Home » Articles » ஓட்டம்

 
ஓட்டம்


அனந்தகுமார் இரா
Author:

முன் கதை சுருக்கம்

முதல் கட்டுரைக்கே, ஏன் முன் கதை சுருக்கம் போடப்பட்டு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். இக்கட்டுரை ப்ளெட்க்… ப்ளெட்க்… என்ற சத்தத்தோடு ஆரம்பித்து அது நிற்கும்போது முடிந்த ஒன்று… என்ன இது சத்தம். அதை உச்சரிக்கவே முடியவில்லையே! என்பவர்கள், டென்னிஸ் மேட்ச் நடக்கையில் ராக்கெட் கொண்டு பந்தை அடிக்கின்ற சத்தத்தை மனதில் நினைத்துக் கொள்ளலாம். அந்தச் சத்தம் அப்படியானது. தொடர்ந்து நான்கு மணி நேரம் ஓடியது. ரோஜர் ஃபெடரரும் ஜோகோவிச்சும் பிச்சு உதறிய மேட்ச் அது. விம்பிள்டன் 2015 போட்டி. அதில் முதல் சர்வீஸின் பொழுது எழுத ஆரம்பித்து கோப்பை கொடுக்கும்பொழுது முடிந்த கட்டுரை. இந்தக் கட்டுரை உண்மைகளை ஒட்டியிருந்தாலும் பெயர் மாற்றம் செய்து கற்பனைகளைச் சேர்த்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஓட்டமும் நடையுமாக விறுவிறுப்பாக ஓடுகிற இந்தக் கட்டுரையின் வேகத்திற்கு காரணம் இது ஒரு “ரோல்லர் கோஸ்டர்” போட்டி என்று அடுத்த நாள் இந்து நாளிதழில் வந்திருந்த ஸ்போர்ட்ஸ் பேஜ் படித்தபோது தெளிவானது. பின் நவீனத்துவம் (போஸ்ட் மாடர்னிஸம்) என்கின்ற தத்துவம் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தபட்டு உள்ளது. கட்டுரை உணர்வுபூர்வமானது. புரிந்து கொள்ள முடியவில்லையே என்று நினைக்கின்றவர்கள்… புரிந்து கொள்ள எதுவுமில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டுகின்றோம். நிறையப்பேர் உணர்ந்து கொள்ளப் போகின்றோம் என்கின்ற நம்பிக்கையில், ப்ளெட்க்… சர்வீஸ் ஆரம்பம்.

செல்ஃபோன், வாட்ஸ் அப், ட்விட்டர் யுகத்தில் இந்தக் கட்டுரையை ஒருமுறை நீங்கள் படிக்க ஆரம்பித்ததற்கே அனேக நன்றிகள். அப்படியே கொஞ்சம் முன்னும் பின்னுமாக, டென்னிஸில் ரீ-ப்ளே போடுவது போல திரும்பத் திரும்ப (இரண்டு முறை மட்டுமாவது) படித்தீர்களானால் (கொஞ்சம் ஓவராக எதிர்பார்க்கவில்லைதானே) பாயிண்ட் !!  கிளியராக (சேலஞ்சில்… தெரிவது போல்) தெரியும்…

2015 ஆம் ஆண்டின் விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டி ஃபெடரருக்கும், ஜோகோவிச்சுக்கும் இடையே அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்கின்றது. முதல் செட்டை செர்பியாவின் இளைய ஜோகோவிச் எடுத்து கொள்ள இரண்டாம் செட்டை ஃபெடரர் கைப்பற்றுவதற்குள் விஜய், சித்தார்த், சசி என மாமாவும் மருமகன்களும் பலமுறை ஆச்சரியச் சத்தங்களை எழுப்புவதும் குதிப்பதும் உருளுவதுமாக ஞாயிற்றுக்கிழமை உருண்டு ஓடிக்கொண்டிருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் அந்தந்த கணங்களில் வாழச் செய்கின்றன. விம்பிள்டனில் ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இலண்டன் மாநகர் வாழ் முக்கியப் புள்ளிகள் அமர்ந்து காணும் அதே நிகழ்வு நமது வீட்டு வரவேற்பரையிலும் ஓடிக் கொண்டிருப்பது ஒரு காவியம் தானே என்று விஜய்க்கு தோன்றியது.

விளையாட்டு வெற்றி, தோல்வியை பழக்கப்படுத்துகிறது. ரோஜர் ஃபெடரரை மூன்று பேருமே ஆதரித்த பொழுதும் ஜோகோவிச்சின் வேகம் அவரை இரண்டு செட்டுக்களுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. புள்ளிவிவரங்கள் சேரசேர சுவாரஸ்யம் சேர்ந்து கொண்டே போனது. மூன்று செட்டின்  முடிவில் மழை தூற… மைதானம் மூடப்பட்டது. இரண்டு மூன்று நாட்கள் பயணித்து காத்திருந்து பார்க்கும் பார்வையாளர்கள் ஆவலுடன் மேலும் காத்திருந்தனர்.

அதுவரை சுமார் மூன்று கிலோமீட்டர்கள் ஓடி இருப்பார்கள் என புள்ளி விவரம் கூறியது. மழைவர காத்திருக்கும் மக்களும் வானத்தையே பார்ப்பார்கள் என நினைவு வந்தது. சென்றாண்டு விம்பிள்டனிலும் இதே வீரர்கள் மோதியதும், அதில் ஜோகோவிச் மயிரிழையில் வெற்றி பெற்றதும் 2014 சாம்பியன் ஆனதும் வரலாறு. முன்னதாக செரினா வில்லியம்ஸ் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று வரலாறு படைத்ததை கண்டிருந்தனர்.

ஓட்டம் உடலை வலுப்படுத்துகின்றது. பொதுவாக விஜய் தினந்தோறும் மூன்று கிலோமீட்டர்கள் ஓடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அதனால் வருடக்கணக்கில் மருத்துவரை சந்திக்காமல் விலகி ஓடிக் கொண்டிருக்க இயல்கின்றது என்றால் மிகையாகாது. ஓடுவதற்காக அவரது காலணிகள் எந்த ஊருக்குப் போனாலும் பெட்டிக்குள் முதலிடம் பிடித்துவிடுகின்றன. காலையில் ஓடுவது மாலையில் ஓடுவதைக் காட்டிலும் நிச்சயத்தன்மை நிறைந்ததாகவே இருக்கின்றது. மாலை நேரங்களில் அலுவலகப் பணியோ? அல்லது திடீர் நண்பர் வருகையோ தள்ளிப்போட வைத்துவிடும். ஆனால் அதிகாலைகள் விஜயை தந்தை கைவிடுவதேயில்லை.

முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் தவறவிடப்படும். ஆனால் சமீப காலத்தில் ஓடுவதற்கு முன்பு 20 நிமிட தியானமும் மூச்சுப்பயிற்சியும் செய்வதால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்குரிய மன கட்டுப்பாடு கிடைத்திருக்கின்றது. எனவே நண்பர்கள் வியக்கும் வண்ணம் ஓட முடிகின்றது. விஜயின் நிறைய வழிகாட்டிகளில் இவ்வாறு தவறாமல் தினந்தோறும் ஓட வழிகாட்டுபவர் ஒரு ஐம்பது வயதையும் தாண்டிய ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் விசுவரூபம் எடுத்து விஜயின் ஓட்ட வாழ்க்கையை மனதில் பதியச் செய்தார்.

முதன்முறையாக பத்து கிலோ மீட்டர் ஓடுகையில் “ஓடுவதற்கு தகுந்த உடல் தேவையில்லை. அதற்கு மனம் தான் தேவை”. என்று கூறியிருந்தார். காலை தவறாமல் எழுவதற்கு ஊக்கம் உள்ள மனது தேவைப்படுகின்றது. உற்சாகம் நிறையவே தேவைப்படுகின்றது. விளையாட செல்ல, உடன் விளையாடுபவர்கள் வேண்டும். அது எல்லா விளையாட்டின் பலம் மற்றும் பலவீனம் ஆகும். ஆனால் ஓடுவதற்கு ஒரு பாதை மட்டுமே போதும். சில நண்பர்கள் சாலையில் ஓடுபவர்கள். அதில் தூசு, புகை, விபத்து, நாய்கள், கடின தரை என்று பலவித சிக்கல்கள் உள்ளன.

ஒரு வழியாக உலகில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ரோஜர் ஃபெடரர் எட்டாவது விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டம் பெறுவதை ஜோகோவிச் 7-6,  6-7, 6-4, 6-3 என்கிற கணக்கில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடி தடுத்துவிட்டார். ஜோகோவிச் வென்ற, செய்தி, ஃபெடரரை நேசித்து, அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய மூவரின் உள்ளங்களிலும் ஒரு மெல்லிதான கசப்பு சுவையை பூசியிருந்தது. வாழ்க்கை ஓட்டத்தில் மேடுபள்ளங்கள் வரும்பொழுது இத்தகைய கசப்புணர்ச்சியோடு அவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டியதுதான். உலகின் வரலாற்று பின்னணியில் நமது வாழ்வின் நிகழ்ச்சிகளை நினைவு கொள்ள வேண்டும் என்றால், நாம் விளையாட்டு நிகழ்ச்சிகளால் ஆணி அடித்தது போல நினைவுகொள்ள முடிகின்றது. அதாவது உலக வரலாற்று சுவற்றில் நம் நினைவு புகைப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டும் ஆணி – இத்தகைய ஓட்டங்கள்.

அதே தருணத்தில், இன்னொரு சேனலில் இந்தியா ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியும் ஓடிக்கொண்டு இருந்தது. நிறைய மேட்சுகள் நடப்பதாலும், அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் செய்திகளாலும் கிரிக்கெட் பார்ப்பதையே விஜய் குறைத்து விட்டிருந்தார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற 2011 மற்றும் இந்தியா  பாகிஸ்தான் சார்ஜா வெற்றிகள் அதைத் தொடர்ந்து கல்லூரி ஹாஸ்டல்களில் கிளம்பி கூட்டமாக ஓடிக் களித்த சந்தோஷங்கள் என விளையாட்டுக்களும் ஓட்டங்களும் உடம்புக்குள் செலுத்திய அட்ரீனலின் அளவுகள் என்ன? அதன்மூலம் வளர்ந்த ஆரோக்கியம் என்ன? வெற்றி தோல்விகளை சமமாக அலட்சியப்படுத்தக் கற்றுக் கொடுத்த நிச்சயமற்ற விளையாட்டு இரசிகத்தன்மை மற்றும் ஆர்வத்தால் கிடைத்த மன உறுதியின் எல்லை என்ன? என்று தனித்தனியே அளந்தறிந்து விட முடியுமா? என்ன?

கல்லூரியிலே, ஊசிப் புற்கள் முழங்கால்கள் வரை முளைத்த கிரவுண்டிலே பல இரவுண்டுகள் ஓடிவிட்டு அந்த வியர்வை வாசனையோடே கிரிகர் ஜோகன் மென்டலின் ஜெனிடிக்ஸையும் வாட்சன் அனட் கிரிக்கின் டி.என்.ஏ ஏணியில் ஏறியிறங்கி சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியடைந்த பாடத்திட்டங்கள் பலப்பலவாகும். ஓட்டம் படிப்பதற்கான உத்வேகம் அளிக்கின்றது.

விஜய் கால்நடை மருத்துவக்கலலூரியில்  முதலாண்டில் கால்பந்து விளையாடுகையிலேயே சீனியர்களால் கிரீன் ஹவுஸூக்கு ரிலே ஓட கண்டெடுக்கப்பட்டான். அவன் தன்னால் ஓட முடியாது என்று தன்னை அறியாமல் அச்சத்தால் சொல்லிப் பார்த்தான். “ஏன்! கால் பந்தாட்டத்தில் அவ்வளவு ஓடுகின்றாயே, இதில் ஓட முடியாதா”, என்று கேட்டனர். “முன்னே ஒரு பந்து ஓடுவதாக கற்பனை செய்துகொள்” என்ற நக்கலாக, இறக்கிவிட்ட சீனியர்கள் – விஜயின் பிற்கால வாழ்வையே வேகமாக ஓடும்… ஓடுதளத்திற்கு மாற்றுவதற்கு உதவியவர்கள் என்று இருபத்தி இரண்டு வருடம் கழித்து இப்பொழுதும் விஜய் நினைவு கூறுகின்றான்.

பச்சை மர ஆணி பதிவு போல பலநாள் ஓட்டப் பந்தயங்களில் ஒவ்வொரு திருப்பமும் ஞாபகம் உள்ளது. உற்சாக மிகுதியான தருணங்களில் நடக்கும் நிகழ்வுகள் பசை போட்டு மனத்திரையில் ஓட்டப்பட்டுவிடும் போல, பத்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் விஜயை வெல்ல வேண்டும் என்று 24 இரவுண்டுகள் ஓடியபிறகு இருபத்தைந்தாவது இரவுண்டில் அளவுகடந்த வேகம் எடுத்த ஒரு வருட ஜூனியர் ஹைபோகிளைசீமியாவால் நாமக்கல் அரசினர் மருத்துவ மனûயில் சேர்க்கப்பட்டு அவன் பக்கத்திலேயே “இவனை இந்த நிலைமைக்கு இழுத்துச் சென்றது நமது ஓட்டம் தானே. ஒரு வேளை விட்டுக் கொடுத்திருக்கலாமோ?”, என்று குற்றஉணர்ச்சியோடு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதியம் வரை அமர்ந்திருந்து திரும்ப அழைத்து வந்தது இன்னும் மனதில் மாட்டிய குளுக்கோஸ் பாட்டில் போல மெல்லிய ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது.

கரிகாலன் கல்லூரியில் ஓடிய ஓட்டம் இன்னும் காலங்காலமாக பிசகாமல் அச்சுப் போல், பதிவாகி இருக்கின்றது. ஓடும்பொழுது பெரிய பெரிய காலடிகளாக தள்ளி வைத்து ஓடாமல் சினிமாவில் ஃபாஸ்ட் பார்வேடு செய்வதுபோல ஓடுவது கரிகாலன் ஸ்டைல்.

ஐநூற்றி தொன்னூற்றி இரண்டாவது திருக்குறள் வாழ்க்கையில் ஒருவரிடத்திலே உள்ளது என்று ஏதாவதொன்றை சொல்ல வேண்டுமானால் “அது ஒன்றே ஒன்றுதான் அது தான் நல்ல மனம்’ என்று சொல்லி இருக்கின்றார். இடைவிடாத கால ஓட்டத்திலே, ஏற்படும் ஏமாற்றங்கள், கவலைகள், தோல்விகள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காலையில் ஓடினால் போதும்… அவை தானாகவே கழன்று விழுந்து விடுகின்றன. ஓடி முடிக்கும்பொழுது அடுத்த சிக்கல்களை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்றதொரு முடிவுக்கு வந்துவிட முடிகின்றது. இப்படி வருடக் கணக்கில் ஓடுவதால் பல வருட இளையவர்களும் ஒரே மாதிரி தம்மோடு பழகும் வண்ணம் விஜய் வயதை வருடத்திற்கொரு முறை குறைத்துக் கொண்டு இருந்தார். பல இளையவர்கள் இவரோடு ஓடும்பொழுது மூச்சு வாங்கி ஜகா வாங்கியுள்ளனராம். ரன்கீப்பர் என்கின்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஒரே, வாரத்தில் இருமுறை பத்து கிலோமீட்டர் ஓடி பதிவு செய்தபோது சித்தார்த் தனது வாழ்வில் ஒரு மைல்கல்லை கடந்தாய் உணர்ந்தான்.

சித்தார்த் சசி, இராஜராஜன் மூவரும் சுமார் பதினெழு வயது இளையவர்கள். இராஜராஜன், “மாமா, உன்னிடம்தான் நான் உற்சாகமாக வாழ என்ன செய்யவேண்டும்”, என்று கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஏனென்றால் நீதான் எப்போ பாரு செம ஜாலியாக இருக்கின்றாய்!” என்று போன் செய்தது தான் இந்தக் கட்டுரை ஓடியதன் ஆரம்பம்… இராஜராஜனுக்கு மட்டும் இன்னும் வேலை சரிவர அமையவில்லை என்று புலம்பினான். வருகிற வேலையை சரி செய்து அமைத்துக் கொள். பின்னர் வழி தெரியும் என்றார் விஜய். கூடவே… “மாப்ள.. நிச்சயமின்மையை காதலிடா, வாழ்க்கையை அதன்போக்கில் எடுத்துக் கொண்டு ஓடத்துவங்குடா ? ஒவ்வொரு அடியிலும் அடுத்த அடிக்கு வழி தெரியும், என்றார் விஜய் …

இன்னும் ஓடும்

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!