும், எனக்கு விவசாயத்தின் மீதும் கால்நடைகளின் மீதும் அளப்பறிய பற்றுதல் இருந்தது. ஒருமுறை எதாச்சையாக ஒரு புத்தகம் ஒன்றைப் படித்தேன். அந்தப் புத்தகம்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. அப்புத்தகத்தில் காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலையில் சென்றால் நாளை வெறும் புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பதை படித்துணர்ந்தேன். 2006 ஆம் ஆண்டு மூன்று பேருடன் அறக்கட்டளையைத் தொடங்கினேன்.
இந்த சேவை மையம் தொடங்கியதன் நோக்கம் குறித்து?
இதன் நோக்கம் அழிந்து வருவதை நம்மால் ஆன முயற்சியைக் கொண்டு காக்கப்பட வேண்டும் என்பதுதான். உலகளவில் பாஸ் இண்டிகஸ், பாஸ் டாரஸ் என்ற இருமாட்டினங்கள் உண்டு. பாஸ் இண்டிகஸ் என்பது இந்திய துணைக் கண்டங்களான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கக்கூடியது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாஸ் டாரஸ் என்ற மாட்டினம் இருந்தது.
நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய காட்டினமாக இருந்த மாடு, நாய் போன்ற விலங்கினங்களை மனிதன் வளர்க்க ஆசைப்பட்டான். மக்களும் ஒரே இடத்தில் வாழாமல் வடக்கும் மேற்குமாக சென்றார்கள்.
அதன்பிறகு மாடுகளின் வளர்ச்சியும் மாறுப்பட்டது. இப்பொழுது இந்தியாவில் மூன்று வகையான மாடுகள் இருக்கிறது. வடஇந்தியாவில் வளர்க்கப்படும் மாடுகளை (Milks Animals) பால் கொடுக்கும் மாடுகள் என்றும், நடு இந்தியாவில் இருக்கக் கூடிய மாடுகள் பால் கொடுப்பதாகவும் இருக்கும், மனிதனுக்கு வேலையும் செய்வதாக இருந்தது, தென்இந்தியாவில் இருக்கும் மாடுகள் வேலைகளை அதிகமாக செய்தாலும், பால் மிகவும் குறைவாக கிடைக்கும். இப்படி மாறுப்பட்ட மாட்டினங்கள் இருந்தது.
மாடுகளின் வகைகள் பலவாறாக இருந்தாலும் மனிதனின் தேவையை எது அதிகமாகப் பூர்த்தி செய்கிறதோ அதைத் தேடிதான் செல்வார்கள்.
உலகப் புகழ் பெறும் அளவிற்கு காங்கேயம் மாடுகள் வளர்ச்சி அடைந்ததன் காரணம் என்ன?
மாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார் போல் மாறுதல்கள் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மைசூரு பகுதிகளில் அதாவது கர்நாடகாவில் அமிர்த்மஹால், கிருஷ்ணா, ஹாலிகர், தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், புலியக்குளம், தஞ்சாவூர் உள்ள உம்பளச்சேரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலாம்பாடி போன்ற மாடுகள் இடத்திற்கேற்றார் போல் இருந்தது.
தமிழ்நாட்டில் நாட்டினமாடுகளில் தகப்பன் இனமாக இருப்பது காங்கேயம் இன மாடுகள்தான். தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும் பொழுது உம்பளச்சேரி மாடுகள் என்றும், மதுரை பக்கம் செல்லும் பொழுது புளியக்குளம் மாடுகள் என்றும், அந்தியூர் பகுதியில் இருக்கும் பர்கூர் மலைமீது இருக்கும் மாடுகள் பர்கூர் மாடுகள் என்றும் பெயர் பெறுகிறது. இவற்றை பல ஆய்வுகள் கொண்டு வெளியிட்டுள்ளார்கள் டாக்டர் கந்தசாமி, டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர்..
ஆரம்பக் காலக்கட்டத்தில் காங்கேயம் காளைகள் மிகச்சிறிய உருவத்தில்தான் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் என் குடும்பத்தின் மூதாதையர் ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் அவர்கள் காங்கேயம் காளைகளின் அழகை மேலும் மெருகேற்ற கர்நாடகாவிற்கு சென்று அமிர்த்மஹாலில் ‘பூரிணி மாடு’ என்ற மாட்டை வாங்கி வந்து இங்கிருக்கும் மாட்டோடு இனம் சேர்த்து இன்று இருக்கும் காங்கேயம் மாடுகளை உருவாக்கினார்.
இன்று இந்தக் காங்கேய மாடுகள் அழகாகக் காட்சியளிக்கிறது, என்றால் அது இவரை மட்டுமே சாறும். அக்காலக்கட்டத்தில் இவர் 6000த்திற்கு மேற்பட்ட மாடுகளை தனது பண்ணையில் வளர்த்து வந்தார்.
1960 ஆம் ஆண்டு “நில உச்சவரம்பு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு மேய்ச்சலுக்கு நிலம் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்பொழுது தான் மாடுகளின் எண்ணிக்கை முதன் முதலில் குறைய ஆரம்பித்தது.
மாடுகள் வளர்ப்பதிலுள்ள சவால்கள் என்னென்ன?
‘மேப்புப்பாதி தோப்புப்பாதி’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்திய துணைக்கண்டத்திலுள்ள எல்லா மாடுகளுக்கும் மேய்ச்சல் தரைத்தேவைப்படுகிறது.
சில மாடுகள் கட்டி வைத்து மேய்ச்சல் கொடுத்தால் மட்டுமே அது உண்ணும். மேலும் சில மாடுகள் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டால் நன்றாக உண்ணும், இந்த இரண்டாவது நிலை மாடுகளை நன்றாக வளர்த்து விடலாம்.