Home » Articles » மனதில் உறுதி வேண்டும்

 
மனதில் உறுதி வேண்டும்


வெங்கடேஷ்.ச
Author:

பள்ளி இறுதித் தேர்வில் கைகள் இரண்டும் ஊனமுற்ற மாணவி தனது கால் விரல்களாலேயே தேர்வு எழுதி சாதித்ததை பத்திரிக்கையில் அண்மையில் பார்த்திருப்பீர்கள்.

அவரால் மட்டும் அந்த சாதனையைச் செய்ய எப்படி முடிந்தது? எப்படியும் தேர்வு எழுதியே தீருவேன் என்ற மாளாத மன உறுதி இருந்ததால் தானே?

எதையும் எவரும் சாதிக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதெல்லாம் இது தானோ?

நாடு மனை இழந்து, நல்லதொரு துணை இழந்து, மகன் இழந்தும் பொருள் இழந்தும் மனதார பொய்யுரையேன் என்று கொண்ட கொள்கையிலிருந்து கொஞ்சமும் விலகாத அரிச்சந்திரனின் மன உறுதி அனைவரும் அறிந்த ஒன்றே.

இங்கிலாந்து செல்லும் முன் தன் தாயிடம் மது, மங்கை, மாமிசம் ஆகிய மூன்றினையும் மனதால் கூட தீண்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதைச் சற்றும் பிறழாமல் கடைபிடித்த அண்ணல் காந்தியடிகளின் மன உறுதிக்கு ஈடு உண்டோ இன்றளவும்ஙு

அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து புண்ணிய பாரதம் காக்க விடுதலை வேண்டி தன் இன்னுயிரையே தூக்கு மேடையில் அர்ப்பணித்த வீரன் பகத்சிங்கின் மன உறுதி என்ன மலிவானதொன்றா?

மன உறுதியை ‘வைராக்கியம்’ என்றும் கூறலாம். சங்கல்பம், தீர்மானம், சபதம் என்றெல்லாம் கூட இதனை அழைக்கின்றோம். ‘வில் பவர்’ என்று ஆங்கிலத்தில் இது அழைக்கப்படுகிறது.

ஒரு நல்ல தலைமைக்கு தலையாய அம்சம் அவரிடம் காணப்படும் உருக்கு போன்ற மன உறுதியே ஆகும். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும், வெற்றியின் வெளிச்சத்தையே நோக்கும் குணமும், எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் அசாத்திய துணிவும், எத்தகைய விமர்சனங்களுக்கும் ஈடுகொடுக்கும் திறனும் அடிப்படை அம்சங்களாகக் கொண்டது தான் ஒருவரது மன உறுதி எனலாம்.

நோகாமல் நோன்பு நோற்கிற மனப்போக்கே நம்மிடையே அதிகம் காணப்படுகிறது. அலட்டிக் கொள்ளாமல் ஆதாயம் அடைகின்ற போக்கு அனைவரிடமும் உள்ளது.

தயக்கமும், காரியம் சொதப்பி விடுமோ என்ற எதிர்மறை எண்ணமும் சேர்ந்து கொண்டு நம்மை செயலற்றுப் போக விடுகிறது. இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு நாம் நினைத்த இலக்கை சென்றடைய நமக்குத் தேவையானது அளவற்ற மன உறுதியும், தியாக மனப்பானமையும் தான்.

ஊளைச் சதையை குறைக்க மருத்துவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்யச் சொல்கிறார். ஆனால் நமக்கோ அதிகாலை அருமையான தூக்கத்தை இழக்க மனமில்லை. எழுந்து நடந்து செல்ல சோம்பேறித்தனம். விட்டு விடுகிறோம். புலன் வழி இன்பம் வேண்டி கட்டுப்பாடு இல்லாமல் செய்ய வேண்டியதை செய்யாமல் கைவிடுவதால் எதிர் விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியவர்களாகிறோம்.

காற்று வீசும் திசையினிலே பறப்பதற்கும், ஆறு போகிறபோக்கிலேயே மிதப்பதற்கும், அசாதாரண பலம் தேவையில்லை. எதிர்நீச்சல் போட்டு எதிர்த்து நின்றாலே எதையும் சாதிக்க முடியும். புதுமைகள் உருவாகும். புது வழிகள் புலனாகும்.

எல்லாம் இழந்த நிலையிலும் இருப்பதை தக்கவைத்துக் கொள்ளும் திறமையைத் தருவது ஒருவரின் மனஉறுதியே ஆகும்.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இனி ஒரு கணமும் தாக்குப் பிடிக்க முடியாது. மூச்சு முட்டுகின்ற நிலை. அத்தருணத்திலும் நம்பிக்கை இழக்காமல், மேலும் ஒரு வினாடியாவது தாக்குபிடித்தாலே போதும். அடுத்த அலை நமக்கு ஆதரவாகவே மாறும்.

எடுத்த காரியத்தில் எத்தகைய இடர் வரினும், முடித்தே தீருவேன். நில்லேன்; அஞ்சேன் என்று முன்வைத்த காலை பின் வைக்காமல் முழு முயற்சியுடன் முனைந்து நின்று உழைத்திட நம் மன உறுதி துணை நிற்கும்.

மன உறுதி என்பது எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கும். அதனை மேலும் வளர்த்துக் கொள்வதோ, வியர்த்தமாக்குவதோ அவரவர் கைகளில் தான் உள்ளது.

மன உறுதி ஒருவரின் மெய் வருத்தக் கூலி தரும். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் இதனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பழக பழக நாளடைவில் அந்தக் குணம் நமது இயல்பாகவே ஆகிவிடும்.

உண்மையில் ஒருவரது தன்னம்பிக்கையும், சுயக்கட்டுப்பாடும் மன உறுதி எனும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்களே ஆகும்.

அதிகாலை துயிலெழுதல், உடற் பயிற்சி செய்தல், நேரம் தவறாமை, பணிகளைத் திருத்தமாக முடித்தல், கால நிர்வாகம் போன்றபல நற்பண்புகளின் அடி நாதமாக விளங்குவது ஒருவரது மன உறுதியே ஆகும்.

அதுபோல தீயப்பழக்கங்களான புகைபிடித்தல், குடிப்பழக்கம், போதையில் புரளுதல் போன்றவைகளை அடியோடு ஒழித்திட பெரிதும் தேவைப்படுவது மனஉறுதி ஒன்றேதான். இல்லையா? இதனால் நமக்கு மிச்சப்படுவது பணம் மட்டுமல்ல. உடல் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

நல்ல ஆன்மீக நூல்களைப் படித்தல், காந்தி, கலாம் போன்றோர்களின் சுயசரிதைகளை வாசித்தல், மானுடம் தழைக்க தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்த மாமனிதர்களின் வரலாறுகளைப் படித்தல் போன்றவை நமக்கு அளவற்றமன உறுதியை அளிக்க வல்லவை.

ஆக, எவரொருவரும் வாழ்க்கையில் பிறருக்கு வழிகாட்டும் தலைவராக ஒளிவீச வேண்டுமெனில், அவரது முதல் தேர்வாக இந்த தளராத எதற்கும் கலங்காத மன உறுதி எனும் அருங்குணம் அவசியம் இருக்க வேண்டும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!