– 2015 – September | தன்னம்பிக்கை

Home » 2015 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    அவதூறு அவசியமல்ல

    சிறியதாகக் கிளப்பிவிடப்படும் அவதூறு, சிறிது நேரத்தில் எல்லோரிடமும் பரவி விடுகிறது. ஒவ்வொருவருடைய நாவிலும் வளர்ச்சி அடைந்துவிடுகிறது. ஒன்று பத்தாகவும் பத்து நூறாகவும் பரவுகிறது.

    அவதூறு கூறுகின்றவனின் நாக்கு நுனியானது வாளின் முனையைவிட கூர்மையானது. அதில் நஞ்சு உள்ளது. நாக்கு என்னும் கொடுவாளானது ஆறாத காயங்களை உண்டுபண்ணி விடுகின்றது.

    நம்முடைய தரம் உயர உயர நம் மீது எழுப்பப்படும் அவதூறுகளின் தன்மையும் உயர்ந்து கொண்டே செல்லும்.

    அவதூறு கிளப்பி விடுபவர்களுக்கு அது ஒரு விளையாட்டுப் போல இருக்கிறதே தவிர அது ஒரு குற்றமாகத் தெரிவதில்லை.

    அறிவாளிகள் அவதூறு கண்டு அஞ்சுவதில்லை. பிளேட்டோவிடம் ஒருவர் சென்று, “உங்களை மிகவும் கெட்ட மனிதர் என்று ஒருவர் கூறுகிறாரே” என்றார்.

    “அவர் கூறிய கூற்றை ஒருவரும் நம்பாதபடி நான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று மறுமொழி கூறினார் பிளேட்டோ. இவ்விதம் தான் அறிவாளிகள் கூறுவார்கள்.

    நச்சு நாவை நாம் கட்டுப்படுத்த இயலாது. நாம் வாழ்ந்துவரும் நல்வாழ்வானது பிறர் நம்மீது சுமத்தும் அவதூறுகளைத் துச்சமாகக் கருதும் ஆற்றலை அளிக்கும்.

    ஒருவன் உன்னைப் பற்றி அவதூறு கூறும்பொழுது அவன் கூறியது சரியா, தவறா என்று உன் மனசாட்சியிடம் கேள். உன்னுடைய இதயத்தை நீயே ஆராய்ந்து பார்.

    “நீ செய்தது தவறாக இருந்தால் திருத்திக் கொள். நீ செய்தது சரியாக இருந்தால் அந்த அவதூறானது உலகப்போக்கு எவ்வாறு இருக்கிறது என்ற படிப்பினையைத் தெரிந்து கொள்” என்கிறார் ஜோசப் கார்டன்.

    அதனால் அவதூறுகளை விட்டு நம்மை காத்துக் கொள்ள ஒரே வழி நம்முடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்வாழ்வு வாழ்வது தான்.

    மற்றொரு வழியும் இருக்கிறது. நம்மீது எழுப்பப்படும் அவதூறு வீணாக இருந்தால் அதனை துளிகூட பொருட்படுத்தாமல் நம்முடைய கடமையை ஒழுங்காகவும், அமைதியாகவும் செய்து கொண்டே இருப்பது தான்.

    ஏன் என்றால் அவதூறு அற்ப ஆயுள் உடையவை. நாம் சிறிது பொறுமையாக கையாண்டால் காலம் என்னும் அன்னை உண்மை என்ற மகனை ஈன்று எடுப்பாள்.

    அம்மகன் நமக்காகப் போராடி நம்மீது எழுப்பப்பட்ட அவதூறை வெட்டி வீழ்த்திவிடுவான்.

    “அவதூறுகள், யாதொரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தங்களின் நெஞ்சு உறுதியை இழக்கச் செய்யும் வண்ணம் அவ்வளவு கொடுமை வாய்ந்தவைகளாக இருக்கின்றன” என்கிறார் நெப்போலியன்.

    அவதூற்றை விரட்டிப் பிடிக்க முயலும்போது அது வேகமாகப் பாய்ந்து, ஓடி பரவ ஆரம்பித்துவிடுகிறது.

    நம்மீது வீணாகக்கூறப்படும் அவதூறுகளைக் கண்டு நாம் மனத்துயர் அடைந்தால் அவை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பிறருக்கு உருவாக்கிவிடும்.

    அதனால் நாம் மனக்கஷ்டம் அடையவே கூடாது. அதேபோல நாம் அதைக்கண்டு வெகுளவும், வெதும்பவும் செய்தால் தான் அது கிளர்ந்து எழும். இல்லை என்றால் அது அமிழ்ந்து போய்விடும்.

    அவதூறு என்பது ஒரு குளவி. அதனை அடித்துக் கொன்றுவிடலாம் என்ற திடமான நம்பிக்கை இருந்தால் தான் நாம் அதனை எதிர்த்து நிற்க வேண்டும்.

    இல்லையேல் நாம் அதனை எதிர்க்க அது முன்பை விட பல மடங்கு வேகத்துடன் பறந்து விரிந்து விடும். நம்மீது சுமத்தப்படும் வீண் அவதூறுகளைத் துச்சமாகக் கருதி நாம் சும்மா இருந்துவிட்டால் அவை தாமாகவே செத்துவிடும்.

    அவற்றால் நமக்குத் துன்பமும், துயரமும், இழிவும் ஏற்பட்டுவிட்டன என்று காட்டிக்கொண்டால் நாம் அதற்கு உயிர் அளித்துவிட்டோம். அதனை உண்மையாக்கிவிட்டோம் என்று அர்த்தமாகிவிடும்.

    நேர்மை வழியில் செல்லும் நாம் இதற்கு பயப்படத் தேவையில்லை. அவதூறு எந்த அளவு தவறாகவும், நம்ப முடியாதவையாகவும் இருக்கிறதோ அந்த அளவு விரைவாகப் பரவும்.

    “அவதூறுவைப் போன்று வேகமாகப் பரவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதை போன்று ஆவலாகக் கேட்கக் கூடியது வேறில்லை. அதைப்போல நான்கு பக்கங்களிலும் வேகமாகப் பரவக்கூடியதும் வேறு எதுவும் இல்லை” என்று சிசரோ கூறுகிறார்.

    அவதூறுக்கு செவி சாய்த்து உள்ளத்திலே இருப்பிடம் அளிக்காவிட்டால் அவை தாமாகவே மறைந்துவிடும்.

    அவதூறு என்று திருட்டுப்பொருளை தன் காதால் விலைக்கு வாங்குகிறவனும் அந்தத் திருடன் போன்று வெறுக்கப்படத் தக்கவனே ஆவான் என்கிறார் ஜெபர்சன்.

    பிளாட்டஸ் என்ற அறிஞர் கூறுகிறார். “”அவதூறுகளைக் கிளப்பி விடுகிறவர்களை அதனைக் கேட்பவர்களையும் நான் தண்டிக்க விரும்புகிறேன்”.

    முன்னவனைத் தன்னுடைய நாவினால் தூக்கிவிட விரும்புகிறேன். அடுத்தவன் காதில் கேட்டாளே அவனையும் தூக்கிவிட வேண்டும்.

    அதனால் நம்மிடம் யாராவது வந்து அவதூறுகளைப் பற்றி பேச முன்வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டாம்.

    மற்றவர்களின் அவப்பெயரின் புதைக்குழி நம்முடைய காதுகளாக இருக்கக்கூடாது. கேட்க விரும்பாதவன் காதில் யாரும் செய்தியைக் கொண்டு போய் திணிப்பது இல்லை.

    இந்த இதழை மேலும்

    மனதில் உறுதி வேண்டும்

    பள்ளி இறுதித் தேர்வில் கைகள் இரண்டும் ஊனமுற்ற மாணவி தனது கால் விரல்களாலேயே தேர்வு எழுதி சாதித்ததை பத்திரிக்கையில் அண்மையில் பார்த்திருப்பீர்கள்.

    அவரால் மட்டும் அந்த சாதனையைச் செய்ய எப்படி முடிந்தது? எப்படியும் தேர்வு எழுதியே தீருவேன் என்ற மாளாத மன உறுதி இருந்ததால் தானே?

    எதையும் எவரும் சாதிக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதெல்லாம் இது தானோ?

    நாடு மனை இழந்து, நல்லதொரு துணை இழந்து, மகன் இழந்தும் பொருள் இழந்தும் மனதார பொய்யுரையேன் என்று கொண்ட கொள்கையிலிருந்து கொஞ்சமும் விலகாத அரிச்சந்திரனின் மன உறுதி அனைவரும் அறிந்த ஒன்றே.

    இங்கிலாந்து செல்லும் முன் தன் தாயிடம் மது, மங்கை, மாமிசம் ஆகிய மூன்றினையும் மனதால் கூட தீண்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதைச் சற்றும் பிறழாமல் கடைபிடித்த அண்ணல் காந்தியடிகளின் மன உறுதிக்கு ஈடு உண்டோ இன்றளவும்ஙு

    அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து புண்ணிய பாரதம் காக்க விடுதலை வேண்டி தன் இன்னுயிரையே தூக்கு மேடையில் அர்ப்பணித்த வீரன் பகத்சிங்கின் மன உறுதி என்ன மலிவானதொன்றா?

    மன உறுதியை ‘வைராக்கியம்’ என்றும் கூறலாம். சங்கல்பம், தீர்மானம், சபதம் என்றெல்லாம் கூட இதனை அழைக்கின்றோம். ‘வில் பவர்’ என்று ஆங்கிலத்தில் இது அழைக்கப்படுகிறது.

    ஒரு நல்ல தலைமைக்கு தலையாய அம்சம் அவரிடம் காணப்படும் உருக்கு போன்ற மன உறுதியே ஆகும். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும், வெற்றியின் வெளிச்சத்தையே நோக்கும் குணமும், எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் அசாத்திய துணிவும், எத்தகைய விமர்சனங்களுக்கும் ஈடுகொடுக்கும் திறனும் அடிப்படை அம்சங்களாகக் கொண்டது தான் ஒருவரது மன உறுதி எனலாம்.

    நோகாமல் நோன்பு நோற்கிற மனப்போக்கே நம்மிடையே அதிகம் காணப்படுகிறது. அலட்டிக் கொள்ளாமல் ஆதாயம் அடைகின்ற போக்கு அனைவரிடமும் உள்ளது.

    தயக்கமும், காரியம் சொதப்பி விடுமோ என்ற எதிர்மறை எண்ணமும் சேர்ந்து கொண்டு நம்மை செயலற்றுப் போக விடுகிறது. இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு நாம் நினைத்த இலக்கை சென்றடைய நமக்குத் தேவையானது அளவற்ற மன உறுதியும், தியாக மனப்பானமையும் தான்.

    ஊளைச் சதையை குறைக்க மருத்துவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்யச் சொல்கிறார். ஆனால் நமக்கோ அதிகாலை அருமையான தூக்கத்தை இழக்க மனமில்லை. எழுந்து நடந்து செல்ல சோம்பேறித்தனம். விட்டு விடுகிறோம். புலன் வழி இன்பம் வேண்டி கட்டுப்பாடு இல்லாமல் செய்ய வேண்டியதை செய்யாமல் கைவிடுவதால் எதிர் விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியவர்களாகிறோம்.

    காற்று வீசும் திசையினிலே பறப்பதற்கும், ஆறு போகிறபோக்கிலேயே மிதப்பதற்கும், அசாதாரண பலம் தேவையில்லை. எதிர்நீச்சல் போட்டு எதிர்த்து நின்றாலே எதையும் சாதிக்க முடியும். புதுமைகள் உருவாகும். புது வழிகள் புலனாகும்.

    எல்லாம் இழந்த நிலையிலும் இருப்பதை தக்கவைத்துக் கொள்ளும் திறமையைத் தருவது ஒருவரின் மனஉறுதியே ஆகும்.

    தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இனி ஒரு கணமும் தாக்குப் பிடிக்க முடியாது. மூச்சு முட்டுகின்ற நிலை. அத்தருணத்திலும் நம்பிக்கை இழக்காமல், மேலும் ஒரு வினாடியாவது தாக்குபிடித்தாலே போதும். அடுத்த அலை நமக்கு ஆதரவாகவே மாறும்.

    எடுத்த காரியத்தில் எத்தகைய இடர் வரினும், முடித்தே தீருவேன். நில்லேன்; அஞ்சேன் என்று முன்வைத்த காலை பின் வைக்காமல் முழு முயற்சியுடன் முனைந்து நின்று உழைத்திட நம் மன உறுதி துணை நிற்கும்.

    மன உறுதி என்பது எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கும். அதனை மேலும் வளர்த்துக் கொள்வதோ, வியர்த்தமாக்குவதோ அவரவர் கைகளில் தான் உள்ளது.

    மன உறுதி ஒருவரின் மெய் வருத்தக் கூலி தரும். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் இதனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பழக பழக நாளடைவில் அந்தக் குணம் நமது இயல்பாகவே ஆகிவிடும்.

    உண்மையில் ஒருவரது தன்னம்பிக்கையும், சுயக்கட்டுப்பாடும் மன உறுதி எனும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்களே ஆகும்.

    அதிகாலை துயிலெழுதல், உடற் பயிற்சி செய்தல், நேரம் தவறாமை, பணிகளைத் திருத்தமாக முடித்தல், கால நிர்வாகம் போன்றபல நற்பண்புகளின் அடி நாதமாக விளங்குவது ஒருவரது மன உறுதியே ஆகும்.

    அதுபோல தீயப்பழக்கங்களான புகைபிடித்தல், குடிப்பழக்கம், போதையில் புரளுதல் போன்றவைகளை அடியோடு ஒழித்திட பெரிதும் தேவைப்படுவது மனஉறுதி ஒன்றேதான். இல்லையா? இதனால் நமக்கு மிச்சப்படுவது பணம் மட்டுமல்ல. உடல் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

    நல்ல ஆன்மீக நூல்களைப் படித்தல், காந்தி, கலாம் போன்றோர்களின் சுயசரிதைகளை வாசித்தல், மானுடம் தழைக்க தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்த மாமனிதர்களின் வரலாறுகளைப் படித்தல் போன்றவை நமக்கு அளவற்றமன உறுதியை அளிக்க வல்லவை.

    ஆக, எவரொருவரும் வாழ்க்கையில் பிறருக்கு வழிகாட்டும் தலைவராக ஒளிவீச வேண்டுமெனில், அவரது முதல் தேர்வாக இந்த தளராத எதற்கும் கலங்காத மன உறுதி எனும் அருங்குணம் அவசியம் இருக்க வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்

    பிறகுக்குத் துன்பம் நேராமல் நாம் எப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்வது எப்படி என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அழகாகவும், சுவையாகவும் சொல்லப்பட்ட ஒரு சிறுகதையை இங்கு பார்க்கலாம்.

    ஒரு ஊரின் எல்லைப்புறத்தில் பெரிய புற்று ஒன்று இருந்தது. அந்தப்புற்றில்  ராஜநாகம் என்கிற வகையைச் சார்ந்த பாம்பு ஒன்று வசித்தது வந்தது.

    அப்புற்றின் பக்கமாக யார் சென்றாலும் அவர்களை அந்த ராஜநாகம் கடித்துவிடும்.

    அப்பாம்பிடம் மாட்டிக்கொண்டு கடிவாங்கி உயிர்விட்டவர்கள் பலர். உயிர் பிழைத்தவர்கள் சிலர்.

    அப்பாம்பை கொன்றுவிடுவதே ஊருக்கு நல்லது என்று ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி முடிவு செய்தனர். பின்பு, அதைக் கொல்ல வழிமுறைகள் எதுவும் இன்றித் தவித்தனர்.

    ஒரு நாள் அந்த  ஊருக்கு மகான் ஒருவர் வந்தார். அம்மகானிடம் மக்கள் அனைவரும் பாம்பின் மோசமான செயல்களைச் சொல்லி அழுதுபுலம்பினர்.

    ஊரார் அனைவரும் முழுவதுமாக சொன்னதைக் கேட்ட பின்பு, அம்மகான் பாம்பிடம்  சென்று, அதை அழைத்துப்பேசி நல்வழிப்படுத்தினார்.

    இனிமேல் யாரையும் நான் கடிக்கமாட்டேன் என்று பாம்பு மகானிடம் சத்தியம் செய்து கொடுத்தது. பின்பு அந்த மகான் சென்றுவட்டார். அதற்கடுத்த நாள் அப்பக்கம் சென்ற யாரையும் பாம்பு கடிக்கவில்லை. மாறாக மக்களிடம் நல்லவிதமாகப் பழகியது.

    பாம்பினுடைய புதிய இச்செயலைக் கண்ட மக்கள் இனியாரையும் பாம்பு ஒன்றும் செய்யாது என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் கடுமையாகச் சீண்டிப்பபார்த்தனர். நீண்ட  கம்பைக்கொண்டு அதைக் குத்தினர். சின்னச் சின்ன கற்களால் அதை அடித்துக் காயப்படுத்தினார். சில இளைஞர்களும், சிறுவர்களும் அதன் வாலைப்பிடித்து இழுத்து, இழுத்து அடித்து, அடித்து விளையாடினர். நாளுக்குநாள் ராஜநாகத்திற்கு பொதுமக்கள் பலவழிகளிலும் பல்வேறான தொந்தரவுகள் கொடுத்தனர்.

    தொடர்ந்து பல இன்னல்களைப் பாம்பு அனுதினமும் சந்திக்க வேண்டியதாயிற்று. தனது உடல் முழுவதும் ரத்தம் சிந்தி, புண்கள் ஏற்பட்டு, உடம்பு ரணகளமாகி வலியில் துடித்தது. மிகுந்த வேதனையடைந்தது.

    கடும் கோபம் வந்த பொழுதும் கூட தான் செய்து கொடுத்த சத்தியத்தை நினைத்து நினைத்து அதற்குக் கட்டுபட்டு, மிகவும் அமைதியாகவே இருந்து வந்தது.

    அதே போல் ஒருநாள் அம்மகான் ஊருக்கு வந்தார். அப்பாம்பைக் கண்ட அவர் திடுக்கிட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    மரணமடையும் நிலையில் இருந்த பாம்பிற்கு உடனடியாக மருத்துவம் செய்து அதை உயிர்பிழைக்க வைத்தார்.

    அங்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் அனைத்தையும் மகானிடம் பாம்பு எடுத்துச்சொல்லி துயரத்தில் அழுதது.

    இவ்வளவு நடந்தும், உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டும் கூட நீ ஏன் பேசாமல் இருந்தாய்? உன் பிறவிக்குணத்தைக் காட்டியிருக்க வேண்டியது தானே? என்று பாம்பைக் கண்டித்துக் கேட்டார்.

    மகானின் இக்கேள்விகள் அனைத்திற்கும் பதிலாக தான் முன்பு செய்துகொடுத்த சத்தியத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தியது.

    பாம்பின் இந்தப் பதிலை கேட்ட மகான் கடும் கோபமடைந்தார். அட முட்டாள் பாம்பே நீ யாரையும் கடிக்கமாட்டேன், என்றுதானே என்னிடம் சத்தியம் செய்து கொடுத்தாய். நீ படம் எடுத்து காட்டியிருந்தால். உன்னிடம் யாராவது நெருங்கியிருப்பார்களா? உனக்கு இந்தக்கதி வந்திருக்குமா? நீ கோபத்தில் நான் படம் எடுத்து யாரையும் அச்சுறுத்தமாட்டேன் என்ற எனக்கு சத்தியம் செய்து கொடுத்தாய்? அப்படி இல்லையே என்று பாம்பின் சத்தியத்தைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார். அப்பொழுதுதான் பாம்பிற்கு தனது சத்தியத்தைப் பற்றி நன்றாகப் புரிந்தது.

    பின்பு மகான் அங்கிருந்து சென்றுவிட்டார். இனி இன்று யாராவது வருவார்களா என்று பாம்பு காத்திருந்தது. அப்பொழுது சில இளைஞர்கள் பம்பை சீண்டி ரசித்து விளையாட வேண்டும். பொழுது போக்க வேண்டும் என்று பாம்பின் அருகில் வேகமாக வந்தனர். .தனது அருகில் வந்தவர்களைக் கண்டதும் புஸ், புஸ் என்று சீரிப்பாய்ந்தது தனது படத்தை எடுத்து ஒரு சுற்று சுற்றிக் காட்டியது.

    அதைக் கண்ட இளைஞர்கள் வேகமாக திரும்பி ஓட்டம் எடுத்தனர்.

    அன்று முதல் பாம்பும் யாரையும் சீண்டவில்லை. பாம்பையும் யாரும் சீண்டவில்லை. மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் இப்படித்தான் வாழ வேண்டும்.

     

    இந்த இதழை மேலும்

    மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்

    ஏராளமான மர்மங்களும், புதிர்களும் நிறைந்ததுதான் மனிதவாழ்வு, தனி மனிதனின் வாழ்விலும் மர்ம நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது. நேரில் பார்த்து உறைந்து போன சம்பவங்களும் அனுபவங்களும் ஒவ்வொரு தனி நபருக்கும் நிச்சயம் உண்டு. மர்மங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று உள்ளன.

    சமீபத்தில் 221 பயணிகளுடன் மர்மான முறையில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் விமானம் உலகையே திடுக்கிடச் செய்தது.

    உலகத்தின் விடை தெரியாத மர்மப்பகுதி:

    அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி, ப்யூட்டோரி கோ தீவு, பெர்முடா இவற்றின் மும்முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோணம் பகுதி பெர்முடா முக்கோணம் (சாத்தானின் முக்கோணம்) என அழைக்கப்படுகிறது. இப்பகுதிக்குள் இதுவரை மனிதர்களுடன் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான மறையில் காணாமல் போயின. விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. நவீன விஞ்ஞானமோ பெரும் அறிவியலாலர்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத விஷயங்கள் பல. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    பல இடர்பாடுகளைக் கடந்து மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து உயிர் வாழும் போது டைனோசர்கள் மட்டும் பூமியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனது என்பது நீண்ட காலமாக மர்மமாகவே உள்ளது.

    உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் எகிப்து பிரமிட்டின் கட்டுமான ரகசியம் மர்மமாகவே உள்ளது. அந்தக் காலத்தில் பிரமிட்டை யார் வடிவமைத்து இருப்பார்கள் என்பது அதிசயம்.

    தஞ்சை பெரிய கோவிலின் விமானம் 216 அடி உயரமாகும். அதன் உச்சிக்கல் 80 டன் எடை கொண்டது. இவ்வளவு பெரிய கல் விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    இந்தியா முழுவதும் புகழ்பெற்றது டெல்லியில் உள்ள இரும்புத்தூண் ஆகும். 7.21 மீட்டர் உயரம் கொண்ட இந்த இரும்புத்தூண் 1600 வருடங்கள் பழமையானது. இதுவரை துருப்பிடிக்கவில்லை. பழமையான முந்தைய தொழில்நுட்பத்தில் இது எப்படி சாத்தியமானது என்பதே மர்மம்.

    உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக்கலை வர்மக்கலை ஆகும். எதிராளியை சுலபமாக வீழ்த்தும் மர்மம் நிறைந்ததே வர்மக்கலை.

    சிலர் செய்தியை சுற்றிவளைத்து பேசுவார்கள். நேரடியாக தெரிவிக்காமல் மறைமுகமாக தெரிவிப்பது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவர்கள் உண்டு அவர்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மத்தை அறிவுக் கூர்மையுடையவர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.

    மர்மக்கதை:

    வயதானவர் தனியாக ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். வயதாகி விட்டதால் அவரால் வெகு தொலைவு நடக்க இயலாத நிலை. எனவே, இவருக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே வரவழைத்து பெற்றுக் கொள்வது வழக்கம். டோர் டெலிவரி என்பார்களே அதுதான். ஒரு வெள்ளிக்கிழமை அன்று தபால்காரர் தபால் கொடுக்கச் சென்ற போது அந்தக் குடியிருப்பில் ஏதோ சந்தேகத்திடமாக, வழக்கத்திற்கு மாறான மர்ம சூழலை உணர்ந்து கதவு சாவி துவாரம் வழியாக பார்த்தார். உள்ளே வயதான மனிதரின் ரத்தம் தோய்ந்த உடல் காணப்பட்டது. உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சி.ஐ.டி. வந்தார். சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். குடியிருப்புக்கு வெளியே கேட்டில் உள்ள பையில் இரண்டு பாக்கெட் பால் இருந்தது. செவ்வாய்க்கிழமை செய்தித்தாள் உள்ளே கிடந்தது. சில அன்பளிப்புகள், பிரிக்கப்படாத தபால்கள் சில கிடந்தன கொலையாளி யார் என்பதை சி.ஐ.டி கண்டுபிடிக்க தாமதிக்கவில்லை. யார் கொலையாளி? செய்தித்தாள் போடுபவர்தான் கொலையாளி. ஏனெனில் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில்  பேப்பர் மட்டும் போடப்படவில்லை. இது காட்டுகிறது. அவனுக்கு அங்கே படிப்பதற்கு யாருமில்லை என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததே. இது போன்ற புதிர் கதைகளுக்கு வெளிநாடுகளில் வாசகர்கள் ஏராளம்.

    அந்தப்புரத்தில் பல பெண்களை வைத்திருந்த பேரரசர்கள் தங்கள் மனைவி மீது உண்மை காதல் கொண்டிருந்தார்கள் என்றும் நினைவுச் சின்னம் எழுப்பினார்கள் என்பதும் வரலாற்றில் கூறப்படுவது மர்மமே?

    வளர்ச்சியும், முன்னேற்றமும் மர்மங்களற்றது:

    அழகிய புதிர்கள் அடங்கியதே மனித வாழ்வு. ரகசியங்களும், அதிசயங்களும், புரியாத புதிர்களும் துலங்காத மர்மங்களும் நிறைந்து இருந்தாலும் இவைகளுக்குத்தான் ஈர்ப்புசக்தி அதிகமுள்ளது.

    நேற்று நடந்தது வரலாறு. நாளை நடப்புதான் புரியாதது. தெளிவில்லாதது. புதிரானது. நிச்சயமற்றது. வென்றவர் தோற்கலாம். தோற்றவர் வெல்லலாம். சில நாடுகளின் மாபெரும் வளர்ச்சி முன்னேற்றம், மற்றும் சில தனி மனிதர்களின் ஆசூர வளர்ச்சியில் ரகசியம் ஏதும் இல்லை. பார்ப்பதற்கு மர்மமாக தெரியலாம். உண்மையில் திட்டமிட்டு சலிக்காமல் உழைப்பவர்கள் வாழ்வில் உயர்கிறார்கள் இதில் மர்மமேதும் இல்லை. மிகப்பெரிய இலக்குகளை அடைந்தவர்கள் அதைத் தொடுவதற்கு வகுத்த வெற்றிப்பாதைகள்தான் மர்மங்கள் நிறைந்தது.

    ஏராளமான செலவுகள் இருந்தாலும் அதைத் தவிர்த்து விட்டு, பணத்தை சேமிப்பதில் கெட்டிக்காரர்கள் நிறையவே நம் நாட்டில் உள்ளனர். அதுதான் சேமிப்பின் மர்மம். ஏமன் நாட்டில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த அம்பானி 9 வருடங்கள் உழைத்து சேமித்து சொற்ப முதலீட்டில் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது உலகம் வியக்கும் தன்னம்பிக்கையின் மர்மம்.

    போட்ட முதலீட்டை மீளப் பெற முடியாமல் கடனாளியாகி தொழிலை மூடி விட்டு விலகி போனவர்கள் மத்தியில் முதலீட்டை விட பல மடங்கு சம்பாதித்து அசூர வளர்ச்சி பெறும் வணிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்  தனித்தன்மையும் திறமையும்தான் வெற்றியின் மர்மம்.

    இந்தியா ஒரு வளரும் நாடு, ஏழை நாடு என்று எல்லோரும் சொன்னபோது அப்துல்கலாம் மட்டும் வல்லரசாகும் கனவே இந்தியர்களிடையே விதைத்தார். விருப்பம், ஆசை, வெறி, கனவு இவையாவும் செயல் வடிவம் பெற்றால் நிச்சயம் வெற்றிதான். வறண்ட வறுமைப் பாலைவனத்தில் அலைந்து திரிந்தவர்கள்தான் இன்று வற்றறாத ஜீவநதியாய் வளம் கொழிக்கும் வாழ்வை அனுபவிப்பவர்கள். சம அளவு திறமையுடையவர்கள் கூட சம அளவில் பணம், புகழ், வெற்றி பெறுவதில்லை. வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்தான் வேறுபாடுகள் மர்மங்கள் அடங்கியுள்ளது.

    நல்ல குடும்ப பின்னணி, வசதி, படிப்பு, வாய்ப்பு, திறமை, அதிர்ஷ்டம் ஆகியவை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. சர்வதேச அளவில் கிளைகள் பரப்பி உரிமையாளராக இருக்கும் தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் மர்மங்கள் புதிர்கள் ஏதுமில்லை. வெற்றிக்கான வழிமுறைகளை கண்டறிவதுதான் சாதுர்யம்.

    இவ்வுலகில் நான் யார்? என்ற தன்னையே கேட்டுக் கொண்டவர்கள்தான் காலம், நேரம், உறக்கம், ஓய்வு, உணவு, கேளிக்கை, உல்லாசம் என அனைத்தையும் தியாகம் செய்து ஓயாது உழைத்தவர்கள்தான் இன்று வல்லமை மிக்கவர்களாக மாறினார்கள்.

    ஒரு நல்ல வேலை கிடைக்காதா? என ஏங்குபவர்கள் நிறைந்த நாட்டில்தான் நூறு பேருக்கு வேலை கொடுப்பவராக மாற வேண்டும் என கனவு காண்பவர்களும் உள்ளனர். ஆங்கிலவழிகல்வி பயின்று தமிழ் எழுத தடுமாறும் தமிழர்கள் மத்தியில், தமிழ்வழி பயின்று ஆங்கிலத்தில் சிறப்பாக பேசவும், எழுதவும் வல்லவர்களாக சிலர் மாறுகிறார்கள். ஆர்வம் முயற்சியில்தான் மர்மம் அடங்கியுள்ளது.

    நம் குறைபாடு என்ன? என்பதை பற்றி பலர் சிந்திப்பதில்லை. குறைகளே இல்லாத மனிதர்கள் கிடையாது. இருக்கவும் முடியாது மாத சம்பளம் வாங்கி பணக்காரர்களாகி விட முடியுமா? நல்ல அணுகுமுறை வெற்றியின் ரகசியமாக உள்ளது. குட்டையோ தேங்கிக் கிடக்கிறது. நதி உற்சாகமாகி பெருகி ஓடுகிறது. நாட்டை வளப்படுத்துகிறது. பலப்படுத்துகிறது. ஏற்றத்திற்குப்பின் ஆணவத்தால் சரிந்தவர்கள் உள்ளனர். சரிவுக்குப்பின் புதுப்பிறவி எடுப்பவர்களும் உள்ளனர். வளர்ச்சியும், முன்னேற்றமும் கூட்டு முயற்சியின் அற்புத விளைவுகளே. அதில் மட்டும் விடா முயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை தவிர புதிர்களோ, மர்மங்களோ இல்லவே இல்லை.

    இந்த இதழை மேலும்

    பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்

    அண்மையில் தமிழகத்தின் பிரபலமான டெலி ஷாப்பிங் நிறுவனத்தில் பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன்,

    பயிற்சி வகுப்பின் ஓர் அங்கமாக – நல்ல புத்தகங்கள் எப்படி ஒரு மனிதனின் மூளையை ஆற்றலை செயலுள்ளதாக ஆக்குகிறது என்று விளக்கி கொண்டிருந்தபோது  ஒரு தோழர் எழுந்து  “சார், எனக்குப் புத்தகம் படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை. காலை முதல் மாலை வரை அலுவலகத்திலும், மாலைக்கு மேல் வீட்டிலும், விடுமுறை  நாட்களில் உறவினர்களிடமும், நண்பர்களிடமும், திரை அரங்கிலும் பொழுது போய்விடுகிறது. இதில் எங்கிருந்து படிப்பதற்கு நேரம்? என்றார்.

    பலரது எண்ணமும் அதை ஒட்டியே இருக்கிறது.

    வாழ்வில் நமக்கு இருக்கும் குடும்பச் சூழ்நிலை, சமுதாயம் சார்ந்த வாழ்வு முறை, சுய விருப்பு பெறுப்பு – நமது வாழ்வின் முன்னேற்றத்துக்கு என்னதான் தேவை என்ற சுய தெளிவு இல்லாத தன்மை போன்ற பல விஷயங்கள் நம்மை புத்தக உலகுக்குள் இருக்கும் இனிமையை, ரம்மியத்தை ஆனந்தத்தை அறிய விடாமல் தடுக்கிறது.

    ஆனால் மறுபக்கம் சில மனிதர்களைப் பாருங்கள்!

    உங்கள் சக ஊழியர்கள், நண்பர்கள் – ஒரு புத்தகத்தைப் பற்றி, எழுத்தாளனைப் பற்றி, கவிஞனைப் பற்றி, விற்பனையில் சாதனை புரிந்துவரும் ஒரு சுய முன்னனேற்றப் புத்தகத்தைப் பற்றிப் – பேசும்போது !

    உங்களைப் போலவே தான் இவரின் வாழ்வு முறையும் இருக்கிறது!  இதிலே இவருக்கு மட்டும் புத்தகங்களைப் படிக்க எங்கே நேரம் இருக்கிறது? சிந்தியுங்கள்.

    கவியரசு கண்ணதாசனைப் பற்றி பேசுவோர்  அவரின் சிறந்த படைப்பு எது என்று கேட்டால் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்பார்கள்

    சரி!  – புத்தக தொகுப்பு உன்னிடம் இருக்கிறதா ? படித்திருக்கிறாயா? என்று கேட்டால் படிக்க நேரமில்லை, கேள்விபட்டிருக்கிறேன் என்றுதான் அநேகம் பேர் சொல்வார்கள்.

    ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்  என்று ஒரு கருத்து உண்டு !

    அப்படி பல ஆயிரம், நண்பர்களை நாம் பெறுவதற்கு  நம் தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல், புத்தகங்களைப் படிப்பதற்கு சில எளிய முறைகளை வழிகளை கூறுகிறேன்.

    குறித்துக் கொள்ளுங்கள், இவை மிக மிக எளிமையானது!  சுலபமானது !

    (செய்து பாருங்கள்  உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றிக் காட்டும் மாபெரும் பொக்கிஷம் இது !)

    புத்தக இடைவேளை :-

    தொலைக்காட்சியில் வரும் “விளம்பர இடைவேளை” மாதிரி – உங்களுக்குள் ஒரு “புத்தக இடைவேளை” விட்டுக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் வீண் அரட்டை அடிக்கும் நேரம் வீட்டில் தேநீருக்காகக் காத்திருக்கும் அந்த 10 – 15 நிமிடங்கள் என்று ஒரு நாளைக்கு சிறிது நேரம் ஒதுக்கி – அந்த நேரத்தில் புத்தகங்களின் சில பக்கங்களைப் புரட்டுங்கள்.

    சமூக வலைதளம் :-

    சமூக வலைதளங்களில் முகநூலில் உங்களின் புகைப்படம் மாற்றும் பொழுது லைக்ஸ் போடுவதற்கு ஆகும் நேரத்தை புத்தகங்களில் திருப்புங்கள் கணினியில் விளையாடும் நேரமும் புத்தகங்களுக்காக ஒதுக்கலாம்.

    தொழில் நுட்பம் :-

    விஞ்ஞானம் பெருவாரியாக வளர்ந்துவிட இந்தக் கால கட்டத்தில், உங்கள் லேப்டாப்பில் மின் புத்தகங்களைப் படிக்கலாம் !

    பேருந்து, ரயிலில் பயணக்கும் நேரம் லேப்டாப்பில் மின் புத்தங்களைப்  படிக்கலாம். காரில் பயணக்கும் போது ரேடியோ, சி.டி சினிமா பாட்டுக்கள் கேட்பதற்கு பதில் ஒரு ஆடியோ புத்தகத்தைக் கேட்கலாம் !

    நண்பனைக் கண்டுபிடி :-

    பேனா நண்பர்கள் மாதிரி புத்தக நண்பர்களைக் கண்டு பிடியுங்கள்!  இருவரும் ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படித்து, அதன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

    இரவு நேரம் :-

    உறங்கு முன் சில பக்கங்களைப் படிப்பது உத்தமம். கணவனும் மனைவியுமாக ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து  சேர்ந்து படியுங்கள். அது உங்கள் அன்யோன்யமான நேரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.

    புத்தக தேதி :-

    பிறந்தநாள், திருமண நாள், போல  மாதத்தில் ஒரு தேதியை புத்தகத்திற்கான தேதியாக ஒதுக்குங்கள். எப்படி பிறந்த நாளுக்கும், திருமண நாளுக்கும்  உங்கள் அலுவலக நடவடிக்கைகள் பாதிக்காமல் இதுவரை பார்த்துக் கொண்டீர்களோ அல்லது பார்த்துக் கொள்ள முடிகிறதோ  அதே போல இந்த நாளாலும் முடியும் பயப்படாதீர்கள் !

    காலைக் கடன் :-

    உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன். காலை தினசரிக்கு பதிலாக – ஒரு புத்தகத்துடன் உள்ளே செல்லுங்கள்.

    சில பக்கங்களாவது படியுங்கள் !

    முயற்சித்துப் பாருங்கள் !  24 மணி நேரத்தில், பல பல மணித்துளிகள் ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கு, ரசிப்பதற்கு, உங்களுக்கு கிடைக்கும்.

    அடுத்த மாத இதழில்  உங்களுக்கு சில சவால்களைத் தருகிறேன்.

    புத்தக சவால்கள் !

    இந்தச் சவால்கள், உங்களை ஒரு தேர்ந்த புத்தகப் படிப்பாளியாக மேம்பட்ட ரசிகனாக ஆக்கும் !

    சவாலுக்குத் தயாராகுங்கள் !

    அடுத்த மாதம் சிந்திப்போம் !

    இந்த இதழை மேலும்

    சத்தும் சக்தியும்

    நம் உடலின் நிலையான தன்மைக்கு சத்தும், ஓடிக்கொண்டிருக்கும் உயிருக்கு சக்தியும் நிலையாகக் கிடைத்தால் ஆரோக்கியம் நிலைக்கும். இந்த இரண்டில் எது நிலை மாறினாலும், நம் நிலைமை மாறிவிடும். அதேபோல், நம் உடல் உயிர் இயக்கத்தின் வெளிப்பாடுதான் மனம். அந்த மனதின் அடித்தளமாக ஆனால் மனதாலும் மற்றும் எதனாலும் பாதிப்படையாத ஆன்மா நிலைக்கொண்டிருக்கிறது. நாம் நம் உடல் மற்றும் மனத் தன்மைகளைக் கடந்து உள் சென்றால் ஆன்மாவைக் காணலாம். அதற்கு நம் உடலும் மனமும் எதனிலும் சிக்காமல், அதாவது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆக, இங்கும் நம் உடலைக் காக்க சத்தும் உயிரின் நிழலான மனதை செம்மையாக்க சக்தியும் தேவை. ஆக, இந்த இரண்டு இன்றியமையாத தன்மைகளை இனிப் பார்ப்போம்.

    சத்துணவு: இன்றைய இரசாயன வேளாண்மைக் காலத்தில் நமக்கு கிடைக்கும் உணவுகள் அனேகமாக சத்துக்கள் குறைந்தும் விஷங்கள் மிகுந்துமே இருக்கின்றன. இந்தப் பற்றாக்குறைகளை ஈடு செய்யவே நாம் துணைச் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நம் உடலின் வலிமையை நிலை நாட்ட ஹார்மோன் மற்றும் நொதிகளைச் சுரக்கச் செய்ய எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட சமச்சீர் புரதம், நம் உடலின் அனைத்து உயிர் வேதிவினைகளும் முழுமையாக நிகழத் தேவையான உயிர்ச் சத்துக்கள் மற்றும் தாதுச் சத்துக்கள், நம் உடலின் ஆக்கச் செயல்களை மூளையும் நரம்பு மண்டலமும் மேற்பார்வையிட ஒமேகா-3 கொழுப்பும், அடிப்படையாகத் தேவை. மற்றும் நம் இதயம் சிறக்க கோ என்சைம் க்யூ 10 மற்றும்  இயற்கை கால்சியம், சதை ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம், நரம்பு சிறக்க ஜின்சங், கண்கள் சிறக்க லுட்டின் மற்றும் கரோட்டின், கணையம் சிறக்க வெனாடியம் மற்றும் சிறுகுறுஞ்சான் தாவரச் சத்து, கல்லீரல் சிறக்க மில்க் திசில் மற்றும் டாண்டிலியான் தாவரச் சத்து, இரத்தம் சிறக்க போலிக் அமில இரும்புச் சத்து, எலும்பு வலுவாக இப்ரிபிலாவோன் மற்றும் கால்சியத்தாது, மூட்டு கூழ் சுரக்க குளுக்கோஸமைன் தாவரச் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எக்னீசியா தாவரச் சத்து ஆகியன நம் உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

    சக்தி மருத்துவம்: நம் அன்றாட வாழ்வில் எற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு ஆற்றல் அளக்கும் சக்தி மருத்துவங்களை பார்த்துக்கொள்ளலாம். ஹோமியோ மருந்துகளான ரஸ் டாக்ஸ் (Rus tox), நக்ஸ் வோமிக்கா (Nux vomica), நேட்ரம் முர் (Natrum mur), காந்தாரிஸ் (Cantharis) மற்றும் ஏபிஸ் மெல் (Apis mel) ஆகின நம் உடலின் விஷக்கழிவுகளை வௌயேற்ற உதவும். அதேபோல், ஹோமியோபதியில் ஜின்சங் (Ginseng) என்ற மருந்து உடல் மற்றும் விந்து நாதத்தை வளமாக்கும், சைனராரியா மரிட்டிமா (Cineraria maritima) கண்களையும், முலன் ஆயில்  (Mulen oil)  காதுகளையும் வளமாக்கும் ஹோமியோ மருந்துகளாகும். அதே போல் புண்கள் விரைவாக ஆற காலண்டுலா (Calendula) களம்பு மிகவும் உதவியாக இருக்கும். மலர் மருந்துகளல் செர்ரி பிளம்  (Cherry plum) சுரம் மற்றும் உடல் வலியை குணமாக்கும், ராக் ரோஸ் (Rock rose) சளயை வௌயேற்றும், ரெஸ்கிவ் ரெமடி (Rescue remedy) பேதி மற்றும் ஆபத்துகளலிருந்து காக்கும், ஹார்ன் பீம் (Horn beam) உடல் வலிமையைக் கொடுக்கும், சென்டாரி (Centaury) உடல் பலவீனத்தைப் போக்கும், வைட் செஸ்நட் (White chestnut) ஹார்மோன் கோளாறைப் போக்கும், கிளைமேட்டிஸ் (Clematis) மயக்கத்தைப் போக்கும், ஸ்கிலராந்தஸ் (Scleranthus) உடல் சோம்பலைப் போக்கும், அக்ரிமோணி (Agrimony) மன அழுத்தத்தைப் போக்கும் மற்றும் கிராப் ஆப்பிள் (Crab apple) உடற்கழிவு நீக்கி தோல் நோய்ப் போக்கும். அப்புறம் வாரம் ஒரு முறைசக்தி ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து நம் உயிராற்றலை சக்தியாக்கிக் கொள்ளலாம். இதில் சக்தி ஸ்தலத்தின் கருவறைக்குள் பழம் தேங்காயை அனுமதிப்பதைவிட நம்மை அனுமதிக்கும் ஸ்தலங்களுக்குப் போய் வருவது மிகவும் நல்லது. உதாரணமாக, சாய் பாபா கோவில், ஈசா தியானலிங்கம், ஜிவ சமாதியான ஸ்தலங்கள், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா.

    இந்த இதழை மேலும்

    ஓட்டம்

    முன் கதை சுருக்கம்

    முதல் கட்டுரைக்கே, ஏன் முன் கதை சுருக்கம் போடப்பட்டு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். இக்கட்டுரை ப்ளெட்க்… ப்ளெட்க்… என்ற சத்தத்தோடு ஆரம்பித்து அது நிற்கும்போது முடிந்த ஒன்று… என்ன இது சத்தம். அதை உச்சரிக்கவே முடியவில்லையே! என்பவர்கள், டென்னிஸ் மேட்ச் நடக்கையில் ராக்கெட் கொண்டு பந்தை அடிக்கின்ற சத்தத்தை மனதில் நினைத்துக் கொள்ளலாம். அந்தச் சத்தம் அப்படியானது. தொடர்ந்து நான்கு மணி நேரம் ஓடியது. ரோஜர் ஃபெடரரும் ஜோகோவிச்சும் பிச்சு உதறிய மேட்ச் அது. விம்பிள்டன் 2015 போட்டி. அதில் முதல் சர்வீஸின் பொழுது எழுத ஆரம்பித்து கோப்பை கொடுக்கும்பொழுது முடிந்த கட்டுரை. இந்தக் கட்டுரை உண்மைகளை ஒட்டியிருந்தாலும் பெயர் மாற்றம் செய்து கற்பனைகளைச் சேர்த்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஓட்டமும் நடையுமாக விறுவிறுப்பாக ஓடுகிற இந்தக் கட்டுரையின் வேகத்திற்கு காரணம் இது ஒரு “ரோல்லர் கோஸ்டர்” போட்டி என்று அடுத்த நாள் இந்து நாளிதழில் வந்திருந்த ஸ்போர்ட்ஸ் பேஜ் படித்தபோது தெளிவானது. பின் நவீனத்துவம் (போஸ்ட் மாடர்னிஸம்) என்கின்ற தத்துவம் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தபட்டு உள்ளது. கட்டுரை உணர்வுபூர்வமானது. புரிந்து கொள்ள முடியவில்லையே என்று நினைக்கின்றவர்கள்… புரிந்து கொள்ள எதுவுமில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டுகின்றோம். நிறையப்பேர் உணர்ந்து கொள்ளப் போகின்றோம் என்கின்ற நம்பிக்கையில், ப்ளெட்க்… சர்வீஸ் ஆரம்பம்.

    செல்ஃபோன், வாட்ஸ் அப், ட்விட்டர் யுகத்தில் இந்தக் கட்டுரையை ஒருமுறை நீங்கள் படிக்க ஆரம்பித்ததற்கே அனேக நன்றிகள். அப்படியே கொஞ்சம் முன்னும் பின்னுமாக, டென்னிஸில் ரீ-ப்ளே போடுவது போல திரும்பத் திரும்ப (இரண்டு முறை மட்டுமாவது) படித்தீர்களானால் (கொஞ்சம் ஓவராக எதிர்பார்க்கவில்லைதானே) பாயிண்ட் !!  கிளியராக (சேலஞ்சில்… தெரிவது போல்) தெரியும்…

    2015 ஆம் ஆண்டின் விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டி ஃபெடரருக்கும், ஜோகோவிச்சுக்கும் இடையே அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்கின்றது. முதல் செட்டை செர்பியாவின் இளைய ஜோகோவிச் எடுத்து கொள்ள இரண்டாம் செட்டை ஃபெடரர் கைப்பற்றுவதற்குள் விஜய், சித்தார்த், சசி என மாமாவும் மருமகன்களும் பலமுறை ஆச்சரியச் சத்தங்களை எழுப்புவதும் குதிப்பதும் உருளுவதுமாக ஞாயிற்றுக்கிழமை உருண்டு ஓடிக்கொண்டிருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் அந்தந்த கணங்களில் வாழச் செய்கின்றன. விம்பிள்டனில் ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இலண்டன் மாநகர் வாழ் முக்கியப் புள்ளிகள் அமர்ந்து காணும் அதே நிகழ்வு நமது வீட்டு வரவேற்பரையிலும் ஓடிக் கொண்டிருப்பது ஒரு காவியம் தானே என்று விஜய்க்கு தோன்றியது.

    விளையாட்டு வெற்றி, தோல்வியை பழக்கப்படுத்துகிறது. ரோஜர் ஃபெடரரை மூன்று பேருமே ஆதரித்த பொழுதும் ஜோகோவிச்சின் வேகம் அவரை இரண்டு செட்டுக்களுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. புள்ளிவிவரங்கள் சேரசேர சுவாரஸ்யம் சேர்ந்து கொண்டே போனது. மூன்று செட்டின்  முடிவில் மழை தூற… மைதானம் மூடப்பட்டது. இரண்டு மூன்று நாட்கள் பயணித்து காத்திருந்து பார்க்கும் பார்வையாளர்கள் ஆவலுடன் மேலும் காத்திருந்தனர்.

    அதுவரை சுமார் மூன்று கிலோமீட்டர்கள் ஓடி இருப்பார்கள் என புள்ளி விவரம் கூறியது. மழைவர காத்திருக்கும் மக்களும் வானத்தையே பார்ப்பார்கள் என நினைவு வந்தது. சென்றாண்டு விம்பிள்டனிலும் இதே வீரர்கள் மோதியதும், அதில் ஜோகோவிச் மயிரிழையில் வெற்றி பெற்றதும் 2014 சாம்பியன் ஆனதும் வரலாறு. முன்னதாக செரினா வில்லியம்ஸ் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று வரலாறு படைத்ததை கண்டிருந்தனர்.

    ஓட்டம் உடலை வலுப்படுத்துகின்றது. பொதுவாக விஜய் தினந்தோறும் மூன்று கிலோமீட்டர்கள் ஓடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அதனால் வருடக்கணக்கில் மருத்துவரை சந்திக்காமல் விலகி ஓடிக் கொண்டிருக்க இயல்கின்றது என்றால் மிகையாகாது. ஓடுவதற்காக அவரது காலணிகள் எந்த ஊருக்குப் போனாலும் பெட்டிக்குள் முதலிடம் பிடித்துவிடுகின்றன. காலையில் ஓடுவது மாலையில் ஓடுவதைக் காட்டிலும் நிச்சயத்தன்மை நிறைந்ததாகவே இருக்கின்றது. மாலை நேரங்களில் அலுவலகப் பணியோ? அல்லது திடீர் நண்பர் வருகையோ தள்ளிப்போட வைத்துவிடும். ஆனால் அதிகாலைகள் விஜயை தந்தை கைவிடுவதேயில்லை.

    முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் தவறவிடப்படும். ஆனால் சமீப காலத்தில் ஓடுவதற்கு முன்பு 20 நிமிட தியானமும் மூச்சுப்பயிற்சியும் செய்வதால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்குரிய மன கட்டுப்பாடு கிடைத்திருக்கின்றது. எனவே நண்பர்கள் வியக்கும் வண்ணம் ஓட முடிகின்றது. விஜயின் நிறைய வழிகாட்டிகளில் இவ்வாறு தவறாமல் தினந்தோறும் ஓட வழிகாட்டுபவர் ஒரு ஐம்பது வயதையும் தாண்டிய ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் விசுவரூபம் எடுத்து விஜயின் ஓட்ட வாழ்க்கையை மனதில் பதியச் செய்தார்.

    முதன்முறையாக பத்து கிலோ மீட்டர் ஓடுகையில் “ஓடுவதற்கு தகுந்த உடல் தேவையில்லை. அதற்கு மனம் தான் தேவை”. என்று கூறியிருந்தார். காலை தவறாமல் எழுவதற்கு ஊக்கம் உள்ள மனது தேவைப்படுகின்றது. உற்சாகம் நிறையவே தேவைப்படுகின்றது. விளையாட செல்ல, உடன் விளையாடுபவர்கள் வேண்டும். அது எல்லா விளையாட்டின் பலம் மற்றும் பலவீனம் ஆகும். ஆனால் ஓடுவதற்கு ஒரு பாதை மட்டுமே போதும். சில நண்பர்கள் சாலையில் ஓடுபவர்கள். அதில் தூசு, புகை, விபத்து, நாய்கள், கடின தரை என்று பலவித சிக்கல்கள் உள்ளன.

    ஒரு வழியாக உலகில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ரோஜர் ஃபெடரர் எட்டாவது விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டம் பெறுவதை ஜோகோவிச் 7-6,  6-7, 6-4, 6-3 என்கிற கணக்கில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடி தடுத்துவிட்டார். ஜோகோவிச் வென்ற, செய்தி, ஃபெடரரை நேசித்து, அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய மூவரின் உள்ளங்களிலும் ஒரு மெல்லிதான கசப்பு சுவையை பூசியிருந்தது. வாழ்க்கை ஓட்டத்தில் மேடுபள்ளங்கள் வரும்பொழுது இத்தகைய கசப்புணர்ச்சியோடு அவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டியதுதான். உலகின் வரலாற்று பின்னணியில் நமது வாழ்வின் நிகழ்ச்சிகளை நினைவு கொள்ள வேண்டும் என்றால், நாம் விளையாட்டு நிகழ்ச்சிகளால் ஆணி அடித்தது போல நினைவுகொள்ள முடிகின்றது. அதாவது உலக வரலாற்று சுவற்றில் நம் நினைவு புகைப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டும் ஆணி – இத்தகைய ஓட்டங்கள்.

    அதே தருணத்தில், இன்னொரு சேனலில் இந்தியா ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியும் ஓடிக்கொண்டு இருந்தது. நிறைய மேட்சுகள் நடப்பதாலும், அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் செய்திகளாலும் கிரிக்கெட் பார்ப்பதையே விஜய் குறைத்து விட்டிருந்தார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற 2011 மற்றும் இந்தியா  பாகிஸ்தான் சார்ஜா வெற்றிகள் அதைத் தொடர்ந்து கல்லூரி ஹாஸ்டல்களில் கிளம்பி கூட்டமாக ஓடிக் களித்த சந்தோஷங்கள் என விளையாட்டுக்களும் ஓட்டங்களும் உடம்புக்குள் செலுத்திய அட்ரீனலின் அளவுகள் என்ன? அதன்மூலம் வளர்ந்த ஆரோக்கியம் என்ன? வெற்றி தோல்விகளை சமமாக அலட்சியப்படுத்தக் கற்றுக் கொடுத்த நிச்சயமற்ற விளையாட்டு இரசிகத்தன்மை மற்றும் ஆர்வத்தால் கிடைத்த மன உறுதியின் எல்லை என்ன? என்று தனித்தனியே அளந்தறிந்து விட முடியுமா? என்ன?

    கல்லூரியிலே, ஊசிப் புற்கள் முழங்கால்கள் வரை முளைத்த கிரவுண்டிலே பல இரவுண்டுகள் ஓடிவிட்டு அந்த வியர்வை வாசனையோடே கிரிகர் ஜோகன் மென்டலின் ஜெனிடிக்ஸையும் வாட்சன் அனட் கிரிக்கின் டி.என்.ஏ ஏணியில் ஏறியிறங்கி சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியடைந்த பாடத்திட்டங்கள் பலப்பலவாகும். ஓட்டம் படிப்பதற்கான உத்வேகம் அளிக்கின்றது.

    விஜய் கால்நடை மருத்துவக்கலலூரியில்  முதலாண்டில் கால்பந்து விளையாடுகையிலேயே சீனியர்களால் கிரீன் ஹவுஸூக்கு ரிலே ஓட கண்டெடுக்கப்பட்டான். அவன் தன்னால் ஓட முடியாது என்று தன்னை அறியாமல் அச்சத்தால் சொல்லிப் பார்த்தான். “ஏன்! கால் பந்தாட்டத்தில் அவ்வளவு ஓடுகின்றாயே, இதில் ஓட முடியாதா”, என்று கேட்டனர். “முன்னே ஒரு பந்து ஓடுவதாக கற்பனை செய்துகொள்” என்ற நக்கலாக, இறக்கிவிட்ட சீனியர்கள் – விஜயின் பிற்கால வாழ்வையே வேகமாக ஓடும்… ஓடுதளத்திற்கு மாற்றுவதற்கு உதவியவர்கள் என்று இருபத்தி இரண்டு வருடம் கழித்து இப்பொழுதும் விஜய் நினைவு கூறுகின்றான்.

    பச்சை மர ஆணி பதிவு போல பலநாள் ஓட்டப் பந்தயங்களில் ஒவ்வொரு திருப்பமும் ஞாபகம் உள்ளது. உற்சாக மிகுதியான தருணங்களில் நடக்கும் நிகழ்வுகள் பசை போட்டு மனத்திரையில் ஓட்டப்பட்டுவிடும் போல, பத்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் விஜயை வெல்ல வேண்டும் என்று 24 இரவுண்டுகள் ஓடியபிறகு இருபத்தைந்தாவது இரவுண்டில் அளவுகடந்த வேகம் எடுத்த ஒரு வருட ஜூனியர் ஹைபோகிளைசீமியாவால் நாமக்கல் அரசினர் மருத்துவ மனûயில் சேர்க்கப்பட்டு அவன் பக்கத்திலேயே “இவனை இந்த நிலைமைக்கு இழுத்துச் சென்றது நமது ஓட்டம் தானே. ஒரு வேளை விட்டுக் கொடுத்திருக்கலாமோ?”, என்று குற்றஉணர்ச்சியோடு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதியம் வரை அமர்ந்திருந்து திரும்ப அழைத்து வந்தது இன்னும் மனதில் மாட்டிய குளுக்கோஸ் பாட்டில் போல மெல்லிய ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது.

    கரிகாலன் கல்லூரியில் ஓடிய ஓட்டம் இன்னும் காலங்காலமாக பிசகாமல் அச்சுப் போல், பதிவாகி இருக்கின்றது. ஓடும்பொழுது பெரிய பெரிய காலடிகளாக தள்ளி வைத்து ஓடாமல் சினிமாவில் ஃபாஸ்ட் பார்வேடு செய்வதுபோல ஓடுவது கரிகாலன் ஸ்டைல்.

    ஐநூற்றி தொன்னூற்றி இரண்டாவது திருக்குறள் வாழ்க்கையில் ஒருவரிடத்திலே உள்ளது என்று ஏதாவதொன்றை சொல்ல வேண்டுமானால் “அது ஒன்றே ஒன்றுதான் அது தான் நல்ல மனம்’ என்று சொல்லி இருக்கின்றார். இடைவிடாத கால ஓட்டத்திலே, ஏற்படும் ஏமாற்றங்கள், கவலைகள், தோல்விகள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காலையில் ஓடினால் போதும்… அவை தானாகவே கழன்று விழுந்து விடுகின்றன. ஓடி முடிக்கும்பொழுது அடுத்த சிக்கல்களை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்றதொரு முடிவுக்கு வந்துவிட முடிகின்றது. இப்படி வருடக் கணக்கில் ஓடுவதால் பல வருட இளையவர்களும் ஒரே மாதிரி தம்மோடு பழகும் வண்ணம் விஜய் வயதை வருடத்திற்கொரு முறை குறைத்துக் கொண்டு இருந்தார். பல இளையவர்கள் இவரோடு ஓடும்பொழுது மூச்சு வாங்கி ஜகா வாங்கியுள்ளனராம். ரன்கீப்பர் என்கின்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஒரே, வாரத்தில் இருமுறை பத்து கிலோமீட்டர் ஓடி பதிவு செய்தபோது சித்தார்த் தனது வாழ்வில் ஒரு மைல்கல்லை கடந்தாய் உணர்ந்தான்.

    சித்தார்த் சசி, இராஜராஜன் மூவரும் சுமார் பதினெழு வயது இளையவர்கள். இராஜராஜன், “மாமா, உன்னிடம்தான் நான் உற்சாகமாக வாழ என்ன செய்யவேண்டும்”, என்று கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஏனென்றால் நீதான் எப்போ பாரு செம ஜாலியாக இருக்கின்றாய்!” என்று போன் செய்தது தான் இந்தக் கட்டுரை ஓடியதன் ஆரம்பம்… இராஜராஜனுக்கு மட்டும் இன்னும் வேலை சரிவர அமையவில்லை என்று புலம்பினான். வருகிற வேலையை சரி செய்து அமைத்துக் கொள். பின்னர் வழி தெரியும் என்றார் விஜய். கூடவே… “மாப்ள.. நிச்சயமின்மையை காதலிடா, வாழ்க்கையை அதன்போக்கில் எடுத்துக் கொண்டு ஓடத்துவங்குடா ? ஒவ்வொரு அடியிலும் அடுத்த அடிக்கு வழி தெரியும், என்றார் விஜய் …

    இன்னும் ஓடும்

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்

    இளைஞர்களே, நீங்கள் தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள். அந்தத் தன்னம்பிக்கை உங்கள் வாழ்வில் புதுமையை மட்டுமல்ல, பசுமையான வாழ்க்கையை நல்கும்; ஒளிந்துகொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, விழித்துக் கொண்டு வெல்வதே வாழ்க்கை.

    இளைஞர்களே, நீங்கள் ஒன்று நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை என்பது உங்களிடம் வளர்ந்துள்ள களைகளைப் பிடுங்கி, தூக்கி எறிந்துடும்.

    அந்தக்களைகள் தான் இல்லாமை, இயலாமை, வெல்லாமை என்னும் ஆமைகள் மனந்தளராமையிடம் தோற்றுவிடுகின்றன.

    நல்வாய்ப்புகளைத் தவறவிடுபவன் தன் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவன். உன்னைத் தேடி வருகிற நல்வாய்ப்பை நாளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நம்பிக்கையே வாழ்வின் வழி. அவநம்பிக்கையே வாழ்வின் வலி! என்பதை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

    இளைஞனே, மனம் ஆர்ப்பரித்தால், நிம்மதியைத் தொலைத்துவிடும். அமைதியான மனமே சாதிக்கும். இதனை என்றுமே நீ மறந்துவிடக் கூடாது.

    வரும் நல்ல வாய்ப்புக்களை வரவேற்கத் தெரியாதவன், தன் வாழ்க்கையில் தோல்விகளோடே தேங்கிப் போகிறான். இதற்கொரு நல்ல பழமொழி ஒன்று உண்டு. அதுதான், கனவுகள் கருகிவிடாது நம் நம்பிக்கைகள் நொறுங்கிடாத வரையில்…!

    நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தான் வாழ்வில் ஏணிகள். அதுவே வாழ்க்கையின் தோணிகள் ஆகும்.

    வெற்றிக்கான காலத்தை யாராலும் எளிதில் முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் வெற்றியின் வடிவங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. இந்த நேரத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது.

    “முழு ஈடுபாட்டோடு கூடிய முயற்சியே வாழ்வின் புதிய விடியலுக்கான துவக்கம்” என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    நம்மைப்பற்றி நாமே தாழ்வாக எண்ணிக்கொண்டால், நமது வாழ்க்கையின் வளர்ச்சியும், வளமும் குன்றும்.

    இலட்சியத் தீப்பந்தம் கைக்கொண்டு ஓடுபவர்கள், பிரச்சனை சூறாவளிகளைக் கடந்த பின்னரே, வெற்றி எனும் ஒளிவிளக்கை ஏற்றமுடிகிறது. உங்கள் வாழ்க்கையில் தோன்றும் சறுக்கல், தோல்விகள், சோதனைகள் உங்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெற்றிக்கும், குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளியை உழைப்பால் நிரப்ப, நாம் பழகிக் கொள்வோம். வாழ்க்கையில், ஒவ்வொரு வெற்றியும், தோல்விகளைப் பின் தொடர்ந்து வந்தே, உழைப்பின் விலாசத்தைக் கண்டு கொள்கின்றன. எந்தவொரு பணியைச் செய்தாலும் ஆர்வத்தைக் காட்டி, ஆர்வத்தோடு அதை அரவணைத்திட வேண்டும்.

    ஆர்வம் வளர்ச்சியைத் தரும். கர்வம் வீழ்ச்சியைத் தரும்! எனும் வைர வரிகளை மறந்துவிடக் கூடாது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு இவைகளை எல்லாம் துடுப்பாக்கிக் கொண்டால், நம் வாழ்க்கை என்றென்றும் வசந்தம் தானே!

    இளைஞர்களே, நீங்கள் என்றுமே…

    “நிமிர்ந்து நில்லுங்கள்! நிலவே உங்கள் நெற்றிப் பொட்டாகும்”

    கடந்த காலச் செருப்புகளைக் கழற்றி எரிந்துவிட்டு, எதிர்காலத்திற்கான இறகுகளைச் சேகரியுங்கள். உங்களின் வெற்றி உலாவிற்கென வானங்களின் விதானங்களே விரிவு அடையும். நடந்தவற்றையும், கடந்தவற்றையும் கட்டி மூட்டைகளாகப் போட்டுவிட்டு உங்கள் முகவரியை உலகிற்கு அறிவிக்கும் வழியினைத் தேடுங்கள். ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் அடிப்படையானது அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கை மட்டுமே.

    உண்மையாய் உழைப்போம்! உழைத்து உயர்வோம்! உயர்ந்து உயர்விப்போம்!

    இன்பமும், துன்பமும் தொடர்கதை. அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் என்றுமே தோல்வி கிடையாது.

    தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கற்கள். பட்டுத் தெளிந்து, அறிந்து, புரிந்து, பலப்படிகள் கடந்து, பயனுள்ளவர்களாக வாழ்ந்து, வளர்ந்து, வழிகாட்டியாய் இருந்து வெற்றி வாகை சூடுங்கள் இளைஞர்களே…

    இந்த இதழை மேலும்

    அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?

    அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

    திறன் அறிந்து தேர்ந்து கொளல்

    அறத்தின் தன்மைகளையும், எது நன்மை தரும், எது தீமை என அறிந்துள்ள அனுபவம் பெற்ற முதிர்ந்த அறிவுடையவர்களின் நட்பினை ஆராய்ந்து தேடி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

    பேணித் தமராக் கொளல்

    கற்றறிந்த அனுபவமிக்க பெரியோர்களை விரும்பி, பேணி ஆலோசகராக தேடிப் பெற்றுக் கொள்ளுதல் பெறுதற்கரிய பேறுகளுக்கெல்லாம் அரிதான பெரும் பேறு ஆகும்.

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

    வன்மையுள் எல்லாம் தலை.

    தன்னைவிட பெரியவர்களை, அறிவுடையவர்களை, அனுபவம் பெற்றவர்களை, எல்லாக் காரியங்களுக்கும் தனக்கு துணையாக இருக்குமாறும், ஆலோசனை தருபவராகவும் வைத்துக் கொள்ளுதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமையாகும் – திருக்குறள்

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது அற்பதமான பாடலிலே கடவுளுக்கும் தமக்கும் ஒரு கற்பனையான கேள்வி பதில் நிகழ்ச்சி பற்றி அழகாக ஒரு கவிதை தந்திருக்கிறார்.

    பிறப்பு என்றால் யாதெனக் கேட்டேன் பிறந்து பார் என்று இறைவன் சொன்னான்; அன்பு என்றால் யாதெனக் கேட்டேன் அளித்துப் பார் என்று இறைவன் சொன்னான்; படிப்பு என்றால் யாதெனக் கேட்டேன் படித்துப் பார் என்று இறைவன் சொன்னான்; அறிவு என்றால் யாதெனக் கேட்டேன் அறிந்துப் பார் என்று இறைவன் சொன்னான்; மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன் மணந்துப் பார் என்று இறைவன் சொன்னான்; பாசம் என்றால் யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பார் என்று இறைவன் சொன்னான்; இறப்பு என்றால் யாதெனக் கேட்டேன் இறந்து பார் என்று இறைவன் சொன்னான்; அனுபவித்து அறிவதே அறிவு எனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்;.

    ஆண்டவன் சற்று அருகில் வந்து மெல்லச் சிரித்து ஒன்றை சொன்னான் அனுபவமே நான்தான் என்றான்.

    அனுபவம்தான் ஆண்டவன் என்று கவியரசு சொல்லி முடிக்கிறார்.

    அனுபவங்கள் அத்தனையிலும் ஆண்டவனைக் காண முடியும் என்பார்கள்.

    படிப்பறிவை விட பட்டறிவு மேலானது. நாலும் தெரிந்தாலும் நல்லது கெட்டதை நாலு பேரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கிராமத்திலே சொல்வார்கள். “”நீங்கள் பட்ட துன்பத்தைவிட நீங்கள் பெற்ற அனுபவம் சிறந்தது என்பார்” – விவேகானந்தர்

    ஆயிரம் புத்தங்கள் தருகிற அறிவை விட ஒரு அனுபவம் தருகிற பாடம் மேலானது. என்னதான் படிந்திருந்தாலும் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் ஒரு நிறுவனத்தை நடத்தி செல்வதிலே இவருக்கு இணை யாரும் இல்லை என்றும், மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், நிர்வாக மேலாண்மையில் உயர்ந்த படிப்பையும் உயரிய விருதையும் பெற்று இருந்தாலும், தலைமைப் பொறுப்பிலே இருந்தாலும் குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினராக இருந்தாலும், எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு முக்கியமான ஏதாவது ஒரு பிரச்சனையில் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிற வாய்ப்பு ஏற்படும். இந்த இக்கட்டான நேரங்களில் அறிவார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அருமருந்தாக அமையும் என்பது முற்றிலும் உண்மையானது.

    அரசுக்கு, நிர்வாகத்தில் முடிவு எடுக்கிற அமைச்சர்களுக்கும் கூட அவருக்கு கீழ் பணிபுரிகிற அனுபவமிக்க ஐஅந அதிகாரிகள் ஒரு பிரச்சனைக்கு நான்கு ஐந்து தீர்வுகளை முன் வைப்பார்கள். அதனால் உண்டாகிற நன்மை தீமைகளையும் விவரிப்பார்கள். எது சிறந்தது என்று தீர்மானிக்கிற முடிவு அமைச்சரைச் சார்ந்தது. அங்கேயும் அனுபவசாலிகளின் ஆலோசனைகள் நல்ல முடிவுகளுக்கு காரணமாக அமைகின்றது.

    வெ. இறையண்பு எழுதிய கிழக்கத்திய நாட்டுப்புறக் கதை ஒன்று இதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ஒரு நாட்டின் குறுநில மன்னர் ஒருவன் அரச கட்டளை ஒன்றை இடுகிறார். எந்த பணியும் செய்ய இயலாத முதியவர்களை ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில், திரும்பிவர முடியாத பகுதியில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என்ற உத்தரவு அது, வேலை செய்ய முடியாதவர்களுக்கு எதற்கு வீண் செலவு என்பது அந்த மன்னரின் கருத்து.

    அவரது அமைச்சரவையில் மந்திரி ஒருவர் தன் பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவர்களை ஒதுக்குப் புறமான இடத்திற்கு அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. எனவே தன் வீட்டில் பாதாள அறை ஒன்றை அமைத்து அங்கே அவர்களுக்கு உணவும் கொடுத்து யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்தார்.

    ஒரு நாள் அரசவையில் ஒரு பூதம் தோன்றியது. அரசரைப் பார்த்து “நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டும். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாகி விடும்”. அரசர் முதலில் குழம்பினார். பிறகு தன் மந்திரிகள் அனைவரும் புத்திசாலிகள் என்பதால் அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டார்.

    முதல் கேள்வி

    பூதம், 2 பாம்புகள் உள்ள கூடையை முன் வைத்து “இதல் எந்த பாம்பு ஆண்? எந்த பாம்பு பெண்? என்று கேட்டது. அரசனும், மந்திரிகளும் பதில் கூற முடியாமல் விழித்தார்கள். பெற்றோரை பாதாள அறையில் வைத்திருந்த மந்திரி மட்டும்  இதற்கான பதிலை நாளை சொல்கிறேன் என்றார்.

    வீட்டிற்கு சென்று தன் தந்தையிடம் அந்த கேள்வியைச் சொன்னார். அடுத்த நிமிடமே அந்தப் பெரியவர்,

    “ஒரு மென்மையான கம்பளத்தின் மீது இரண்டு பாம்புகளையும் வை எந்த பாம்பு உடனடியாக நகர்கிறதோ அந்த பாம்பு ஆண் பாம்பு நகராமல் இருப்பது பெண் பாம்பு” என்கிறார் மந்திரிக்கு மகிழ்ச்சி.

    மறுநாள் அரசவைக்கு வந்து மந்திரி சொன்ன பதிலை அரசர் கூறினார். பூதம் அந்த பதிலை ஒப்புக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டது.

    பூதம் ஒரு சந்தனக் கட்டையைக் கொடுத்து “இதில் எது அடிப்பகுதி என்றது?” மறுநாள் “தண்ணீரில் இதைப் போட்டால் எந்த பகுதி அதிகமாக முழ்கிறதோ அதுவே அடிப்பகுதி” என்று சரியான பதில் கிடைத்தது.

    ஒரே அளவுள்ள இரண்டு குதிரைகளில் “எது தாய், எது மகள் என்று எப்படி கண்டு பிடிப்பது? என்று கேள்வி வந்தது”.

    “அவை இரண்டுகளுக்கும் குறைவான தீவனத்தை ஒரே இடத்தில் கட்டிப்போட்டுக் கொடு. எந்தக் குதிரை இன்னொரு குதிரை சாப்பிட ஏதுவாக தீவனத்தை அதன் பக்கம் தள்ளுகிறதோ அதுவே தாய் குதிரை”. பதிலை பூதம் ஒத்துக் கொண்டது.

    அடுத்தக்கேள்வி “எலும்பும் தோலுமான அசிங்கமான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி இவனைக் காட்டிலும் பாவம் செய்தவர்கள் உலகில் உண்டா? என்றது.

    அந்தக் கடினமான கேள்விக்கும் மறுநாள் விடை வந்தது. யார் சுயநலத்துடனும், பேராசையுடனும் இருக்கிறார்களோ யார் ஞானிகளின் மேன்மையை உணராமல் இருக்கிறார்களோ யார் தன் பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் பாசத்தோடு பணிவிடை செய்வில்லையோ அவர்கள் இவனை காட்டிலும் பாவம் செய்தவர்கள் என்ற பதில் வந்தது.

    அடுத்த கேள்வி “ஒரு கோப்பை தண்ணீர் கடல் அளவைக்காட்டிலும் அதிகமானது எது” என்று பூதம் கேட்டது? அடுத்த நாள் பதில் முளைத்தது.

    மிகுந்த கருணையுடனும், தூய மனத்துடனும், மரியாதை கலந்த பாசத்துடன், வயதான பெற்றோர்களுக்கோ, நோயாளிகளுக்கோ கொடுக்கப்படும் ஒரு கோப்பை நீர் கடல் அளவைக்காட்டிலும் பெரியதாக கருதப்படும்.

    பூதம் எல்லா பதிலையும் ஒப்புக் கொண்டு அவர் அரசாட்சி செழிக்க வாழ்த்து சொல்லி திரும்பிச் சென்றது. மன்னர் தலை தப்பியது. மன்னர் உயிருக்கு வந்த ஆபத்து நீங்கியது.

    மறுநாள் மாறுவேடம் பூண்ட அரசர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் மறுநாள் விடை கோரும் மந்திரி யாரிடம் கலந்து ஆலோசிக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு வேவு பார்த்தார்.

    மந்திரி பாதாள அறையில் தன் பெற்றோரை வைத்திருப்பதையும் அவரிடமிருந்தே அத்தனை விடைகளையும் கேட்டுப் பெற்றியிருப்பதையும் அறிந்து கொண்டார். தனது தலை அந்த மூத்த பெற்றோர்களின் அனுபவ அறிவாலும் புத்தி கூர்மையாலும் காப்பாற்றப்பட்டது என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி பெருக்கு அதிகரித்தது.

    அடுத்த நாளே அந்த அரசர் பெற்றோர்களையும், அனுபவசாலிகளையும் அவரவர் வீட்டில் வைத்து பாராமரிக்க வேண்டுமென்ற ஆணை பிறப்பித்தார்.

    அனுபவ அறிவு சரியான தீர்வைக் கொடுக்கும். அனுபவங்கள் கொடுத்த வலியால்தான் சரியான வழியும் கிடைக்கும். எந்த பிரச்சனைக்கும், எந்த சிக்கல்களுக்கும் அறிவார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனையும், அறிவுரையும் கேட்டுப் பெறுவது நன்மை பயக்கும். அனுபவங்களின் மகோன்னதம் ஆனந்தங்களின் பரிபூரணமாகும்.

    முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பு இலார்க்கு இல்லை நிலை

    முதல் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லை அதுபோல தன்னை தாங்கும் அறிவார்ந்த அனுபவசாலிகளின் துணை இல்லாதவர்க்கு எந்த நிலைபேறும் இல்லை என்று வள்ளுவர் சொல்வது அனுபவ உண்மையாகும். ஆயிரம் கோடி பொன் பெறும் வார்த்தையாகும்.

    ஆகவே நாம் எல்லோரும் அறிவார்ந்த அனுபவசாலிகளுடைய அறிவுரையை சிக்கலான நேரத்திலே கேட்டுப் பெற்று பின்பற்றுவதால் மட்டுமே சரியான தீர்வும், பலனும் கிடைக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    இந்த இதழை மேலும்

    எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு

    எழுத்து என்பது காகிதம் வரைந்த கன்னமல்ல; இதயம் வரைந்த எண்ணம்; வியர்வையின் வெளிச்சம்; நம்பிக்கையின் விருட்சம்; கண்ணீரின் ஓவியம்; கவிதையின் காவியம்; எழுத்து அழகை ஆராதிக்கும் அங்க வடிவங்கள்; தங்கக் கிரீடங்கள்.

    எழுத்து என்பது பேனாவின் கசிவல்ல; அது உயிர். காலப்பேனாவின் உயிர்த்துடிப்பே எழுத்து. எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும் தெய்வம் என்றான் பாட்டுப்புலவன் பாரதி. எழுத்தறிவித்தவன் தானே இறைவன். எழுத்து விடுதலைக்கு வித்தாகவவும் யுகப்புரட்சியின் சொத்தாகவும் வெடித்துக் கிளம்பியவை. அரசையும், அரசாங்கத்தையும் திசைமாற்றம் செய்தவை எழுத்துக்கள். பல அரசுகள் எழுந்ததும், வீழ்ந்ததும் இந்தப் பேனா முனையில்தானே! மனித வரைந்த புனிதக் கோபுரம் எழுத்து.

    “பள்ளிக்கூடத்தில் உன்னைச் சேர்ப்பது பற்றி நான் சிந்திக்கவில்லை அங்கே நிகழ்வது எழுத்துக்களின் கட்டாய அறிமுகம்தான். வாழ்க்கையை வாசிக்க நீ தெருவுக்குத்தானே திரும்பி வரவேண்டும்” என்று இன்றைய எதார்த்தத்தோடு எள்ளி நகையாடுகிறார் கவிப்பேரரசு.

    ‘அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்’- மண் சார்ந்த வாழ்க்கை தானே நம் வாழ்க்கை. மண்ணும் பெண்ணுமில்லாமல் இருந்தால் இந்த பூமி அழகாகவா இருக்கும்? இரண்டும் வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியவை தானே! அதுபோல எழுத்தையும் எண்ணியெண்ணி படைக்க வேண்டும்; பருக வேண்டும்; பாரோரின் பார்வையையும் அதற்குள் பதிக்க வேண்டும்.

    பாலைவனத்தில் பயணிக்கிறான் ஒருவன் தாகம் தணிக்கதண்ணீர் தேவைப்படுகிறது. அதோ தூரத்தில் ஒரு சிறு குடிசை அங்கே கையால் அடிக்கும் கைபம்பும், தண்ணீர் பிடிக்கும் குவளையும் கிடந்தது. குவளையில் கொஞ்சம் தண்ணீரும் இருந்தது. குவளையை எடுக்க குனிந்தவனின் கண்ணில்பட்ட அட்டையில் இப்படி எழுதப்பட்டிருந்தது. ‘தோழா! இந்தக் குவளையில் உள்ள தண்ணீரை அருகிலே உள்ள பம்பிலே ஊற்றி அடித்தால் அதில் தண்ணீர் வரும். தாகம் தணிக்குமளவு குடித்துவிட்டு இதே குவளையில் மீண்டும் தண்ணீரை நிரப்பி விட்டுச் செல்!

    குவளையில் இருக்கும் தண்ணீரைக் குடித்து தாகம் தீர்க்க எண்ணியவன், தண்ணீரைப் பம்பில் ஊற்றி அடித்தபின் தண்ணீர் வரவில்லை என்றால் என்ன செய்வது? மனசுக்குள் மையம் கொண்டது கேள்வி. ஆனால் மனசாட்சி பேசியது. ‘தண்ணீர் வந்துவிட்டால், நாமும் குடித்து, நம்மைப்போல் தாகத்தோடு தவித்து வருபவர்களுக்குத் தண்ணீரும் கிடைக்குமே! நம்பிக்கைதானே வாழ்க்கை என்று  நினைவுகளில் நீச்சலடித்தவாறே பம்பிலே தண்ணீரை ஊற்றினான். கொட்டியது தண்ணீர்; தணிந்தது தாகம். மீண்டும் குவளையில் தண்ணீரைக் கொட்டி வைத்தான்; நம்பிக்கை கொடுத்த அட்டை வாசகத்தை அடிமனதில் நட்டுவைத்தான்.

    நல்ல செயல்கள் நம்மோடு மட்டும் நிற்காமல் காலத்தின் கைகளில் அது கட்டாயம் சேர்க்கப்படும். மரம் நடுபவன் தனக்கும் மட்டுமே நிழல் தர வேண்டும் என்றா நட்டு வைத்தான்? மழை தனக்கு மட்டுமே பொழிய வேண்டும் என்றா அதன் வேர்களுக்கு சொல்லி வைத்தான்? இயற்கைத்தாய் எல்லோருக்கும் சேர்த்தே மழையை பொழிகிறாள்; இதயம் நினைக்கிறாள். இப்படி வாழ்க்கையை ஒரு புரிதலோடு நேசித்தால் சிகரத்தில் சிம்மாசனம் நிரந்தரமாய் கிடைக்கும். இப்படி ஏராளமான எழுத்துக்கள் வாழ்க்கை வழிநெடுக பயணத்தில் தாராளமாய் கொட்டிக் கிடக்கிறது. தேவையானதை எடுப்போம், சிகரத்தை பிடிப்போம்.

    “நல்லவர்களை காப்பதற்காகவும் தீயவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை காப்பதற்காகவும் நான் யுகம் யுகமாக தோன்றுவேன் என்று எழுத்து வடிவமாய் வந்து கீதையில் எழுந்து நிற்கிறது.

    ஓரிடத்தில் கவிஞர் வாலி, “”சாக்கடையில் விழுந்தாலும், சந்தனத்தில் விழுந்தாலும் எதுவுமே ஓட்டிக் கொள்ளாமல் உள்ளது உள்ளபடியே எழுந்து வருகிறது என்னுடைய நிழல்” என்று எழுத்தின் மகிமையை எதார்த்தத்தில் நின்று வாதாடுவார்.

    ஜி.யூ-போப் தான் எழுதுகிற கடிதத்தில் திருவாசகத்தைப் பற்றி முதலில் எழுதிக் கொண்டிருக்கும்போதே திருவாசகத்தில் ஆய்ந்து தோய்ந்து உருகும்போது கண்ணீர் சிந்துகிறார். கண்ணீர் திட்டில் எழுத்துக்கள் மறைந்திருப்பதைப் பார்த்து இறுதியில் போப் ஒரு குறிப்பு எழுதி வைக்கிறார். அதில் தன் எழுத்து மறைந்தாலும் மறு கடிதம் திருத்தி எழுத மனம் வரவில்லை என்கிறார். அவர்தம் கல்லறையின் வாசகத்தில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது அன்னைத்தமிழின் இலக்கிய வளமையை அடையாளம் காட்டுவதாகவே, கல்லறையின் வாசகங்கள் செம்மாந்து நிற்கும்படி தீட்டப்பட்டிருக்கிறது.

    குற்றாலம் அருகில் தென்காசியில்-பராக்கிராம பாண்டியன் கல்வெட்டில் “பின்னோர் காலத்தில் சிதிலம் அடைந்த கோவிலின் கல்லை எவனொருவன் ஒன்றாக்கி வைக்கிறானோ அவனின் பாதம் நோக்கி வணங்குகிறேன்” என்று எழுதப்பட்டதிலிருந்து தமிழர்களின் எதிர்கால கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதை தீர்மானிக்க முடிகிறது. காலம் கடந்தாலும் சில எழுத்துக்கள் நம் உள்ளத்திலும் கல்வெட்டாய் நிலைத்து நிற்கிறது.

    கதாசப்தசகி-தெலுங்கு இலக்கியத்தில் பொருள் தோடச் சென்ற கணவன் பல நாட்கள் கடந்தும் வரவில்லை. வீடோ பொத்தற் குடிசை; அழும் பிள்ளைக்குக் கூட பாலுட்ட இவள் உடம்பில் தெம்பில்லை. இப்போது கவிதையாய காட்சி விரிகிறது.

    “ஒழுகும் குடிசையில்

    மழை நீரிலிருந்து

    உன் குழந்தையை

    தடுத்து விட்டாய்

    உன்

    கண்ணீரிலிருந்து

    எப்படி குழந்தையை

    தடுப்பாய்?”

    வறுமையைக் கூட எழுத்து எப்படி கையாள்கிறது என்பதற்காய் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதையை இறக்கி வைத்திருக்கிறேன்.

    நாஸ்ட்ர டாமஸ் பிரான்ஸ் நாடு தந்த தீர்க்கதரிசி. எதிர்காலம் எப்படி இருக்கும்? மூன்றாம் உலகப்போர் எப்போது மூளும்? முன்கூட்டியே சொல்வதில் வல்லவர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் 110 மாடிக்கட்டிடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் என்பதை அவர் 450 ஆண்டுகளுக்கு முன்னே எழுதி வைத்தவர்.

    நூல்நிலையமே இவரின் வசிப்பிடமுமாக வாசிப்பிடமாகவே இருந்தது. இவரின் திருமண வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தன்னுடைய மரணத்தைக்கூட முன்கூட்டியே அறிந்தவர். அறிந்தவாறே மரணமும் மடி தழுவியது. அவரின் விருப்பப்படியே அவருடைய உடலை செங்குத்தாக (நிற்பதுபோல்) புதைத்தனர் அவர் 62 ஆண்டுகளும் 6 மாதமும் வாழ்ந்தார். “இழிவான எவரும் என்மீது நடந்து செல்லக் கூடாது” என்று கல்லறையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. பிரெஞ்சு புரட்சியின்போது 1713-ல் அவருடைய கல்லறையைத் தகர்த்து, அந்த தீர்க்கதரசியின் மண்டை ஓட்டை வெளியே எடுத்து, அதில் ஒருவன், மண்டை ஓட்டில் மதுவை ஊற்றிக் குடித்தான். அந்த நொடியில் எங்கிருந்தோ ஒரு துப்பாக்கிக்குண்டு மதுவை குடித்தவனின் உயிரைக் குடித்தது.

    மீண்டும் இவர் எலும்புகளை சேகரித்து புதைத்தார்கள். புதிதாக ஒரு கல்லறையும் எழுப்பப்பட்டது. எதிர்காலம் பற்றிய குறிப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை கொடுப்பவையாகவும் இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதற்கு ஏற்றாற்போல் அர்த்ததங்கள் கற்பிக்கப்படுகின்றன என்று ஐ.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

    “இழிவான எவரும் என் மீது நடந்த செல்லக்கூடாது” என்ற கல்லறை எழுத்து வாழ்ந்து முடிந்தபின்னும் வரலாறாய் எழுந்தே நிற்கிறது. ஒரு கவிதையில், ‘மரணம் வந்து கதவைத் தட்டும் நாளில் நீ என்ன செய்வாய்? என்று கேள்வி கேட்டு, வந்த விருந்தாளியின் முன்னே வட்டில் நிறைய என் வாழ்க்கையைப் பரிமாறுவேன். வெறுங்கையுடன் திரும்ப விட மாட்டேன் என்ற பதிலும் சொல்லியிருப்பார். பாரதி”, காலா, என் காலருகே வாடா! உன்னை காலால் எட்டி உதைக்கிறேன்’. என்ற கனல் கக்கும் கவிதை விருட்சங்களாய் நிற்கின்றன.

    எழுதும் போது காரல் மார்க்ஸ் இறந்தார்; கவிதை எழுதும் போது தாகூர் இறந்தார்; நடிக்கும்போது தியாகி விசுவநாததாஸ் இறந்தார்; போராடும்போது திருப்பூர் குமரன் இறந்தார் இப்படி … இப்படி ….

    இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்ற எழுத்துக்கள் சுதந்திரம் பற்றி சொல்லி வைத்தது. “உறுதியான நூறு இளைஞர்களைத் எனக்குத் தாருங்கள். நான் தேசத்தை மாற்றிக் காண்பிக்கிறேன். சுவாமி விவேகானந்தரின் எழுத்து மின்னலும், முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை அப்துல் கலாமின் ‘இந்தியா வல்லரசு’ என்ற கனவும் நினைவாகும் எண்ணத்தில் எழுத்தை வணங்குவோம்; எழுதுகோலைத் தொழுவோம். சிகரம் ஏறி சிம்மாசனம் பிடிப்போம்.

    இந்த இதழை மேலும்