Home » Articles » மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்

 
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்


சுவாமிநாதன்.தி
Author:

ஏராளமான மர்மங்களும், புதிர்களும் நிறைந்ததுதான் மனிதவாழ்வு, தனி மனிதனின் வாழ்விலும் மர்ம நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது. நேரில் பார்த்து உறைந்து போன சம்பவங்களும் அனுபவங்களும் ஒவ்வொரு தனி நபருக்கும் நிச்சயம் உண்டு. மர்மங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று உள்ளன.

சமீபத்தில் 221 பயணிகளுடன் மர்மான முறையில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் விமானம் உலகையே திடுக்கிடச் செய்தது.

உலகத்தின் விடை தெரியாத மர்மப்பகுதி:

அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி, ப்யூட்டோரி கோ தீவு, பெர்முடா இவற்றின் மும்முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோணம் பகுதி பெர்முடா முக்கோணம் (சாத்தானின் முக்கோணம்) என அழைக்கப்படுகிறது. இப்பகுதிக்குள் இதுவரை மனிதர்களுடன் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான மறையில் காணாமல் போயின. விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. நவீன விஞ்ஞானமோ பெரும் அறிவியலாலர்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத விஷயங்கள் பல. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பல இடர்பாடுகளைக் கடந்து மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து உயிர் வாழும் போது டைனோசர்கள் மட்டும் பூமியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனது என்பது நீண்ட காலமாக மர்மமாகவே உள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் எகிப்து பிரமிட்டின் கட்டுமான ரகசியம் மர்மமாகவே உள்ளது. அந்தக் காலத்தில் பிரமிட்டை யார் வடிவமைத்து இருப்பார்கள் என்பது அதிசயம்.

தஞ்சை பெரிய கோவிலின் விமானம் 216 அடி உயரமாகும். அதன் உச்சிக்கல் 80 டன் எடை கொண்டது. இவ்வளவு பெரிய கல் விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்தியா முழுவதும் புகழ்பெற்றது டெல்லியில் உள்ள இரும்புத்தூண் ஆகும். 7.21 மீட்டர் உயரம் கொண்ட இந்த இரும்புத்தூண் 1600 வருடங்கள் பழமையானது. இதுவரை துருப்பிடிக்கவில்லை. பழமையான முந்தைய தொழில்நுட்பத்தில் இது எப்படி சாத்தியமானது என்பதே மர்மம்.

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக்கலை வர்மக்கலை ஆகும். எதிராளியை சுலபமாக வீழ்த்தும் மர்மம் நிறைந்ததே வர்மக்கலை.

சிலர் செய்தியை சுற்றிவளைத்து பேசுவார்கள். நேரடியாக தெரிவிக்காமல் மறைமுகமாக தெரிவிப்பது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவர்கள் உண்டு அவர்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மத்தை அறிவுக் கூர்மையுடையவர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.

மர்மக்கதை:

வயதானவர் தனியாக ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். வயதாகி விட்டதால் அவரால் வெகு தொலைவு நடக்க இயலாத நிலை. எனவே, இவருக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே வரவழைத்து பெற்றுக் கொள்வது வழக்கம். டோர் டெலிவரி என்பார்களே அதுதான். ஒரு வெள்ளிக்கிழமை அன்று தபால்காரர் தபால் கொடுக்கச் சென்ற போது அந்தக் குடியிருப்பில் ஏதோ சந்தேகத்திடமாக, வழக்கத்திற்கு மாறான மர்ம சூழலை உணர்ந்து கதவு சாவி துவாரம் வழியாக பார்த்தார். உள்ளே வயதான மனிதரின் ரத்தம் தோய்ந்த உடல் காணப்பட்டது. உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சி.ஐ.டி. வந்தார். சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். குடியிருப்புக்கு வெளியே கேட்டில் உள்ள பையில் இரண்டு பாக்கெட் பால் இருந்தது. செவ்வாய்க்கிழமை செய்தித்தாள் உள்ளே கிடந்தது. சில அன்பளிப்புகள், பிரிக்கப்படாத தபால்கள் சில கிடந்தன கொலையாளி யார் என்பதை சி.ஐ.டி கண்டுபிடிக்க தாமதிக்கவில்லை. யார் கொலையாளி? செய்தித்தாள் போடுபவர்தான் கொலையாளி. ஏனெனில் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில்  பேப்பர் மட்டும் போடப்படவில்லை. இது காட்டுகிறது. அவனுக்கு அங்கே படிப்பதற்கு யாருமில்லை என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததே. இது போன்ற புதிர் கதைகளுக்கு வெளிநாடுகளில் வாசகர்கள் ஏராளம்.

அந்தப்புரத்தில் பல பெண்களை வைத்திருந்த பேரரசர்கள் தங்கள் மனைவி மீது உண்மை காதல் கொண்டிருந்தார்கள் என்றும் நினைவுச் சின்னம் எழுப்பினார்கள் என்பதும் வரலாற்றில் கூறப்படுவது மர்மமே?

வளர்ச்சியும், முன்னேற்றமும் மர்மங்களற்றது:

அழகிய புதிர்கள் அடங்கியதே மனித வாழ்வு. ரகசியங்களும், அதிசயங்களும், புரியாத புதிர்களும் துலங்காத மர்மங்களும் நிறைந்து இருந்தாலும் இவைகளுக்குத்தான் ஈர்ப்புசக்தி அதிகமுள்ளது.

நேற்று நடந்தது வரலாறு. நாளை நடப்புதான் புரியாதது. தெளிவில்லாதது. புதிரானது. நிச்சயமற்றது. வென்றவர் தோற்கலாம். தோற்றவர் வெல்லலாம். சில நாடுகளின் மாபெரும் வளர்ச்சி முன்னேற்றம், மற்றும் சில தனி மனிதர்களின் ஆசூர வளர்ச்சியில் ரகசியம் ஏதும் இல்லை. பார்ப்பதற்கு மர்மமாக தெரியலாம். உண்மையில் திட்டமிட்டு சலிக்காமல் உழைப்பவர்கள் வாழ்வில் உயர்கிறார்கள் இதில் மர்மமேதும் இல்லை. மிகப்பெரிய இலக்குகளை அடைந்தவர்கள் அதைத் தொடுவதற்கு வகுத்த வெற்றிப்பாதைகள்தான் மர்மங்கள் நிறைந்தது.

ஏராளமான செலவுகள் இருந்தாலும் அதைத் தவிர்த்து விட்டு, பணத்தை சேமிப்பதில் கெட்டிக்காரர்கள் நிறையவே நம் நாட்டில் உள்ளனர். அதுதான் சேமிப்பின் மர்மம். ஏமன் நாட்டில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த அம்பானி 9 வருடங்கள் உழைத்து சேமித்து சொற்ப முதலீட்டில் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது உலகம் வியக்கும் தன்னம்பிக்கையின் மர்மம்.

போட்ட முதலீட்டை மீளப் பெற முடியாமல் கடனாளியாகி தொழிலை மூடி விட்டு விலகி போனவர்கள் மத்தியில் முதலீட்டை விட பல மடங்கு சம்பாதித்து அசூர வளர்ச்சி பெறும் வணிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்  தனித்தன்மையும் திறமையும்தான் வெற்றியின் மர்மம்.

இந்தியா ஒரு வளரும் நாடு, ஏழை நாடு என்று எல்லோரும் சொன்னபோது அப்துல்கலாம் மட்டும் வல்லரசாகும் கனவே இந்தியர்களிடையே விதைத்தார். விருப்பம், ஆசை, வெறி, கனவு இவையாவும் செயல் வடிவம் பெற்றால் நிச்சயம் வெற்றிதான். வறண்ட வறுமைப் பாலைவனத்தில் அலைந்து திரிந்தவர்கள்தான் இன்று வற்றறாத ஜீவநதியாய் வளம் கொழிக்கும் வாழ்வை அனுபவிப்பவர்கள். சம அளவு திறமையுடையவர்கள் கூட சம அளவில் பணம், புகழ், வெற்றி பெறுவதில்லை. வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்தான் வேறுபாடுகள் மர்மங்கள் அடங்கியுள்ளது.

நல்ல குடும்ப பின்னணி, வசதி, படிப்பு, வாய்ப்பு, திறமை, அதிர்ஷ்டம் ஆகியவை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. சர்வதேச அளவில் கிளைகள் பரப்பி உரிமையாளராக இருக்கும் தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் மர்மங்கள் புதிர்கள் ஏதுமில்லை. வெற்றிக்கான வழிமுறைகளை கண்டறிவதுதான் சாதுர்யம்.

இவ்வுலகில் நான் யார்? என்ற தன்னையே கேட்டுக் கொண்டவர்கள்தான் காலம், நேரம், உறக்கம், ஓய்வு, உணவு, கேளிக்கை, உல்லாசம் என அனைத்தையும் தியாகம் செய்து ஓயாது உழைத்தவர்கள்தான் இன்று வல்லமை மிக்கவர்களாக மாறினார்கள்.

ஒரு நல்ல வேலை கிடைக்காதா? என ஏங்குபவர்கள் நிறைந்த நாட்டில்தான் நூறு பேருக்கு வேலை கொடுப்பவராக மாற வேண்டும் என கனவு காண்பவர்களும் உள்ளனர். ஆங்கிலவழிகல்வி பயின்று தமிழ் எழுத தடுமாறும் தமிழர்கள் மத்தியில், தமிழ்வழி பயின்று ஆங்கிலத்தில் சிறப்பாக பேசவும், எழுதவும் வல்லவர்களாக சிலர் மாறுகிறார்கள். ஆர்வம் முயற்சியில்தான் மர்மம் அடங்கியுள்ளது.

நம் குறைபாடு என்ன? என்பதை பற்றி பலர் சிந்திப்பதில்லை. குறைகளே இல்லாத மனிதர்கள் கிடையாது. இருக்கவும் முடியாது மாத சம்பளம் வாங்கி பணக்காரர்களாகி விட முடியுமா? நல்ல அணுகுமுறை வெற்றியின் ரகசியமாக உள்ளது. குட்டையோ தேங்கிக் கிடக்கிறது. நதி உற்சாகமாகி பெருகி ஓடுகிறது. நாட்டை வளப்படுத்துகிறது. பலப்படுத்துகிறது. ஏற்றத்திற்குப்பின் ஆணவத்தால் சரிந்தவர்கள் உள்ளனர். சரிவுக்குப்பின் புதுப்பிறவி எடுப்பவர்களும் உள்ளனர். வளர்ச்சியும், முன்னேற்றமும் கூட்டு முயற்சியின் அற்புத விளைவுகளே. அதில் மட்டும் விடா முயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை தவிர புதிர்களோ, மர்மங்களோ இல்லவே இல்லை.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!