Home » Articles » திட்டமிட்டு

 
திட்டமிட்டு


கவிநேசன் நெல்லை
Author:

 

ஒரு செயலை நினைத்தவுடன் தொடங்குவதும், மனம் போனபோக்கில் அதனை செய்து முடிப்பதும், அந்த செயல் ஏற்படுத்தும் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதும் செயலின் முடிவுகள் எப்படி அமைய வேண்டும்? என்பதைப்பற்றி நினைக்காமல் இருப்பதும் – எந்த ஒரு செயலையும் திறம்பட செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிடும்.

“எதையாவது தொடங்கி, எப்படியாவது செய்து முடிக்க வேண்டும்” என்ற சிந்தனையோடு சிலர் தங்கள் செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், செய்யும் செயலைத் திட்டமிட்டு, எவ்வாறு செய்ய வேண்டும்? என்பதை முன்கூட்டியே சிந்தித்து செயல்படுபவர்கள், அந்தச் செயலை மிகவும் சிறப்பாக செய்து முடித்து வெற்றியைக் காண்கிறார்கள்.

எந்தவொரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அதற்கு “திட்டமிடல்” (டப்ஹய்ய்ண்ய்ஞ்) என்பது அவசியமாகிறது. செயல்திட்டத்தை முறைப்படி வடிவமைக்கத் தெரியாதவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த நிலையை அடைய இயலாமல் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்.

எனவே – திட்டமிட்டு செயலாற்றும் பண்பு இளமைப் பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டிய பண்பு ஆகும்.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இளம்வயதில் கற்ற பண்புகள்தான் அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. எந்தச் செயலையும் திட்டமிட்டு செயலாற்றவும் அவருக்குத் துணையாக நின்றது.

சிறுவனாக இருந்தபோது ராமேஸ்வரம் பள்ளியில் படித்த டாக்டர் அப்துல்கலாம் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, குளித்து உற்சாகமாக இருக்கும் பண்பை பழகிக்கொண்டார். அதன்பின்னர்தான், அவர் கணிதப் பாட வகுப்புக்குச் செல்லும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டார். “தனது வகுப்புக்கு வரும் மாணவர்கள் காலையில் குளிக்காமல் கணிதப்பாட சிறப்பு வகுப்புக்கு வரக்கூடாது” என கணித ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக அந்தப் பழக்கத்தை பழகிக்கொண்டார் அப்துல்கலாம். இதனால்தான், டாக்டர் அப்துல்கலாம் தனது படிப்பில் மிகுந்த அக்கறையோடு கவனம் செலுத்தத் தொடங்கினார். இளம் வயதிலேயே கற்றுக்கொண்ட இந்த பண்புதான் திட்டமிட்டு செயலாற்றவும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வுகளை செய்துமுடிக்கவும் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.

“எதுவும் எப்படியும் நடந்துவிட்டுப் போகட்டும்” என்று திட்டமிடாமல் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

திட்டமிடாமல் செயல்படுபவர்களின் வாழ்க்கை, துடுப்பு இல்லாத படகைப் போன்று நிலைகுலைந்து போய்விடுகிறது. எனவே, வாழ்க்கையில் வெற்றி காண விரும்புபவர்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாகத் திட்டமிட்டு, தங்களின் எதிர்காலம் பற்றிய செயல் திட்டங்களை உருவாக்கிக்கொண்டு செயல்பட வெண்டும்.

செயல் திட்டங்களை உருவாக்குவது எப்படி? என்பது சிலருக்குப் புரியாத புதிராகவே அமையும். செயல் திட்டங்களை அமைப்பதில் குழப்பம் வரும்போது கீழ்க்கண்ட கேள்விகளை மனதிற்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

  1. இந்தச் செயலை நான் ஏன் செய்ய வேண்டும்?
  2. எப்படிச் செய்ய வேண்டும்?
  3. எப்போது செய்ய வேண்டும்?
  4. செயலில் ஈடுபடுபவர்கள் யார்?
  5. இந்தச் செயலை யாரால் வெற்றிகரமாக செய்துமுடிக்க முடியும்?
  6. செயலைச் செய்வதற்கு எத்தகையச்சூழல் தேவையானதாக அமைகிறது?
  7. செயல் ஏற்படுத்தும் விளைவுகள் எவை?
  8. செயலின் விளைவுகளை எதிர்கொள்வது எப்படி?

இதுபோன்றசில கேள்விகளையெல்லாம் மனதில் எழுப்பி, அந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலைத் தெரிந்துகொண்டால் ‘திட்டமிடுதல்’ எளிதாகிவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்