Home » Articles » எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு

 
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு


சொக்கலிங்கம் சிவ
Author:

எழுத்து என்பது காகிதம் வரைந்த கன்னமல்ல; இதயம் வரைந்த எண்ணம்; வியர்வையின் வெளிச்சம்; நம்பிக்கையின் விருட்சம்; கண்ணீரின் ஓவியம்; கவிதையின் காவியம்; எழுத்து அழகை ஆராதிக்கும் அங்க வடிவங்கள்; தங்கக் கிரீடங்கள்.

எழுத்து என்பது பேனாவின் கசிவல்ல; அது உயிர். காலப்பேனாவின் உயிர்த்துடிப்பே எழுத்து. எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும் தெய்வம் என்றான் பாட்டுப்புலவன் பாரதி. எழுத்தறிவித்தவன் தானே இறைவன். எழுத்து விடுதலைக்கு வித்தாகவவும் யுகப்புரட்சியின் சொத்தாகவும் வெடித்துக் கிளம்பியவை. அரசையும், அரசாங்கத்தையும் திசைமாற்றம் செய்தவை எழுத்துக்கள். பல அரசுகள் எழுந்ததும், வீழ்ந்ததும் இந்தப் பேனா முனையில்தானே! மனித வரைந்த புனிதக் கோபுரம் எழுத்து.

“பள்ளிக்கூடத்தில் உன்னைச் சேர்ப்பது பற்றி நான் சிந்திக்கவில்லை அங்கே நிகழ்வது எழுத்துக்களின் கட்டாய அறிமுகம்தான். வாழ்க்கையை வாசிக்க நீ தெருவுக்குத்தானே திரும்பி வரவேண்டும்” என்று இன்றைய எதார்த்தத்தோடு எள்ளி நகையாடுகிறார் கவிப்பேரரசு.

‘அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்’- மண் சார்ந்த வாழ்க்கை தானே நம் வாழ்க்கை. மண்ணும் பெண்ணுமில்லாமல் இருந்தால் இந்த பூமி அழகாகவா இருக்கும்? இரண்டும் வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியவை தானே! அதுபோல எழுத்தையும் எண்ணியெண்ணி படைக்க வேண்டும்; பருக வேண்டும்; பாரோரின் பார்வையையும் அதற்குள் பதிக்க வேண்டும்.

பாலைவனத்தில் பயணிக்கிறான் ஒருவன் தாகம் தணிக்கதண்ணீர் தேவைப்படுகிறது. அதோ தூரத்தில் ஒரு சிறு குடிசை அங்கே கையால் அடிக்கும் கைபம்பும், தண்ணீர் பிடிக்கும் குவளையும் கிடந்தது. குவளையில் கொஞ்சம் தண்ணீரும் இருந்தது. குவளையை எடுக்க குனிந்தவனின் கண்ணில்பட்ட அட்டையில் இப்படி எழுதப்பட்டிருந்தது. ‘தோழா! இந்தக் குவளையில் உள்ள தண்ணீரை அருகிலே உள்ள பம்பிலே ஊற்றி அடித்தால் அதில் தண்ணீர் வரும். தாகம் தணிக்குமளவு குடித்துவிட்டு இதே குவளையில் மீண்டும் தண்ணீரை நிரப்பி விட்டுச் செல்!

குவளையில் இருக்கும் தண்ணீரைக் குடித்து தாகம் தீர்க்க எண்ணியவன், தண்ணீரைப் பம்பில் ஊற்றி அடித்தபின் தண்ணீர் வரவில்லை என்றால் என்ன செய்வது? மனசுக்குள் மையம் கொண்டது கேள்வி. ஆனால் மனசாட்சி பேசியது. ‘தண்ணீர் வந்துவிட்டால், நாமும் குடித்து, நம்மைப்போல் தாகத்தோடு தவித்து வருபவர்களுக்குத் தண்ணீரும் கிடைக்குமே! நம்பிக்கைதானே வாழ்க்கை என்று  நினைவுகளில் நீச்சலடித்தவாறே பம்பிலே தண்ணீரை ஊற்றினான். கொட்டியது தண்ணீர்; தணிந்தது தாகம். மீண்டும் குவளையில் தண்ணீரைக் கொட்டி வைத்தான்; நம்பிக்கை கொடுத்த அட்டை வாசகத்தை அடிமனதில் நட்டுவைத்தான்.

நல்ல செயல்கள் நம்மோடு மட்டும் நிற்காமல் காலத்தின் கைகளில் அது கட்டாயம் சேர்க்கப்படும். மரம் நடுபவன் தனக்கும் மட்டுமே நிழல் தர வேண்டும் என்றா நட்டு வைத்தான்? மழை தனக்கு மட்டுமே பொழிய வேண்டும் என்றா அதன் வேர்களுக்கு சொல்லி வைத்தான்? இயற்கைத்தாய் எல்லோருக்கும் சேர்த்தே மழையை பொழிகிறாள்; இதயம் நினைக்கிறாள். இப்படி வாழ்க்கையை ஒரு புரிதலோடு நேசித்தால் சிகரத்தில் சிம்மாசனம் நிரந்தரமாய் கிடைக்கும். இப்படி ஏராளமான எழுத்துக்கள் வாழ்க்கை வழிநெடுக பயணத்தில் தாராளமாய் கொட்டிக் கிடக்கிறது. தேவையானதை எடுப்போம், சிகரத்தை பிடிப்போம்.

“நல்லவர்களை காப்பதற்காகவும் தீயவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை காப்பதற்காகவும் நான் யுகம் யுகமாக தோன்றுவேன் என்று எழுத்து வடிவமாய் வந்து கீதையில் எழுந்து நிற்கிறது.

ஓரிடத்தில் கவிஞர் வாலி, “”சாக்கடையில் விழுந்தாலும், சந்தனத்தில் விழுந்தாலும் எதுவுமே ஓட்டிக் கொள்ளாமல் உள்ளது உள்ளபடியே எழுந்து வருகிறது என்னுடைய நிழல்” என்று எழுத்தின் மகிமையை எதார்த்தத்தில் நின்று வாதாடுவார்.

ஜி.யூ-போப் தான் எழுதுகிற கடிதத்தில் திருவாசகத்தைப் பற்றி முதலில் எழுதிக் கொண்டிருக்கும்போதே திருவாசகத்தில் ஆய்ந்து தோய்ந்து உருகும்போது கண்ணீர் சிந்துகிறார். கண்ணீர் திட்டில் எழுத்துக்கள் மறைந்திருப்பதைப் பார்த்து இறுதியில் போப் ஒரு குறிப்பு எழுதி வைக்கிறார். அதில் தன் எழுத்து மறைந்தாலும் மறு கடிதம் திருத்தி எழுத மனம் வரவில்லை என்கிறார். அவர்தம் கல்லறையின் வாசகத்தில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது அன்னைத்தமிழின் இலக்கிய வளமையை அடையாளம் காட்டுவதாகவே, கல்லறையின் வாசகங்கள் செம்மாந்து நிற்கும்படி தீட்டப்பட்டிருக்கிறது.

குற்றாலம் அருகில் தென்காசியில்-பராக்கிராம பாண்டியன் கல்வெட்டில் “பின்னோர் காலத்தில் சிதிலம் அடைந்த கோவிலின் கல்லை எவனொருவன் ஒன்றாக்கி வைக்கிறானோ அவனின் பாதம் நோக்கி வணங்குகிறேன்” என்று எழுதப்பட்டதிலிருந்து தமிழர்களின் எதிர்கால கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதை தீர்மானிக்க முடிகிறது. காலம் கடந்தாலும் சில எழுத்துக்கள் நம் உள்ளத்திலும் கல்வெட்டாய் நிலைத்து நிற்கிறது.

கதாசப்தசகி-தெலுங்கு இலக்கியத்தில் பொருள் தோடச் சென்ற கணவன் பல நாட்கள் கடந்தும் வரவில்லை. வீடோ பொத்தற் குடிசை; அழும் பிள்ளைக்குக் கூட பாலுட்ட இவள் உடம்பில் தெம்பில்லை. இப்போது கவிதையாய காட்சி விரிகிறது.

“ஒழுகும் குடிசையில்

மழை நீரிலிருந்து

உன் குழந்தையை

தடுத்து விட்டாய்

உன்

கண்ணீரிலிருந்து

எப்படி குழந்தையை

தடுப்பாய்?”

வறுமையைக் கூட எழுத்து எப்படி கையாள்கிறது என்பதற்காய் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதையை இறக்கி வைத்திருக்கிறேன்.

நாஸ்ட்ர டாமஸ் பிரான்ஸ் நாடு தந்த தீர்க்கதரிசி. எதிர்காலம் எப்படி இருக்கும்? மூன்றாம் உலகப்போர் எப்போது மூளும்? முன்கூட்டியே சொல்வதில் வல்லவர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் 110 மாடிக்கட்டிடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் என்பதை அவர் 450 ஆண்டுகளுக்கு முன்னே எழுதி வைத்தவர்.

நூல்நிலையமே இவரின் வசிப்பிடமுமாக வாசிப்பிடமாகவே இருந்தது. இவரின் திருமண வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தன்னுடைய மரணத்தைக்கூட முன்கூட்டியே அறிந்தவர். அறிந்தவாறே மரணமும் மடி தழுவியது. அவரின் விருப்பப்படியே அவருடைய உடலை செங்குத்தாக (நிற்பதுபோல்) புதைத்தனர் அவர் 62 ஆண்டுகளும் 6 மாதமும் வாழ்ந்தார். “இழிவான எவரும் என்மீது நடந்து செல்லக் கூடாது” என்று கல்லறையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. பிரெஞ்சு புரட்சியின்போது 1713-ல் அவருடைய கல்லறையைத் தகர்த்து, அந்த தீர்க்கதரசியின் மண்டை ஓட்டை வெளியே எடுத்து, அதில் ஒருவன், மண்டை ஓட்டில் மதுவை ஊற்றிக் குடித்தான். அந்த நொடியில் எங்கிருந்தோ ஒரு துப்பாக்கிக்குண்டு மதுவை குடித்தவனின் உயிரைக் குடித்தது.

மீண்டும் இவர் எலும்புகளை சேகரித்து புதைத்தார்கள். புதிதாக ஒரு கல்லறையும் எழுப்பப்பட்டது. எதிர்காலம் பற்றிய குறிப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை கொடுப்பவையாகவும் இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதற்கு ஏற்றாற்போல் அர்த்ததங்கள் கற்பிக்கப்படுகின்றன என்று ஐ.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

“இழிவான எவரும் என் மீது நடந்த செல்லக்கூடாது” என்ற கல்லறை எழுத்து வாழ்ந்து முடிந்தபின்னும் வரலாறாய் எழுந்தே நிற்கிறது. ஒரு கவிதையில், ‘மரணம் வந்து கதவைத் தட்டும் நாளில் நீ என்ன செய்வாய்? என்று கேள்வி கேட்டு, வந்த விருந்தாளியின் முன்னே வட்டில் நிறைய என் வாழ்க்கையைப் பரிமாறுவேன். வெறுங்கையுடன் திரும்ப விட மாட்டேன் என்ற பதிலும் சொல்லியிருப்பார். பாரதி”, காலா, என் காலருகே வாடா! உன்னை காலால் எட்டி உதைக்கிறேன்’. என்ற கனல் கக்கும் கவிதை விருட்சங்களாய் நிற்கின்றன.

எழுதும் போது காரல் மார்க்ஸ் இறந்தார்; கவிதை எழுதும் போது தாகூர் இறந்தார்; நடிக்கும்போது தியாகி விசுவநாததாஸ் இறந்தார்; போராடும்போது திருப்பூர் குமரன் இறந்தார் இப்படி … இப்படி ….

இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்ற எழுத்துக்கள் சுதந்திரம் பற்றி சொல்லி வைத்தது. “உறுதியான நூறு இளைஞர்களைத் எனக்குத் தாருங்கள். நான் தேசத்தை மாற்றிக் காண்பிக்கிறேன். சுவாமி விவேகானந்தரின் எழுத்து மின்னலும், முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை அப்துல் கலாமின் ‘இந்தியா வல்லரசு’ என்ற கனவும் நினைவாகும் எண்ணத்தில் எழுத்தை வணங்குவோம்; எழுதுகோலைத் தொழுவோம். சிகரம் ஏறி சிம்மாசனம் பிடிப்போம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!