Home » Articles » உங்களுக்காக சில உண்மைகள்

 
உங்களுக்காக சில உண்மைகள்


மாரிமுத்துராஜ் A.G
Author:

எதிர்பாராத கோணத்தில், ஒன்றை எண்ணிப் பார்க்கின்றபோது,      புதிய போக்கு புலப்பட்டு, நம்மை புல்லரிக்க வைக்கும். மனமானது எந்த அளவு கவனம் சிதறாது ஒரு புள்ளியில் குவிகிறதோ, அந்த அளவு அற்புத ஆற்றலானது அவ்விடத்திலிருந்து வெளிப்படும்.

அறிவின் வட்டத்துக்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள்         புதிய எல்லையைப் புறக்கணித்து விட்டவர்களாவர்கள். இயல்பு நிலையைக் கடந்து, செல்லுகின்றவர்களே புதிய இடத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள். வழியில்லாத இடத்தை எந்தவித வலியில்லாமல் அடைய முடியாது!

இறகுகள் இருந்தும் அதை விரித்து பறக்கத் தெரியாத பறவையாக! நம்மில் எத்தனைபேர் தகுதிகள் இருந்தும் அதை உபயோகித்து முன்னேறத் தெரியாதவர்களாக முடங்கிக் கிடக்கின்றோம்.

தீவிரத்தனமான பொறுப்புக்குள்ளே யார் நுழைந்தாலும் அவர் உடனே அதுவாக மாறிவிடுவார். அதுவரை அவரே நினைத்துப் பார்த்திராத புதிய கண்ணோட்டம், புதிய முயற்சியை செய்வது கண்டு வியந்து போவார்.

நமக்குள்ளே குடியிருக்கும் எதிர்மறை எண்ணத்தை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி, அங்கே நேர்மறை எண்ணத்தைக் குடியிருக்க செய்வது நம் பொறுப்பு. ஏன் என்றால் வீடு நம்முடையது! அங்கே வாடகைக்கு இருப்பவர் நல்லவராக இருக்க வேண்டியது நியதி!

நெல்லோடு வளரும் புல்லைப் புடுங்கி எறிவதுபோல, நல்லதோடு வரும் அல்லதை அறுத்தெறி! உள்ளம் தெளிவாகும்! எல்லாம் மகிழ்வாகும்! கூட்டத்துடன், கூட்டமாக, ஒரேவழியில், பின்செல்கின்ற செம்மரியாடுகள் என்றைக்கும், எதையும் சாதிக்கப் போவதில்லை.

தனிவழியில் பயணிக்க துடிப்பவருக்கு தைரியம் நிறைய வேண்டும்.  அதன் தொடக்கத்தில் வரும் கிண்டலை கேலியை கடந்து செல்லுகின்ற துணிச்சலுடன், இடையில் வரும் தடைகளை, தகர்த்தெறிந்து இலக்கை எட்டிப்பிடிக்கும் வைராக்கியம் வேண்டும்!

தனிவழியில் நீ சாதித்து விட்டால், அதுவரை உன்னை தளர்வடையச் செய்து, தள்ளிவிடத் துடித்தவர்கள் துள்ளிக் குதித்து வந்து உன்னை தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடத் தயங்க மாட்டார்கள்.

ஆகையினால் உடனே புறப்படு! புதிய வழியில்! மாற்றி யோசித்த பல மனிதர்களால் உருவாக்கப்பட்ட இம்மாநிலம் புதுமையாய் இன்று பூத்துக் குலுங்குது போதாதா! நீ! சிந்திப்பதிலும், செயல்படுவதிலும் தக்க இடைவெளி இருக்குமானால் நிச்சயம் புதிய ஒளி உன்னிலிருந்து வெளிப்படும்!

நாம் கடமையாக கருதும் நல்லது, இன்னொருவருக்கு கொடுமையாகத் தோன்றுகிறது! ஒரு செயலுக்கு எப்போதும் இரு கருத்து இருந்து கொண்டே தான் இருக்கும் என்ற தெளிவிருக்கும் வரை நம்மீது வீசப்படும் விமர்சனங்கள் மீது கோபம் ஏற்படாது!

கோபம் ஏற்படாதபோது, நம் குணத்தின் மீது மாற்றம் ஏற்படாது! நம்மில் மாற்றம் ஏற்படாதபோது, நம் இயல்பு பாதிப்புக்குள்ளாகாது! நம் இயல்பு பாதிப்பிற்குள்ளாகாதப்போது! நம் அமைதி, ஆனந்தம் என்றும் குறையாது!

சோம்பலக் கிடப்பவனுடனே, சுற்றிக் கொண்டிருக்கும், எதிர்மறை எண்ணம் சுறுசுறுப்புடையவனுடனே சென்று கொண்டிருக்கும் நேர்மறை எண்ணம் வாழ்க்கைக் கடலில் கல்வி படகே, கரையேற்றி விடும். தினம், தேவையைத் தேடி ஓடும் கூட்டத்திலிருந்து, நீ துணிச்சலுடன் விலகி, புதியதை நோக்கிப் புறப்படு!

இடைவெளி விட்டு இயங்கும்போது தடைகளைத் தூண்டும் தைரியம் கிடைக்கும். ஓடிக் கொண்டே இருக்காதே! அவ்வப்போது உன்னை மறந்து உல்லாசமாய் ஓய்வெடு! பல முறையில் சோதித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! அந்த முடிவைக் கூட சிறிது காலம் தாமதித்து செயல்படுத்த விளையுங்கள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்