Home » Articles » அவதூறு அவசியமல்ல

 
அவதூறு அவசியமல்ல


மெர்வின்
Author:

சிறியதாகக் கிளப்பிவிடப்படும் அவதூறு, சிறிது நேரத்தில் எல்லோரிடமும் பரவி விடுகிறது. ஒவ்வொருவருடைய நாவிலும் வளர்ச்சி அடைந்துவிடுகிறது. ஒன்று பத்தாகவும் பத்து நூறாகவும் பரவுகிறது.

அவதூறு கூறுகின்றவனின் நாக்கு நுனியானது வாளின் முனையைவிட கூர்மையானது. அதில் நஞ்சு உள்ளது. நாக்கு என்னும் கொடுவாளானது ஆறாத காயங்களை உண்டுபண்ணி விடுகின்றது.

நம்முடைய தரம் உயர உயர நம் மீது எழுப்பப்படும் அவதூறுகளின் தன்மையும் உயர்ந்து கொண்டே செல்லும்.

அவதூறு கிளப்பி விடுபவர்களுக்கு அது ஒரு விளையாட்டுப் போல இருக்கிறதே தவிர அது ஒரு குற்றமாகத் தெரிவதில்லை.

அறிவாளிகள் அவதூறு கண்டு அஞ்சுவதில்லை. பிளேட்டோவிடம் ஒருவர் சென்று, “உங்களை மிகவும் கெட்ட மனிதர் என்று ஒருவர் கூறுகிறாரே” என்றார்.

“அவர் கூறிய கூற்றை ஒருவரும் நம்பாதபடி நான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று மறுமொழி கூறினார் பிளேட்டோ. இவ்விதம் தான் அறிவாளிகள் கூறுவார்கள்.

நச்சு நாவை நாம் கட்டுப்படுத்த இயலாது. நாம் வாழ்ந்துவரும் நல்வாழ்வானது பிறர் நம்மீது சுமத்தும் அவதூறுகளைத் துச்சமாகக் கருதும் ஆற்றலை அளிக்கும்.

ஒருவன் உன்னைப் பற்றி அவதூறு கூறும்பொழுது அவன் கூறியது சரியா, தவறா என்று உன் மனசாட்சியிடம் கேள். உன்னுடைய இதயத்தை நீயே ஆராய்ந்து பார்.

“நீ செய்தது தவறாக இருந்தால் திருத்திக் கொள். நீ செய்தது சரியாக இருந்தால் அந்த அவதூறானது உலகப்போக்கு எவ்வாறு இருக்கிறது என்ற படிப்பினையைத் தெரிந்து கொள்” என்கிறார் ஜோசப் கார்டன்.

அதனால் அவதூறுகளை விட்டு நம்மை காத்துக் கொள்ள ஒரே வழி நம்முடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்வாழ்வு வாழ்வது தான்.

மற்றொரு வழியும் இருக்கிறது. நம்மீது எழுப்பப்படும் அவதூறு வீணாக இருந்தால் அதனை துளிகூட பொருட்படுத்தாமல் நம்முடைய கடமையை ஒழுங்காகவும், அமைதியாகவும் செய்து கொண்டே இருப்பது தான்.

ஏன் என்றால் அவதூறு அற்ப ஆயுள் உடையவை. நாம் சிறிது பொறுமையாக கையாண்டால் காலம் என்னும் அன்னை உண்மை என்ற மகனை ஈன்று எடுப்பாள்.

அம்மகன் நமக்காகப் போராடி நம்மீது எழுப்பப்பட்ட அவதூறை வெட்டி வீழ்த்திவிடுவான்.

“அவதூறுகள், யாதொரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தங்களின் நெஞ்சு உறுதியை இழக்கச் செய்யும் வண்ணம் அவ்வளவு கொடுமை வாய்ந்தவைகளாக இருக்கின்றன” என்கிறார் நெப்போலியன்.

அவதூற்றை விரட்டிப் பிடிக்க முயலும்போது அது வேகமாகப் பாய்ந்து, ஓடி பரவ ஆரம்பித்துவிடுகிறது.

நம்மீது வீணாகக்கூறப்படும் அவதூறுகளைக் கண்டு நாம் மனத்துயர் அடைந்தால் அவை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பிறருக்கு உருவாக்கிவிடும்.

அதனால் நாம் மனக்கஷ்டம் அடையவே கூடாது. அதேபோல நாம் அதைக்கண்டு வெகுளவும், வெதும்பவும் செய்தால் தான் அது கிளர்ந்து எழும். இல்லை என்றால் அது அமிழ்ந்து போய்விடும்.

அவதூறு என்பது ஒரு குளவி. அதனை அடித்துக் கொன்றுவிடலாம் என்ற திடமான நம்பிக்கை இருந்தால் தான் நாம் அதனை எதிர்த்து நிற்க வேண்டும்.

இல்லையேல் நாம் அதனை எதிர்க்க அது முன்பை விட பல மடங்கு வேகத்துடன் பறந்து விரிந்து விடும். நம்மீது சுமத்தப்படும் வீண் அவதூறுகளைத் துச்சமாகக் கருதி நாம் சும்மா இருந்துவிட்டால் அவை தாமாகவே செத்துவிடும்.

அவற்றால் நமக்குத் துன்பமும், துயரமும், இழிவும் ஏற்பட்டுவிட்டன என்று காட்டிக்கொண்டால் நாம் அதற்கு உயிர் அளித்துவிட்டோம். அதனை உண்மையாக்கிவிட்டோம் என்று அர்த்தமாகிவிடும்.

நேர்மை வழியில் செல்லும் நாம் இதற்கு பயப்படத் தேவையில்லை. அவதூறு எந்த அளவு தவறாகவும், நம்ப முடியாதவையாகவும் இருக்கிறதோ அந்த அளவு விரைவாகப் பரவும்.

“அவதூறுவைப் போன்று வேகமாகப் பரவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதை போன்று ஆவலாகக் கேட்கக் கூடியது வேறில்லை. அதைப்போல நான்கு பக்கங்களிலும் வேகமாகப் பரவக்கூடியதும் வேறு எதுவும் இல்லை” என்று சிசரோ கூறுகிறார்.

அவதூறுக்கு செவி சாய்த்து உள்ளத்திலே இருப்பிடம் அளிக்காவிட்டால் அவை தாமாகவே மறைந்துவிடும்.

அவதூறு என்று திருட்டுப்பொருளை தன் காதால் விலைக்கு வாங்குகிறவனும் அந்தத் திருடன் போன்று வெறுக்கப்படத் தக்கவனே ஆவான் என்கிறார் ஜெபர்சன்.

பிளாட்டஸ் என்ற அறிஞர் கூறுகிறார். “”அவதூறுகளைக் கிளப்பி விடுகிறவர்களை அதனைக் கேட்பவர்களையும் நான் தண்டிக்க விரும்புகிறேன்”.

முன்னவனைத் தன்னுடைய நாவினால் தூக்கிவிட விரும்புகிறேன். அடுத்தவன் காதில் கேட்டாளே அவனையும் தூக்கிவிட வேண்டும்.

அதனால் நம்மிடம் யாராவது வந்து அவதூறுகளைப் பற்றி பேச முன்வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டாம்.

மற்றவர்களின் அவப்பெயரின் புதைக்குழி நம்முடைய காதுகளாக இருக்கக்கூடாது. கேட்க விரும்பாதவன் காதில் யாரும் செய்தியைக் கொண்டு போய் திணிப்பது இல்லை.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!