Home » Articles » அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?

 
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?


ராமசாமி R.K
Author:

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல்

அறத்தின் தன்மைகளையும், எது நன்மை தரும், எது தீமை என அறிந்துள்ள அனுபவம் பெற்ற முதிர்ந்த அறிவுடையவர்களின் நட்பினை ஆராய்ந்து தேடி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்

கற்றறிந்த அனுபவமிக்க பெரியோர்களை விரும்பி, பேணி ஆலோசகராக தேடிப் பெற்றுக் கொள்ளுதல் பெறுதற்கரிய பேறுகளுக்கெல்லாம் அரிதான பெரும் பேறு ஆகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.

தன்னைவிட பெரியவர்களை, அறிவுடையவர்களை, அனுபவம் பெற்றவர்களை, எல்லாக் காரியங்களுக்கும் தனக்கு துணையாக இருக்குமாறும், ஆலோசனை தருபவராகவும் வைத்துக் கொள்ளுதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமையாகும் – திருக்குறள்

கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது அற்பதமான பாடலிலே கடவுளுக்கும் தமக்கும் ஒரு கற்பனையான கேள்வி பதில் நிகழ்ச்சி பற்றி அழகாக ஒரு கவிதை தந்திருக்கிறார்.

பிறப்பு என்றால் யாதெனக் கேட்டேன் பிறந்து பார் என்று இறைவன் சொன்னான்; அன்பு என்றால் யாதெனக் கேட்டேன் அளித்துப் பார் என்று இறைவன் சொன்னான்; படிப்பு என்றால் யாதெனக் கேட்டேன் படித்துப் பார் என்று இறைவன் சொன்னான்; அறிவு என்றால் யாதெனக் கேட்டேன் அறிந்துப் பார் என்று இறைவன் சொன்னான்; மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன் மணந்துப் பார் என்று இறைவன் சொன்னான்; பாசம் என்றால் யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பார் என்று இறைவன் சொன்னான்; இறப்பு என்றால் யாதெனக் கேட்டேன் இறந்து பார் என்று இறைவன் சொன்னான்; அனுபவித்து அறிவதே அறிவு எனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்;.

ஆண்டவன் சற்று அருகில் வந்து மெல்லச் சிரித்து ஒன்றை சொன்னான் அனுபவமே நான்தான் என்றான்.

அனுபவம்தான் ஆண்டவன் என்று கவியரசு சொல்லி முடிக்கிறார்.

அனுபவங்கள் அத்தனையிலும் ஆண்டவனைக் காண முடியும் என்பார்கள்.

படிப்பறிவை விட பட்டறிவு மேலானது. நாலும் தெரிந்தாலும் நல்லது கெட்டதை நாலு பேரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கிராமத்திலே சொல்வார்கள். “”நீங்கள் பட்ட துன்பத்தைவிட நீங்கள் பெற்ற அனுபவம் சிறந்தது என்பார்” – விவேகானந்தர்

ஆயிரம் புத்தங்கள் தருகிற அறிவை விட ஒரு அனுபவம் தருகிற பாடம் மேலானது. என்னதான் படிந்திருந்தாலும் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் ஒரு நிறுவனத்தை நடத்தி செல்வதிலே இவருக்கு இணை யாரும் இல்லை என்றும், மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், நிர்வாக மேலாண்மையில் உயர்ந்த படிப்பையும் உயரிய விருதையும் பெற்று இருந்தாலும், தலைமைப் பொறுப்பிலே இருந்தாலும் குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினராக இருந்தாலும், எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு முக்கியமான ஏதாவது ஒரு பிரச்சனையில் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிற வாய்ப்பு ஏற்படும். இந்த இக்கட்டான நேரங்களில் அறிவார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அருமருந்தாக அமையும் என்பது முற்றிலும் உண்மையானது.

அரசுக்கு, நிர்வாகத்தில் முடிவு எடுக்கிற அமைச்சர்களுக்கும் கூட அவருக்கு கீழ் பணிபுரிகிற அனுபவமிக்க ஐஅந அதிகாரிகள் ஒரு பிரச்சனைக்கு நான்கு ஐந்து தீர்வுகளை முன் வைப்பார்கள். அதனால் உண்டாகிற நன்மை தீமைகளையும் விவரிப்பார்கள். எது சிறந்தது என்று தீர்மானிக்கிற முடிவு அமைச்சரைச் சார்ந்தது. அங்கேயும் அனுபவசாலிகளின் ஆலோசனைகள் நல்ல முடிவுகளுக்கு காரணமாக அமைகின்றது.

வெ. இறையண்பு எழுதிய கிழக்கத்திய நாட்டுப்புறக் கதை ஒன்று இதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு நாட்டின் குறுநில மன்னர் ஒருவன் அரச கட்டளை ஒன்றை இடுகிறார். எந்த பணியும் செய்ய இயலாத முதியவர்களை ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில், திரும்பிவர முடியாத பகுதியில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என்ற உத்தரவு அது, வேலை செய்ய முடியாதவர்களுக்கு எதற்கு வீண் செலவு என்பது அந்த மன்னரின் கருத்து.

அவரது அமைச்சரவையில் மந்திரி ஒருவர் தன் பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவர்களை ஒதுக்குப் புறமான இடத்திற்கு அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. எனவே தன் வீட்டில் பாதாள அறை ஒன்றை அமைத்து அங்கே அவர்களுக்கு உணவும் கொடுத்து யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்தார்.

ஒரு நாள் அரசவையில் ஒரு பூதம் தோன்றியது. அரசரைப் பார்த்து “நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டும். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாகி விடும்”. அரசர் முதலில் குழம்பினார். பிறகு தன் மந்திரிகள் அனைவரும் புத்திசாலிகள் என்பதால் அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டார்.

முதல் கேள்வி

பூதம், 2 பாம்புகள் உள்ள கூடையை முன் வைத்து “இதல் எந்த பாம்பு ஆண்? எந்த பாம்பு பெண்? என்று கேட்டது. அரசனும், மந்திரிகளும் பதில் கூற முடியாமல் விழித்தார்கள். பெற்றோரை பாதாள அறையில் வைத்திருந்த மந்திரி மட்டும்  இதற்கான பதிலை நாளை சொல்கிறேன் என்றார்.

வீட்டிற்கு சென்று தன் தந்தையிடம் அந்த கேள்வியைச் சொன்னார். அடுத்த நிமிடமே அந்தப் பெரியவர்,

“ஒரு மென்மையான கம்பளத்தின் மீது இரண்டு பாம்புகளையும் வை எந்த பாம்பு உடனடியாக நகர்கிறதோ அந்த பாம்பு ஆண் பாம்பு நகராமல் இருப்பது பெண் பாம்பு” என்கிறார் மந்திரிக்கு மகிழ்ச்சி.

மறுநாள் அரசவைக்கு வந்து மந்திரி சொன்ன பதிலை அரசர் கூறினார். பூதம் அந்த பதிலை ஒப்புக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டது.

பூதம் ஒரு சந்தனக் கட்டையைக் கொடுத்து “இதில் எது அடிப்பகுதி என்றது?” மறுநாள் “தண்ணீரில் இதைப் போட்டால் எந்த பகுதி அதிகமாக முழ்கிறதோ அதுவே அடிப்பகுதி” என்று சரியான பதில் கிடைத்தது.

ஒரே அளவுள்ள இரண்டு குதிரைகளில் “எது தாய், எது மகள் என்று எப்படி கண்டு பிடிப்பது? என்று கேள்வி வந்தது”.

“அவை இரண்டுகளுக்கும் குறைவான தீவனத்தை ஒரே இடத்தில் கட்டிப்போட்டுக் கொடு. எந்தக் குதிரை இன்னொரு குதிரை சாப்பிட ஏதுவாக தீவனத்தை அதன் பக்கம் தள்ளுகிறதோ அதுவே தாய் குதிரை”. பதிலை பூதம் ஒத்துக் கொண்டது.

அடுத்தக்கேள்வி “எலும்பும் தோலுமான அசிங்கமான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி இவனைக் காட்டிலும் பாவம் செய்தவர்கள் உலகில் உண்டா? என்றது.

அந்தக் கடினமான கேள்விக்கும் மறுநாள் விடை வந்தது. யார் சுயநலத்துடனும், பேராசையுடனும் இருக்கிறார்களோ யார் ஞானிகளின் மேன்மையை உணராமல் இருக்கிறார்களோ யார் தன் பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் பாசத்தோடு பணிவிடை செய்வில்லையோ அவர்கள் இவனை காட்டிலும் பாவம் செய்தவர்கள் என்ற பதில் வந்தது.

அடுத்த கேள்வி “ஒரு கோப்பை தண்ணீர் கடல் அளவைக்காட்டிலும் அதிகமானது எது” என்று பூதம் கேட்டது? அடுத்த நாள் பதில் முளைத்தது.

மிகுந்த கருணையுடனும், தூய மனத்துடனும், மரியாதை கலந்த பாசத்துடன், வயதான பெற்றோர்களுக்கோ, நோயாளிகளுக்கோ கொடுக்கப்படும் ஒரு கோப்பை நீர் கடல் அளவைக்காட்டிலும் பெரியதாக கருதப்படும்.

பூதம் எல்லா பதிலையும் ஒப்புக் கொண்டு அவர் அரசாட்சி செழிக்க வாழ்த்து சொல்லி திரும்பிச் சென்றது. மன்னர் தலை தப்பியது. மன்னர் உயிருக்கு வந்த ஆபத்து நீங்கியது.

மறுநாள் மாறுவேடம் பூண்ட அரசர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் மறுநாள் விடை கோரும் மந்திரி யாரிடம் கலந்து ஆலோசிக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு வேவு பார்த்தார்.

மந்திரி பாதாள அறையில் தன் பெற்றோரை வைத்திருப்பதையும் அவரிடமிருந்தே அத்தனை விடைகளையும் கேட்டுப் பெற்றியிருப்பதையும் அறிந்து கொண்டார். தனது தலை அந்த மூத்த பெற்றோர்களின் அனுபவ அறிவாலும் புத்தி கூர்மையாலும் காப்பாற்றப்பட்டது என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி பெருக்கு அதிகரித்தது.

அடுத்த நாளே அந்த அரசர் பெற்றோர்களையும், அனுபவசாலிகளையும் அவரவர் வீட்டில் வைத்து பாராமரிக்க வேண்டுமென்ற ஆணை பிறப்பித்தார்.

அனுபவ அறிவு சரியான தீர்வைக் கொடுக்கும். அனுபவங்கள் கொடுத்த வலியால்தான் சரியான வழியும் கிடைக்கும். எந்த பிரச்சனைக்கும், எந்த சிக்கல்களுக்கும் அறிவார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனையும், அறிவுரையும் கேட்டுப் பெறுவது நன்மை பயக்கும். அனுபவங்களின் மகோன்னதம் ஆனந்தங்களின் பரிபூரணமாகும்.

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பு இலார்க்கு இல்லை நிலை

முதல் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லை அதுபோல தன்னை தாங்கும் அறிவார்ந்த அனுபவசாலிகளின் துணை இல்லாதவர்க்கு எந்த நிலைபேறும் இல்லை என்று வள்ளுவர் சொல்வது அனுபவ உண்மையாகும். ஆயிரம் கோடி பொன் பெறும் வார்த்தையாகும்.

ஆகவே நாம் எல்லோரும் அறிவார்ந்த அனுபவசாலிகளுடைய அறிவுரையை சிக்கலான நேரத்திலே கேட்டுப் பெற்று பின்பற்றுவதால் மட்டுமே சரியான தீர்வும், பலனும் கிடைக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!